ஆயர்பாடியில் கண்ணனில்லையோ -6

 


அத்தியாயம் 6


அன்று ராஜீவனோடு ஸ்கைப்பில் பேசிய பின்னர், நான்கு நாட்கள் கழித்து மீண்டும் நேற்று அலைபேசியில் அழைத்தான். நல்லகாலம்! அப்போது மொபைல் என் கையிலிருந்தது. அப்போதே 'இனி இப்படி அழைக்க வேண்டாம். மொபைலை பெரும்பாலும் நான்தான் வைத்திருப்பேன் என்றாலும், அம்மாவும்  கூட சில சமயம் உபயோகிப்பார்கள்' என்றேன். 


"ஹோ சரி!" என்றவனின் குரலில் பெரும் ஏமாற்றம் வழிந்தது. "நான் நெக்ஸ்ட் மன்த் வருவேன் யமுனா. அப்போ பார்க்கலாம்."


வேறெதுவும் பேசவில்லை.


          🍁🍂🍁🍂🍁🍂🍁


ராஜீவனிடமிருந்து எந்த தகவலுமில்லை. அப்பாவிற்கு குரல் வழி செய்தியும் அனுப்பவில்லை. நானே அழைத்து பேசவும் ஏனோ பெரும் தயக்கமாயிருக்கிறது. ஒரு மாதமாகிவிட்டதே! மனம் ஏக்கமாய்த் தேடுகிறது. 


           🍁🍂🍁🍂🍁🍂🍁


இன்று ஞாயிற்றுக்கிழமை!


நேற்று காலையில் தான் ஏக்கமாய் இருக்கிறது என்று இதில் எழுதினேன். மதியமே கண்முன் வந்து நின்று என் ஏக்கத்தைப் போக்கிவிட்டான். 


நேற்றைய நாள் என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத ஓர் பொன்னாள்! ராஜீவன் முதன்முதலாக எங்கள் வீட்டிற்கு வந்த நாள்!


நேற்று சரயுவோடு அரட்டையடித்தபடி, தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோ பார்த்துக் கொண்டிருந்தேன். காலையில் அலுவலகம் சென்றிருந்த அப்பா, பதினோரு மணியளவில் பரபரப்பாய் வீடு வந்தார். 


என்னவென்று கேட்ட அம்மாவிடம், "கேரளா கம்பெனி ஆள் அன்னிக்கு வந்திருந்தாரே?" என்றதும் என் காதின் நரம்புகள் கூர்மைப் பெற்றன. 


"யாரு?"


"அதான்மா பூஜைக்கு நம்ம ஆஃபீஸ் வந்தாரே, ராஜீவன் சார்?"


"ஆமா, அவருக்கென்ன?"


"அவர் இப்ப இங்கே வர்றாராம்."


என் இதயம் இமானின் அதிரும் இசையைக் கடன்வாங்கிக் கொண்டது. 


"இங்கே'ன்னா? வீட்டுக்கா?"


"ஆமா ஆமா! அதுக்குதான் நான் இப்ப அவசரமா கிளம்பி வந்தேன்."


"இதென்ன புது பழக்கம்? கம்பெனி ஆளுங்களை வீட்டுக்கெல்லாம் கூப்பிடறீங்க?"


"ஏய், அவர் தங்கச்சி கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்க வர்றாராம். ஆஃபீஸ் வர்றேன்னு தான் சொன்னார். நம்மூர்ல டீலிங் வச்சிருக்க யாருக்கும் சொல்லலையாம். 'உங்களை ஃபேமிலி ஃப்ரெண்டா நினைக்கறதால உங்களை மட்டும்தான் இன்வைட் பண்ண விரும்புறேன் சார்'னு சொல்ற மனுஷனை எப்டி ஆஃபீஸோட திருப்பி அனுப்ப சொல்ற?" 


'ஓ! தங்கை கல்யாணமா? அதனால் தான் இத்தனை நாட்கள் நேரமில்லாமல் பேசவில்லையோ?'


"சரி சரி, வீடு வரை கூப்பிடறது இதுவே கடைசியா இருக்கட்டும். இங்கே மூணு பொண்ணுங்க இருக்காங்கன்றதை மறந்துடாதீங்க." என்று அம்மா சொன்னதைக் கேட்டதும், கசப்பான மருந்து தொண்டையில் இறங்குவதைப் போல் இருந்தது.


