கருவறை கீதம் -20


 

அத்தியாயம் 20


இனி 2034’இல் மட்டுமே கதைப் பயணிக்கும்.


ரு இதயம்தானே இருக்கிறது! இறைவன் இன்னும் நான்கைத் தந்திருக்கக்கூடாதா?


நிர்மலாவின் அழைப்பின் பேரில் அன்று காலையில் அவினாஷ் வீட்டிற்கு பிரபஞ்சன் குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். கல்யாண வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இவர்களுக்காக ஒரு சிறிய ‘கெட் டூகெதர்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒருநாள் முழுவதும் இங்கேதான்!


இவர்கள் கார் போய் நிற்கவும், இளநீல டிஸைனர் புடவையும் பொருத்தமானப் பெரிய காதணியும் வெற்றுக் கழுத்தும் தெற்றுப்பல் சிரிப்புமாய் முதல் ஆளாக வந்து நின்றாள் சந்தனா! நடையில் ஓர் துள்ளல்! 


அவினாஷ் வீடு புது டிஸ்டெம்பரும் பூத் தோரணங்களும் எனக் கல்யாணத்திற்கு தயாராகியிருந்தது. அவன் தங்கையும் புதுப் பூவைப் போலவே வந்து நின்றாள்.


அவளைப் பூட்டத் தான் ஒற்றை இதயம் போதாத அக்னிக்கு நான்கிதயங்கள் வேண்டுமாம்!


“ஹாய் யங் லேடி! வாங்க அங்கிள், ஆன்ட்டி, ஹாய் பிரகதி!” என உற்சாக வரவேற்பு தந்தாள்.


“அவ நாம வாங்கிக் கொடுத்த செயினைப் போடலை பாரு!” என்று அபிராமி மருமகளின் காதைக் கடிக்க,


“அதெல்லாம் நாம எதிர்பார்க்கக் கூடாதில்ல அத்தை?” என்று நிரஞ்சனாவும் அவரைப் போலவே முணுமுணுத்தாள்.


அக்னி காரை நிறுத்திவிட்டு வர அனைவரும் உள்ளே சென்றிருந்தனர். இவனை அவினாஷ் கரம்குலுக்கி வரவேற்றான். “வாங்க மச்சான்.”


ஒருவிதத்தில் அக்னிக்கு அவினாஷின் மேல் நன்றியுணர்வு தோன்றியது. அவன் மட்டும் பிரகதியிடம் தன்னைப் பற்றி- தொலைந்து போன சஞ்சய் பற்றி சொல்லியிருந்தால், இந்நேரம் பிரபஞ்சன் வீட்டில் உண்மைத் தெரிந்திருக்குமே! திருமணம் நடக்கவிருக்கும் இந்நேரத்தில் எந்த இடையூறும் வர வேண்டாமென நினைத்தான் அக்னி.


“கல்யாண வேலைலாம் எப்டி போகுது?”


“ஸ்மூத்!” எனும் போதே, 


“அத்தான்ன்!” என்று அவினாஷை இரைந்து அழைத்தபடி, ஒரு சட்டையைக் கையில் வைத்துக்கொண்டு உள் பனியனும் இள நீல ஜீன்ஸூமாக அடித்துப் பிடித்து மாடியில் இருந்து இறங்கி வந்தான் அர்ஜூன். 


“என்னடா?”


“இந்த எஸ்கிமோ டாக் (dog) என்ன பண்ணிருக்குது பாருங்க!” என்ற பின்னரே ஹாலில் கூடியிருந்த மக்கள் கண்ணுக்குத் தெரிய, “ஹிஹி… வாங்க வாங்க… ஹாய் பிரகதி!” என்று இளித்து வைத்து சமாளிக்க நினைக்க,


“வீட்டுல எஸ்கிமோ டாக் எல்லாம் வளர்க்கறீங்களா என்ன?” என்று கேலியுடன் கேட்டார் அபிராமி.


“அவன் இவளைத் தான் சொல்றான்ம்மா. இவ ஏதாவது விஷமம் பண்ணிருப்பா! என்னடி செஞ்ச?” - நிர்மலா.


