
அத்தியாயம் 30.2
அவன் சிந்தனையில் சுழன்ற எண்ணத்தின் சாராம்சம் இதுதான்! முதலில் இங்கு வந்து மாட்டிக் கொண்ட பின், அவள் கதையோடு தங்களை சம்பந்தப்படுத்திக் கொண்டதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்த ஆரவி, இவன் சீதாவின் கடந்த காலத்தை… அதுவும் இவள் கதையில் அக்காவை எழுதியுள்ளாள் என்று சொன்ன பிறகு, அவள் இங்கு இருப்பது போல் தனக்குத் தானே உருவகப்படுத்திக் கொண்டாளோ? கடைசி நாள் பகல் முழுவதும் இவள் சீதாவின் அறையை விட்டு வரவே இல்லையே? அன்று சாப்பிடுவதற்காக எத்தனை முறை வந்து அழைத்தான்?
இன்னும் சொல்லப் போனால் முதலில் இவளிருந்த தான்யாவின் அறையில் தான் இவளுக்கு விருப்பமான நாவல் புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை தொட்டுக் கூட பாராதவள் சீதாவின் அறையே கதி என்று கிடந்தாள். இப்பொழுதும் இதோ இங்கே வந்து என்னவோ பசலை நோய் கண்டவளைப் போல் படம் காட்டிக் கொண்டிருக்கிறாள்?
இவ்வாறாக இவன் சிந்தித்துக் கொண்டிருக்கையில் விறுவிறுவென கீழே வந்து நிலவறைக்குள் சென்ற ஆரவி, அங்கிருந்த சீதாவின் மருத்துவப் படிப்பு சம்பந்தமான புத்தகங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டாள். ஏனென்று கேட்ட விபுவிடம், தன் கதையில் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தை வடிவமைக்க ரெஃபெரன்ஸிற்கு வேண்டுமென அபாண்டமாய் புளுகினாள்.
மீண்டும் மேலே வந்தவளை நிறுத்தி, "மாமி நில்லு! அன்னிக்கு அண்டர்க்ரௌண்ட் ரூம்க்கு வர்றதுக்கு அப்டி பயந்து நடுங்கின? இப்ப நான் வர்றேனா என்னனு கூடப் பார்க்காம நீ பாட்டுக்கும் மியூசியத்தை சுத்துற மாதிரி உள்ளே போய் சுத்திட்டு வர்ற?" என சந்தேகக் கண்ணோடே கேட்டவன், அவள் பதில் சொல்ல வாய் திறக்கையில், "'நத்திங் விபு!' இது தானே சொல்லப் போற?" என்று கேட்டு, கைக் கட்டி முறைத்தான்.
அவன் அப்படிக் கேட்டதும் இதுவரை கனத்த மனதோடும் வலிக்கும் மௌனத்தோடும் இருந்தவள் பக்கென சிரித்துவிட்டாள்.
"சொல்லு பேபி! என்கிட்ட எதையாவது மறைக்கறியா?" என்று விடாமல் அவள் கண்களைப் பார்த்து அழுத்தமாய் கேட்டான்.
சொல்லிவிடுவோமா என ஒரு கணம் யோசித்த ஆரவி, பின் சீதா சொன்னதைப் போல் அவர்கள் வீட்டிலுள்ளவர்கள் யாரும் தாங்கமாட்டார்கள். அதுவும் சீதாவை அன்னையாக நினைத்துக் குழந்தையாக பரிதவிக்கும் விபு நிச்சயம் தாங்கமாட்டான். உடைந்துவிடுவான்.
அவன் உடைவதைக் காண தனக்கெங்கே சக்தி இருக்கிறது? எனவே இந்த விடயம் தன்னோடே புதைந்து போகட்டும் என்று மனதில் சீதா இருக்கும் பகுதியை இழுத்து மறைத்து திரை போட்டுக்கொண்டாள்.
அவள் சொல்லியிருந்தாலும் இவன் அவளை லூசு என்றிருப்பான் என்பது அவளுக்கு தெரிய வாய்ப்பில்லையல்லவா?
"உன்கிட்ட மறைக்க எனக்கு என்ன இருக்குது விபு? அன்னிக்கு யார் இப்டி செஞ்சிருப்பா? இது யாரோட ஆம்னு தெரியாம பயந்தேன். இப்ப எல்லாம் தெரிஞ்சப்புறம் நிலவறை கூட பயமா தெரியல."
"ம்ம்??"
"ம்ம்! வெறும் அஞ்சு நாள் தான் இங்கே இருந்தேன். ஆனாலும், இங்கே எனக்கு ஏதோ ஒரு பாண்டிங் இருக்கற ஃபீல். அதோட இந்த ரூம் ரொம்பவே ஸ்பெஷலா தோணுது." என்று விழிகளை சுழற்றியபடி சொன்னாள். இதெல்லாம் ஓரளவு உண்மைதானே?
