கருவறை கீதம் -5

 


அத்தியாயம் 5


வருடம் 2003

இடம்: ஸ்ரீரங்கம்.


தோ அதோவென மாமியார் வீட்டில் பத்து மாதங்களை வெற்றிகரமாகக் கடந்திருந்தாள் அனுராதா. அப்போது நிர்மலாவிற்கு சென்னையில் நிச்சயத்திருந்த மாப்பிள்ளை வீட்டிலிருந்து அழைத்து, ஒரு வருடம் கடந்துவிட்டது, திருமணத்திற்கு நாள் குறிக்கலாமெனச் சொன்னார்கள். 


அதில் அனு சிறிது மூச்செடுத்துக் கொண்டாள்‌. இனி நிர்மலாவின் திருமண வேலைகளைப் பார்க்க ஆரம்பிப்பவர்கள், திருமணம் முடியும் வரை தன்னிடம் குழந்தைக் குறித்து கடுமையாக எதுவும் பேசமாட்டார்கள் என நப்பாசைக் கொண்டாள். குறியீட்டு முறையில் (coding) கரை கண்ட அந்தப் பேதைக்கு உறவுமுறை ஆட்கள் குறித்து அப்போது சிறு கரையும் தெரிந்திருக்கவில்லை. தன் நாத்தனாரின் திருமண விசேஷ நாட்களில்தான் அதனையும் தெரிந்துகொண்டாள். சிலர் புரிதலோடு கடந்தாலும் பலர் நாசுக்கு பாராமல் நேரடியாகக் கேள்விகளை அடுக்கினார்கள். 


‘ஏதும் விசேஷம் உண்டா?’


‘நீ எப்போ நல்ல செய்தி சொல்லப் போற அனு?’


‘உங்களுக்குள்ளே எல்லாம் ஓகேவா இருக்குதுதானே?’


‘வெளிநாட்டுக்கெல்லாம் போறியாமே? அப்புறம் எப்டி குழந்தை வரும்?’


இன்னும் கேலி, கிண்டல் என்ற பெயரில் அந்த சில நாட்களில் எத்தனையெத்தனை அபத்தங்கள்! அனர்த்தங்கள்!


அனுராதா நொந்து போனாள். இவர்களுக்கு அவளின் மாமியார், மாமனாரே தேவலாம் என்று தோன்ற வைத்துவிட்டார்கள்.


அதிலும் இவள் நாத்தனார் உறவில் வரும் ஒரு பெண்ணிடம், ‘வேலையில் ஒரு நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்ட பின் குழந்தையைப் பற்றி யோசிக்கவேண்டும்’ என்று உண்மையைச் சொல்லிவிட, அது சொந்தங்களிடையே பல விதங்களில் திரிக்கப்பட்டு, இவள்மேல் கசடுகளைத் தூற்ற போதுமானதாக இருந்தது.


விளைவாக நிர்மலா புகுந்த வீடு சென்றபின், இங்கே கலியபெருமாள், மங்கை மற்றும் அவரின் தங்கை காமாட்சி என அனைவராலும் வார்த்தைகளால் வதைக்கப்பட்டாள். அவளின் மிக மிக விருப்பமான வேலையில் கவனம் சிதறியது.


வழக்கம்போல் கணவனின் தோளில் மனக்குமுறல்களை இறக்கி வைத்து இளைப்பாற முயன்றாள். இந்த விடயத்தில் இவளின் அம்மா லட்சுமியும் இவளின் புகுந்த வீட்டினர் கட்சிதான். சொல்லப் போனால் அவர் இன்னும் கடுமையாகவே பேசக்கூடும். ஆக அவரிடம் சென்று முறையிடுவதற்கும் வழியில்லை.


