ஆயர்பாடியில் கண்ணனில்லையோ -12

 



அத்தியாயம் 12


பனியும் வெயிலுமென ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. யமுனா இப்போதெல்லாம் சின்ன சின்ன அடிகள் எடுத்து வைக்கிறாள். இந்த ஆறு மாதத்தில் யமுனாவோடு என் ஆன்மா ஒன்றிப்போய் விட்டது. 


இலையின் நுனியில் ஓய்வெடுக்கும் விடிகாலை நேர பனியை விரலிலெடுத்து, என் கண்ணிமைகளில் படரவிடும் யமுனா; என் நெற்றி பூக்கும் வெயில் நேர வியர்வையை உதட்டால் ஒற்றியெடுத்து உலர்த்தும் யமுனா; ஈரம் சொட்டும் என் சிகையில் துப்பட்டாவைத் தவழவிட்டு, சிகை உலர்த்தும் யமுனா; மனம் சோரும் வேளைகளில் மழைநேர தேநீராய் பரவசப்படுத்தும் யமுனா; உறக்கமில்லா இரவுகளில் விரும்பிய பாடலொன்றின் வரிகளாய் என்னுள் ராகமிழைக்கும் யமுனா; என் தும்மல் காலங்களில் பெரும் நிவாரணியாய் என்னோடு துணைநிற்கும் யமுனா!


இவளிடம் இன்னுமொரு உதட்டுமுத்தம், இன்னுமொரு காதல் நாள், இன்னுமொரு விரல் வருடல், இன்னுமொரு சண்டை, இன்னுமொரு கோபம் என்று எனக்கு ஒருபோதும் சலித்துப் போகாத யமுனா!


இப்படியாக என் அன்றாடங்கள் அத்தனையிலும் யமுனாவின் கிருபைகள்! என் காதல் நாட்கள் அத்தனையிலும் யமுனாவின் வியாபிப்புகள்!


 என் ஜென்மம் மகத்தான பூர்த்தியடைந்ததைப் போலவே மனம் ததும்புகிறது. இப்போது இறப்பு வந்து வாசல் நின்றாலும் யமுனாவின் நெற்றியில் முத்தமிட்டு, வாசல் நோக்கி நகர்ந்துவிடும் வல்லமை கைக்கொண்டு விட்டது.


ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறேனல்லவா? இப்படித்தான் ராஜீவனைப் பித்தனாக்கி வைத்திருக்கிறாள் இந்த பொல்லாத யமுனா!


அன்று மருத்துவமனையில் அந்தச் செயினை அணிவித்துவிட்டதும் முதலில் சற்று திகைத்த அவளின் அப்பா, பின்பு இதுதான் சரி என்பதைப் போல் அமைதியாகிவிட்டார். அவள் அம்மாவிற்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை போலும். இருப்பினும் மகளல்லவா? அழுத விழிகளோடு யமுனாவின் தலையை அழுத்திவிட்டு அவளருகேயே அமர்ந்து கொண்டார்கள்.


சரயு, "My wish for you is that 

this life becomes all that 

you want it to

Your dreams stay big, 

your worries stay small

You never need to carry more than 

you can hold…" என்று கைத்தட்டி ஆங்கில வாழ்த்துப் பாடல் ஒன்றை யமுனாவிற்காகப் பாடினாள்.


யமுனா கண்களில் கரகரவென கண்ணீரை வார்த்து என் காதலை நனைத்தாள். 


நான் அவள் அப்பாவிடம் சொன்னேன். "டாக்டர்கிட்ட பேசிட்டேன் சர். இன்னும் ஒரு வாரத்துல டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். நான்… நான் யமுனாவை கேரளா கூட்டிட்டு போக நினைக்கறேன்." என்றுவிட்டு அவள் அம்மாவின் முகம் பார்க்க, அவர் இனி ஈசன் விட்ட வழி என்பதைப் போல் இருந்தார்.


ஆனால் அப்பா, "எங்க வீட்டு முதல் கல்யாணம் சர். ரொம்ப கிராண்டா செய்யணும்னு ஆசைப்பட்டேன். ஆனா இப்ப யமுனா இருக்க நிலைமைல அது முடியாது. சோ… சின்னதா ஒரு ஃபங்ஷன் வச்சிட்டு அப்புறமா கூட்டிட்டு போகலாமே?" என்றதும், எனக்கும் அது சரியெனவே பட்டது.


