Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு - 30.1

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 30.1


இரண்டு மாதங்கள் கழிந்திருந்தன. வித்யாலட்சுமி மகனின் திருமணம் குறித்து ஆரவி வீட்டில் பேசலாம் எனக் கூற, ரகுநந்தன் இப்போது வேண்டாமென மறுத்துவிட்டார்.

அன்று பரமானந்தன் மகளைப் பார்த்ததும் பரிதவித்து வந்ததும், மகளைப் பாதுகாத்துள்ளோம் என்றெண்ணி மீண்டும் மீண்டும் தங்களுக்கு நன்றி கூறி சங்கடத்தில் ஆழ்த்தியதும், அவரின் மனதிற்கு அத்தனை ஏற்புடையதாயில்லை. 

விபுநந்தனிற்கு இன்னும் பொறுப்பும் பக்குவமும் போதவில்லை என்று நினைத்தார். அதோடு இப்போதுதான் அவனுக்கு இருபத்தைந்து வயதாகிறது. எனவே ரிஷி எப்படி ஒரு வெளிநாட்டில் தங்கள் கிளையைத் தோற்றுவித்து இன்று வரை அதைத் திறம்பட நிர்வகிக்கின்றானோ, அதே போல் விபுவையும் ஏதேனும் வெளிநாட்டிற்கு பார்சல் செய்யத் தீர்மானித்திருந்தார். 

அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருந்தது ஜப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய தீவான ஹொக்கைடோவை! அங்கிருந்தே தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம்.

இந்த வயதிலேயே தொழிலில் ரிஷியை விட விபு திறமையானவன் என்பது ஒரு முதலாளியாக ரகுநந்தனிற்கு புரிந்திருந்தாலும், ரிஷியைப் போல் விபு பக்குவப்பட்டவனல்ல என்று ஒரு தந்தையாக புரிந்து வைத்திருந்தார். அத்தோடு ஆரவிக்கும் இப்போதைக்கு வரன் பார்க்கவில்லை என்பதையும் ஃபெர்னாண்டஸ் மூலம் அறிந்திருந்தார். எனவே, விபுவின் திருமணப் பேச்சை இன்னும் சில வருடங்களேனும் நீட்டிக்க எண்ணினார். அதன்பொருட்டே இந்த திட்டத்தை வகுத்திருந்தார். 

ஆரவி குடும்பத்துடனான நட்பையும் நன்முறையில் பேணி வருகின்றார். பெண்ணிற்காக என்றில்லாமல், உண்மையாகவே பரமாவுடனான நட்பை ரகுநந்தன் விரும்பினார். ஆம்! இவருக்கு பரமானந்தன் எப்பொழுதோ 'பரமா'வாகிவிட்டார். இவர்கள் நட்பைக் கண்டு விபுநந்தன் தான் பீதியாகிப் போவான்.

"டாட்! அவர் என் மாமனார். குடுமி வச்ச, அடியே அபிஷ்டுனு கூப்பிடற, சுத்த்...த சைவம் சாப்பிடற ஐயர். நீங்க பாட்டுக்கும் பழக்கதோஷத்துல இது எங்க ஹோட்டல்ல செஞ்ச புது டிஷ், ட்ரைப் பண்ணிப் பாருங்க பரமானு சொல்லி, நாட்டுக்கோழிக் குழம்பை குடுத்து, என் வாழ்க்கையை நாசம் பண்ணிடாதீங்க தெய்வமே!" என்று கையெடுத்துக் கும்பிட்டு அலறுவான்.

தந்தை அவர் நண்பர்களை உபசரிப்பதாய் எண்ணி, இப்படித் தான் சொல்லுவார் என்று மகனும் அவரைப் பற்றி மிகத் தெளிவாகவேப் புரிந்து வைத்திருந்தான். ரகுநந்தனும் இவ்விடயத்தில் சற்று கவனமாகவே நடந்து கொண்டார்.

