கருவறை கீதம் -6

 


அத்தியாயம் 6


வருடம் 2003


ன்று கோவிலுக்கு போய்விட்டு வீடு திரும்பியிருந்தனர் பாஸ்கரனும் அனுவும். பாஸ்கரன் தனிப்பட்டு ஒரு பெரிய நிறுவனத்திற்கு வருமானவரி கணக்கு தீர்த்து தந்தமைக்காக, ஒரு பெரிய தொகையைச் சம்பளமாக பெற்றிருந்தான். 


அதில் சேமிப்பிற்கும் செலவிற்கும் போக மீதத் தொகையை வழக்கம்போல் அப்பாவிடம் கொடுக்க, “போய் சேர்ற காலத்துல எனக்கெதுக்குப்பா இதெல்லாம்?” என்றார் விட்டேற்றியாக!


“என்னப்பா பேச்சு இது? நான் எப்பவும் என் செலவுக்கு போக மிச்சத்தை உங்கக்கிட்ட தானே தருவேன்?”


“ஹ்ம்ம்! அப்போ எல்லாம் என் வம்ச வாரிசுக்காக பிற்காலத்துல பயன்படும்ன்னு சேர்த்து வச்சு மனை வாங்கிப்போடுவேன். இங்கேதான் எனக்கு அதுக்கு கொடுப்பினை இல்லைன்னு ஆகிடுச்சே? அப்புறம் நான் யாருக்காக இதெல்லாம் சேர்க்கணும்?” 


“ஏன்ப்பா இப்டி? எத்தனை முறை சொல்றது நீங்க சேர்க்கறதை அனுபவிக்க நிச்சயம் உங்க பேரன் வருவான்.”


“அதை அவன் வரும்போது பார்ப்போம் பாஸு.” என்றவர் உறுதியாகப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.


அப்பாவின் கோபமும் பிடிவாதமும் இவனை எரிச்சலுற செய்தது. அம்மாவை விட இவர்தான் மாமியார் போல் நடந்துகொள்கிறார். தன்னிடமே இப்படி அலட்சியமாக பேசுபவர், தான் இல்லாதபோது அனுவிடம் எங்ஙனம் நல்லவிதமாக பேசியிருப்பார்?


அம்மாவையும் சித்தியையும் பற்றி தன்னிடம் புகார் சொல்லும் அனு இதுவரை அப்பாவைக் குறித்து எதுவுமே சொன்னதில்லையே என்ற ரீதியில் மனைவியின் முகம் பார்த்தான். கவலையுடன் ஆதங்கமாக மாமனாரைப் பார்த்திருந்தாள் அவள்.


“அப்போ பேரன் வந்தா மட்டும்தான் என்னை ஒதுக்க மாட்டீங்க இல்லப்பா?”


அவர் அழுத்தமாக அவன் முகம் பாராமல் நின்றிருக்க, ஒரு முடிவுடன் எழுந்துகொண்டவன், கோவில் பிரசாதத்தை அம்மாவின் கையில் தந்துவிட்டு சொன்னான். “சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுவேன்ம்மா.”


அவன் சொன்னதைக் கிரகித்து, மகிழ்ந்து, முதல்முறையாக அனுராதாவின் கைப்பற்றி சிரித்தார் காமாட்சி. அவரைத் தொடர்ந்து மங்கையும் அவளிடம் பரிவுடன் பேசுவதைக் கண்ட பாஸ்கரனுக்கு தன்னைப் போல் பெருமூச்சொன்று வெளியேறியது.


இரவு அறைக்கு வந்ததும் கேட்டான். “நீ உறுதியா இருக்கே தானே அனு?”


“ஹ்ம்ம். அத்தை இன்னிக்கு என்னைப் பார்த்து சிரிச்சாங்க.” என்றவளின் கண்கள் இனிப்பான கண்ணீரால் நிறைந்திருந்தது.


அந்த கண்ணீர் இத்தனை நாட்கள் இருந்த மனக்கசப்புகளின் வெளிப்பாடாகத் தெரிந்தது அவனுக்கு. “ஸாரி அனு. உனக்கு என் மொத்த காதலையும் அர்ப்பணிக்க தெரிஞ்ச எனக்கு, ஒரு நல்ல ஃபேமிலியை, நல்ல சூழ்நிலைல தர முடியலை.”


