![]() |
| Aswath vs Harish 💥 |
அத்தியாயம் 20
அம்ருதா தன்னிடம் ஒப்படைத்துவிட்டு போன அஸ்வத்தை நிதானமாக ஏறிட்டான் ஹரிஷ். அதேநேரம் அவனும் இவனைப் பார்க்க, அப்போது அவன் விழிகளில் சற்றுமுன் தென்பட்டதைப் போல் மன எழுச்சிக்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.
சற்றுமுன் தென்பட்டதா?
ஆமாம்!
ஒரு மனநல மருத்துவராக ஹரிஷ் அவனை ஆரம்பம் முதல் அளவிட்டுக் கொண்டுதான் இருந்தான். இன்று காலையில் முதல்முறையாக அம்ருவுடன் அஸ்வத்தை நேரில் பார்த்தபோது, இவனுக்கு கோபம் வந்தது சரி! ஆனால் அவனும் ஏன் கண்கள் வழி நெருப்பைக் கக்கினான்? அதிலும் ஒரு நிமிடத்திற்கு முன்பு அம்ருவிடம் சிரித்தவன், அடுத்த நிமிடம் அவளைப் பார்வையால் பஸ்பமாக்கினான். அப்போதைய ஆங்காரத்தில் ஹரிஷால் இதனை யோசிக்க முடியவில்லை.
மனம் சற்று சாந்தமான பிறகு, அவர்கள் இருவரும் சிரித்து நின்ற காட்சியை மீட்டிப் பார்த்தவனுக்கு இந்த விநோதம் துல்லியமாகத் தெரிந்தது. இப்போதும் தங்கை அவளாகவே அவனைத் தேடிச் செல்லவில்லை. வேறு ஏதோவொரு காரணம் என்று தெரிந்த பிறகும், காதல் என்ற வார்த்தையில் அஸ்வத் இவனைக் குழப்பமாய்ப் பார்த்ததிலும் ஹரிஷின் மனநிலை சமன்பட்டிருந்தது.
அதில் சற்றுமுன் அம்ருவிடம் பேசும்போது ஓரிரு முறை ஹரிஷ் அஸ்வத்தைப் பார்த்தான். அவன் பார்வை அம்ருவின் மேல்தான் நிலைத்திருந்தது. ஆனால் அந்தப் பார்வையை இவனால் சாதாரணமாக நினைக்க முடியவில்லை. வேட்டையாடும் புலியின் பார்வை அது!
அவனிடம் கடுமை தெரிந்ததேயன்றி காதல் தெரியவில்லை. தன் செல்லத் தங்கையின் மேல் அப்படியென்ன வன்மம் இவனுக்கு? கழுத்தில் கத்தியை வைக்குமளவிற்கு சென்றிருக்கிறான்! அதற்காகவாவது ஒரு மனநல மருத்துவராக அஸ்வத்தின் பிரச்சினை என்னவென்று ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அதனால்தான் அம்ரு கேட்டபோதும் ஒப்புக்கொண்டான்.
ஆனால் அம்ருதா அவனருகே சென்று பேசியபோது, அவன் விழிகளின் பாவனை முற்றிலும் வேறுபட்டது. வன்மப் பார்வை மாறி இயல்பான நட்புடன் சாதாரணமாகப் பேசினான். அங்கே ஹரிஷின் சந்தேகம் வலுப்பெற்றது.
இந்நொடியிலிருந்து அஸ்வத்தை அம்ருவின் தோழனாக அன்றி, தன்னிடம் ஆலோசனைக்கு வருபவனாக மட்டுமே நினைக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டவன், “உங்களுக்கு எப்போ ஃப்ரீ பண்ணிக்க முடியும்னு சொல்லுங்க. அதுக்கேத்த மாதிரி நம்ம செஷன் டைம் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்.” என்றான்.
