ஸ்கார்பியோ காதல் - 1.1
அத்தியாயம் 1.1
“அம்மா ம்மா! ப்ளீஸ்மா… எனக்காக, நீங்க பெத்த இந்த தங்கத்துக்காக அப்பா கிட்ட ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கம்மா…” அம்மாவின் கையைப் பக்தியுடன் பிடித்துக் கெஞ்சினான் ஹரிஷ்.
அல்லாடும் அண்ணனைச் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்தவாறு ரவா தோசையைத் தேங்காய் சட்னியில் தோய்த்து மென்று கொண்டிருந்தாள், ஹரிஷின் அருமைத் தங்கை அம்ருதா!
காலையிலிருந்து தன் பின்னேயே சுற்றும் மகனை அலுப்புடன் பார்த்தார் அம்பிகா. “எங்க காலத்துல எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு மாப்பிள்ளை பார்த்துக்கறதே தப்பு. நீ என்னடான்னா அவ்ளோ தூரத்துல இருந்து தனியா அவளைக் கூட்டிட்டு வர்றேன்னு சொல்ற! இதுல ரெகமண்டேஷனுக்கு என் தலையை வேற உருட்டுற!”
“இந்த வீட்டுல ஹெவி டெபாசிட் இருக்கற ஆளே நீங்க தானேம்மா?”
“ஆமா, நான் சொன்னதும் அப்டியே உங்கப்பா கார் சாவியை எடுத்து கொடுத்து போயிட்டு வா’ன்னு சொல்லப் போறாரு பாரு!”
“நீங்க அப்பாவோட லவ்வபிள் பொண்டாட்டிம்மா! உங்க பவர் உங்களுக்கே தெரியல!”
“ஏண்டா என் ஆவியைக் குறைக்கற? அப்டியே உங்கப்பா ஒத்துக்கிட்டாலும் சம்பந்தியம்மா ஒத்துக்கணும்ல? அவங்க எப்டி கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க பொண்ணை உன் கூட அனுப்ப சம்மதிப்பாங்க?”
“கரெக்ட்! மோர்ஓவர் அண்ணி நைட் ட்ரெய்ன்ல ஏறினா காலைல வீட்டுக்கே வந்திடலாம். இதுக்கு இவன் ஆறு மணி நேரம் டிராவல் பண்ணி அங்கே போய், திரும்ப ஆறு மணி நேரம் ரிட்டர்ன் வந்துன்னு… டைம், பெட்ரோல், மைலேஜ், பணம் எல்லாத்தையும் வேஸ்ட் பண்றான். அதுவும் ஆயில் மாத்தாத இவனோட காரால ஏர் பொல்யூஷன், நாய்ஸ் பொல்யூஷன்னு மத்த ஜீவராசிகளுக்கும் டிஸ்டபர்ன்ஸ்!” ரவா தோசையை முடித்த ஜோரில் நீளமாக பேசினாள் அம்ருதா.
“உதவிக்கு தான் வரல! ஊத்தி விடாமலாவது இரேன் அம்மு!”
“உதவிக்கு வரேண்டா அண்ணா. ஆனா இதனால எனக்கென்ன கிடைக்கும்?”
“என்ன வேணும்?”
“நேரம் வரும்போது கேட்பேனாம்!”
“தேவையில்ல. நேரம் வரும்போது கேட்கறேன்னு சொல்றவனுங்க பூரா வில்லங்கமா தான் கேட்பானுங்க. ம்மா ம்மா… நீங்க ரெகமண்ட் பண்ணா போதும்மா. ப்ளீஸ்ம்மா…”
தம் மக்கள் பேசியதைக் கேட்டு சற்று சிந்தித்த அம்பிகா, “சரி, போயிட்டு வா! ஆனா தனியா போக வேணாம். இவளையும் கூட்டிட்டு போ.” என்றிட,
“அவன்தான் எனக்காக எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டானே? அப்புறம் ஏன் நான் போகணும்?” முறுக்கிக்கொண்டாள் அம்ருதா.
“இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணத்தை வச்சிக்கிட்டு இவனோட அவளைத் தனியா அனுப்ப முடியாது. நீ போனா கூட உங்கப்பா ஏதாவது சொல்லுவார்தான்! ஆனா ஜஸ்ட் கேட்டு பார்க்கலாம்.”
