ஸ்கார்பியோ காதல் 🚗 💌

ஸ்கார்பியோ காதல்

 

கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉


கதை முன்னோட்டம் 

ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள்.

‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன்.

அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான்.

ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள்.

“அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இனி என்னை இங்கே கூப்பிடாதே!” 

வெட்கம் வழிய அவன் பார்வையைத் தவிர்த்தவள், “அடுத்த முறை சீக்கிரமே வந்து மலைக்கோவில் போகணும்ங்க.” என்றவாறு வாகனத்தில் ஏறினாள்.

ஸ்வேதாவிற்கு மகிழுந்து, பேருந்து பயணங்களிலெல்லாம் அலாதி பிரியமுண்டு. வாகனத்தின் தாலாட்டில் இளையராஜாவைத் துணைக்கு வைத்துக்கொண்டு பயணிப்பது சுகமாய் இருக்கும். கூடுதலாய் மழைச் சொட்டினால் சொர்க்கமென்பதின் அச்சாரத்தைப் பார்த்து வருவாள். இப்போதும் ‘கொட்டலாமா? வேண்டாமா?’ என மேகங்கள் மேடை ரகசியம் பேசிக்கொண்டு மாந்தர்களின் மனநிலையில் இதம் சேர்த்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் ஹரிஷ் ஏதோ மேற்கத்திய இசையை உள்ளே கசிய விட்டிருந்தான். அம்ருதா இவளிடம் பொதுவாக பேசியபடி வந்தாள். இவளுக்கு அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. அம்ருதா அதனைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். 

இருக்கையைச் சற்றே சரித்துக் கொடுத்து, “தூக்கம் வந்தா தூங்குங்க அண்ணி.” என்றாள். 

“இல்லை அம்ரு. கொஞ்சம் போரடிக்குது.”

ஹரிஷ், “தப்பாச்சே… நாங்க கூட இருக்கும் போது போரடிக்கக் கூடாதே?” என்று கேள்வியாய் இழுக்க,

“ஆமா ஆமா!” என உற்சாகமான அம்ரு, “அதோ அந்த ரெட் ஐ ட்வெண்டி!” என முன்னால் நான்கைந்து வாகனங்களுக்கும் முன்பாக தூரத்தில் செல்லும் ஒரு மகிழுந்தைக் கைக் காட்டினாள்.

“டன்!” என்ற ஹரிஷ் வாகனத்தின் வேகத்தைக் கூட்ட,

திகைத்துப் பார்த்த ஸ்வேதா, “என்னங்க மெதுவா!” என்று எச்சரித்தாள்.

“வெய்ட் பேபி!” என்றவன் அடுத்த இரு நிமிடங்களில் முன்னால் சென்ற வாகனங்களை எல்லாம் கடந்து, அம்ரு கைக்காட்டிய வாகனத்தையும் தாண்டி வந்திருந்தான்.

நெஞ்சில் கைவைத்து ஆசுவாசம் கொண்ட ஸ்வேதாவை லேசாகத் திரும்பி பார்த்தவன், “இப்போ நீ சொல்லு பேபி.” என்றிட,

“அய்யோ எனக்கு பயமா இருக்குது.” என்று அலறினாள்.

இளையராஜாவைத் தாலாட்ட சொல்லி விழி சொருகுபவளை எழுப்பிவிட்டு, ஜாக்கிசானின் சாகசங்களைப் பார்த்தால்தான் ஆயிற்று என்றால் என்ன செய்வது?

“பயப்படாதீங்க அண்ணி. இட்’ஸ் கோயிங் ட்டு பீ எக்ஸைட்டிங்! அந்த எர்டிகா போகலாமா?”

“ம்ஹூம், இந்த டஸ்டர்!” என்று முன்னால் ரிஷிக்கு வழிவிடாமல் ஊர்ந்துகொண்டிருந்த வாகனத்தைச் சுட்டிக்காட்ட, அண்ணனும் தங்கையும் ஒருசேர அவளைத் திரும்பிப் பார்த்தனர்.

“அச்சோ முன்னாடி பார்த்து ஓட்டுங்க’ங்க!” என்று அதற்கும் பதறினாள்.

“ஹஹ்ஹஹ… க்யூட் அண்ணி! ஃபர்ஸ்ட் டைம் இல்ல? அதான் உங்களுக்கு பயமா இருக்குது போல… அண்ணா எப்பவும் சேஃப் ஸ்பீட்ல தான் போவான். பயப்படாதீங்க!”

“அத்தனை வண்டியையும் சேஸ் பண்ணி போய்ட்டு பயப்படாதேன்னா எப்டி?”

“சரி, நீங்க வேணும்னா ஹரியைப் பின்னாடி வரச்சொல்லி உங்கப் பக்கத்துல வச்சிக்கோங்க. காரை நான் ஓட்டுறேன்.” என சந்தடி சாக்கில் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வழிப்பார்க்க,

“உதை வாங்குவ அம்ரு! ரொம்ப டிராஃபிக்கா தெரியுது. சும்மா இரு!” என்று கண்டித்தான் ஹரிஷ்.

“அண்ணா! நேத்து நீ என்னடா சொன்ன?”

“சொன்னேன்தான். இப்போ ஸ்வேதா பயப்படறா இல்ல? உனக்கு ஊர்ல போய் இன்னொரு நாள் பைபாஸ்ல போகும்போது தர்றேன்.”

“இதெல்லாம் போங்கு!” என்று அம்ருதா முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள,

தங்கையை சமாதானம் செய்யும் பொருட்டு கேட்டான். “சரி, இப்போ நீ சொல்லு. அந்த ஃபார்ச்சுனர் ஓகேவா?”

“நோ! அந்த க்ரீன் கார்! அதென்ன வண்டின்னு தெரிலயே…” என்ற அம்ருதாவின் பார்வை, தூரத்தில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த பச்சை நிற வாகனத்தில் பதிந்திருந்தது.

“இங்கிருந்து பார்க்க என்ன வண்டின்னு கூட கண்ணுக்கே தெரியல! அதைப் போய் டார்கெட் வைக்கறியே அம்ரு…” ஸ்வேதா பயத்தில் இன்னுமாய் விழிகளை விரிக்க, 

“பக்கத்துல போய் பார்த்துடுவோமா?” என்ற ஹரிஷ், அந்த வாகனத்தைப் பார்க்கும் தூரத்தில் நெருங்கிட, அது இன்னுமாய் விலகிச் சென்றது.

அம்ருவின் பிளந்த உதடுகள் சொற்களின்றி ஸ்தம்பித்திருக்க, அது எந்த நிறுவனத்தின், என்ன வகையான வாகனம் என்று பார்த்த ஹரிஷ் இமை சிமிட்டினான்.

அது…

பச்சை நிற மஹிந்திரா ஸ்கார்பியோ-என்!

              🚗💌🚗💌🚗💌


கதையைத் தொடர்ந்து வாசிக்க கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக்குங்கள்💝🎉










ஸ்கார்பியோ காதல்🚗💌 - 7.1









Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)