வருவது மதிய நேரமாக இருப்பதால் வருபவரை சாப்பிட அழைக்கலாம் என்ற அம்மாவை விநோதமாகப் பார்த்தார் அப்பா. 


"வீட்டுக்கு வர்றவங்களை சாப்பிடுங்க'ன்னு கர்ட்டசிக்கு சொல்றதுதான். நீங்க இப்டி பார்க்கறளவுக்கு நான் ஒண்ணும் அவ்ளோ பிற்போக்குவாதி இல்ல." 


அதன்பின் அப்பா வாயே திறவாமல் ஹாலில் போய் அமர்ந்துகொண்டார்.


சாதாரணமாக எங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு சிக்கன் குழம்பு, மட்டன் சுக்கா, வேக வைத்த முட்டை என்று தான் செய்வோம். ஸ்பெஷல் கெஸ்ட் என்றால் கூடுதலாக மீன் வகைகள்! மற்றபடி அம்மாவிற்கு ரெஸ்டாரண்ட் வகை உணவுகள் சமைப்பதில் பிரியம் இருந்ததில்லை. 


இங்கு அம்மாவைப் பொருத்தவரையில் ராஜீவன் சாதாரண விருந்தினர் என்பதால் முதல் வகை விருந்தே ஏற்பாடாயிற்று. சின்னவள் ஜனனி இளங்கலை முதல் வருடம் என்பதால் சனிக்கிழமை வகுப்புகளுக்கு சென்றிருந்தாள். ஆக நானும் சரயுவும் தான் அம்மாவிற்கு சமையலில் உதவிக் கொண்டிருந்தோம்.


"போதும், நீங்க ரெண்டு பேரும் போய் முகம் கழுவி டிரெஸ் மாத்துங்க. வர்றவங்க முன்னாடி இப்டி தான் நைட் டிரெஸ்ல நிற்கறதா?" 


உள்ளே வந்து முகம் கழுவிய பின் கண்ணாடியில் பார்த்தேன். 'நாட் பேட் யமுனா. ப்ச்! இந்த பிம்பிள்…' சலிப்பாக இருந்தது. இடக்கன்னம் ஒற்றை முகப்பருவால் அத்தனை சிவந்துகிடந்தது. 


தூங்கி வழியும் கண்களுக்கு மையேற்றிக்கொள்ள ஆசைதான். ஆனால் அம்மாவின் பார்வைக்கு அது அதிகப்படியாகத் தெரிந்து தொலையுமே என்று சாதாரண சல்வாருக்குள் புகுந்தவள், தலைவாரி ஸ்டிக்கர் பொட்டை மட்டும் நெற்றியில் ஒட்டிக்கொண்டு வெளியே வருகையில், அப்பா சரயுவிடம் ராஜீவன் நிறுவன தயாரிப்புகளால் இம்மாதம் எங்கள் கடையில் நல்ல லாபம் கிட்டியதாக சொல்லிக் கொண்டிருந்தார். அவனைப் போன்ற பணக்காரரை நம் வீட்டிற்கு அழைத்து உபசரிப்பது நமக்குதான் பெருமை என்றார்.


அவன் இந்த சிறு வயதிலேயே இத்தனை உயரத்தை எட்டியிருக்கிறான் என்றால், இதற்கு எத்தனை சிரமங்களைச் சந்தித்து, எத்தனை உழைப்பைக் கொட்டியிருக்க வேண்டுமென சிலாகித்து, இன்னுமாய் ராஜீவன் புராணம் பேசிக்கொண்டே போனதில் சரயு கடுப்பாகியிருக்க வேண்டும்.


மெதுவாக என் காதருகே வந்தவள், "மன்னார் அண்ட் கம்பெனி எம்.டி. மிஸ்டர் மன்னார் இப்ப வந்துடுவார். நீ போய் டைனிங் டேபிள்ல எல்லாம் ரெடியா இருக்குதா'ன்னு பார்த்துட்டு வா!" என்று கிசுகிசுத்து முடிக்கையில், 


அப்பா என்னிடம், "ராஜீவன் சார் இப்ப வந்துடுவார். நீ போய் டைனிங் டேபிள்ல எல்லாம் ரெடியா இருக்குதா'ன்னு பார்த்துட்டு வா யமுனா!" எனவும், சரயு பாவனையாக சிரித்தாள். 