இத்தனை நேரம் ‘அம்மா, அம்மா’ என்று அவர் பின்னே சுற்றிய ஹரிஷ், இப்போது அம்மா சொன்னதைக் கேட்டதும் ‘அம்மு, அம்மு’ என்று தங்கையிடம் கேவலமாகக் கெஞ்சினான்.
கடைசியில் நீண்ட நாட்களாக அவள் கேட்ட பிளாட்டினம் மோதிரத்தை லஞ்சமாகத் தருவதாகக் கூறி, அண்ணன் - தங்கை தங்கள் பேரத்தை முடித்துக்கொள்ள, அம்பிகா கணவர் நடராஜனிடம் சென்று மகனின் கோரிக்கையை முன் வைத்தார்.
நினைத்தது போலவே நடராஜன் ருத்ர மூர்த்தி முகத்தைக் காண்பித்து, “கொஞ்சமாவது நியாயமா பேசறியா?” என்று மனைவியிடம் எகிறியவர், “இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம்! அதுக்குள்ள என்னடா உனக்கு ஊர் சுத்த வேண்டி கிடக்குது?” என்று மகனையும் முறைத்தார்.
“தனியா வேணாம். அம்ருவையும் கூட்டிட்டு போறேன்னு சொல்றான்.” - அம்பிகா.
“நாளைக்கு அம்ருவுக்கு வரன் அமைஞ்சு, அவளும் மாப்பிள்ளை கூட இப்டி கல்யாணத்துக்கு முன்னாடி போறேன்னு சொன்னா சரின்னு சொல்லுவியா? எல்லா விஷயத்துலயும் நம்ம பொண்ணையும் நிறுத்தி யோசி!” என்றார் கடுமையாக!
அம்மாவும் அண்ணனும் முகம் தொங்கிப் போய் நிற்பதைக் காணச் சகியாமல் அம்ரு சொன்னாள். “என்னப்பா நாங்க ரெண்டு பேரும் டீன்ஏஜ் பசங்களா? இல்ல அண்ணி தான் சின்னப் பொண்ணா? எங்களுக்கும் பொறுப்பு இருக்குதுப்பா.”
“பொறுப்போட இருக்கறவங்க இப்டி ஊர் சுத்த நினைக்க மாட்டாங்க அம்ரு!”
“அப்பா, கல்யாணத்துக்கு முன்னாடி ஜஸ்ட் ஒரு எக்ஸைட்மெண்ட்! அப்புறம் ஹஸ்பண்ட், வைஃப்ன்னு ஆனதுக்கப்புறம் அது ஃபேமிலி டூர் ஆகிடும்ப்பா! அதான் அண்ணா கேட்கறான்.”
“நீ என்ன அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு? என்னத்தை லஞ்சமா கொடுத்தான்?”
‘ஆத்தாடி! சரியா கேட்ச் பண்ணிட்டாரே!’
மூவரும் விழித்தார்கள். அம்ரு சட்டென முகபாவனையை மாற்றிக்கொண்டு சொன்னாள். “எங்கப்பாவுக்கு இன்ஸைட்’ல ஒரு இந்தியன் தாத்தா இருக்கும்போது எனக்குள்ளேயும் இருக்கமாட்டாரா? அந்த ‘ல’ வார்த்தை கூட என் வாய்ல இருந்து வராதுப்பா.”
அம்பிகாவும் ஹரிஷூம் ஓர் மௌனப் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.
“நீ இப்டி சோப்பு போடும்போது தான் எனக்கு சந்தேகம் அதிகமாகுது.”
“சோப்புமில்ல; ஷாம்பூவும் இல்ல! நீங்க ஸ்வேதா அண்ணியோட அம்மாகிட்ட பேசுங்கப்பா. அத்தை ஓகே சொன்னா போறோம். இல்லைன்னா இருக்கோம். இவ்ளோதானே?”
“நான் போய் கேட்டா ஒரு பெரிய மனுஷன் பேசற பேச்சா இதுன்னு காரி துப்புவாங்க.”
“அப்பா! ப்ளீஸ்ஸ்…” என்றான் ஹரிஷ்.
வளர்ந்த மகனின் ‘ப்ளீஸ்’ முகத்தைத் தாங்க மாட்டாமல் பெருமூச்சுடன் அலைபேசியை எடுத்துக்கொண்டு நகர்ந்தார் நடராஜன். பின்னேயே அம்பிகாவும் போய்விட, அவர்கள் திரும்பி வரும் வரை நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்த அண்ணனை சுவாரஸ்யமாக வேடிக்கைப் பார்த்தாள் அம்ருதா.
