கருவறை கீதம் -9

 


அத்தியாயம் 9


வருடம் 2004


னுராதாவிற்கு அந்த வீட்டில் ஆறு மாதங்கள் நரகமாகக் கடந்திருந்தது. பாஸ்கரன் தவிர யாரும் அவளோடு பேசுவதில்லை. இவளை முற்றிலும் வேற்று மனுதியாக நடத்தினார்கள். பாஸ்கரனின் பொருட்டு மட்டுமே அவளுக்கு அவ்வீட்டில் இடமளிக்கப்பட்டிருந்தது.


உதாரணமாக பாஸ்கரனைச் சேர்த்து அவர்களுக்கு மட்டும் சமைத்துக் கொள்வது. இவளுக்கு வேண்டுமானால் அவளே சமைத்துக் கொள்ளவேண்டும். முன்பும் விடுமுறை நாட்களில் மாமியாருக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருந்தவள்தான். ஆனால் தற்போது தினமும் காலை மற்றும் மதிய உணவு சமைத்துவிட்டு, வேலைக்கு புறப்படுவதென்பது அவளுக்கு சிரமமே! சில நாட்கள் சாப்பிடாமல் போய்விடுவாள்.


விடுமுறை நாட்களில் மற்ற வீட்டு வேலைகளிலும் அவளைப் பங்கேற்க விடுவதில்லை‌. அவர்கள் ஒவ்வொரு செயலிலும், ‘நீ வேற்று மனுதி’ என்று உணர்த்தும்போது கண்ணீர் முட்டிக்கொண்டு வரும். அப்போதெல்லாம் மாமனாரை நினைத்து வைராக்கியத்துடன் தாடையை உயர்த்தி நிற்பாள்.


அனைத்தும் அவரின் ஆணைகள் தான் என்று புரிந்ததால், அவரை வென்று, இந்த வீட்டில் தன் குழந்தைக்கான அங்கீகாரத்தைப் பெற்றுவிடுவதில் தீவிரமாக இருந்தாள் அனு.


ஆனால் அங்கே திண்டாடிப் போன ஜீவன் என்னவோ பாஸ்கரன் தான். அம்மா சமைத்த உணவை எடுத்துக்கொள்வதா? மனைவி தனக்காக சமைப்பதை எடுத்துக்கொள்வதா என்று விழிபிதுங்கிப் போனான். அவன் நிலையை எண்ணி புன்னகைத்துக் கொண்ட அனு, மறுநாளில் இருந்து தனக்கு மட்டுமாக சமைத்துக்கொண்டாள்.


அதற்கும் பாஸ்கரனின் மனம் முரண்டியது. அனுவை விடுத்து அம்மா சமைத்ததைச் சாப்பிட்டால், இவனும் அவர்களைப் போல் அவளை ஒதுக்கி வைப்பதாக ஆகாதா?


பொறுக்க முடியாமல் எத்தனையோ முறை தனிக்குடித்தனம் சென்றுவிடலாமென சொல்லிப் பார்த்தான். பிடிவாதத்திற்கு பெயர் போன அவன் மனைவி கேட்டுவிடுவாளா என்ன?


“அவங்களுக்கு தேவையும் அதுதான் பாஸ்கர். இப்போ நான் இங்கே இருந்து போயிட்டா நம்ம பிள்ளையை வெளியேத்தின மாமா ஜெயிச்சதா ஆகிடும். அதுக்கு நான் விடமாட்டேன். நம்ம பிள்ளை இந்த வீட்டுல அவங்க பேரனா தான் வளரணும். அதுக்காக அவங்க என்ன கஷ்டம் தந்தாலும் நான் சமாளிப்பேன்.” 

 

பெரியோர்களின் சுடு சொல்லினாலும், வேலையின் பொருட்டு அவளின் உடல்நிலைக்காகவும் அவள் வாடகைத்தாய் முறையை அணுகியிருக்கிறாள். இல்லையெனில் இந்த போராட்டத்திற்கே இடமிருந்திருக்காது. அப்படியிருந்தும் குடும்பம் உடைவதையும் அவள் விரும்பவில்லை. மனைவியின் இந்த உறுதியில் அசந்துதான் போனான் அவன்.


இதற்கிடையே நிறுவனத்தில் அனுவின் திறமையான செயல்பாடுகள் கண்டு அவளுக்கு பதவியுயர்வும் கிடைத்தது. அவளின் வைராக்கியம் இன்னுமின்னும் கூடியது.


இவ்வாறாக மேலும் சில வாரங்கள் சென்ற நிலையில், மருத்துவமனை மற்றும் சட்ட நடைமுறைகள் எல்லாம் முடிந்து, முதன்முதலாக அவ்வீட்டிற்குள் பிரவேசித்தான் அனு -பாஸ்கரனின் மகன்! 