டைனிங் டேபிளில் காலையில் சமைத்த குழம்பை மட்டும் ஓரமாக வைத்துவிட்டு, மற்றதை அழகாக அடுக்கி வைத்தேன். 


வெளியே கார் வந்து நிற்கும் சப்தம் கேட்க, வேகமாக ஜனனியின் அறைக்குள் சென்று பதுங்கிக்கொண்டேன். அவள் அறை ஜன்னலில் இருந்து பார்த்தால் ஹால் மொத்தமும் தெரியும். இந்தப் பக்கம் வராண்டாவில் இருந்து மெயின் கேட் வரையிலும் பார்க்க முடியும்.


அப்பா சிறு பையனைப் போல் குடுகுடுவென ஓடிப் போய்க் காரில் இருந்து இறங்கியவனை வரவேற்றார். அம்மா உள் வாசலிலேயே நின்று கொண்டது தெரிந்தது. 


எனக்கு இங்கே நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது. ராஜீவன் இப்போது என்னைத் தேடினால் அது நிச்சயம் அம்மாவின் கண்களுக்கு தப்பாது. பேசாமல் அவன் தேடுவதற்கு இடங்கொடாமல் துணிவை வரவழைத்துக்கொண்டு, நானே போய் சரயுவோடு சேர்ந்து வரவேற்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அம்மா சரயுவிடம் ஏதோ சொல்லி கொண்டிருந்ததைத் தொடர்ந்து அவள் உள்ளே வருவது தெரிந்தது.


"யம்மி!!" ஹாலிலிருந்து கத்துகிறாள்.


"என்ன சரயு?" 


சின்னவளின் அறையிலிருந்து வந்தவளை விநோதமாகப் பார்த்துவிட்டு, "அங்கே என்ன பண்ற நீ? வந்தவங்களை வாங்கன்னு கூப்பிடுவியாம். வெளியே வா!" என்றதும்,


அன்ன நடையிட்டு அடி மேல் அடி வைத்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக நடந்து அந்த இருபதடி தூரத்தைக் கடக்காமல் வராண்டாவிலேயே நிற்கையில், அம்மா என்னை முறைத்தபடி உள்ளே திரும்ப, பின்னால் சரயுவும் அப்பாவும் வருவது தெரிந்தது.


நான் போய் கூப்பிடவில்லையாம். அதற்கு தான் இந்த முறைப்பு!


இந்த அப்பா மெயின் கேட்டில் அவன் இறங்கியதிலிருந்து அழைத்துக்கொண்டே வருகிறார். வராண்டாவில் ஏறியதும் கூட, "வாங்க வாங்க சார்." என்றபடி வீட்டினுள் போக, உதறலெடுத்த உடம்பை இரு பாதங்களிலும் இருத்திப் பிடித்து, பாதங்களை அழுத்தி ஊன்றியிருந்தேன்.


அப்பாவைத் தொடர்ந்து வந்தவன் என்னைக் கண்டுகொள்ளமாலேயே முன்னேறியதைப் பார்த்து சின்னதாய் ஓர் ஏமாற்றம் பிறந்தது. அவன் அம்மாவின் சந்தேகத்திற்கு இடம் கொடுத்து நம்மைத் தேடி விடக்கூடாது என்று தானே நினைத்தோம்? ஆனால் இப்படி யாரோ போல போவதும் பிடிக்கவில்லையே?


சுணங்கிப் போன முகத்தோடு நிற்கையில், என்னைத் தாண்டி முன்னேறியிருந்தவன், ஒரு நொடி தேங்கி பின்னால் சாய்ந்து, என் பக்கம் கழுத்தை வளைத்து, "ச்சில் யமுனா!" என்று என் காதோரம் காற்றாட சொல்லி சென்றதில், என்னுயிர் தப்பியது எப்போதோ நான் செய்த புண்ணியத்தின் பலன்தான்! 


அந்த கணம் அழுத்தி நின்றிருந்த பாதங்கள், உலுக்கியெடுக்கும் மனதைக் கோபித்து, 'இத்தனை சிரமத்தை என்னால் தாங்க முடியாதப்பா!' என என் உடலைக் கைவிட்டு விட்டது. 


பின்னால் வந்த சரயு, விழ இருந்த என்னைப் பிடித்துக்கொண்டு கண்கள் இடுங்கக் கேட்டாள். "எப்போ இருந்து?"  


"ஷ்ஷ்! சும்மா இரு சரயு."


"மதுரை மால்ல பார்த்தப்பவா?"


அப்பாவின் பின்னால் உள்ளே போனவன் திடுமென திரும்பி வந்து சரயுவின் கேள்விக்கு, "எக்ஸாக்ட்லி!" என்று பதிலளித்துவிட்டு, சரயுவிடமிருந்த என் கையைப் பிரித்து அவனுக்கு முன்னால் இழுத்துவிட்டு, அவனும் என் பின்னேயே வந்துவிட்டான்.


சரயுவிடமிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டானாம்!


வரும் போதே, "வராண்டால இருக்க ஃபிஷ் டேங்க் அழகா இருக்குது சார்." என்று சொல்ல, அப்பாவிற்கு பெருமை தாங்கவில்லை. 


'இவன் ஃபிஷ் டேங்கையா பார்க்க வந்தான்?'


அப்பா தான் அதைப் பராமரித்து வருகிறார். எத்தனை வேலையிருந்தாலும் மீன் தொட்டியை சுத்தம் செய்தலும், அதன் அலங்கரிப்பும் வாரமொரு முறை சீரான இடைவெளியில் நடந்தேறிவிடும்.


சற்றுநேரம் அப்பா, அம்மாவுடனும் இடையிடையே திகைத்து நின்ற சரயுவிடமும் பேசிக்கொண்டிருந்தவன், வந்த காரணத்தை மெய்ப்பிக்கும் விதமாக, பையிலிருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து நீட்டினான்.


"நெக்ஸ்ட் வீக் என் தங்கை 'அன்னு'வோட கல்யாணம். நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும்." என்று அம்மாவைப் பார்த்தவாறே அப்பாவிடம் தந்தான்.


"அன்னு… வித்தியாசமான பேரா இருக்குதே?" என்று அப்பாவிடமிருந்து பத்திரிக்கையைக் கைப்பற்றிய அம்மா அதிலிருந்து, "அன்னா மேத்யூ!" என்று பெயரைப் படித்துவிட்டு, ராஜீவனிடம், "நீங்க கிறிஸ்டியனா?" எனக் கேட்க,


புருவங்கள் மேலேற விழிவிரித்தவன் இரு கைகளையும் விரித்து தெரியாது எனக் காட்டியபடி சொன்னான். "ம்ம்… அம்மா முஸ்லிம், அப்பா ஹிந்து, என்னை வளர்த்தவங்க கிறிஸ்டியன். அப்போ நான் எந்த கடவுளைத் தொழலாம்னு நீங்களே சொல்லுங்களேன்…" என்று தலை சாய்த்து புன்னகைத்தான். அந்த புன்னகையின் பின்னால் அவனுள்ளம் பெரிதாக வலி கண்டு கிடப்பதை என்னால் உணர முடிந்தது.


மேலும், பெற்றவர்கள் யாரும் இல்லை என்றும் இப்போது உள்ள தாய் இவனைத் தூக்கி வளர்த்தவர், அவரின் தங்கை மகளான அன்னாவிற்கு தான் தற்போது திருமணம் என்றும் சொல்ல அதிலேயே நாங்கள் மட்டுமல்லாது அம்மாவும் கூட நெக்குருகி போனார்கள்.


அவனுக்கு ஆறுதலாக என்ன சொல்ல என்று தெரியாமல் இருந்த சங்கடமான சூழ்நிலையை அம்மா அழகாய் சமாளித்து, "இத்தனை கஷ்டத்துலயும் முன்னேறி, இன்னிக்கு சொஸைட்டில இவ்ளோ ஹை பொசிஷன்ல இருக்கறீங்களே… ரொம்ப சந்தோஷம். வாங்க சர், சாப்பிடலாம்." என்று பேச்சோடு பேச்சாக சாப்பிட அழைக்க, சம்பிரதாயமாக மறுத்தவனை, 


சரயு, "எங்கம்மா நிஜமாவே நல்லா சமைப்பாங்க. பயப்படாம சாப்பிட வாங்க சர்." என்று இயல்பாக அழைத்து சமையலறையை ஒட்டியிருந்த சாப்பாட்டு மேசை  நோக்கி போனாள்.


அம்மா அவள் பின்னேயே போனபடி, "இவ தான் சரியான வாலு. எங்க யமுனா ரொம்ப அமைதி." என்று சொன்னதைக் கேட்டு என்னிடம் 'அப்படியா?' என்று தலையசைத்துக் கேட்டவன்,


"இப்டி வந்து உட்காருங்க சர்." என்ற அப்பாவின் குரலில் கையைக் கழுவிக்கொண்டு, போய் சாப்பிட உட்கார்ந்தான். அப்பாவையும் தன்னோடு அமர்த்திக்கொண்டான். அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம் என்றவனின் கோரிக்கையை அம்மா நிர்தாட்சண்யமாக 'அது கூடாது' என்று நிராகரித்துவிட்டார்கள்.


ஏமாற்றத்தைத் துளியும் வெளிக்காட்டாமல் சகஜமாக முதலில் அம்மா வைத்த இனிப்பைச் சுவைத்துவிட்டு, மற்றவற்றை கொஞ்சமாக நாசுக்காக சாப்பிட்டான். அம்மாவும் சரயுவும் தான் பரிமாறினர். சரயு வேண்டுமென்றே என்னை அவன் முன்னால் இழுத்துவிட, நான் அவளை முறைத்துவிட்டு பின்னால் போக என்று கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தோம்.


அவள் விளையாட்டைக் கண்டு வாயில் சாதத்தை வைத்துக்கொண்டே, நிமிராமல் இதழ்மடித்து மென்னகை புரிந்தான். ஆனால் அம்மாவிற்கு கோபம் வந்துவிட்டது.


யாருக்கும் தெரியாமல் சரயுவின் கையில் நறுக்கென்று கிள்ளி, சாதாரணமாக சொல்வதைப் போல், "அந்த மட்டன் கொஞ்சம் வை சரயு மா!" எனவும், முகத்தை சுருக்கிக்கொண்டு மேசையின் ஓரமாக இருந்த பாத்திரத்தை நகர்த்தினாள்.


காலையில் இவள் இட்லியை சாப்பிட முடியாது என அராஜகம் செய்ய, அவளுக்காக சூடான சாதமும் கருணைக்கிழங்கு குழம்பும் அதன் தோலிலேயே துவையலும் என அம்மா செய்து வைத்திருக்க, அதன் மூடியைத் தவறுதலாக திறந்து பரிமாறுவதற்காய் நகர்த்திவிட்டாள் சரயு.


"அதில்லடி." என்று எடுத்த அம்மாவைத் தடுத்தவன்,


"இஃப் யூ டோண்ட் மைண்ட், நான் அதைக் கொஞ்சம் டேஸ்ட் பண்ணிக்கவா? வாசனையே அருமையா இருக்குது." என்றதும்,


அம்மா விழுந்தடித்துக்கொண்டு பரிமாற, கறி வகைகளை விட கருணைக்கிழங்கு குழம்பையும் அதன் தோலில் செய்த துவையலையும் அத்தனையாய் ரசித்து சற்று அதிகமாகவும் சாப்பிட்டு அம்மாவை க்ளீன் போல்ட் ஆக்கிவிட்டான்.


எப்பேற்பட்ட மனிதன் நம் வீட்டில் வந்து கருணைக்கிழங்கை ருசித்து சாப்பிடுகிறானென அப்பா அதற்கு வேறு தனியாக புளங்காகிதப்பட்டுப் போனார்.


உண்மையிலேயே கருணைக்கிழங்கு குழம்பும், துவையலும் அம்மாவின் கைப்பக்குவத்தில் அட்டகாசமாகத் தான் இருக்கும். பாத்திரத்தில் மசாலா கொதிக்கும் போதே மீன் குழம்பைப் போன்ற வாசனை வீடெங்கும் மணக்கும். 


கிழங்கை வேகவைத்து உரித்தெடுத்த தோலோடு, உளுந்து, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கொஞ்சமாக தேங்காய் சேர்த்து வதக்கி அரைத்தெடுக்கும் துவையலும் கூட அத்தனை ருசியாக இருக்கும்.


திருப்தியாக உண்டு முடித்து எங்களையும் சாப்பிட சொன்னபடி அப்பாவோடு முன்னறைக்கு சென்றான். அப்பாவிடம் பேசுகையில் விடுமுறை தினத்தில் வந்தால் சாவகாசமாக வந்து போகலாம் என்றுதான் சனிக்கிழமை வந்ததாக அவன் சொல்லவும், 


அப்பா, "அப்போ ஈவ்னிங் வரை இருங்களேன் சர். நானும் இனி கடைக்கு போக எதுவும் முக்கியமான வேலை இல்ல. மேனேஜரே பார்த்துக்குவார்." என்று சொல்லிவிட்டு அவசரமாக அம்மாவைப் பார்த்தார்.


நல்லவேளை அம்மாவின் முகம் சாதாரணமாக தான் இருந்தது. மற்ற நேரமாக இருந்தால் வேற்று மனிதரை வீட்டில் அதிக நேரம் அனுமதிப்பதற்கு முகத்தில் அசூயையைக் காட்டியிருப்பார்கள்.


இன்று ஏனோ சிரித்த முகத்தோடு, "பேசிட்டு இருங்க சர். இதோ வர்றேன்." என்றுவிட்டு எங்களிருவரையும் கண்களால் அழைத்துவிட்டு உள்ளே போக,


நாங்களும் பின்னோடு போனோம். "என்னம்மா?"


"யமுனா நீ போய் இதைக் கொடுத்துட்டு சாப்பிட வா!" என்று என்னிடம் சிறிய பூப்போட்ட செராமிக் தட்டை திணிக்க, அதில் பாக்கு, சுண்ணாம்பு, குல்கந்து வைத்து மடித்த வெற்றிலைகள், டூட்டி ஃப்ரூட்டி இருந்தன.


"போம்மா… போய் குடுத்துட்டு வா!" என்று கிண்டல் த்வனியில் ஏற்ற இறக்கத்தில் பேசிய சரயுவின் தலையில் குட்டு வைத்த அம்மா, 


"வந்தவங்க முன்னாடி டைனிங் டேபிள்ல வச்சு என்ன விளையாட்டு உனக்கு?" என்று அதட்ட,


"சரி! அடுத்த வாட்டி ஹால்ல வச்சு விளையாடறேன் போதுமா?" என்று கேட்டு, மீண்டும் ஒரு குட்டு வாங்கிக்கொண்டாள்.


வெற்றிலையை எடுத்துப் போன நான், அப்பாவின் முன்னால் ஏதோ பெரும் தவறிழைப்பதைப் போல் தோன்ற அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. 


"உங்க வீட்டுல இருக்க பொம்மைங்கள்ல இதுவும் ஒரு பொம்மையா சர்?" எனக் கேட்க,


எதைச் சொல்கிறானென நிமிரும் முன் அப்பா, "அப்டிலாம் தப்பு கணக்கு போடாதீங்க சர். சரயு தான் இவளோட க்ரைம் பார்ட்னர். ரெண்டும் சேர்ந்தா வாலு நீண்டுடும்." என்றார் சிரித்தபடி!


ஆக, என்னைத் தான் பொம்மை என்றிருக்கிறான் போலும். சிறு கோபத்தில் முறைப்போடு நின்றவளை ஒற்றைக் கண் சிமிட்டி விதிர்க்கச் செய்தவன், அடுத்த கணம் யாரோ எவளோ எனும்படி வெற்றிலையை எடுத்து வாயில் அதக்கிக்கொண்டு, அப்பாவிடம் பேச்சைத் தொடர ஆரம்பித்துவிட்டான். நான்தான் திருதிருத்து நின்றேன்.


பின் நாங்கள் மூவரும் சாப்பிட்டு முடித்து வெளியே வரும் போது, அப்பாவும் அவனும் வீட்டின் முன்புறம் தோட்டத்தில் நின்றிருந்தனர். எங்கள் வீட்டில் பின்பக்க வழி கிடையாது. ஆனால் முன்பக்கத்திலிருந்து வீட்டை சுற்றிலும் பின்பக்கம் வரை தோட்டம் நீண்டு கிடக்கும். காலை, மாலை என இரு வேளைகளும் கதிர் அண்ணன் வந்து பராமரித்து செல்வார்.


நாங்கள் வாசலுக்கு வரும்போது ராஜீவனிடம் பின்பக்கத் தோட்டம் நன்றாக இருக்கும் என்று அப்பா சொல்லிக்கொண்டிருந்தார். 


எங்களைப் பார்த்ததும், "சரயு, சாருக்கு நம்ம வீட்டு யூகலிப்டஸ் மரத்தைக் காட்டு!" எனவும்,


"நீங்க ரெண்டு பேரும் உள்ளே போங்க. நான் கூட்டிட்டு போறேன்." என்று சட்டென இடைப்புகுந்த அம்மாவின் கண்களில் அப்பாவிற்கான கோபம் தெரிந்தது.


ஆனால் அதற்குள் பின்பக்க தோட்டத்திற்கு ஓடியிருந்த சரயு, "சார்… லெஃப்ட் சைட் வழியா வாங்க சர். ரைட் சைட்ல முள்ளு போட்டு வச்சிருக்கோம்." என்று கத்திக்கொண்டிருந்தாள். 


அப்பா சொன்னவுடனேயே விருட்டென்று ஓடியிருந்தாள் அவள். இன்று அவளுக்கு அம்மாவிடமிருந்து சிறந்த விருதுகள் காத்திருக்கிறது என நினைத்துக்கொண்டேன்.


நடக்கும் அனைத்தையும் கண்களால் அவதானித்துக் கொண்டேயிருந்தவனின் புன்னகை மட்டும் வாடவேயில்லை. கடைசியில் அம்மாவும் அவனோடு செல்ல, ஆசையிருந்தாலும் நான் அங்கேயே நின்றுகொண்டேன்.


அம்மாவிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. என் முகமே காட்டிக் கொடுத்துவிடும். பெண் பிள்ளைகளின் தாயாக அவரின் எச்சரிக்கை நியாயமானதாக இருந்தாலும், கனக்கும் காதலைச் சுமப்பவளாக எனக்கு அது அநியாயமாகவேபட்டது.


சுணங்கிய மனதோடு உள்ளே திரும்புகையில், "யம்மீஈஈ… உன் டேபிள் ரோஸ்ல பூச்சி பிடிக்குது. அந்த ஸ்ப்ரே பாட்டில் எடுத்துட்டு வாஆஆ!!" என்ற சரயுவின் குரல் என் மனதில் கோடி டேபிள் ரோஜாக்களை வாரிக் கொட்டியதைப் போல் இருந்தது. 


ஏனெனில் அம்மாவிற்கு வேப்பெண்ணையும் சோப்புத் துளிகளும் கலந்து செய்த அந்த ஸ்ப்ரே ஒவ்வாமையை ஏற்படுத்தும். அங்கே நிற்கவே மாட்டார்கள். புதிதாக பிறந்த துள்ளலோடு ஸ்ப்ரே பாட்டிலை எடுத்துக்கொண்டு ஓடினேன்.


நான் போகும் போது அம்மா அங்கிருந்து விலகி வருவது தெரிந்தது. கடினப்பட்டு முகத்தை பவ்யமாக மாற்றிக்கொண்டேன். 


தோரணையாக நின்று கொண்டிருந்த சரயு, ராஜீவனிடம், "மலையேறப் போனாலும் மச்சினிச்சி தயவு வேணும் மன்னார் சர்." என்றுவிட்டு என்னிடம், "என்னம்மா டேபிள் ரோஸைப் பார்க்க வரும்போது ரெண்டு கன்னத்துலயும் டூலிப்ஸைத் தூக்கிட்டு வர்ற?" என்றாள். கலாய்க்கிறாளாம்! இருந்தும் அவள் மேல் எனக்கு கோபமே வரவில்லை.


ராஜீவன், "ஹோய் மச்சினிச்சி, அந்த வெள்ளை அரளிச் செடி நல்லா இருக்குதுல?" எனவும்,


"ஹோ… புரிஞ்சிடுச்சு! போங்க யம்மி மேடம், அங்கே போய் பேசிட்டு வாங்க." என்றாள்.


அநேகமாக நான் பார்த்த இருமுறையும் ராஜீவன் ப்ளூ ஜீன்ஸூம் வைட் ஷர்ட்டுமாக தான் இருந்தான். ஸ்கைப்பிலும் வெள்ளைச் சட்டை தான் தெரிந்தது. இன்றும் அப்படியே!

ஆனால் எப்போதும் நேர்த்தியாக வாரியிருக்கும் சிகை இன்று கேஷூவலாக சுருண்டு சுருண்டு கலைந்து கிடந்தது. 


எனக்கு முன்னே சென்றவன் வெள்ளை அரளியையும் தாண்டி அங்கிருந்த பன்னீர் பூ மரத்தினடியில் போய் நின்றான். மெதுவாக பின்னே போய் நின்ற என்னைப் பாராமலேயே, சொன்னான். "உங்க மரத்துல நிறைய பூ பூத்திருக்குது யமுனா." 


"அப்டியா? உங்க வீட்லயும் பன்னீர் பூ மரம் இருக்குதா?" கதிர் அண்ணன் எத்தனை உரங்களிட்டும் இத்தனை நாளும் ஓரிரண்டைத் தவிர அதிகம் பூக்காத மரம், இன்று இவனிடம் இந்த காம்ப்ளிமெண்டை வாங்குவதற்கு தான்  கைக்கெட்டும் தூரம் வரை இப்படி பூத்து பல்லை இளித்துக் கொண்டு நிற்கின்றதோ! பன்னீர் பூக்களின் மீது பெரிதான பொறாமை தோன்றியது. 


"ம்ம், இருக்குதே! பன்னீர்ப் பூ ரொம்ப அழகு இல்ல?" என்றவன் ஒரு பூவை பறித்து நுகர்ந்தான்.


எனக்குள் எதுவோ சுருங்கிய உணர்வு! சுருண்டு கிடக்கும் அந்த பரட்டை முடியைப் பிடித்து ஆய்ந்து வைக்குமளவு எரிச்சல்!


"வாசனை கூட நல்லாருக்கே?"


'ம்க்கும்! பன்னீர் பூ வாசனை என்ன நாற்றமா அடிக்கும்?' உள்ளூற பொருமல் கூடிற்று.


அவனிடம் என் மனம் என்ன எதிர்பார்க்கிறது? காதல் பார்வையா? பின்னே இல்லயா? நானொருத்தி அருகில் இருக்கையில் பூவின் அழகை ரசிப்பதும் நுகர்வதும் கடுப்பைக் கிளப்புறதல்லவா?


சரயுவிடம் போவதற்காக என் கால்கள் பின்னே நகர்ந்தன. எதையும் கண்டுகொள்ளாதது போல் மிக மிக சாதாரணமாக என்னை சுற்றி வந்து, வழிமறித்து நின்றவன் இன்னும் சிலப் பூக்களைப் பறிக்கலானான்.


"ஹலோ என்ன இது?"


"எது?"


"நான் அந்த பக்கம் போகணும்."


"போயேன்!"


"இப்டி வழிமறிச்சு நின்னா இடிச்சிட்டுதான் போகணும்."


"எனக்கும் அதுதான் வேணும்!" 


பதில் பேச முடியாமல் என் வாய் பூட்டு போட்டு கொண்டது. ஊருக்கு தலைசிறந்த தொழிலதிபராக மிளிரும் ராஜீவனுக்குள் ஒரு ஸ்வீட் ராஸ்கலும் இருக்கத் தான் இருக்கிறான் போலும். சிரித்தபடி மீண்டும் என்னைச் சுற்றி வந்து என் பின்புறம் நெருங்கி நின்றான்.  


தனியே அவனோடும் அவன் குரலோடும் லயித்து கிடத்தவளுக்கு இத்தனை அருகில் நிற்பவனிடம் சத்தியமாக பேச்சே வரவில்லை.

தூரமாக நின்று கண்ணோடு கண் பேசும் போது இருந்த தைரியம் கூட கரைந்து போனதைப் போலிருந்தது. 


இதோ முதுகில் புரளும் என் கருங்கூந்தலோடு அவன் வெண்மை நிறச் சட்டையின் உராய்வு! பக்கவாட்டில் பார்த்திருந்தவளின் மூச்சை சிறிது சிறிதாக களவாடிக் கொண்டிருந்தான்.


கையிலிருந்த பூக்களை ஒன்றாக சேர்த்து என் தலைமுடியில் வைத்துவிட்டு, தலைசாய்த்து என் கண்களை சந்திக்க முயன்றவன், "இப்ப இன்னும் அழகா இருக்குது." என்று, வைத்தப் பூக்களை நுகர்ந்து பார்க்க, அவன் சுவாசத்தில் நான் பரிபூரணமாக தொலைந்து போனேன்.


"வாசனை கூட அதிகமாகிடுச்சே யமுனா?" அவன் குரலில் மெல்லினங்களை ஏற்ற, 


"அச்சோ! நான் போகணும்." என்று நகரப் பார்த்தவளின் கைப்பிடித்து நிறுத்தி,


"நான் பேசணும்." என்றான் ஆழ்ந்த குரலில்!  


பூவாளியின் நீரைப் போலே

நீ சிந்தினாய் எந்தன் மேலே

நான் பூக்கிறேன் 

பன்னீர் பூப் போலே…


Comments

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)