ஹரிஷ் தெளிவாக டாக்டரைத் தன்னிடமிருந்து விலக்கி வைத்து, அவளைப் பற்றிய பேச்சையும் தவிர்க்கிறான் என்று அஸ்வத்திற்கு புரிந்தது. அதற்காக அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பெண்பிள்ளை வைத்திருப்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று இலகுவாக அதனைப் புறந்தள்ளினான். “நான் எப்பவும் ஈவ்னிங் தான் ஃப்ரீ!”
“அப்போ ஈவ்னிங் சிக்ஸ் தர்ட்டிக்கு என்னோட க்ளினிக் வந்துடுங்க.” என்றவாறு வாலட்டில் இருந்து தன் விஸிட்டிங் அட்டையை எடுத்துக்கொடுக்க,
வாங்கிப் பார்த்தவன், “ஓகே மிஸ்டர் ஹரிஷ் நடராஜன்!” என்றிட,
ஹரிஷின் ஏறிய புருவங்களில் சிறு கோபமும் எள்ளலும் ஜனித்தது. “என் தங்கச்சி டாக்டர்! நான் ஹரிஷ் நடராஜனா?”
அவனே அறியாமல் அவன் தங்கையைப் பேச்சில் இழுக்க வைத்துவிட்டதில் அஸ்வத்தின் இமைகளில் வெற்றி நகை! “என்னவோ அவங்களைத் தவிர வேற யாரையும் டாக்டர்னு கூப்பிட பிடிக்கலயே மிஸ்டர் ஹரிஷ் நடராஜன்!”
ஹரிஷை வெறுப்பேற்றிவிட்ட திருப்தியில் சிரித்த முகமாக அவனிடம் விடைபெற்றுக்கொண்டான் அஸ்வத். ஸ்கார்பியோவை எடுத்து வராததால் வாடகை வாகனத்தில் சென்றவனுக்கு வழியெங்கும் உர்ரென்றிருந்த ஹரிஷின் முகமே நினைவில் தங்கியிருந்ததில் சிறு முறுவலுடனே இருந்தான்.
அம்ரு இனி தன்னிடம் பேசமாட்டாள் என்று தெரிந்ததில் சிறு வருத்தமும் இல்லாமல் அதனைப் புறந்தள்ளி இருந்தவன், தற்போது ஹரிஷைப் போலவே தானும் தன்னையறியாது அம்ருவைப் பேச்சில் இழுக்கிறோம் என்பதையும் அதனையெண்ணி தன் உள்மனமும் ரகசியமாய் சந்தோஷிக்கிறது என்பதையும் கவனிக்க மறந்தான்.
அன்று மாலையில் ஹரிஷைச் சந்தித்தப் போதும் ஏனோ அவனை வெறுப்பேற்றவே தோன்றியது. அம்ருவைத் தன்னுடன் பேசக்கூடாது என்றதே அதற்கு காரணம் என்பது அவன் ஆழ்மன ஆன்மா மட்டுமே அறிந்த ரகசியம்!
வரவேற்பறையில் உதவியாளராக ஒரு பெண் மட்டும் இருந்தாள். அவளிடம் அனுமதி பெற்று, அடுத்த அறையினுள் நுழைந்ததும் மனத்தில் ஓர் இலகுவான சாந்தம் ஓடிவந்து ஒட்டிக்கொண்டது. வெளிர் பச்சை நிற சுவர்களும் மென்மையாக ஒளி சிந்தும் விளக்குகளும் சட்டென்று ஓர் அமைதியையும் ஆசுவாசத்தையும் தந்துவிட, இருபக்கமும் திரைச்சீலைகள் அசைந்தாடிய ஜன்னலில் கொலுவிருந்த உட்புறச் செடிகள் இரண்டும் வரவேற்பாய்ப் பார்த்து அதனை வருடச் சொல்லி அழைத்தன.
