ஸ்கார்பியோ காதல் - 2
முதல் அத்தியாயத்தின் இரண்டாம் பாகம் நிறைய பேர் கவனிக்கலன்னு நினைக்கறேன். படிக்காதவங்க படிச்சிட்டு அடுத்ததைத் தொடருங்கள்💖💖
அத்தியாயம் 2
சாலையில் போக்குவரத்து நெரிசலில் தவழ்ந்து வந்த ஹரிஷின் மகிழுந்து, நெடுஞ்சாலையைப் பிடிக்கும் வரை பொறுமையாக இருந்த அம்ருதா, பின்னர் அவனை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். “டேய் டேய்… ஜஸ்ட் வன் ஆர் போதும்டா. எங்கேயும் போஸ்ட், ஸ்டேட்டஸ் வைக்கமாட்டேன். யார்க்கிட்டேயும் மூச்சு விடமாட்டேன். ப்ளீஸ்ண்ணா…”
“ரிட்டர்ன் வரும்போது பகல்ல பார்க்கலாம்டா. நைட் டைம் வேணாம்.”
“நைட், பகல்ன்னு பார்க்கறதுக்கு என் டிரைவிங் ஒண்ணும் அவ்ளோ வொர்ஸ்ட் இல்ல.”
“உன்கிட்ட காரைக் கொடுத்துட்டு அப்பாகிட்ட யாரு திட்டு வாங்கறதாம்?”
“நான்தான் இந்த வாட்டி எங்கேயும் போஸ்ட் போடலன்னு சொல்றேன்ல? போன வாட்டி வாட்ஸ்ஆப்’ல, இன்ஸ்டா’ல வீடியோ போட்டதால தான் அப்பாவுக்கு தெரிஞ்சது. இந்த வாட்டி என் ஃப்ரெண்ட்ஸ் யார்க்கிட்டேயும் கூட நான் தம்பட்டம் அடிக்கல. போதுமா? ரொம்ப பண்ணாம கொடுடா ஹரி!”
“அம்முக்குட்டி! பின்னாடி அம்மா தந்த சப்பாத்தியும் தக்காளி தொக்கும் இருக்குது. சாப்பிட்டுட்டு தூங்குவியாம்.”
“அண்ணா டேய்!” எனக் கடுப்பாகிவிட்டாள்.
“என்னடா?”
“இனியும் நீ என்னை ஓவரா பேம்பர் பண்ணாதே! ஒரு டாக்டர் நானு! ஆனா இன்னும் எங்க வீட்டுல எனக்கு கார் ஓட்ட தடா’ன்னு வெளில சொல்லவே அவமானமா இருக்குது தெரியுமா?”
“நீ ஏன் இதெல்லாம் வெளில சொல்லிட்டு இருக்க?”
“ஏன் சொல்லமாட்ட? எங்கே போனாலும் அண்ணா கூடவே போ! அவன் கூடவே வா’ன்னு என்னைத் தனியாவே விடறதில்லை. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எவ்ளோ இன்டிபென்டட்’ஆ லைஃப என்ஜாய் பண்ணி வாழறாங்க தெரியுமா? நீயும் தான் உன் ஃப்ரெண்ட்ஸோட எவ்ளோ ஊர் சுத்தற? எனக்கு மட்டும் ஏன் இந்த ஜெயில் வாழ்க்கை?”
“உனக்கு எங்கே போகணுமோ சொல்லு அண்ணா கூட்டிட்டு போறேன். உன் ஃப்ரெண்ட்ஸையும் கூப்பிடு. வேணும்னா டூர் அரேன்ஜ் பண்ணி என்ஜாய் பண்ணிட்டு வருவோமா?”
“அங்கேயும் ஒட்டுண்ணி மாதிரி நீ எதுக்குடா? என் கையில காரைக் கொடுத்து அப்பாகிட்ட பர்மிஷன் மட்டும் வாங்கிக் கொடு போதும். ஐ’ல் டேக் கேர் ஆஃப் தி ரெஸ்ட்!”
