கருவறை கீதம் -25

 


அத்தியாயம் 25


குளித்து முடித்து இளஞ்சிவப்பும் ஆரஞ்சும் இணைந்து நெய்யப்பட்டிருந்த டிஸைனர் புடவையை நேர்த்தியாகக் கட்டிக்கொண்ட சந்தனா, வழக்கம்போல் ஃப்ரென்ச் ப்ளாட் போட்டுக்கொண்டு, அதற்கேற்ப காதணிகளை அணிந்துகொண்டாள். மிதமான ஒப்பனையும் அளவான மைத்தீட்டலுமென, அக்னியின் மிச்சசொச்ச ஆன்மாவை உறிஞ்சிக் கொள்ளும் அழகில் மிளிர்ந்தாள்.


அதே தளத்தில் தங்கியிருக்கும் சில உறவினர்களைச் சாப்பிட செல்லுமாறு உபசரித்து விட்டு, சிலரைக் கையுடன் அழைத்துச் சென்று உணவுக் கூடத்தில் அமர வைத்துக் கொண்டிருக்கையில், அர்ஜூன் அழைத்தான். அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியே வந்து அழைப்பை ஏற்றாள்.


“என்ன பண்ற?”


“உனக்கு ரூட்டு விட்டுட்டு இருந்தாளே எங்க பிரபா சித்தி பொண்ணு ஹர்ஷி… அவளுக்கு உன்னோட சிக்ஸ் பேக் பிக்ஸ் எல்லாம் காட்டிட்டு இருந்தேன்.” என்றவள் கிளுக்கிச் சிரிக்க,


“மேடம் என்னைக் கோர்த்து விடறீங்களாக்கும்? நானும் உங்களுக்கு ஒரு டாக்கிங் போஸ்ட் (tagging post) போடவா?” என அலட்சியமாகக் கேட்டான் அவன்.


“எவனா இருந்தாலும் சம்பவம் பண்ணிடுவா இந்த சந்தனா!”


“இஸ் தட் ஸோ? ஹாஹா… சரி, நம்ம ஜோஜூ இல்ல? அவனுக்கு பத்திரிகை வைக்க மறந்துட்டேன். நீ போயிட்டு வந்துடறியா? அவன் இன்னிக்கு ஃப்ரீ தானாம்.”


ஜார்ஜ் என்னும் ஜோஜூ இவர்களின் பள்ளித் தோழன். தற்போது அவன் ஒரு ரியல் எஸ்டேட் முகவர்!


“ஏன் நீ எங்கே புடுங்க போறியாம்?”


“ஐ’ம் கன்னா ஹேங் அவுட் வித் மை பானு பேபி!”


“டேய் டேய் ஓவரா போறடா அஜூ… அவ பாவம் ரொம்ப இன்னஸன்ட்டா தெரியறா! நீ ஒரு கேடி! இப்போவே தனியா போறதுலாம் நல்லதில்லை.”


“வந்தேன்னா வாயில அரை கிலோ அரளி விதையை அள்ளிப் போட்டுடுவேன். அட்வைஸைக் குறைச்சிட்டு சொன்னதைச் செய்டீ!”


“நான் உன்னை நம்பறதா இல்லை!”


“அவளை நான் ஒண்ணும் பண்ண மாட்டேன் தாயே! உனக்காக சைவக் காதல் பண்றேன். போதுமா?”


“தட்’ஸ் மை அஜூ! சரி நான் ஜோஜூ ஆஃபீஸ் போயிட்டு கால் பண்றேன். நாலு நாளைல கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்போ போய் இன்விடேஷன் கொடுத்தா வாழ்த்துவான். நீயே வாங்கிக் கட்டிக்கோ!”


“வெய்ட் சனா! உன் கூட அக்னி அண்ணாவையும் கூட்டிட்டு போ!”


“அக்னி? அவன் எதுக்கு?”


“ப்ச் அண்ணி! என்னதிது அவன் இவன்னு?”