சுவரோரமாக இருந்த புத்தக அலமாரியும் அளவாய், அழகாய்ப் போடப்பட்டிருந்த நாற்காலிகளும், ‘நேர்த்திக்கு பெயர் நாங்களே!’ என்று மார்த்தட்டின. அதற்கு போட்டியாய் ஓரமாக இருந்த காபி டேபிளில் பீங்கான் குடுவை, சில கோப்பைகள் மற்றும் ஒரு திசு காகித பெட்டியும் வீற்றிருந்த விதத்தில் அத்துணை நேர்த்தி!
சுவரில் இடைவெளி விட்டு மன அமைதிக்கான வாசகங்கள் மற்றும் சில சுருக்க கலைத் துண்டுகள் (abstract art) என அவ்வறை மனத்திற்கு அமைதியையும் பாதுகாப்பையும் நெருக்கத்தையும் தரவல்லதாக இருந்தது. வலது ஓரத்தில் முழுக்க கண்ணாடி சுவரும், அச்சுவரின் உட்புறம் முழுவதும் மறைத்து பெரிய திரைச்சீலையும் போடப்பட்ட ஓர் உள்ளறை இருப்பது தெரிந்தது.
“வெல்கம் மிஸ்டர் அஸ்வத்! ப்ளீஸ்…” என்று இருக்கையைக் காட்டினான் ஹரிஷ்.
“தாங்க்ஸ் மிஸ்டர் ஹரிஷ் நடராஜன்! யோர் க்ளினிக் செட்டப் இஸ் ஸ்டன்னிங்!”
தன் பெயரை அவன் நீட்டி முழக்குவதில் எரிச்சல் உண்டானாலும், அவனின் பாராட்டு மொழி மெய் தானெனப் புரிந்த ஹரிஷ் பொறுமையாகவே பேச நினைத்தான்.
‘அஸ்வத் தனியாக இருக்கிறான். அவனுக்கு யாருமில்லை.’ என்று அம்ருதா சொல்லியிருந்ததால், அவன் குடும்பத்தைப் பற்றிக் கேட்காமல் நேரடியாக விடயத்திற்கு வந்தான் ஹரிஷ்.
“வெல்… மைண்ட் டிஸ்டர்ப்டா இருக்கீங்கன்னு அம்ரு சொன்னா! ஹௌ ஹேவ் யூ பீன் ஸ்லீப்பிங்?”
“டாக்டரோட ஃப்ரெண்ட்ஷிப் கிடைச்சப்புறம் நான் நல்லாவே தூங்கறேன். ஷீ’ஸ் மை ஸ்லீப்பிங் பில்! ஐ’ம் ஃபீலிங் ரிலீஃப் மச் மோர் நௌ அ டேஸ்.” இதழ்களில் என்னமாய் எள்ளல் துள்ளலிடுகிறது இவனுக்கு!
மூக்குநுனியில் வந்தமர்ந்த கோபத்தை விரட்டிவிட்டு தொழில்முறை த்வனியிலேயே கேட்டான் ஹரிஷ். “எப்போ இருந்து உங்களுக்கு இந்த ஹை ஸ்ட்ரெஸ்?”
“ஹை ஸ்ட்ரெஸ்? ப்ச்!” இல்லையெனத் தலையசைத்தவன், “அநியாயமா ஒரு சூழ்ச்சில தன் குழந்தையை இழந்த ஒரு தகப்பனோட நியாயமான கோபம் சர் இது!” என்ற அஸ்வத்தின் கண்களில் கோபமும் ஆற்றாமையும்!
“ஆனா அம்ருவோட கழுத்துல கத்தி வைக்கற அளவுக்கு போனது உங்க மனநிலையோட சீரியஸ் இம்பேலன்ஸைக் காட்டுது மிஸ்டர் அஸ்வத்! கண்டிப்பா உங்களுக்கு கௌன்சிலிங் தேவை!”