சாலையின் வாகன நெரிசலுக்கு மேலாக ஹரிஷின் பாசம் பெருக்கெடுத்தோடியது. “ஸாரிடா அம்மு. உன்னைப் பேம்பர் பண்ணியே பழகிட்டேன். நீ பொறந்தப்போ அம்மாகிட்ட தர்றதுக்கு முன்னாடி என்கிட்ட தான் தந்தாங்க. அப்பா கூட, ‘என்னை விட அவன் நல்லா பத்திரமா பிடிச்சிருக்கான். அவன்தான் அவளைப் பாதுகாப்பா…’”
“எப்பா டேய்! தெரியாம கேட்டுட்டேன். உன் பாசத்துல ஃபயர் வைக்க!”
“ஹஹ்ஹாஹா… சாப்பிட்டு தூங்கு செல்லம்!”
தூங்கினாள். மறுநாள் பொழுது புலராத வேளையில், ஹரிஷ் அவளை எழுப்ப, கண்கள் சுருக்கி இமை மலர்த்தியவளின் நாசியில் மாசில்லா காலை நேர காற்றின் குளிர் வாசனை! இருவரும் ஓர் உயர்தர விடுதியில் அறையெடுத்து தங்களை சுத்தம் செய்து கொண்டு, காலை உணவை வரவழைத்து உண்டனர்.
இரவெல்லாம் கார் ஓட்டி வந்ததில் ஹரிஷின் விழிகள் சிவந்திருந்தன. மீண்டும் மதியத்தில் ஊர் திரும்ப வேண்டுமென்பதால், ஸ்வேதாவை அழைத்து தாங்கள் இருக்கும் விடுதிக்கு வரச்சொல்லி விட்டு, மெத்தையில் கண்ணயர்ந்து விட்டான்.
ஸ்வேதாவும் வந்த பின்னர் அம்ருதா அவளுடன் அருகே இருக்கும் கடைவீதி சென்றாள்.
“தாங்க்ஸ் அம்ரு! எங்கம்மா கூட முதல்ல உங்கண்ணாவோட வர்றேன்னு சொன்னதுக்கு ரொம்பவே யோசிச்சாங்க. நீயும் வர்றன்னு சொன்னப்புறம் தான் நிம்மதியா ஓகே சொன்னாங்க.”
“இதெல்லாம் என் கடமை அண்ணி. உங்க டிஸையர்ஸ் நிறைவேறினா தானே நாளப்பின்ன நீங்க எங்கண்ணனைக் கண் கலங்காம வச்சு காப்பாத்துவீங்க?” என்றாள் பெருந்தன்மை போல்!
“ஹாஹா… கடமையா? அது சரி. உன் மோதிரம் அழகா இருக்குது அம்ரு. எங்கே வாங்கின? தனிஷ்க்’லயா?”
“அஹ்ஹ்… அண்டா வாய் ஹரீஈஈ…” என்றிவள் அண்ணனை நினைத்துப் பல்லைக் கடிக்க,
“ஏய் ஏய்… என் புருஷனை என்ன சொல்ற நீ?” எனப் போலியாய் மிரட்டினாள் ஸ்வேதா.
“ஆங்… உங்க புருஷன் ஒரு தெய்வ பிறவின்னு சொன்னேன்.”
ஸ்வேதா கலகலத்து சிரித்தாள். சக தோழியைப் போல் பழகும் அம்ருதாவை அவளுக்கு நிரம்பப் பிடித்தது. ஆனால் அது சிறிதுநேரத்தில் அந்த பிடித்தத்தின் அளவைக் குறைத்துக்கொண்டது.
இருவரும் மீண்டும் விடுதியறைக்கு வந்தபோது ஹரிஷ் தூங்கி எழுந்திருந்தான். மூவருமாய் மதிய உணவை அறைக்கே வரவழைத்து உண்டனர்.
