ஸ்கார்பியோ காதல்🚗💌 - 5.2

 

ஸ்கார்பியோ காதல்
Amrutha's crush on Scorpio's Boss🌷 


அத்தியாயம் 5.2


அவன் உடனே போக சொன்னதில் அவளின் பெரிய விழிகளில் இருந்த அச்சம் விடைபெற்றிருப்பதை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவள் ஆர்வமாக தன் முகத்தை, சிகையை அளவிடுவதையும், அவளே அறியாமல் அவள் விரல்கள் ஸ்கார்பியோவை வருடுவதையும் கண்டவன், “போக இஷ்டமில்லையா? அப்போ உள்ளே வர்றியா?” என்று இகழ்ச்சியாகக் கேட்க,


நொடியில் அம்ருவின் முகமும் அவளின் ஆர்வப் பார்வையும் மாறிவிட்டன. இதழ்கள் இறுகிட, அழுத்தமாக விழுந்த கன்னக்குழியும் விழிகளும் வலியைப் பிரதிபலித்தன. மௌனமாக திரும்பி நகர்ந்தவளின் பார்வை, எதேச்சையாக வாகனத்தினுள் கிடந்த வஸ்திரக் குவியலில் படர்ந்து நகர்ந்தது. 


சட்டென நின்று மீண்டும் அங்கே பார்க்க எத்தனிக்க, அவளை அந்தப் பக்கம் திரும்ப விடாமல் ஒற்றைக் கையால் அவளை வெடுக்கென இழுத்து சுழற்றி தன்புறம் திருப்பியிருந்தவன், தன் நெஞ்சோடு ஒட்டிக் கொண்டவளைப் பிரித்து பாதைக் காட்டி திருப்பி, இரு கைகளால் அவளது தோள்களை அழுத்தி, “போன்னு சொன்னேன்!” என்று தள்ளினான்.


அவனைப் பொருட்படுத்தாத நம் மருத்துவப் பெண், இரும்புக் கொல்லனிடம் தன் கரம் நீட்டி, ‘இந்தா ஒரு சூடு வை!’ என்பதாக தன் பிரதாபத்தை பிரஸ்தாபித்தாள். “உள்ளே… உள்ளே பேபி… என்னாச்சு பாப்பாவுக்கு? சொல்லுங்க, நான் டாக்டர் தான்! இப்போ பீடியாட்ரிக் டிபார்ட்மெண்ட்ல பிஜி ட்ரெயினிங்ல இருக்கேன். ஐ கேன் ட்ரீட் சர்!”


இத்தனை நேரம் அவளை அங்கிருந்து கிளப்பிவிட நினைத்தவன், அவள் குழந்தைகள் நல மருத்துவம் படிப்பவள் என்று சொன்னதும் கீற்றாய்ப் புன்னகைத்தான். “டாக்டர்?” எனக் கேட்டவனின் புருவங்கள் வசீகரமாக உயர்ந்தன.


வாகனத்தை விட்டு நகர்ந்திருந்ததால் இருளில் அவனின் அச்சுறுத்தும் அந்த சிரிப்பும், அதற்கெதிரான வசீகரமும் அம்ருதாவின் விழிகளைச் சென்று சேரவில்லை.


“ம்ம், ஆமா! சென்னை கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல தான் ட்ரெய்னீ டாக்டரா இருக்கேன்.” என்றவள் ஸ்கார்பியோவை சமீபித்தபடி, “என்னாச்சு? உடம்பு சரியில்லைன்னா உடனே ஹாஸ்பிடல் கொண்டு போயிருக்கலாமே? இங்கே ஏன் நிறுத்திருக்கீங்க?” என்றவள், ஒரு மருத்துவராக பின்னிருக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை குனிந்து ஆராய்ந்தாள்.


அவன் கண்களில் சோகத்துடன் மெதுவாக அவளருகே சென்று நிற்க, வெளியே நின்றபடி உட்பக்கம் குனிந்திருந்த அம்ருதா சட்டென்று உடல் விறைத்து நிமிர்ந்தாள். 


அந்த பெண் குழந்தைக்கு மூன்று வயதிருக்கலாம். மூக்கிலிருந்து வழிந்திருந்த செந்நிற திரவம் உறைந்திருக்க கண்மூடியிருந்தாள் குழந்தை. முதலில் அந்த உறைந்த திரவத்தைப் பார்த்துதான் அம்ரு பதறினாள். இப்போது குழந்தையின் உடலைத் தொட்டதுமே புரிந்து போனது, அந்தக் குழந்தை உயிர் துறந்து சில மணி நேரங்கள் ஆகியிருக்கிறது என்று!


