ஸ்கார்பியோ காதல் - 3

 

ஸ்கார்பியோ காதல்
Amrutha's Scorpio obsession 

அத்தியாயம் 3


ஹரிஷின் மகிழ்வுந்து கிருஷ்ணகிரி வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதாலேயே இந்த பாதையில் வண்டியை செலுத்தியிருந்தான் ஹரிஷ்.


அந்த அண்ணன், தங்கை செய்யும் சிறுபிள்ளைத்தனத்தில் முதலில் பயந்த ஸ்வேதா, பின்னர் தானும் அவர்களின் பரபரப்பில் பங்கெடுத்துக் கொண்டாள். பாதுகாப்பான வேகத்தில் சில வாகனங்களைப் பின்னுக்கு தள்ளி, முன்னேறிச் செல்வதில் உற்சாகம் உண்டாகத் தான் செய்தது.


தற்போது அம்ருதா கைக்காட்டிய ஸ்கார்பியோவை ஹரிஷ் குறி வைத்திருந்தான். அண்ணன் இலகுவாக கடந்துவிடுவான் என்ற எண்ணத்தில் கன்னக்குழி சிரிப்புடன் ஸ்கார்பியோவின் பின்புறத்தைப் பார்த்திருந்த அம்ருதாவின் முறுவல் மெல்ல மெல்லத் தேய்ந்தது.


காரணம், ஸ்கார்பியோவின் வேகம் அசாத்தியமாக இருந்தது. ஸ்வேதாவும் கூட நகத்தைக் கடித்து துப்பியவாறு இருந்தாள். “கவனம்ங்க…” என்று அவ்வப்போது ஹரிஷை எச்சரிக்கவும் மறக்கவில்லை.


ஹரிஷ் எவ்வளவு முயன்றும் அந்த ஸ்கார்பியோவைக் கடக்கவே முடியவில்லை. இடையே ஒரு சுங்கச்சாவடி வர, ஸ்கார்பியோவின் வேகம் தேங்கியது.


“எஸ், வீ கேன் கேட்ச் இட்!” என இரு உள்ளங்கைகளையும் ஒன்றாகக் குவித்து வைத்து சொன்ன அம்ருவின் பார்வையில் ஸ்கார்பியோவின் பின்புற பிம்பத்தைத் தவிர வேறு அசைவே இல்லை.


ஹரிஷும் கூட தன் குறியை அடைந்துவிடலாம் என்று நம்பிக்கை கொண்டு, ஊர்ந்து சென்று ‘fastag’ எனும் நவீன வரி செலுத்தும் வசதியில் சாலை வரியைச் செலுத்திவிட்டு, தானியங்கி தடுப்பணை திறந்ததும் நகர்ந்தான். ஊடே வந்த சில வாகனங்களைக் கடந்து, வழி ஏற்படுத்திக் கொண்டு பார்க்க, முன்னே லாவகமாக ஒடித்து வளைந்து சென்று கொண்டிருந்தது ஸ்கார்பியோ!


மீண்டும் இரு வாகனங்களுக்கும் இடையேயான தூரம் அதிகரிக்க, ஸ்வேதா நெஞ்சில் கை வைத்தாள். “என்ன இவ்ளோ ஸ்பீடா போறான்?!”


“ம்ம்! ஆனா யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம எவ்ளோ சாமர்த்தியமா ஓட்டறான் பார்!”


இன்னும் தூரம் நீண்டு விட அம்ருதா பதற்றம் கொண்டாள். “அண்ணா!”


“போறான் விடுடா! நம்ம வண்டியை விட அது ஸ்பீட் அதிகம்ன்னு நினைக்கறேன்.” என்றிட,


“அப்டிலாம் விட முடியாது. நீ சீக்கிரம் போ!” என்று சிணுங்கினாள்.


ஹரிஷின் கூற்றில், ஸ்வேதா கூகுளில் மஹிந்திரா ஸ்கார்பியோவின் சிறப்பம்சங்களை ஆராய்ந்தாள். ஹரிஷ் வைத்திருப்பது கியா சோனெட். இரண்டு வாகனங்களின் ஒப்பீடுகளையும் ஆராய்ந்தாள். சோனெட் அதீத வேகம் 180kmph; ஸ்கார்பியோவின் அதீத வேகம் 165 - 168kmph! சோனெட்டை விட ஸ்கார்பியோவின் வேகம் குறைவுதான்!