அனு அணைத்திருந்த குழந்தையை ஏறிட்டும் பாராமல் வாசலிலேயே நிறுத்தி, இனி இந்த வீட்டில் அவர்களுக்கு இடமில்லை எனவும், தலைமுழுகி விட்டேன் எனவும் பெரிய பெரிய வசனங்களாக பேசி, தம்பதியரை உள்ளே நுழைய விடாமல் முழுமூச்சாக எதிர்த்தார் கலியபெருமாள்.


அவரைப் பற்றி முன்பே அறிந்திருந்த பாஸ்கரன் கையோடு மருத்துவமனை சிப்பந்தி ஒருவரை அழைத்து வந்திருந்தான்.


அவர் சொன்னார். “பாருங்க பெரியவரே! உங்க பிள்ளை இந்த ப்ரொஸீஜர் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே எங்க விதிமுறைகள், நிபந்தனையெல்லாம் ஏற்றுக்கொள்கிறேன்னு ஹாஸ்பிடல் ஃபார்ம்ல கையெழுத்து போட்டிருக்கார். அது பிரகாரம், இப்போ இந்த குழந்தை சட்டப்படி பாஸ்கரோட வாரிசு! இப்போ வந்து உங்க குடும்பப் பிரச்சினைல பிள்ளையை ஏத்துக்கமாட்டேன்னு சொல்லி குழந்தையை அவர் வாங்க மறுத்தா இந்த குழந்தை அனாதை ஆகறதோட, உங்க பிள்ளைக்கும் மருமகளுக்கும் ஏழு வருஷ ஜெயில் தண்டனையும் அபராதமும் போடுவாங்க. ஃபர்தர்மோர், மாசாமாசம் குழந்தையை நீங்க எப்டி வளர்க்கறீங்கன்னு பார்த்து கணக்கெடுத்து, ஹாஸ்பிடலுக்கு சொல்றதுக்கும் எங்களுக்கு உரிமையுண்டு.”


மேற்கண்ட வசனத்தை அவருக்கு எழுதி தந்தவன் சாட்க்ஷாத் பாஸ்கரன் தான்! இத்தனை நாட்கள் அப்பாவின் மேல் அவன் கொண்டிருந்த அதிருப்தி இப்படியாக வெளிப்பட்டது.


அனு தன்‌ மகன் இந்த வீட்டில் தான் வளர்வான்‌ என்று வெளியில் நின்றே பிடிவாதம் பிடித்தாள்.

 

அக்கம்பக்கம் பார்த்த பெரியவர் வேறு வழியில்லாமல் சற்று அடங்கினார். இனி என்ன செய்தாலும் அவர் மானம் போகத்தானே செய்யும்? மகனும் மருமகளும் சிறைவாசம் செய்து வந்தால் அவருக்குத்தானே தலைக்குனிவு? ஆக, அப்போதைக்கு மருமகளை முறைத்துவிட்டு செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே போய்விட்டார்.


பேரனுடன் உள்ளே வந்தவளைக் கண்டு முகம் திருப்பிக்கொண்டனர் பெண்கள். அவர்களை அப்படியே விட்டுவிட்டால் அவனெப்படி பாஸ்கரன் ஆவான்?


“ம்மா, பேரனைப் பார்க்கணும் பார்க்கணும் சொல்லிட்டு இப்போ அவனைக் கண்டுக்காம போனா என்ன அர்த்தம்? என்ன சித்தி, என் பிள்ளைக்கு பேரு செலக்ட் பண்ணிட்டியா?” என இருவரையும் மறித்து வம்பு வளர்க்க,


அனு அமைதியாக உள்ளே சென்று முன்பே வாங்கி வைத்திருந்த குட்டி குட்டி தலையணைகளுடன் கூடிய மெத்தையைக் கொண்டுவந்து நடு கூடத்தில் விரித்து, நன்றாக உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை அதில் கிடத்திவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்து கொண்டாள். 


“அடுத்து இவளை வேற சமாதானப்படுத்தணுமா? உன் புருஷனால எனக்கு எவ்ளோ கஷ்டம் பாரும்மா!” என்று போலியாய்ப் புலம்பியவனும் மனைவியைப் பின்பற்றி அறைக்குள் சென்று மறைந்தான்.


தம்பதியர் இருவரும் லேசாக அறையைத் திறந்து வைத்துவிட்டு, ஹாலில் நடப்பதை உள்ளிருந்தவாறே நோட்டம் பார்த்தனர்.


“பச்சைப் பிள்ளையை இப்டித்தான் ‘எனக்கென்ன போச்சு’ன்னு போட்டுட்டு போவாளா? அது சரி அவ வயித்துல பெத்த பிள்ளையா என்ன?” என்று சித்தி கழுத்தை வளைத்து நொடிக்க,


“காமு! முடியைப் பாரு அப்டியே நம்ம பாஸு மாதிரி இல்ல?” என ஆவலாகக் குழந்தையின் மேல் கண்கள் மேயவிட்டார் அம்மா மங்கை.