“சர்ரீ… அவர்ர்…”


எப்போதுமே இருவரும் மற்றவரிடம் தவறிருப்பதாகத் தெரிந்தால் தயக்கமே இல்லாமல் கண்டித்துக் கொள்வர். கண்டிக்கப்பட்டால் திருத்தியும் கொள்வர். அது இருவரின் பாசத்தில் எழுதப்படாதச் சட்டமாக இருந்தது.


“அவர் இங்கே இருந்தா பாவனா என் கூட வரமாட்டா! அவருக்கு எப்டியோ எங்க லவ் மேட்டர் தெரிஞ்சிடுச்சு போல! அவளை என் கூட பேசக்கூடாதுன்னு சொல்லிருக்கார்.”


“எப்டிடா தெரிஞ்சது? சீக்ரெட்டா தானே வச்சிருந்தோம்?”


“இந்தப் பக்கம் உன் ஷெர்லாக் ஹோம்ஸ் மூளை மாதிரி அந்தப் பக்கம் அவர் போல! இப்போ அதுவா முக்கியம்? ப்ளீஸ்… அவர் ஏதோ இங்கே பிரகதிக்கு வீடு வாங்கறதைப் பத்தி, ஒரு நல்ல பில்டிங் ப்ரமோட்டர் கிட்ட பேசணும்ன்னு சொன்னார். எனக்கு நம்ம ஜோஜூ தான் ஞாபகத்துக்கு வந்தான். அதான் டபுள் மேங்கோ இன் வன் ஸ்டோன். கூட்டிட்டு போயேன் ப்ளீஸ்! அத்தைக்கிட்ட நான் சொல்லிக்கறேன்.”


“ச்சு! ஏன் தான் என்னை அந்த முசுடு கூட கோர்த்து விடறியோ? வர வர நீ சரியே இல்ல அர்ஜூன்! இப்டித் தான் நான் ஊருக்கு வரும்போதும் என்கிட்ட கேட்காம அவங்களோட வர சொல்லி கேட்டிருக்கே!” என்றபடி திரும்ப, அவளையே ஆழப் பார்வைப் பார்த்தபடி நின்றிருந்தான் அக்னிஸ்வரூபன்.


அர்ஜூனிடம் சொல்லாமலேயே இவள் விரல் அழைப்பைத் துண்டித்தது.


“போகலாமா?”


பிடிபட்டவளாக விழித்தவளின் தலை தன்னைப் போல் ஆமோதித்தது. “ம்ம்!” 


அவன் மீண்டும் உணவுக் கூடத்தினுள் நுழைந்து சாப்பிட அமர, கேள்வியாகப் பார்த்தாள் அவள். 


“சாப்பிட்டிருக்க மாட்ட… உட்காரு!” எனத் தன்னருகே இருந்த இருக்கையைக் கண் காட்ட, அமர்ந்து கொண்டவளிடம் கையிலிருந்த சில அழைப்பிதழ்களைக் கொடுத்தான். “அர்ஜூன் கொடுக்க சொன்னான்.”


உண்மையில் சந்தனா சாப்பாட்டு கூடத்திற்குள் உறவினர்களுடன் நுழையும்போது அங்கே வெளிப்புறம் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்த அண்ணன், தம்பியைப் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் இவளைப் பார்த்துவிட்டு இன்றைய திட்டங்களை வகுத்து கொண்டனர். 


அக்னி தவையசைத்துவிட்டு நகர, “அண்ட் ஒன்மோர் திங்க்!” என்று அவனை நிறுத்தினான் அர்ஜூன். 


"இப்போதைக்கு சனாவுக்கு உண்மை தெரிய வேணாம். அவ உன்னை, என்னை மாதிரி கல்யாணம் முடியற வரை வெய்ட் பண்ணிட்டிருக்க மாட்டா! அவி அத்தான் மாதிரி அவளுக்கும் நம்ம அம்மாவோட ஹேப்பினெஸ் தான் முக்கியம்!”


‘நீதான் அம்மாவின் சந்தோஷம்’ என்று தம்பி உணர்த்துவது புரிந்தது.  


“ம்ம்!”


