கருவறை கீதம் -19

 


அத்தியாயம் 19


வருடம் 2023


பாரமான மனதுடன் மௌனமாக தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள் அனு. இரவெல்லாம் உறங்காத கண்கள் சிவந்து சிறுத்திருந்தது. இப்படி ஆகியிருக்க வேண்டாமென நூறாவது முறையாக எண்ணமிட்டவாறே தயாரித்த தேநீரைக் குவளைகளில் ஊற்றி, பெரிய தாம்பாளத்தில் வைத்து அந்த வீட்டு கூடம், தாழ்வாரம், தோட்டம் என நாற்காலிகளைப் போட்டு அமர்ந்திருந்த ஆட்களுக்கு விநியோகித்தாள்.


கடைசியாக உள்ளறைக்கு திரும்ப, அவினாஷ் தடுத்தான். “நான் கொடுக்கறேன் அத்தை.”


“பரவாயில்ல அவி. அத்தை பார்த்துக்கறேன்.” மென்னகையுடன் சொல்லிவிட்டு உள்ளே போக, பின்னாலேயே அவனும் சென்றான்.


உள்ளே துவண்ட கொடியாக சுவரோரம் சாய்ந்திருந்த நிர்மலாவின் கண்கள் உயிரற்றிருந்தது. ஒருக்களித்திருந்த அவளின் மடியில் சந்தனா தலை வைத்து படுத்திருந்தாள்.


அவினாஷ் தங்கையை நிமிர்த்த, “அண்ணா!” என்ற கேவலுடன் அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள்.


அனு தாம்பாளத்தை ஓரமாக வைத்துவிட்டு, “நிர்மலா, எழுந்துக்கோ! முகம் கழுவிட்டு வா! ரெண்டு நாளா ஆகாரம் ஒண்ணுமில்லாம இன்னும் தான் மனசு பாரமாகும்.” என,


அவள் தன்னிலையிலேயே இல்லை. உதடுகள் தன்‌ போக்கில் எதுவோ முணுமணுத்துக் கொண்டிருந்தன. அனு மீண்டும் அவளை உலுக்கினாள். “எந்திரின்னு சொல்றேன்ல நிர்மா? பிள்ளையைப் பாரு, எப்டி ஓய்ஞ்சு போயிருக்கா! நீதானே தைரியம் சொல்லணும்?”


தன்னைப் பிடித்திருந்த அனுவின் கரங்களிலேயே விழுந்து சப்தமாக ஓலமிட்டாள் அவள். “முடியலேயே அண்ணி. நல்லா இருந்த மனுஷன் இப்டி திடுதிப்புன்னு நடுவுலயே விட்டுட்டு போயிட்டாரே… நான் என்ன பண்ணுவேன்? இரண்டு பிள்ளைகளை இனி நான் எப்டி தனியா வளர்ப்பேன்?”


நிர்மலாவின் கணவன் ராஜேஷ் நல்ல மனிதன். அனைவரையும் அரவணைத்துப் போக தெரிந்தவன். எந்தக் கெட்ட பழக்கமும் இருந்ததில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் படுத்தவன் காலையில் கண்விழிக்கவில்லை. தூக்கத்திலேயே இறைவனடி சேர்ந்திருந்தான். யாரும் எதிர்பாராத இறப்பு!


அவினாஷ் பத்தொன்பதிலும் சந்தனா பதினைந்திலும் இருக்கின்றனர். சந்தனா சென்ற வருடம்தான் பூப்பெய்தியிருந்தாள். கணவனின் இழப்பை ஏற்க முடியாமல் வலியில் துவண்டு கிடக்கின்றாள் நிர்மலா.


தங்கையின் அழுகை சப்தம் கேட்டு பாஸ்கரன் உள்ளே வந்தான். கூடவே ராஜேஷின் தம்பி ரமேஷூம் அவன் மனைவியும் வந்து ஆறுதலாகப் பேசினார்கள்.


“இத்தனை நாளும் வேற வேற வீட்டுல இருந்தாலும் எல்லாரும் ஒரே குடும்பமாதானே இருந்தோம்? இனியும் அப்டித்தான் இருப்போம். வருத்தப்படாதீங்க அண்ணி!”


“நாங்க எல்லாரும் இருக்கும்போது பசங்களை எப்டி வளர்க்கறதுன்னு நீங்க கவலைப்படலாமா அக்கா?”