“முடி மட்டுமா? மூக்கும் முழியும் கூட பாஸு மாதிரிதான் இருக்குது.”


உள்ளிருந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.


“கொஞ்சம் இரு வர்றேன்.” என்ற அம்மா சிறிது நேரத்தில் அந்தப் பழைய புகைப்பட தொகுப்பைத் தூக்கிக்கொண்டு வந்தார். “இதை பாரு! இது பாஸு பிறந்த சமயத்துல பிள்ளையைப் போட்டோ எடுக்கக்கூடாதுன்னு சொல்லச் சொல்ல கேட்காம நம்ம ரங்கு இல்ல? அவன் எடுத்தது.”


கழுத்தில் மாலையைப் போல் தொங்கவிட்டிருந்த மூக்கு கண்ணாடியை மாட்டிக்கொண்டு அவர் காட்டிய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, குழந்தையையும் பார்த்து விழி விரித்தார் சித்தி. “இதென்ன அச்சடிச்ச மாதிரி ஒரே முகஜாடையா இருக்கு…”


மேலும் இருவரும் புகைப்படத் தொகுப்பைப் புரட்டி பழைய நினைவுகளில் மூழ்க எத்தனிக்க, ‘என்னைக் கண்டுகொள்ளாமல் இருவருக்கும் அப்படியென்ன பழங்கதை வேண்டியிருக்கிறது?’ என சிணுங்கி தன் இருப்பை உணர்த்தினான் பேரன்.


குழந்தையின் சிணுங்கலில் வேகமாக வெளியேற போன அனுவை இழுத்து நிறுத்தினான் பாஸ்கரன்.


“என்னங்க?”


“வெய்ட் பண்ணு!”


அங்கே அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.


இங்கே அனு தவித்தாள். “அச்சோ! விடுங்க, பாவம் குழந்தை.”


“இருடீ! என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்.”


நொடிகள் செல்ல செல்ல குழந்தையின் அழுகை அதிகரித்த வண்ணம் இருக்க, பெண்கள் முழித்துக்கொண்டு நின்றனர். 


அனு கோபமாக பாஸ்கரனின் கரத்தை உதறிவிட்டு வெளியேறப் பார்க்க, “நீ இரு, நான் போறேன்.” என்று வந்து குழந்தையினருகே அமர்ந்தவன், “டேய் டேய் என்ன அழுகை? அப்பா வந்துட்டேண்டா. உனக்கு என்ன வேணும் சொல்லு. உடனே கொண்டு வர்றேன்.” எனக் குழந்தையிடம் பேச்சு வார்த்தை நடத்த,


மங்கைக்கு கோபம் கொப்பளித்தது. “அறிவிருக்காடா உனக்கு? பிறந்த பிள்ளை என்ன ஏரோப்ளேனா கேட்கப் போகுது? பிள்ளையை இப்டி கதற விட்டுட்டு எங்கே போனா உன்‌ பொண்டாட்டி?”


“காலைல இருந்து ஒரே அலைச்சல். டயர்ட்ல தூங்கறாம்மா. ப்ளீஸ் தூங்கட்டுமே… உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நீங்க ரெண்டு பேரும் இவனுக்கு எதுவும் செய்ய வேணாம். பிள்ளையை எப்டி தூக்கணும்னு மட்டும் எனக்கு சொல்லிக் கொடுங்க போதும்.”


“நீ தூக்கி என்னடா பண்ண போறே? பிள்ளைக்கு தாய்ப்பால் தான் கொடுக்கணும். உன் மேனாமினுக்கி பொண்டாட்டிக்கு தான் ஒண்ணும் வராதே? என்னடா செய்யப் போறே?”


பாஸ்கரன் பாவம் போல் குழந்தையையும் அம்மாவையும் மாறி மாறி பார்த்தான். மகனின் கவலையை எந்தத் தாய்தான் பொறுப்பாள்? படக்கென அமர்ந்து பேரனை லாவகமாக தூக்கிக் கொண்டு தன் கையணைப்பில் வைத்து ஆட்டியபடி அவன் அழுகையை தற்காலிமாக நிறுத்தினார். பின் மெதுவாக இருந்த இடத்திலேயே கிடத்திவிட்டு நகர்ந்துகொண்டார்.


பாஸ்கரன் ஆச்சரியமாக பார்த்துவிட்டு கேட்டான். “என்னம்மா மேஜிக் செஞ்ச?”


“பிள்ளையை அணைச்சு பூப்போல தூக்கணும்டா! எல்லாம் லேசுபட்ட காரியமா?” -சித்தி.