சந்தனா, “விஷமம்லாம் ஒண்ணுமில்லைம்மா. அவனை சர்ப்ரைஸ் பண்ணலாம்ன்னு ஆசையா அவன் புது ஷர்ட்ல அழகா எம்ப்ராய்டரிங் தான் செஞ்சேன். அதுக்கு போய்…” என்று பாவம் போல் முகம் சுருக்கி சொன்னவள் எழுந்து, “எல்லாருக்கும் காட்டுடா அதை!” என்று அர்ஜூனை நோக்கி செல்ல,


சட்டென்று கையிலிருந்த சட்டையைப் பின்னால் மறைத்துக்கொண்டு, “போடி!” என்றுவிட்டு மீண்டும் மாடிக்கு ஓடிவிட்டான் அவன்.


இதழ் மடித்து சிரித்தவாறு மீண்டும் அபிராமியின் அருகே வந்து அமர, அவர் வழக்கம்போல் முகம் திருப்பிக்கொண்டார்.


பிரபஞ்சன், “அர்ஜூனை அலற விடறளவுக்கு அப்டியென்ன எம்ப்ராய்டரிங்கா இருக்கும்ம்…” என்று யோசனை போல் தாடையைத் தடவ,


“அது பூ டிஸைன்தான் அங்கிள். அவனுக்கு கேமிங் ஐகான்ஸ் தான் பிடிக்கும்… ஹிஹி…” என்று அவள் சமாளிப்பதிலேயே ஏதோ செய்து வைத்திருக்கிறாளென அனைவருக்குமே புரிந்தது.


நிர்மலா மட்டும் மகளை முறைக்க, அனைவரும் புன்னகையுடன் வேறு பேச்சிற்கு தாவ, நடப்பதை ஜீரணிக்க முடியாமல் அமர்ந்திருந்தவன் அக்னிஸ்வரூபன் தான்! அர்ஜூனுக்குதான் சந்தனா என்று தெரிந்ததிலிருந்தே அவனால் அவர்களுக்கிடையேயான இந்த நெருக்கத்தை, பிணைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அளவுக்கதிகமாக ‘கொரியன் கிம்ச்சி’ தின்றதைப் போல் உள்ளுக்குள் கபகபவென எரிந்தது. 


[இப்போதே நம்மூரில் கிம்ச்சியின் ஆட்சி ஆரம்பமாகிவிட்டதால், இன்னும் பத்து வருடத்தில் சர்வ சாதாரணமாக அனைவரும் கிம்ச்சிக்காக பாட்டிலைத் துடைத்து வைத்துக் கொண்டிருப்போம். ஓகே, யூ கன்டினியூ…]


கூடவே அங்கே அனுவின் ஆராய்ச்சி பார்வை வேறு அவனை இயல்பாக இருக்க விடவில்லை. ‘அம்மாவுக்கு டௌட் வந்துடுச்சு. ஆனா எப்டி?’


கருவறையைத் தராதவளுக்கு எந்த பந்தத்தின் அடிப்படையில் தன்னைத் தெரிகிறது? வெறும் எட்டு வருடத்திற்கும் குறைவான சொந்தத்தின் மணம் இன்னும் அவள் நந்தனக் காற்றில் கரைந்து வெறிச்சோடி போகவில்லையா என்ன?


வந்தவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. அக்னி அவினாஷைப் பேச்சில் பிடித்துக்கொண்டு சாதாரணமாக இருக்க முயற்சித்தான். அவனுக்கு அலுவலக ரீதியான அழைப்புகள் அடுத்தடுத்து வர, துண்டித்துக் கொண்டே இருந்தவனை அவினாஷ், “மாடி ஹால் ஃப்ரீயா இருக்குது மச்சான். யாரும் வர மாட்டாங்க. இஃப் எனிதிங் இஸ் இம்ப்பார்டண்ட் யூ கேன்!” என்று அவன் கைப்பட்டையைக் கண்களால் காட்டி சொல்ல,


“தேங்க்ஸ் அவினாஷ்!” என்றவன் மற்றவர்களுக்கு தலையசைப்பைத் தந்துவிட்டு, முதல் தளத்திற்கு போய் அலுவல் பேச்சுக்களில் மூழ்கிவிட்டான்.


“தம்பி எப்பவும் பிஸியாவே இருக்கார்.” செல்லும் அக்னியைப் பார்த்து பாஸ்கரன் சொல்ல,


வேகமாக சொன்னாள் நிரஞ்சனா. “படிச்சு முடிச்சு அவங்கப்பாவோட கம்பெனிக்கு வருவான்னு பார்த்தோம். ஆனா அவனாகவே தனியா பிஸினஸ் செய்யணும்னு சொன்னான். புது டெக்னாலஜி! ஆனா அக்னி எதுலேயும் ஜெயிச்சிட்டு தான் வருவான்னு எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. சின்ன வயசுலேயே, ‘ஐ’ம் அ சூப்பர் ஹீரோ’ன்னு சொல்லிட்டே இருப்பான். இப்போ அவங்கப்பாவை விடவும் அவன்தான் பிஸி!”


