ஸ்கார்பியோ காதல்🚗💌 - 5.1

ஸ்கார்பியோ காதல்

 



அத்தியாயம் 5


ஸ்வேதாவிற்கு ரொட்டியையும் மாத்திரையும் எடுத்துக் கொடுத்த கையுடன், அவர்களுக்கு தனிமைக் கொடுக்கிறேன் பேர்வழியென்று பக்கவாட்டில் தெரிந்த குறுகிய தடத்தில் மெதுவே விழிகளைச் சுழற்றியபடி நடந்தாள் அம்ருதா. அவளுக்கு செடிகளின் அருகே சென்றாலே ஒவ்வாமை காரணமாக தோலில் அழற்சி ஏற்படுவதுண்டு. கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் பட்டால் தோலில் ஏற்படும் தடிப்புகளுடன் தான் அடுத்த இரு நாட்களும் கழியும். அதனால் அந்த இருட்டில் செடிகளின் அருகே செல்லாமல் கைகளை உடலோடு குறுக்கி வைத்து நிரம்ப கவனத்துடன் மெதுவே நடந்தாள். 


அவள் அணிந்திருந்த கழுத்தை‌ மூடிய (halter neck) மேல் சட்டையும் பென்சில் ஜீன்ஸூம் ஸ்னிக்கர்ஸூம் எவ்வித இடையூறுமின்றி அவள் நடக்க வழிசெய்தது. ஓரிடத்தில் மின்மினி பூச்சிகளைக் கண்டு, அந்த மருத்துவப் பெண்ணின் இமைகளும் இதழ்களும் சந்தோஷத்தில் மலர்ந்தன. கண்முன் தென்படும் காட்சியைப் படம் எடுப்பதற்கு அனிச்சையாக அலைபேசியைத் தேடி, அது வாகனத்தில் இருப்பது புரிந்து, நின்ற இடத்திலிருந்தே எட்டிப் பார்த்தாள்.


விளக்கு வெளிச்சத்தில் அண்ணனும் அண்ணியும் உள்ளே அமர்ந்திருப்பது தெரிந்து, மீண்டும் திரும்பி மின்மினிகளிடம் பரிபாஷை நடத்தியவளுக்கு அதனைத் தன் கரங்களுக்குள் பொத்தி வைத்துக்கொண்டு, ஒற்றை விழி வழிப் பார்த்து கொஞ்சி பேசிட ஆசை வந்தது. மகிழுந்தில் கைப்பையில் தோல் அழற்சிக்கான மருந்து இருப்பதை நினைவுபடுத்திக் கொண்டவள், மெதுவே எதிர்ப்பட்ட செடிகளை விலக்கி ஆங்காங்கே சேற்றில் அமிழ்ந்து கிடந்த கற்களில் கால் வைத்து முன்னேறினாள்.


ஒரு பக்கம் புதர் போல் முள்செடியின் மேல் அடர்ந்து சுற்றியிருக்கும் காட்டுக்கொடிகள். மற்றைய பக்கம் வரிசையிலல்லாத, பெயர் தெரியாத பருத்த மரங்கள்! கால் வைக்கும் இடங்களிலும் கற்களுக்கு நடுவே கணுக்கால் வரை தலை தூக்கியிருக்கும் குற்றுச்செடிகள்! 


நடக்கும்போதே விஷ ஜந்துக்கள் ‘ஸ்னிக்கர்ஸ்’ அணிந்திருக்கும் காலில் ஏறிவிடுமோ என்ற பயம் உள்ளங்கால்களைக் குறுகுறுக்க வைத்தாலும், மின்மினிகள் மினுக்கி மினுக்கி அவளை ஈர்த்தன. நடக்க நடக்கவே தூரம் புரிந்தது.


‘அங்கே இருந்து பார்க்கும்போது பக்கத்துல தெரிஞ்சதே!’ எனத் தலையைச் சொரிந்தவள் திரும்பிப் பார்க்க, பல அடி தொலைவு வந்துவிட்டது தெரிந்தது.


‘நேரங்கெட்ட வேளையில் முட்டாள்தனம் செய்கிறாய்.’ என்று அறிவு எச்சரித்தாலும், ‘இன்னும் கொஞ்ச தூரம்தான்!’ என்று சமாதானம் செய்துகொண்டு மேலும் முன்னேறினாள். அடுத்த நிமிடத்தில் அவளைச் சுற்றி மின்மினிகள் பறந்தன. சிட்டுக்குருவி போல் தலை திருப்பி பரவசத்தில் ஆழ்ந்த அம்ருதாவை அப்போது பார்த்தால், அந்த இருளின் பிண்ணனியில் புன்னகையால் நம்மை வசீகரித்து, மெய்நிலை மறக்கச் செய்யும் தேவதையொருத்தியைப் பார்க்கும் பாக்கியம் கிட்டும்.


இங்குமங்கும் தலை திருப்பி விழிகள் விரித்து நின்ற அந்த தேவதைப் பெண்ணின் கவனத்தை தன்புறம் திருப்பியது, பெரிய சிவப்பு நிற மின்மினிப் பூச்சி ஒன்று! 