“ஓ! பெரிய விஷயமோ? ம்மா! நீ குழந்தையை இவ்ளோ அக்கறையா பார்த்துக்கறதால சொல்றேன். சரகஸில பிறந்த குழந்தையை ரொம்ப கவனமா பார்த்துக்கணுமாம். இன்ஃபெக்ஷனாலேயும், லேக் ஆஃப் இம்யூனிட்டி… அதாவது நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாலேயும் ஈஸியா நோய்கள் தாக்கும். அனுவுக்கு உன் அளவுக்கு அனுபவமும் சமர்த்தும் போதாது. ப்ளீஸ்மா… அவ பார்த்தாலும் நீயும் கொஞ்சம் கவனமா பார்த்துக்கோம்மா. சித்தி நீயும்தான்‌.”


சித்திக்கு அனுவை விட மகன் தன்னை உயர்த்திக் கூறியதில் பெருமைப் பெருகியது. “ம்க்கும் இப்பவாவது வீட்டு பெரியாளுங்க அருமை புரிஞ்சதே… பிள்ளைக்கு பீத்துணி அலசக் கூட நாங்கதான் வேணும் உனக்கு.”


“ஹ்ம்ம்! இப்போதான் எனக்கு எல்லாம் புரியுது சித்தி. நான் உன்னைத்தான் நம்பியிருக்கேன்.” என்றபோது அவன் மகன் மீண்டும் பசியில் தன் ஆலாபனையைத் துவங்கிவிட்டான்.


“அட போடா! நீ சொல்லலைன்னா நான் பார்க்க மாட்டேனா என்ன?” என்றவர் அழும் குழந்தையைத் தூக்கிக்கொள்ள,


“காமு, நீ குழந்தையைத் தூக்கி வச்சிருக்கறதைப் பார்த்தா அவர் உன்னை வீட்டை விட்டு விரட்டியடிப்பார்டீ.” மங்கை எச்சரிக்க,


“அதுவும் நிஜம்தான். நீ அவனை என்கிட்ட கொடு சித்தி.” என்றவன் அறையை நோக்கி, “ஏய் அனு! இன்னும் என்ன தூக்கம்? பேர பிள்ளையைப் பார்க்கணும்னு சொல்றாங்கன்னு உன் ஹெல்த்தையும் ஸ்பாயில் செஞ்சு, லட்ச கணக்குல செலவு பண்ணி இவனைக் கொண்டு வந்திருக்க… இங்கே என்னடான்னா இவனைத் தூக்கறதுக்கு கூட நாதியில்லை. ஏய் அனு! இப்போ வரப் போறியா இல்லையாடீ?”


“ஏன் இப்டி நடு ஹால்ல நின்னு கத்திட்டிருக்கீங்க?” தூக்கக் கலக்க குரலில் கேட்டபடி வந்த அனு, குழந்தை காமாட்சியிடம் இருப்பதைப் பார்த்துவிட்டு, “அத்தை, இவன் முடியைப் பார்த்தீங்களா? இவரோட சின்ன வயசு ஃபோட்டோவுல இப்டித்தான் தலைக்கொள்ளாம முடி வச்சிருந்தார்.” என்று குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டாள்.


“காமு! குழந்தை பசில இருக்கான். அதுக்கென்ன செய்யப் போறா’ன்னு கேளு!” முகத்தை ஏழு முழத்திற்கு தூக்கி வைத்துக்கொண்டு மங்கைக் கேட்க,


“டாக்டர் ரெஃபர் பண்ண பால் பவுடர் இருக்குது அத்தை.” என்றுவிட்டு திரும்ப,


அதற்குள் பாஸ்கரன் அதைக் கொண்டு வந்து நீட்டியிருந்தான். சும்மா நீட்டவில்லை. “ஏன்மா நீ இவனுக்கு செய்றதைப் பார்த்தா அப்பா உன்னை வீட்டை விட்டு துரத்திடமாட்டாரா?” என்று விஷமத்தனமாய்க் கேட்டபடி நீட்டினான்.


வெடுக்கென பிடுங்கிக்கொண்டவர், “எல்லாம் நாங்க பார்த்துக்கறோம். நீ எப்பவும் போல உன் பொண்டாட்டி புடவைக்கு அயர்ன் பண்ற வேலையைப் பாரு, போ!” என்று அவனை விட படு நக்கலாகச் சொல்லிவிட்டு சமையலறைக்குள் மறைந்தார்.


தாய்மை என்பது பெண்களிடத்தில் இயல்பிலேயே தோன்றும் நுட்பமான, அதி அற்புதமான உணர்வு என்பதை அன்று கண்கூடாகக் கண்டான் பாஸ்கரன்.


