கருவறை கீதம் -10

 


அத்தியாயம் 10


வருடம் 2004


ன்று புதிய கதாநாயகனாக ஆன மிதப்பில் பாட்டியின் மடியில் படுத்து சுகமாக பாலருந்திக் கொண்டிருந்தான் பாஸ்கரனின் மகன். அவனைச் சுற்றி அனைவரும் அமர்ந்து அவன் அழகையும் சப்தத்தையும் குறித்து பெருமிதப் பேச்சில் ஈடுபட்டிருக்க, அதனை ஆத்திரத்துடன் பார்த்தபடி வந்தார் கலியபெருமாள்.


அவர் வரும் அரவம் கேட்டதும் பேச்சை நிறுத்திவிட்டு மங்கையும் காமாட்சியும் முகம் வெளிறப் பார்த்தனர். அவர் பார்வையை மாற்றாமலேயே மங்கையை ஆழ்ந்து நோக்க, தன்னையறியாமல் குழந்தையைக் கீழே கிடத்தினார் மங்கை.


அதில் அவர் இதழ்கள் குரூரமாக விரிய, கீழே கிடத்திய குழந்தையின் இதழ்கள் அழுகையில் வளைந்தது. ‘வீல்’ என்று நொடிக்கு நொடி அவன் அழுகை அதிகரிக்க, கணவரின் முகம் பார்த்து, “நம்ம கோபத்தை பச்சை மண்ணுக்கிட்ட காட்ட வேணாங்க.” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவனைத் தூக்கி தன் மடியின் கதகதப்பில் வைத்துக்கொள்ள, கதாநாயகனின் அழுகை சின்ன முனகலுடன் மட்டுப்பட்டது.


அதில் பெரியவரை மறந்து, “டேய் படவா! அப்டியே உங்கப்பன் மாதிரி ஜாலக்காரண்டா நீ! என்ன ஜம்பமா பாட்டி மடில படுத்துக் கிடக்கறான் பாரேன்!” என்று சித்தி சொல்ல,


இமைகளை மட்டும் உயர்த்தி மாமனாரை ஓர் வெற்றிப் பார்வை பார்த்துவிட்டு தன் அத்தைமார்களுடன் ஐக்கியமானாள் அனு. அவள் மேல் எழுந்த வன்மத்துடனும் கடுகடுத்த முகத்துடனும் விருட்டென நகர்ந்தார் கலியபெருமாள்.


மங்கையும் காமாட்சியும் இயல்பில் குணக்கேடானவர்கள் இல்லை. பெண் பார்த்தபோது அனுராதா தற்சமயம் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை என்று சொன்னதைக் கேட்டு அவளைத் இவர்கள் நிராகரித்தனர். ஆனால் அவர்கள் மகன் அவர்களை மீறி அவள்தான் வேண்டும் என்று மணமுடித்ததையும், பின்பும் அனு தங்கள் பேச்சைக் கேட்டு நடக்கவில்லை என்ற புகைச்சலுமே அவர்களை அவளிடம் கடுமையாக நடந்துகொள்ளச் செய்திருந்தது.


இப்போதும் அவர்கள் குழந்தையைப் புறக்கணிக்கவில்லை என்றாலும், மனமார தங்கள் வீட்டுக் குழந்தையென ஏற்றுக்கொள்ளவுமில்லை. அவன் குலம், கோத்திரம் தெரியாத எவளோ ஒருத்தியின் வயிற்றில் வளர்ந்தவன் என்ற காழ்ப்புணர்ச்சி அவர்களின் அடிமனதில் படிந்தேயிருந்தது.


அனுவிற்கும் அவர்களின் மேல் தனிப்பட்டு எந்த துவேஷமும் இருந்ததில்லை. பெண்கள் ஐடி துறையில் கால் பதித்து மேலேறி வரும் காலக்கட்டம் என்பதால், குடும்ப சச்சரவின்றி நல்ல சூழலில், நல்ல மனநிலையுடன் கடும் உழைப்பைத் தந்தால், அதன் பலனாக மேலேயுள்ள இடத்தை அதிக போட்டிகளின்றி எட்டி பிடித்துவிட முடியும் என்பது அவள் எண்ணம்! அது அவளின் தன்னம்பிக்கை!