பாஸ்கரனுக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. இயற்கையின் நியதியில் குழந்தைப் பிறப்பில் ஆண்-பெண் இருவருக்கும் பொறுப்பிருக்கும்போது நம் சாபக்கேடான சமுதாயம், சம்மந்தப்பட்ட பெண்ணை மட்டுமே அதற்கு பொறுப்பாக்குகிறது. இதனை பாஸ்கரன் தெளிவாகப் புரிந்து வைத்திருந்ததால், தன்னால் இயன்றவரை தன் குடும்பத்தினரின் பேச்சுகளில் இருந்து மனைவியைக் காக்க முற்பட்டான்.


உண்மையைச் சொன்னால் பாஸ்கரனின் இந்த குணத்திற்காகவே தான் அனு அவனை இன்னுமின்னும் காதலிக்கின்றாள். இல்லையெனில் அவள் இந்நேரம் விவாகரத்து குறித்து சிந்தித்திருக்கக் கூடும். பாஸ்கரனிடம் உள்ள நற்குணம் எந்த உறவாக இருந்தாலும் கடமைக்காக அல்லாமல், உண்மையான உன்னதத்துடன் அவ்வுறவைப் பேணி பாதுகாப்பான்.


அன்று தன் பெற்றோரிடம் பேசித் தீர்த்துவிட வேண்டுமென்ற முடிவோடு இருந்தவன், அனு வேலைக்கு புறப்பட்ட பின்னர், வீட்டு பெரியவர்களை அழைத்துப் பேசினான். வேலையில் இருந்து ஓய்வு பெற்றிருந்த அப்பாவும் அங்கேதான் இருந்தார்.


பாஸ்கரன் பேச்சை ஆரம்பிக்க,


“பாருக்கா அதுக்குள்ள புருஷன் கிட்ட வத்தி வச்சிட்டா!” என்று மோவாயைத் தோளில் இடித்துக்கொண்டார் சித்தி காமாட்சி.


“ஆமா கேட்டோம். என்னடா இப்போ? கல்யாணம் செஞ்சு வச்சாச்சு. பேர பிள்ளையைப் பார்க்க எங்களுக்கு ஆசையிருக்காதா?” - அம்மா மங்கை.


“அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கலாம்மா. அதைச் சொல்லித்தான் அவக்கிட்ட கல்யாணத்துக்கு சம்மதமே வாங்கினேன்.”


“கல்யாணமாகி ஒரு வருஷமாச்சு. இன்னும் என்னடா டைம்? அப்டி அவ வேலை செஞ்சுதான் இங்கே நிறையணுமா என்ன?”


“ஷி’ஸ் வொர்கஹாலிக்’மா! ஆசைங்கறதைத் தாண்டி அந்த வேலை அவளோட பேஷன், ஷி ஓப்செசன் ஆன் இட்! அவ ஆசைப்படி…”


அதுவரை அமைதியாக இருந்த கலியபெருமாள் எரிச்சலாக, “அலை எப்போ ஓய்றது? தலை எப்போ முழுகுறது? வேலை வேலைன்னு ஓடுறவ பின்னாடி நீயும் காலம் முழுக்க ஓடிட்டே இருக்க வேண்டியதுதான். இதுக்குத்தான் இந்த சம்பந்தம் வேணாம்னு தலைதலையா அடிச்சேன். அவளால என் வம்சம் பட்டுப் போகத்தான் போகுது.” என்றவர், சடாரென எழுந்து விருட்டென வெளியேறினார்.


அப்பாவின் பேச்சிலும் செயலிலும் முகத்தில் அறைவாங்கியதைப் போல் உணர்ந்தான் பாஸ்கரன்.


“பெரியவங்க ஏக்கம் உனக்கு புரியலையா பாஸு? பேரப் பிள்ளையைக் கொஞ்சணும்னு உங்கப்பாவுக்கு ஆசையிருக்காதா?” -சித்தி.


“ஏன் சித்தி, எனக்கென்ன வயசா போயிடுச்சு? இல்ல அனுதான் கடைசி வரை இப்டியே இருந்துடப் போறாளா? ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க?”


“என்னவோ போடா! பெரியவங்க நாங்க எப்டியோ புலம்பிட்டு போறோம். உனக்கென்ன? போ, போய் உன் பொண்டாட்டி வேலைக்கு போறதுக்கு புடவை அயர்ன் செஞ்சு கொடு!” எள்ளலாக மொழிந்த மங்கை நகர்ந்துவிட்டார்.