ஆனால் அதைச் சொல்லாமல், “ஆமா, ஸ்கார்பியோ ஸ்பீட் அதிகம்தான்!” என்றாள். 


இருப்பினும் ஸ்கார்பியோவிடம் இருந்து இவளைத் திரும்பியும் பாராத அம்ருவின் பிடிவாதம் தளரவில்லை. தான் கேட்ட உடை கிடைக்காத சிறுமியைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு, “அண்ணா…” என்று அரற்றியவளை ஆச்சரியமாகவும் சிறு எரிச்சலோடும் பார்த்தாள் ஸ்வேதா. 


இத்தனை நேரம் ஸ்வேதாவைப் பொறுப்பாக கவனித்துக்கொள்ளும் பெரிய மனிதியாகத் தெரிந்த அம்ருதா, நொடியில் ஆகாததிற்கு அடம்பிடிக்கும் பிள்ளையாய் தெரிந்ததில் எரிச்சல் மண்டியது.


“விடு அம்மு! வேற கார் சொல்லு.” என்றபோது, ஸ்கார்பியோ இவர்களின் கண்ணை விட்டு மறைந்தே போயிருந்தது.


அதில் அம்ருதாவின் முகம் மேலும் சுணங்கியது. “ச்சு போடா!” எனப் பின்னிருந்து அஸ்வத் தோளில் சுள்ளென்று ஓர் அடியை வைக்க, ஸ்வேதாவின் பொறுமை போய்விடும் போலிருந்தது.


ஏனோ அம்ருவின் மனமெல்லாம் விளக்கமுடியா ஓர் உணர்வில் தவித்திட, ஹரிஷ் அவளுடன் பேசினால், ஓரிரு வார்த்தைகளில் மட்டும் பதிலளித்தாள். 


மீண்டும் அந்த அண்ணன் - தங்கை நாடகம் ஸ்வேதாவிற்கு எரிச்சலைக் கிளப்பியதில், “என்னங்க, எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும்.” என்றாள் இறுகிய குரலில்.


முன் கண்ணாடி வழியே அவள் முகத்தைப் பார்த்த ஹரிஷிற்கு அவளின் மனநிலை புரிந்ததோ என்னவோ! அடுத்த சில நிமிடங்களில் வந்த உணவு விடுதி ஒன்றில் காரை நிறுத்தினான்.


இறங்கிய ஸ்வேதா சம்பிரதாயத்திற்கு கேட்டாள். “நீ வர்றியா அம்ரு?”


“இல்ல அண்ணி.” என்றவளின் பார்வை அந்த நீண்ட தார் சாலையில் தூரமாய்ப் பதிந்திருக்க,


“நீ போய்ட்டு வா பேபி! நாங்க உள்ளே வெய்ட் பண்றோம்.” என்று அவளை வெளியே பக்கவாட்டில் தெரிந்த ஓய்வறைக்கு அனுப்பிவிட்டு, தங்கையின் கையைப் பற்றினான். “வா அம்ரு!”


“அவன் இந்த வழியா தானே போயிருப்பான்?” ஸ்கார்பியோ சென்ற திசையைப் பார்த்து ஏமாற்றம் பொங்க நிற்கும் தங்கையின் தலையைத் தன்னோடு அழுத்திக்கொண்டான் ஹரிஷ்.


“டேய் டேய்… விடுடா! நாம எப்பவும் ஆடற கேம்தானே? இப்போ ஏன் நீ புதுசா அப்செட் ஆகற? உள்ளே வா!” என்று இழுக்க,


“என்னவோ தெரியல ஹரி. அந்த ஸ்கார்பியோ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.” எனக் கசங்கிய முகத்துடன் சோர்வாகச் சொன்னவளைச் சமன்செய்து உள்ளே அழைத்துச் சென்றான்.