ஒரு வாரத்திற்கு பின் அவர்கள் வீட்டு சொந்தங்கள் சிலரோடும், மரியம் அம்மாவோடும் யமுனா கல்யாண வைபவம் நடத்தி, பதிவாளர் அலுவலகத்திலும் சட்டப்பூர்வமாக யமுனா என் மனைவியென பதிவு செய்து கொண்டேன்.


இங்கே வந்த சிலநாட்கள் மௌனங்களோடே வசித்தாள். சிலநேரம், "யூ ஆர் அ கிளாசிக், ராஜீவன். உங்களுக்கு ஒரு குறையுமில்லாத நல்ல பொண்ணு கிடைச்சிருப்பா!" என்று பிதற்றுவாள்.


"யூ ஆர் அ ப்யூர் ஸோல், யமுனா. உன்னைத் தவிர வேற யாரு இந்த ராஜீவனை இப்டி காதலிப்பா?" என பதில் கேள்வி கேட்பேன்.


"உண்மையா சொல்லணும்னா நீங்க தான் இப்டி காலொடிஞ்ச நிலைமைலயும் என்னைக் காதலிக்கிறீங்க."


அவள் கால் கொலுசில் முத்தமிட்டு கேட்பேன். "அப்போ உனக்கு ராஜீவன் மேல காதல் இல்லைன்னா சொல்ற?"


முத்தமேற்ற காலைப் பிடித்தபடி சொன்னாள் கிறுக்கச்சி. "ஆனா… ஆனா… உங்களுக்கு ஒரு ப்ளஷரும் தர முடியல." 


சிரிப்பினூடே, "கால் மட்டும் சரியாகட்டும் மேட்டரை முடிக்கறேனா இல்லயா பாரு!" என்று கறார் வட்டிக்காரனாய் நான்.


"இப்பவே கூட முடிக்கலாம் தான்." எனும் தாராள தாரணியாய் அவள்.


"அடிப்பாவி!!!" 


முன்பு நான் 'மேட்டர்' என்று பேசியதற்கு அப்படி முறுக்கிக் கொண்டு போனதென்ன! இப்போது அதே வார்த்தைக்கு வெட்கம் கொண்டு சம்மதிப்பதென்ன!! கழுத்தில் நானிட்ட அந்த ஒற்றை சங்கிலிக்கு தான் இவளிடம் எத்தனை மதிப்பு! 


"நான் நிஜமா தான் சொல்றேன்."


"ஆனா இப்ப வேணாம் யமுனா. நீ கைக்குள்ள இருக்கன்றதையே நான் இன்னும் கொண்டாடி முடிக்கல."


"எனக்காக தான் பார்க்கறீங்கன்னு எனக்கு தெரியும். கால் சரியாகும்னு நினைக்கறீங்களா ராஜீவன்?"


"வித்அவுட் அ டௌட் யமுனா! நான் உன்னை சிறையெடுத்துருக்கறதே சுதந்திரமா விடறதுக்குதான்! இந்த ராஜீவனோட சாம்ராஜ்யத்துக்கு ராணி நீ! நீயும் கெமிஸ்ட்ரி தானே? கால் சரியாகி நீ நம்ம கம்பெனிக்கு வரணும். உன்னால தனியாவே எல்லாம் மேனேஜ் பண்ண முடியும்னு முதல்ல உனக்கு புரியணும்." 


"அதெல்லாம் என்னால முடியுமா?"


"எம்எஸ்ஸி., எம்பிஏ., படிச்சிருக்கவ கேக்கற கேள்வியா இது? இந்த நேரத்துல தான் நீ போல்டா (bold) இருக்கணும். நெவர் கிவ் அப் யமுனா! வின் இன் தி ரேஸ்! டெஃபனட்லி யூ கேன் டூ இட்! எப்ப நீ கான்ஃபிடென்ட்டா நிமிர்ந்து நிற்கறியோ… எப்ப உன் இன்ஃபீரியாரிட்டி ஃபீலிங்ஸை தூக்கிப் போட்டுட்டு, ராஜீவனை மண்டியிட வைக்க யமுனாவோட காதலால மட்டும்தான் முடியும்னு புரிஞ்சிக்கறியோ… அப்ப ஆரம்பிப்பேன், என் மேட்டரை!"


"ரொம்ப மோட்டிவேட்டடா பேசறீங்க ராஜீவன். உங்க ஆறுதலைக் கேக்கறதுக்காகவே வலி ஏத்துக்கலாம் போல இருக்குது." என்று என் கழுத்தடியில் சாய்ந்து சிரித்தாள்.


