கருவறை கீதம் -4

 


அத்தியாயம் 4


வருடம் 2002


தன் கையிலிருந்த திருமண அழைப்பிதழை நம்ப இயலாமல் பார்த்தாள் மான்வி. “நான் அன்னிக்கு அவ்ளோ தூரம் சொல்லியும் கல்யாணம் செஞ்சுக்க போறியா அனு?”


“ம்ம்!”


“அப்போ ஆன்சைட்?”


“போகத் தான் போறேன். நான் என்னோட எல்லா கண்டிஷன்ஸையும் பாஸ்கர் கிட்ட சொல்லிட்டேன் மானு. அவரும் எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டார். தேர் இஸ் நோ ரீஸன் ட்டூ டெனி ஹிம் எனிமோர். சோ, கல்யாணம்ன்ற கான்ட்ராக்ட்ல சைன் பண்ணிட்டேன்.”


“வாட்எவர்! வாழ்த்துக்கள்.” என்றவாறு தோள் குலுக்கிவிட்டு நகர்ந்தாள் மான்வி.


பாஸ்கரன் அப்படி இப்படி என்று அனுராதாவைக் கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்திருந்தான். ஒரு சுபயோக சுபதினத்தில் அவர்கள் திருமணமும் நன்முறையில் நடந்தேறியது. இதில் எவரையும் விட அனுவின் அம்மா லட்சுமிக்குதான் நிரம்ப மகிழ்ச்சி.


அனு திண்டுக்கல்லில் இருந்து தன் வேலையைத் திருச்சிக்கு மாற்றிக்கொண்டாள். ஒப்பந்தப்படி தம்பதியர் இருவரும் குழந்தைப் பேற்றினை அனுவின் தொழில் பாதையின் (career path) பொருட்டு தள்ளி வைத்தனர். அனுவிற்கு படிப்பில், வேலையில் இருந்த புத்திசாலித்தனமும் பக்குவமும் வாழ்க்கையில், மனிதர்களைப் படிப்பதில் இல்லாமல் போனது. இருந்திருந்தால் இப்படியோர் ஒப்பந்தத் திருமணமே அவளுக்கு நடந்தேறியிருக்காதே!


ஆக, திருமணத்திற்கு பிறகு கணவனின் அன்பில், காதலில் திளைத்தவளால் புகுந்த வீட்டில் மாமியாரிடமும் உறவுகளிடமும் தாக்குபிடிக்க இயலவில்லை. தொட்டதற்கெல்லாம் சுணங்கினாள், அந்த பக்குவமற்ற மருமகள்.


பாஸ்கரன் வீட்டில் அவனின் பெற்றோர் மற்றும் தங்கை நிர்மலா தவிர்த்து, தூரத்து உறவில் ஒரு சித்தியும் உடன் இருக்கிறார். அப்பா கலியபெருமாள் அரசாங்க ஊழியர். பரம்பரை சொத்துக்கள் ஏராளம் உண்டு. அம்மா மங்கையர்க்கரசி இல்லத்தரசி. நிர்மலாவிற்கு படிப்பில் நாட்டமில்லாத காரணத்தால் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, இதோ கல்யாண வயது வரை தையல் வகுப்பு போய் வந்து கொண்டிருக்கிறாள். மீத நேரங்களில் வீட்டில் அம்மா, சித்தியுடனும் அவர்களது உபதேசங்களுடனும் பொழுது கழியும். ஆக நிர்மலா குணத்தில், அம்மாவும் சித்தியும் கலந்த கலவை! அனு சொல்வதைப் போல் ‘கன்ஸர்வேடிவ்’.


பாஸ்கரனின் திருமணத்திற்கு முன்பே நிர்மலாவிற்கு வரன் பார்த்திருந்தனர். உறுதி செய்து கல்யாண தேதியைக் குறித்துவிட்டு வந்த சில நாட்களில் மாப்பிள்ளையின் அம்மா தவறியதால், ஒரு வருடம் கழிந்த பின்னர் சுப நிகழ்ச்சியை நடத்தலாம் என்று பேசி வைத்திருக்கின்றனர்.


