ஸ்கார்பியோ காதல் - 1.2
அத்தியாயம் 1.2
இருவரும் வயதிற்கேற்ற பொறுப்புடனும் படிப்பிற்கேற்ற மிடுக்குடனும் இருப்பது மருத்துவமனையில் மட்டும்தான். மற்றபடி வீட்டில் அம்மா அம்பிகாவிடம் இருவருக்குமே இன்னும் பதின்பருவ பிள்ளைகள் என்ற நினைப்பு! அம்பிகாவும் இருவரையும் நண்பர்கள் போலவே நடத்துவதால் இருவருக்கும் அம்மாவிடம் சலுகையும் செல்லமும் அதிகம்.
நடராஜனுக்கு பாசம் இருந்தாலும், தோளுக்கு மேல் வளர்ந்த தம் மக்கள் படித்து நல்ல நிலையில் இருக்கும் இப்போதும் கூட முறைப்புடன்தான் திரிவார். ஹரிஷ், அம்ருதா இருவருக்குமே அப்பா என்றால் மரியாதையுடன் சிறு பயமும் உண்டு.
கூடுதலாக அம்ருவிற்கு அண்ணனிடம் கொஞ்சலும் குணட்டலும் அதிகமே! ஹரிஷூம் அம்ருவை என் தங்கை என்பதை விட, என் மகள் என்று சொல்வதையே விரும்புவான். இவ்விடயத்தில் உள்ளூர மகிழ்விருந்தாலும் அம்பிகா மகளைக் கண்டிக்கவே செய்வார். அவ்வப்போது அம்ருவின் சேட்டைகள் அதிகமாகும் போது, அவனால்தான் என்று ஹரிஷுக்கும் வசவுகள் கிடைக்கும்.
ஹரிஷ் ஒரு பெரிய ஜவுளிக்கடையில் துணி எடுக்கச் சென்றபோது அங்கே ஒரு வாய்த்தகராற்றில், அதன் மேலாளரான ஸ்வேதாவைச் சந்தித்துப் பேசி, பின்னர் அவளிடம் காதலில் விழுந்து, இருவரும் இரண்டு வருடங்களாகக் காதலித்து, இதோ இன்னும் இரு வாரங்களில் பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் அவளைக் கரம் பிடிக்கப் போகிறான்.
ஸ்வேதாவிற்கு அம்மா மட்டும்தான்! ஒற்றைப் பெண்பிள்ளை அவள். இந்நிலையில் ஸ்வேதா அவளுடன் படிக்கையில் தன் குடும்பம் போல் பழகியிருந்த தோழிகள் இருவருக்கு நேரில் பார்த்து அழைப்பிதழ் தர வேண்டி ஓசூர் வரை சென்றிருந்தாள். நாளை அவள் ஊர் திரும்புவதால் காதலியை, தானே அழைத்து வர வேண்டுமென்பது ஹரிஷின் பேரவா!
இதோ, சில பல நிபந்தனைகளுடன் அவனின் விருப்பமும் நிறைவேறப் போகிறது. முதற்கட்டமாக அம்ருதா கேட்ட மோதிரத்தை வாங்கவென அந்த நகைக்கடை சென்று, ஸ்வேதாவுக்கும் சேர்த்தே ஒரு காதணியை வாங்கிக்கொண்டான்.
வரும் வழியில், விரலில் அணிந்திருந்த மோதிரத்தைப் பார்ப்பதும் கழற்றிவிட்டு மீண்டும் அணிவதுமாக இருந்த தங்கையை மகிழுந்தைச் செலுத்தியபடி திரும்பி பார்த்தான் ஹரிஷ். “உன் விரல் சைஸுக்கு வேற பார்க்கலாம்னு சொன்னா கேட்கறியா அம்மு? எது பிடிச்சாலும் ஒரே பிடிதான்!”