இல்லை…


அது மின்மினிப் பூச்சி அல்ல! வேறு ஏதோவொரு விளக்கு… ம்ஹூம்! இன்னும் சற்றே ஊன்றி கவனித்தால்… அங்கே ஏதோ ஒரு வாகனம் நிற்பது தெரிந்தது. பின்புறத்தின் ஒற்றைப் பகுதி மட்டும் பார்வைக்கு கிடைத்ததால் அந்த சிறிய விளக்கை மின்மினிப் பூச்சியின் வெளிச்சம் என்று எண்ணிவிட்டாள்.


‘இந்த இடத்துல எவன்டா வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திருக்கான்?’ என அனிச்சையாகத் தோன்றிய ஆர்வத்தில் சற்றே முன் நகர்ந்து வந்து பார்க்க, அம்ருதாவின் பார்வை உறைந்தது, அந்த மஹிந்திரா ஸ்கார்பியோவின் பின்புறத்தைக் கண்டு!


இருட்டில் வாகனத்தின் எண் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அது ‘அதுதான்’ என்று இவளுக்கு தெரியாதா என்ன? சீரான பாதையில்லாத, புதர்களும் மரங்களும் அடர்ந்திருக்கும் இவ்விடத்திற்குள் வாகனத்தை செலுத்தி வந்திருக்கிறானென்றால் அது அவனாகத் தான் இருக்கக்கூடும் என்று தீர்மானமாகவே நினைத்தாள். 


‘மலையோ, காடோ, மேடோ எங்கேயும் அவன் ஓட்டுவான்!’


அதன்பின் விழிகள் கவனத்துடன் கீழே சுற்றும்முற்றும் சுழல, பாதம் புத்தியிடம் அனுமதியே வாங்காமல் முன்னேறியது. பத்தடி தொலைவு நடந்த பின்னர் புத்தி விழித்துக்கொண்டு எச்சரிக்கை செய்ய, நிமிர்ந்து பார்த்தவளை, ‘அவன் முகத்தைப் பார்க்கணுமே!’ என்ற ஆர்வம் உந்தித் தள்ளியது.


ஒருவேளை அண்ணி சொன்னதைப் போல் கிழவனாக இருந்தால்?


‘இருக்கட்டுமே!’


காமுகனாக இருந்துவிட்டால்? 


மனத்தில் மெல்ல மெல்ல பயம் சூழ்ந்தது.


‘யாராக இருந்தாலும் நீ இப்போது இவ்விடத்தில் நிற்பதே உசிதமில்லை.’ என்று அறிவுக்கு புரியவே செய்தது.


இருட்டில் தப்பு செய்பவர்களாகக் கூட இருக்கலாம். ‘போய்டு அம்ரு!’


நிசப்தமான நெஞ்சுக்குள் கடிகார முள்ளின் சப்தம்! வியர்க்கும் தேகத்திடம் மழைக்காற்று தோற்றுப் போனது. மழையின் நசநசப்புடன் ஸ்கார்பியோவின் வெளிச்சத்தைத் தவிர, இருள் சூழ்ந்திருந்த அந்த இடம் அமானுஷ்யமாகத் தெரிந்தது. 


புறவழிச்சாலையில் இறக்கையில்லாமல் பறக்கும் வாகனங்களின் வெளிச்சத்தை உள்ளே விடாது அடர்ந்திருக்கும் புதர்களும், தலைக்கு மேல் பறக்கும் வௌவால்களின் சப்தமும், இன்னும் நடுக்காட்டின் உள்ளே எங்கோ ஆழத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த பறவைகளின் சீரற்ற ஒலியும் தலை விரிகோலமாய் கிளை விரித்து நின்ற மரங்களும் காட்டுப் பூச்சிகளின் சப்தங்களுமென அவ்விடம் மிகுந்த அமானுஷ்யமாக இருந்தது. மீண்டும் எந்த கணத்திலும் மழை சிந்தத் துவங்கலாம் என்பதாகக் காற்றும் மின்னலும் ஆரூடம் சொன்னது.


அறிவு சொல்வதைக் கேட்காமல் அம்ருதா அங்கேயே நின்று ஸ்கார்பியோவை அவதானித்தாள். இன்னும் இருபதடி தொலைவு சென்றால் அவ்வாகனத்தைச் சமீபித்துவிடலாம். உள்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. அப்படியோர் நிசப்தம்! ஆக, தப்பு நடப்பதாக தெரியவில்லை.


இடப்புறம் கதவு திறந்திருப்பது தெரிந்தது. வேறு எந்த அசைவும் தெரியவில்லை. ஆட்கள் வேறு எங்கும் ஒளிந்திருக்கக் கூடுமோ என்று சுற்றிலும் பார்த்தாள். ‘நீ வர போறன்னு முன்னாடியே தெரியுமா என்ன?’


‘அதானே!’ மனதோடு பேசியபடி பார்க்க, காற்றின் சின்ன வேகத்திற்கு செடி, கொடிகளின் அசைவுகளைத் தவிர வேறு சலசலப்பு ஏதுமில்லை.