இதற்கிடையில் பாஸ்கரனுக்கு வயதாகிக் கொண்டே போவதால் அவனுக்கு முதலில் திருமணம் செய்வித்துவிடலாமென, அவனுக்காக வீட்டினர் பார்த்தவள்தான் அனுராதா.


பாஸ்கருக்கு அனுவைப் பார்த்து, ஜாதகப் பொருத்தம் பார்த்து அனைவருக்கும் அவளைப் பிடித்த பின்னர், ஒரு நல்ல நாளில் பெண்ணை நேரில் பார்த்து திருமணம் உறுதி செய்துகொள்ளலாம் என்ற நிலையில், அனுவின் அம்மா அழைத்து தன் மகளின் கோரிக்கை(?) என்று கோரமான ஓர் விடயத்தை முன் வைக்க, ‘இது சரி வராது’ எனப் பட்டென்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தார் பாஸ்கரனின் தந்தை கலியபெருமாள்.


தன் வம்சம் தழைக்க கறிவேப்பிலைக் கொத்தாக ஒற்றை ஆண் பிள்ளையை வைத்திருப்பவர், எப்படி குழந்தைப் பெற்றுக் கொள்ளமாட்டேன் எனும் பெண்ணை அவனுக்கு மணம் முடிக்க சம்மதிப்பார்? அதையே குடும்பத்தினரிடமும் சொல்லி வேறு பெண் பார்க்கலாம் என்று சொல்ல, அதை பலமாக மறுத்தான் பாஸ்கரன்.


“யோசிக்கலாம்ப்பா. அவ ஏன் திடீர்னு இப்டி சொல்லணும்?”


“அதெல்லாம் நமக்கு எதுக்குடா? இப்பவே இப்டி சொல்றவ கல்யாணத்துக்கப்புறம் என்னென்ன கண்டிஷன்ஸ் போடுவாளோ!” 


“இதுக்குத்தான் வேலைக்கு போற பொண்ணு வேணாம்னு சொன்னேன். வீட்டு வேலை செஞ்சுக்கிட்டு உள்ளேயே கிடந்தா தான் புருஷனோட அருமை தெரியும். சொன்னா இவன் எங்கே கேட்கறான்!” என நொடித்துக்கொண்டார் அம்மா மங்கை. சித்தி காமாட்சி அதை ஆமோதிக்க, பெரியவர்கள் சொல் ஒருபோதும் தவறாகாது என்ற எண்ணத்தில் நடப்பதை அமைதியாகப் பார்த்திருந்தாள் தங்கை நிர்மலா.


“அது அவளோட பேஷனா இருக்கலாம்மா. அதோட இனி வர்ற காலத்துல ரெண்டு பேரும் வேலைக்கு போனா தான்ம்மா முடியும்.”


“பிள்ளையே இல்லாம யாருக்காகடா ரெண்டு பேரும் சம்பாதிக்கணும்?”


“அம்மா! அதுக்குத்தானே ஒரு முறை பேசி பார்க்கறேன்னு சொல்றேன்?” பாஸ்கரன் அவன் பிடியிலேயே நின்றான்.


எப்போதும் ஊமையாக இருந்தே காரியம் சாதிக்கும் கலியபெருமாள் இன்று எகிறிக்கொண்டு வந்தார். “என்னத்தைடா பேசப் போற? இந்த வீட்டோட ஒரே ஆண் வாரிசு நீதான் பாஸு. உனக்கு பிள்ளைங்க இல்லாம நம்ம வம்சம் விருத்தியடையாம போகணுமா?”


“அதைத்தான் நான் அவக்கிட்ட பேசறேன்னு சொல்றேன்ப்பா. அவ கண்டிஷன் போட மாதிரி எனக்கும் போட தெரியாதா என்ன?”


“பாஸு…”


“ஒரு பொண்ணைப் பார்த்து, அவளைப் பிடிச்சு, அவ தான் என் பார்ட்னர்ன்னு டிஸைட் பண்ணப்புறம், இப்போ ‘வேணாம். வேற பொண்ணைப் பார்த்து பிடிச்சிருக்குதுன்னு சொல்லு’ன்னு சொன்னா என்னால எப்டிப்பா முடியும்?”


“.....”


“நீ பேசினா மட்டும் அவ பிள்ளை பெத்துக்க தலையாட்ட போறாளாடா?” - சித்தி.