விபுநந்தனுக்கு இப்போதுதான் ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. இவன் அவளிடம் சீதாவின் கடந்த காலத்தைச் சொன்னானே தவிர, இது தான் அவளது அறை என்று எப்போதும் சொல்லவில்லையே?
'சரி தான்! தன் அக்காவைப் பார்க்காமலேயே அவளை எழுதியதைப் போல், ஏதோ ஒரு உள்ளுணர்வில் உந்தப்பட்டு இவ்வாறாக நடந்து கொள்ளலாம்; தன் பேபி மாமிக்கு வேறு எவ்வித தொந்தரவும் இல்லை.' என்று சற்று சமாதானமானவன், 'அப்படியே இருந்தாலும் அவளைக் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ளத்தான் நானிருக்கிறேனே!' என்று காதல் செய்பவனாக மாறினான்.
ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் பின்னிருந்து அணைத்தபடி கேட்டான்."அது மட்டும்தானே? வேற ஒண்ணுமில்லயே?"
இவளை ஆளும் காதலல்லவா இவன்? எத்தனை தூரம் இவள் மனதின் ஆழத்தைப் புரிந்திருந்தால், எத்தனை தூரம் இவளின் சிறு அசைவுகளையும் படித்திருந்தால் இப்படி விடாது கேட்பான்? அது இவள் மேல் உள்ள அக்கறையன்றி வேறென்ன?
அவன் மேல் இன்னும் இன்னும் பெருகிய பெருங்காதலைக் கண்களில் தேக்கி, "நத்திங் விபு!" என்றவள் திரும்பி நின்றிருந்தவாறே அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
இந்த 'நத்திங் விபு'வில் கோபம் கொள்ளாது, நெறி கட்டிய கள்ளை அருந்தி மட்டையானவன் போல் போதையேறிய குரலிலேயே, "பேபி மாமி… இது என்ன பூ?" என்று அவள் கேசத்திலேறி, இவனிடம் பழிப்புக் காட்டிக் கொண்டிருக்கும் மலர் சரத்தில் நெற்றியை முட்டிக் கேட்டான்.
"சந்தன முல்லைப் பூ! ஏன் கேக்கற?"
"இது என்னை ரொம்ப நேரமா டிஸ்டர்ப் பண்ணுது." என்று அவள் பின்னங்கழுத்தில் தொடங்கி பூவை விடுத்து, பூவையவள் வாசனையில் கரைய ஆயத்தமாகிவிட்டான். விலக எத்தனித்தவளிடம், 'ஹொக்கைடோ சென்று விட்டால் பின் எப்பொழுது திரும்ப முடியுமோ?' என்று கேட்டு, மோகத்தின் பண்புகள் பற்றி வகுப்பெடுத்தான்.
இவள் கன்னத்தில்
காயாது ஊறும் நீர்ம முத்தங்கள்!
அனைத்தும் அவன்
காதல் சேர்மானத்தின் தீர்த்தங்கள்!
கீழே வந்ததும் முதல் வேலையாக மாடித் தோட்டத்தை சீரமைக்க வேண்டுமென தட்சிணாவிற்கு கட்டளையிட்டாள். என்னென்ன பூக்கள் இருந்தனவோ அத்தனையும் இடம் மாறாமல் அதே இடத்தில் இருக்க வேண்டுமென்றாள்.
வாரம் ஒருமுறை நான் வந்து சோதனை செய்வேன் என்று எச்சரிக்கை விடுத்தாள். அவளிடமிருந்து தட்சிணாவைக் காப்பாற்றும் பொருட்டு, அவளை வெளியே இழுத்து வந்தான் விபுநந்தன்.
முன்னர் அவள் விரும்பியபடியே, இருவருமாய் காட்டிற்குள் கால்கள் நோகுமளவு நடந்தனர். தேனூறும் பூவினங்களிடமும், தெவிட்டாத புள்ளினங்களிடமும் பேசிப் பேசித் தீர்த்தனர். மேனி தொட்டு கிச்சுகிச்சு மூட்டிய காற்றிடம் கீதம் இசைக்கக் கேட்டு லயித்தனர். மழை மட்டும் இல்லை.
தன்னை விட அவன் கேமராவை அதிகமாக கொஞ்சுகிறான் என்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள், அவள். அவளைத் தனக்கொரு கவிதை சொல்லுமாறு கேட்டு, அவள் சொன்னதும் வழக்கம் போல் வேண்டுமென்றே அவளைக் கலாய்த்துத் தள்ளினான், இவன். இருவரும் அன்றில்களாய் அக்காட்டை சுற்றி வந்து, மாலை நெருங்கும் போது வீடு வந்து சேர்ந்தனர்.
வந்ததும் தட்சிணா அந்த நற்செய்தியைச் சொன்னான். "நம்ம தானும்மாவுக்கு பாப்பா பொறந்திருக்காம் தம்பி!"
காதலியின் கரத்தைப் பிடித்திருந்தவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! "எப்ப சொன்னாங்க?"
"பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் அம்மா ஃபோன் செஞ்சாங்க. உங்க ஃபோன் ரீச் ஆகலைன்னு சொன்னாங்க."