“ச்ச! இது அவங்களோட நியாயமான எதிர்பார்ப்புன்னு நீங்கதானே சொன்னீங்க? எனக்கு என் வேலை மாதிரி அவங்களுக்கு அவங்க பேர பிள்ளைங்க!”


“......”


“ஏன் அப்டி பார்க்கறீங்க பாஸ்கர்?”


“இந்தப் பொண்ணுங்க கல்யாணம் ஆனதும் எவ்ளோ மெச்சூர்டா மாறிடறாங்கன்னு பார்க்கறேன். க‌.மு நீ எப்டி குழந்தைக்கும் குமரிக்கும் நடுவுல இம்மெச்சூர்டா பேசின’ன்னு பார்த்திருக்கேனே… இப்போ நம்ம ஃபேமிலி மெம்பர்ஸை புரிஞ்சிக்கறளவுக்கு வளர்ந்துட்ட அனு.”


வெட்கமாய் அவன் தோள்களில் சாய்ந்துகொண்டாள்.


“நாளைக்கு ஆஃபீஸுக்கு லீவு சொல்லிடு. லெட்ஸ் கோ டூ அ ஃபெர்டிலிட்டி க்ளீனிக்.”


அவன் தோள்களில் சாய்ந்தவண்ணமே தலையை மட்டும் அசைத்தாள்.


மறுநாள் இருவரும் விடுமுறை எடுத்துக்கொண்டு ஒரு கருத்தரிப்பு மையத்தை அணுகினர். தங்களின் தேவைகளைச் சொல்லிவிட்டு காத்திருக்க, உள்ளே அழைக்கப்பட்டவர்கள் மீண்டும் வெளியில் வரும்போது ஏமாற்றம் தாங்கிய முகத்துடன் வந்தனர்.


பாஸ்கரனின் பெற்றோருக்கு பேர குழந்தையைக் கொடுக்க, அனு தேர்ந்தெடுத்த வழி வாடகைத்தாய் முறை! அதற்காக தான் இருவரும் இந்த கருத்தரிப்பு மையத்திற்கு வந்தது. 


வாடகைத் தாய் மசோதா இனப்பெருக்க தொழில்நுட்ப (ART- Assisted Reproductive Technology) மசோதா என்ற பெயரில் 2000 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்தாலும், இந்தியாவில் வாடகைத்தாய் முறை சென்ற ஆண்டு முதல் தான் (கதையின்படி 2002 ஆம் ஆண்டு) சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 


ஆக அப்போதுதான் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த,  இப்புதிய வழிமுறைக் குறித்து பாஸ்கரனுக்கும் அனுவுக்கும் போதிய விழிப்புணர்வு இருக்கவில்லை‌.


அங்கே மருத்துவர் இதில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து நீண்ட பிரசங்கம் செய்தார். அதில் முதலாவது கருவுறாமை நிரூபிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு மட்டுமே- அதாவது தாய்க்கு மருத்துவரீதியாக கர்ப்பம் தரிப்பது சாத்தியமில்லாத போது, அவரது உடல் நலத்திற்கு குழந்தைப்பேறு ஆபத்தை ஏற்படுத்தலாம் எனும் சூழ்நிலையில் மட்டுமே தம்பதியருக்கு வாடகைத்தாய் முறை பரிந்துரைக்கப்படுகிறது. அத்துடன் அதற்கு குறிப்பிட்ட கால இடைவெளியும் தேவைப்படுகிறது. இப்படியாக அவர் பட்டியல் இன்னும் பெரிதாக நீண்டது.


மருத்துவரிடம் பேசிவிட்டு வந்த அனுவின் முகம் ஏமாற்றத்தால் கருத்திருந்தது. சற்றுநேரம் அங்கே போடப்பட்டிருந்த இருக்கைகளில் இருவரும் அமர்ந்தனர். இவர்களின் நிலையைக் கண்ட அங்கிருந்த பெண்மணி ஒருத்தி மெதுவாக பாஸ்கரனை அணுகி, இருவரையும் ஓரமாக அழைத்துப் போனாள். 


முப்பது வயது மதிக்கலாம். வெள்ளை நிற ரவிக்கையும் அடர்நீல நிற புடவையும் அணிந்திருந்தவள் அம்மருத்துவமனையின் சிற்றூழியராக இருக்கக்கூடும்.


“ஸார்… சரோகஸிக்கு கேட்க வந்தீங்களா?”


“ஹ்ம்ம்!”