“வருத்தமா, வலியாதான் இருக்கும். கடந்து வா நிர்மா! அண்ணன் இல்லையா உனக்கு?”


ஆளாளுக்கு ஆறுதலாக பேச மீண்டும் ஒருபாட்டம் அழுது தீர்த்தாள்.


மேலும் ஒரு வாரம் அனு, அர்ஜூனுடன் நிர்மலாவின் வீட்டிலேயே தங்கிக்கொண்டாள். நிர்மலாவுக்கும் அது ஆறுதலாக இருந்தது. நாட்கள் கடக்க நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டாள். 


பின்னரும் அனுவிடம் அவளின் வெடுக்கென்ற பேச்சுக்கள் தொடரவே செய்தது. அதற்கு அனு பதில் பேசவில்லை என்பதுதான் ஆச்சரியம்! மனம் நொந்திருப்பவளை மேலும் நோகடிக்க விரும்பவில்லை அவள். அன்றிலிருந்து தாங்கள் தான் அவளுக்கு இனி எல்லாமுமாக இருக்கவேண்டும் என்ற பொறுப்புணர்வு இருந்ததால் அவளைப் பொறுத்துப் போனாள். 


அதுதானே அவளின் அடிப்படை இயல்பு? இடைப்பட்ட காலங்களில் அவள் வாழ்வில் நடந்த மோசமான நிகழ்வுகள் அவள் குணத்தை, இயல்பை, பண்பை மூர்க்கமாக்கியிருந்தது. இன்று அண்ணியாக இல்லாமல் ஒரு பெண்ணாக நிர்மலாவை அணுகினாள். அவள் என்ன பேசினாலும் இவள் அவளை ஒதுக்கவில்லை. ஆனால் நிர்மலா அர்ஜூனுடன் சந்தனாவைச் சேர்த்து பேசும்போது இவள் வேண்டுமென்றே சஞ்சு பெயரை இழுப்பாள். அந்த ஒரு விடயத்தில் மட்டும் நிர்மலாவின் பேச்சு அனுவுக்கு பிடிக்கவில்லை. இவளின் மனதில் மூத்த மகனுக்காக எதிர்பார்க்கும் பெண்ணை, அவன் தம்பியுடன் இணைத்துப் பேசுவதை அனுவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


குழந்தைகளின் மனதைக் கெடுத்து வைத்தால் இருவரையும் கொன்று போட்டுவிடுவேன் என பாஸ்கரன் மிரட்டி வைத்திருந்த காரணத்தால், இருவரும் இதுவரையில் நேரடியாக சந்தனாவிடம் இது குறித்து பேசியிருக்கவில்லையே தவிர, அவர்களின் பனிப்போர் இந்த விடயத்தில் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது.


மற்ற நேரங்களில் நிர்மலா அனுவைப் பேசுவதையும் அனு அதற்கு எதிர்வினையாற்றாமல் புன்சிரிப்புடன் பழகுவதையும் பிள்ளைகள் மூவரும் கவனித்துக் கொண்டே இருந்தனர். அதிலிருந்து வயது வந்த பிள்ளைகளான அவினாஷூம் சந்தனாவும் தங்கள் அத்தையின் சார்பில் பேசி அம்மாவை அடக்க, அர்ஜூன் நிர்மலாவுக்கு செல்லம் ஆதலால் அவன் தன் அத்தையை எதிர்க்காமல் சிரித்த முகமாகவே கால் வாரி விட்டுவிடுவான்.


ராஜேஷ் காலஞ்சென்ற பின்பு நிர்மலா வீட்டில் எந்த ஒரு முக்கிய முடிவானாலும் அவள் கொழுந்தன் ரமேஷூடனும் பாஸ்கரனுடனும் கலந்து பேசிதான் எடுப்பாள். சந்தனாவின் கல்லூரிப் படிப்பு, வேலை, அவினாஷின் தொழில், கல்யாணம் என அனைத்திலும் ரமேஷ், பாஸ்கரனின் தலையீடும் சம்மதமும் இருக்கின்றன.


வருடம் 2034


பிரபஞ்சன் குடும்பத்தினர் சென்னை சென்று சேர்ந்தபோது, நேரம் காலை பத்து மணி! இன்னும் சற்று வெந்தால் குக்கரிலிருந்து இறக்கிவிடலாமெனும் உருளைக்கிழங்கின் பக்குவத்தில் இருந்தது சென்னை.