ஒருவேளை உள்ளே யாருக்கும் ஏதேனும் ஆபத்தாக இருந்தால்? 


இப்படி சிந்தித்த மாத்திரத்தில் அதற்குமேல் அந்த மருத்துவப் பெண்ணால் சும்மா நின்று கொண்டிருக்க முடியவில்லை.


நெஞ்சுக்குள் ‘திக் திக்’ என பயம் துடித்தாலும், கண்களில் மிகுதியாய் இருந்த ஆர்வம் மட்டுமே முன்னேறச் செய்தது. மீண்டும் ஈர மண்ணில் சப்தமெழுப்பாது ஸ்னிக்கர்ஸ் பாதம் நகர, ஸ்கார்பியோவின் அருகே வந்திருந்தவள் ஏதோவோர் ஜென்மத்தில் தொலைந்து போன பொருளொன்றைத் தழுவுவதைப் போல், விரல்கள் நடுங்க ஸ்கார்பியோவின் பின்புறத்தின் மீது வலக்கையைப் பதித்தாள்.


அவள் தொட்ட நொடியில் உள்ளிருந்து விசும்பல் சப்தம் கேட்டது. 


யாரோ அழுகிறார்கள்! கவிழ்ந்திருப்பதால் பின்னாலிருந்து பார்க்கும்போது தலை தெரியவில்லை போலும்.


பதித்திருந்த கரத்தை எடுக்காமல் அதனை வருடியபடியே நகர்ந்து, இடப்புறத்தில் பின்பக்கம் திறந்திருந்த கதவினருகே, “ஹலோ?” எனக் கேட்டவாறு வர, 


அரவம் உணர்ந்து உள்ளிருந்தவன் மின்னல் பிளந்ததைப் போல் பாய்ந்து வெளியே வந்து அவள் முன் நின்றான்.


‘ஹா!!’ வாய்வழி காற்றை உள்ளிழுத்து திடுக்கிட்ட அம்ருதாவின் தொண்டைக் குழியில் சிறு பள்ளமொன்று தோன்றி அவளின் அச்சத்தின் அளவைக் காண்பித்தது. அவன் தலைதாழ்த்தி அவளை உறுத்து விழிக்க, இழுத்த மூச்சை விடாமல் முதுகின்புறம் விரிந்திருந்த கதவில் மேலும் ஒன்றி சாய்ந்தாள்.


கதவில் இருபுறமும் கை வைத்து அம்ருவை நகர விடாமல் வைத்திருந்தவனின் முகத்தைத் தலை நிமிர்த்தி அவள் பயத்துடன் பார்த்திருக்க, “யாரு நீ?” என அதட்டலாகக் கேட்டான் அவன்.


வாகனத்தின் உள்ளிருந்து வந்த வெளிச்சத்தில் அவன்‌ முகத்தின் வலப்புறத்தை மட்டும் அரைகுறையாகப் பார்க்க முடிந்தது. தாடி அடர்ந்த முகம்! அவன் மூச்சுக்காற்றில் அவன் குடித்திருக்கவில்லை என்று தெரிந்தது. ஆனால் முகமும் விழிகளும் சிவந்திருந்தன. ஆக அழுததில் விசும்பல் சப்தம் இவனிடமிருந்து தான் வந்திருக்கிறது. பரட்டை தலையுடன் ஏதோவொரு மலையாள படத்தில் பார்த்த நாயகனை நினைவூட்டினான். ஓரிரு நொடிகளில் மூளை ஒருபுறம் அவனை அவதானித்துக் கொண்டிருந்தாலும் அம்ருதாவின் அச்சமும் அகலுவதாக இல்லை.


“யாருன்னு கேட்டேன்!” என்றவன் அடக்கப்பட்ட குரலில் உறுமிட, அம்ருவின் உடல் வெளிப்படையாக நடுங்கியது.


“நான்… நான்… சும்மா இந்தப் பக்கம்… அண்ணா அங்கே…” என்றவளின் கலங்கிய பார்வை தூரமாய்ப் படர,


பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு அவளிடமிருந்து நகர்ந்து நின்றான். “போ!”


‘போ!’ என்ற அவனின் தலையசைப்பை உலக மகா அதிசயம் போல் பார்த்த அம்ருதாவின் கால்கள் நகரவில்லை. ‘என்ன இவ்ளோ ஈஸியா போக சொல்லிட்டான்?’ என எண்ணமிட்டவளின் புத்தி அவனின் வயதை ஊகிக்க முயன்றது.


இப்போது அவன் முகத்தை நன்றாக பார்க்க முடிந்ததால், இருபத்து எட்டிலிருந்து முப்பதுக்குள் இருக்கலாம் என்று அவன் வயதைக் கணித்தாள். அண்ணி சொன்னதைப் போல் கிழவனில்லை என்று உள்ளம் சம்பந்தமேயில்லாமல்(?) சந்தோஷித்தது.


                                Next article 🚗

Comments

  1. அழகும், சுவாரஸ்யமும், மர்மமும் நிறைந்த அத்தியாயம்👁👁📖

    ReplyDelete

Post a Comment

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)