“உங்க அம்முக்குட்டியை நான் நெருங்கி நின்னதுக்கே உங்களுக்கு என் மேல கொலைவெறி வந்துச்சே? கைல கிடைச்சது இரும்பா என்னன்னு கூட பார்க்காம எடுத்து என்னைப் போட நினைச்சீங்களே? அப்போ நான் மட்டும் என் அம்முக்குட்டியைக் கொன்னவனுங்களைப் பழிவாங்கணும்னு நினைச்சா என்னை மெண்டல்ன்னு சொல்லுவீங்களா, மிஸ்டர் ஹரிஷ் நடராஜன்?”
ஹரிஷ் சாந்தமான முகத்துடன் அஸ்வத்தின் கூற்றைக் கூர்மையாக செவிமடுத்தான். “என்ன சூழ்ச்சின்னு சொல்றீங்க அஸ்வத்? மோர்ஓவர், இன் வாட் சென்ஸ் டு யூ ஸே ‘கொன்னவனுங்க’?”
சட்டென்று சுதாரித்தான் அஸ்வத். அம்ரு சொன்ன பொய்யைக் காத்தருள வேண்டும் என்பதே அப்போதுதான் நினைவிற்கு வந்தது. “அது… உங்க தங்கச்சியைத் தான் சொன்னேன். அவங்க தானே என் அம்முவைக் கொன்னவங்க?”
அஸ்வத் இவன் கண்களைச் சந்திக்காமல் மேசையிலிருந்த சிறிய பொம்மை விளக்கைப் பார்த்தவாறு பேசியதிலும், அவன் குழந்தையைக் கொன்றவள் என்ற முறையில் அம்ருதாவைப் பற்றி பேசும்போது அவனிடம் ஆக்ரோஷமில்லாமல் அசுவாரஸ்யமே மேலோங்கி இருந்ததிலும், அஸ்வத்திற்கு பொய் சொல்லும் திறமை துளியுமில்லை என்பதைக் கண்டுகொண்டான் அந்த மனநல மருத்துவன்!
அதே நேரத்தில் அவனுக்கு உதவி தேவை என்பதும் புரிந்தது. அதற்கு அவன் இவனிடம் மனம்விட்டுப் பேசவேண்டும். அவனின் ஒத்துழைப்பில்லாமல் இந்த அமர்வு மேற்கொண்டு நகராது.
“ஓகே! உங்க பேபி தவறினதுல அதுக்கு காரணமானவங்க மேல உங்களுக்கு கோபம் இருக்குது தட்’ஸ் வேலிட்! ஆனா அந்த கோபம் உங்க மனநிலையைக் குழப்புது. அதுக்குத்தான் அம்ரு உங்களை என்கிட்ட அனுப்பிருக்கா! உங்க மனசுல என்ன இருக்குதுன்னு தெரிஞ்சா தான் நாம நெக்ஸ்ட் ஸ்டெப் போக முடியும். அதுக்கு முதல்ல நீங்க என்னை நம்பணும்.”
“அதே நம்பிக்கை உங்களுக்கும் என் மேல இருக்கணுமே?”
அவனின் எள்ளலில் ஒரு மருத்துவனாக ஹரிஷ் பொறுமையை இழுத்துப் பிடிக்க வேண்டியிருந்தது. அம்ருவை அவனிடம் பேச வேண்டாம் என்றதைத் தான் சொல்கிறானெனப் புரிந்தது.
அஸ்வத்திற்குமே அம்ருவிடமிருந்து விலகியிருத்தல் நலம் என்று புரிகிறதுதான்! ஆனால் அதனை ஹரிஷ் செயல்படுத்திவிட்டதாலோ என்னவோ அவனைக் குத்திக்கொண்டே இருக்க தோன்றுகிறது.