அதில் பாஸ்கரனுக்கும் கோபம் எழுந்தாலும், இனி இவர்களிடம் பேசி பலனில்லை. அனுவைத் தான் கண்டுகொள்ளாமல் இருக்கச் சொல்லவேண்டுமென நினைத்துக்கொண்டான்.


அன்றிரவு அவளிடம் சொன்னான். “கொஞ்சம் யோசி அனு. அவங்க எதிர்பார்ப்பு நியாயமானதுதானே?”


“பாஸ்..‌.”


“கொஞ்சம் பொறு! நான் சொல்லி முடிச்சிடறேன். எனக்கு புரியுது. அவங்க உன்னை ஹர்ட் பண்ணியாவது காரியம் சாதிக்க நினைக்கிறாங்க. பட் அனு, நமக்கு வேற வழியில்லை. யூ ஜஸ்ட் ஃபோகஸ் ஆன் யோர் கெரியர். எப்பவும் எந்த சூழ்நிலையிலையும் நான் உன் பக்கம் இருப்பேன்றதை மட்டும் ஞாபகம் வச்சிக்கோ!”


“ஐ க்நோ பாஸ்கர்! அதனால்தான் நான் இன்னும் டிவோர்ஸ் கேட்காம இருக்கேன்.” என்றவள் கணவனின் கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டாள்.


“ஹேய்…”


“நானும் உங்கக்கிட்ட சின்னப்பொண்ணு மாதிரி கம்ப்ளெய்ண்ட் பண்ண வேணாம்னுதான் நினைக்கறேன். சில சமயம் மூச்சு முட்டுற மாதிரி இருக்கும் போதுதான்…”


“நீ இவ்ளோ விளக்கம் சொல்ல வேணாம்மா… சரி, தூங்கு!” என்றவாறு அவள் நெற்றியில் முத்தமிட,


“நானும் உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்ங்க…” என்று தயங்கி நிறுத்தினாள்.


கல்யாணம் வேண்டாம் என்றிருந்தவளின்  நிலைப்பாட்டில் பாஸ்கரன் மாற்றத்தைக் கொண்டு வந்ததைப் போல், இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் அனு மாற்றத்தைக் கொண்டுவர நினைத்தாள். 


அதுகாறும் மனதிற்குள்ளேயே இது சரி வருமா என பெரும் போராட்டத்தில் இருந்த அனுராதா, தினமும் தன் மாமனார் தன்னையும் தன் கணவனையும் ஒதுக்கி வைப்பதைப் போல் ஜாடையாக பேசுவதைத் தாங்கமுடியாமல் தீர்மானமாய் இன்று பாஸ்கரனிடம் அந்தக் கோரிக்கையை சொல்ல நினைத்தாள்.


மீண்டும் அவள் நெற்றியில் இதழ் பதித்தவன், “என்கிட்ட ஏன் இவ்ளோ தயக்கம்?” எனக் கேட்டான். 


அவள் சொன்னாள்.


“வாட்? அனு?!”


“வீட்டு ஞாபகத்துல ஆஃபீஸ்ல வேலைல நிறைய கவனம் சிதறுது. ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்த சமயம் ஒரு ஃபிரெஞ்ச் பொண்ணுதான் சொன்னா! அவ எங்க ஸ்ட்ரீம் இல்லைதான். கேன்டீன்ல அவ ஃப்ரெண்ட் கிட்ட பேசிட்டிருந்ததைக் கேட்டேன். ஒரு விதத்துல எனக்கும் இது சரின்னுதான் தோணுது பாஸ்கர்.”


“லூசு மாதிரி உளறாதே! யாரோ சொன்னாளாம்! இவ கேட்டாளாம்!”


“அத்தை, மாமாவுக்கு தேவை நம்ம குழந்தைதானே?”