‘பெண்கள் என்றால் கல்யாணம் செய்ததும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நியதி!’ என்ற கூற்றில் ஆழமான நம்பிக்கையுடைய அவளின் புகுந்த வீட்டினருக்கு அவளின் தன்னம்பிக்கை பற்றியோ அவளின் ஆர்வம் பற்றியோ என்ன கவலை இருந்துவிட முடியும்?


ஆக அவர்கள் பாஸ்கரனைப் போல் அவளுக்கான நேரத்தைக் கொடுக்க முன் வரவில்லை என்றாலும், அவளிடம் கடுஞ்சொற்களைக் கொட்டாமல் இருந்திருந்தால் அவளும் வாடகைத்தாயை அணுகாமல் இருந்திருப்பாள். 


இவ்வாறாக பெண்கள் அக்குழந்தையின் பொருட்டு, சிறு சிறு உறுத்தல்களுடனும் மனஸ்தாபங்களுடனும் அவ்வீட்டில் வளைய வந்தனர்.


முப்பதாம் நாள் குழந்தைக்கு தொட்டில் போட்டார்கள். அவ்வைபவத்திற்கு நெருங்கிய சொந்தங்கள் அனைவரையும் அழைத்திருந்தான் பாஸ்கரன். கலியபெருமாள் வேண்டுமென்றே அன்று வெளியூர் போய்விட்டார். பாஸ்கரன் வருந்தினாலும் அனு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.


“என்னம்மா இது? யார் பெத்த பிள்ளையை இப்டி தூக்கி வச்சு கொஞ்சிட்டு இருக்கீங்க? அப்பாவுக்கு நீங்க செய்ற எதுவும் சுத்தமா பிடிக்கலை.” என்று தன் மூன்று மாத குழந்தை அவினாஷைத் தூக்கிக்கொண்டு, வந்ததும் வராததுமாக நிர்மலா படபடக்க,


“நான் என்னடி செய்ய? இங்கே குழந்தையைப் பார்த்துக்க வேற யாரு இருக்கா சொல்லு? அனுவுக்கு குழந்தையைப் பார்த்துக்கறதைப் பத்தி கொஞ்சமும் அறிவில்லை.” என்றார் மங்கை.


“அதுக்காக அப்பாவை எதிர்த்து நீங்க இப்டி செய்றது கொஞ்சமும் நல்லாயில்லைம்மா. எவ வயித்துல பிறந்ததோ!” என்று அருவெறுப்புடன் முகத்தைச் சுளிக்க,


நிர்மலாவின் கணவன் ராஜேஷூடன் பேசியபடி அங்கே வந்த பாஸ்கரன் அவள் சொன்னதைக் கேட்டுவிட்டு, “போதும் நிர்மா! உனக்கு அம்மாவே தேவலாம். முந்தின ஜெனரேஷன் அவங்களே இந்தளவு பிற்போக்குத்தனமா யோசிக்கலை. ஆனா நீ… ச்ச!” என்றுவிட,


ராஜேஷ் அழுத்தத்துடன் மனைவியைப் பார்த்தான். “இத்தோட உனக்கு ஆயிரம் முறை சொல்லிட்டேன். இதுல பெரிய தப்பு எதுவுமில்லை‌. அதுவும் உங்கண்ணன் குழந்தைதான்னு! ஏன் உனக்கு புரியலை? கொஞ்சமாவது படிச்சிருந்தா புத்தியிருக்கும்! உங்கப்பாவோட சேர்ந்துக்கிட்டு இங்கே யாரையும் ஹர்ட் பண்ணிடக்கூடாதுன்னு சொல்லித்தான் கூட்டிட்டு வந்தேன். அப்டியும் வந்ததும் உன் புத்தியைக் காட்டற இல்ல?”


“விடுங்க மாப்பிள்ளை. அவளை இனி மாத்த முடியாது.”


“இல்லை மச்சான். அப்போ என் பேச்சுக்கு என்ன மரியாதை? இனியும் இங்கே இருந்தா அனுவையும் ஏதாவது பேசுவா! ஏய் கிளம்புடீ!”