                🍁🍂🍁🍂🍁🍂🍁


கடைசியாக இதில் எழுதி மூன்று மாதங்களாகி விட்டன. இப்போதெல்லாம் யமுனா நன்றாக நடக்கிறாள். தானே நடந்து கீழே வந்து, காரை எடுத்துக்கொண்டு அலுவலகம் வரை வரப் பழகியிருக்கிறாள்.


தினமும் கம்பெனிக்கு வருகிறாள். அங்கே வேலை செய்பவர்கள் தரும் மரியாதையில் லஜ்ஜையுற்றாலும், தன்னம்பிக்கையாக உணர்வதாக எனக்கு நன்றி சொல்கிறாள்.


எனக்குமே அத்தனை மகிழ்வு! யமுனாவை இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த எண்ணி, சில பார்ட்டிகளை அறிமுகப்படுத்தி நேரடியாக அவர்களுடனான பிஸினஸைக் கையாள கற்றுத் தர நினைத்தேன். அதன்படி அன்று கொச்சின், பார்வதி டிரேடர்ஸ் டீலை யமுனாவிடம் தர, நான் எதிர்பார்த்ததை விடவும் நன்முறையில் வெற்றியடைய செய்திருந்தாள்.


என் காதல் பொண்டாட்டி அல்லவா? எனவே தலை கால் புரியாமல், 'உன் நிறைவேறாத ஆசை என்ன என்று சொல். நான் இப்போதே நிறைவேற்றித் தருகிறேன்.' என்று வாயை விட்டுவிட்டேன். 


அதற்கு அவள் எனக்கு விருப்பமில்லா ஒன்றைக் கேட்டிருக்கிறாள். பொதுவாக எனக்கு மழையை ரசிக்கப் பிடிக்குமே தவிர, அதில் நனையப் பிடிக்காது. யார் எப்படி அழைத்தாலும் என் தலைமுடியிலும் ஒரு சொட்டு மழைநீர் விழ விட்டதில்லை. 


இவளானால் மழையில் நனைய வேண்டும் என்கிறாள். அதுவும் நடுராத்திரியாம்! எனக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை. இந்த நோஞ்சான் உடம்பை வைத்துக்கொண்டு, இரவு மழையில் நனைந்தால் என்னத்திற்காகும்?


எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்துவிட்டேன். ப்ளீஸ் என்ற ஒற்றை வார்த்தைக் கொண்டே என் மறுப்புகளை தகர்த்தெறிகிறாள் ராட்சசி! வேறுவழியின்றி மழை வரும் ஓர் இரவில் அவளை அழைத்துச் செல்ல சம்மதித்தேன். யமுனா, ராஜீவனை மண்டியிடத் தான் வைத்துவிட்டாளல்லவா?


யார் சொல்லியும் கேட்டிராத இந்த ராஜீவன், யமுனாவிற்காக பிடிக்காத ஒரு விடயத்திற்கு சம்மதித்ததில் மழையும் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். அன்றிரவே கொட்டித் தீர்க்க ஆயத்தமாகிவிட்டது.


யமுனாவும் ஆவலோடு என் முகம் பார்த்திருக்கிறாள். வேறுவழியில்லை, அழைத்துப் போய் தான் ஆக வேண்டும் என்று கிளம்ப, மரியம் அம்மா அடித்து ஊற்றும் இந்த மழை இரவில் பெண் பிள்ளையை எங்கும் அழைத்துப் போக வேண்டாம் என்று கண்டிப்புடன் சொன்னதும், யமுனாவின் முகம் வாடிவிட்டதில் எனக்கே பாவமாக போயிற்று.


அவள் உடல்நிலை நன்கு தேறியதும், ஒரு நாள் பெய்யென பெய்யும் ராத்திரி மழையில் அவள் அண்மையின் இதத்தை ரசித்தவாறே, சிறு நடைபோட்டு நனைந்திட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.


               🍁🍂🍁🍂🍁🍂🍁


பல நேரங்களில் எங்களுக்கான வார்த்தைகள் மௌனம் பயின்றுவிட்டு துயில் கொள்ளும். அப்போதெல்லாம் இருவரின் இதயச் சுவர்களும் இனிப்பாய்த் தித்திப்பில் தோய்ந்து கிடக்கும். 


நேற்று அப்படியான ஓர் இரவின் மிச்சப் பொழுது! இருவரின் கரங்களும் பிணைந்துத் தழுவி, பேச்சற்று கிடந்த ஓர் ரம்மியமான சாமப் பொழுது! விடிவதற்கு இன்னும் சில மணிநேரங்களே மிச்சமிருக்கின்ற, பூக்கள் மொட்டவிழ்க்கின்ற பொழுது!