மேலும் சந்தனாவைச் சாப்பிட வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்ற அர்ஜூனின் ஆக்ஞையைக் கேட்டவன், “அவ என் பொண்டாட்டி ஆனதுக்கப்புறமும் இப்டித்தான் என் ஸ்பேஸ்க்குள்ள வருவியா?” எனக் கேட்டு, அர்ஜூனின் முகம் மாறுவதைக் கண்டு ஒற்றைக் கண் சிமிட்டினான்.


“வர வேணாம்ன்னு சொல்லுவியா என்ன?” என்ற தம்பிக்காரனுக்கு நாசி விடைத்தது.


“சும்மா கேட்டேண்டா! இவ்ளோ நேரம் நீ என்னை அலைக்கழிச்ச?” என அவன் கன்னத்தைத் தட்டிவிட்டு, சில அழைப்பிதழ்களை எடுத்துக்கொண்டு வந்திருந்தான் அக்னி.


வந்தவன் அவன் சொன்னதைத் தான் செய்தான். சாப்பிட்டு முடித்து முன்னே நடந்தவன் காரில் செல்லும்போது அவளிடம் எதுவும் பேசவில்லை. 


சந்தனா அவனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டாள். ‘நாம அர்ஜூன் கிட்ட பேசினதைக் கேட்டிருப்பானோ? சும்மா யார் பேசறதையும் ஒட்டுக் கேட்கறதே வேலையா வச்சிருக்கான்.’


அவள் பிற்பாதியைச் சின்னக்குரலில் வாய்விட்டு சொல்லிவிட, “ஒட்டுக் கேட்கணும்னு அவசியமேயில்லை. நீ பேசினதே நாலு மைக்கை வச்சிட்டு பேசற மாதிரிதான் கேட்டுச்சு.” என்றான்.


“அவ்ளோ சத்தமாவா கேட்டுச்சு?” எனத் தனக்குத்தானே கேட்டு கொண்டாள். “அது… நான் என் ஃப்ரெண்ட் ஜோஜூ பத்தி பேசிட்டிருந்தேன். ஹிஹி…” அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தவளை உணர்ச்சியற்று பார்த்துவிட்டு காரோட்டுவதில் கவனத்தைத் திருப்பிக்கொண்டான்.


‘ரொம்பத்தான்…’ 


சாலையைப் பார்த்தபடி நிதானக் குரலில் கேட்டான். “எங்க வீட்டு ஆட்களோட பேசி பழகறதுல உனக்கு அவ்ளோ கஷ்டமா என்ன?”


கோபமாகக் கேட்டிருந்தால் கூட இத்தனை பாதித்திருக்காதோ! அவனின் இந்த நிதானம் இவளை ஏதோ செய்தது. “அச்சோ! அன்னிக்கு நான் நிஜமாவே டிக்கெட் புக் பண்ணிருந்தேன் அக்னி. உடனே கிளம்பி வரலைன்னா மேனேஜர் கிட்ட சொல்லி ஃபயர் பண்ண சொல்லுவேன்னு அவி மிரட்டினான். மோர்ஓவர் அர்ஜூன் உங்… உங்க வீட்ல பேசினதும் எனக்கு தெரியாது…”


உண்மையில் யாரிடமும் ஒரு எல்லைக் கோட்டினுள் நின்று பழகும் சந்தனாவின் குணம் தெரிந்ததாலேயே அன்று அர்ஜூன் பிரபஞ்சன் வீட்டினருடன் இவளைக் கோர்த்து விட முயன்றிருந்தான்.


அக்னி கழுத்தை இவள்புறம் வளைத்தான். “இல்லைன்னா வந்திருப்பியா?”


‘என்ன பார்வை இது?’


இவளுக்காக ஏசி போடாமல் ஜன்னலைத் திறந்து விட்டிருந்தான். இப்போது இந்தப் பார்வையில் ஏசி வேண்டும் போலிருந்தது. “ஹான்!” என்றவளின் குரலில் மூஞ்சூறின் சப்தம்.