சம்பந்தியம்மாளிடம் பேசிவிட்டு வந்த நடராஜன், “போயிட்டு வா! ஆனா நாளன்னிக்கு காலைல இங்கே இருந்தாகணும்.” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு திரும்ப,
அண்ணனும் தங்கையும் ஹைஃபை கொடுத்து குதித்தார்கள்.
“ஹேய்ய் சூப்பர்! அண்ணா, இப்போவே தனிஷ்க் போய் நான் கேட்ட ரிங் வாங்கிட்டு கிளம்பலாம்.” என்ற மகளை,
இரண்டெட்டு வைத்திருந்த நடராஜன் திரும்பி ஒரு பார்வை பார்த்தார். “இந்தியன் தாத்தா?”
“அது… அண்ணிக்கு தான்ப்பா… கிஃப்ட்ன்னு…”
“பொய் மேல பொய் பேசாதே அம்மு!”
தங்கையைக் காக்க வந்தான் ஹரிஷ். “பொய்யில்லப்பா. ஸ்வேதாவுக்கு வாங்கும்போது இவளுக்கும் வாங்கித் தருவேன்தானே?”
இருவரும் கூட்டுக் களவாணிகள் என்று பெற்றவருக்கு தெரியாதா என்ன? கோபமாக முறைத்து விட்டு நகர்ந்தார்.
அம்பிகா ஆயாசமாக சாய்விருக்கையில் அமர, மக்கள் இருவரும் அவரின் பக்கத்திற்கு ஒருவராய் வந்தமர்ந்து கொண்டு கதைக் கேட்டனர்.
“அத்தை என்னம்மா சொன்னாங்க? அப்பா சடனா ஆஃப் ஆகிட்டாரே?” - அம்ருதா.
“ம்ம், ஸ்வேதா டிரெய்ன்ல டிக்கெட் கிடைக்கலன்னு சொன்னாளாம்.”
“இவன்தான் அப்டி சொல்ல சொல்லிருப்பான்.”
“ஹிஹி…”
“போகும்போது பஸ்ல எவனோ வாலாட்டிருக்கான். அதனால பஸ் டிராவல் பயமா இருக்குதுன்னு அவங்கம்மா கிட்ட சொல்லிருப்பா போல… வேற யாரையும் நம்பி பொண்ணைத் தனியா வர சொல்ல முடியாதேன்னு தவிச்சிட்டு இருந்திருக்காங்க. இப்போ அப்பா கேட்டதும், அவங்களுக்கு ரொம்ப நிம்மதி!”
“எஸ்!” இருவரும் முழங்கையை இடித்துக்கொண்டனர்.
“ரொம்ப குதிக்காதே! என்ன தான் வீட்டு மாப்பிள்ளைன்னாலும் உன்னை அனுப்ப முதல்ல யோசிக்க தான் செஞ்சாங்க. அப்புறம் அப்பா அம்ருவும் கூட போறான்னு சொன்ன பிறகு தான் முழு மனசோட ஒத்துக்கிட்டாங்க.” என்றதும், மிதப்புடன் அண்ணனைப் பார்த்தாள் அம்ருதா.
மேற்படி உரையாடல்களில் நாம் பார்த்த ஹரிஷூம் அம்ருதாவும் உடன்பிறப்புகள். ஹரிஷ் வயது இருபத்தொன்பது; அம்ருவிற்கு இருபத்துமூன்று. இருவரையும் மருத்துவர்களாக்கி பார்க்கவேண்டும் என்ற நடராஜனின் விருப்பத்தின் பேரில், மனநல மருத்துவம் பயின்றிருக்கும் ஹரிஷ் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும் மாலையில் தன் கிளினிக்கிலும் பணியாற்ற, அம்ருதா மருத்துவ படிப்பு முடித்துவிட்டு, ஹரிஷ் பணிபுரியும் அரசு மருத்துவமனையிலேயே முதுகலையில் குழந்தைகள் நல பிரிவில் பயிற்சி மருத்துவராக (PG trainee doctor) சேர்ந்திருக்கிறாள்.
nice starting ka.... Waiting for next epi...😁
ReplyDeleteThank u so much Vaasu🎈🎈
Delete