“நோ! எங்கப்பா இதுக்கு கண்டிப்பா ஒத்துக்கமாட்டார்.”


“இதுவும் உங்க வித்துதான்; உங்க வம்சம்தான்!”


“ஆனா வயிறு உன்னுது இல்லையேடீ..?”


“பாஸ்கர் ப்ளீஸ்… நான் என் அக்ரீமெண்ட்ல இருந்து எப்பவும் பின்வாங்கமாட்டேன். நிச்சயம் உங்கக்கிட்ட சொன்ன மாதிரி என் வயித்துல சுமந்து குழந்தைப் பெத்துக்குவேன். ஆனா அதுக்கான நேரத்தை நீங்க எனக்கு தந்த மாதிரி நம்ம வீட்ல இருக்கறவங்க யாரும் தர விரும்பலையே பாஸ்கர்?”


“உனக்கு கஷ்டமா இருந்தா… நாம வேணா கொஞ்ச நாளைக்கு தனியா போயிடலாம் அனு. அதுக்காக போய்…”


“ஒரே பையனான உங்களை உங்க குடும்பத்துல இருந்து பிரிச்சு கூட்டிட்டு போக எனக்கு விருப்பமில்லை. அதே நேரம் என் கேரியர்க்காக உங்… உங்களையும் என்னால விட முடியாது. ஐ… ஐ லவ் யூ… லவ் யூ பேட்லி அண்ட் மேட்லி பாஸ்கர்!” என்றவளின் குரலோடு கண்களும் தளும்பியது.


“அனு.” என அவளை இறுக்கிக்கொண்டவன் அவளின் கோரிக்கையைப் பற்றி சிந்திக்கலானான்.


வருடம் 2034

இடம்: சென்னை.


கோவிலில் வைத்து தங்கள் விருப்பத்தைப் பரிமாறிக்கொண்ட அவினாஷ் மற்றும் பிரகதியின் குடும்பத்தினர்- பெயர் பொருத்தம், ஜாதி, ஜாதகம் என அனைத்தையும் அலசி ஆராய முற்படுகையில், அதிருப்தி தருவதாய் இருந்தது இருவரின் வயது வித்தியாசங்கள்.


இருவருக்கும் எட்டு வருட இடைவெளி! அவினாஷ் உட்பட அனைவரும் தயங்கினர். 


நிர்மலா அலைபேசியில் பிரபஞ்சன் அனுப்பியிருந்த ஜாதகத்தைப் பார்த்துவிட்டு சொன்னாள். “அவி, இங்கே பாரு! அவ உன்னை விட எட்டு வயசு சின்னப் பொண்ணுடா!” 


“எனக்கு முன்னாடியே தெரியும். அவ என்னோட ஜூனியர் பொண்ணுதான்.” என அசட்டையாகத் தோள் குலுக்கினாள் சனா.


“அப்போவே ஏண்டி சொல்லல?”


“நீங்க இதெல்லாம் பெரிய விஷயமா பார்ப்பீங்கன்னு நினைக்கலம்மா!”


“உனக்கு ஓகேவா அவி?”


“நான் பிரகதிக்கிட்ட பேசிட்டு சொல்றேன்மா.” என்றவன் உடனடியாக அவளை அழைத்திருந்தான்.


அங்கே பெங்களூரில் பிரபஞ்சனும் அதையேதான் சிந்தித்தபடி அமர்ந்திருந்தான்.


“உங்கப்பாவுக்கும் எனக்கும் பதிமூணு வயசு வித்தியாசம் பிரபு. ஒருநாள் ஒரு பொழுதாவது என்னைத் திட்டியிருப்பாரா? தங்கமா பார்த்துக்கிட்டாரில்லை!” ஆட்டோமேட்டிக் அயர்னிங் இயந்திரத்தில் தன் புடவையை வைத்தபடி சொன்னார் அபிராமி பாட்டி.