புறப்படுவதற்கு இன்னும் நேரமிருந்ததால் அண்ணன், அண்ணிக்கு தனிமை கொடுக்க எண்ணி, “இங்கே பக்கத்துல ஹிக்கின் பாதம்ஸ் பார்த்தேன். ஒரு விஸிட் போயிட்டு வர்றேன்’ண்ணா.” என்ற அம்ருவை,
கேலியாக பார்த்தான் ஹரிஷ். “எப்போ இருந்துடா என்கிட்ட உனக்கு இந்த மெச்சூரிட்டி?”
“ப்ச் அண்ணா!” என்ற அம்ருவின் விழிகள் ஸ்வேதாவைக் குறிப்பாய்ப் பார்க்க,
“ஒழுங்கு மரியாதையா எங்க கூடவே இரு! இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பணும். நீ பாட்டுக்கு எங்கேயாவது சுத்திட்டிருந்தா என்னால தேடிட்டு இருக்க முடியாது.” என்று கண்டித்தான்.
தன் வருங்கால கணவனுடன் மிக மிக குறைந்த அளவில் கிடைக்கவிருந்த அந்த தனிமையும் இல்லாமல் போனதில் உண்டான ஏமாற்றத்தைத் தன் புன்னகையில் மறைத்துக்கொண்டாள் ஸ்வேதா.
“நாமளும் வேணும்னா அம்ரு கூட போகலாமே? ரூம்லயே எவ்ளோ நேரம் இருக்கறது?”
“தென் ஓகே!” என்று உடனேயே அலைபேசியைப் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு புறப்பட்ட அண்ணனைக் கேலி செய்தாள் அம்ருதா.
“பார்றா! பொண்டாட்டி பேச்சுக்கு மறு பேச்சு இல்லை. ஓகேவாம்…”
“அதுதான் பொண்டாட்டி பவராம்!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் உள்ளங்கைப் பிடித்திழுக்க, அவன் தோளில் வந்து இடித்துக்கொண்டு, அங்கேயே தன் வெட்கத்தைச் சிதறடித்தாள் அவள்.
“ஓ… வாவ்வ்!!” என உற்சாகமடைந்த அம்ரு அலைபேசியில் அண்ணன் - அண்ணியை விதவிதமாக புகைப்படங்களும் காணொளிகளும் எடுத்து தள்ளினாள்.
பின்னர் கூச்சலும் கிண்டலுமாக மூவரும் வெளியே வந்தார்கள். சாலையில் நடக்கும் போதாவது ஹரிஷ் தன்னுடன் மட்டும் விரல் கோர்த்து நடப்பான் என்று எதிர்பார்த்தாள் ஸ்வேதா. ஆனால் அவன் இவள் விரல்களை விடவில்லை என்றாலும், அம்ருவையும் ‘அம்முக்குட்டி’ என்றழைத்து ‘இங்கே வா!’, ‘ரோட் ஸைட் போகாதே!’, ‘இந்த பக்கம் வா!’ என்று வழிநடத்திக் கொண்டே இருந்தான்.
இவளிடமும் பேசினான்தான்! ஆனால் அது மட்டும் இவளுக்கு போதுமானதாக இல்லை.
அந்த நிமிடத்திலிருந்து ஹரிஷ் அம்ருதாவை அவனுடைய குழந்தையைப் போல் பத்திரமாக, அன்பாக பார்த்துக் கொள்வதில், ஸ்வேதாவிற்கு சலிப்பும் கடுப்பும் எழவே செய்தது. அவன் செய்வது அதிகப்படியாகத் தெரிந்தது. நிச்சயத்தின் போதும் இதனைக் கவனித்தாள்தான் என்றாலும், அன்று அம்ரு உறவினர்களைக் உபசரிப்பதில் அங்கிங்கு ஓடிக் கொண்டிருந்ததால் அப்போது இந்த பாசப்பிணைப்பு ஸ்வேதாவிற்கு உறுத்தவில்லை.
இத்தனைக்கும் அம்ருதா அப்படியொன்றும் அப்பாவிப் பெண் அல்ல! நன்கு படித்து சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலையான மருத்துவ பணியில் இருப்பவள்.