பளிச்செனப் புன்னகைத்து, “கண்டிப்பா ஒத்துக்குவா சித்தி. என் பிள்ளைக்கு பேரு செலக்ட் பண்ணி வை!” என்றான்.


பின் ஒருவாறாக அனைவரையும் பேசி பேசி கரைத்தான். பின்னர் அனுவைச் சந்தித்து உடன்படிக்கை என்ற பெயரில் அவளையும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்தான்.


இப்படியாக வீட்டினரை மல்லுக்கட்டி, சரிக்கட்டி அனுவைக் கல்யாணம் கட்டியிருக்கிறான் பாஸ்கரன். இப்போது அனுதினமும் அக்கப்போராக இருந்தாலும் அதையும் சிரமேற்று பரிசல் செய்கிறான்.


“என்ன பாஸ்கர் இது? குடிக்கறதுக்கு மினரல் வாட்டர் வாங்கச் சொன்னேன். அது அவ்ளோ பெரிய தப்பா என்ன? இதுக்கு போய் கலெக்டர் வேலை பார்க்கற உனக்கு முனிசிபாலிட்டி தண்ணி குடிக்க கஷ்டமா தான் இருக்கும்ன்னு ஆரம்பிச்சு, நான் பொறுப்பைத் தட்டிக் கழிக்காம கஷ்டப்பட்டு பெத்து, வளர்த்த பிள்ளை இந்த முனிசிபாலிடி தண்ணி குடிச்சு வளர்ந்தவன்தான் அப்டி இப்டின்னு பெரிய பிரசங்கம் பண்றாங்க அத்தை!”


“விடு அனு! அவங்க அந்தக் காலத்து ஆளு. நான் பக்கத்து மளிகைக் கடைல உனக்கு மினரல் வாட்டர் கொண்டு வந்து போட சொல்றேன்.”


“ம்ம்! ஆனா எனக்கு ஆல்ரெடி வேலைல அவ்ளோ டென்ஷன் பாஸ்கர்! இதுல வீட்டுக்கு வந்தா இவங்க வேற சாதாரண உப்பு பெறாத விஷயத்தை எல்லாம் காரணம் காட்டி அதுக்கு ஒரு பிரச்சினை பண்றாங்க. இப்போதைக்கு பிள்ளை பெத்துக்க மாட்டேன்னு சொன்னதையே எப்போ பாரு குத்தி காட்டிட்டே இருக்காங்க பாஸ்கர்.”


“நீயே சொல்லிட்ட இது ஒரு சாதாரண விஷயம்ன்னு!, உப்பு பெறாத விஷயம்ன்னு! அப்புறம் ஏன் அதுக்கு இவ்ளோ ஹைப்? ஏன் இவ்ளோ டென்ஷன்? கண்டுக்காம உன் வேலையைப் பாரும்மா!” என்று டிபிகல் கணவனாகச் சொல்லிவிட்டு போனான்.


பேச்சில் வித்தகனல்லவா அவன்? 


தினம் தினம் ஒரு பஞ்சாயத்து என்றானது. சொம்பில்லாமல் நாட்டாமை செய்த பாஸ்கரன் ஒரு தலையாக இவளை மட்டுமே அடக்கினான். பெற்றோரின் முணுமுணுப்பு ஊடாட, பிடிவாதமாக அனுவை மணமுடித்த அவனுக்கு வேறுவழியும் இருக்கவில்லை.


இதற்கிடையில் அனுராதா நிறுவன திட்ட வரைவின் பொருட்டு ஒரு முறை ஆஸ்திரேலியா சென்று வந்தாள். அவளின் கனவு, ஆசை, லட்சியம் துளிதுளியாக நிறைவேறி கொண்டிருந்ததாக நம்பினாள்.


ஆனால் வீட்டில் கணவனுக்காக அவன் வீட்டினரைப் பல விடயங்களில் பொறுத்து, தழைந்து, பணிந்து போன அனு, ஒவ்வொரு முறையும் அவர்கள் குழந்தைப் பற்றிய பேச்செடுக்கும் போதெல்லாம் மனதளவில் நிராயுதபாணியாக உணர்ந்தாள். 