“அம்ம்மா! உங்க காலமும் என் காலமும் வேற! பார்த்தீங்கல்ல கோவில்ல? உங்க பேத்தி பார்த்ததும் பட்டுன்னு இந்த மாப்பிள்ளைதான் வேணும்னு கேட்டுட்டா! உங்களால அப்டி கேட்க முடிஞ்சிருக்குமா? பொண்ணைப் பிடிச்சிருந்தா கூட என்னாலயும்தான் இப்டி தேங்காய் உடைச்ச மாதிரி சொல்ல முடிஞ்சிருக்குமா?”


“மத்தது எப்டியோ! ஆனா புருஷன் பொண்டாட்டி சங்கதி எல்லா காலத்திலேயும் ஒண்ணுதாண்டா! மனசு ஒத்துப் போச்சுன்னா மாமியார் நாட்டாமை கூட செல்லாது.”


“சந்தடி சாக்குல உங்க நாட்டாமை இங்கே செல்லுபடியாகலைன்னு சொல்றீங்களாக்கும்?”


அம்மாவும் மகனும் விவாதமேடையில் மைக் இல்லாமல் நிற்பதைப் போல் தோன்றியது நிரஞ்சனாவுக்கு! இப்போது தான் தலையிடாவிட்டால் பேச்சு திசைமாறி, இவ்வீட்டு மருமகளான தன்னை நோக்கி பாயக்கூடுமென அறிந்தவள் குறுக்கே புகுந்தாள். “நீங்க ரெண்டு பேரும் ஏன் இவ்ளோ ஆர்க்யூ பண்ணனும் அத்தை? உங்க பேத்தியையே கூப்பிட்டு கேட்டுடுவோமே?”


அதைத் தொடர்ந்து பிரகதியை அழைத்துக் கேட்க, அலட்டிக்கொள்ளாமல் அவள் சொன்ன பதில் மூவரையும் வாயடைக்க வைத்திருந்தது.


அப்போதுதான் அவினாஷ் அவளை அழைத்தான். மென்மையுறும் முக அங்கங்களைப் பெரியோர்களுக்கு காட்டாமல் அறைக்குள் வந்து அழைப்பை ஏற்றாள்.


“ஹோய் ஷராரா! நாலு வருஷம் முன்னாடியே பிறக்குறதுக்கென்ன உனக்கு?”


எடுத்ததும் அவன் இப்படி கேட்டதில் இவள் இதழ்கள் குறுஞ்சிரிப்பில் வளைந்தது. “நீங்களுமா? இப்போதான் அப்பாவைச் சரிக்கட்டிட்டு வர்றேன்.”


“அப்போ ஆர் யூ ஓகே வித் தட்? ரொம்ப சின்னப் பொண்ணுன்னு தோணுது. எய்ய்…ட் இயர்ஸ்!”


அவன் குரலில் இருந்த தயக்கத்தைப் புரிந்துகொண்டாள். அப்பாவிடம் சொன்ன அதே பதிலை அவினாஷிடமும் சொன்னாள். “ஏன் எங்கண்ணனுக்கும் எனக்கும் கூட எட்டு வயசு கேப் தான்! ஸ்டில் மை பெஸ்ட் ஃபிரெண்ட், பெஸ்ட் பர்ஸன் இன் மை லைஃப் அண்ணன்தான். என் வயசு பொண்ணுங்ககிட்ட கூட சொல்ல முடியாததை அண்ணன் கிட்ட தயங்காம சொல்லிருக்கேன். ஒருநாளும் ஏஜ் டிஃபரெண்ட்ஸ்ன்னு எனக்கு தோணினதே இல்லையே அஷ்ஷூ?”


அண்ணன் உறவு வேறு; அகமுடையான் உறவு வேறு என்று சொல்ல வந்த அவினாஷுக்கு, இயல்பிலேயே ஆண்களுக்கு உண்டான ‘தன் இணைக்கு, தானே சகலமும்’ என்ற உணர்வில், பிரகதியின் வாழ்க்கையில் இருக்கும் அந்த ‘பெஸ்ட் பர்ஸனைப்’ பின்னுக்கு தள்ளிவிடும் உந்துதல் எழுந்தது. அத்துடன் அவனுக்குமே வயதைக் காரணம் காட்டி அவளை இழப்பதென்பது ஏற்புடையதாக இல்லை‌.