அவள் பேச்சில் மகனைக் குறித்த பெருமிதம் தளும்பியது. அதனைக் கேட்டுக்கொண்டே வந்தமர்ந்தான் அர்ஜூன். 


‘சஞ்சுக்குட்டி ஒரு சூப்பர் ஹீரோவாம்…’ 


குட்டி சஞ்சுவின் முகத்தில் அவ்வப்போது படியும் பயரேகைகளை அழிக்க அனு அளிக்கும் தைரியப் பானமல்லவா இந்த வாசகம்! 


தலைக்குள் ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு முயன்று அணைப் போட்டாள் அனு. “அலையன்ஸ் எதுவும் பார்க்கறீங்களா?” 


“அதுக்கு மட்டும் பதிலே சொல்ல மாட்டான். அழுத்தி கேட்டா நோ ஐடியான்னு சொல்லுவான்.”


“இவனும் அப்டி இருந்தவன்தான். பிரகதியைப் பார்த்ததும் பிடிக்கலையா?” என்று அவினாஷைக் கைக்காட்டினாள் நிர்மலா.


“ம்ம், எல்லாத்துக்கும் நேரம் வரணும்.” -அபிராமி.


மாடியில், அலுவல் பேச்சு மும்முரத்தில் அரைமணி நேரம் கழித்தே அக்னிக்கு சுற்றுப்புறம் உரைத்தது. எப்படியும் மாப்பிள்ளை வீட்டார் இவர்களை இரவு உணவு முடித்துதான் அனுப்புவார்கள். அதுவரை சூழ்நிலையில் பொருந்திக் கொள்ள சில நொடிகள் எடுத்து மனதினைத் திடப்படுத்தி கொண்டு அப்படியே அமர்ந்திருந்தவன் பின்னர் எழ முற்பட்டான்.


அப்போது கீழேயிருந்து அர்ஜூன் துரத்திவர, ஓடிவந்த சந்தனா அக்னி இருப்பதைக் கவனிக்காமல் சோபாவில் முழங்கால் இடித்து, அப்போதுதான் எழுந்து சற்றே பக்கவாட்டில் திரும்பியிருந்த அக்னியின் மார்பைத் தொட்டுவிடும் தூரத்தில் வந்து சுதாரித்து நின்றுவிட்டாள். பின்னால் துரத்தி வந்த அர்ஜூனை எரிச்சலாக பார்த்துவிட்டு, இவளிடமும் கடுமையைக் காட்டியது அக்னியின் கண்கள்.


“ஸாரி!” என்றபடி நிமிர்ந்து நகர எத்தனித்தவளை, 


“மாட்டுனியாடீ?” என்றவாறு ஓடி வந்த வேகத்தில் இடித்திருந்தான் அர்ஜூன். அதில் நிலை தடுமாறி அக்னியின் மீது அவள் விழ, பின்புறம் நீள்விரிக்கை தட்டியதில் சமநிலைத் தவறி, அவளை மார்பில் தாங்கிக்கொண்டு அக்னியும் அதிலேயே விழுந்தான்.


கட்டியிருந்த புடவை சந்தனாவை சட்டென எழுந்துகொள்ள விடவில்லை. சில நொடிகள் தன் உணர்வுகளை வென்று, தன்னை நிலைப்படுத்தவே அக்னி பெரும்பாடு பட வேண்டியிருந்தது. 


பெயர் மட்டும்தான் சந்தனமா? இல்லை ஆளும் சந்தனமா? மாரியாத்தா இத்துணை வாசமாக இருக்கிறாளே!


இருந்த எரிச்சலில் தன்னுணர்வுகளும் சதி செய்ய, அந்த கோபத்தையும் அவள் மீதே காட்டினான். “வாட் த ஹெல்!”


அதற்குள், “ஸாரிண்ணா ஸாரி!” என்ற அர்ஜூன் சந்தனாவின் கரம்பற்றி எழுந்துகொள்ள உதவ, மறு கையை சோபாவின் முதுகில் ஊன்றி எழுந்துகொண்டாள் அவள்.