எதிர்வீட்டு பெண், தெருமுனைவீட்டு பெண் தொடங்கி, அமெரிக்காவில் இருக்கும் பாஸ்கரனின் அத்தை மகள், அமேசான் காட்டில்(?) இருக்கும் மாமன் மகள் என கண்டம் விட்டு கண்டம் உள்ள சொந்தபந்தத்தில் புதிதாய்த் திருமணமான அத்தனைப் பெண்களும் குழந்தைப் பெற்றுவிட்டனர் என, அவர்களுக்கு உதாரணமாகக் காட்ட தினம் தினம் ஒரு பெண் பிள்ளைப் பெற்றுக்கொண்டே இருந்தாள். நாட்கள் செல்ல செல்ல அனுவின் மனோதிடம் குறைந்துகொண்டே போனது. சோர்ந்து போக ஆரம்பித்தாள் அனுராதா.


                     🌻🌻🌻🌻🌻


வருடம் 2034


பிரகதியின், ‘கடவுள் செட்டிங்’ எனும் கூற்றை ஆமோதிப்பது போல் கோவில் மணி ஒலித்து, அங்கிருந்த அனைவரின் மனதினையும் ஆராதித்தது. 


பாஸ்கரனின் தங்கை நிர்மலாவின் மகன்தான் இந்த அவினாஷ். இவர்களும் சென்னையில்தான் வசிக்கின்றனர். அவினாஷிற்கு திருமணத்திற்கு பார்த்தபோது நிர்மலாவின் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திலேயே பெண் அமைந்ததில் அவளுக்கு அத்துணை மகிழ்ச்சி! அதனால்தான் சென்னையிலிருந்து ஒருநாள் பயணமாக ஸ்ரீரங்கம் வந்திருக்கிறார்கள்.


ஆனால் இங்கே நிர்மலா அவனுக்கு பார்த்த பெண்ணைப் பார்க்காமலேயே, வேறொரு பெண்ணானப் பிரகதியைப் பார்த்து, ‘ஷி இஸ் மை கேர்ள்!’ எனக் கை நீட்டியிருக்கிறான். இரு குடும்பங்களும் ஒரு மனதாக சிறியவர்களின் விருப்பத்திற்கு இணங்கியுள்ளனர். எனவே சற்று நேரம் சிறியவர்களைத் தனிமையில் பேச அனுமதித்தனர்.


“ஆக்சுவலி இங்கே வர்ற வரைக்கும் எனக்கு கல்யாணத்தைப் பத்தின எந்த ஐடியாவும் இல்லை. ஆனா இப்போ உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னன்னு தோணுது.” என்ற அவினாஷின் முகத்தில் புன்னகை ஊடாடியது.


“எனக்கும் கல்யாணம் வேண்டாம்ன்னுதான் தோணுச்சு.”


“இப்போ?”


“ம்ம்… இப்பவும்தான்.”


“ஹேய்!”


“இல்லல்ல… நான் இப்போதான் யூஜி முடிச்சேன். சோ, கொஞ்சநாள் யாரையும் டிபெண்ட் பண்ணாம வாழணும்னு ஆசை. ஐ மீன் இட்.”


“ஜாப் கன்ஃபர்ம் ஆகிடுச்சா?”


“ம்ம், கேம்பஸ்ல செலக்ட் ஆகிருக்கேன்.”


“ஓ! ஆனா இனி சென்னை வந்ததும் பார்த்துக்கலாமா?”


“கன்ஃபர்மே பண்ணிட்டீங்களா?” சிறு வெட்கம் இழையோட கேட்டாள்.


“பிரகதி!”


“ம்ம்?” நின்றவாக்கிலேயே திரும்பிப் பார்க்க,


பக்கவாட்டில் நகர்ந்து தன் முகம் பார்க்கும் கருவிழிகளைப் பார்த்தபடி அவன் சொன்னான். “சோ ஃபார் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ல எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. பட் நௌ ஃபெல் இன் லவ் வித் யூ அட் ஃபர்ஸ்ட் சைட்! அதான் டெஃபனட்லி கமிட் வித் ஷராரான்னு கன்ஃபர்ம் பண்ணிட்டேன்.”


பிரகதி அவனைப் போல் வார்த்தைகள் இல்லாமல், நாணமும் நகையுமாக அவன் விரல்கள் கோர்த்து தன் பதிலை வெளிப்படுத்தினாள். கோர்த்த விரல்களை இறுக்கிக்கொண்டான் அவினாஷ்.