அறையிருட்டில் மெத்தையின் நெகிழ்வில் இருவரும் ஒன்றாகவே விழித்துக் கொண்டோம். மீண்டும் தூக்கம் வரும் போல் தெரியவில்லை. முகம் கழுவி சுத்தம் செய்து கொண்டபின், யமுனாவிற்கான தேநீர் நேரமாய் மாறிப் போன விசேஷமானதொரு பொழுது!


கருநீல வானம் நிதானமாக ஊற்றிக் கொண்டிருக்கும் நீர்த் தாரைகள் சொட்டு சொட்டாய் பூமியின் மீது விழுந்து, மொட்டவிழ்க்கும் பூக்களை தொட்டுத் தழுவி ஆகர்ஷித்துக் கொண்டிருந்தன. 


ஜன்னலில் சட் சட்டென தலைதிருப்பியபடி நின்ற மழைக்கால பட்சியொன்று, யமுனாவின் மடிசாய்ந்திருந்த என்னைக் கண்டு, பொறாமைக் கொண்டு பட்டென பறந்தோடியது.

என் சுவாசத்தில் அப்பிக் கிடக்கும் யமுனாவின் சுகந்தத்தை ஜெயிக்க முடியா ஆத்திரத்தில் மண்வாசமும் கலைந்தோடியது. என் சிகைக் கோதியபடி தேநீரைச் சுவைக்கும் யமுனாவைக் கோபித்துக் கொண்ட கண்ணாடி ஜன்னல்கள், குளிர்காற்றை தன் மேனியில் படரவிட்டு, சாலையில் தெரிந்த ரம்மியமான மழைக் காட்சிகளை மறைத்துக் கொண்டன.


எழுந்து போய் பால்கனிக் கதவைத் திறந்தேன். மழையும் மரங்களும் துளிதுளியாய் காதல் செய்து கொண்டிருந்தன. என் பிடறியில் தேநீரின் வாசம்! யமுனா தான்!


"ராஜீவன்."


"ஹ்ம்ம்!"


"கிளைமேட் செமயா இருக்குதுல்ல?"


"ம்ம் யமுனா! இன்னிக்கு பொழுது ரொம்ப அழகா விடியப் போகுது."


மென்னகையோடு என் வலது புஜத்தில் கன்னம் அழுந்த சாய்ந்து கொண்ட யமுனாவைப் பார்த்த என் ஹார்மோன்கள், 'மரங்கள் மழையைப் பருகியதைப் போல், நானும் என் காதலைப் பருகினாலென்ன?' என்று கேட்டது. அந்த பத்து மாதங்களில் அவள் உடல்நிலை கருதி கிளர்ந்தெழச் செய்யாது, அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அன்று மெதுமெதுவாக மேலெழுந்தன.


யமுனா மழையைப் பார்த்திருந்தாள்; நான் யமுனாவைப் பார்த்திருந்தேன்.


"ராஜீவன்."


"ம்ம்!"


"சரவணன் ப்ராடெக்ட்ஸ்க்கு சிட்ரிக் ஆசிட் வேணும்னு மெயில் வந்ததே…" என்றாள் அவள்.


"வன்னா ஹக் யூ டைட், யமுனா." என்றேன் நான்.

 

தேநீர் கோப்பையை ஏந்தியபடி நிமிர்ந்தவள், கால் நிமிடம் புரியாமலும்; அரை நிமிடம் ஆச்சரியமாகவும்; கால் நிமிடம் சம்மதம் எனவும் முழுதாக ஒரு நிமிடம் என் கண்களைப் பார்த்தாள். சென்டிமீட்டர் அளவில் மிருதுவாக மலர்ந்து கொண்டிருந்த அவள் இதழ்களை, என் ஹார்மோன்களுக்கான 'சிரப்' ஆக்கிக் கொண்டேன்.


அதுவரை யமுனாவின் விரல்களைக் காதல் செய்து கொண்டிருந்த தேநீர் கோப்பை, எங்கள் முத்தாடலில் கலங்கி காதல் தோல்வியென கீழே விழுந்து நொறுங்கி தற்கொலை செய்து கொண்டது.


விரிந்து கிடந்த அவள் கூந்தலுக்குள் முகம் புதைத்தவனை, தினமும் அவள் சூடிக் கொள்ளும் பன்னீர் பூவின் வாசனை கமழ்ந்து, வழிந்து பித்தனாக்கி உருவேற்றியது.


'யமுனா, யமுனா' என்று என் வானமெங்கும் யமுனாவின் மழை தீபங்கள்; என்னறையெங்கும் யமுனாவின் சுகந்தங்கள்; என் தேகமெங்கும் யமுனாவிற்கான தேடல்கள்!