வித்யாலட்சுமியும் நேரம் கிடைக்கும் பொழுது கோவிலுக்கு பரமேஸ்வரியும் வருகிறாரா எனக் கேட்டுவிட்டு, இருவரும் கோவிலில் சந்தித்துக் கொள்வர். அடிக்கடி சந்தித்து அதிகம் பேசிக் கொள்வதில்லை என்றாலும் இரு குடும்பங்களுக்குமே நல்ல நட்பு உருவாகியிருந்தது.

இதற்கிடையே, இந்த பிறவியிலேயே மிச்ச சொச்சமின்றி காதலித்துவிட வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டவர்கள் போல் விபுவும் ஆரவியும் அலைபேசி வாயிலாக காதலாட்டத்தை சிறப்புடன் ஆடினர். 

இருவரின் காதலில் ஊடலே உக்கிரமாய் இருக்கும். காரணம் இந்த இரண்டு மாதங்களில் இருபது முறையேனும் காட்டு பங்களாவிற்கு செல்ல வேண்டுமென சொல்லியிருப்பாள். ஆனால், அவன் ஒரு முறையேனும் சம்மதமாய் தலையசைத்தானில்லை.

அன்று குற்றவுணர்வில் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தவன், ஆரவி அவள் தந்தையுடன் கிளம்பப் போகிறாளென்றதும் ஐந்து நாட்களும் தன் கை வளைவிற்குள் இருந்தவள், தான் தூங்கும் பொழுது சிரித்துக் கொண்டே நழுவிச் செல்வதைப் போல் உணர்ந்தான். விழித்துப் பார்த்ததும் தேடுபவனைப் போல் தான்யாவின் பின்னிருந்து எட்டிப் பார்க்க, அவனவள் மாடியேறிக் கொண்டிருந்தது தெரிந்தது.

கைபேசியை எடுக்கச் செல்பவள் எதற்காக யாரையோ தேட வேணும்? அன்று அவள் நடவடிக்கையைக் கண்டவனுக்கு அவள் மனநிலை குறித்த கவலை அதிகரிக்கவே செய்தது. இதைக் குறித்து யாரிடமும் அவன் பகிரவில்லை. ஆரவியிடமே நேரிடையாக கேட்டால் கூட 'நத்திங் விபு' எனக் கூறி கடுப்படித்துவிடுவாள். எதற்கு வம்பு என அவளிடம் எதையும் கேட்கவுமில்லை. அவள் விரும்பும் காட்டு பங்களாவிற்கு அழைத்துச் செல்லவுமில்லை. வேலையிருக்கிறது என்று கூறி தட்டிக் கழித்து வந்தான். 

இதற்கு பயந்தே இரண்டு மாதங்களும் வெளியிடங்களில் அவளை சந்திக்க விழையவில்லை இவன். வெளியிடத்தில் சந்திக்கலாமென்றால் அவளின் முதல் தேர்வு எதுவாக இருக்கும் என்றுதான் அறிந்து வைத்திருக்கிறானே!

'காதலிக்கும் வரை தான் இந்த ஆண்கள் பெண்களை சுற்றுகின்றனர். அவளுக்கும் அவன் மேல் காதல் வந்து விட்டால் அவளைத் தான் சுற்ற விடுகிறான்' என தினமும் ஒரு மூச்சு பொரிந்து தள்ளுவாள், அவள். 

'காதல் வந்த பின்னும் வாழ்வில் உயரும் வழியைப் பாராமல் ஊர் சுற்றுபவனை அதட்டி, அடக்கி வேலையில் கவனம் செலுத்த செய்யும் காதலியாக அல்லாமல் இவளே பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறாள்' என அலுத்துக் கொள்வான், இவன்.

இவ்வாறாக இருவரின் உரையாடலில் பாதி நேரம் வார்த்தைப் போரே இடம்பெற்றிருக்கும்.

