கருவறை கீதம் -8

 


அத்தியாயம் 8


வருடம் 2003


ஒரு வீட்டின் அருளும் இருளும், நிம்மதியும் நிர்கதியும், ஆனந்தமும் அனர்த்தமும், அவ்வீட்டு மனிதர்களின் மனநிலையைப் பொறுத்தே அமைகிறது. அவ்வகையில் தற்போது பாஸ்கரனின் வீடு துக்கம் நடந்த வீட்டைப் போல் அருளற்று இருந்தது.


அங்கிருந்த ஒவ்வொருவரின் களையிழந்த முகத்தைக் கண்டு நடந்ததை ஊகிக்க முடிகிறது. பேரப் பிள்ளையைக் கேட்ட பெரியவர்களுக்கு, இளைய தம்பதியர் தாங்கள் கண்டறிந்த மாற்றுப்பாதையும் அதற்கு அவர்கள் மேற்கொண்ட வழிமுறையும் அது தற்போது வெற்றிக்கரமான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதையும் வீட்டில் சொல்லிவிட்டார்கள் என்று தெரிகிறது.


பாஸ்கரன் இறுகிப் போய் நின்றிருந்தான். அனுராதாவின் முகம் அழுதழுது வீங்கி சிவந்திருந்தது. அடித்திருக்கிறார்கள் என்று அவள் கன்னத்தில் பதிந்திருந்த விரல் ரேகைகள் சொல்கிறது. காரணம், அவளருகே அவளின் அம்மா லட்சுமி.


பாஸ்கரனின் வாரிசு வெற்றிகரமாக மூன்று மாதங்களைக் கடந்ததையடுத்து, நிர்மலமாக விடிந்த ஒரு விடுமுறை நாளில், அனைவரும் கூடத்தில் கூடியிருந்த வேளையில் பாஸ்கரன் விடயத்தை மெதுவாக ஆரம்பித்து, உறுதியுடன் சொல்லி முடித்துவிட்டான். வீட்டுப் பெரியவர்கள் மூவர் முகத்திலும் எதையோ மிதித்தாற் போன்ற அசூயை!


“ஏன்மா வாடகைக்கு எடுக்க அதென்ன ஹோட்டல் ரூமா? ஒரு உயிர் வளர்ற கருவறை இல்லையா? பொம்பளையா பிறந்த ஒருத்தி பிள்ளை பெத்தெடுக்க மாட்டேன்னா அந்த கருப்பை இருந்து என்னத்துக்கும்மா?” -நீங்காத அதிர்ச்சியில் ஆதங்கத்துடன் சித்தி.


“உன்னால முடியலைன்னா என் பிள்ளையை விட்டுடு தாயே! உன்னால என் குடும்பம் இன்னும் என்னென்ன அசிங்கத்தையெல்லாம் பார்க்கணுமோ? பாஸு இது வேணாம்டா…” -அழுது ஆர்ப்பாட்டம் செய்த அம்மா மங்கை.


அவர்களைப் போலல்லாமல் வழக்கம்போல் மௌனமாக அமர்ந்திருந்தார் கலியபெருமாள். ஏதோ சுடுச்சொற்களைக் கொட்டப்போகிறார் என ஊகித்தாள் அனுராதா.


“சித்தி! இது ஒண்ணும் கொலை பாதகமில்லை. ஃப்யூச்சர்ல இதெல்லாம் சாதாரணமாகி இன்னும் அட்வான்ஸ் லெவல்க்கு போகும்.” அவர்களுக்கு புரிய வைத்துவிடும் நோக்கத்துடன் சொன்னான் பாஸ்கரன்.


“என்னவோ போய்ட்டு போகட்டும். நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் சரிப்படாது பாஸூ. உன் பொண்டாட்டி உண்டாகாமலே பிள்ளையைக் காட்டினா அக்கம்பக்கத்துலேயும் சொந்தக்காரங்களும் என்னப் பேசுவாங்கன்னு தெரியுமா? நமக்குத்தான் அசிங்கம்டா பாஸூ.” -அம்மா.