“நான் என் பர்சனலை கிளினிக் வரை எடுத்துட்டு வர்றதில்லை மிஸ்டர் அஸ்வத்! பிரச்சினையில்ல; டைம் எடுத்துக்கோங்க! இப்போதைக்கு மைண்ட் டைவர்ஷனுக்கு சில ரிலாக்ஸேஷன் ப்ராக்டீஸஸ் சொல்றேன். ஃபாலோ பண்ணுங்க. நெக்ஸ்ட் சிட்டிங்ல ப்ராக்ரஸ் பார்க்கலாம். இடைல என் மேல நம்பிக்கை வந்தா எந்த நேரமும் தாராளமா என்னைக் கூப்பிடலாம்.” என்றவன் மேலதிக செயல்பாடுகள் பற்றி சொல்லி, நன்முறையிலேயே விடை கொடுத்தான்.
ஒரு வழியாக முதல் அமர்வை முடித்துவிட்டு வந்தபோது அஸ்வத்திடம் மலையைப் பிளந்த மலைப்பு! இவனுக்கு தன் அம்முக்குட்டி விடயத்தில் இருப்பது உண்மையான ஆத்திரமல்லவா? அது ஏதோவொரு கணத்தில் வெளிப்பட்டுத் தொலைக்கிறதே! ஆக அம்ரு சொன்ன பொய்யைத் தொடர்வதுதான் இவனுக்கு பெரிய காரியமாக இருந்தது.
‘எப்பா! நம்ம டாக்டர் என்னாமா ரீலு சுத்துது! அதை மெய்ன்டெய்ன் பண்றதுக்குள்ள கண்ணைக் கட்டுது சாமி!’
நாம் முதல் அத்தியாயத்திலேயே பார்த்தோமே! வீட்டில் அம்ரு இலகுவாக பொய் சொல்லுவாள். அது அவளுக்கு வாய் வந்த கலை! அஸ்வத் இதுவரை யாரிடமும் அவசியமற்று பொய் சொல்ல நேர்ந்ததில்லை. அப்படி சொல்ல வேண்டிய நிர்பந்தமாயின் முன்கூட்டியே அதற்குத் தயாராக வேண்டும்.
அதனால் அவனால் நீண்ட நேரம் ஹரிஷிடம் பொய்யாக நடிக்க முடியவில்லை. எப்பேற்பட்ட மகிழுந்தையும் தலைக்கீழாகவும் ஓட்ட முடிந்தவனுக்கு இந்தத் திறமை இல்லாததாலேயே அம்ருவிடமும் ஆரம்பத்திலிருந்து உண்மைகளை ஒப்பித்துக் கொண்டிருந்தான்.
***********
அம்ருதா பிறந்த இந்த இருபத்துமூன்று வருடங்களில், ஹரிஷுக்கு அவளைக் கை நீட்டி அடிக்கும் சூழல் ஒருமுறையும் வந்ததில்லை. ஆனால் இப்போது எங்கே அடித்துவிடுவோமோ என்றஞ்சி விரல்களை இறுக்கி அவளை உறுத்து விழித்தான்.
அஸ்வத்துடனான அமர்வு முடிந்த கையுடன் வீட்டிற்கு வந்தவன் அவளைப் பார்வையாலேயே ஆட்டுவித்து மாடி ஹாலிற்கு இழுத்து வந்திருந்தான். போலவே அஸ்வத்தைப் பற்றி ஒன்று விடாமல் சொல்ல வைத்தான்.
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவன் முகம் பார்ப்பதும் விழி தாழ்த்துவதுமாக நெளிந்து கொண்டிருந்தாள் அவன் தங்கை.
“என்ன தைரியத்துல நீ அந்தக் காட்டுக்குள்ள அவன் காரை நெருங்கின? கொஞ்சங்கூட அடிப்படை அறிவில்லாம எப்டி அம்மு உன்னால அங்கே போக முடிஞ்சது? அதுவும் என்னை அப்டி பதற வச்சிட்டு போன நீ!”