ஆக அவளே இத்துணை தெளிவாக இருக்கையில், தான் தேவையற்ற குழப்பம் செய்ய வேண்டாமென நினைத்தவன் தயக்கங்கள் விடுத்து காதல் மொழி பேசினான்.


பிரகதியின் வாழ்வில் மிக முக்கியமாக இருக்கும் அவளின் அண்ணன் அக்னிஸ்வரூபன், தொழில் தொடர்பான தன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பியிருந்தான். ஆனால் இன்னும் மீதமிருக்கும் சில வேலைகள் காரணமாக தற்சமயம் டெல்லியில் இருக்கிறான்.


அக்னி ஸ்வீடனில் இருக்கும்போதே பிரகதிக்கு மாப்பிள்ளை மாறிய விடயத்தைப் பகிர்ந்திருந்தான் பிரபஞ்சன். முதலில் அக்னிக்கு சிரிப்புதான் வந்தது. தன் தங்க தங்கை இப்போது திருமணமே வேண்டாம் வேண்டாம் என்று அலறியதென்ன? இப்போது கண்டதும் காதலில் விழுந்ததென்ன?


“யாருப்பா அது நம்ம இட்டலிஜெண்ட் இளவரசியையே இம்ப்ரஸ் பண்ணது?”


“ஹாஹா… அதிரடி அவினாஷ்! யூ நோ வாட் அக்னி, பார்த்து பத்து நிமிஷம் கூட ஆகல. அவங்கம்மா ஆள் மாத்தி பேசிட்டேன்னு சொல்லிட்டு இருக்கும்போதே ‘மாறின அலையன்ஸ் மாறினதாவே இருக்கக்கூடாதா அங்கிள்?’ன்னு என்னைப் பார்த்து நேரடியாவே கேட்டுட்டார். என்ன பதில் சொல்லன்னு தெரியாம நான்தாண்டா முழிச்சேன். ஹாஹா…”


அப்போதே தந்தையின் பேச்சிலும் அவரின் உற்சாக குரலிலும் அவினாஷை அவருக்கும் அபரிமிதமாகவே பிடித்திருக்கிறது என புரிந்துகொண்டான் அக்னிஸ்வரூபன்.


ஒருவேளை முன்பானால், ‘அதெப்டிப்பா பார்த்த நிமிஷத்துல பிடிச்சிருக்குதுன்னு அவ சொல்றா’ன்னு யாரு என்னன்னு கூட விசாரிக்காம ஓகே சொன்னீங்க?’ என்று கேட்டிருப்பானாயிருக்கும்.


ஆனால் தற்போது இவனுமே ஒரு சில நிமிடங்களில் ஒரு பெண்ணைப் பார்த்து, அவளை இதயம் முழுவதும் வியாபித்திருக்க இடமளித்து, பின் அவள் வேறொருவனின் சொந்தம் என்று தெரிந்து, உடனடியாக அவள் முகத்தை மறக்க நினைத்து, அது இயலாமல் இப்போது வரை திணறிக் கொண்டிருக்கிறானே!


ஆக, அவினாஷின் மீதான தங்கையின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, அவினாஷைக் குறித்து கேட்டு, இன்னும் மேலதிகத் தகவல்களை விசாரிக்க சொல்லிவிட்டு வைத்திருந்தான். அத்துடன் நிறுத்தாமல் பொறுப்பான, பாசமிகு அண்ணனாக அவினாஷின் தொழில் மற்றும் குடும்பப் பின்னணி பற்றி வெளிநாட்டில் இருந்தபடியே துப்பு துலக்கியிருந்த அக்னிக்கு கிடைத்த தகவல்கள் வாழ்நாளில் அதுவரை அனுபவித்திராதப் பேரதிர்ச்சியை அளித்திருந்தது.