காரில் கண்ணாடியூடே பிரகதியைப் பார்த்து நக்கலாக சிரித்தான் அக்னி. “என்ன மேடம் சென்னை வெயில் குளுகுளுன்னு இருக்குதா?”


“அடுப்பிலேத்தி உட்கார வச்சாலும் அவினாஷ் இருக்கற ஊர் ஆல்ப்ஸ் மலை மாதிரி இருக்குதுன்னு சொல்லுவா! என்னடா?” என்று பிரபஞ்சன் மகளிடம் கேலி பேச,


“போங்க டாடி!” என்று அவள் சிணுங்குகையில், அவள் அலைபேசி ஒலியெழுப்பியது. அது அவினாஷிடமிருந்து வந்த குறுஞ்செய்தியாக தானிருக்குமென அனைவருக்கும் தெரிந்திருந்ததால் காரில் மெல்லிய சிரிப்பலைப் பரவியது.


அக்னி பதின் பருவத்தை எட்டும் வரை அவனைப் பிரபஞ்சன் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரவில்லை. அதிலும் திருச்சிக்கு போக வேண்டியிருந்தால் நிச்சயமாக அழைத்து வரமாட்டான். மீசை முளைத்த பின்னர் அக்னி சில முறை சுற்றுலாவின் போது தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறான். மஞ்சள் முகமும் சில நீண்ட தலைமுடி பெண்களும் அவனின் தங்க அம்மாவின் நினைவுகளைக் கிளறிவிட்டு பாடாய்ப்படுத்த, அதன்பின் அவனாகவே இங்கே வருவதை நிறுத்திக்கொண்டான். தொழிலில் கால் பதித்தபோது தொழிலின் பொருட்டு ஓரிரு முறை சென்னை வந்து இரு நாட்கள் மட்டும் தங்கி போனதுண்டு! அதன்பின்னர் இப்போதுதான் வருகிறான்.


பிரபஞ்சனின் தொழில் ரீதியான நண்பர் ஒருவரின் விருந்தினர் இல்லத்தில்தான், திருமணம் முடியும்வரை இவர்கள் தங்குவதற்காக பேசியிருந்தனர். அங்கேயே உதவிக்கு, சமையலுக்கு என ஆட்கள் இருந்தார்கள். களைப்பு தீர அனைவரும் குளித்து ஓய்வெடுத்தனர்.


அவர்களுக்கு நேரம் கொடுத்துவிட்டு, பாஸ்கரன் மாலையில் அனு மற்றும் அவினாஷூடன் வருவதாக தகவல் சொன்னான். சம்பந்தி குடும்பத்தினரைச் சம்பிரதாயமாக வரவேற்க பாஸ்கரன் நினைத்திருக்க, பிரகதியைப் பார்க்கவேண்டுமென அவினாஷூம் அவனுடன் ஒட்டிக்கொண்டான்.


‘இவங்க உபசரிப்புல ஈ விழ!’ என்று மனதினுள் கரித்துக் கொட்டினான் அக்னி. அவனின் அவஸ்தை அவனுக்கு! முயன்று அனுவின் மேலிருந்த கோபத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டான். அவள் கருவறையின் கோலாகலத்தில் கொஞ்சம் இடம்! அதை அவள் இவனுக்கு தரவில்லையே!


‘நீ என்னை உன் வயித்துல பெத்துக்கலைதானே?’


எங்கே அனுவின் முகத்தைப்‌ பார்த்தால் இந்த கோபமும் வலுவிழந்து கரைந்துவிடுமோ என்று பயமாக இருந்தது. 


மாலை மலரும் பூக்கள் இரவுக்கு அழைப்பு விடும் நேரத்தில் அவர்கள் மூவரும் வந்தனர். வரவேற்புகள், முகமன்கள், நல விசாரிப்புகள் என்றிருக்கையில் அக்னிக்கு தொழில் ரீதியான அழைப்பு வர, ‘நல்லதா போச்சு!’ என்றெண்ணிக் கொண்டு, ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து நகர்ந்தான். 


தான் செய்த முந்திரி கொத்து என்று அனு ஒரு சிற்றுண்டி பெட்டியைத் தந்தாள்.


“நான் முன்னாடி அடிக்கடி செய்வேன். திருச்சில முந்திரி கொத்து செய்யாதவங்க ரொம்ப கம்மி!” -அபிராமி.


“ஓ! நான் எங்க மாமியார் கிட்ட கத்துக்கிட்டது.”


“உங்க சொந்த ஊர் எது?”


“திண்டுக்கல்ம்மா.”