“இதுல அசிங்கம்ன்னு எதுவுமில்லைம்மா. இதுவும் நம்ம ஃபேமிலி ஜீன்தான். நம்ம குடும்ப வாரிசுதான்!” 


வாடகைத்தாய் முறையில் பிறக்கும் குழந்தைகள், வாடகைத்தாயிடம் இருந்து உதிரத்தின் மூலம் சத்துக்களைப் பெற்றுக் கொள்கிறார்கள் தவிர, அவரிடமிருந்து எந்தப் பண்புகளையும் குணநலன்களையும் பெறுவதில்லை. மாறாக, மரபணு பெற்றோரின் பண்புகளை, உருவத்தின் ஒத்த சாயலைக் கொண்டிருப்பார்கள்.


“அதெப்டிடா அவ்ளோ உறுதியா சொல்ல முடியும்?” இதுவரை வாய் திறக்காத அப்பாதான் கேட்டார்.


“அப்பா?”


அங்கிருந்து நகர முடியாத நிலையில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தாள் அனு. மாமனாரின் வாய் மந்திரம் அப்பேற்பட்ட மகிமையுடையது என்று இத்தனை நாட்களில் புரிந்து வைத்திருந்தாள்.


“அது உன்னோட உயிர்த்தண்ணிதான்னு  உனக்கெப்டி தெரியும்? வேற ஒருத்தனோடது மாறினா என்ன செய்வே?”


அனு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.


“அப்பா ப்ளீஸ் இப்டிலாம் பேச வேண்டாம்.” என்றுமில்லாமல் அப்பாவிடம் பாஸ்கரனின் குரல் உயர்ந்தது.


அதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் மேலும் ஏளனத்துடன் சொன்னார் அவர். “நீ உன் பொண்டாட்டியை நம்பி இல்லை. ஏதோ ஒரு நர்ஸை நம்பி பிள்ளை பெற போற!” 


ஏட்டிக்குப் போட்டியாக பேசுபவரிடம் இவனும் அவ்வாறே பதிலளித்தான். “யாரை நம்பி பெத்தாலும் நான்தான் அவன் அப்பா! எண்ணி ஆறே மாசத்துல அவன் இந்த வீட்டுக்கு வருவான். நான் அவனை நல்லபடியா வளர்க்கறதை நீங்க எல்லாரும் பார்க்கத்தான் போறீங்க!”


“நான் எந்த அசிங்கத்தையும் என் வீட்டுக்குள்ளே சேர்க்கமாட்டேன்.”


“சேர்க்கலைன்னா உங்க உயிர்த்தண்ணில பிறந்த உங்க பிள்ளையை இனி ஜெயில்லதான் பார்க்கணும்.”


“பாஸ்கர் போதும்.” அனுவிற்கு காரியத்திற்கு பின் வந்த வீரியத்தை ஏற்க முடியவில்லை‌. விடை முன்பே தெரிந்திருந்தாலும் இந்த கடுமைச் சூழலும், வார்த்தைகளும் அவளை மிரட்டியது. அழுதாள்.


“எல்லாம் உன்னாலதான்! பத்து மாசம் வயித்துல சுமந்து, தன்னோட இரத்தத்தில் கருவை வளர்க்கறவ தான் உண்மையான அம்மா! முதல்லயே நாங்க சொன்னதைக் கேட்டிருந்தா இப்போ இவ்ளோ பிரச்சினை வந்திருக்குமா?” - மங்கை.


“எங்க வீட்டு பொண்ணைப் பார்த்தியா? கல்யாணம் முடிஞ்சு மூணே மாசத்துல உண்டாகிட்டா! நல்ல குடும்பத்து பொண்ணுங்கன்னா அப்டித்தான் இருக்கணும்.”


“சித்தி! வார்த்தையைப் பார்த்து பேசு!” குரலுயர்த்தினான் பாஸ்கர்.


“பொண்டாட்டியை அடக்கி வாழ துப்பில்ல! எங்களைப் பேச வந்துட்டான்.” -மங்கை.