மழையின் அச்சாரத்துடன் வெயில் இறங்கியிருந்த அந்த நேரத்தில், ஸ்வேதாவிற்கு குளம்பி தேவாமிர்தமாய் தொண்டையில் இறங்கியது. முகம் கழுவி, தலைமுடியை ஒதுக்கி சற்று திருத்தியிருந்தாள். தன் முன் பளிச்சென அமர்ந்திருக்கும் தன் வருங்காலத்தை ஆசையுடன் தழுவின ஹரிஷின் விழிகள். இவன் பார்வையில் அவள் நாணம் பூசிக்கொண்டு மேலும் வசீகரித்தாள்.


இவர்களுக்கு நேர்மாறாய் தலை கலைந்து வாடிய முகத்துடனும் சுணங்கிய மனத்துடனும், சுவையே அறியாது குளம்பியை உறிஞ்சிக் கொண்டிருந்தாள் அம்ருதா.


“வேறெதுவும் சாப்பிடறியா பேபி?” என ஹரிஷ் கேட்பதும், அதற்கு ஸ்வேதா ஏதோ பதில் சொல்வதும், அம்ருவின் காதில் விழந்தாலும் மூளையில் பதிவாகவில்லை.


பணத்தைச் செலுத்திவிட்டு வெளியே வருகையில் ஹரிஷ், தங்கையின் மனநிலையை மாற்ற எண்ணி அவளிடம் வம்பு செய்வதிலும், அதற்கு அவள் எதிர்வினை செய்யாது அலட்சியமாய்ப் பதுமை போல் வருவதிலும் ஸ்வேதாவின் நல்ல மனநிலை மாறி மீண்டும் எரிச்சல் மண்டியது.


“விடுங்கங்க! அவ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்.” என்று மறைமுகமாக ஹரிஷை அம்ருதாவிடம் பேசவிடாமல் தடுத்தாள்.


அதன்பின் அம்ரு பின்னிருக்கையில் தலைசாய்த்து கண்மூடி விட, அப்போதுதான் ஸ்வேதா நிம்மதியாக உணர்ந்தாள். ஆனால் அந்த நிம்மதியை நீட்டிக்க விடாமல் மகிழுந்தின் வேகம் குறைந்தது.


சாலையில் ஏதோ கலவரம் போல் வழிநெடுக வாகனங்கள் நகராது நின்றிருந்தன. காரணம் அறிந்துவிட வேண்டி ஆங்காங்கே சிலரின் தலைகள் நீண்டு எட்டிப் பார்க்க, ஹரிஷூம் இருக்கையிலிருந்து சற்று உயர்ந்து வெளியே தலை நீட்டிப் பார்த்தான்.


அங்கே இரு கட்சிகளின் ஆட்கள் தத்தம் கொடிகளுடன் கூச்சலும் கோஷமும் வாக்குவாதமுமாக சாலையை மறித்து நின்றிருந்தார்கள். காவல்துறை வாகனம் ஒருபுறம் நிற்க, காவலர்கள் கூட்டத்தைப் பிரித்து நிலைமையைச் சீர்செய்ய முயன்று கொண்டிருந்தனர். இதற்கிடையே வாகனங்களிலிருந்து ஒலியெழுப்பி மக்கள் தங்கள் எரிச்சலையும் சலிப்பையும் காட்டினார்கள். அதையும் விட கட்சி ஆட்களின் சண்டை பெரிதாக இருந்தது.


“ஏதோ பொலிடிக்கல் கான்ஃப்லிக்ட்! ரோட் ப்ளாக்ட்! எப்போ க்ளியர் பண்ணுவானுங்களோ தெரியல!” என்று சலித்த ஹரிஷ் பின்னே திரும்பி மாற்றுவழி உண்டா என்று பார்த்தான்.


சில வாகனங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்க, நகரும் வரிசையில் ஹரிஷூம் பின்னே நகர வேண்டிய நிலை! அங்கே சில காவலர்கள் மாற்றுப்பாதையில் கைக்காட்டிக் கொண்டிருந்தார்கள். வேறுவழியின்றி அந்தப் பாதைக்குள் நுழைந்தவன் கூகுள் வரைபட உதவியுடன் அது எந்த ஊர் செல்லும் பாதை என்று பார்த்து, அங்கிருந்து சென்னை செல்லும் வழித்தடத்தைத் தேடியெடுத்தபடி திசைமாற்றியை (stearing) வளைத்தான்.