அதில் அவன் புன்னகை மீண்டது. அக்னிக்கு அர்ஜூனிடம் பேசியதிலேயே பாதி பாரம் குறைந்தாற் போலிருந்தது. இப்போது அவனின் மாரியாத்தாவின் அண்மையும் சேர, நிம்மதியாக உணர்ந்தான்.


இடையிடையே பிரபஞ்சனிடமும் மாலை மெஹந்தி நிகழ்விற்கான வேலைகள் குறித்த உத்தரவுகளையும் அலைபேசி வாயிலாகப் பேசிக்கொண்டான். இவளும் நிர்மலாவிடம் ஜோஜூவைப் பார்க்கப் போவதாகத் தகவல் சொன்னாள். 


அவன் அடிக்கடி சட்டைக் காலரைப் பின்னுக்கு தள்ளுவதையும் காதோரம் வழிந்த வியர்வையையும் கண்டு ஏசியைப் போட்டுவிட்டாள். “நான் ட்டூ ஆர்ஸ் வரைக்கும் தாங்குவேன். உங்களுக்கு தான் சென்னை வெயில் பழக்கமிருக்காது.”


“இனிப் பழகிக்கணும்.”


“ஏன்?”


“அஹ்ஹம்! பிரகதி இங்கே இருக்காளே?”


“சென்னைல பொண்ணு கொடுக்கதானே செஞ்சிருக்கீங்க? பொண்ணு எடுத்த மாதிரி பழகிக்கணுமாம்!”


‘பாயிண்ட்டா பேசறாடா இவ! வாய்விடாத!’


இருவரும் போகும்போது சாதாரணமாக பேசிக் கொண்டு போனார்கள். ஜார்ஜின் அலுவலகம் போய் சேர்ந்த போது இருவருக்குமிடையே ஒரு நட்புணர்வு தோன்றியிருந்தது. ஆனாலும் சந்தனா தன்னிடம் உரிமையாகப் பேசவில்லை என்பதில் இவனுக்கு சுணக்கமே!


ஜோஜூவின் கையில் பத்திரிகையை வைத்த சந்தனாவை விடுத்து அக்னியை ஆர்வமாகப் பார்த்தான் அவன். 


அக்னி கண்களை உருட்டி அவளைக் காணச் சொல்ல, சுதாரித்தவன் அவளிடம் கோபித்துக்கொண்டான். “ஏன் ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சப்புறம் கொண்டு வாயேன்!”


“ஸாரி ஜோஜூ. அர்ஜூன் வாட்ஸ்ஆப் பண்ணிருப்பான்னு நினைச்சேன்’டா. இப்போதான் சொன்னான்.”


“ஃப்ர்கெட் இட்! எனக்கு ஒரு கிளையண்ட் பிடிச்சு தந்ததால சும்மா விடறேன்.” என்றதில் சந்தனா கண்கள் சுருக்கிப் பார்க்க, அக்னி, ‘உன் நடிப்பு மிகவும் மட்டம்!’ என்பது போல் கேலியாகச் சிரித்தான்.


உண்மையில் ஜோஜூவுக்கு அர்ஜூனும் அவினாஷூம் வந்து ஏற்கனவே அழைப்பிதழ் தந்திருந்தார்கள். இன்று சந்தனா வந்து மீண்டும் தருவாள். தாமதத்திற்கு கோபம் போல் நடிக்கவேண்டும் என்று சொல்லியிருந்தான் அர்ஜூன்.


“என்னை ஏண்டா அவக்கிட்ட மாட்டிவிடற? அந்தக் கிராதகி கண்ணுல கன்னு லென்ஸ் வச்சிருப்பாளேடா?” என்றலறிய ஜோஜூவை,


“அவளுக்கு வாழ்க்கைக் கொடுக்கப் போற மகா தியாகியை நீ பார்க்க வேணாமா ஜோஜூ?” எனக் கேட்டான் அர்ஜூன்.


“அட்றா! அட்றா! ஃபைனலி ஹாஸ் ஷி கன்சென்டட் டூ தி மேரேஜ்?”


“ஆமா, ஆனா அது அவளுக்கே தெரியாது.”