“இவன்கிட்ட என்ன பேச்சு? அவங்கம்மாவை வரச்சொல்லி அவளைக் கூட்டிட்டு போகச் சொல்லு. நல்லா வளர்த்து நம்ம தலைல கட்டினாங்க போ!” -அப்பா.


“எங்கம்மாவைப் பத்தி எதுவும் பேச வேணாம் மாமா.”


“என் பிள்ளையை எனக்கெதிரா திருப்பி விட்டுட்டு இப்போ என்னையே மிரட்டுறியா? அப்பன் இருந்து அடிச்சு வளர்த்திருந்தா கடமைன்னா என்ன?, ஒழுக்கம்னா என்னன்னு தெரிஞ்சிருக்கும். பொம்பளை வளர்த்ததுனால இப்டி கடமையை மறந்து ஊர் மேயுற!” -கலியபெருமாள்.


“அப்பா!” கண்கள் சிவக்க ஆக்ரோஷமாக அப்பாவின் சட்டையைப் பிடிக்கப் போயிருந்தான் பாஸ்கரன்.


“பாஸு!”


“பாஸு!”


“ஆஹா! பெற்றக் கடனை அடைந்தேன்.” என அவர் எள்ளலாக சொல்ல,


“மன்னிச்சிடுங்கப்பா ப்ளீஸ்! ஆனா நீங்க பேசினதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை! நம்ம வீட்டுக்கு வந்தப் பொண்ணை வீட்டுப் பெரியவர் நீங்க இவ்ளோ அநாகரீகமா பேசறது என்ன நியாயம்ப்பா?” என ஆதங்கத்துடன் கேட்டான்.


அதற்கு கலியபெருமாள் மேலும் அனுவைத் தகாத வார்த்தைகளால் பேச, பாஸ்கரன் தனிக்குடித்தனத்திற்கான முடிவை எடுத்துவிட்டான். ஆனால் அனு அதனை ஏற்கவில்லை. அவள் அவர்களை வெறுக்கவில்லை என்பதுதான் முதல் காரணம்!


குழந்தைக் குறித்து துணிந்து பாஸ்கரனின் சம்மதத்துடன் முடிவெடுத்தவளுக்கு, தற்போது புகுந்த வீட்டினரின் சீற்றம் மருட்டியது. இதில் தனியே போய்விட்டால் அந்தப் பழியும் இவளைத்தான் சேரும். ஆக தன் பணியில் வரும் பிரச்சினைகளை இலகுவாக எதிர்கொள்பவள், இன்று குடும்பப் பிரச்சினையையும் மோதி பார்த்துவிட தீர்மானித்தாள்.


“நாம ஏன்ங்க போகணும்? என் பிள்ளையைப் பிரிச்சிட்டன்னு அதுக்கும் என்னைத்தான் சொல்லுவாங்க. நான் என் வயித்துல சுமக்கலைன்னாலும் அந்தக் குழந்தை இந்த குடும்பத்து வாரிசுதான். அதுக்கான அங்கீகாரம் கிடைக்கணும்னா அது இந்த வீட்டுல தான் வளரும். வளரணும்!” என்று தன் மாமனாரை ஒரு பார்வைப் பார்த்தாள்.


அப்பார்வையில், ‘இனி நீயா நானான்னு பார்த்துடுவோம்யா!’ என்ற அர்த்தம் பொதிந்திருந்தது.


பின்னர் விடயத்தை அனுவின் அம்மா லட்சுமிக்கு தெரிவித்து, அவரை ஸ்ரீரங்கம் வரவழைத்தனர். இவர்களுக்கும் மேல் ஆத்திரப்பட்ட லட்சுமி, “எனக்கு என்ன பேர் வாங்கித் தந்திருக்க பாரு!” என்று அவளை அறைந்துத் தள்ளினார்.


அனுவை அடித்து, வதைத்து, அவள் வீட்டு பெரிய மனிதரிடம் மன்னிப்பை யாசித்து நின்றார் லட்சுமி.


வருடம் 2034


வள் பெயர் சந்தனா என்று பிரகதி சொன்னதும், பரபரவென லேப்டாப்பை உயிர்ப்பித்து அதில் அவினாஷின் தங்கைப் பெயரைப் பார்த்தான் அக்னிஸ்வரூபன். 