மங்கை, “தம்பி, கொஞ்சம் பொறுமையா இருங்க. அவ ஏதோ ஆத்தாமைல பேசிட்டா… நல்ல காரியம் நடக்கும்போது நீங்க கிளம்புறது சரியா இருக்காது.” என்று சொல்ல சிறிது தணிந்தான்.


“என் கண்பார்வைல தான் இருக்கணும். வாயைத் திறந்த…” என்று மனைவியை எச்சரிக்கவும் மறக்கவில்லை.


கைகளில், கால்களில், இடையில் எனப் புதியதாக பூட்டிக்கொண்ட தங்கங்களுடன், அனுவின் கொஞ்சலிலும் அன்பிலும் குளித்து புடம் போட்ட தங்கமாய் ஜொலித்தான் பாஸ்கரனின் மகன். 


பாஸ்கரன் குழந்தையின் காதில், “சஞ்சய் பாஸ்கர்.” என்று மூன்று முறை சொல்ல, அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் சொன்னார்கள்.


குழந்தையை நிர்மலாவிடம் கொடுக்க, “உன் அளவுக்கு எனக்கு பெரிய மனசில்லைம்மா!” என்றவள் கணவன் முறைப்பதையும் பொருட்படுத்தாமல் முகம் திருப்பிக்கொண்டாள்.


விழாவிற்கு வந்த உறவினர்கள் பெரியவரைக் கேட்க, அவர் தவிர்க்க முடியாதக் காரணத்தால் வெளியூர் சென்றிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. 


அது எந்த நடிகையும் கூட வாடகைத்தாய் முறையை அணுகாத காலகட்டமல்லவா? 


ஆக ராஜேஷைப் போல் சிலர், “செம போல்ட் டிசிஷன் அனு!” என புரிதலுடன் பேச, நிர்மலாவைப் போல் பலர் அசூயைப்படவே செய்தார்கள்.


அனுவும் பாஸ்கரனும் எதற்கும் பாதிக்கப்படவில்லை‌. எங்கும் எதிலும் அபிப்ராய பேதங்கள் உண்டு. அவர்கள் தினமும் அந்த வீட்டுப் பெரியவரையே சமாளிக்கிறார்கள். ஆகையால் இவர்களைக் கடப்பதும் எளிதாகவே இருந்தது.


குழந்தை அனுவிடம் இருந்ததை விட, மங்கையிடமும் காமாட்சியிடமும்தான் முச்சூடும் இருந்தான். அனுவும் அழுத்தம், கவலையின்றி தன் வேலையில் முழு முனைப்புடன் ஈடுபட முடிந்தது. அந்த வேலையில் அவளின் வெறித்தனமான ஆர்வமும் சிறந்த செயல் திறனுடன் குழுவை நிர்வகிக்கும் திறனும் இருந்ததால், குழுவின் தலைமையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவள் அடுத்த இரண்டரை வருடங்களில் மேலாளராகவும் பதவி உயர்வு பெற்றிருந்தாள்.


இதில் நிச்சயம் பாஸ்கரனின் அன்பும் புரிதலும் நட்புடன் கூடிய காதலும் துணை நின்றதில் அனு அவனின் அடிமையாகவே மாறியிருந்தாள்.


அதன் விளைவாக சஞ்சய்க்கு மூன்று வயதானபோது ஏற்கனவே கணவனிடம் சொன்னதற்கிணங்க, அனு கர்ப்பம் தரித்திருந்தாள்.


வருடம் 2034


ந்தனாவின் நினைவில் தன்னைத் தொலைத்து, விட்டத்தில் பார்வையைப் பதித்திருந்தான் அக்னிஸ்வரூபன். சமூக வலைப்பக்கத்திலிருந்து அவள் புகைப்படத்தைத் தேடியெடுத்து, இவன் மனம் கவர்ந்தவளும் அவினாஷின் தங்கையும் ஒரே பெண்தானா என்று பார்க்க சில நிமிடங்கள் கூட ஆகாது. ஆனால் அதைச் செய்யத்தான் அவனுக்கு மனம் வரவில்லை.