“திண்டுக்கல்ல பிரியாணிதானே ஃபேமஸ் ஆன்ட்டி? அக்னிக்கு ஹோட்டல்ல சாப்பிடணும்னா தலப்பாக்கட்டி பிரியாணிதான் உள்ளே இறங்கும்.” என்று சிரித்தாள் பிரகதி. 


“எல்லாரும் வீட்டுக்கு வாங்க. நானே செஞ்சு தர்றேண்டா.”


“திண்டுக்கல்ல எங்கே? எங்க வீட்டுக்காரர் பக்கத்து சொந்தக்காரங்க அங்கே தான் இருக்காங்க.”


தன் அம்மா வீட்டுப் பகுதியின் பெயரைச் சொன்ன அனு, “அம்மா இப்போ இல்லைம்மா. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தவறிட்டாங்க. சோ, நானும் இப்போ அங்கே போறதில்லை.” என்றாள்.


பெண்கள் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, யாருக்கும் தெரியாமல் அவினாஷ் பாஸ்கரனின் அடித்தொடையில் கீற, அவன், “அவினாஷ் கிட்ட பிரகதி பேசட்டுமே?” என பிரபஞ்சனிடம் கேட்டான்.


“பை ஆல் மீன்ஸ்!” என்ற பிரபஞ்சன், “பின்னாடி கார்டனுக்கு கூட்டிட்டு போடா!” என்றான் மகளிடம்.


பாஸ்கரன் செல்பவர்களையே பார்த்திருந்தான். 


“என்ன பார்க்கறீங்க?” 


“இல்ல… காலைல இருந்து மாமா மாமான்னு எக்ஸ்ட்ரா ‘மாமா’ சொல்லி காலையே சுத்தி வந்துட்டிருந்தான். இப்போ அப்டியே ஆகிடுச்சு பாருங்களேன்.” என்று விகல்பமற்று சொல்லி, கண்கள் சுருக்கி இளஞ்சோடிகள் சென்ற திசையைப் பார்க்க, வெடித்துச் சிரித்தான் பிரபஞ்சன்.


இருவருமே கலகலப்பானவர்கள் என்பதால் சிறிது நேரத்திலேயே பெயர் சொல்லி அழைக்குமளவிற்கு பழகிவிட்டனர்.


“இன்விடேஷன் எல்லாம் கொடுத்து முடிச்சிட்டா நீங்களும் எல்லாரும் அவினாஷ் வீட்டுக்கு வரணும் பிரபு. நிர்மலா உங்களைக் கூப்பிட்டா!”


“ஷ்யோர் பாஸ்! கல்யாண வேலையெல்லாம் அக்னி மேனேஜ்மென்ட் கிட்ட கொடுத்துட்டான். அதனால நாம கொஞ்சம் ஃப்ரீ தான். நாளன்னிக்கு வர்றோம். டைம் பார்த்துட்டு சொல்றேன்.”


இரவு உணவு சாப்பிட சொல்ல, நாகரீகமாக மறுத்துவிட்டு கிளம்பினான் பாஸ்கரன். “பரவாயில்ல பிரபு. நீங்க ரெஸ்ட் எடுங்க! இன்னொரு நாள் பார்க்கலாம்.”


அவினாஷ் வந்ததும் புறப்பட ஆயத்தமாக, அனுவும் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு முன்னால் நடந்துவிட்டாள். எழுந்து நின்ற பாஸ்கரனை நிறுத்தி அபிராமி திருமண மண்டபம் பற்றி பேச, அவினாஷ் அதற்கு பதிலளித்துக் கொண்டிருந்தான்.


“மேரேஜ் ஹாலோட கேம்பஸ்லயே பெரிய லாட்ஜ் இருக்குது பாட்டி. நாம எல்லாரும் அங்கேயே தங்கிக்கலாம். ஆல்ரெடி நான் மச்சான் கிட்ட (அக்னி) சொன்னேனே…”


“அதான்பா கேட்கறேன். அவன் என்னவோ நூறு ரூம் இருக்குது. அதுக்கும் சேர்த்துதான் பணம் கட்டுறோம்ன்னு சொல்றான். நம்ம நெருங்குன சொந்தத்தை எல்லாம் அங்கேயே தங்க வச்சிக்கலாமா?”


“கண்டிப்பா பாட்டி! எல்லா வசதியும் உள்ளேயே இருக்குது. வெகிகிள் ஆல்சோ அவெய்லபிள்! நீங்க அதைப் பத்தி யோசிக்கவே வேணாம்.”