இருவரும் முகம் முழுவதும் புதுக் காதல் தந்த பரவசத்துடன் பெரியவர்கள் அருகே வந்தபோது, கோவில் வாசலில் கால் பதிந்தும் பதியாமல் துள்ளலான நடையுடன் குதித்தோடி வந்தாள் அவள்.


தடதடவென வந்து அவினாஷின் அருகே மூச்சு வாங்க நின்று, “எப்போ என்னை ஸ்பேஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போகப் போற?” என்றவளின் முகத்தில் ஒவ்வொரு வியர்வைத் துளியும் வெற்றிச் சுவையைப் பருகியதைப் போல் பூத்திருந்தது.


அவினாஷை இடித்துக்கொண்டு வந்து நின்ற பெண், கண்கள் விரிய அவன் காதில் ரகசியம் பேசுவதை, பிரகதியின் குடும்பம் கேள்வியாய்ப் பார்ப்பதை உணர்ந்த நிர்மலா, “எங்கே’டி போன இவ்ளோ நேரம்?” என அவளைக் கடிந்துவிட்டு, எதிரில் இருந்தவர்களிடம் அவளை அறிமுகப்படுத்தினாள். “என் பொண்ணு சனா! அவியோட தங்கச்சி.”


அபிராமி பாட்டி தனக்கேயுரிய எடைப் போடும் பார்வையில் அவளை அளந்தார். அவினாஷைப் போலவே கறுப்பு ஜீன், சால்மன் நிற டீஷர்ட் அணிந்திருந்தாள். தலையில் கேசத்தை கொண்டையாக்கி இருக்காளோ அல்லது தலைமுடியே இல்லையோ தெரியவில்லை; ஆனால் ஏதோ பிரிண்ட் செய்யப்பட்ட கருநிற வஸ்திரத்தினால் தலை முழுவதும் மூடியவாறு இழுத்துக் கட்டியிருந்தாள்.


காதில் பட்டுநூலில் செய்த நான்கு குஞ்சங்கள் தொங்கும்படியான பெரிய சதுர கறுப்பு உலோகக் கம்மல், ஆந்தை முகங்கொண்ட கரு நிற நெக் பேண்ட்(band) -அதிலிருந்து அகோரமாய்த் தொங்கிய சிறு சிறு கறுப்பு சங்கிலிகள், கையிலும் அதற்கேற்ற கருநிற சங்கிலிகள் மற்றும் கயிறுகள். அதரங்களில் கரு நிற சாயம். மூக்கில் சிறு வளையம். அனைத்தையும்விட அவளை மேலும் அகோரப்படுத்திக் காட்டியது அவள் கண்களில் அணிந்திருந்த க்ரே நிற லென்ஸ்!


கோவிலுக்கு வருபவள் அணிந்திருந்தது அத்தனையும் கறுப்பு! அவளைப் பார்த்த மாத்திரத்தில் அபிராமி தன் அதிருப்தியை அப்பட்டமாய் முகத்தில் காண்பித்தார். அதையே மற்றவர்களும் நினைத்தாலும் அவரைப் போல் வெளிக்காட்டி கொள்ளவில்லை.


நிர்மலா அவினாஷைத் தன்புறம் இழுத்து நிறுத்திவிட்டு, அவளருகே வந்து அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக, “என்ன வேஷம் இது சனா? இவ்ளோ நேரம் எங்கே போன?” எனக் கடிய,


தாயைச் செவிமடுக்காதவள், தன்னெதிரே இருந்த பிரகதியையே கேள்வியாய்ப் பார்த்திருந்தாள். பிரகதியோ அவளைக் கண்டு வியப்பு, குழப்பம், அச்சம் என முழித்துக்கொண்டு நின்றாள். 


சட்டென்று சனா தன் அண்ணனின்புறம் பார்வையைத் திருப்ப, அவன் குறும்பாய்ப் புருவங்களை ஏற்றி இறக்கி, “ஆம் ரெடி ட்டூ கோ ஃபார் ஹெர்!” எனவும்,


“அடப்பாவி! அப்போ என்னை வச்சு காமெடி பண்ணுனியா?” எனக் கண்களை உருட்டினாள்.


