மழை

மழை



அன்று!


தாகம் தாகம் என்று தவித்துக்கிடந்த நிலத்தின் வயிற்றை பெருமளவில் நிரப்பியிருந்தது, அன்றைய மழை! பள்ளிமுடிந்ததும் வகுப்பிலிருந்து வெளிவந்த மாணவர்கள் மைதானத்தில் இடுப்புவரை தேங்கியிருந்த செம்பழுப்பு தண்ணீரைப் பார்த்து உற்சாகமானார்கள்.


புத்தகப்பையை தலைமேல் தூக்கிக்கொண்டு ஓடியும் குதித்தும் சென்றுகொண்டிருக்கையில், ஐந்தாம்வகுப்பு பையன் ஒருவன் தொப்பென்று தண்ணீருக்குள் விழுந்துவிட்டான். அவன் புத்தகமூட்டை ஒருபுறமும், சாப்பாட்டுக்கூடை ஒருபுறமும் ஜலக்கீரிடை செய்தது.


சற்றுமுயன்றால் மேலேறி வந்துவிடும் அளவிலான தண்ணீர்தான்! ஆனால் உயரம் குறைவாயிருந்த பையன் பயத்தில் மேலும் வழுக்கி விழுந்து, மூச்சுக்கு திணறினான். செத்துதான் போக போகிறோம், இனி உம்மாவின் தேங்காய் சாதத்தை ருசிக்க முடியாது, வாப்பாவின் தாடி அழுந்தும் முத்தம் கிடைக்க பெறாது என்றெல்லாம் நினைவுக்கிடங்கோடு அலைக்கழிந்து கொண்டிருந்தவனை, சட்டென்று ஒரு பிஞ்சுக்கரம் பிடித்து மேலிழுத்தது.


இழுத்தக் கையோடு நுழைவாயில் வரை அழைத்தும் சென்றது. அதன்பின்னரே சிறுவன் ஆசுவாசமடைந்து புன்னகைத்தான். "தாங்க்ஸ் அண்ணா. என் புத்தகப்பை?"


"என்கிட்ட தான் இருக்குது. ஆனா உன் சாப்பாட்டுக்கூடையை தான் என்னால பிடிக்க முடியல." என்று சொல்லி சிரித்தான்.


"பரவால்லண்ணா."


"நீ எந்த வகுப்பு படிக்கற?"


"அஞ்சு 'ஆ' பிரிவு."


"நானும் அஞ்சு தான்டா. என்னைப்போய் அண்ணா சொல்ற? சரி உன் பேரென்ன?"


"ஷம்சுதின் இப்ராஹிம்."


"ஷம்… சுத்… ஷாம்…"


"ஹஹ்ஹஹ… சொல்ல வரலன்னா விட்ருடா. ஷமினு கூப்பிடு. ஆமா, உன் பேரென்ன?"


"என் பேரு சாமிநாதன். நீ என்னை சாமினு கூப்பிடு!"


"ஹை..! ஷமி, சாமி! நல்லா இருக்குதுல? ஃப்ரெண்ட்ஸ்?" எனவும், இரு பிஞ்சுக்கரங்களும் அழுத்தமாய் பற்றிக்கொண்டன.


பற்றிக்கொண்ட கரங்களிரண்டும் பள்ளியிறுதி வரையிலும் பிரிவென்பதை அறியவேயில்லை. ஆனால் இருவரும் கல்லூரியில் சேர்ந்ததும் சில கூடாநட்புகளின் தூபத்தால் ஆரம்பித்தது, ஷமி வேறு, சாமி வேறு என்ற பாகுபாடு!


ஒரே ஊரில் இருந்ததால் பார்க்க நேரும் போதெல்லாம் சிறுசிறு உரசல்களும் மோதல்களுமாய்ப் பயணித்தனர். இருவருக்கும் திருமணமாகி அவர்கள் பிள்ளைகளும் பள்ளியில் சேர்ந்துவிட்டனர். ஆனால் இன்றளவிலும் இவர்கள் இருவருக்குமான பள்ளிக்கால நட்பைக் காலத்தால்கூட மீட்டெடுக்க முடியவில்லை.


இன்று!


ழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. காலையிலேயே செய்தியில் சொன்னார்கள்தான், இன்று புயல் வரக்கூடுமென்று! ஆனால் அதை அலட்சியப்படுத்தி சனிப் பிரதோஷத்தில் பரமனை தரசிப்பது நலமென்று, தன் பத்துவயது மகனையும் அழைத்துக்கொண்டு சிவன் கோவிலுக்கு வந்திருந்தார் சாமிநாதன். 


