சீதையின் பூக்காடு - 1
![]() |
அத்தியாயம் 1
வெள்ளிக்கிழமை!
மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி.
ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை!
தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதையின் புத்தக வடிவிற்காகவும் பேசிவிட்டு வருகிறாள்.
பிரம்மன், இவளின் பிரகாசமான விழிகளில் அதிகாலை கதிரொளியைத் தீட்டினானோ! இதழ்களில் அந்திவான மழைச்சாரலின் ஈரத்தை குழைத்தானோ! கழுத்தில் கவி வடித்தானோ! அதன் கீழ் செல்வ சீமானாகும் வரம் பெற்றானோ! இடையில் மாதக்கடைசியின் வறுமையில் வாடினானோ! மொத்தத்தில் சற்றே பூசிய உடல்வாகில் இருக்கும் ஆரவி பிரம்மனுடன் அழகில் நூற்றுக்கு நூறு என ஒப்பந்தம் செய்து கொண்டு பிறந்திருக்கும் ஐந்தேகால் அடி உயரத் தங்கசிலை!
புத்தகம் வெளியீடு பற்றி பேசி விட்டு வெளிவந்த ஆரவியை நிறுத்தியது, அவளின் அலைபேசி அழைப்பு!
திரையைப் பார்த்தவளின் புருவங்கள் சுருங்கியது. ஏதோ பொது தொலைபேசி எண்! அழைப்பை ஏற்றவள் முதலில் திகைத்து, மறுகணத்தில் பதட்டமாக, "அச்சோ! எங்க? இதோ கிளம்பிட்டேன்." எனப் பேசி முடித்து, வேகமாக பதிப்பகத்திலிருந்து வெளியேறி, அடித்து பிடித்து தன் நீல வண்ண ப்ளஷர்+ 110ஐக் கிளப்பி, தட்டுத்தடுமாறி சாலைப் போக்குவரத்தில் கலந்தாள்.
கருத்திருந்த வானம் லேசாக தூறல் போட ஆரம்பித்தது. ஆரவியின் மேல் விழுந்த மழைத்துளிகள், அவளை ஸ்பரிசித்து மண்ணில் வீழ்ந்ததால் பெருமைக்கொண்டன.
பாதி தொலைவு வந்ததும் மீண்டும் அலைபேசி அழைப்பு! இம்முறை வேறு எண்! ஆனால், தற்போது அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை.
வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு எடுத்துப் பேசியவள், "இதோ கிளம்பிட்டேன். என்ன? ஊரைத் தாண்டி உள்ள ரோடா? அங்க எப்டி? சரி சரி! இதோ வந்துடறேன். நீங்க கொஞ்சம் லொகேஷன் மட்டும் எனக்கு அப்டேட் பண்ணிட்டே இருங்க ப்ளீஸ்..." என்றுவிட்டு மீண்டும் கிளம்பினாள்.
கிட்டத்தட்ட அரைமணி நேரப் பயணத்திற்குப்பின், அந்த செம்மண் சாலை வந்தது. அதற்காகவே காத்திருந்தாற் போல் மீண்டும் அலைபேசி அழைத்தது. வேகமாக எடுத்தாள்.
"சொல்…" என்று ஆரம்பித்தவளைப் பேசவே விடாமல் எதிர்முனைப் பேசியிருக்க வேண்டும். ஆரவி அமைதியாக செவிமடுத்தாள்.
"ஹ்ம்ம் சரி. வர்றேன்." என்று அலைபேசியை அணைத்துவிட்டு, வண்டியின் பெட்ரோல் இன்டிகேட்டரைப் பார்த்தாள். சிவப்பு முள் 'E' எனக் காண்பித்தது.
'நேத்து தான அப்பா பெட்ரோல் போட்டார்? ஆத்துல இருந்து கிளம்பறச்ச கூட செக் பண்ணேனே?' என சிந்தித்தவள், சரி! போய் சேரும் வரை வாகனம் எங்கும் இடையில் நின்று விடக்கூடாது என தன் இஷ்ட தெய்வமான மீனாட்சிதேவிக்கு வேண்டுதலை வைத்துவிட்டு கிளம்பினாள்.
வடக்கிலிருந்து தெற்காக சென்ற நெடுஞ்சாலையில் தான் ஆரவி வந்தாள். கனரக வாகனங்கள் குறித்த வேகத்தைக் கடைபிடிக்காமல், நெடுஞ்சாலையில் இறக்கை முளைத்ததாய் எண்ணி பறந்துகொண்டிருந்தன.
