ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)

 

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ
யமுனா 💌 ராஜீவன்


இரண்டாம் சந்திப்பு!

அன்று சரஸ்வதி பூஜை!

இங்கே இதெல்லாம் நாங்கள் நன்றாக கொண்டாடுவோம். அனைத்து அலுவலகங்களிலும் விஜயதசமியன்று புதுக் கணக்கு போடுவார்கள். 

வீட்டில் காலையில் இருந்தே வேலைகள் ஆரம்பித்துவிடும். வீட்டில் மட்டுமல்ல அலுவலகத்திலும் வேலைகள் ஜரூராக நடக்கும். அலுவலகத்தை சுத்தம் செய்வது முதல் சாயங்கால பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்கி வைப்பது வரை அனைத்திற்கும் அலுவலக ஆட்களே பொறுப்பெடுத்துக் கொள்வர். 

வீட்டில் அம்மாவோடு சேர்ந்து நாங்களும் ஐந்து வகை சுண்டல், விளாம்பழ இனிப்பு, ஊற வைத்த பச்சரிசியில் சீனியும் எள்ளுமாய் கலந்து நைவேத்தியத்திற்காக செய்து எடுத்துக் கொள்வோம். மாலையில் அப்பாவின் அலுவலகம் போய் பூஜை முடித்து, செய்த பதார்த்தங்களை அலுவலக ஊழியர்களுக்கு பரிமாறி, நாங்களும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு என அந்நாள் அத்தனை நிறைவாய் முடியும்.

அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கு பழங்கள், அரிசி பொரியோடு ஐந்து நாட்களுக்கான சம்பளமும் சேர்த்து தர, அவர்களின் முகங்களிலும் திருப்தியின் சாயல் கோடிட்டிருக்கும். அத்தோடு மறுநாள் விடுமுறையும் என்றால் கேட்கவும் வேண்டுமா?

ஒவ்வொரு வருடமும் அந்நாள் எங்களுக்கு விசேஷமாகத்தான் இருக்கும். ஆனால் அந்த வருடம் எனக்கு மட்டும் இன்னமும் விசேஷமாகிப் போனது, ராஜீவன் வருகையால்! 

விசேஷம் என்றாலே பெண்களிடையே அலங்கரிப்பும் அழையா விருந்தாளியாக வந்துவிடுமல்லவா? நான் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? 

அன்று பாவாடை தாவணி உடுத்தி, ஜிமிக்கி கம்மலைப் போட்டு கழுத்தை வளைத்தபடியே சரயுவிடம் அழகா இருக்கிறேனா இல்லையா என அரைமணிநேரம் தர்க்கம் செய்து விளையாடிக் கொண்டிருக்க,

"பொம்பளைப் பிள்ளைங்களை பெத்தா, நேரத்துக்கு போய் சேர முடியாதுங்கறது சரியாதான் இருக்குது." என்று அப்பா அதட்டல் போட்ட பின்னர் சத்தமின்றி கிளம்பினோம்.

ஆளுக்கொன்றாய் நைவேத்திய பாத்திரங்களைக் காரில் ஏற்றிக்கொண்டிருக்கையில், அப்பா அலைபேசியில் பேசும் உரையாடலைக் கேட்க முடிந்தது. 

"ஓ! ஆஃபீஸ் வந்துடறீங்களா சார்?"

"......."

"பரவால்ல, பரவால்ல! மெள்ளவே வாங்க. ஏழு மணிக்கு மேல தான் பூஜை போடுவோம். சரி சரி!" என்று வைத்துவிட்டு அம்மாவிடம், "கேரளா கம்பெனி ஆள் ஒருத்தரும் வர்றார். நாம முன்னாடி போய் வரவேற்கணும், சீக்கிரம்!" என்றவர்,

சட்டென தடுமாறிய என்னை, "சின்ன பாத்திரத்தைக் கூட தூக்கிட்டு நடக்க முடியலயா? என்ன பிள்ளையோ போ!" எனக் கடிந்தபடி என்னிடமிருந்த பாத்திரத்தை வாங்கிக்கொண்டார்.