அவளுக்கும் ஏற்கனவே அவள் தோழி அபிந்தா ‘பாய் ஃப்ரெண்ட்’ என்று பேசியதை அக்னி கேட்டதிலிருந்து, அவன் தன்னைத் தவறாக எண்ணியிருக்கக் கூடுமென்ற சங்கட உணர்வு இருக்கிறதே! அதன்பொருட்டு இப்போது அக்னியின் கோபம் அவளையும் தூண்டிவிட்டது. “உங்க மேலே வந்து விழணும்னு ஒண்ணும் யாரும் இங்கே ஓடி வரலை மிஸ்டர் ஸ்வரூப்!”


அவளின் கோபத்தில் திகைத்த அர்ஜூன், அவள் ஏதேனும் பேசி ஏழரையை இழுக்கும்முன், “அண்ணி! பேசாம வா!” என அடக்க, 


ஆக்ரோஷத்தை உமிழ்ந்து கொண்டிருந்த அக்னியின் கண்களை, முதலில் ஆத்திரத்தில் பார்க்க ஆரம்பித்த சந்தனாவின் பார்வை இரு நொடிகளில் மாறிவிட்டது.


அர்ஜூன் தன்னை இழுப்பதையும் கண்டுகொள்ளாத அவளின் கவனம் முழுவதும் அவன் கண்களில் மட்டுமே! ‘இந்த கண்கள் யாரையோ நினைவுபடுத்துகிறதோ?’


அக்னி அர்ஜூனைப் புரியாமல் பார்த்திருக்க, அப்போதும் சந்தனா விழியகற்றவில்லை. அருகே இருக்கும் உருவத்திற்கு திரைபோட்டாற் போல, மனதிலிருக்கும் உருவம் மறைந்து நின்று ஆட்டம் காட்டியது.


அர்ஜூன் மீண்டுமொருமுறை அக்னியிடம், “ஸாரிண்ணா” என்றுவிட்டு பொறுமையற்று அவளை இழுத்துக்கொண்டு போனான்.


அக்னி கோபம் மொத்தமும் வடிந்து, திகைத்து, திருதிருத்து நின்றான். ‘அண்ணி?’


தான் மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது அர்ஜூன் பாலபாடம் சென்றதாக நினைவு! சந்தனாவும் அர்ஜூனும் ஒரே வயது என்ற வரை நினைவிருக்கிறது. இப்போது அவளைப் பெரியவள் போல் ‘அண்ணி’ என அழைக்கிறான். ஆனால் வீட்டில் இவர்களுக்கு திருமணம் பேசுகிறார்கள்? 


‘என்னடா நடக்குது இங்கே?’ என்ற ரீதியில் நெற்றியைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.


அதே சமயம் மேலே வந்த அனு தன்னை இடித்துவிட்டு ஓடும் குழந்தைகளிடம்(?) செல்லமாக அலுத்துக்கொண்டாள். “ஆஆ!! மெதுவாதான் போங்களேண்டா… ரெண்டு பேருக்கும் இன்னும் சின்னப் பிள்ளைங்கன்னு நினைப்பு!” 


அவள் குரலில் நிமிர்ந்த அக்னியைக் கண்டுவிட்டு, “டிபன் சாப்பிடலாமே தம்பி? மேலே கொண்டு வரச் சொல்லவா?” எனக் கேட்க,


“இல்ல, ஐ’ம் ஃபுல். தாங்க்ஸ்.” என்றான்.


“வந்ததுல இருந்து எதுவும் சாப்பிடவேயில்ல. ஃபுல்ன்னு சொல்றீங்க. ஒருவேளை டிபன் பிடிக்கலயா? கேசரி? பனீர் பக்கோடா? மெதுவடை?”


“மெதுவடை.” தன்னைப் போல் சொல்லிவிட்டு அநாகரிகமாக சொல்லிவிட்டோமோ என்று ஒரு நொடி தயங்க,


“சரியா சொன்னேனா?” என்ற அனு சிரித்ததும்தான் இயல்பானான். “சரி வேறென்ன பிடிக்கும் சொல்லுங்க. உடனே செய்ய சொல்றேன்.” 


‘கேட்டுவிடு!’ என்று உள்ளம் உந்தியது. “இல்ல… தட்’ஸ் ஓகே!”


“அட! நம்ம வீட்டுல என்ன தயக்கம்? சொல்லுங்க, அக்னிக்கு என்ன பிடிக்கும்?”