“..........” அண்ணனின் குற்றஞ்சாட்டுதலில் அம்ருவின் இமை கூட உயரவில்லை.
“ஐ நோ, அது நம்ம பார்த்த ஸ்கார்பியோன்றதால தான் நீ அறிவை அடகு வச்சிட்டு போயிருப்ப! ஆனா அப்டியென்ன அது மேல மண்ணாங்கட்டி க்ரஷ் உனக்கு? அங்கேயே அவன் உன்னைக் கொன்னு வீசிருந்தா? இல்ல வேற எதுவும் செஞ்சிருந்தா?”
மூஞ்சூறு குரலில் பதில் வந்தது. “அஸ்வத் அப்டிப்பட்டவர் இல்ல!”
“அறைஞ்சு பல்லைக் கழட்டப் போறேன்!” பொறுமையெல்லாம் நீர்த்துப்போய் கையோங்கிய ஹரிஷ் அடித்தொண்டையிலிருந்து உரத்தக் குரலில் இரைந்திட,
கீழேயிருந்த மற்ற மூவரும் என்னவோ ஏதோவென பதறி மேலே பார்த்தனர்.
“ஹரீஈஈ!” நடராஜனின் கணீர்க் குரலில், நிதானமடைந்தவன் சிவந்த முகத்துடன் அம்ருவை வெட்டும் பார்வை பார்த்துவிட்டு பாதி படியிறங்கி வந்து நின்றான்.
“ஒண்ணுமில்லப்பா, ஒரு ஃபோன் கால்! கிளினிக்’க்கு ஒரு ரேக் கேட்ருந்தேன். இன்னும் முடியலன்னு கடுப்பேத்துறான்.”
“இதுக்கா அப்டி கத்தின? இந்த மாதிரி வேலைக்கெல்லாம் நேர்ல போய் பேசணும். இல்லன்னா இழுத்தடிக்க தான் செய்வானுங்க.” என்றவாறு அவர் உள்ளே போய்விட,
மீண்டும் தங்கை முன் வந்து நின்றான். “அன்னிக்கே எத்தனை வாட்டி கேட்டேன்? ஏன் அப்போவே என்கிட்ட உண்மையைச் சொல்லல?”
“நீ திட்டுவன்னு தான்…”
“இவ்ளோ தூரம் இழுத்து விட்டப்புறம் இப்போ நாலு அறை விடணும் போலருக்குது.” என்றவனுக்கு கோபத்தில் மூச்சு வாங்கியது.
சற்று நேர அமைதியின் பின்னர், “அந்த தாரகேஷ் யாரு? அவன் பேட்ச்மெட்ஸ் யார் யாரு? எந்த ஹாஸ்பிடல்ல ப்ராக்டீஸ் பண்றானுங்க? என்ன ரிசர்ச்ல இருந்தானுங்க? எல்லா டீடெயில்ஸும் இப்போ… இப்போவே எனக்கு வந்தாகணும். ஈவன் தட் விட்ச் ரேவதி’ஸ் டீடெயில்ஸ்!” என்றான் உறுமலுடன்!
தனக்குத் தெரிந்த வரையில் எல்லாம் பகிர்ந்தாள். ‘கோக்’ யாரென்று எப்படி கண்டுபிடித்தோம் என்றும் சொன்னாள்.
“அந்த கான்வோ இருக்க மொபைல் எங்கே?”
“அது அஸ்வத் கிட்ட இருக்குது.”
ஆத்திரத்தில் நிலைகொள்ளாமல் விழி உருட்டியவனின் தாடை இறுகியது. “அவனை நம்பி எப்டி இவ்ளோ தூரம் வந்த’ன்னு தான் எனக்கு புரியல. இன்னிக்கு அந்த மாதிரி ஒரு இடத்துக்கு அவனை நம்பி தனியா போயிருக்க! நான் மட்டும் வரலைன்னா?” என்றவனுக்கு மொத்த சரீரமும் நடுங்கியது.