எனக்கு தடுமாறிய கால்களோடு உள்ளமும் ஏனோ குறுகுறுக்கவே செய்தது. 'கேரளா கம்பெனி ஆள் என்றால் அவன்தானே? அவனைப் பார்த்து ஒரு மாதமேனும் இருக்குமல்லவா? நம்மூரில் அவனுக்கு இன்னும் என்ன வேலையாம்? இந்த மாதம் திரும்பவும் வந்திருக்கிறானோ? இந்த முறையாவது அவன் முன் எந்த கிறுக்குத்தனமும் செய்து வைத்து விடக்கூடாது.' என்றெல்லாம் என் போக்கில் அரைவேக்காட்டுத்தனமாய் அவனைப் பற்றிய சிந்தனையிலேயே அலுவலகம் போய் சேர்ந்தேன்.

அங்கே அவன் இன்னமும் வந்திருக்கவில்லை என்பதில் அப்பாவுக்கு பெரும் ஆசுவாசம்! 

"ம்ம்…ம்ம்! எல்லாத்தையும் உள்ளே எடுத்து வைங்க!" என அவசரப்படுத்தினார்.

"என்னவோ அவன் மாப்பிள்ளை மாதிரியும் இவர் பொண்ணு வீட்டுக்காரர் மாதிரியும்ல அலப்பறையைக் கூட்டுறார்!" என்று முணுமுணுப்பாய்ப் பொருமினாள் சரயு.

'அவன் மாப்பிள்ளையாக இருந்தால் எப்படியிருக்கும்?' என் முகம் மலர்வதை என்னால் உணர முடிந்தது. மிகுந்த பிரயத்தனம் செய்து சாதாரணமாக இருக்க முயற்சித்தேன்.

வேலையாட்கள் இருவர் வந்து உதவ, அனைத்தையும் சுவாமிப்படங்கள் முன் வைத்துவிட்டு, ஜனனி அம்மாவோடு நின்று கொண்டாள். நானும் சரயுவும் அலுவலகத்தின் பின்பக்க வாசலுக்கு போனோம். அப்பா அலுவலகத்தை மூன்றாகப் பிரித்து வைத்திருப்பார். 

முதல் அடுக்கு வேதிப்பொருட்கள் விற்பனை கடை! இரண்டாம் அடுக்கு அலுவலகம். அலுவலகம், கடை எல்லாம் எங்களுக்கு ஒன்றே தான்! அதனையடுத்துள்ள இரு பெரும் அறைகளில் வேதிப்பொருட்கள் விதவிதமான போத்தல்களிலும் பாக்கெட்டுகளிலும் அளவு வாரியாக அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதற்கும் பின்னால் கடைசி அடுக்கில் அமில வகைகள் பெரிய பெரிய பேரல்களில் வைத்திருப்பார். 

இது அப்பாவுடைய தாத்தா காலத்து கட்டிடம் என்பதால் ஊர் மத்தியில் நல்ல வசதியாக நீள அகலத்தோடு இருக்கிறது. இந்தக் கட்டிடத்தின் மீது அப்பாவுக்கு பெரும் பிரேமை உண்டு. அவர் தாத்தா இதை வாங்கும்போது ஆறாயிரம் ரூபாயாம். இப்போது முன்புற வாயிலில் உள்ள பெரிய தேக்குக்கதவு மட்டுமே அறுபது லட்சம் போகுமாம். சொல்லி சொல்லி பெருமைபட்டுக் கொள்வார்.