‘பேர் அவினாஷ்; அவனோட அம்மா ஊர் ஸ்ரீரங்கம்ன்னு சொன்னதுமே ஏன் எனக்கு ஸ்ட்ரைக் ஆகல?’ என நெற்றியில் அறைந்து கொண்டவனுக்கு, பிரகதியிடமும் பிரபஞ்சனிடமும் எப்படி இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்வது என்றே தெரியவில்லை.


தன் பிரியமான தங்கையின் முதல் காதல்! அதனை எப்படி இவன் நிராகரிப்பான்? 


ஆனால் அவினாஷ்? அவனை, அவன் குடும்பத்தை, அந்த குடும்பத்துடனான தனது பந்தத்தை இனி வரும் காலங்களில் தன்னால் ஏற்கவியலுமா? 


அக்னிஸ்வரூபனின் மனம் அடித்துக்கொண்டது; போராடியது. சிந்தித்தான்; குழம்பினான்; பின் தெளிந்தான்.


வேண்டும்! ஏற்கத்தான் வேண்டும்! பிரகதியின் சந்தோஷத்தை விட தன் வலி ஒன்றும் அத்துணைப் பெரியதாக இருக்காது! அவளுக்காக இந்த வலியைக் கூட ஏற்கவில்லையெனில் நானெல்லாம் என்ன அண்ணன்?


இப்படியாக தங்கையை முன்னிலைப்படுத்தி தன்னைத்தானே தேற்றிக்கொண்டான் அவன்.


ஆனால் இந்த அதிர்ச்சியில் இருந்து மூச்செடுக்க, தன்னைத் தயார்படுத்த சிறிது அவகாசம் தேவைப்பட்டது. அதனாலேயே அவன் தற்போது வீட்டிற்கு வராமல் இல்லாத வேலையைக் காரணம் காட்டி டெல்லியில் இருந்தான்.


ஒரு சிலிக்கான் பொம்மைக்குழந்தையை வைத்து, அதற்கு தாயாய் மாறி டயாப்பர் மாற்றி, மார்போடணைத்து பால் புகட்டுவதாய் பாவனை செய்து விளையாடும் ஐந்து வயது பெண் குழந்தையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அக்னிஸ்வரூபனின் வலதுகண்ணில் நீர் முத்தொன்று திரண்டு வந்து நின்றது.


பெண்ணாய்ப் பிறப்பெடுத்த பிறவிகளுக்கெல்லாம் இந்த பாழாய்ப் போன தாய்மை உணர்வு பிறப்பிலேயே வந்துவிடுமோ? இல்லையென்றால் எப்படி தன் பசிக்கு சுயமாய் உணவினை எடுத்து நேர்த்தியாய் உண்ணவும் தெரியாத இவள், தன்னை ஓர் அன்னையாய் பாவித்துக்கொண்டு, பால் சுரக்காத பச்சிளம் மார்பில் பொம்மைக் குழந்தைக்கு பசியாற்றுகின்றாள்?


அவள் குழந்தை என்பதையும் மறந்து, அவள் மடியில் தலை வைத்துக்கொள்ளும் ஏக்கமொன்று எட்டிப்பார்த்தது. இமையைச் சிமிட்டி விழிநீர் வழிந்துவிடாமல் முகத்தைத் துடைத்துக்கொண்டது அந்த வளர்ந்த குழந்தை!


அலைபேசி அழைத்து, ‘நீ இன்னும் குழந்தை அல்ல; முப்பது வயது ஆண்மகன்’ என்று அவனை நடப்பிற்கு இழுத்துவந்தது. அழைத்தது பிரபஞ்சன். “சொல்லுங்கப்பா!”


“வேலையா இருக்கியா அக்னி?”


“இல்லப்பா. சும்மா ஒரு ரிலாக்ஸேஷனுக்காக எக்ஸிபிஷன் வந்தேன்.”