ஆரவி, அன்று மாடியில் போய் சீதாவை தேட எங்கும் அவளைக் காணவில்லை. கீழே அத்தனைப் பேர் அமர்ந்திருக்க, மாடி ஹாலை சுற்றிக் கொண்டு மொட்டை மாடிக்கும் போகவும் முடியவில்லை. எனவே அவள் அன்று சீதாவிடம் விடைபெறாமலே வர நேர்ந்துவிட்டது. அதுவே அவளுக்கு மனதில் ஓர் சுணக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அங்கு தனித்துச் செல்லவும் துணிந்திருந்தாள் தான். ஆனால் ஆளில்லா வீட்டிற்கு இவள் மட்டும் சென்றால், அங்கே காவலுக்கு இருக்கும் தட்சிணா மற்றும் கிருஷ்ணா மூலம் வீட்டினருக்கு தகவல் போகுமே? அவர்களிடம் கூட அனுமதி வாங்கிச் செல்ல முடியும்தான். ஆனால் தன் பேச்சை மீறி சென்றதற்காய் விபுவிற்கு தன்னிடம் வருத்தமேற்படுமே? இதையெல்லாம் யோசித்தே அவள் போகாமல் இருந்தாள்.

ஆனால் சீதாவின் நினைவு நாளுக்கு நாள் அதிகமாகி, மனதினை அலைப்புறச் செய்தது. இன்னதென்று இனம் காண இயலா ஓர் துன்பம் வாட்டியது. எனவே இன்று விபுநந்தன் ஹொக்கைடோ செல்லப் போவதாகக் கூறவும், போவதற்கு முன் ஒரே ஒருமுறை அங்கு அழைத்து செல்ல வேண்டுமென அடம்பிடித்தாள்.

வேறு வழியில்லாமல் சரியென்றிருந்தான், ஒரு நிபந்தனையுடன்! தன்னை விடுத்து தனியே மாடிக்கோ அல்லது வேறு அறைகளுக்கோ செல்லக் கூடாது என்பதுதான் அந்நிபந்தனை. 

'ஆமாம் அப்படியே உன் வீட்டைக் கொள்ளையடித்துவிடப் போகிறேன் பார்!' என்று அதற்கும் சிலிர்த்துக் கொண்டாள். எப்படியோ சீதாவை ஒருமுறை கண்ணால் பார்த்து விட்டால் இந்த மனசஞ்சலம் தீரும் என்று நினைத்தாள்.

இதோ… இன்று இருவரும் காட்டு பங்களாவிற்கு வந்திருக்கின்றனர். முதன்முதலாக இங்கே எப்படி பதற்றநிலையில் வந்தாள் என்பதைச் சொல்லி நந்தனைத் திட்டிக் கொண்டே வந்தாள். அவனும் அந்நாளை நினைத்து மென்னகையோடு அவளின் வசவுகளை ஏற்றான்.

இன்றும் தட்சிணா மட்டும் தான் இருந்தான். 'விபு போடும் கிரிமினல் திட்டங்களை நிறைவேற்றும் வலதுகை நீதானா?' என்று அவனைப் போலியாக மிரட்டியவள், அவனின் உடல்நிலையையும் விசாரித்து தெரிந்துகொண்டாள். 

தன் சின்னத்தம்பியின் மனைவியாக வரப் போகின்ற பெண் தன்னை அக்கறையாக விசாரித்து, ஆறுதலாக பேசியதில் தட்சிணா பேருவகைக் கொண்டான்.

உள்ளே சென்றதும் விபுநந்தன் நினைத்தைப் போலவே ஆரவி மாடிக்கு செல்ல வேண்டுமென்றாள். தானும் உடன் வருவதாகக் கூறி பின்னோடு சென்றான். 

அவனைப் பொருட்படுத்தாமல் வேகவேகமாக மாடியேறியவள் ஓடிச் சென்று சீதாவின் அறையைத் திறந்தாள். மூச்சு வாங்க அறை முழுதும் விழிகளை சுழற்ற, எங்கும் இவள் தேடி வந்த தேவதை இல்லை. அதுமட்டுமல்லாமல் முன்னர் இவள் இங்கிருக்கும் போது மனதினுள் உணர்ந்த ஒரு வகையான அமானுஷ்ய உணர்வு இப்போது இவளுக்கு ஏற்படவில்லை.