“புது ஜோடிக்கு அதெல்லாம் செய்ய முடியாதுன்னு சொல்லிருப்பாங்களே..?”


“??”


“எல்லாம் சும்மா ஸார்! கொடுக்க வேண்டியதைக் கொடுத்தா ஆட்டோமேட்டிக்கா வேலை நடக்கும்.” என்று அவள் பாவனையாகக் கண்களை உருட்ட,


அவள்புறம் நன்றாக திரும்பி அமர்ந்த அனு, “என்ன சொல்றீங்க? இதுக்கு நிறைய ரூல்ஸ் இருக்குதுன்னு டாக்டர் சொன்னாங்களே?” எனக் கவனமில்லாமல் கண்களில் ஆர்வத்தைச் சிதறடித்துக் கேட்டாள்.


மனைவியை அடக்கும் பொருட்டு அவளது கையை அழுத்திய பாஸ்கரனை விடுத்து, அனுவின் ஆர்வத்தைத் தூண்டிவிட எண்ணி அவளிடம் கேட்டாள் அந்த பெண். “என்ன மேடம் ஃபேக் டாக்யூமெண்ட்ஸ் ரெடி பண்றதென்ன ராக்கெட் விடற வேலையா?”


“வாட் யூ மீன்?” -கண்களில் கூர்மையேற்றிய பாஸ்கர்.


“ஆமா ஸார். ஒரு பெரிய அஞ்சு ரூபா செலவாகலாம். நம்ம டாக்டர் எல்லாம் பக்காவா ரெடி பண்ணி தந்துடுவார்.” என்றவள் அத்துடன் நிறுத்தாமல் இத்தனை நேரம் இவர்களையே பார்த்திருந்த தாதி ஒருத்தியை அழைத்து, “மத்த விவரமெல்லாம் இவக்கிட்ட கேளுங்க. எனக்கு வர வேண்டியதைத் தந்துடு சுதா.” என்று அவளிடமும் சொல்லிவிட்டு நகர,


தம்பதியருக்கு வழிகாட்டியானாள் அந்த சுதா.


[தகவல்- இந்த ART பிற்காலத்தில்- அதாவது 2016ஆம் ஆண்டில் வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) மசோதாவாக மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, 2017இல் நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டில் லோக்சபா இந்த மசோதாவை நிறைவேற்றியது.]


                       *********


ஸ்மார்ட் ஹோம் செக்யூரிட்டி சாதனமான, வீட்டில் ரோந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி ட்ரோன் (an autonomous drone) பிற்காலத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிடும். உயர் தொழில்நுட்ப வீட்டுப் பாதுகாப்பு சாதனமான இவ்வகை கேமராக்கள் ஊடுருவும் நபர்கள் வந்தால் எச்சரிக்கை ஒலியெழுப்புவதுடன், இரவில் கேஸ் அணைக்கப்பட்டிருக்கிறதா?, பாலை ஃப்ரிட்ஜில் வைத்தாயிற்றா?, கொல்லைப்புற கதவைப் பூட்டினோமா? என்பதைக் கூட இருந்த இடத்திலிருந்தே சரி பார்த்துக்கொள்ள உதவும்.


வருடம் 2034


க்னிஸ்வரூபனின் மகிழுந்து வெளிவாசல் கேட்டில் வந்து நிற்க, விர்ரென்று சுழன்று வந்த, செக்யூரிட்டி ட்ரோன் ஒலியெழுப்பி வீட்டினுள் இருந்தவர்களுக்கு தன் எஜமானின் வருகையைத் தெரிவித்தது. அதைத் தன் மணிக்கட்டிலிருந்த காப்பின் (bracelet smartphone) மூலம் தெரிந்த திரையில் கண்டுவிட்டு, அபிராமி பாட்டி தன் மணிக்கட்டில் சில தடவல்களைச் செய்ய, வெளியே கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் சிஸ்டம் மூலம் வெளிவாசல் கதவுகள் நகர்ந்து, அக்னியின் மகிழுந்திற்கு வழிவிட்டது. பின் பொறுமையாக எழுந்து பேரனை வரவேற்கச் சென்றார். பிரபஞ்சன் அலுவலகம் சென்றிருந்தான்.


“அக்னி வந்தாச்சா? காலைலயே வருவேன்னு சொன்ன? ஏண்டா இவ்ளோ லேட்?” எனக் கேட்டபடி விரைந்து வந்தாள் நிரஞ்சனா.