அலுவலகத்தில் வேலைக்கு இருக்கும் பெண்கள் ஒரே போல உடையுடுத்தி வந்திருந்தனர். மொத்தமாய் பத்து பேரையும் ஒரே இளஞ்சிவப்பு புடவையில் பார்த்ததுமே மனம் பளிச்சென ஓர் பூங்கொத்தைப் போல் மலர்ந்துவிட்டது. அவர்கள் பூஜைக்காக என்று பேசி வைத்து ஒரே வடிவமைப்பு கொண்ட புடவைகளை எடுத்ததாகச் சொன்னார்கள்.

நானும் சரயுவும் இரண்டாம் அறைக்கு போக, அங்கே மேனேஜர் கம்ப்யூட்டர் மானிட்டர், சிபியூ, யூபிஎஸ் என அனைத்து அலுவலக பொருட்களுக்கும் சந்தனம், குங்குமமிட்டு மல்லிகைப் பூவை சொருகி வைத்திருந்தார். எங்களிருவருக்கும் சிரிப்பு தாளவில்லை. அப்பாவின் முறைப்பையும் கண்டு கொள்ளாமல் நாங்கள் மேனேஜரை டேமேஜராக்கி, கிசுகிசுப்பாகக் கிண்டலடித்தப்படியே சுற்றி வந்தோம்.

சட்டென அப்பாவிடம் ஓர் பரபரப்பு! அதே பரபரப்புடனே, "வாங்கன்னு கூப்பிடணும். கிண்டல் செய்யாம மரியாதையா பேசணும்." என்று எங்களிருவரையும் எச்சரித்துவிட்டு வேகமாக முன்னறைக்கு சென்றார். 

சரயு, "கிண்டல் பண்றோமாம்." என்று உதட்டை இகழ்ச்சியாய் வளைத்தாள்.

"வீட்டுக்கு வர்ற ஒருத்தரையும் விட்டு வைக்காம, பாரபட்சமில்லாம சிரிச்சுக்கிட்டே காலை வாரிவிடற! உன்கிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கணும் தானே?"

"நீ ரொம்ப யோக்கியம்?"

"உன் கூட சேர்ந்து தான்’டி நானும் கிண்டலைக் கிட்நாப் பண்ணேன்."

"போதும், ரொம்ப பேசாதே! கிண்டல் பண்ணாம வெல்கம் பண்ணுவோம், வா!" என்றவள், சட்டென திரும்பி, "ஆமா அன்னிக்கு அவர் பேரு என்னன்னு சொன்னார்?" எனக் கேட்க, அத்தனை நேரம் காற்றுக்கு வலிக்குமளவு பேசிக்கொண்டிருந்த என் குரல் மென்மையிலும் மென்மையாக மாறி, "ராஜீவன்." என்றது.

அப்போது சரயு என்னைப் பார்த்த பார்வையில் நிச்சயம் ஆராய்ச்சி இருந்தது. அதை உணர்ந்தும் அவள் விழிகளைச் சந்திக்காமல், அவளைத் தாண்டி முன்னறைக்கு சென்றுவிட்டேன் நான்.

அப்பாவும் அம்மாவும் அவனோடு பேசிக்கொண்டிருக்க, ஜனனி ஒருபுறம் அமைதியாக நின்றிருந்தாள். அவன் முன் மென்பானம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. 

என்னைப் பார்த்ததும், "ஹாய்" என்றான். அன்றைய நிகழ்வை நினைவில் வைத்திருக்கிறானாம், இதழ்கள் மென்னகைக் குறும்பில் குவிந்தது.

"ஹாய்!" 

எப்படி இருக்கிறாயென கேட்க நினைத்தாலும், என் நாக்கு சோம்பேறியாய்ப் படுத்துக்கொண்டு அப்பாவிடம் உஷ்ண மூச்சை வாங்கித் தந்தது. நல்லவேளை ஆபத்பாந்தவளாய் சரயு வந்து என்னைக் காப்பாற்றினாள். அவளே எனக்கும் சேர்த்து அவன் சௌக்கியத்தை விசாரித்து அப்பாவிடம் நல்ல பிள்ளை என்ற மெச்சுதல் பார்வையைப் பெற்றுக்கொண்டாள்.