ஒரு நொடி அவன் மேல் சந்தேகம் கொண்டு விருட்டென நிமிர்ந்து திரும்பினாள். 


அவன் பார்வை குழந்தையின் மீது நிலைத்திருந்தது. கண்கள் கண்ணீரை வெளியிட சின்னதாய்ப் புன்னகைத்தான். “தூங்கிட்டா! எ… என் பொண்ணு தூங்கிட்டா டாக்டர். என்னை விட்டுட்டு… என்னைத் தனியா விட்டுட்டு அவ மட்டும் தூங்கி…”


தடுமாறிய அவன் குரல் விசும்பியது. மேற்கொண்டு பேச முடியாமல் தேம்பினான். அவனது கண்ணீரைக் கண்ட அம்ருவின் சந்தேகம் அங்கேயே மடிந்து போனது. “உங்க பாப்பாவா?”


தலைகுனிந்து அழுது கொண்டிருந்தவன், “ம்ம்!” எனத் தலையசைத்தான்.


“எப்டி சர்? என்னாச்சு?”


சட்டென நிமிர்ந்து கண்ணீரை வேகவேகமாக துடைத்துக் கொண்டான். திரும்பி நின்று மூக்கை உறிஞ்சி, இதழ் குவித்து காற்றை வெளியேற்றியவன் மீண்டும் அம்ருதாவிடம் திரும்பினான். “நான் சென்னை. நீங்களும்?”


“ம்ம்!” என ஆமோதித்தாள்.


“தென் கேன் வீ மீட் அகெய்ன், டாக்டர்? இப்போ உங்களைத் தேட மாட்டாங்களா?”


‘அச்சோ! அண்ணா!’ என்று சப்தம் வராமல் இதழசைத்தவள், “ஆனா நீங்க?” என்று குழந்தையை ஒருமுறை பார்த்துவிட்டு தயங்கி கேட்க,


மீண்டும் அவன் கண்ணில் நீர்! அதைப் பார்த்து இவளுக்கும் விழிகள் கலங்கியது. 


பயிற்சிகாலத்திலும் சரி இப்போதும் சரி, அம்ருதா மருத்துவமனையில் இதுவரை நோயாளி குழந்தைகளின் இறப்பினைப் பார்க்க நேர்ந்ததில்லை. அதனால் முதன்முறையாக பார்க்கும் இந்த இறப்பு அவளுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வாகனத்தினுள் குனிந்து குழந்தையின் தலை வருடினாள். முத்தமிட்டாள். 


கதவைப் பிடித்து நின்றவன் சொன்னான். “இதுக்கு மேல என்னால டிரைவ் பண்ண முடியும்னு தோணல. காலைல… காலைல ரீச் ஆனதும் மத்த விஷயத்தைப் பார்க்கணும். ரோட்டோரத்துல நின்னா நிறைய தொந்தரவு. அதான் உள்ளே விட்டுட்டேன்.”


“இஃப் யூ டோண்ட் மைண்ட், நான் டிரைவ் பண்ணட்டுமா சர்? நாங்களும் சென்னை தான் போறோம். அண்ணா கிட்ட சொன்னா ஹெல்ப் பண்ணுவான். இந்த மாதிரி இடத்துல எவ்ளோ நேரம் இப்டியே வச்சிக்கிட்டு…” எனும்போதே புதரினுள்ளிருந்து கீரியொன்று வந்து குதித்தோடி மறைந்தது.


அது திடுமென வந்து குதித்த அதிர்வில் லேசாகத் துள்ளி தள்ளி நின்றாள் அம்ருதா.


“டாக்டர் ஒரு ரிக்வெஸ்ட்…”


“சொல்லுங்க சர்.”


“ஸாரி டூ ஸே திஸ்! இட்’ஸ் மை பர்சனல். நீங்க இங்கே வந்ததையோ பார்த்ததையோ மறந்துடறது பெட்டர். யார்க்கிட்டேயும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” குரலில் கடுமையில்லை; ஆனால் அழுத்தமிருந்தது.


அவனின் வேதனை முகம் தன்னை, தன் உள்ளத்தை ஆழமாகத் தாக்குவதை பலவீனமாகக் கிரகித்தாள் அம்ருதா. பெருமூச்சுடன் தலையசைத்தவள் மீண்டும் திரும்பி குழந்தையிடம் குனிந்து, விரல் கோர்த்துக் கொண்டு, சில நொடிகள் அவள் முகம் பார்த்து சில துளி கண்ணீருடன் அவளுக்கான அஞ்சலியைச் செலுத்தினாள்.