“மெதுவாம்மா! அதான் நான் வந்துட்டிருக்கேன்ல?”


“உங்கம்மாவுக்கு வயசு திரும்புதுன்னு நினைப்பு.” தனக்கு முன் ஓடிச் சென்ற மருமகளைக் கண்டு உதடு பிதுக்கினார் அபிராமி.


அக்னி, “யூ ஆர் அப்ஸொல்யூட்லி ரைட், யங் லேடி.” என பாட்டிக்கு ஷொட்டு வைக்க,


“நக்கல் இருக்கட்டும். நான் கேட்ட டிரான்ஸ்லேஷன் இயர் பட்ஸ் வாங்கிட்டு வந்திட்டியாடா?” (Translation ear buds- செயற்கை நுண்ணறிவுத்திறன் மூலம் ஒலிநாடாவை நேரடியாக மொழிபெயர்த்து நம் காதிற்கு கடத்தும் இயர்பட்ஸ்)


சோபாவில் அமர்ந்து கொண்டு வந்திருந்த தன் ஏர்பேகைத் திறந்து அவர் கேட்டதை எடுத்துத் தந்து, “என்ஜாய் யோர் பாகிஸ்தானி டிராமா வித் திஸ், யங் லேடி!” என்றவனை, 


மெதுவாக அவனருகே அமர்ந்த நிரஞ்சனா, “எதுக்குடா கண்டதையும் வாங்கிக் கொடுக்கற? வயசான காலத்துல இதெல்லாம் தேவையா?” எனக் கிசுக்கிசுத்தாள்.


“அதேதான்! வயசான காலத்துல எல்லாத்தையும் என்ஜாய் பண்ணிட்டு போகட்டும். விடும்மா.”  


நிரஞ்சனா இரு வாரங்களாக மகனை நேரில் காணாத ஏக்கத்தில் அவன் சிகையை ஆதூரமாகக் கோதிவிட்டாள். அவன் மெதுவாகத் தலையை விடுவித்துக் கொள்ள, அப்படியே அவளின் கரம் கீழிறங்கி முழங்கையைப் பிடிக்க, “ஸ்ஸ்!” என்றான் மகன்.


“என்னடா?”


“நத்திங்ம்மா!” என்று எழப் பார்த்தவனை, 


இழுத்து நிறுத்தி, “என்னாச்சு அக்னி?” என்றபடி சட்டைக்கு மேல் முழங்கையைத் தடவிப் பார்க்க, உள்ளே துணிச் சுற்றப்பட்டிருப்பது போல் தெரிந்தது.


“ஒண்ணுமில்லை. விடும்மா!”


சட்டென அவனருகே வந்த அபிராமி, அடர்ந்து நெற்றியில் படர்ந்திருந்த அவனின் தலைமுடியை மேலேற்றிப் பார்க்க, அங்கே அடிப்பட்டதற்கான அறிகுறியாக பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது.


“அச்சோ! என்னடா இது?” என்ற நிரஞ்சனா கூச்சலிட்டு அழத் தயாராக,


“பயப்படறதுக்கு ஒண்ணுமில்லம்மா! வரும்போது தெரியாம ஒருத்தரோட லக்கேஜ் மேல மோதி விழுந்துட்டேன்.” என்று சமாளித்தான்.


உண்மையில் விமான நிலையத்திற்கு இவனை அழைக்க வந்த இவனின் உதவியாளரைத் தவிர்த்துவிட்டு இவனே காரை ஓட்டி வந்திருந்தான். வரும்போது எதிர்பாராத விதமாக வந்த ஒரு ஆட்டோ இவன் காரில் மோதிவிட, கிறிஸ்டலால் ஆன கியர் நாப்’இல் முழங்கையை இடித்துக்கொண்டான். சிறிய விபத்துதான்! உடனடியாக அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்திருந்த அக்னி, இதனை வீட்டினரிடம் - குறிப்பாக அம்மாவிற்கு தெரியப்படுத்தவே கூடாது என நினைத்திருக்க, 


அம்மாவிடம் எதையும் மறைக்க முடியாது என்பது போல் முதலில் அவள்தான் அவன் காயத்தைப் பார்த்திருக்கிறாள். “முதல்ல சட்டையைக் கழட்டுடா!”


“ப்ச் ம்மா! பெரிய காயம் ஒண்ணுமில்லைன்னு சொல்றேன்தானே?”