அலைபேசியில் கூறிய விவரத்தின் படி, அந்த நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து சென்ற கிளை சாலையான செம்மண் சாலைக்குள் திரும்பி, வண்டியை செலுத்தினாள் ஆரவி.
இன்னும் அரைமணி நேரத்தில் அதே நெடுஞ்சாலையின் தெற்குப்புறத்தில் ஓர் கோரமான விபத்தும் நடக்க இருப்பதை அவள் அறிய வாய்ப்பில்லை.
உள்ளே அரை கிலோமீட்டர் வரை சென்றுவிட்டாள். எங்கும் வீடுகள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. இதுவரை பதட்டத்தில் இருந்த நெஞ்சம், இப்போது பயத்தையும் சேர்த்து குத்தகைக்கு எடுத்துக்கொண்டது.
நேரம் ஆறைத் தொடவிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் இருள் கவிழ்ந்துவிடும். மழை வேறு நசநசவென்று விழுந்து கொண்டிருக்கிறது. இப்போதே பாதி நனைந்துவிட்டாள்.
'விபரீதத்தில் வந்து மாட்டிக் கொண்டோமோ? இங்கு எதுவும் மனதிற்கு சரியாகப் படவில்லையே… சரி! அம்மாவிற்கு அழைத்துப் பார்க்கலாம்' என்று அலைபேசியை எடுக்க அது, 'நானே சிக்னல் இல்லாமல் கையொடிந்து இருக்கிறேன். நீ வேறு தொல்லை செய்யாதே!' என்று அலுத்துக்கொண்டது.
வேறுவழியில்லாமல் இன்னும் கொஞ்சம் தூரம் உள்ளே சென்றாள்.
'டர்ட்… டர்ட்… டர்ட்…'
அவளின் ப்ளஷர்+ 110, 'இனி உணவில்லாமல் உதவ மாட்டேன்' என அது பங்கிற்கு வேலைநிறுத்தம் செய்தது.
"மீனாட்சிஈஈ..." தன் வேண்டுதலை நிராகரித்துவிட்ட தெய்வத்தை நிந்திக்கவும் இயலாமல், தன் நிலையை நொந்து கொண்டு வண்டியைத் தள்ளியவாறே நடந்தாள்.
பத்து நிமிட நடையின் பின் வந்தது, ஒரு குட்டி வில்லா! அந்தக் கால கல் கட்டிடம்! இரண்டே தளங்களைக் கொண்டிருந்தது. மாடியில் இருபுறமும் உள்ள அறைகளின் திரைச்சீலை அணிந்திருந்த ஜன்னல்கள் பார்வைக்கு கிடைத்தன. அதற்கும் மேல் வீட்டின் முகப்பில், அழகுக்காக செராமிக் ஓடுகளைப் பதித்திருந்தனர்.
சுற்றிலும் கண்களை சுழற்றினாள். எங்கும் மரங்களும் காட்டுக் கொடிகளும் புதர்களுமே நிறைந்திருந்தன. ஆனால், அவ்வீடு நந்தவனத்திற்கு நடுவே இருக்கும் குட்டி சொர்க்கம் போல் இருந்தது. கேட்டின் (gate) பக்கத்திற்கு ஒன்றாய் இரு சிப்ரஸ் மரங்கள் நின்று கண்ணை நிறைத்தது.
நாம் ஒரு தோள்பை வாங்கினால் அதில் அழகுக்காக அதே வடிவிலான குட்டிப்பை ஒன்றை தொங்கவிட்டிருப்பார்களே? அது போல் இப்பெரிய வீட்டின் சிறிய வடிவத்தில், அதாவது மேற்கூரை மட்டும் அவ்வீட்டைப் போல் அமைந்திருந்த ஒரு சிறிய வீடும் அந்த காம்பவுண்டிற்குள் இருந்தது. ஒன்று அல்லது இரண்டு அறைகளைக் கொண்டிருக்கலாம்.
அதை கண்கள் பார்த்தும் சிந்தனையில் பதியாதவள் பிரதான வாயிலைத் திறந்து பயமும் பதட்டமுமாய் வியர்வை ஒழுக, கால் கிலோமீட்டர் நடந்ததும் வந்த போர்டிகோவைத் தாண்டி, பெரிய வீட்டின் வாசல் படியேறி அழைப்புமணிப் பொத்தானை அழுத்தினாள். அரவமே இல்லை. அழைப்புமணி வேலை செய்யாததை உணர்ந்துக் கதவைத் தட்டியவளுக்கு நிசப்தமே மறு மொழியானது.