கடந்து செல்லும் விவசாய நிலங்கள், சின்னச்சின்ன மலைகளைப் பார்த்தபடி கேட்டாள் ஸ்வேதா. “இது எந்த ஊருங்க?”


“பர்கூர் ஃபாரஸ்ட் போற ரோடாம். இங்கிருந்து ஹைவே பிடிச்சு, வேலூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர்ன்னு போக வேண்டியதுதான். டின்னர் வேலூர் போய் பார்த்துக்கலாம் பேபி.”


“லேட் ஆகுமா என்ன? இப்போவே அம்மாகிட்ட சொல்லிடறேன்.” என்றவள் அம்மாவுடனான சில நிமிட பேச்சிற்கு பிறகு நிமிர்ந்தாள்.


அம்ருதா தூங்குகிறாளோ அல்லது ஏமாற்றம் தந்த சோர்வில் வெறுமனே கண்ணை மூடிக்கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை. இத்தனை களேபரத்திலும் நிமிர்ந்தே பார்க்கவில்லை அவள்.


ஸ்வேதா ஹரிஷிடம் கேட்டு அவனிடம் இளையராஜா பாடல்கள் இல்லையென்று தெரிந்ததில் முகம் தொங்கிப் போனது. இந்தியாவில் இளையராஜாவை சுகிக்காமல் ஒருவன் இருப்பானா?


“ஹேய் நீயும் மூஞ்சியைத் தூக்காதேடீ! எஃப்எம்’ல வரும், கேளு!” என்றிட, அவனின் உரிமைப் பேச்சில் அவள் புன்னகை மீண்டது.


அந்த பண்பலை ஸ்வேதாவிற்காகவே இளையராஜாவின் இதயராகத்தை இழுத்து வந்திருக்க வேண்டும்.


‘கூந்தல் பாய் போடு தோளில் கை போடு

கண்ணில் மை போட்ட மானே!

கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு

என்னை தந்தேனே நானே…

மேகங்களே…

என் நெஞ்சின் தாகம் எப்போது தீரும்

கல்யாண ராகம் எப்போது கேட்கும் கூகூ…’


பாடல் வரிகளைச் செவிமடுத்துக் கொண்டிருந்த ஹரிஷ், “ஆஃப்டர் டூ வீக்ஸ்!” என்றான். 


ஸ்வேதா நாணப் புன்னகையுடன் ஜன்னலின்புறம் திரும்பிக்கொண்டாள். அவளின் நாணம் தன்னை ஆகர்ஷிப்பதை உள்வாங்கியவனுக்கு அவளை இன்னும் சிவக்கடிக்க ஆசை எழுந்தது.


“இளையராஜா மியூசிக்னா ரொம்ப பிடிக்குமோ? ஐ திங்க் முன்னாடி ஒருமுறை சொல்லிருக்க இல்ல?”


“ஆமா, ரொம்ப ரொம்ப! அழும்போது, சிரிக்கும்போது, தூங்கும்போது, ஈவன் குளிக்கும்போது கூட நான் இளையராஜா சாங்ஸ் கேட்டுட்டே தான் இருப்பேன். டிராவலிங்ல… அதுவும் இதுமாதிரி ரெய்னி ஈவ்னிங்ல கேட்க இன்னும் சூப்பரா இருக்கும் தெரியுமா?” என்றவளின் விழிகளில் மழைமயக்கம்!


சற்றே இடப்புறம் தலைசாய்த்து, புருவங்கள் உயர்த்தி கண்ணாடியில் அவள் முகம் பார்த்தவன், “குளிக்கும்போதா?” என்று ஒரு மார்க்கமாகக் கேட்டு வைக்க,


சட்டென உண்டான சிலிர்ப்புடன், “ப்ச் ஹரிஷ்!” என்று முறைத்து ஓரக்கண்ணால் அம்ருதாவைப் பார்த்தாள்.


அவளின் வெட்கத்தை ரசித்தவாறே சாலையில் பார்வையைப் பதித்தவன் திடுமென பரபரப்புற்றான். “ஹே அம்ரூஊ!!”


அவனின் கூச்சலில் பதறிய ஸ்வேதா, “என்னாச்சுங்க?” என்றபடி அம்ருதாவின் தோளில் தட்ட,


சோம்பலாய் கண் திறந்தாள் அவள்.