“அதைக் காட்டிட்டா அவளுக்கு நிம்மதியா இருக்கும்ல? ஆறடி உசரத்துல வளர்ந்து நிற்கறவன் கீழே விழுந்துட்டேன்னு சொன்னா நம்புற மாதிரியா இருக்குது?”


“யப்பாஆ! யோர் நாலெட்ஜ் ஓவர்ஃப்ளோஸ் யங் லேடி! ஆறடில இருக்கறவனுக்கு ஸ்லிப் ஆகாதா என்ன? அப்புறம் ஃபார் யோர் இன்ஃபோ ஐ’ம் ஜஸ்ட் ஃபைவ் ஃபீட் எய்ட் இன்ச்சஸ்!” அவன் இருவரையும் இலகுவாக்க நினைக்க,


“சரி சட்டையைக் கழட்டு!” என அதிலேயே நின்றாள் நிரஞ்சனா.


வேறு வழியில்லாமல் அலுத்துக்கொண்டு மேல் சட்டையைக் களைய, முழங்கையினருகே கட்டிற்கும் மேல் உறைந்திருந்த இரத்தம் தெரிந்தது. “அய்யோ! பாருங்கத்தை!” என அவள் அழுகைப் பெருக,


“இதுக்குத்தான் காட்டமாட்டேன்னு சொன்னேன்.” என எரிந்து விழுந்தான்.


“விழுந்தா இப்டி இரத்தம் வர்ற அளவுக்காடா அடிப்படும்?” -அபிராமி.


“போதும் பாட்டி. சின்னக் காயம்தான். ஒண்ணுமில்லை! முழுசா உங்க முன்னாடிதானே நிற்கறேன்?”


“இப்டிலாம் பேசாதே அக்னி!” நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள் நிரஞ்சனா.


“அப்புறம் என்னம்மா? இத்தனை நாள் கழிச்சு வீட்டுக்கு வந்தவனை நிற்க வச்சு டென்ஷன் பண்ற! ஆல்ரெடி காலைல சாப்பிடல வேற! ஐ’ம் ஃபெட் அப்’ம்மா!”


“சரி இரு! டிபன் எடுத்துட்டு வர்றேன்.”


“முதல்ல நீ அழறதை நிறுத்து!”


“அழலைடா! நீ போய் குளிச்சிட்டு வா!” எனக் கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.


“காயத்துல தண்ணி படாம குளி!” - அபிராமி.


ஹாலில் இருந்து மாடிக்கு போகும் சிறிய தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த சோபாவில், மணிக்கட்டை நெற்றியில் வைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தத் தங்கையைக் கண்டுவிட்டு, கேள்வியாய் அம்மாவைப் பார்க்க,


அவள், “அவினாஷ்க்கு டெக்ஸ்ட் பண்ணிட்டிருந்தவ அப்டியே தூங்கிட்டா போலருக்குது.” என சிரிப்புடன் சொல்ல, 


“ராத்திரி தூங்காம பேசிட்டு இருந்துட்டு இப்போ பகல்ல தூங்கறா!” எனப் பாட்டி பேத்தியின் தலை வருட, அக்னிக்கு அத்தனைப் பேரும் அவினாஷில் விழுந்துவிட்டதாக மாயபிம்பம் தோன்றி மனதை அழுத்தியதில் சிறு கோபம் கூட முகிழ்த்தது.


அங்கே நிற்காமல் தடதடவென மாடியேறிவிட்டான். தன்னறைக்கு வந்து படுக்கையில் விழுந்தவன், ‘இதையெல்லாம் இனி பழகிக்கொள்ள வேண்டும். இது வெறும் ஒரு ஆரம்பம்தான்! தேவையற்ற உணர்வுகளுக்கு இடங்கொடுக்கக் கூடாது.’ என்று தன் மனதிற்கு திரும்பத் திரும்ப சொல்லி, நிதானப்படுத்திக் கொண்டு எழுந்து போய் குளித்து வந்தான்.


வார்ட்ரோபிலிருந்து உடைகளை எடுத்துக் கொண்டிருக்க, “அண்ணா!” என்ற அழைப்புடன் அறைக்கதவு தட்டப்பட்டது.


‘தங்கையிடம் இயல்பாக பேசவேண்டும்’ என லட்சத்து நான்காவது முறையாக சொல்லிக்கொண்டு வழமையான குரலில் அழைத்தான். “வாடி ப்ரூ காஃபி!”