வருடம் 2034


ழைப்பு மணியோசைக் கேட்டதையடுத்து, உள்ளிருந்து வந்திருப்பது யாரென அந்த சின்னத்திரையில் கண்ட பாஸ்கரனின் முகம் மலர்ந்தது, 


இருந்தும் தெரியாததைப் போல், “யாரது மாஸ்க்கை மாட்டிட்டு நிற்கறது?” என்றபடி கதவைத் திறந்தான்.


“டண்ட்டடைய்ன்ன்…” என்றவாறு மாஸ்க்கை நீக்க,


“சனாக்குட்டி, வா வா… மாமாவைப் பார்க்காமலே ஊருக்கு கிளம்பிட்டியோன்னு நினைச்சேன்?” மருமகளிடம் வம்பு வளர்த்தான்.


“போங்க மாமா! இன்னிக்கு நைட்தான் கிளம்பறேன்.”


“காலைல பேசும்போது நீ வர்றன்னே சொல்லலடா உங்கம்மா! எங்கே அவ?”


“வர்றாங்க வர்றாங்க. அத்தையைப் பார்க்க அம்மாவை மட்டும் தனியா விட்டுடுவேனா பாஸ் மாமா? ஆமா… அத்தை எங்கே?” என்று கேட்ட சந்தனா பதிலுக்கு காத்திராமல் குதித்தோடி போய் அனுவின் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்திருந்தாள்.


பின்னர் அவினாஷூம் நிர்மலாவும் உள்ளே வந்தனர்.


“வா நிர்மா, ஹாய் அவி!”


“ஹாய் மாமா! ஹௌ’ஸ் கோயிங்?”


“வாசலுக்கு கூட வராம என்ன பண்ணுறாங்க மகராசி?”


எப்போதும் அனு என்றால் நிர்மலாவுக்கு அலட்சியம்தான். அவள்‌ மீதான வெறுப்பை வெளிப்படையாகக் காட்டுவாள். ஒரு விடயத்தைத் தவிர, ஏனைய அனைத்திலும் அனு நிர்மலாவைப் பொறுத்துப் போவாள். அதனாலேயே அவினாஷ், சந்தனாவிற்கு அனுவின் மேல் மிகுந்த வாஞ்சையுண்டு. அதிலும் சந்தனாவிற்கு அனு அத்தை என்றால் அலாதி பிரியம்!


“அம்ம்மா!” -அவினாஷ்.


“நான் உங்கத்தையை ஒண்ணும் சொல்லலைடா… இதுக்குத்தானே அண்ணனும் தங்கச்சியும் என்னை வால் பிடிச்சிக்கிட்டு வந்தீங்க?”


“இவ்ளோ நேரம் உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டிருந்தா! கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்ன்னு நான்தான் போய் படுக்க சொன்னேன். நீ உள்ளே வந்து உட்காரு!” -பாஸ்கரன்.


“பொண்டாட்டியைச் சொல்லிட்டா உடனே முட்டுக் கொடுக்க வந்துடுவான் இவன்.” என முணுமுணுத்தபடி அமர,


“வா நிர்மலா… நல்லா இருக்கியா? ஹாய் அவி!” எனக் கேட்டவாறு அவளருகே வந்தமர்ந்தாள் அனு.


“ஹாய் அத்தை.” -சிநேக சிரிப்புடன் அவினாஷ்.


“இருக்கேன் இருக்கேன். நீங்க எப்டி இருக்கீங்க? அர்ஜூன் எங்கே?” -நிர்மலா.


“அவன் ஃப்ரெண்ட்ஸோட வெளில போயிருக்கான். நீங்க இன்னிக்கு வர்றீங்கன்னு சொன்னதால ஈவ்னிங் சீக்கிரம் வர சொல்லிருக்கேன். இப்போ வந்துடுவான்.” அதிலும் நிர்மலா  குற்றம் கண்டுபிடிப்பாள் என்பதால் மிகக் கவனமாக பதிலளித்தாள் அனு.


“ஹ்ம்ம்! வரட்டும். அத்தை வரும்போது வீட்ல இல்லாம எங்கேடா ஊர் சுத்தப் போறேன்னு கேட்கறேன்.” எனவும்,


அனு பாஸ்கரனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, “சரி இருங்க. காஃபி போடறேன்.” என்று எழுந்துகொள்ள,


“நீங்க உட்காருங்க அத்தை. நானே எல்லாருக்கும் சேர்த்து போட்டுட்டேன்.” என்றவாறு காபி டிரேயுடன் வந்தாள் சந்தனா.