இப்பூமி தன் மேல் விழுந்த மழையைக் குடித்துத் தணிந்ததைப் போல, யமுனாவை என்னிருக் கரங்களிலும் ஏந்திக் கொண்டு, இதம் இதமாய் பருகிவிட விழைந்தேன்.


'உன் பிரயத்தனங்கள் பெரிதாய் வேண்டாம்; உன்னிடம் விரும்பியே சாகிறேனடா!' என்று காதல் வார்த்தாள் யமுனா. யமுனாவின் உச்சி முதல் பாதம் வரை இந்த ராஜீவனின் ஒவ்வொரு அணுக்களும் அடிமைப்பட்டுக் கிடந்த அற்புதமான மணித்தியாலங்கள் அவை! That was really wonderful and romantic moment of my life.


லஜ்ஜையின்றி லயித்துக் கிடந்த முடிவில் இருவரையும் மழைப் பரிகசித்துப் போக, பகல் பொழுதான போது அடர்இருள் விலகி, அடிவானம் லேசாய் சூரியனை அனுமதித்துக் கொண்டிருந்தது.


அலுங்காமல் உனை அள்ளி

தொடுவானம் வரை செல்வேன்…


             🍁🍂🍁🍂🍁🍂🍁


மடிக்கணினியை மூடி நெஞ்சோடு சேர்த்துக் கொண்ட யமுனா, சிறிது நேரம் வரை விழி திறக்கவேயில்லை. 


ச்ச! என்ன மாதிரி காதல்காரன்யா இந்த ராஜீவன்! யமுனாவின் மேல்தான் எத்தனை காதலைக் கொட்டியிருக்கிறான்! இவள் காதல் பெரிதா? அவன் காதல் பெரிதா? என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் போலவே!


அட, இந்த யமுனா என்ன இன்னும் கண்ணை மூடிக்கொண்டு சிலையைப் போல் உட்கார்ந்திருக்கிறாள்? சரி தான், ராஜீவன் எழுத்தைப் படித்ததும் அந்நாளிற்கே போய்விட்டாள் போலும்.


இவள் எப்போது அவர்களின் டூயட்டை முடிப்பதாம்? நாமும் எத்தனை நேரம் தான் இப்படியே அவளருகே அமர்ந்திருப்பதாம்? 


நேரத்தைப் பார்த்தோமானால் இரவு மூன்றடித்து ஐந்து நிமிடங்கள் ஆகின்றன. ஷ்ஷ்! இது பேய் உலவும் நேரம் என்றல்லவா சொல்வார்கள்!! இரவு மரியம் அம்மா வந்து சாப்பிட அழைத்ததையோ, தூங்க போக சொன்னதையோ யமுனாவைப் போல் நாமும் தான் கவனிக்கவில்லை போலும்.


ஹப்பாடா! நல்லவேளை யமுனா விழி திறந்துவிட்டாள். நம்மைப் போல் அவளும் நேரத்தைப் பார்த்துவிட்டு, அந்த மடிக்கணினியைக் கீழே வைத்துவிட்டு எழுந்திருக்கிறாள். சமையலறை சென்று தேநீர் தயாரித்துக் கொண்டவள், கவச குண்டலம் போல் மீண்டும் அந்த மடிக்கணியையும் தூக்கிக் கொண்டே மாடியேறுகிறாள்.


மீண்டும் ராஜீவனின் அறை! இப்போதும் அவன் குறிப்பிட்டிருந்ததைப் போல் மழையும் இருளுமென அதே போன்றதொரு சூழல்! இப்போது இந்த அறை மிக மிக அழகாகத் தெரிகிறது எனக்கு. 


விடிவிளக்கின் வெளிச்சத்தில் ஜன்னலருகே நாற்காலியில் அமர்ந்து கொண்ட யமுனா, தலையில் இருந்த பன்னீர் பூக்களை எடுத்துவிட்டு, கோம் கிளிப்பை உருவி கூந்தலுக்கு விடுதலையளிக்கிறாள். 


யாரோ கீழே தள்ளிவிட்டதால் ஜன்னல் கம்பியில் தவறி விழுந்ததைப் போல் சில நொடிகள் தொங்கியபடி அல்லாடிய மழைத் திவலைகள், பட்டென்று கீழே விழுந்து ஓடுவதைப் பார்த்தபடியே சூடான தேநீரைத் துளிதுளியாய்ப் பருக ஆரம்பித்தாள். 


தொடரும்🍂🍂🍂

Comments

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)