இப்போது இதயம் இன்னும் வேகமாய் அடித்துக்கொண்டது. 'எதுவோ சரியில்லை. இப்படியே திரும்பிவிடுவோமா?' உள்மனம் கேள்வி கேட்டது.
'ப்ச்! என்னவாகி விடப் போகிறது? அப்படியா பயங்கொள்ளி ஆகிவிட்டோம்?' என்று அசட்டுத் துணிச்சலோடு, "சார்.. சார்..." என அழைத்துப் பார்த்தாள்.
ம்ஹூம்! மீண்டும் நிசப்தமே!
"ம்மா! நீ இருக்கியோன்னோ?" எனக் கேட்டவாறே சற்றே அழுத்தமாய் தள்ளியதும் திறந்துகொண்டது கதவு.
'என்னதிது? இந்தாத்துல ஆளுங்க இருக்கற மாதிரியே தெரியலயே?! அப்பா, பாட்டி எல்லாம் எங்க?' யோசனையாய் வீட்டை கண்களால் அளந்து கொண்டே முன்னேறினாள்.
"ஹலோ? இஸ் எனிபடி ஹியர்?" என்றவாறே வரவேற்பறையைக் கடந்து கூடத்தில் கால் வைத்தவளின் விழிகளில் விழுந்தது, பக்கவாட்டில் இருந்த நீள்விரிக்கையில் இருந்து கீழே நீண்டிருந்த ஷூ அணிந்த இரு கால்கள்!
தடதடக்கும் இதயத்தை ஆழ்ந்த மூச்சுகளெடுத்து ஆசுவாசப்படுத்திவிட்டு, அந்தக் கால்களுக்குரியவன் அமர்ந்திருந்த சோஃபாவின் அருகே சென்றாள்.
அவன் நிலையைப் பார்த்ததும் இதுவரை தடதடத்துக் கொண்டிருந்த இதயம் நின்றே போனது, பெண்ணவளுக்கு! அவளையறியாமலே உதடுகள் மீனாட்சியைத் துணைக்கழைத்தது.
சோஃபாவில் இருந்தவன் ஒழுங்கில்லாமல் அளையகுலைய விழுந்தாற் போல் காட்சியளித்தான்.
'மீனாட்சி! என்னதிது? யாரு இவன்? இப்டி விழுந்து கிடக்கறான்? தண்ணியடிச்சிட்டு உறங்கிண்டு இருக்கறானா? மயக்கத்துல இருக்கறானா? இல்ல…. ஒருவேளை….' மனதில் கூட அந்த வார்த்தையை நினைக்க துணியாமல் தடுமாறினாள்.
அவன் தோளைத் தொட்டு அசைக்கப் போனவளின் மூளை 'தொடாதே' என்று அலறியது. இப்போது தொட்டு அசைத்து விட்டு பின்னால் ஃபாரன்ஸிக் குழுவிடம் தன் கை ரேகை சிக்கிக்கொண்டால் என்ன செய்வது? எழுத்தாளர் என்றாலும் அடிப்படையில் இவளும் வாசகி தான் அல்லவா? எத்தனை ராஜேஷ்குமார் கதைகளைப் படித்திருப்பாள்?!
"ச்ச!" என்று பின்னந்தலையைத் தட்டிக் கொண்டவள், 'இந்த பொல்லாத மனம் இல்லாததை எல்லாம் கற்பனை செய்யும்!' என்று தன்னையே கடிந்து கொண்டு, மெதுவாக குனிந்து அவன் நாசியின் அருகே புறங்கையை வைத்து மூச்சை சோதித்துவிட்டு நிம்மதியாக நிமிர்ந்தாள்.
'ஹப்பாடா! உசுரோட தான் இருக்கான்.'
இப்போது தைரியமாக தோளைத் தொட்டு அசைத்தாள். "ஹேய்! ஹலோ!! வேக்கப் மேன்!"
"ஹ.. ஹாங்!!" மெதுவாக விழி திறந்தவன் அ'னா, ஆவன்னா தெரியாத சிறுவனைப் போல் விழித்தான்.
"என்னாச்சு உங்களுக்கு? எழுந்திருங்கோ!"
"ஹாங்! இப்ப நான் எங்க இருக்கேன்?"