ஸ்வேதா நிச்சயத்திற்கு முன்பு ஒருமுறை ஹரிஷைக் காண மருத்துவமனை சென்றிருந்தாள். அப்போது முதல்முறையாக அம்ருவைப் பார்த்தபோது அறிவு ஒளிவீசும் வதனத்துடன் அத்தனை மிடுக்கும் தெளிவும் கொண்ட பெண்ணைக் கண்டு, தன்னை விட சின்னவள் என்ற எண்ணமற்று மரியாதையாகக் கைக் கூப்ப செய்த தோற்றம். இதழ்களை லேசாக சேர்த்தால் அல்லது விரித்தால் கூட குழி விழும் கன்னம். ஸ்வேதாவை விடவும் உயரம் குறைவுதான். இருப்பினும் அந்தக் கன்னக்குழியும் குறைந்த உயரமும் மெத்தென்ற உடல்வாகும் கூட அவளின் ஆளுமை பண்பைக் குறைக்கவில்லை.
அப்படிப்பட்டவளை சிறு குழந்தையைப் போல், ‘இங்கே போகாதே! அங்கே போகாதே!’ என்று அலம்பல் செய்யும் ஹரிஷின் மேல் எரிச்சல் வந்தது. அம்ருவும் கூட அவனிடம் தன் வயதை, ஆளுமையை இழந்து செல்லம் கொஞ்சுவதில் கூடுதல் எரிச்சல்!
ஆனால் அம்ருதா இவளிடம் தன்மையாக, மரியாதையாக அதே நேரத்தில் தோழமையுடனும் பேசுவதால், தானும் நல்லவிதமாக பேசி தன் எரிச்சலை கரைக்க முயன்றாள்.
ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள்.
‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன்.
அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான்.
ஸ்வேதாவிற்கு மகிழுந்து, பேருந்து பயணங்களிலெல்லாம் அலாதி பிரியமுண்டு. வாகனத்தின் தாலாட்டில் இளையராஜாவைத் துணைக்கு வைத்துக்கொண்டு பயணிப்பது சுகமாய் இருக்கும். கூடுதலாய் மழைச் சொட்டினால் சொர்க்கமென்பதின் அச்சாரத்தைப் பார்த்து வருவாள். இப்போதும் ‘கொட்டலாமா? வேண்டாமா?’ என மேகங்கள் மேடை ரகசியம் பேசிக்கொண்டு மாந்தர்களின் மனநிலையில் இதம் சேர்த்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் ஹரிஷ் ஏதோ மேற்கத்திய இசையை உள்ளே கசிய விட்டிருந்தான். அம்ருதா இவளிடம் பொதுவாக பேசியபடி வந்தாள். இவளுக்கு அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. அம்ருதா அதனைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இருக்கையைச் சற்றே சரித்துக் கொடுத்து, “தூக்கம் வந்தா தூங்குங்க அண்ணி.” என்றாள்.
“இல்லை அம்ரு. கொஞ்சம் போரடிக்குது.”
ஹரிஷ், “தப்பாச்சே… நாங்க கூட இருக்கும் போது போரடிக்கக் கூடாதே?” என்று கேள்வியாய் இழுக்க,
“ஆமா ஆமா!” என உற்சாகமான அம்ரு, “அதோ அந்த ரெட் ஐ ட்வெண்டி!” என முன்னால் நான்கைந்து வாகனங்களுக்கும் முன்பாக தூரத்தில் செல்லும் ஒரு மகிழுந்தைக் கைக் காட்டினாள்.
“டன்!” என்ற ஹரிஷ் வாகனத்தின் வேகத்தைக் கூட்ட,
திகைத்துப் பார்த்த ஸ்வேதா, “என்னங்க மெதுவா!” என்று எச்சரித்தாள்.
“வெய்ட் பேபி!” என்றவன் அடுத்த இரு நிமிடங்களில் முன்னால் சென்ற வாகனங்களை எல்லாம் கடந்து, அம்ரு கைக்காட்டிய வாகனத்தையும் தாண்டி வந்திருந்தான்.