ஆமாம்! சந்தனாதான்!


கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, நினைவடுக்கில் படிமமாய்க் கிடந்த அவளின் பெயரையும் முகத்தையும் தேடியெடுக்க முற்பட்டான். இடக்கைத் தன்னிச்சையாக உயர்ந்து கன்னத்தை வருடிக்கொண்டது. கண்மூடி அந்த ஸ்பரிசத்தை இப்போதும் உணர விழைந்தான்.


அவள்… 


ஆமாம் அவளின் பெயரென்ன? சந்தனா என்றா சொன்னாள்?


ஆனால் அவினாஷின் தங்கை பெயர் ‘சந்தனமாரி’ அல்லவா? 


‘அடி மாரியாத்தா!’


சரிதான்! மாடர்ன் யுவதி மாரியை கத்தரித்துவிட்டாள் போலும். 


‘ஆனால் என் பரபரப்பிற்கு காரணம் அதுவல்லடா மடையா!’ என்று நெஞ்சின் இடப்பக்கம் சிணுங்கியது.


அவன் சிந்தனையை, ‘சின்ன வயசுலயே அருணுக்குதான் இந்த சந்தனான்னு எழுதிக்கொடுத்துட்டேன்.’ என்ற குரல் கலைத்தது.


‘ஒருவேளை இவள் அவளாக இருந்தால்..?’


‘ச்சச்ச! இருக்காது.’ என்றெண்ணியபடி, அவளைப் பற்றியத் தரவுகளைப் பார்த்தான். பெங்களூருவில் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்திருந்தவள், இங்கேயே பிரபல நிறுவனத்தில் பணிபுரிகிறாள் என்றன தரவுகள்! 


இருந்தும், ‘பெங்களூரில் இந்த ஒரு சந்தனா தான் இருக்கிறாளா என்ன?’ என்று அலட்சியம் செய்ய முயன்றான்.


‘அவளும் தமிழ்ப்பெண் தான்!’ என்று எடுத்துரைத்தது அறிவு.


‘நூற்றில் ஒன்றாக இவள் அவளாக இருந்துவிட்டால்?’ இப்படி நினைத்த மாத்திரத்தில் அக்னிக்கு குப்பென்று வியர்த்தது. இருதயம் இருக்குமிடத்தில் பெரும் சுழற்சியை உணர்ந்தான்.


“அண்ணா! டேய் அக்னி! என்ன பண்ணுது?” என்று உலுக்கும் பிரகதியிடம், 


அரும்பாடுபட்டு தன்னுணர்வுகளை மறைத்து, “ஹேய் ஒண்ணுமில்லடி! வேலை டென்ஷன்.” என்று விரித்து வைத்திருந்த மடிக்கணினியை மூடினான். 


“எவ்ளோ வேலைன்னாலும் அசராம இருப்பியே? ஒரு நிமிஷத்துல பயந்துட்டேன் தெரியுமா?” என்றவள் அக்னியைக் கட்டிக்கொண்டாள்.


“சரி, நீ இதை அவினாஷ் கிட்ட சொன்னியா?”


“ம்ஹூம்! அவர் தங்கச்சியைப் பத்தி எப்டி அவர்கிட்டேயே கேட்கறது?”


“சிஸ்டர்-இன்-லா பேசலைன்னா சந்தோஷப்படறதை விட்டுட்டு எதுக்கு நீ இவ்ளோ ஃபீல் பண்றியோ தெரியலை.” தங்கையிடம் வம்பு பேசி படபடக்கும் மனதைச் சமப்படுத்த முயன்றான்.


“அண்ணா உன்கிட்ட ஓப்பனா ஒரு விஷயம் சொல்லட்டுமா?”


“ம்ம்!”


“அஷ்ஷூ கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை‌. நான் மட்டும் பையனா பிறந்திருந்தா சனாவைத் தான் லவ் பண்ணிருப்பேன்.” என்றவள் கிளுக்கி சிரிக்க, பேய் முழி முழித்தான் அக்னிஸ்வரூபன்.