“அம்முகுட்டி! இங்கே பாரு!” என்று இரைந்த ஹரிஷின் கரங்களில் வாகனத்தின் வேகம் கூடியிருந்தது. நெரிசல் சற்று தழைந்திருந்ததால் சாலையில் வேகத்துடன் வாகனத்தைச் செலுத்துவது இலகுவாக இருந்தது. 


மழைத்தூவல்களிடம் வெளிச்சம் விடைபெற்று கொண்டிருந்த அந்த வேளையில், எதிரே பார்த்த அம்ருவின் கண்களில் அப்பியிருந்த சோகம் ஓடிப்போய் ஆவலும் எதிர்பார்ப்பும் விஞ்சி நின்றது. கண்முன்னே இவள் தேடிய அதே பச்சை நிற மஹிந்திரா ஸ்கார்பியோ!


“மேபீ கிருஷ்ணகிரி ரோட்லயே சாப்பிடறதுக்கு நிறுத்திருப்பானாயிருக்கும்.” என்று அனுமானமாய்ச் சொன்னான் ஹரிஷ்.


“தெரியுமா? இந்த கார் தானா?” - ஸ்வேதா.


“ஸேம் பேபி. நான் அப்போவே நம்பர் நோட் பண்ணேன். தாம்பரம் நம்பர்.”


அம்ருவின் இமைகளில் அசைவேயில்லை. “இந்த ஸ்கார்பியோகாரன் மூஞ்சியை நான் பார்க்கணும் ஹரி! ஹீ இஸ் தி மாஸ்டர் ஆஃப் தி ரோட்!”


அவளை விசித்திரமாகப் பார்த்த ஸ்வேதா, “ஓவரா எக்ஸைட் ஆகற? கிழவனா இருக்க போறான்.” என்று உதட்டை வளைக்க,


அம்ருதா அலட்டிக்கொள்ளாமல் சொன்னாள். “வாட்எவர்! டாங் வூக் கூட இன்னும் என் க்ரஷ் லிஸ்ட்ல தான் இருக்கான்.”


“டாங் வூக்? யாரது?”


“தெரியாதா? பிழைச்சேன்.” - ஹரிஷ்.


“யாருங்க அது?”


“அது அவளோட தனி உலகம். நமக்கு வேணாம் பேபி. ஆய்!”


“டேய் அண்ணா! மறுபடியும் ஸ்பீட் எடுக்கறான் பாரு. பிடி!”


ஸ்வேதா, “சும்மா இரேன் அம்ரு… அவன் எல்லா வண்டியையும் வளைச்சு வளைச்சு ஓவர்டேக் பண்ணிட்டு போறான். நீங்களும் அப்டி போகப் போறீங்களா? இது ஹைவே கூட இல்ல; காட்டுப்பாதை மாதிரி இருக்குது. ரிஸ்க்’ங்க!” என்றாள் இருபுறமும் அடர்ந்துகொண்டே வந்த மரங்களைப் பார்த்தபடி! 


“ஜஸ்ட் அ ட்ரை பேபி!” என்ற ஹரிஷால் இப்போதும் தங்கையின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை.


முன்னும் பின்னுமாக வாகனங்கள் அணிவகுத்து வர, “அது ரொம்ப தூரம் போயிடுச்சே?” என்றாள் ஸ்வேதா.


“ஊப்ஸ்!” தளர்ந்து அமர்ந்தான் ஹரிஷ்.


தூரத்தில் புள்ளியாய் மறைந்த ஸ்கார்பியோவை அம்ருதா நிராசையுடன் பார்த்திருக்க, மீண்டும் நிம்மதியாக உணர்ந்தாள் ஸ்வேதா.


“ஸாரிடா அம்ரு.”


“சரி விடுண்ணா!” என்ற அம்ருதா மீண்டும் இருக்கையில் சாய்ந்து கண்மூடி கொண்டாள்.