நெஞ்சில் கைவைத்து ஆசுவாசம் கொண்ட ஸ்வேதாவை லேசாகத் திரும்பி பார்த்தவன், “இப்போ நீ சொல்லு பேபி.” என்றிட,
“அய்யோ எனக்கு பயமா இருக்குது.” என்று அலறினாள்.
இளையராஜாவைத் தாலாட்ட சொல்லி விழி சொருகுபவளை எழுப்பிவிட்டு, ஜாக்கிசானின் சாகசங்களைப் பார்த்தால்தான் ஆயிற்று என்றால் என்ன செய்வது?
“பயப்படாதீங்க அண்ணி. இட்’ஸ் கோயிங் ட்டு பீ எக்ஸைட்டிங்! அந்த எர்டிகா போகலாமா?”
“ம்ஹூம், இந்த டஸ்டர்!” என்று முன்னால் ரிஷிக்கு வழிவிடாமல் ஊர்ந்துகொண்டிருந்த வாகனத்தைச் சுட்டிக்காட்ட, அண்ணனும் தங்கையும் ஒருசேர அவளைத் திரும்பிப் பார்த்தனர்.
“அச்சோ முன்னாடி பார்த்து ஓட்டுங்க’ங்க!” என்று அதற்கும் பதறினாள்.
“ஹஹ்ஹஹ… க்யூட் அண்ணி! ஃபர்ஸ்ட் டைம் இல்ல? அதான் உங்களுக்கு பயமா இருக்குது போல… அண்ணா எப்பவும் சேஃப் ஸ்பீட்ல தான் போவான். பயப்படாதீங்க!”
“அத்தனை வண்டியையும் சேஸ் பண்ணி போய்ட்டு பயப்படாதேன்னா எப்டி?”
“சரி, நீங்க வேணும்னா ஹரியைப் பின்னாடி வரச்சொல்லி உங்கப் பக்கத்துல வச்சிக்கோங்க. காரை நான் ஓட்டுறேன்.” என சந்தடி சாக்கில் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வழிப்பார்க்க,
“உதை வாங்குவ அம்ரு! ரொம்ப டிராஃபிக்கா தெரியுது. சும்மா இரு!” என்று கண்டித்தான் ஹரிஷ்.
“அண்ணா! நேத்து நீ என்னடா சொன்ன?”
“சொன்னேன்தான். இப்போ ஸ்வேதா பயப்படறா இல்ல? உனக்கு ஊர்ல போய் இன்னொரு நாள் பைபாஸ்ல போகும்போது தர்றேன்.”
“இதெல்லாம் போங்கு!” என்று அம்ருதா முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள,
தங்கையை சமாதானம் செய்யும் பொருட்டு கேட்டான். “சரி, இப்போ நீ சொல்லு. அந்த ஃபார்ச்சுனர் ஓகேவா?”
“நோ! அந்த க்ரீன் கார்! அதென்ன வண்டின்னு தெரிலயே…” என்ற அம்ருதாவின் பார்வை, தூரத்தில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த பச்சை நிற வாகனத்தில் பதிந்திருந்தது.
“இங்கிருந்து பார்க்க என்ன வண்டின்னு கூட கண்ணுக்கே தெரியல! அதைப் போய் டார்கெட் வைக்கறியே அம்ரு…” ஸ்வேதா பயத்தில் இன்னுமாய் விழிகளை விரிக்க,
“பக்கத்துல போய் பார்த்துடுவோமா?” என்ற ஹரிஷ், அந்த வாகனத்தைப் பார்க்கும் தூரத்தில் நெருங்கிட, அது இன்னுமாய் விலகிச் சென்றது.
அம்ருவின் பிளந்த உதடுகள் சொற்களின்றி ஸ்தம்பித்திருக்க, அது எந்த நிறுவனத்தின், என்ன வகையான வாகனம் என்று பார்த்த ஹரிஷ் இமை சிமிட்டினான்.
அது…
பச்சை நிற மஹிந்திரா ஸ்கார்பியோ-என்!
Pull over for a break 🚗 🚗
Comments
Post a Comment