“எப்போ வந்த? என்னை எழுப்பிருக்கலாம்ல? எங்கேயோ விழுந்து வாரிட்டு வந்திருக்கியாம்?” என்றவாறு உள்ளே வந்த பிரகதி, அவன் கைக் காயத்தை ஆராய்ந்தாள்.


“சின்னக் காயம்தான் விடு!” எனக் கையை விடுவித்துக் கொண்டவன், “மேடம் உங்க பெட்டர் ஹாஃப் கிட்ட பேசின டயர்ட்ல தூங்கறீங்கன்னு சொன்னாங்க. அதான் டிஸ்டர்ப் பண்ணல.” என,


சிணுங்கியவள், “நான் ஒண்ணும் ரொம்ப பேசல… சும்மா மெசேஜ் போட்டுட்டு இருந்தேன்.” என்றாள் வெட்கத்தில் சின்னதாகிப் போனக் குரலில்!


“ஆஹான்! என் தங்கை ஒருத்தி கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டிருந்தா! அவளைக் காணோமே?”


“டேய் அண்ணா! யூ ஆர் ஓவர் டூயிங்! நான் எப்பவும் உன் தங்கச்சிதான்!”


“ம்ஹூம்! நீ அவினாஷோட ஆத்துக்காரி!” என்ன முயன்றும் உள்ளத்து வன்மம் வெளிப்படுகிறதோ? தங்கையின் மகிழ்ச்சியில் தானும் மகிழத்தானே வேண்டும்? 


இடித்துரைத்த புத்தியால், உதடு பிதுக்கி நிற்கும் பிரகதியைக் கண்டு, சட்டென கேலியை விடுத்து, “உனக்கு பிடிச்சா ஓகேதான்! உன் சந்தோஷம்தாண்டா எனக்கு வேணும்.” என்று அவள் நெற்றியில் முத்தமிட, பிரகாசமானது பிரகதியின் முகம்.


“நீ அஷ்ஷூ (அவினாஷ்) கிட்ட பேசினியா’ண்ணா?”


நொடியில் கருத்த முகத்தை, எடுத்த உடையை உள்ளே வைத்துவிட்டு வேறு உடை எடுக்கும் சாக்கில் மீண்டும் வார்ட்ரோபினுள் மறைத்துக்கொண்டு சொன்னான். “இன்னும் இல்லடா. இப்போதானே வந்திருக்கேன். இனி அவங்க ஃபேமிலியை பத்தி எல்லா டீடெயில்ஸூம் கலெக்ட் பண்ணிட்டு பேசலாம்.”


கலங்கிப் போனது பெண்ணின் வதனம். “இன்னும் என்ன’ண்ணா? அவங்க எல்லாரும் நல்லவங்கதான்!”


சட்டென திரும்பிப் பார்த்தான். இப்போது நிஜமாகவே தங்கையைக் கேலி செய்ய தோன்றியது. “ஓஹோ! அந்தளவுக்கு லவ் ஆகிடுச்சா?”


வெட்க மிகுதியில், “அச்ச்…சோ..!” என வாசலின் புறம் நகர்ந்தவள், கீழே நிரஞ்சனா அழைக்கும் சத்தம் கேட்டு வெளியேறினாள்.


பின் மீண்டும் தலையை நீட்டி, “டேய் அண்ணா! சாப்பிட வருவியாம். அப்புறம்… உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு நினைச்சேன். நீ ஃப்ரீ ஆனதும் சொல்றேன்.” என்றுவிட்டு போனாள்.


தங்கை தன் கைவிட்டு போவதிலேயே துவண்டு போகும் அக்னிஸ்வரூபனின் இருதயத்திற்கு, இன்னும் சில பேரிடர்களையெல்லாம் தர காத்திருக்கும் இப்பிரபஞ்சம், அதனைத் தாங்கி நின்று ஜெயிக்கும் உறுதியையும் தரட்டும்!

இசைக்கும்...

Comments

  1. ஒரு பக்கம் டெக்னாலஜி பற்றிய விஷயங்கள், இன்னொரு பக்கம் அப்படியே அதற்கு எதிர்புறமாக, 'உள்ளக்கிளர்ச்சிகள்'!
    படிப்பதற்கு ஒரு முழுமையான கதையாக தோன்றுகிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25