“ஏதே?! ஏண்டா உன் அத்தை மவளுக்கு ஆப்படிக்க என்னை ஹாஃப்பாயில் போட பார்க்கறியா?” இருவரின் இடும்புகளும்தான் ஊர் பிரசித்தமாயிற்றே!


“லிஸன் ஜோஜூ, எப்டியும் சனாவுக்கு இன்னும் ட்டூ, த்ரீ டேஸ்ல சொல்லிடுவேன். இப்போ ஜஸ்ட் சஞ்சு அவக்கிட்ட பேசணும். நீட் யோர் ஹெல்ப்டா!”


அவன் சொன்னதைக் கேட்டு மறுமுனையில் இருந்தவன் ஸ்தம்பித்திருந்தான். “அர்ஜூன், வாட் டிட் யூ ஸே மேன்? சஞ்சு?! உங்க அண்ணாவா?”


“ம்ம் யெஸ்!” என்றவன் சஞ்சய் கிடைத்த விபரத்தைப் பகிர்ந்தான். சஞ்சய் பற்றி தெரிந்த மிக நெருங்கிய நட்புகளில் ஜோஜூவும் ஒருவன் என்பதால், இன்று சஞ்சய்யைப்‌ பார்க்க ஆவலாகவே இருந்தான் அவன். ஆனால் சந்தனாவிடம் தான் அவன் நடிப்பு செல்லுபடியாகவில்லை.


அவள் சந்தேகமாக, “அர்ஜூன் எதுவும் சொன்னானா?” எனக் கேட்க,


“ஆஹ்… சொன்னான் சொன்னான். பத்திரிகை வைக்க மறந்துட்டேன்ன்னு சொன்னான். நீயெல்லாம் என் ஃப்ரெண்டே கிடையாதுடா நாதாரி நாயேன்னு மூஞ்சி மேல துப்பிவிட்டேன்.” என மெய்யாகவே கோபத்தை வரவழைத்துக்கொண்டு பேச,


“நான் உன்கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்த்தேன்.” என அவன் கோபத்தைக் கேலி பேசினாள் இவள்.


“ஆல்ரெடி அவி அண்ணா சொல்லிருந்தார். அதனால ரெண்டு ஹாஃப்விட்டும் தப்பிச்சீங்க!”


“சரி சரிடா, மீட்‌ யோர் க்ளையண்ட் மிஸ்டர் அக்னிஸ்வரூப்! சர் பெரிய ஆளு தெரியுமா?” என்ற பின்னரே ‘அப்பாடா’ என்றிருந்தது ஜோஜூவுக்கு!


பின்னர் அக்னி வீடு பற்றிய தன் விருப்பத்தை, தேவையைச் சொல்ல, ஜோஜூ, “எந்த ஏரியா?” என்று கேட்டுவிட்டு ஆர்வமாக பல மாதிரிகளை, பரிந்துரைகளைக் காண்பித்தான். 


அக்னி அவன் கணினியில் காட்டிய வில்லாவின் மாதிரியைப் பார்த்துவிட்டு, சந்தனாவைப் பார்க்க, புன்னகை முகமாக, “ம்ம்! சூப்பர்!” என்றாள்.


ஆனால் இவனுக்கு அது போதவில்லை. அவள் பட்டுக்கொள்ளாமலும் விலகிச் செல்லாமலும் ஓர் உறவினள் என்ற எல்லைக் கோட்டினுள் நிற்பதில் அக்னிக்கு கடுப்பேறியது. அன்று பிரகதிக்கு நகை வாங்கும்போதும் இப்படித்தான் இருந்தாள். 


அவள் சரியாக தான் இருக்கிறாள்; தான் தான் அவளிடம் அதிக உரிமையை எதிர்பார்க்கிறோம் என்ற உண்மையும் புரிந்ததில் இன்னுமே எரிச்சல் மூண்டது.


ஜோஜூவிடம் அனைத்து மாதிரி வரைபடங்களையும், அதற்குரிய பட்ஜெட்களையும் அனுப்பி வைக்குமாறு சொல்லிவிட்டு  புறப்பட்டான். தோழனிடம் சில நட்புக்கள் குறித்த நல விசாரணைகள், புறணிகள், கிண்டல்கள் என மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தாள் சந்தனா.