பரிசுப் பெட்டியின் மேலே சுற்றப்பட்டிருக்கும் ரிப்பன் போல், மூன்று ரிப்பன் வளைவுகளுக்கு நடுவே மூன்று பொடி வைரக் கற்கள் அமைந்திருந்த அந்த அழகிய மோதிரத்தைப் பார்த்தபடியே சொன்னாள் அவள். “எவ்ளோ யுனிக் டிஸைன் பாரு! வச்சிட்டு வர மனசே இல்ல ஹரி. உன் திருப்திக்கும் வேற பார்த்தேன் தானே? ஒண்ணுமே பிடிக்கல!”
தங்கையின் குணம் தெரிந்ததால், “சரி, வீட்டுக்கு போன உடனேயே அம்மாவை நூல் சுத்தி தரச் சொல்லு. உன்னை மாதிரியே லூஸா இருக்குது. மிஸ் பண்ணிடாதே!” என்று குட்டு வைக்க, மோதிரத்தை விட்டுவிட்டு அண்ணன் தலையை உருட்ட ஆரம்பித்தாள் அம்ருதா.
அவள் விரலை விட பெரிய அளவில் மோதிரம் வாங்கி வந்ததற்காக அம்மாவிடமும் அம்ருதாவிற்கு வசவுகள் கிடைத்தது. “ஆசைப்படற எல்லாம் சுலபமா கிடைக்கறதால வாங்கற பொருளோட மதிப்பு தெரியல உனக்கு! அப்டியென்ன பிடிவாதம்? இப்போ மிஸ் ஆகிட்டா என்ன பண்ணுவ?”
“பிடிச்சதை நான் ஏன்மா மிஸ் பண்ண போறேன்? பத்திரமா வச்சுக்குவேன்.”
“தெரிஞ்சே நமக்கு பொருந்தாததைச் செலக்ட் பண்றது முட்டாள்தனம் அம்ரு! கொஞ்சம் அல்டர்னேடிவ் மைண்டோட இருந்தா தான் வாழ்க்கைல எந்த பிரச்சனையும் ஈஸியா ஃபேஸ் பண்ண முடியும். இல்லைன்னா அதுலேயே தேங்கிடுவோம்.”
”அம்மா! சின்ன மோதிரம். இதுக்கு ஏன் இவ்ளோ லெக்சர்? விடுங்க அவ பார்த்துப்பா!” - ஹரிஷ்.
“ரெண்டரை லட்ச ரூபாய் பொருள் உனக்கு சின்ன விஷயம் என்ன? ரெண்டு பேருக்கும் அடுத்த வேளை சாப்பாடு இல்லன்னு சொல்லி வளர்த்திருந்தா பணத்தோட வேல்யூ தெரிஞ்சிருக்கும். உங்கப்பா பிள்ளைங்க பாதத்தை பூமி பார்க்காம வளர்த்திருக்கார் இல்ல? அதான் உங்களுக்கு எல்லாமே சின்ன விஷயமா தெரியுது.”
அம்பிகாவின் ஆதங்கம் புரிந்தும், அதை உணராமல் அண்ணன், தங்கை இருவரும் சலிப்பாகப் பார்த்துக் கொள்ள, அதற்கும் அம்பிகா கோபத்துடன் ஏதோ பேச வர, நடராஜன் வருவது தெரிந்து அமைதியாகிவிட்டார்.
அம்பிகா அப்படித்தான்! கணவனாகவே இருந்தாலும் தம் மக்களை யாரிடமும் விட்டுக்கொடுப்பதில்லை. அத்துடன் நடராஜன் ஏற்கனவே கண்டிப்பு எனும் பெயரில் பிள்ளைகளைக் காய்ச்சி எடுப்பார். அதனாலேயே அம்பிகா அவரிடம் பிள்ளைகளின் சேட்டைகளைத் தெரியப்படுத்துவதில்லை.