அதில் கோபம் தலைக்கேற எதிரில் இருப்பவர்களை மறந்த நிர்மலாவிற்கு ‘அம்மா’ முகம் வெளிப்பட்டது. “ரெண்டு பேரும் இப்போ என்ன கூட்டுக் களவாணித்தனம் பண்ணிருக்கீங்க? அவளைக் கெடுக்கறதே நீதாண்டா! வந்த இடத்துலேயும் சும்மா இருக்காம இதென்ன வேஷம்? பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க அவி?”


“ம்மா, ரிலாக்ஸ்மா!” என்ற அவினாஷ் அம்மாவிற்கு மட்டுமல்லாது, இத்தனை நேரம் தன் தங்கையைக் கேள்வியாய்ப் பார்த்திருப்பவர்களுக்கும் விளக்கம் சொல்லும்விதமாக, தங்கையை அணைத்துக்கொண்டு, “இவ என் தங்கை சனா. எனக்காக, என் சந்தோஷத்துக்காக எதுவும் பண்ணுவா.” என்றவன் நிர்மலாவிடம் திரும்பி, “ஸாரிம்மா. நான் இந்த கேம்’க்கு (திருமணம்) வரலைன்னு சொன்னப்போ நீங்க கேட்கல.” என்றுவிட்டு மீண்டும் மற்றவர்களிடம் திரும்பினான். “நான் அப்ஸெட் ஆனதால… ம்க்கும்… இவ என்கிட்ட பெட் கட்டினா…”


“என்ன பெட்?” என்று கேட்ட பிரபஞ்சனின் கண்கள் சிரித்தது.


“அது… இன்னிக்கு வர்ற பொண்ணு வீட்டுக்காரங்களை கோவில் இருக்க தெருவையே மிதிக்கவிடாம ஓட விடறதா…” என இழுக்க, பிரபஞ்சன் தன் மீசை முடிக்குள் சிரிப்பை இழுத்து நிறுத்த வேண்டியிருந்தது.


“ஆனா இந்த சூன்யகாரி கெட்டப் எல்லாம் என் ஐடியா இல்லம்மா. அர்ஜூன் ஏதாவது சொல்லிருப்பானா இருக்கும்.”


“அவன் ஒரு யூஸ்லெஸ்! ஐடியாவே வரலைன்னு கையை விரிச்சுட்டான் ப்ரோ. எல்லாம் என்னோட ப்ரெய்ன் பவர்தான்!” என்று சனா அலட்டலாகப் பெருமிதம் கொள்ள,


நிர்மலா இப்போது மகளை வெறிகொண்டு முறைத்தாள். “என்னடி செஞ்ச அவங்களை?”


“ஒண்ணுமே பண்ணலம்மா. இருபது ரூபாய் எலுமிச்சம்பழம் வாங்கி, கட் பண்ணி, குங்குமம் தொட்டு அவங்க கார் முன்னாடி பிழிஞ்சுவிட்டு, கொஞ்சமா கண்ணை மூடினாப்ல நின்னுக்கிட்டு, முணுமுணுன்னு எனக்கு நானே பேசிக்கிட்டேன். அப்புறம் கண்ணைப் படக்குன்னு திறந்து வேணாம்ன்னு முறைச்சாப்புல தலையாட்டிட்டு, ஒரு டீப் ப்ரீத்! தட்’ஸ் இட்! அடுத்த செகண்ட் கார் ரிவர்ஸ் போயிடுச்சு.” என்றவள் அவினாஷிடம், “நிறைய பர்ஃபார்ம் பண்றதுக்கு பிரிப்பேர் ஆகிருந்தேண்டா ப்ரோ! எல்லாம் வேஸ்டாகிடுச்சு.” என்றாள் அசுவாரஸ்யமாய்.


அதற்குமேல் அடக்க முடியாமல் பிரபஞ்சன் கடகடவென சிரித்திருந்தான். நிரஞ்சனாவிற்கும் சிரிப்பு பொங்க, அபிராமி அப்போதும் சனாவைப் பிடித்தமில்லா உணர்வோடே வெறித்திருந்தார்.