ஏனோ அவன்முன் நிற்பது மிகக் கடினமானப் பணியாகத் தோன்றியதால் அனைவரையும் அழைத்து வருகிறேனென நைஸாகக் கழன்றுகொண்டேன். 

ஜனனிக்கு நல்ல குரல் வளம். சிறுவயதிலிருந்து இசையும் பயின்றிருக்கிறாள். அவளை அம்மா பாடச் சொல்ல, அம்மன் பாடலொன்றைப் பாடினாள். 

என் கோரிக்கையில்,

"கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில்
கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில்

கண்டதுண்டோ கண்ணன் போலே சகியே….
வானமுகில் போலும் மேனி வண்ணம் கொண்டான்
நானிலம் மயங்க கானம் பயில்வான்
ஆயர்பாடி தன்னில் ஆனிரைகள் மேய்ப்பான்
நேயமாகப் பேசி நெஞ்சம் புகுவான்…" என்று கண்ணனைப் பாடினாள். 

அவளை ராஜீவன் அழகாக பாடுகிறாய் எனப் பாராட்ட, அப்பாவிற்கு பெருமை தாளவில்லை. பூஜை நேரத்தில் அப்பாவின் செயல்முறைகளை ஆர்வமாய்ப் பார்த்திருந்தான். இடையிடையே மேனேஜரிடம் சில பூஜை பொருட்களைக் குறிப்பிட்டு அதற்கு தமிழில் என்னப் பெயரென மென்குரலில் கேட்டுக்கொண்டிருந்தான்.

கடவுளர்கள் முன்னிருக்க, என் கருவிழியிரண்டிலும் அவன் பிம்பத்தின் வாசங்களே அப்பிக் கிடந்தன. முன்னிருப் பற்களோடு அழுந்தும் இதழ்களில், விரியும் அவன் சின்னப் புன்னகைக்கு என்ன சாயலைப் பூசலாமென மனதோடு தீவிர ஆலோசனையில் இருக்கையில்,

மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்தவன் அப்படி சட்டென என் மீது பார்வையைத் திருப்புவானென சத்தியமாய் நான் நினைத்திருக்கவில்லை‌. 

பார்வையில் திரியைப் பற்ற வைத்து என் நெஞ்சாங்கூட்டிற்குள் அனுப்புவதைப் போன்று உள்ளுக்குள் சிலீரென்ற தகிப்பு! இதயம் துடிப்பதற்கு பதில் தலைகீழாய் சுழன்று தொலைந்ததைப் போல் ஸ்தம்பித்து நின்றேன்.

விழிகளை சுழற்றி, தொண்ணூற்றொரு டிகிரியில் தலை சாய்த்து சுவாமிப் படங்களின்புறம் காட்டினான். 

விருட்டெனப் பார்வையைத் தழைத்தவள், 'அடி முட்டாள் பெண்ணே!' என என் இடது கையால் நெற்றியில் அறைந்து கொள்ள, என்னவெனக் கேட்ட சரயுவிடம், ஊதுபத்தி வாசனை ஒத்துக்கொள்ளவில்லை என்பதைப் போல் பாவனை செய்து தப்பித்ததெல்லாம் என் தனித்திறமைதான்! 

ஒருவழியாக அப்பா பூஜையை முடித்துவிட்டார். அனைவருக்கும் சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது. திருநீற்றை வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டவள், வழக்கம் போல முகத்தின் முன் உள்ளங்கையைக் குவித்து கீழுதட்டால் காற்றை ஊதிவிட, நெற்றியில் அதிகப்படியாய் அப்பியிருந்த திருநீறு கண்களில் படாமல் பறந்துவிட்டது.