‘அம்மா! அம்மா!’ இன்னும் சின்னக் குழந்தையிடம் பேசுவதைப் போலவே பேசுகிறார். சற்றுமுன் அர்ஜூன், சந்தனாவிடமும் அவர் இந்த த்வனியில்தான் பேசினார்.


பட்டென்று கேட்டுவிட்டான். “எக் ஆப்பம்.” 


குரலில் வேண்டும் என்ற அடம் தொனித்ததோ?


‘அம்மாவுக்கு இன்னிக்கு லீவு. சஞ்சுக்குட்டிக்கு என்ன டிஃபன் செய்யலாம்.’


‘நேத்து செஞ்ச ஸேம் ஃபுட் -எக் ஆப்பம்!’


அனுவின் விரிந்திருந்த புன்னகை ஒரு விநாடி சுருங்கி, பின் மீண்டும் விரிந்தது. ஏனோ அல்லோல கல்லோலப்படும் இருதயப் பிரதேசத்தைச் சூழ்நிலையின் பொருட்டு அதட்டி வைத்தாள். “இதோ இப்போவே போய் செய்ய சொல்லி கொண்டு வர்றேன்.” என்றுவிட்டு திரும்ப,


“நீங்க செய்வீங்களா?” என்று கேட்டிருந்தான்.


“ஹான்?”


“அது… முந்தாநாள் நீங்க செஞ்சதா சொன்ன முந்திரி கொத்து நல்லா இருந்தது. அதான்…” என்று தன் முந்தைய கேள்விக்கு பட்டி டிங்கரிங் செய்து பதில் வழங்க,


அப்போதும் இப்போதும் மனிதர்களைப் படிக்கத் தெரியாத மக்கு அனு, அவனின் தடுமாற்றத்தைக் கோட்டை விட்டு விட்டு, “அர்ஜூன் அப்பா கூட நான் கேட்டாலொழிய எந்த கிரெடிட்ஸூம் தரமாட்டார். இதுக்காகவே நானே செஞ்சு எடுத்துட்டு வர்றேன் பாருங்க.” என்று இளவயது பெண் போல் அவன் கேட்டதைத் தன் கையாலேயே செய்ய ஓடினாள்.


‘ஓவராப் போறடா அக்னி!’ என்று இவனுள்ளம் எச்சரித்தது. ஆனால் அம்மாவைக் கட்டிக்கொண்டு, அவள்‌ மடியில் தலை சாய்த்துக்கொண்டு, ‘நான் இல்லாத பொழுதுகளை எப்படியம்மா கழித்தாய்?’ என்று கேட்டு கதைப் பேச வேண்டும் போல் ஓர் மனம் ஏங்கியது.


‘கல்யாணம் முடியற வரை பொறுடா!’


“இங்கே என்ன செய்யறீங்க? மாத்திரையைப் போட்டுக்கிட்டு படுத்துக்கலாம்ன்னு வந்தீங்களா?” என்ற நிர்மலாவின் நிஷ்டூரக் குரலில், அதுவரை செல்லும் அனுவை வாஞ்சையுடன் பார்த்திருந்த அக்னியின் இமைகள் சுருங்கியது.


அத்தை மாறவே இல்லை. அதே வெடுக்கென்ற பேச்சு! அதே கன்ஸர்வேடிவ்!


அனு பதில் சொல்லும் முன், “அவங்க எனக்கு தான் டிஃபன் எடுத்துட்டு வரவான்னு கேட்க வந்தாங்க.” என்றிருந்தான்.


அதன்பிறகே இன்னும் இரண்டு படிகள் மேலேறி வந்து அக்னி இருப்பதைப் பார்த்துவிட்டு, “தம்பி இங்கேதான் இருக்கீங்களா? இதோ நான் போய் எடுத்துட்டு வர்றேன்.” என்று ஓட, அனு இவனை ஓர் அமைதி பார்வைப் பார்த்துவிட்டு நகர்ந்தாள்.


இந்த அத்தை இன்னும் மாறவேயில்லை. அவரை அடக்கி வைக்காமல் இந்த அர்ஜூன் என்ன செய்கிறான்? அவன் அவரை அடக்கிவிட்டால் பிறகு அவரின் மகளின் பின்னே எப்படி சுற்ற முடியும் என்று ஏளனமாக நினைத்துக்கொண்டவனுக்கு எரிச்சல் மிகுந்தது.


நாத்தனார் என்று அம்மாவைப் பேசுவதைப் போல், மாமியார் கோதாவில் பிரகதியை மட்டும் பேசட்டும்… அப்புறம் தெரியும் இந்த அக்னி யாரென்று!


