கருவறை கீதம் வருடம் 2034 இடம்: பெங்களூரு. கடிகாரம் பிற்பகல் மூன்று மணி என்றுரைக்க, அதனை மறுத்த வானம் மாலை ஆறு மணி என ஏமாற்றியது. மேகங்கள் மேவிய வானிலையை விழிகளில் ரசனையேற்றிப் பார்த்திருந்தாள் சந்தனா. பிரபல துணிக்கடையையொட்டி, தமிழிலும் கன்னடத்திலும் ஸ்ருதி நாட்டிய நிருத்தயாலயா என்று எழுதியிருந்த கட்டிடத்தின் வெளிவாசலில் இருந்த மகிழம்பூ மரத்தினடியில் நின்றிருந்தாள். அவள் தனக்கு வலப்புறத்தில் சற்று தள்ளி காரை நிறுத்திவிட்டு இறங்காமல் ஓட்டுநர் இருக்கையிலேயே அமர்ந்திருந்தவனைக் கவனிக்கவில்லை. ஆனால் அவன் பார்த்தான். ஏறக்குறைய ஐந்து நிமிடங்களாக அவளையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான். தலைமுடியை இறுக்கமாகப் பின்னியிருந்தாள். அது ‘ஃப்ரென்ச் ப்ளாட்’ என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. காதில் பெரிய ஸ்டட்! கழுத்தில் ஒன்றுமில்லை. மகிழம்பூ மரத்தினடியில் தூய வெண்மையும் இளநீலமுமான உடையில், அடிக்கும் ஈரக்காற்றில் துப்பட்டா பறக்க நின்று, மேகங்களில் லயித்திருந்தவள் அவன் கண்களுக்கு ஓர் அழகிய மேகத்துணுக்காகவே தெரிந்தாள். அந்த அழகிய மேகத்தினுள் புதைந்துக்கொள்ளும் ஆசை வந்தது. ‘அழகா இர...