‘ஏண்டா அத்தை வருவேன்ல?’ எனும் முன்,


“ஏன் உங்கத்தை காஃபி கூட போடக்கூடாதா?  வேலை செஞ்சா தேய்ஞ்சுடுவாங்கன்னு நீயே போய் போட்டியா? வேலைக்காரங்க எல்லாம் எங்கே போனாங்க?” அனு வீட்டு வேலையை தன் மகள் செய்ததில் உண்டான ஆத்திரத்தில் நிர்மலா பேச,


“ஏன் சனா?” ஆற்றமாட்டாமல் கேட்ட அனு, “கிருஷ்ணா (பணிப்பெண்) வீட்ல ஏதோ அவசர வேலைன்னு சொல்லிவிட்டு போனா!” என்று கர்ம சிரத்தையாக நாத்தனாரின் கேள்விக்கு பதிலளித்தாள்.


‘நாங்க வர்றோம்ன்னு தான் அவளுக்கு லீவு கொடுத்து அனுப்பிருப்பாங்க! எல்லா வேலையும் நம்ம தலைல கட்ட வேண்டியது!’ என உள்ளுக்குள் கடுகடுத்தவாறே இருந்தாள் நிர்மலா.


“அவங்களை விடுங்கத்தை! நீங்க சொல்லலைன்னா எனக்கு தெரியாதா? உங்க ரூம்’க்குள்ள வந்ததுமே தைல வாசனை; டேபிள் மேல தலைவலி மாத்திரை! நாங்க வர்றோம்ன்னு கிச்சன்ல அதிக வேலை செஞ்சு, தலைவலியை இழுத்து வச்சிருக்கீங்கன்னு புரிஞ்சுது. அதான் நானே போய் காஃபி போட்டேன்.” என்ற சந்தனா, அனுராதா முன்பே செய்து வைத்திருந்த வெங்காய பக்கோடா, வடை, கேசரி என அனைத்தையும் பரிமாறினாள்.


மருமகளின் புரிதலில் கோர்த்தக் கண்ணீரை வெளிக்காட்டாமல், கடுகடுத்த முகத்துடன் இருந்த நிர்மலாவிடம், “சாப்பிடு நிர்மலா.” என இன்முகத்துடன் உபசரித்தாள்.


இவர்கள் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, பாஸ்கரன் அவினாஷிடம் கேட்டான். “உங்கம்மா ஃபுல் ஃபார்ம்ல வந்திருக்கா போல?”


“கல்யாண விஷயமா உங்கக்கிட்ட பேசணும்ங்கறதால இன்னிக்கு கம்மி டோஸ்தான் மாமா.”


“இருக்கட்டும். இன்னிக்கு அவளைச் சுத்தல்ல விடறேன் பாரு.”


“பாஸ் மாமா, கல்யாணம் எனக்கு! உங்க அண்ணன் -தங்கச்சி பாசத்தை இதுல காட்டாதீங்க ப்ளீஸ்…” என்றதில் சத்தமாக சிரித்திருந்தான் பாஸ்கரன்.


“என்ன’ண்ணா?”


“தட்டு மாத்த எப்போ கூட்டிட்டு போறீங்கன்னு கேட்கறான். அதான் அதுக்கு பெரியவங்க நாங்க மட்டும் போய்ட்டு வர்றோம். நீ எதுக்குடான்னு கேட்டுட்டு இருக்கேன். அழுவுறான் உன் பையன்.”


“மாமா!”


“விட்றா விட்றா! உன்னையும் கூட்டிட்டே போறோம், அழாதே!” எனும் போதே,


“ஹாய் வன்மா அத்தை!” என்றழைத்தபடி வந்தான் அர்ஜூன். பாஸ்கரன் -அனுராதாவின் மகன்.


கிடைக்கும் சிறு இடைவெளியிலும் தன் அம்மாவிடம் வன்மத்தைக் கக்குவதால், நிர்மாவை ‘வன்மா’ ஆக்கிவிட்டான் அர்ஜூன். இவன் சென்னையில் அனைத்து வகையான பரிசுப் பெட்டிகள் செய்து உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு தொழில் காந்தம். உயரத்தில் பாஸ்கரன்; உருவத்தில் அனுவின் சாயல்!


“வாடா நல்லவனே!”


“அர்ஜூன், அப்டி கூப்பிடக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது?” என்று அனு மகனைக் கண்டிக்க,


“என் மருமகன் என்னை எப்டி வேணா கூப்பிட்டுட்டு போறான். உங்களுக்கு என்ன போச்சு?” என வெடுக்கெனக் கேட்டாள் நிர்மலா.


சந்தனா மற்றும் அவினாஷ் ஒருசேர, “அம்ம்மா!” என்றதில் பாஸ்கரனுக்கு புன்னகை அரும்பியது. புன்னகையுடன் அவினாஷிடம் கூடத்தின் கோடி அறையைக் கண்காட்ட, தலையாட்டிவிட்டு நகர்ந்தான் அவன்.