“அண்ணா…”
"அப்டியா சரி, தப்பு சொல்லிக் கொடுக்காம நான் உன்னைத் தத்தியா வளர்த்துட்டேன்?”
“நான் ஒண்ணும் தத்தி இல்ல! அஸ்வத் தப்பா இருந்திருந்தா ஏதோ ஒரு செகண்ட்ல எனக்கு புரிஞ்சிருக்கும். அவர் என் முகத்தைக் கூட ஒழுங்கா பார்த்து பேச மாட்டார் ஹரி! மோர்ஓவர் என்னை நிஜமாவே கொல்லணும்னு நினைச்சிருந்தா என்கிட்ட இவ்ளோ உண்மையும் சொல்லிருக்க மாட்டார். காலைல நடந்தது கூட அவரோட பர்ஸனலை உன்கிட்ட சொல்லிட்டேன்ற மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ல, அவரோட ஹைப்பர் டென்ஷன்ல… ஆனா கண்டிப்பா அஸ்வத்தால கொலை எல்லாம் செய்ய முடியாது.”
குரலுயர்த்தாமல் நெறித்த புருவமும் கூர் பார்வையுமாக, “உன்னைக் கொல்ல துணிஞ்சிருக்கான்! அவனுக்காக எவ்ளோ தூரம் வக்காலத்து வாங்கற நீ? அதுவும் என்கிட்டேயே?” எனக் கேட்க, தொண்டை உலர்ந்தது அம்ருவிற்கு!
சில நொடிகள் தன் பார்வையை மாற்றாமல் நின்றவன், “போய் நான் வேலையா இருக்கேன்னு சொல்லி ஸ்வேதா கூட பேசிட்டு இரு!” எனவும், நடை தயங்கிட அவ்விடம் விட்டு அகன்றாள் அம்ருதா.
அவள் சென்றதும் அலைபேசியை எடுத்தவன் யாருக்கோ அழைத்து தாரகேஷ் குழுவினரைப் பற்றி சொன்னான். அது குறித்து மேலதிக தகவல்கள் கிடைத்தால் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். பின்னும் அவனால் தங்கையின் செயலை சீரணிக்க முடியவில்லை. இத்தனைப் பெரிய விடயத்தைத் தன்னிடம் மறைத்திருக்கிறாள் என்பதே அவனை வருத்தியது.
மேலும் நான்கு நாட்கள் கடந்தது. அன்று காலையிலேயே அஸ்வத் அழைத்தான். ஹரிஷ் குளியலறையில் இருக்க, ஸ்வேதா தான் திரையைப் பார்த்தாள்.
அவள் அழைப்பை ஏற்கும் முன்னர் தலையைத் துவட்டியபடி வந்த ஹரிஷ் கேட்டான். “யாரு பேபி?”
“அஸ்வத்!”
விழிகளில் சிந்தனை மிகுந்திட, துவட்டிக் கொண்டிருந்த துவாலையைத் தோளில் போட்டுவிட்டு உடனே அழைப்பை ஏற்றான். “மார்னிங் அஸ்வத்! சொல்லுங்க. நான் சொன்ன ப்ராக்டீஸஸ் ஃபாலோ பண்ணீங்களா? எனிதிங் சேஞ்சஸ்?”
அவன் பேசுவதைக் கேட்ட ஸ்வேதா யாரோ அவனின் நோயாளி என்றெண்ணியபடி குளிக்க சென்றுவிட, ஹரிஷ் ஜன்னலருகே வந்தான்.
அஸ்வத்திடம் பதிலற்று மௌனம்!
“அஸ்வத்?”
“சர்…”
“லெட் யோர் மைண்ட் செட்டில், அஸ்வத்! ஃபீல் ஃப்ரீ வித் மீ!”