ஆரவியின் விழிகளின் விளிம்பில் வந்து நின்றது ஒற்றை நீர்த்துளி! அதனை விபு அறியாமல் உள்ளிழுத்துக் கொண்டவள், விருட்டெனத் திரும்பி மொட்டை மாடியை நோக்கி ஓடினாள். 'மெதுவாகச் செல்!' என்ற நந்தனின் எச்சரிக்கையைக் காற்று வாங்கிக்கொண்டு போனது.

மேலே…

மொட்டை மாடி சென்று பார்த்ததும் முதலில் ஆரவி மடங்கி அமர்ந்து, பெருங்குரலெடுத்துக் கதறினாள். 'கடைசி கடைசியா கூட என்னைப் பார்க்காம போயிட்டேளே மன்னி. ஒரு ஹக் கூட பண்ணத் தோணிலியோ நோக்கு?' என்று மனதிற்குள் அரற்றினாள்.

ஆம்! சீதாவின் பூக்காடு சருகாகியிருந்தது. வேறொரு காட்டில் சூல் கொண்டு, ஜனித்து, முகிழ்த்து, முகையாய் அலர்ந்து, மலர்ந்து, பூத்து, பூரிப்பாய் பூமியை வலம் வர சென்றுவிட்டாள், சீதாலட்சுமி.

தாயைத் தொலைத்த குழந்தையாய்த் தேம்பிக் கொண்டிருப்பவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான், விபுநந்தன். 

அவளுக்கு பிடித்த, அவள் ரசித்த, தங்களின் பொன்னான ஐந்து நாட்களின் பெரும் பொழுதைக் கழித்த அந்த பூக்காடு இப்படி சருகாகியிருப்பதால் தான் அழுகிறாளென்று முதலில் நினைத்தான். ஆனால் இவன் அணைத்ததும் இறுகக் கட்டிக்கொண்டு இன்னும் இன்னும் கத்தி அழவும் அவனுக்கு மீண்டும் சந்தேகம் வந்துவிட்டது. 

பூச்செடிகள் வாடுவதற்காகவா இப்படி உடைந்தழுகிறாள்? அப்படியொன்றும் பூஞ்சை மனம் கொண்டவளல்லவே? இங்கு வந்தால்தான் இவள் இவ்வாறு வேறுபாடோடு நடந்து கொள்கிறாள். போகும் போது நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாமா என்று கூட சிந்தித்தான்.

"பேபி!"

"பார்த்தியா விபு?" என்று வாடி தலை கவிழ்ந்திருக்கும் செடிகளைப் பார்த்துக் கேட்க, அவனுக்கும் அப்படி பூத்துக் குலுங்கிய தாவரங்கள் கருகிப் போயிருப்பதைப் பார்த்து வருத்தமாக தான் இருந்தது. ஆனால் தன்னவளை இப்போது சமாதானம் செய்தாக வேண்டுமே! எனவே தன் வருத்தத்தை சற்று ஒதுக்கி வைத்தான்.

"ப்ச்! அன்னிக்கு நாம வந்தப்ப மழைக்காலம் பேபி மாமி. ஆனா இப்ப மழை இல்லல? அதான் வாடிட்டு இருக்குது போல. இதுக்கு போய் யாராவது அழுவாங்களா?" 

அவன் பேசுவதைக் கேளாமல், மீண்டும் மீண்டும் அருகே இருந்த செடியைத் தடவிப் பார்த்து கண்ணீரைக் கொட்டினாள்.

"பேபி, இங்கே பாரு! நாளைல இருந்து நம்ம தட்சிணாவையும், கிருஷ்ணாவையும் இதெல்லாம் க்ளீன் பண்ணிட்டு வேற ப்ளாண்ட்ஸ் வாங்கி வைக்க சொல்வோம் சரியா? திரும்ப இந்த இடத்துல பழைய மாதிரி பூவா பூக்க போகுது பாரேன்…" என்று சின்னக்குழந்தையிடம் பேசுவது போல் பேச, ஆரவியின் அழுகை பட்டென்று நின்று போனது.