                   **********


தேநேரம் சென்னையில் அவினாஷூம் பிரபஞ்சனின் குடும்ப சரித்திரத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அருகே அவன் அம்மா நிர்மலா. எதிரே ஆப்பிளுக்கு கதிமோட்சம் தந்தபடி சந்தனா!


“அந்தப் பொண்ணு காலேஜ்ல உன் கூட படிச்சவன்னு சொன்னியேடீ? நல்லப் பொண்ணுதானா?” நிர்மலா கேட்க,


“நல்லப் பொண்ணுதான்! எனக்கு ரொம்பப் பழக்கம் இல்லம்மா. ஒண்ணு ரெண்டு வாட்டி பார்த்திருக்கேன்.” என்று முடித்துக்கொண்டாள் சந்தனா.


“ஆனா இதெல்லாம் ஓவர்ம்மா! என்னை நம்பாம அர்ஜூன் கிட்ட சொல்லி அவங்க ஃபேமிலி பத்தி எக்ஸ்ப்ளோர் பண்ண சொல்லிருக்க!” என விளையாட்டாகக் கேட்டபடி மடிக்கணினி திரையில் கண்ணை ஓட்டிக் கொண்டிருந்தான் அவினாஷ்!


“பின்னே? நீ பாட்டுக்கும் உன் உட்பீ மேல இருக்கற மயக்கத்துல அவங்க ஃபோர் ஜெரியா இருந்தா கூட ஃபோகஸ்ல காட்ட மாட்ட!” என்றாள் அவன் தங்கை.


“அதான்! அதனாலதான் அர்ஜூனை விசாரிக்க சொன்னேன்.” என்று நிர்மலாவும் மகள் சொல்லை ஆமோதிக்க, சிறு வெட்கத்துடன் சிரித்துக்கொண்டான் அவினாஷ்.


“எனக்கு எல்லாம் ஓகேவா தான் தெரியுது.” என்றான் சிரிப்பினூடே!


“அன்னிக்கு கோவில்ல பேசும்போது ஒரு பையன் இருக்கறதா சொன்னாங்களே… என்ன பண்றானாம்?”


“அதையும் சொன்னாங்க தானேம்மா? பேமெண்ட் சிப் மேனுஃபேக்சரிங் யூனிட் வச்சிருக்கார்.”


“அதுதாண்டா அவங்க சொன்னது எனக்கு புரியல. *** கம்பெனியா?” என புழக்கத்தில் உள்ள ஒரு பண பரிவர்த்தனை சில்லு (chip) நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு கேட்க,


“அது அப்டியில்லம்மா! இவர் யூனிட்ல மேனுஃபேக்சரிங் மட்டும்தான்! *** மாதிரியான கம்பெனீஸ்க்கு செஞ்சு கொடுப்பார். அதை வாங்கி அவங்க கோட் பண்ணி, இம்ப்ளாண்ட் பண்ற ப்ராசஸ் செய்வாங்க”


“என்னவோ இன்னும் எனக்கு அதெல்லாம் உடம்புக்குள்ள வைக்கறது நினைச்சாலே பயம்தான்! கடைக்கு போனோமா… பேடி எம் அல்லது ஜிபே செஞ்சோமான்னு இருக்கறதுதான் ஈஸி!”


“புதுசா வர்ற டெக்னாலஜி எதையும் நம்ம மக்கள் முதல்ல ஏத்துக்க தயங்குவாங்க. அது மாதிரிதான்மா நீ சொல்றதும்!” - சந்தனா.


“ரொம்பப் பணக்காரங்களா அவி?”


“ம்ம்! அக்னி தலையெடுத்ததுக்கு அப்புறம்தான் ஃபினான்ஷியல் கிராஃப் ஏறிருக்குது போல!”


“முழுப் பேரே அக்னியா?” -சந்தனா.


“அக்னிஸ்வரூப்!”


“ஹப்பா! பேரே பயங்கர அனலடிக்குது!” என்று புருவங்கள் உயர்த்தி உதடு பிதுக்கினாள்.