கீழுதட்டை ஒருபுறமாய் அழுத்தி, தன் மன உணர்வுகளை வெளிக்காட்டாமல் நின்றிருந்த பிரகதியின் தோளில், தன் கைமுட்டியைத் தூக்கி வைத்து, “என்ன பண்ணி எங்கண்ணனைக் கரெக்ட் பண்ணின?” எனக் கேட்க,


அவளின் நடவடித்கையில் அபிராமிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. பிரபஞ்சன் சுவாரஸ்யத்துடனும் சின்ன சிரிப்புடனும் சனாவைப் பார்த்திருந்தான். நிரஞ்சனாவிற்கு அப்படி எந்த எண்ணமுமில்லை. இந்தக் காலத்தில் பெண்களிடம் உடைக் குறித்து பேசிவிட முடியாது. அவரவர்க்கு அவரவர் விருப்பம்; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் என்ற எண்ணம்!


“என்ன பெட்’ன்னு சொல்லலியே? எனப் பிரபஞ்சன் கண்கள் சிரிக்க கேட்க,


“ஸ்பேஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போகணும் அங்கிள்.”


“வாவ்!”


சற்று நேரம் சனாவைக் குறித்தும், அவளின் படிப்பு, வேலைக் குறித்தும் பேசினார்கள். ஏனெனில் அவள் படிப்பு, தற்போதைய வேலை எல்லாம் பெங்களூருவில் தானாம்! பிரபஞ்சன், நிரஞ்சனாவிற்கு அவள் சுவாரஸ்யமான பெண்ணாகத் தெரிந்தாள்.


பின்னர் பிரபஞ்சன் நிர்மலாவிடம் சொன்னான். “என்ன தான் தெய்வ சங்கல்பம்ன்னு நாம சொல்லிக்கிட்டாலும், இந்த காலத்து பசங்களோட வேகம் மேல எனக்கு கொஞ்சம் நம்பிக்கை குறைவுதான். நம்ம காலம் மாதிரி இல்லை இல்லயா? சோ… ஒரு ஒரு மாசம் ரெண்டு பேரும் பேசிப் பார்க்கட்டுமே? அப்புறமும் பிடிச்சிருந்தா நாம நேரடியா கல்யாண வேலையை ஆரம்பிச்சிடலாம். என்ன சொல்றீங்க சிஸ்டர்? உங்களுக்கும் எங்களைப் பத்தி விசாரிக்க அவகாசம் இருக்கும் இல்லையா?”


சனாவிற்கு தெளிவாக தீர்க்கமாக பேசிய பிரபஞ்சனை மிகப் பிடித்தது. 


“நல்லது சர். அப்டியே செய்வோம். எங்க வீட்டுல நான் மட்டும்தான். அவி காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போது அவர் தவறிட்டார். அதனால எங்க வீட்டுல பெரிய காரியமெல்லாம் எடுத்து செய்றது அவரோட தம்பியும் என் தம்பியும்தான்! கூட்டமா போக வேணாம்ன்னு இவன் சொன்னதால இன்னிக்கு நாங்க மட்டும் வந்தோம். அதனால நானும் அவங்க கிட்ட இது பத்தி கலந்து பேசணும்.”


மேற்கொண்டு பரஸ்பரம் பேசி இருபக்கமுமே ஒரே இனம் என தெரிந்துகொண்டனர். மன மகிழ்வுடனேயே விடைபெற்றனர். பிரபஞ்சனும் அவினாஷூம் காரை வெளியே எடுக்கச் செல்ல, மற்றவர்களும் பின்தொடர்ந்தனர்.


சனாவைத் திரும்பிப் பார்த்தபடி பின்தங்கி நடந்த பிரகதியை அவள் குரல் இழுத்து நிறுத்தியது. “ஓய்! எங்கண்ணனுக்கு பிடிச்சதால உன்னைச் சும்மா விடறேன். ஒரு மாசம் கழிச்சு பெரியவங்க கேட்கும் போதும் சம்மதம்ன்னு சொல்லணும். என்ன?” என்று மிரட்டல் த்வனியில் கேட்க,


படபடக்கும் மனதை வெளிக்காட்டாமல் ‘உம்’ என்ற முகத்துடன் சரியென தலையாட்டினாள் பிரகதி.


இசைக்கும்...

Comments

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -25