
அத்தியாயம் 17
மூன்று நாட்கள் கடந்த பின்னர், அன்று ஹரிஷ் ஊர் திரும்ப இருந்தான். தானே தனியாக அண்ணனை வரவேற்க வேண்டும் என்று அப்பாவின் காலில் விழுந்து கெஞ்சி, சில பல நாடகத்தனங்களை அரங்கேற்றி, மகிழுந்தின் சாவியைக் கைப்பற்றியிருந்தாள் அம்ருதா. விடியா பொழுது என்பதால்தான் அவளிடம் மகிழுந்தைத் தர மறுத்தார் அம்ருவின் அப்பா நடராஜன்.
“வரும்போது காரை அவன்கிட்ட கொடுத்திடணும்.” என்ற நிபந்தனையுடன் தான் திறப்பு அவளிடம் தரப்பட்டது.
இரவில் பாதி நேரம் அஸ்வத்தின் குழந்தையை நினைத்து தூக்கமில்லாமல் இருந்தவள், மீத நேரமும் எங்கே தூங்கிவிட போகிறோமோ என்று முகத்தைக் கழுவிவிட்டு அமர்ந்திருந்தாள். அதுவரை தூங்காமல் கவனத்துடன் மகிழுந்தைச் செலுத்தி வந்திருந்தவளால் அதற்கு மேல் முடியவில்லை.
இதோ! விமானநிலையத்தில் அண்ணனுக்காகக் காத்திருப்பு பகுதியில் அமர்ந்து தூங்கி வழிந்து கொண்டிருக்கிறாள். விமானம் தரையிறங்கியதாக அலறிய அறிவிப்பு சப்தம் கூட அம்ருவின் தூக்கத்தைக் கலைக்குமளவிற்கு பலம் பொருந்தியதாக இல்லை என்பதுதான் பரிதாபம்!
விமான நிலைய நடைமுறைகளை முடித்துவிட்டு மனைவியுடன் காத்திருப்பு பகுதிக்கு வந்த ஹரிஷுக்கு, கண்மூடி சாமியாடிக் கொண்டிருக்கும் தன் தங்கையைக் கண்டு புன்னகை அரும்பியது.
அலைபேசியில் தங்கையின் நிலையை காணொளியாக்கிட, அதைக் கண்டு ஸ்வேதா சத்தமாக சிரிக்க, அவள் வாயை மூடி, “ஷ்ஷ்..!” என்றான்.
“இது உங்களுக்கே ஓவரா தெரியல? இவ்ளோ சத்தத்துல முழிக்காதவ நான் சிரிச்சதுல தான் முழிச்சிடப் போறாளாக்கும்?”
“ப்ச், இதைப் பிடி!” அலைபேசியை அவளிடம் திணித்தவன், தங்கையின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
“அம்ரு! அம்முக்குட்டி…” என்று அவள் முழங்காலைச் சுரண்டிட,
“ஹரி… தூக்கம் வருதுடா…” என்றவளுக்கு விழிகளைத் திறக்கவே முடியவில்லை.
“வீட்ல போய் தூங்கலாம்டா… எழுந்துக்கோ! காரை ஓட்டிடுவியா? இல்ல அண்ணனுக்கு சொர்க்கத்தைக் காட்டுவியா?” என்றவனின் தோளில் பட்டென்று அடித்தாள் அவன் மனைவி.
“என்ன பேசறீங்க? அம்ரு எந்திரி!” எனக் கன்னத்தைத் தட்டிட, நீண்ட மூச்சுடன் முயன்று விழி திறந்த அம்ருதா எதிரில் அண்ணனின் முகம் கண்டு மலர்ந்தாள்.
“அண்ண்ணா….” சட்டென்று பூத்துவிட்ட மகிழ்வுடன் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “எப்போ வந்தே?” என்று அமர்ந்தவாறே ஊஞ்சலாடினாள்.
‘நான் வளர்ந்துவிட்டேன். என்னைக் குழந்தையாக நடத்தாதே!’ என்று அண்ணனிடம் முறுக்கிக் கொண்டாலும், தற்சமயம் அவள் அவனிடம் குழந்தையாகவே இழைந்தாள். அதனை வேடிக்கை பார்த்தாள் ஸ்வேதா. அண்ணனை இத்தனை நாட்கள் பிரிந்த ஏக்கம் அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
உண்மையில் தனக்காகத் தான் பல நேரங்களில் அம்ருதா அவள் அண்ணனைத் தவிர்க்கிறாள் என்று ஸ்வேதாவிற்கு புரிந்தே இருந்தது. ஆனால் அதனை முன்பு ஏற்றுக்கொள்ள மனமற்று இருந்தவள் தற்போது மனதார அந்த அண்ணன் - குழந்தைப் பாசத்தை அங்கீகரித்தாள்.
ஹரிஷ் ஸ்வேதாவிற்கான முக்கியத்துவத்தை எல்லா இடங்களிலும் உணர்த்தியிருந்ததே முதல் காரணம்! இவள் கழுத்தில் மூன்று முடிச்சையும் தானே போடுவேன் என்று அவன் சொன்னதும், அண்ணனின் ஆசைக்காக நாத்தனார் உரிமையை அம்ரு விட்டுக் கொடுத்ததும் கூட இவளை நெகிழ்த்தியிருந்தது. அண்ணன் - தங்கை பாசத்தைத் தாண்டிய அவர்களின் பிணைப்பைப் புரிந்து கொண்டவளுக்கு அன்றிலிருந்து அம்ரு மேலிருந்த அதிருப்தியும் விடைபெற்றிருந்தது.
புன்னகையுடன் அவர்களின் பாசத்தைக் காணொளியில் சேமித்தவள், “இன்னிக்கு வீட்டுக்கு போய் தூங்கறதா? இல்ல ஏர்போர்ட்லயே பெட்’அ போடணுமா?” எனக் கேட்க,
‘அண்ணிக்கு மரியாதை’ எனும் விதமாய் அண்ணனிலிருந்து பிரிந்து விருட்டென எழுந்து நின்றாள் அம்ருதா. “எப்டி இருக்கீங்க அண்ணி?”
“நேத்து தானே ஃபோன்ல பேசின? அப்புறமென்ன? சும்மா இப்டி ஃபார்மலா பேசறதை விட்டுட்டு என்னையும் உங்க கேங்ல சேர்த்துக்கோங்கப்பா!” என்று சிரித்தவள் டிராலியைத் தள்ளிக்கொண்டு முன்னால் நடந்தாள்.
எழுந்து நின்ற ஹரிஷ் தங்கையின் தலையில் வலிக்காமல் குட்டிவிட்டு, “அவ புரிஞ்சுக்கிட்டா! நீதான் மாறணும். வா!” என்று அவளைத் தோளோடு அணைத்து அழைத்துப் போனான்.
காலையில் அஸ்வத்தின் அழைப்பில்தான் அம்ருவிற்கு விடிந்தது.
அன்று கோகிலலக்ஷ்மியைச் சந்திக்கச் செல்கையில் இவள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அஸ்வத் இவளைத் தொடர்ந்து செல்லவில்லை. அதேபோல் அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவளும் அவனை அழைத்து விவரம் பகிர்ந்தாள்.
அதாவது அம்ருதாவும் அவளின் குழுவினரும் செய்யவிருக்கும் மருந்துகள் குறித்த ஆராய்ச்சி பற்றிய விவரங்களைக் கேட்டாள் கோகிலா.
“கண்டிப்பா நான் உங்களுக்கு கைட் பண்றேன் மிஸ் அம்ருதா, உங்க ரிசர்ச் பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா?”
அம்ரு யோசித்தாள். உண்மையைச் சொல்ல முடியாது. ஆனால் அவளுக்கு கோகிலா செய்யும் சட்ட விரோத செயலுக்கான ஆதாரங்கள் வேண்டும். அஸ்வத்தின் குழந்தையின் உயிரைப் பறித்த அந்த மருந்து பற்றிய விவரங்கள் அடங்கிய கோப்பு வேண்டும். அதற்கு முதலில் கோகிலாவின் நட்பு வேண்டும். எனவே உண்மையற்ற விவரங்களை உண்மை போல் மேலோட்டமாகச் சொன்னாள்.
“சில பேஸிக் டாக்ஸிக் சப்ஸ்டான்ஸ் கேஸஸ் பத்திதான்… எங்க ப்ராஸஸ் இன்னும் இனிஷியல் ஸ்டேஜ்ல தான் இருக்குது.”
“ஓகே, டாக்ஸிக் சப்ஸ்டான்ஸ் கேஸஸ்ன்னா என் ஃப்ரெண்ட் நல்லாவே கைட் பண்ணுவான். ம்ம்… அவனுக்கு கொஞ்சம் ஹெல்த் இஷ்யூ… நாளைக்கு வர்றீங்களா? நான் சொல்லி வைக்கறேன்.” என்றிட, அந்த நண்பன்தான் மற்றொருவனாக இருக்கக்கூடும் என்று ஊகித்தாள் அம்ருதா.
ஏனெனில் இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது மற்றொரு மருத்துவப் பெண் கதவைத் தட்டிவிட்டு உள்ளே தலை நீட்டி, “தன்வீர் இல்ல?” எனக் கேட்டாள்.
“உள்ளே வாடி! அவன் இன்னிக்கு லீவு.”
“அதானே பார்த்தேன். டியூட்டி டைம் தவிர மத்த நேரம் உங்க ரெண்டு பேரையும் தனியா பார்க்கவே முடியாதே? அதுவும் தாரூ போனதுக்கப்புறம் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அட்டாச்ட் ஆகிட்டீங்க.” என்று இயல்பாக சொன்னவள், “ஓகே அவன்கிட்ட பேசினா டீன் அவனை நாளைக்கு பார்க்கணும்னு சொன்னாங்கன்னு சொல்லு. அவன் கால் அட்டன்ட் பண்ணலயாம்.”
“சரி, நான் சொல்றேன்.”
அதன்பின் அஸ்வத்தை அழைத்த அம்ருதா, அவள் தன்னை நாளைக்கு வரச் சொல்லியிருக்கிறாள் என்று மட்டும் சொன்னாள். மற்றொருவனை அவன்தானா என்று உறுதிப்படுத்திக் கொண்டு சொல்லிக் கொள்ளலாம். அவன் பெயரும் தெரிந்தால் அஸ்வத் ஆக்ரோஷமாகக் கூடும்.
அத்துடன் ஆதி முதல் அந்தமாக ஹரிஷிடம் சொல்லிவிட்டு, அஸ்வத்தின் மன எழுச்சியை எப்படி கையாள்வதென்று அவனின் ஆலோசனையைக் கேட்டுவிட்டு அதன்பின்னர் தான் அஸ்வத்திடம் பேச நினைத்திருக்கிறாள்.
இவளும் கோகிலா சொன்னதைப் போல் மறுநாள் சென்று பார்க்க அவள் இவளைச் சுத்தமாக மறந்துவிட்டாற் போன்ற பாவனையுடன் மீண்டும் மறுநாள் வரச் சொன்னாள். நேற்று அலைபேசிவிட்டு செல்லலாமென முதலிலேயே அழைத்துக் கேட்டாள். அப்போதும் கோகிலாவிடம் சரியான பதில் இல்லை. இன்று போய் நாளை வா கதையாகிப் போனதில் கடுப்பாகிப் போனான் அஸ்வத்.
“அவ உங்களுக்கு சீனியர் கூட இல்ல. அப்புறம் ஏன் உங்களை இப்டி அலைகழிக்கணும்? நீங்களும்தான் ஏன் டாக்டர் அவளுக்கு பணிஞ்சு போறீங்க?” என்றவனின் குரலில் எரிச்சலின் மிகுதி!
“நமக்கு தேவைன்னா நாம பணிஞ்சு தான் போகணும் சர்.”
“ஒரு மண்ணாங்கட்டி தேவையும் இல்ல! நீங்க சொன்னதுக்காக மட்டும்தான் நான் உங்களை ஃபாலோ பண்ணல. இல்லன்னா அவளைக் கண்டுபிடிக்கறது எனக்கு கஷ்டம்ன்னு நினைக்கறீங்களா டாக்டர்?”
“புரியுது சர். இன்னும் ரெண்டு நாள் பார்க்கலாம். அந்த இன்னொருத்தனும் சிக்கிட்டா நமக்கு வேலை சுலபம்தானே?”
“ரெண்டு நாள்தான்! அப்புறம் நானே நேரடியா இறங்கிடுவேன்.”
நேற்று மாலைதான் இப்படி பேசியிருந்தார்கள். இப்போது மீண்டும் அழைக்கிறான். எதுவாக இருந்தாலும் இனி ஹரிஷிடம் பேசிவிட்டு தான் அஸ்வத்திடம் பேசவேண்டுமென அழைப்பை ஏற்காது விடுத்தாள்.
அத்துடன் ஹரிஷிடம் அஸ்வத்தை ஆலோசனைக்கு அழைத்து வரவேண்டும். அதை நினைத்தால்தான் பயம் புகை போல் நெஞ்சாக்கூட்டை ஆக்ரமித்தது. இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு, எழுந்து குளித்துவிட்டு அண்ணனைத் தேடி வந்தாள்.
“எவ்ளோ நேரம்? சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திரு! ஒரு வேலை முடியும் எனக்கு.” என்று சிடுசிடுத்தார் அம்பிகா.
“ஹரி எங்கேம்மா?”
“இன்னும் அவன் உனக்கே வால் பிடிக்கணுமா? ‘அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அவன்கிட்ட இருந்து தள்ளி இரு! வந்தவ சொல்லும்படி வச்சிக்க கூடாது’ன்னு சொல்லிருக்கேனா இல்லியா?”
ஹரிஷுக்கு நிச்சயம் ஆன நாளிலிருந்து அவர் அம்ருவிடம் இதே பாட்டைத் தான் பாடிக் கொண்டிருக்கிறார். அவளும் ஸ்வேதாவின் மனம் புரிந்து அண்ணனுடனான நேரத்தை நாசூக்காகக் குறைத்துக்கொள்ள பழகியிருந்தாள். அதற்கு ஹரிஷ் ஒத்துழைப்பதில்லை என்பது வேறு விடயம்!
அம்மாவின் கண்டிப்புக் குரலில், “நான் தள்ளிதான் இருக்கேன்.” என்று முணங்கிய மகளின் முகம் சுருங்கிவிட்டதில், பெற்றவருக்கு மனம் பிசைந்தது.
அம்ருதா அண்ணனின் கைப்பிடித்து நடந்தவளல்ல; அவனின் கையிலேயே நடைபழகியவள்! பெற்றது இவர்களானாலும், அவளுக்கு ஒவ்வொன்றையும் கற்றுத் தந்து வளர்த்தது ஹரிஷ் தான்! அம்ருதா பிறந்ததிலிருந்தே அவர்களின் பிணைப்பு அபரிமிதமானதாகவே இருந்திருக்கிறது. திடுமென அவனுடன் சேராதேயென அவன் கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் இவள் விரலைப் பிய்த்தெடுத்தால் இருவருக்கும் எத்துணை வலிக்கும் என்று புரியத்தான் செய்தது.
ஆனால் நிதர்சனத்தை ஏற்றுப் பழகவேண்டும் என்று நினைத்தார் அம்பிகா. ஸ்வேதாவிற்கு சராசரி மாமியார், நாத்தனாராக தானும் தன் பெண்ணும் இருந்து குடும்பத்தைப் பிரித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
உணவினை எடுத்து மகளுக்கு ஊட்டிவிட்டவாறு சொன்னார். “என் வெல்லக்கட்டி! நீயும் ஹரியும் சாதாரண அண்ணன் தங்கைன்னா அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டேன்டா! அவன் உன்னைத் தன் பொண்ணுன்னு சொல்றளவுக்கு எல்லாத்துக்கும் உன்னைத்தான் முன்னே நிறுத்தி செல்லம் கொஞ்சுவான். அதைப் பார்க்கற ஸ்வேதா மனசுக்கு கஷ்டமா இருக்காதா? அதுக்குதான் அம்மா சொல்றேன். இனி அவனைத் தேடறதைக் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கோ கண்ணம்மா!”
“ஓ சூத்திரதாரி நீங்கதானா? என்னடா என் பொண்ணு திடீர்னு பெரிய மனுஷியா நடந்துக்கறாளேன்னு நினைச்சேன்.” என்றபடி வந்த ஹரிஷ் அம்மாவைக் காட்டமாகப் பார்த்தான்.
“நான் அவ நல்லதுக்கு தான் சொல்றேன் ஹரி.”
“எதும்மா நல்லது? கடைசிவரைக்கும் ஒற்றுமையா இருங்கன்னு சொல்லிக் கொடுக்கறதை விட்டுட்டு என்னையும் அவளையும் பிரிக்கறதா நல்லது?”
“இப்போ இப்டித்தான் பேசுவ! அப்புறம் நீயே மாறிடுவ!” என்றவரின் குரல், அலுவலுக்கு தயாராகி வந்த ஸ்வேதாவின் தலையைக் கண்டதும் தேய்ந்தது.
ஹரிஷூம் கூட இதைப்பற்றி மேற்கொண்டு ஸ்வேதாவின் முன் பேச விரும்பவில்லையாதலால், “கிளம்பி இரு அம்மு! ஸ்வேதாவை அவ கடைல விட்டுட்டு வர்றேன்.” என்று ஸ்வேதாவும் அம்மாவும் பார்க்கும்படி வேண்டுமென்றே அம்ருவின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு போனான்.
அந்த எரிச்சலையும் அம்ருவின் தலையில்தான் இறக்கினார் அம்பிகா. “நாளைக்கு பின்ன உன்னை வச்சு அவங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சினை ஆச்சு… மனுஷியா இருக்கமாட்டேன் பார்த்துக்கோ! இருக்கட்டும். உன்னை வேற வீட்டுக்கு துரத்தி விட்டப்புறம் என்ன பண்றான்னு பார்க்கறேன்.”
மகளைத் தன் பார்வையாலேயே ஆட்டுவித்தார் அம்பிகா. அதற்குமேல் இவள் அண்ணனுக்காக காத்திருப்பாளா என்ன?
வேகமாக அப்பாவின் அறைக்குப் போய் அவர்முன் நின்றாள். “ஹாஸ்பிடல்ல டிராப் பண்றீங்களாப்பா?”
“ம்ம்! நானே சொல்லணும்னு நினைச்சேன். இனி ஹரியைத் தொந்தரவு பண்ணாதே அம்ரு. அவன் வீட்டுக்காரி முன்னாடி அவன்கிட்ட சின்ன பிள்ள போல நடந்துக்கறதெல்லாம் கூடாது. என்ன?”
“சரிப்பா!”
நடராஜன் மகிழுந்தில் வரும்போதும் அம்ருவின் காது வலிக்குமளவிற்கு அறிவுரைகளை மானாவாரியாக வழங்கிட, இந்த களேபரத்தில் அஸ்வத் அழைத்ததையே மறந்து போனாள் அம்ருதா.
விளைவு - மருத்துவமனை வாசலிலேயே அஸ்வத்தின் பச்சை நிற ஸ்கார்பியோ தரிசனம்!
“பார்த்து போ! ராத்திரி வேலை முடியவும் கால் பண்ணு! நானே கூப்பிட வர்றேன்.” என்ற அப்பாவின் குரல் செவியை மோதினாலும் கருத்தில் பதியாமல், திகைத்த விழிகளுடன் இறங்கி வந்தவளை எதிர்கொண்டான் அஸ்வத்!
“ஸாரி டாக்டர். நீங்க கால் அட்டன்ட் பண்ணல! அதான் என்னாச்சோன்னு…”
வேகமாக திரும்பி அப்பாவின் மகிழுந்து சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு, “பொறுமையே கிடையாதா அஸ்வத் உங்களுக்கு?” என்றிட,
டாக்டரின் அதரங்களிலிருந்து தன் பெயர் சீறி வருவதில் டாக்டர் கோபமாக இருக்கிறாள் என்று புரிந்துகொண்ட அஸ்வத், “ஸாரி ஸாரி டாக்டர்… உங்களுக்கு எதுவுமில்லையே? நல்லா இருக்கீங்கள்ல?” என்று நிம்மதி பரவும் முகத்துடன் கேட்டான்.
“எனக்கென்ன?”
“இல்ல, அந்த கோகிலா உங்களை இன்னிக்கு, நாளைக்குன்னு அலைகழிக்கறதுல இருந்து ஏதோ ப்ளான் பண்றாளோன்னு தோணுது. ஐ மீன்… அவ உங்களை ஸ்மெல் பண்ணி… ஷி’ஸ் ப்ளானிங் செட் அ ட்ராப் ஃபார் யூ டாக்டர்! அம்மு… அம்முக்குட்டி மாதிரி உங்களையும்…”
“ஓ காட்! எவ்ளோ இமாஜின் பண்ணிக்கறீங்க நீங்களே? நான் உங்க அம்முக்குட்டி மாதிரி குழந்தை இல்ல சர்!”
“ஆனா நீங்களும் உங்கண்ணனுக்கு அம்முக்குட்டி தானே?” குரல் சாதாரணமாகத் தெரிந்தாலும் அதில் வன்மம் மறைந்து கிடந்ததை அப்போது அம்ரு உணரவில்லை.
அவள் விழிகள் அனுமதியின்றி விரிந்தன.
“இவ்ளோ ஆச்சரியப்பட ஒண்ணுமில்ல. நம்மளோட ஃபர்ஸ்ட் மீட்டிங்ல அவர் உங்களை அப்டித்தான் கூப்பிட்டார்.” என்றவன் சட்டென மென்மையுறும் குரலில் நெகிழ்வுடன் சொன்னான். “குழந்தை மாதிரி! நான் என் அம்முவைக் கூப்பிடற மாதிரி!”
இத்தனை நாளும் வீட்டில் குழந்தையாக நடத்தப்படும் போது தோன்றாத உணர்வு, இன்று அஸ்வத்திற்கு அவள் ஹரிஷின் குழந்தையாகத் தெரிவதில் தோன்றியது. அவள் நெஞ்சம் சூடாகிப் போக, அது தன் சூட்டை அவசர அவசரமாக அவள் முகத்திற்கு அனுப்பி வைத்து, கன்னக்குழியில் லஜ்ஜையெனும் உணர்வினை நிரப்பி வைத்தது.
அஸ்வத் தன் குழந்தையின் நினைவில் குழைந்து, மருகி நிற்பதைக் கண்டவள் சுற்றுப்புறம் உணர்ந்து அவனைத் தேற்றினாள். “நீங்க பயப்படற மாதிரி எதுவும் இல்லை சர்! கோகிலாவைப் பொறுத்தவரை அஸ்வத்தும் அம்ருதாவும் வேற வேற! நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தரையொருத்தர் தெரியும்னு அவளுக்கு தெரியாது சர். நீங்க நினைக்கற மாதிரி அவ என்னை ஸ்மெல் பண்ணிருக்க சான்ஸே இல்ல!”
“ஹ்ம்ம்! இப்பவும் சொல்றேன். அவ நம்பரை மட்டும் எனக்கு தந்துட்டு நீங்க விலகிக்கோங்க டாக்டர். இன்னொருத்தனைப் பத்தி அவகிட்ட இருந்தே உண்மையை வாங்கறேன். நீங்க தேவையில்லாம ரிஸ்க்…”
அவனை இடையிட்டு கண்டித்தாள். “அஸ்வத்! கிளம்புங்க நீங்க!”
“ப்ச்! சொல்றதைக் கேட்கறதில்ல!” என்று அவனும் சலித்துக் கொண்டு வளாகத்தின் வெளியே வாசலுக்கு அடுத்து நிறுத்தியிருந்த ஸ்கார்பியோவை நோக்கிப் போக, இவளும் அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.
இருக்கையில் அமர்ந்து பட்டியைப் பூட்டியவன், “ஆனா என் அம்முக்குட்டி உங்களை மாதிரி என்னை அதட்ட மாட்டா டாக்டர்.” என்று குறும்புடன் சொல்ல, கோபமுகம் மாறி இதழ் பிரியாமல் சிரித்தாள் அம்ருதா.
முதல்முறையாக அவளின் கன்னக்குழியில் அஸ்வத்தின் பார்வை விழுந்தது. மெலிதாக சிரித்து கையசைத்தான்.
அப்போது சரியாக ஹரிஷின் மகிழுந்து எதிரே வந்து நிற்க, அம்ருவின் கன்னக்குழி சிரிப்பில் மறைந்து, பயத்தில் ஜனித்தது.
அவளின் முகமாற்றத்தைக் கண்ட அஸ்வத்தின் பார்வையும் எதிரே நோக்க, அங்கே அம்ருதாவின் அண்ணன் வந்து கொண்டிருந்தான்.
அஸ்வத் - ஹரிஷ் இருவரின் பார்வையும் நேரிடையாகச் சந்தித்துக் கொள்ள, இரு மேகங்கள் உரசிவிட்டாற் போல் நடுங்கி நின்றாள் அம்ருதா.
Fast wheels🚗... faster tension🚗...
Comments
Post a Comment