கோவில் பிரகாரத்திலெல்லாம் மழைத்தண்ணீர்! இடியும் காற்றும் பலமாய் அடித்து வானம் தலையில் விழுந்து விடுமோவென்ற அச்சத்தை ஏற்படுத்தியது. வந்திருந்த பக்தர்கள் அனைவரும் உள்பிரகாரத்தில் ஒடுங்கினர். ஆனால் அங்கும் தண்ணீர் மெல்ல மெல்ல உயர்ந்துவந்தது.


ஏற்கனவே போனவாரம் பெய்த மழையில் கோவில்குளமும் நிரம்பியிருந்தது. ஆக எப்போது வேண்டுமானாலும் உள்பிரகாரத்தையும் தண்ணீர் சுற்றி வளைக்கலாம். இப்போதைக்கு மழை நிற்கும்போல் தெரியவில்லை.


கோவில் நடைசாற்றப் போவதாக அறிவிக்கப்பட, வேறுவழியின்றி ஒவ்வொருவராய்க் கலைந்து சென்றனர். சாமிநாதன், தான் கொண்டு வந்திருந்த குடையைப் பார்த்தார். விரித்துவிட்டு நடந்தால் இருவருக்கும் அந்தக் குடை போதும்தான். ஆனால் அடிக்கும் காற்று கையிலிருக்கும் குடையைப் பிய்த்துப் போட்டுவிட்டுதான் மறுவேலை பார்க்கும்.


வீட்டிற்கு போக எப்படியும் இருபதுநிமிடங்கள் பிடிக்கும்.  சிந்தனையுடனே மகனைத் தூக்கியவர், குடையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு நடையை எட்டிப்போட்டார். வெளியில் அவசரத்திற்கு சிறுபடகு ஒன்றை வைத்துக்கொண்டு சில கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு உதவிக்கொண்டிருந்தனர்.


முகம்மலர்ந்து அவர்களின் அருகில் சென்ற சாமிநாதனையும் அவர் மகனையும் இன்னும் சிலரையும் விரைந்து ஏற்றிக்கொண்டு நகர்ந்த படகு, சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்த மசூதிக்குள் சென்றுநின்றது. 


"ஏய், நான் இதுக்கு பின்னாடி இருக்க என் ஆத்துக்கு போகணும்ப்பா!" பதட்டமடைந்தவரை, இறக்கி விட்டுவிட்டு,


"ஊரே ஆத்துக்குள்ள தான் தத்தளிச்சுக்கிட்டு இருக்குது ஐயரே! இங்க கொஞ்சநேரம் இருங்க. கோவில்ல இருக்கவங்களை வெளியேத்திட்டு அப்புறம் வர்றோம்." என்றபடி படகை திருப்பி நகர்ந்துவிட்டான் அவன்.


அருகே திரும்பிப் பார்க்க, ஒரு பத்து வயது சிறுவனைக் கையில் பிடித்தபடி இவரின் பள்ளித்தோழன், தற்போதைய எதிரி ஷமி நின்றிருந்தார்.


இருவரும் முகத்தைத் திருப்பிக் கொள்ளுமுன், இருவரின் பிள்ளைகளும் நட்புக்கரம் நீட்டியிருந்தனர். காலத்தால் மீட்டெடுக்க முடியாத நட்பை மழை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தது. 


சாமிநாதனின் மகன் ஷமியின் மகனிடம் கேட்டான். "விளையாடலாமா?"


"வா, அங்க பெரிய திண்ணை இருக்குது."


"உன் பேரென்ன?"


"நிவாஸ்ஹமீத் இப்ராஹிம். உன் பேரு?"


"ஸ்ரீனிவாஸ்!"


"ஹை..! நிவாஸ், ஸ்ரீனிவாஸ்! நல்லா இருக்குதுல?"


"ம்ம் ஆமாமா!" என்று உற்சாகமாய் குதித்துச் சிரித்த பிள்ளைகளைப் பார்த்த பெரியவர்கள் இருவரின் கண்களும், இருபது வருடங்களுக்கு பின், பள்ளிக்கால நட்பின் சாயலோடு சந்தித்துக்கொண்டன.


-ஸ்ரீவிஜய்.

Comments

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)