டீபாயில் இருந்த நகைக்கடை பையைப் பார்த்தபடி வந்தமர்ந்த நடராஜன், “தண்ணி கொண்டு வா அம்ரு!” என்றுவிட்டு, “எத்தனை மணிக்கு கிளம்பற?” என மகனிடம் கேட்டார்.
“இப்போ கிளினிக் போய்ட்டு வந்து நைட் ஒன்பதுக்கு மேல கிளம்பலாம்ன்னு பார்க்கறேன்ப்பா.”
“ம்ம், ராத்திரி நேரம் பொம்பள பிள்ளையைக் கூட்டிட்டு போற… கவனம்! உன் இஷ்டத்துக்கு கார்ல வித்தைக் காட்டிட்டு போகாதே!” என்று ஹரிஷின் கார் போகும் வேகத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல,
“ம்ம்!” என்றவன், தண்ணீர் கொண்டு வந்த அம்ருதாவை முறைத்தான்.
அவள்தான் அப்பாவைப் போல் ஆமை வேகத்தில் போகிறாய் என்று இவனை கேலி செய்வாள். அவளுக்கு சிறு வயதிலிருந்தே துணிகரமாக அதீத வேகத்தில் ஓட்டிச் செல்லும் வாகன சாகசத்தின் மீது ஓர் பிரேமை உண்டு. அவளிடம் தன் வாகனம் ஓட்டும் திறனை நிரூபித்திட வேண்டி, இவன் வேகமாகச் சென்றதை ஒருமுறை நடராஜன் பார்த்துவிட்டார். அதிலிருந்து தொலைதூரத்திற்கு செல்ல இவன் காரைத் தொடும் போதெல்லாம் இந்த அறிவுரையை மறக்காமல் ஒலிபரப்புவார்.
மாலையில் தன் கிளினிக்கிற்கு சென்று ஓர் நபருக்கான அமர்வை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்த ஹரிஷ் சிறிது நேர ஓய்விற்கு பின்னர் பச்சை தேநீரை மட்டும் அருந்திவிட்டு மகிழுந்தின் திறப்பை எடுத்தான்.
வாசலுக்கு வந்ததும் அம்பிகா தன் பாராயணத்தை ஒப்புவித்தார். “அவ ஏதாவது கேட்டா அவ இஷ்டத்துக்கு ஆடாதே ஹரி! கண்டிச்சு வை! நீயும் தான்டீ! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குதுல்ல?”
“இருக்குதும்மா!” - அலுப்புடன் அம்ரு!
“என்ன சொன்னீங்க?” - ஹரிஷ்.
“எதுவும் கேட்டு அடம்பிடிக்காதேன்னு சொன்னேன்.” என்றவர், மகனுக்குத் தெரியாமல் மகளைக் குறிப்பாகப் பார்த்து விழிகளை உருட்டினார்.
“மழை வர்ற மாதிரி இருக்குது. கவனம்!” - நடராஜன்.
“பார்த்துக்கறேன்ப்பா.”
“டின்னர் முடிச்சிட்டு போகலாம்லடா?” என்ற அம்பிகாவிடம்,
“இப்போவே சாப்பிட்டா தூக்கம் வரும்மா. சப்பாத்தி வச்சிருக்கீங்க தானே? போற வழில பார்த்துக்கறேன்.” என்றான்.
அம்ருவிடம், “அவனோட பேசிட்டே இருடி. தூங்கிடப் போறான்.” என்றிட,
‘களுக்’ எனச் சிரித்தாள் அவள்.
அம்மாவை முறைத்து, தங்கையின் பின்னந்தலையில் தட்டி, “உள்ளே போய் உட்காரு போ!” என்றுவிட்டு, “வரேன்ப்பா. பை’ம்மா!” என்றான்.
“பத்திரம்!” என்ற அப்பாவிற்கு ஒரு தலையசைப்பைத் தந்துவிட்டு மகிழ்வுந்தை உயிர்ப்பித்தான் ஹரிஷ்.
Brake for the break 🚗🚗
Comments
Post a Comment