‘பேசாம நாம அவங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணி கொடுமைப்படுத்தினா என்ன?’ என்று சிந்தித்துவிட்டு, ‘ச்ச! ஆன்டி ஹீரோ மாதிரி யோசிக்கறேன்.’ என தன் தலையிலேயே குட்டிவிட்டு சிரித்துக்கொண்டான். அப்படி தான் அவளைத் திருமணம் முடித்தால் உண்மையில் யாருக்கு கொடுமை என்று நினைத்தவனுக்கு இன்னுமே சிரிப்பு பீறிட்டது. சந்தனாவின் வாயும் வாலும் அத்துணை மகத்துவம் வாய்ந்ததல்லவா?


புன்னகையுடன் கண்களைச் சுழலவிட, சுவற்றில் நிர்மலாவின் கணவன் ராஜேஷின் புகைப்படம் மாட்டி மாலையிடப்பட்டிருந்ததைப் பார்த்தான். இந்த மாமாவைச் சிறிது ஞாபகம் இருக்கிறது. இவனை அன்புடன் பார்த்த மற்றொரு ஜீவன்! அருகே போய் பார்க்க, மழைக்கால மண்சுவரின் ஈரலிப்பைப் போல் சிறு வயது ஞாபகங்கள் நினைவடுக்கில் கசிந்தன. 


ஒருமுறை அவர் குடும்பத்துடன் ஸ்ரீரங்கத்து பாட்டி வீட்டிற்கு வந்திருந்த போது சந்தனாவை தோளிலும், இவனைக் கையிலும் பிடித்தவாறு அருகே இருக்கும் கடைக்கு அழைத்துப் போயிருக்கிறார். அப்போது ‘ஜஞ்சூ ஜஞ்சூ’ என மழலைப் பேசிய சந்தனாவிற்கு ‘சஞ்சுத்தான்’ என சரியாக உச்சரிக்கச் சொல்லிக் கொடுத்தவர் அவர்தான்! அதன்பின் ஓராயிரம் முறை சொல்லியிருப்பாள்.


இப்போது, ‘சஞ்சுத்தான்!’ எனும் குழந்தை சந்தனாவின் முகத்தை நினைவுபடுத்த முயன்றான்.


‘இனி எப்போதாவது தன்னை அப்படி அழைப்பாளா?’ எனச் சிந்தித்துவிட்டு தலையை உலுக்கிக்கொண்டான்.


பெருமூச்சுடன் நகர்ந்தவனின் கால்கள், உடனேயே கீழிறங்காமல் பால்கனி பக்கம் சென்றது. அப்போதுதான் பார்த்தான், நீள்விரிக்கைக்கு எதிர்ப்புறம் தொங்கிக் கொண்டிருந்த மூங்கில் கூடை ஊஞ்சலில், தாங்கள் வந்தபோது அர்ஜூன் கையில் வைத்திருந்த அந்தச் சட்டை ஊசலாடிக் கொண்டிருந்ததை! அருகே சுவற்றை ஒட்டினாற் போல் நிர்மலாவின் தையல் இயந்திரம்.


சட்டையைப் பார்த்த கணமே, அவன் கத்திக்கொண்டு வருமளவிற்கு அவள் அதில் அப்படி என்னத்தை எம்ப்ராய்டரிங் செய்திருக்கிறாள் என்ற ஆர்வம் மேலோங்க, சட்டென கை நீட்டி எடுத்து பிரித்துப் பார்த்தான். பார்த்தவனின் விழிகள் சுருங்கி பின் விரிந்தது. 


“பாவி? அடிப்பாவி!” என்று வாய்விட்டு சொன்னவன் வியப்பின் உச்சியில் இருந்தான்.


இசைக்கும்...

Comments

  1. Appidiyellam solla koodathu! Story super ah irukku. rendu naal leave ellam company ku kattupadi agathu.. nalaikae suspense enna nu sollirunga.

    ReplyDelete
  2. Silent reader. story super.

    ReplyDelete
  3. முன்ன விட

    ReplyDelete
  4. முன்ன விட story இப்பதான் ரொம்ப நல்லா போய்ட்டுருக்கு. அம்மாவும் அக்னியும் 💚இப்போதான் பேச ஆரம்பிச்சுருக்காங்க!
    அடுத்த epi சீக்கிரம் போடுங்க ☺

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி 💞💞 Monday வர்றேன்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25