ஓர் உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டார்கள்.


காரில் திரும்பும்போது கேட்டாள். “ஹாங் ஸ்வரூப்! உங்களுக்கு வேற எதுவும் வேலை இருக்குதா?


“ஏன்?”


“எனக்கு இந்த ஏரியாவுல ஒரு இடத்துக்கு போகணும்.”


“வழி சொல்லு!” என்றவன், அவள் சொன்ன இடத்திற்கு வந்ததும் அவள் முகம் பார்த்தான்.


“இங்கே எங்க தாத்தா இருக்கார். வாங்க!” எனச் சொல்லிவிட்டு இறங்கி நடந்தாள் அவள்.


ஒரு நொடி உடல் விறைத்து போன அக்னி, கண்மூடித் திறந்து ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை நிதானத்திற்கு கொண்டுவந்தான். பின் காரை அதன் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு அவளைப் பின்தொடர்ந்தான். இவனுக்கு வந்த தகவலின் அடிப்படையில் தாத்தா ஒரு இல்லத்தில் இருப்பதாகச் செய்தி வந்திருந்தது. கவனம் முழுவதும் அனுவிடம் இருந்ததால் இவன் இதனைப் பெரிதாக ஆராய்ந்திருக்கவில்லை. ஆராயத் தோன்றியிருக்கவுமில்லை.


தன் அப்பா வயோதிகம் காரணமாகக் கல்யாணத்திற்கு வரவில்லை என்றும், திருமணம் முடிந்ததும் தம்பதியரை ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள அனுப்ப வேண்டும் என்றும் நிர்மலா இவர்களிடம் சொல்லியிருந்தாள்.


சுற்றிலும் பார்த்தான். வெளியே நிழல் தரும் மரங்களும் ஆங்காங்கே சிறு சிறு குடில்களுமாக, நகர்ப்புற சென்னைக்கு முற்றிலும் எதிராக, குளுமையாக இருந்தது சுற்றுப்புறம்! நான்கு தளங்களைக் கொண்டு உயரமாகவும் விசாலமாகவும் இருந்தது கட்டிடம்! 


காரிடாரில் ஆரம்பித்து உள்ளே வரை நீண்ட பகுதிகள் நவீனமாக வீட்டுச் சூழலில் பராமரிக்கப்பட்டிருந்தது. வரவேற்பறைத் தவிர்த்து உள்ளே உள்ள அறைகள் வெளிப்பார்வைக்கு தெரியவில்லை. ஆனால் நிறைய அறைகளைக் கொண்டிருக்க வேண்டுமென கணித்தான்.


சந்தனா வரிசையாக சில சிற்றூழியர்களிடம் ஏதோ பேசியவாறு நடந்தாள். முயன்று அவளிடம் கவனத்தைத் திருப்பினான்.


“கண்டிப்பா கல்யாணத்துக்கு ஆஜர் ஆகிடணும்ண்ணா!” என யாரோ ஒரு ஆணிடம் சொல்லிவிட்டு நடந்தவளை,


“சனாம்மா… கல்யாண வீட்டுல இல்லாம என்ன இந்த நேரத்தில இங்கே வந்திருக்க?” என ஒரு நடுத்தர வயது பெண் கேட்க,


“தாத்தாவைக் கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன்கா.” என்றாள் இவள்.


“அவர்தான் ஸ்கூல் பிள்ளை மாதிரி அடம்பிடிச்சிட்டு இருக்காரே!”


“அம்மா சொன்னாங்கக்கா. ஒருவாட்டி பேசிப் பார்க்கலாம்ன்னு வந்தேன்.”


“சரிதான்! அவி தம்பி கல்யாணத்தைச் சாட்டு சொல்லித்தான் அந்தம்மா கிட்ட நான் லீவு கேட்டிருக்கேன். சீக்கிரம் தாத்தாவைக் கூட்டிட்டு கிளம்பு கண்ணு! அங்கே விஸிட்டர்ஸ் ஹால்ல இரு! தாத்தாவை வர சொல்றேன்.”