அர்ஜூன், “என்ன அத்தை இது ஒரே எஸ்கார்ட்ஸ் நியூசன்ஸ்?” ஓரக்கண்ணால் சந்தனாவைப் பார்த்துவிட்டு கேட்க,


“நீதாண்டா நியூசன்ஸ்!” என்று அவள் எகிற, 


“அய்யோ அம்மையாரே நீங்களா? தெரியாமல் சொல்லிவிட்டேன்.” என்று பம்மினான் அவன்.


“அந்த பயம் இருக்கணும்.”


“நீங்கள்தான் ஒரு இன்ஃபினிட் ட்ரபுள் ஆயிற்றே! அது தெரியாமல் வெறுமனே நியூசன்ஸ் என்று சொல்லிவிட்டேன்.” என்று அவன் வெகு அடக்கத்துடன் சொல்ல,


“டேய்ய்ய்!” என்று அவள் அவனை அடிக்க வர,


“சனா, நாளைக்கு கல்யாணம் ஆன அப்புறமும் இப்டித்தான் அடிச்சிக்கிட்டு இருப்பியா? மரியாதையா பேசு!” என நிர்மலா மகளைக் கண்டிக்க,


அனு பாஸ்கரனை முறைத்தாள். அவன் கண்களாலேயே ‘ப்ளீஸ்’ போட,


“இவனையெல்லாம் நான் கட்டிக்கமாட்டேன்.” என்று தன் வரிசைப் பிறழ்ந்தப் பற்களைக் கடித்தாள் சந்தனா.


“அட என்ன அத்தை நீங்க? எங்கம்மாவுக்கு டார்ச்சர் கொடுக்கற ஒரு டாக்ஸிக் கேரக்டரைக் கல்யாணம் செஞ்சு, உங்களுக்கு கம்பெனிக்கு ஒரு ஆள் ரெடி பண்ணலாம்ன்னு பார்த்துட்டிருக்கேன். நீங்க என்னடான்னா…” 


நிர்மலாவின் அணியில் இருப்பதைப் போல் இருந்துகொண்டே அவளை கால்வாரிவிடுவதில் மன்னன் இந்த அர்ஜூன். அது நிர்மலாவிற்கு சில சமயம் புரியும். பல நேரங்களில் புரியாது நிற்பாள். ஆனால் அர்ஜூன் என்ன செய்தாலும் நிர்மலாவின் செல்லப் பிள்ளைதான். அண்ணன் மகனின் மேல் அத்துணைப் பாசம்.


தங்கையை ‘டாக்ஸிக்’ பட்டியலில் சேர்க்கும் மகனை இப்போது பாஸ்கரனே கண்டித்தான். “இனஃப் அர்ஜூன்!”


அதில் வாய் மூடி சிரித்த சந்தனாவை அர்ஜூன் முறைத்துக் கொண்டிருக்கையில், “இந்த அடங்காபிடாரியும் வந்திருக்காளா?” என்ற குரலில், அர்ஜூன் பக்கெனச் சிரிக்க, 


சந்தனா, “கிழவிக்கு நக்கல் கூடிப்போச்சு.” என்று முனகிவிட்டு, அவினாஷ் இயந்திர சக்கர நாற்காலியில் அழைத்துவரும் அந்த மூத்தப் பெண்மணியைத் தீப்பார்வைப் பார்த்தாள்.


நிர்மலா, “எப்டி இருக்க சித்தி? இந்த வாரம் பிஸியோதெரபில டாக்டர் என்ன சொன்னார்?” என்று விசாரிக்க,


“அவனுக்கென்ன போக்கத்தவன் காலை இப்டி ஆட்டு அப்டி ஆட்டுன்னு உசுரை வாங்கறான். என்னடி சந்தனமாரி… வந்ததும் வராததுமா முண்டக்கண்ணி முழியை உருட்டிக்கிட்டு கிடக்கற?” எனப் பேத்தியை விஷமமாக விசாரிக்க,


“சித்திப் பாட்டி! அந்தப் பேரைச் சொல்லி கூப்பிடறதுக்கு ஒருநாள் இல்ல ஒருநாள் உன் தலைல சுத்தியல் போடப் போறேன் பாரு!” ஆவேசமாக மொழிந்தாள் சந்தனா.


“ப்ரே ஃபார் சித்திப்பாட்டி!” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டான் அர்ஜூன்.


பாஸ்கரனுக்கும் நிர்மலாவிற்கு சித்தி ஆதலால், அவர்களின் பிள்ளைகளுக்கு சித்திப் பாட்டி ஆகிவிட்டார் காமாட்சி. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்புவரை நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவர், கடுமையான மூட்டுவலி, மூட்டு எலும்பு தேய்மானம் காரணமாக மூன்று வருடங்களாக சக்கர நாற்காலிதான்!