“ஆனா அவ்ளோ பணக்காரங்களா இருந்தும் நம்ம கிட்ட எவ்ளோ சிம்பிளா, தன்மையா பேசினாங்க!” நிர்மலாவிடம் வியப்பு!


“ம்ம்!”


“அந்த பையன் எப்டிப்பட்டவன் அவி?


“எனக்கு இவர் கம்பெனியைப் பர்ஸனலா தெரியாதுன்னாலும், கேள்விப்பட்டிருக்கேன். இதுவரை எந்த ப்ளாக் மார்க்கும் இருக்கற மாதிரி தெரியலைம்மா. இதுல அர்ஜூனும் எல்லாம் பக்கான்னு தான் சொல்லிருக்கான்.”


“அப்போ அவங்க கேட்டா முழு மனசா சரின்னு சொல்லிடலாமா?”


“உடனே சொல்லுங்கம்மா. இல்லைன்னா அவளைத் தூக்கிட்டே வந்துடுவான் இவன்.” என அண்ணனைக் கேலி செய்தாள் சந்தனா.


“ப்ரோ, நீ நாளைக்கு நைட் பேங்களூர் கிளம்பறியே… நானும் வேணும்னா துணைக்கு வரட்டுமா?” என இவனும் வேண்டுமென்றே தலையைக் கொடுக்க,


“டேய் டேய் ஓவரா வழியாதடா!” என்றாள் நிர்மலா.


சந்தனா பெங்களூரில் படிக்க கல்லூரியில் சேர்ந்த புதிதில் ஓரிரு முறை அவளுக்கு துணையாக போயிருக்கிறான். அதன்பின் அவளே அவளைப் பார்த்துக்கொண்டாள். இப்போது பிரகதி இருப்பதும் அதே ஊர் என்பதால் இன்று இவனுக்கு புதிதாய் தங்கை மேல் பாசமலர் பூக்கிறது.


“வா ப்ரோ! ஆனா உன் ஆளை தனியா மீட் பண்ணலாம்ன்னு மட்டும் ட்ரீம்ல இருக்காதே! எனக்கு துணைக்கு நீயிருப்ப! அவளுக்கு துணைக்கு அவங்க பாட்டி இருப்பாங்க!” என்று நக்கல் மொழி பேச,


“முதல் கோணல் முற்றும் கோணல் மாதிரி அந்தம்மாவுக்கு உன்னைப் பார்த்தப்பவே சுத்தமா பிடிக்கலை சனா. ஏண்டி அன்னிக்கு அந்த சூன்யகாரி வேஷம் கட்டின?” என நிர்மலா மனம் ஆறாமல் பேச,


“அய்யய்ய… ஏன்மா நீ அதையே நினைச்சு புலம்பிட்டிருக்க? இப்போ என்ன? இனி அடிக்கடி பார்க்கதானே போறோம்? பாட்டிம்மாவைக் கரெக்ட் பண்றேன்! பாசப் படம் ஓட்டுறேன்! போதுமா?” என்று சலித்துக்கொண்டாள் சந்தனா.


“சரி, நீ போய் எல்லாத்தையும் உங்க சித்தப்பா கிட்ட காட்டு அவி! அவரும் பார்த்துட்டு அவர் அபிப்பிராயம் சொல்லட்டும்.”


ஒரே காம்பௌண்டிற்குள் இருக்கும் இரு வீடுகளில் ஒன்றில் நிர்மலாவின் குடும்பமும், அடுத்த வீட்டில் இவள் கணவனின் தம்பி ரமேஷின் குடும்பமும் வசிக்கின்றனர். இங்கே எந்த முடிவு எடுப்பதானாலும் அவர்களிடம் கேட்டு செய்வதுதான் நிர்மலாவின் வழக்கம். அவர்களும் பெரிதாக எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.


அவினாஷ் ரமேஷிடம் காட்ட மடிக்கணினியைத் தூக்கிக்கொண்டு போக, அண்ணனின் பெண் பார்க்கும் வைபவத்திற்காக விடுமுறையில் வந்திருந்த சந்தனா, நாளையிரவு பெங்களூரு புறப்படுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டாள்.

இசைக்கும்...

Comments

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25