அதைக் கண்டவனின் முகத்தில் ஏனோ வன்மப்பூச்சு! 


“ஆனா எப்டி சர்?”


“குட் யூ கிமீ யோர் நம்பர் டாக்டர்? ஐ’ல் கால் யூ லேட்டர் டூ எக்ஸ்ப்ளெய்ன்.”


அம்ருதா கொஞ்சமும் அவனைச் சந்தேகிக்கவே இல்லை. குழந்தைக்காக வருத்தம் கொண்டிருந்தவள், நீர் வழிந்த கன்னத்தைத் துடைத்துக்கொண்டு, தான் பணிபுரியும் அரசு மருத்துவமனையின் பெயரையும் தன் தனிப்பட்ட எண்ணையும் அவனுக்கு சொன்னாள்.


“தாங்க்ஸ் டாக்டர்.”


“ரொம்ப நேரம் இப்டியே இருக்கக் கூடாது சர். டீ கம்போஸ்ட்… ஐ மீன் முடிஞ்சளவு சீக்கிரம் கிளம்பிடுங்க.” 


“ம்ம், நீங்க போங்க.” என்று கதவைச் சாத்தியவன், இம்முறையும் அவளே அறியாமல் அவள் விரல்கள் ஸ்கார்பியோவை வருடியபடி நகர்வதைக் கண்டான். அதில் இயல்புத்தன்மை இல்லாததாலேயே, அவள் செய்கை அவன் கவனத்தில் பதிந்தது.


அவளைச் சேறும் சகதியும், கற்களும் புதர்களுமாய் இருந்த அந்தப் பகுதியைக் கடந்து ஒற்றையடிப் பாதையின் முகப்பு வரை பத்திரமாக அழைத்துச் சென்றான். அதற்குள் அவள் குழந்தையை நினைத்து பத்து முறை வாகனத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டாள்.


மரத்திற்கு அடுத்து சில அடித்தொலைவில், “அம்மூஊ! அம்முக்குட்டீஈஈ!” என்ற ஹரிஷின் குரல் கேட்ட நொடி, தூங்கிவிட்டு அவசரமாய் எழுந்த மாணவன் போல் மழை சடசடவென இறங்க ஆரம்பித்தது.


சட்டென இவன்புறம் திரும்பிய அம்ருதா இவன் கரத்தை இறுக்கிக்கொண்டு வேகமாகச் சொன்னாள். “ப்ளீஸ் சொல்றதைக் கேளுங்க சர்! உடனே கிளம்புங்க! ஐஸ் பாக்ஸ் கூட இல்லாம குழந்தையை இப்டி வச்சிட்டு இருக்கக்கூடாது. அனிமல்ஸ் நடமாடற இடம் மாதிரி தெரியுது. புரிஞ்சுக்கோங்க சர்.” 


அவளின் தவிப்பை, நீர் நிறைந்த விழிகளின் பளபளப்பை அந்த இருளிலும் தெளிவாகக் கண்டு, “சரி.” என்றவன், மழை நனைத்துக் கொண்டிருந்த அவளின் ஈர விரல்களைத் தன்னிலிருந்து வம்படியாகப் பிரித்தெடுக்க வேண்டியிருந்தது.


“சொன்னது ஞாபகமிருக்கட்டும். என் விஷயம் வெளியே போகக்கூடாது டாக்டர். ஃபர்கெட் வாட்‌ யூ ஸா!” என மீண்டுமொருமுறை நினைவுபடுத்தியவனுக்கு தலையசைத்துவிட்டு அண்ணனின் புறம் வந்தாள் அம்ருதா.


“டேய் அம்மு! எங்கடா போன?” என்ற ஹரிஷின் பரிதவிப்பான குரலையும் அதற்கு அம்ருதாவின் பதிலையும் கேட்டு திருப்தியடைந்த பின்னரே மகள் இருக்கும் ஸ்கார்பியோவை நோக்கி நகர்ந்தான், அம்ருதாவால் ‘சாலையின் தலைவன்’ என்று பெயர் சூட்டப்பட்டவன்!


திரும்பி நடந்தவன் உள்ளங்கையை விரித்து பார்க்க, மழை முத்துக்களுடன் ஓர் பெரிய முத்தாய் உருண்டு நின்றது, அம்ருதாவின் விரலுக்கு பொருந்தாத அந்த விலையுயர்ந்த பிளாட்டின மோதிரம்!


Clutch down, secrets up!


Previous article 🚗

Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)