"ம்ம்… இந்திரலோகத்துல ஊர்வசி, ரம்பா கூட ரொமான்ஸ் பண்ணிண்டு இருக்கேள்." என்று இவள் இடக்காக கூற… அவன் தலையை குனிந்து, கைகளால் முகத்தைத் தேய்த்து விட்டுக்கொண்டு நிமிர்ந்து பார்த்தான்.
"எனக்கு கால் பண்ணது நீங்க தானா?"
அவன் கேள்வியில் தூக்கி வாரி போட, "என்ன? என்ன? நான் உங்களுக்கு கால் பண்ணேனா? நேக்கு கால் பண்ணதே நீங்க தான்னு நினைச்சேன்?" என்று இவள் திகைக்க,
"வாட்? நான் எதுக்கு உங்களுக்கு கால் பண்ணனும்? ஐ டோண்ட் ஈவன் நோ, ஹூ ஆர் யூ!" என்று ஸ்டைலாக தோள்களைக் குலுக்கினான்.
"அப்...அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" என்று கேட்டுக் கொண்டே, இதோ! இதோ!! என உயிர்விடக் காத்திருக்கும் அலைபேசியை எடுத்து உள்வந்த அழைப்புகளை சோதித்தாள்.
அவளுக்கு அழைத்த மூன்று எண்களையும் பரிசோதிக்கும் பொருட்டு, அந்த எண்களுக்கு அழைப்பு விடுக்க நினைத்தவளின் முகம் சுணங்கியது.
"என்னாச்சு?"
"சுத்தமா சிக்னலே இல்ல." என்று அலைபேசியை இப்படியும் அப்படியுமாக உயர்த்திப் பிடித்து பார்த்துக் கொண்டே, "ப்ளீஸ்... உங்க மொபைல்ல டவர் கிடைக்குதானு பாருங்கோளேன்..." என்றாள்.
எழுந்து நின்று ஜீன் பாக்கெட்டைத் துழாவியவன், "மொபைல்? வேர் இஸ் மை மொபைல்?" என்று குழம்பினான்.
'என்னடா இது சோதனை?' என்றெண்ணியவள், "நன்னா பாருங்கோ சார்!" என்றாள், பதட்டமாக!
"இல்லைங்க! பார்த்துட்டேன்."
"இங்க எங்கயாவது விழுந்து கிடக்கறதானு தேடுவோம்." என்று விட்டு நீள்விரிக்கையை சுற்றி வந்து தேடினர்.
ஐந்து நிமிடத் தேடலுக்குபின் ஏமாற்றமாய் நிமிர்ந்தவள், "காணலயே… சரி! நீங்க யாரு? இங்க எப்டி வந்தேள்? ஆத்துல வேற யாரும் இல்லயா?" எனக் கேட்க,
"ம்ம் யாரும் இல்ல போலவே…" என்று சுற்றிலும் பார்த்துவிட்டு, "நான் எப்டி இங்க வந்தேன்னே தெரியலங்க. ஃப்ரெண்ட்க்கு உடம்பு சரியில்லனு கால் வந்தது. சரினு கிளம்பினேன். பாதி வழில வரும் போது லைட்டா ஹிட் ஆகி பைக்ல இருந்து விழுந்துட்டேன். அப்புறம் என்னாச்சு தெரியல. முழிச்சு பார்த்தா இங்க இருக்கேன்." என்றவன் கவலையாக, தலையைப் பிடித்துக்கொண்டு மீண்டும் சோஃபாவில் அமர,
"அப்போ நீங்க பைக்ல இருந்து விழும் போது மொபைலும் கீழ விழுந்துடுத்தோ என்னவோ..." என்று ஊகம் செய்தாள் ஆரவி.
"ஹ்ம்ம்... இருக்கும்! ஆனா யார் என்னை இங்கே கொண்டு வந்திருப்பாங்க? ஒருவேளை கிட்னி திருடங்களா இருப்பாங்களோ?" என்று அவன் கேட்கவும், ஆரவி பேயறைந்ததைப் போல முழித்துக்கொண்டு நின்றாள்.
'முதலில் இங்கிருந்து வெளியே போய்த் தொலை!' என்று மூளை பரபரப்பாகக் கட்டளையிட்டது. அதை செயல்படுத்த நினைக்கையில் ஆரவியின் அலைபேசிக்கு மீண்டும் ஓர் அழைப்பு வந்தது.
Comments
Post a Comment