அக்னியைக் கண்ணால் அழைத்துவிட்டு அவள் முன்னே நடக்க, இவனுக்கு பாதங்கள் அங்கேயே பதியன் போட்டு நின்றன. அப்போதுதான் நடைப் பழகுபவன் போல் மெதுவே நகர்ந்து அந்த ஹாலுக்குள் நுழைந்தான்.


சில நிமிடங்கள் கழித்து,


“சந்தனம்!” என்ற கணீர் குரலில் அக்னியின் விழிகள் பக்கவாட்டில் நகர்ந்து, அங்கேயே தேங்கி போனது. 


குரல் மட்டும் என்றும் போல் கணீரென ஒலிக்க, கண்கள் ஒளியற்று, முகம் அருளற்று, கஷ்ட ஜீவனத்தில் உடலில் உயிரைப் பிடித்து வைத்திருக்கும் தோற்றத்தில், உயரமும் உருவமும் பாதியாகி, இரு சிற்றூழியர்கள் பின் தொடர வந்து நின்றார் கலியபெருமாள்!


என்ன முயன்றும் இவனால் உணர்ச்சியற்று சிலை போல் இருக்க முடியவில்லை. அவரில் இருந்து பார்வையைத் திருப்பவும் முடியவில்லை. 


அவன் வாழ்வின் திசைமானியல்லவா அவர்! காலஞ்சென்றாலும் காலாவதி ஆகிவிடும் உறவா அது?


உள்ளே ஏதேதோ வேண்டாத வலிகள் தோன்றி நெஞ்சத்தை வஞ்சித்தது. பற்கள் கடித்து அதரங்களை அழுந்த மூடி நின்றான்.


ஓடிப்போய் கலியபெருமாளின் கையைப் பிடித்துக்கொண்டாள் சந்தனா. “தாத்தா! எப்டி இருக்க?” 


“அர்ஜூன் எங்கே சந்தனம்?”


“அர்ஜூன்தான் நேத்து வந்தானே தாத்தா!” என வருத்தத்துடன் சொல்ல,


“அவனைக் காட்டழகிய சிங்கர் கோயிலுக்கு தூக்கிட்டு போகணும்ன்னு நினைச்சேன். அங்கே பிரகாரத்துல குழந்தை விளையாடுவான்.” என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னார் அவர்.


அவள் அவரின் தாடையைப் பிடித்து தன்னைப் பார்க்க செய்தாள். “இப்போ நீ அவி கல்யாணத்துக்கு வந்தா அர்ஜூனைப்‌ பார்க்கலாம்.”


“அவி பொண்ணு போட்டோவைக் காட்டினான். லட்சணமா இருக்கா இல்ல?”


“ஆமா! இதோ இவர்தான் அந்த பொண்ணு பிரகதியோட அண்ணன்.” என்றவள், இவன்புறம் திரும்பி, “அக்னி!” எனத் தன்னருகே வருமாறு தலையசைத்தாள்.


திரும்பி அவனை ஏறிட்டு, விழிகள் சுருக்கிப் பார்த்த பெரியவர் யாரும் எதிர்பாரா வண்ணம், “சஞ்சு!” என்றழைத்தார்.


சஞ்சய்க்கு இதயம் முரசு கொட்டியது. மெல்ல நடந்து அவரைச் சமீபித்தான்.


இசைக்கும்...

Comments

  1. 🙁அப்றோ என்ன ஆச்சி!?😦

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி... என்ன ஆச்சுன்னு அடுத்த எபில தெரியும். நன்றிகள் 💌💌

      Delete
  2. villathi villanda kaliyaperumal nee! engae kondu vandhu thodarum potrukeenga.. adutha epi seekiram podunga pa

    ReplyDelete
  3. enathu Sanju va intha thatha epdi kandupidicharu... aiyo Avan ena solli samalipan Sana reaction ena

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாசு💗💗 நாளைக்கு தெரிஞ்சிடும்🙂🙂

      Delete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4