மகிழ்வுந்தின் வேகத்தைக் குறைத்த ஹரிஷிடம் ஸ்வேதா மகிழ்வுடன் பேச ஆரம்பித்தாள். தன் அலைபேசியைக் காரின் ‘ப்ளூடூத்’ உடன் இணைத்து இளையராஜாவை வரவேற்று, ஒவ்வொரு பாடலையும் அதன் இசையையும் சிலாகித்து, அவைகள் எவ்வகையில் தனக்கு பிடித்தமானவைகள் என்று ஹரிஷிடம் பகிர்ந்து, அவனிலும் அவன் காதல் பார்வைகளிலும் பேச்சிலும் சிவந்து, சிலிர்த்தபடி வந்தவள் இரண்டு பாடல்கள் முடிந்திருந்த போது வயிற்றில் ஏதோ அசௌகரியத்தை உணர்ந்தாள்.


அவளின் முகமாற்றத்தைக் கண்டவன் துணுக்குற்றான். “என்ன பண்ணுது பேபி?”


“வாமிட் வர்ற மாதிரி இருக்குதுங்க.”


அடர்ந்த காட்டுச் செடிகளும் மரங்களும் நிறைந்து இருள் அப்பிக் கிடந்த அந்த பகுதியில் மெதுவாக வாகனத்தை ஓரங்கட்டியவன், சட்டென்று இறங்கி வந்து அவள்புறம் கதவைத் திறந்துவிட்டான். இறங்கிய வேகத்தில் ஸ்வேதாவிற்கு சற்றுமுன் அருந்திய குளம்பி மொத்தமும் வெளியேறியது.


இதற்குள் வெளிகாற்று முகத்தில் மோதியதில் அசந்து உறங்கிக்கொண்டிருந்த அம்ரு விழித்து அவளும் இறங்கி வந்தாள். தூறல் நின்றிருந்தாலும் மழை வாசனையடித்த மலைக்காற்று அவர்களை அணைத்து குளிர்ப்போர்வை போர்த்திவிட்டது.


“காஃபி ஒத்துக்கலயா அண்ணி?”


சோர்வுடன் தலையசைத்தாள் அவள்.


“ஆன்டிமெட்டிக்ஸ் எதுவும் வச்சிருக்கியா அம்ரு?”


ஆம் என்றவள், “*** வச்சிருக்கேன் ண்ணா. இருக்கற பிஸ்கெட்ஸ் சாப்பிட்டுட்டு போடட்டும்.” என்றவாறு கைவசம் வைத்திருந்த மாத்திரையையும் ரொட்டிகளையும் எடுத்து கொடுத்தாள்.


அயர்ச்சியில் பின்னிருக்கையில் தலைசாய்த்த ஸ்வேதா சாப்பிட மறுக்க, அவளின் அருகே அமர்ந்து ஆசுவாசப்படுத்தி பேசியபடி உண்ண வைத்தான் ஹரிஷ். 


உண்டு முடித்து மாத்திரையை விழுங்கிய பின் ஸ்வேதா சற்று தெம்பாக உணர்ந்திட, “ஹரிஷ்!” என்று கொஞ்சலாய் அவன் கை வளைத்து அவன் தோளிலேயே சாய்ந்து சுகமாய்க் கண்மூடிக் கொண்டாள்.


அவள் நெற்றியில் முத்தம் வைத்து சற்றுநேரம் தோளணைத்து அமர்ந்திருந்த ஹரிஷ், “பெட்டரா பேபி? கிளம்புவோமா?” எனக் கேட்க,


அவனிடமிருந்து விடுபட மனமே இல்லாமல் அவன் சட்டையில் கன்னம் உரச மேலும் கீழுமாய்த் தலையசைத்து மெதுவே விலக முற்பட்டாள்.


அவனுக்கும் அவளின் உள்ளம் புரிந்தது. “எனக்கும் அப்டியே இருக்க ஆசைதான். ஆனா அம்ரு…” என்றவாறு தலையைத் திருப்பி வெளியே பார்வையைப் போட்டவனின் வார்த்தைகள் திகைத்து நின்றன. சட்டென ஸ்வேதாவை உதறிவிட்டு இறங்கினான்.


அவ்விடமே அதிரும்வண்ணம் உரத்த குரலில், “அம்ரூஊ! அம்ருதா!!” என்றழைத்து சுற்றும் முற்றும் தேட, அம்ருதா நின்றதற்கான தடம் கூட அங்கில்லை. 

Brake for the break 🚗🚗


Previous article 🌸🌸


              Next article🌷🌷

Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)