"சரி, நான் கிளம்புறேன்." என்றுவிட்டு, ஆரவியையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
மருத்துவமனையில் குடும்பத்தினர் அனைவரும் குழுமியிருந்தனர். தான்யாவின் கணவன் பிரபாகரனும் கூட வந்திருந்தான். ரிஷி, யதுநந்தனுடன் சேர்ந்து அங்கிருந்த அனைவருக்கும் இனிப்புகளை தந்து கொண்டிருந்தான். கூட்டம் கூடாது என்பதால் அனைவரும் குழந்தையைப் பார்த்துவிட்டு, காரிடாரில் நின்றிருந்தனர்.
இவர்கள் இருவரும் உள்ளே வந்த போது தான்யா சற்றே சோர்வாக சாய்ந்திருந்தாள். குழந்தையைக் குட்டித் தொட்டிலில் போட்டு மகிழ்வாய் பார்த்திருந்தார் வித்யாலட்சுமி.
இவளைப் பார்த்ததும், "ஆரவி! பாரேன் நம்ம வீட்டுக்கு இன்னொரு லட்சுமி வந்திருக்கா." என்றவர் குழந்தையை அவளிடம் தூக்கிக் கொடுக்க, தன் கைகளில் பட்டுக் குவியலாய் கிடக்கும் பொக்கிஷத்தை முகம் விகசிக்க அணைத்துக் கொண்டாள், ஆரவி.
கண்திறவா பஞ்சு முகத்தை, தன் முரட்டுக் கரத்தால் மென்மையாக வருடித் தந்தான், மாமன்காரன். அது பொறுக்கவில்லையோ என்னவோ தன் ரோஜா நிற கைக் கால்களை ஆட்டி துள்ளிய மருமகள், அத்தையின் தோள் வழிந்த மலர் சரத்தை இறுகப் பற்றிக்கொண்டாள். மாமனுக்கும் மருமகளுக்கும் அந்த மலர் சரத்தில் தான் மயக்கம் போலும்.
அதைப் பார்த்து சிரித்துக்கொண்ட வித்யா, "இப்பவே உனக்கு பூ வேணுமா?" என்று பேத்தியைக் கொஞ்ச,
விபுநந்தன், "அப்டியே நம்ம சீதாக்கா மாதிரி! இல்லம்மா?" என்று கேட்டு தமக்கையின் நினைவில் கண்கள் கசிந்தான்.
அவனுக்கு தான் எங்கும் எதிலும் தன் தமக்கையைப் பொருத்தி பார்க்கும் பழக்கம் இருக்கின்றதே? எனவே வித்யாவும் தான்யாவும் அவன் பேச்சை எப்போதும் போல் இப்போதும் ரசித்துவிட்டு, சிறு புன்னகையில் கடந்தனர்.
ஆனால் ஆரவிக்கு ஒரு கணம் உடம்பே சிலிர்த்து அடங்கியது. 'அப்படியா? தான் அணைவாக வைத்து அணைத்துக் கொண்டிருப்பது சீதாவா? பூ மீண்டும் பூத்துவிட்டதா? இருக்குமோ? ஏன் இருக்கக் கூடாது? இருக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இருக்கும். இருக்குமென்ன இருக்கும்? நிச்சயம் இவள் என் மன்னி சீதாவே தான்!' என்று மனதோடு பேசிக்கொண்டிருந்தவளின் உள்ளக்கிடக்கை சத்தமாக வெளிப்பட்டுவிட்டது. "மன்னி! திரும்ப என்னைப் பார்க்க வந்துட்டேளா?"
இருக்குமோ அல்லவோ! அவள் நம்பிக்கையை நாம் ஏன் கலைக்க வேண்டும்? இருந்துவிட்டு தான் போகட்டுமே?
அவளின் வாய்மொழியைக் கேட்ட மற்ற மூவரும் திகைத்துப்போய் ஆரவியைப் பார்த்தனர். அடக்கவியலா பேரானந்தத்தில் கண்கள் அவள் சொல் பேச்சுக் கேளாமல், கண்ணீரை எட்டிப் பார்க்கச் செய்து எட்டப்பனாய் காட்டிக் கொடுத்தது.
நந்தன் தான் அவள் தோள்களை அழுத்திக் கேட்டான். "வாட் யூ மீன் ஆரவி?"
சட்டென சுதாரித்தவள், "ஹான்? ஐ மீன் இட் விபு, நீ அவாளப் பத்தி சொன்னியோன்னோ? அப்பவே என்னைப் பார்க்காம போயிட்டாளேன்னு நினைச்சேன். அப்டீனா இப்ப என்னைப் பார்க்க தானே திரும்ப வந்திருக்கா?" எனக் கேட்கவும் வித்யாலட்சுமி குலுங்கி அழுதார். தான்யாவும் அழ ஆரம்பிக்கவும் பச்சை உடம்புக்காரி எனக் கூறி சமாதானப்படுத்தினர்.
பூக்கும்🌻🌺
Comments
Post a Comment