“அக்னி… அந்த பையன் அவினாஷ்…”


அவினாஷின் பெயரைக் கேட்டதும் இவனுக்கு மனம் முரண்டியது. முயன்று பிரகதியின் நலனை நினைவுபடுத்திக்கொண்டு, வரவழைத்த புன்னகையுடன் கேட்டான். “ம்ம்… உங்க மாப்பிள்ளைக்கு என்னவாம்?”


“அது… வயசு ரொம்ப அதிகமா தெரியுது அக்னி. நம்ம பிரகதியை விட எட்டு வயசு அதிகம்.”


‘எனக்கு முன்னாடியே தெரியும்ப்பா.’ என மனதோடு சொன்னவன், “அதுக்கென்னப்பா? அவளுக்கு பிடிச்சிருக்குதுல்ல?”


“ம்ம்! அதைத்தான் சொல்ல வந்தேன்.” என்றவன், சற்றுமுன் பிரகதியிடம் பேசியதைச் சொன்னான்.


நீ அவினாஷை விட மிகவும் சிறிய பெண் என்றதற்கு, “ஏன்ப்பா அக்னிக்கும் எனக்கும் கூட எட்டு வயசு வித்தியாசம்தானே?” என்றாள் பிரகதி.


“அவன் அண்ணன்’டா!”


“ஐ அக்ரீ’ப்பா! அண்ணன் இடத்தை யாராலேயும் நிரப்ப முடியாது. ஆனா அந்த உறவு மாதிரி, ஹோப் மை லைஃப் வித் அவினாஷ் ஆல்சோ வில் டிராவல் வித் ஆன் இன்கம்பாரபிள் பாண்ட்! (அவினாஷுடனான என் வாழ்க்கையும் ஒப்பற்ற பிணைப்புடன் பயணிக்குமென நம்புகிறேன்.)”


“அப்டி சொல்லுடி என் சக்கரக்கட்டி. இப்போ என்னடா சொல்ற?” என்று கேட்ட அபிராமி பாட்டிக்கு அத்துணை உவகை.


பிரபஞ்சன் சொன்னதைக் கேட்ட அக்னிக்கு, தங்கை அவளின் வாழ்வில் தனக்கு இணையாக அவளின் காதலைத் தேர்ந்தெடுத்துவிட்டாள் என்ற எண்ணம் ஒருவித அவஸ்தையைத் தந்தது. பெற்ற மகளைப் புகுந்த வீட்டிற்கு அனுப்பும் தாயைப் போல் அலைப்புற்றான்.


தன் அலைப்புறுதலைக் குரலில் காட்டாது, “அதான் பாட்டியும் பேத்தியும் கூட்டு சேர்ந்துட்டாங்களே… அப்புறமென்னப்பா?” என சிறு நகையுடன் கேட்க,


“எனக்குமே அவினாஷை நேர்ல பார்க்கும்போது அவ்ளோ வித்தியாசம் தெரியலை. எதுக்கும் நீயும் வந்து ஒருமுறை விசாரிச்சிட்டா முழு மனசோட சம்மதம் சொல்லிடலாம் அக்னி.”


“ஷ்யோர்ப்பா.”


அலைப்பேசியை வைத்தவன் சற்றுமுன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தான். “வீட்டிற்கு போய் விளையாடலாம்.” என அவளின் தாய் அந்த சிலிக்கான் பொம்மையை வாங்கி வைத்திருந்தாள். அதற்குத்தான் இந்த அழுகை எனப் புரிந்தது.


இப்போது அக்குழந்தையின் நிலையில்தான் இவனும் இருக்கிறான். பிரகதி இவன் கைக்குள் வளர்ந்த குழந்தை! இப்போது வரை எதற்கும் அவள் எதிர்பார்ப்பது இந்த அண்ணனைத்தான்! திருமணம் என்ற பெயரில் அவளை அவினாஷின் கையில் தூக்கி கொடுக்கவேண்டும். நினைவே மனதை அழுத்தியது.


ஏற்கனவே மன உளைச்சலில் இருந்தவனுக்கு, பிரகதியின் பிரிவும் சேர்ந்து மேலும் பாரம் ஏற்றியது.

இசைக்கும்...

Comments

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25