'யமுனா, யமுனா!' யாரோ காற்றுக் குரலில் அழைக்கின்றார்கள். யாரோ அல்ல, உனக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பரிச்சயமான அவன் விழிகள்தான் அழைக்கிறது என உள்ளுக்குள்ளிருந்து நெஞ்சம் பேரிரைச்சலாய் சப்தமிடுகிறது.

யாரும் என்னைக் கவனிக்கிறார்களா எனப் பார்த்துவிட்டு, மெதுவாக விழிகளை அவன்புறம் நகர்த்தினேன். அவன்தான்! என்ன செய்கிறான்?

என்னிடம் லேசாய் இமை தூக்கி, அவன் வெண்ணிற உள்ளங்கையைப் பார்க்கிறான். ஓஹோ! நெற்றியிலுள்ள திருநீற்றை எப்படி எனக்கு நானே ஊதிவிட்டேனென தெரிய வேண்டுமாம்!

அவனுக்காக மீண்டுமொருமுறை செய்து காட்ட, அவனும் அதேபோல் செய்துவிட்டு இமைகளை ஒருமுறை மட்டும் சிமிட்டினான். கற்றுக் கொடுத்ததற்கு நன்றியாம்! 

அவன் விழி பேசும் பாஷையை அரைநொடிக்குள் என்னமாய் மொழிபெயர்க்கிறது என்னுள்ளம்! விந்தைதான்!

பூஜை முடிந்து அனைவரும் சுண்டலையும் பச்சரிசியையும் வட்டமாக அமர்ந்து சுவைத்துக் கெண்டிருக்கையில், அலுவலகப் பெண்கள் விளையாடிய பாட்டுக்கு பாட்டு அன்றைய விசேஷத்திற்கு சுவாரஸ்யம் சேர்த்தது. நானும் சரயுவும் அவர்களோடு போய்க் கலந்துகொண்டோம்.

ராஜீவனிடம் அப்பா நம்மூர் விசேஷங்களைப் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தார். சரயுவும் கூட அவனோடு சகஜமாக உரையாடினாள்.

அன்று அந்த 'ஹாய்' ஐத் தவிர ஒரு வார்த்தை கூட அவன் என்னோடு பேசவில்லை. ஆனால் அவன் கண்கள் என் அந்தராத்மாவோடு பேசிக்கொண்டேயிருந்தன, புதுமையாய்; பூப்பூவாய்; பூஜை நேர ஆலாபனையாய்! 

அவனின் நேசப் பார்வைகள் தடவிய பொக்கிஷ நொடிகளோடு
சஞ்சாரம் செய்து நகர்ந்தன, என் நேரங்கள்!

நெஞ்சம் படபடத்தாலும் மீண்டும் மீண்டும் இமையுயர்த்தி, என்னுள் கவிதை வரையும் அந்தக் கண்களைச் சந்தித்தேன். முதன்முதலாய் மெய் கூசச்செய்யாத, என் விழிகளைத் தாண்டாத ஓர் ஆண்மகனின் பார்வை வீச்சை சந்தித்தேன். என்னுயிர் நடுங்க நடுங்க என்னுள் மழைத்தாரைகளை வார்க்கும் ஓர் மேகப் பந்தலை சந்தித்தேன்.

அன்றைய இறுதியில் எங்கள் பார்வைகளை 'தி ஷார்ப்' சரயு கூட கவனிக்காதபடி தேர்ச்சியடைந்திருந்தோம். கள்ளம் புகுந்து காதல் வளர்க்கிறதா? அன்றி, காதல் புகுந்து கள்ளம் வளர்க்கிறதா?

இருதயம் முறைப்படி துடிக்கவில்லை…
இதற்குமுன் எனக்கிது நிகழ்ந்ததில்லை!


ந்த கதை தற்போது அமேசான் கிண்டிலில் கிடைக்கிறது🍁🍂 கிண்டில் சந்தாதாரர்கள் கீழே உள்ள இணைப்பைத் தொட்டு கதையை வாசிக்கலாம் 📖✨





Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)