உடைந்து, சொரசொரத்துப் போயிருந்த தரையில் நிலைத்த விழிகளோடே, "பூ திரும்ப பூக்க போகுது." என்று மட்டும் சொன்னாள்.

"ம்ம்! டெஃபனட்லி!" என்றவாறே அவள் கன்னத்து நீரைத் துடைத்துவிட்டு, கீழே அழைத்து வந்தான். 

மீண்டும் சீதாவின் அறைக்குள் சென்றவளின் மனம் சற்று அமைதியடைந்திருந்தது. அவள் நினைவாக அவள் வீட்டினர் வைத்திருந்த ஒவ்வொரு பொருட்களையும் மௌனமாகத் தொட்டு தடவிப் பார்த்தாள். அவளைக் கடைசியாக ஒருமுறை கூட காணவில்லை என்றதில் வருந்தியும், இனியொரு ஜென்மத்தில் வேறெங்கோ இருப்பாளென்ற நம்பிக்கையில் மனம் நிறைந்தும் இருந்தது. அப்படி இருந்தால் தீர்க்காயுளோடு இருக்க வேண்டுமென மீனாட்சியை மிரட்டி, வேண்டிக்கொண்டாள்.

இவள் இப்படி தன் தமக்கையின் ஒவ்வொரு பொருளையும் ஆறுதலாய் வருடிக் கொண்டிருப்பதைப் பார்த்த விபுநந்தன் அப்படியும் இருக்குமோ என சிந்திக்க ஆரம்பித்துவிட்டான்.

To be continued👇... 



Comments

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

ஸ்கார்பியோ காதல்🚗💌 - 9

  அத்தியாயம் 9 ‘வந்தோமா சொல்ல வேண்டியதைச் சுருக்கமா சொல்லிட்டு போட்டு தள்ளினோமான்னு இல்லாம, அவகிட்ட ஏன் உன்னோட மொத்த கதையையும் சொல்லிட்டு இருக்க? இத்தனை நாள் நிராதரவா நின்னுட்டு இப்போ ஆள் கிடைச்சதுன்னு ஆறுதல் தேடறியா அஸ்வத்?’ தன்னுள்ளே தோன்றிய கேள்விக்கு, ‘நோ! சின்னப் பொண்ணு! ஈஸியா ஏமாத்தலாம். அவ சர்க்கிள்ல இருந்து நமக்கு தேவையான யூஸ்ஃபுல் இன்ஃபோ ஏதாவது தேறுதான்னு பார்க்கலாம். அதுக்கு அவளுக்கு என் மேல நம்பிக்கை வரணும். ஸோ இந்த ஃப்ரெண்ட்லி அப்ரோச் தான் பெட்டர்! மோர்ஓவர் அவகிட்ட என் விஷயம் சொல்றதால ஒரு கான்ஸூம் (பாதகம்) இல்ல.’ என்று குரூரமாக பதிலளித்தான் அஸ்வத். அத்துடன் என்ன இருந்தாலும் அன்று இறப்பை நாடியவனைத் திசை திருப்பியவள் என்ற நன்றியுணர்வும் அம்ருதா மேல் இருந்தது.  ஆனால் இத்தனை வருடங்கள் உள்ளே அமிழ்த்தி வைத்திருந்த, தன் முன்னாள் மனைவி ரேவதி பற்றி அம்ருவிடம் பாதி பகிர்ந்ததிலேயே, அஸ்வத் மனதில் ஓர் அமைதி வியாபித்திருப்பதை அவன் உணரவில்லை.  எந்தளவிற்கு அமைதி?  இதுவரை இல்லாத அளவில் நிதானமாக, மிக நிதானமாக ஒரு கொலையை - அதாவது அம்ருவைக் கொல்வதற்கு எந்த மாதிரியாகத் த...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.