இதற்கிடையே அவர்கள் வருகிறார்கள் என நினைத்து வெளியே காரைச் சமீபித்திருந்த அனு, மறுபக்கம் திரும்பி அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த அக்னியைப் பார்த்தாள். விளக்கு வெளிச்சத்தில் நிழலோவியம் போல் தெரிந்த அவன் உருவமும் உயரமும் உடல்மொழியும், அவளுக்கு பாஸ்கரனை நினைவுபடுத்தியது. அவள் மனத்தின் கூக்குரல் ஆர்பரிக்க ஆரம்பித்தது.


இதுபோன்ற நேரங்களில் அவள் மனதினை ஒருமுகப்படுத்த வேண்டுமென யோகப் பயிற்சியில் பயின்றிருக்கிறாள். ஆனால் இப்போது ஏதோவொரு ஈர்ப்புவிசையால் செலுத்தப்பட்டவள் போல தன்னை மறந்து அவனையே பார்த்திருந்தாள்.


அனு அன்று முதல்முறையாக இவர்கள் பிரகதியைப் பார்க்க பெங்களூர் சென்றிருந்தபோது தான் அக்னியைப் பார்த்திருந்தாள். அதற்கு பிறகு இப்போதுதான் சந்திக்கிறாள். பெண்ணின் அண்ணன் என்றளவில் தெரியுமே தவிர, பெயரெல்லாம் கேட்டுக் கொள்ளவில்லை.


தன்னியல்பாய்க் கால்கள் மெல்ல அவன்புறம் நகர்ந்தது. நெருங்க நெருங்க வெளிச்சம் அதிகரித்தது. பக்கவாட்டில் அசைவு தெரிந்து அவளை நோக்கித் திரும்பினான் அக்னிஸ்வரூபன் (சஞ்சய்?).


அனுவைக் கண்டதும், “டேக் ட்டூ யூ லேட்டர்.” என்றவாறு அழைப்பைத் துண்டித்தான். அழைப்பிற்கு சொன்னானோ! அன்னைக்கு சொன்னானோ! 


அனுவின் அசையாதப் பார்வை இவனை அசைத்துப் பார்த்தது. எச்சிலை விழுங்கினால் கூட ‘ஆடம்ஸ் ஆப்பிள்’ ஏறி இறங்கி உள்ளே ஊறும் பதற்றத்தைக் காட்டிக் கொடுத்துவிடுமோவென மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றான்.


சிந்தனையேயின்றி அவனை நெருங்கி நின்ற அனு அண்ணாந்து அவன் முகத்தைக் கண்ணெடுக்காமல் பார்த்தாள். அடர்ந்த சிகையும் நெற்றியும் கண்களும் அப்படியே பாஸ்கரனின் அச்சுப் பிரதி! பாஸ்கரனை முதன்முதலில் கோவிலில் சந்தித்தபோது முதலில் அனுவை ஈர்த்தது அவன் கண்கள்தான்! அந்தக் கண்களை அவளன்றி வேறு யாரால் அடையாளம் காணமுடியும்? உடையலங்காரமும் சிகையலங்காரமும் இந்தக் காலத்திற்கேற்றாற் போலிருந்தாலும் விழிகளின் வடிவம் வாய்மை பேசுகிறதே!


பார்த்தாள். விரிந்த விழிகளோடு பார்த்தபடியே நின்றாள்.


இப்போது பாஸ்கரனின் தாயார் உயிருடன் இருந்து, அவர் அக்னியை நெருக்கத்தில் பார்த்தால் கூட அனுவைப் போல அவருக்கும் இவன் தன் பேரனாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் வந்திருக்கவே கூடும். சஞ்சு பிறந்திருந்த போது அவர் பாஸ்கரனின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு குழந்தையின் கண்கள் பாஸ்கரனைப் போலவே இருப்பதாக சொன்னார்தானே? தாய்க்கும் தாரத்திற்கும் மட்டுமேயான நுண்ணிய உணர்வல்லவா அது?


“அனு போகலாமா?” என்றபடி பாஸ்கரன் அங்கே வர,


சுயம் உணர்ந்து சற்றே தலைத் திருப்பி தன் கணவனைத் தழுவி மீண்ட கண்கள், மீண்டும் அக்னியின் புறம் திரும்பியது. தன்னையுமறியாமல் கேட்டாள். “உங்… உங்க பேரு…”


“அக்னிஸ்வரூப்! அக்னிஸ்வரூப் பிரபஞ்சன்!”