“பொம்பிளைப் பிள்ளையை அடக்கமாக வளர்க்காம பிடாரித்தனமா வளர்த்து வச்சிருக்கா உங்கம்மா. என் பேரன் பாடுதான் திண்டாட்டமா இருக்கப் போகுது.” என்று அர்ஜூனுக்காக வருத்தப்பட,


“நான் மட்டும் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தேன்… அனு அத்தை மாதிரி உனக்கு சேவை செய்துட்டு இருக்காம மொட்டைமாடி கூட்டிட்டு போய் உருட்டிவிட்டுடுவேன் பாட்டி.” என்று மேலும் விழிகளை விரிக்க,


“ஆமாமா உருட்டுறதுக்கு உனக்கு சொல்லியா தரணும்?” என்று அர்ஜூன் அவளை வாரிவிட,


“டேய் விஷச்செடி! நீ உருட்டுன உருட்டுல ஊரே சேர்ந்து உன்னை மொத்தினது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா?” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொன்னாள் சந்தனா.


அர்ஜூன் சமூக வலைத்தளப் பயன்பாடு ஒன்றில் பெண்களிடம் ‘தீராத விளையாட்டுப் பிள்ளையாக’ பதிவுகளில் விளையாடுவது வாடிக்கை. அதில் ஒரு பதிவில் அர்ஜூனைப் பெண்கள் கிண்டலும் கேலியுமாக வைத்து செய்திருந்தார்கள். அதைத்தான் சந்தனா இப்போது குறிப்பிட, பாய்ந்துவந்து அவள் வாயை மூடினான் அர்ஜூன்.


அதுவரை அனுவிடமும் நிர்மலாவிடமும் பேசிக் கொண்டிருந்த பாஸ்கரன் திரும்பி, “அப்டிக்கா ஓரமா போய் விளையாடுங்கடா கண்ணுங்களா!” என்று அவர்களை இன்னமும் சிறுவர்களாக நினைத்து சொல்ல,


“மாமா!”


“அப்பா!” என்று கண்டனக்குரல்கள் எழும்பின.


“ரெண்டு பேரும் சேர்ந்து என் கல்யாணப் பேச்சுக்கு பாய்சன் வச்சிடுவீங்க! அந்தர் ஜாவ்!” என்ற அவினாஷ் இருவரையும் தரதரவென இழுத்துக்கொண்டு போய் சித்திப் பாட்டியின் அறைக்குள் தள்ளி கதவைப் பூட்டிவிட்டு வந்தான்.


அதன்பின்னர்தான் பெரியவர்களால் குழப்பமில்லாமல் கல்யாணப் பேச்சைப் பேச முடிந்தது.


நிர்மலாவிடம், “நீ சொன்னதுமே அவங்க ஃபேமிலி டீடெய்ல்ஸ் எல்லாம் பார்த்துட்டு, நானும் அவர்கிட்ட (பிரபஞ்சன்) பேசிப் பார்த்தேன். நல்ல மாதிரியா தான் தெரியுது.” என்றான் பாஸ்கரன்.


“என் கொழுந்தனும் பார்த்துட்டு தாராளமா செய்யலாம்ன்னு தான் சொன்னார்.”


அவர்கள் அங்கே பேசிக்கொண்டிருக்க, சித்திப் பாட்டியின் அறைக்குள்…


“என்கிட்ட ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொன்னியே, என்னடா அது?” -சந்தனா.


“ஒரு ப்ரொஃபலைப் பின் பண்ணி வச்சிருக்கேன்.”


“இஸிட்?” அவள் கண்களில் ஆர்வமும் பரவசமும்!


“ம்ம்! இப்பவும் நீ உன் முடிவுல இருந்து மாறுறதா இல்லையா?” என அவளை ஆழம் பார்க்கக் கேட்டான் அர்ஜூன்.


உறுதியாக சொன்னாள் அவள். “நெவர்!” 


நெடிய மூச்சொன்று அவனிடம்!


அதுவரை அசட்டையாக அமர்ந்திருந்தவள், திடுமென துள்ளியமர்ந்து, “டேய் டேய் அஜூ… நீ சீரியஸா கேட்கறதைப் பார்த்தா… ஒருவேளை கன்ஃபர்ம் பண்ணிட்டியா?” என்று கேட்க,


“ம்ஹூம்! பட் ஒரு கெஸ் இருக்குது.” என்றான் சிந்தனையாக!


“யாரு? எங்கே?” இவள் பரபரப்புடனே வினவ,


“அவசரப்படாதே! கன்ஃபர்ம் பண்ணிட்டு சொல்றேன். அதுவரை அம்மாகிட்டேயும் எதுவும் சொல்ல வேண்டாம்.” என்றதற்கு சம்மதமாக தலையாட்டினாள் சந்தனமாரி.

இசைக்கும்...

Comments

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25