“ம்க்கும்… அது… டாக்டர் கிட்ட பேச வேணாம்னு சொல்லிட்டீங்க… ஆனா…”
ஆலோசகன் போய் அண்ணன்காரன் வந்துவிட கூடாதென்று ஹரிஷ் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. “ஆனா?”
“இன்… இன்னிக்கு என் பொண்ணுக்கு படையல்…”
அவன் குரலின் கமறலில், வார்த்தைகளின் தேய்வில் அவனின் நெஞ்சத்து வலியை செவிவழி உணர்ந்தான் ஹரிஷ்.
“தர்ட்டீ டேஸ் ஆகிடுச்சாம்… ஹெல்பர் சொன்னாங்க…”
அஸ்வத் இன்னும் மகளோடு மனவெளியில் உறவாடிக் கொண்டிருக்கிறான் என்று இந்த மருத்துவனுக்குப் புரிந்தது.
“யாருமே இல்லாம இருந்தப்போ… டாக்டர் மட்டும்தான் நான் பேசறதையெல்லாம் பொறுமையா கேட்டாங்க. ஷீ’ஸ் மை வெல்விஷர் ஆல்சோ! அதான்… அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வர முடியுமான்னு…”
அம்ருதாவை அவனிடமிருந்து விலக்கி வைத்ததற்காக அவ்வப்போது குத்தலாகப் பேசினாலும், தன் வார்த்தையை மீற நினைக்காமல் தன்னிடம் வேண்டுகோளாகக் கேட்ட விதத்தில் முதன்முதலாக அஸ்வத்தின் மேல் ஓர் நன்மதிப்பு உண்டாகவே செய்தது. ஆனால் அதற்காக எல்லாம் அம்ருவை அவனோடு நட்பு பாராட்ட செய்வதில் ஒரு அண்ணனாக ஹரிஷுக்கு உடன்பாடில்லை.
அத்துடன் அஸ்வத்துடன் சேர்ந்து அம்ருதா கால் வைத்திருக்கும் நிழலுலகம் ஆபத்தானதாகத் தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தன் தங்கைக்கு அஸ்வத் மேலுள்ள அபரிமித பிடித்தமும் அபார நம்பிக்கையும்! அது நலமென படவில்லை!
ஆக, எப்படி பார்த்தாலும் இந்த நட்பை முறித்துவிடுவதே நலம் என்ற முடிவிற்கு வந்தவன் அவனைப் போல் குரலைச் செருமிக் கொண்டான்.
அந்த சில கணங்களிலேயே அஸ்வத்திற்கு அவனின் பதில் தெரிந்துவிட்டது. தான் அவனுடைய தங்கையைக் கொல்ல நினைத்த பைத்தியக்காரன் என்று நம்பும் ஹரிஷ் வேறென்ன பதிலைச் சொல்லி விடப் போகிறான்? தன் ஏமாற்றம் வெளிப்பட்டு விடாமல் கவனமாகச் சொன்னான். “ஓகே! வைக்கறேன் சர்.”
“ஹோல்ட் அப் அ செகண்ட், மிஸ்டர் அஸ்வத்!”
“ம்ம்!”
“அம்ருவுக்கு பதிலா நான் வரலாமா? அஸ் யோர் வெல்விஷர்?”
அடுத்த விநாடி, “வாங்களேன். ஒன்லி அஸ் மை வெல்விஷர்; நாட் இன் பிளேஸ் ஆஃப் அம்ருதா!” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
‘‘நாட் இன் பிளேஸ் ஆஃப் அம்ருதா?’ என்ன மீனிங்ல இப்டி சொல்றான் இவன்?’
“இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டிருக்கீங்க?” குளியலறையில் இருந்து வந்த ஸ்வேதா அவன் சிந்தனையைக் கலைத்திட, சட்டென்று கணவனாக மாறிப் போனான் ஹரிஷ்.
Mind power meets Scorpio's willpower🚗...

Comments
Post a Comment