‘ஹப்பா! சும்மா பெயரைச் சொல்வதிலேயே எத்துணை சீற்றம்! அந்த இதழ்களில் ஏன் இத்துணை இறுக்கம்?!’ எதிராளியை விலக்கி நிறுத்தும் அவன் அழுத்தத்தில் அதற்குமேல் அவனிடம் பேச முற்படாமல், சிறு புன்னகையைத் தந்துவிட்டு பாஸ்கரனுடன் நகர்ந்தாள் அனுராதா.


காரில் போகும்போதெல்லாம் இவள் கண்களுக்குள் அவன் கண்களே! கண்களை மூடிக்கொண்டு அவள் தலையை இடவலமாக உருட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு, அவினாஷ் தன்‌ மாமனுக்கு கண்காட்ட, அவன் வழிநெடுகப் பேசி பேசியே அவளைத் திசைதிருப்பினான். பாஸ்கரனின் வாய் ஜாலம் நாம் அறியாததா?


‘முடியாது! முடியாது! இவன் அவனாக இருக்கவே முடியாது. என் பாஸ்கர் ஐந்து நிமிடத்தில் ஐநூறு வார்த்தைகள் பேசுவார். அவன் ஒரு வார்த்தை பேசுவானா? சந்தேகம்தான்! என்ன பார்வை அது! பெயரைப் போலவே அவன் கண்களும் அக்னி ஸ்வரூபமாகவே இருக்கிறது. பாஸ்கரின் கண்கள் சாந்தத்தைப் பொழிபவை; குளுமையைத் தருபவை! நிச்சயம் இவன் என் சஞ்சுவாக இருக்கவே முடியாது.’ என்ற முடிவிற்கு வந்த பின்னரே இயல்பானாள் அனுராதா.


அங்கே அக்னியின் வீட்டில், அனுவின் பார்வையில் உள்ளுக்குள் அதிர்ந்திருந்தவன் இதயத்தைச் சமன் செய்ய முழுதாக இரு நிமிடங்கள் தேவைப்பட்டது. 


அவன் உள்ளே நுழைகையில், “இந்த பொண்ணு கண்ணுல ஏதோ சோகம் தெரியுதுல்ல?” என்று அனுவைக் குறிப்பிட்டு சொல்லி கொண்டிருந்தார் அபிராமி.


“எனக்கும் தோணுச்சு அத்தை.”


“அஷ்ஷூ சொல்லிருக்கார்ம்மா!”


என்னவென்று அனைவரும் பிரகதியின் முகம் பார்க்க, அக்னியின் இதயம் மீண்டும் தடதடத்தது. வறண்ட மண் வான்மழை தேடுவதைப் போல் ஆர்வமாகவும் இருந்தது.


“ஃபாரின் போன அவங்க மூத்தப் பையன் ரொம்ப வருஷமா வரவே இல்லையாம். அவரை நேர்ல பார்க்க முடியாம சில சமயம் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிடுவாங்களாம்.”


இவனுக்கான அவளின் தாய்ப்பாசம் இன்னும் உயிர்ப்போடிருக்கிறது. அவளின் இன்னுயிர் இன்னமும் கூடடையாமல் இவனுக்காக தவித்துக் கொண்டிருக்கிறது.


அக்னியின் கண்ணீர்சுரப்பிகள் சுறுசுறுவென கிளம்பி நின்றன. ‘என் தங்க அம்மா! இன்னும் என்னை நினைச்சிட்டிருக்கியாம்மா?’


“இருக்காதா? இப்பவும் உங்கம்மா அக்னி முகத்தைப் பார்த்தப்புறம் தான் ராத்திரி தூங்கவே போறா!” என்று அபிராமி அங்கலாய்க்க,


“எனக்கெல்லாம் அவங்களவுக்கு தைரியம் இருக்காது அத்தை.” என்றவள் அக்னியின் புஜத்தில் சாய்ந்துகொண்டாள்.


நேசித்துக் கிடக்கும் இரு ஜீவன்களில் யாருக்காக வரம் கேட்பதென மருகி நின்றான் அக்னிஸ்வரூபன்.


இரு கரைகளை உடைத்திடவே…

பெருகிடுமா கடல் அலையே…

இரு இரு உயிர் தத்தளிக்கையில்…

வழிசொல்லுமா கலங்கரையே…


இசைக்கும்...

Comments

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25