ஒருவேளை இருவரும் ஒரே பெண்ணாக இருந்துவிட்டால் தன் நிலைமை என்னவாகும், தன் மனம் எப்படி எதிர்வினை புரியும் என்று சிந்தித்து சிந்தித்தே ஒருவழியாகிப் போனான்.


“அத்த்தாஆன்ன்…” என்ற அலறல் குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தெழுந்து பார்க்க, ஒரு அழகிய இளம்பெண் அவன் காதினோரம் கத்திக்கொண்டிருந்தாள்.


துள்ளி எழுந்து அவளுக்கு எதிர்ப்புறம் வந்து நின்றான். “பிசாசே! ஏண்டி என் காதைச் செவிடாக்கப் பார்க்கற?”


“பின்ன? கதவைத் தட்டினேன். சீலிங் லைட்ஸையே பார்த்துட்டிருந்தீங்க. உள்ளே வந்தும் எத்தனை தடவை கூப்பிட்டேன் தெரியுமா?”


‘ச்ச! இனி சந்தனாவை நினைக்கக்கூடாது. அவள் அருணுக்கு சொந்தமானவள்’ என்று என்றும் போல் இன்றும் பலவீனமான முடிவெடுத்துக் கொண்டான். “ஏதோ ஞாபகம். சரி நீ எப்போ வந்த? அத்தை வந்திருக்காங்களா?”


“ஏன் அதை உங்க டிரோன் செக்யூரிட்டி சொல்லலையா?” என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டாள் பெண்.


“பார்க்கலடி பாவி!” என்றபடி கீழே வந்தான் அக்னி.


ஹாலில் பிரபஞ்சனின் அக்கா வசுதாவும் அவர் கணவர் கண்ணனும் அமர்ந்து பிரபஞ்சன், அபிராமியிடம் பேசிக் கொண்டிருந்தனர். வசுதா கல்லூரி பேராசிரியை. கண்ணன் பெங்களூருவில் பெயர் சொல்லுமளவிற்கு பிரபல வழக்கறிஞர்.


அக்காவை பெங்களூருவில் கட்டிக் கொடுத்திருந்ததால், தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு, சொந்த ஊரான திருச்சியிலிருந்து புலம்பெயர்ந்த பிரபஞ்சனும் அம்மா அபிராமியுடன் இங்கே வந்து பெங்களூர்வாசியாகி விட்டான்.


“வாங்க அத்தை. வாங்க மாமா.” -அக்னி.


“என்ன அதிசயம்! அக்னி இந்நேரத்துக்கு வீட்ல இருக்கான்?” -கண்ணன்.


“தங்கச்சி கல்யாணம் வந்துடுச்சுல்ல? இன்னும் வேலை வேலைன்னு ஆஃபீஸ்லயே இருக்க முடியுமா? என்னடா?” -வசுதா.


“நெத்தில என்ன காயம் அக்னி?”


“கால் தடுக்கி விழுந்துட்டானாம்!” குரலில் எள்ளலை வள்ளலாக வாரி இறைத்தார் அபிராமி.


பாட்டியை முறைத்தவன், “ஏர்போர்ட்ல லக்கேஜ் தட்டிடுச்சு மாமா!” என்று சொல்ல, சந்தேகமாகப் பார்த்தார் கண்ணன்.


அவன் கண்களால், ‘ப்ளீஸ்’ போட, பேச்சை மாற்றினார். “கம்பெனில வேலை இல்லயா இன்னிக்கு?”


“‌ஈவ்னிங் ஒரு ஆன்லைன் மீட்டிங் இருந்தது மாமா. வீட்ல இருந்து ஜாய்ன் பண்ணிக்கலாம்னு வந்துட்டேன்.”


“ஆமா, அத்தான் ரூம் சீலிங்ல தான் அந்த மீட்டிங் நடந்தது.” என்றபடி அங்கே வந்தாள் வசுதாவின் மகள் பாவனா.


வசுதா -கண்ணன் தம்பதியர்க்கு இரண்டு பெண்கள். மூத்தவள் கீதாஞ்சலி. திருமணம் முடிந்து உள்ளூரிலேயே வசிக்கிறாள். இளையவளைத் தான் சற்றுமுன் பார்த்தோம். இவளொரு ‘ஹாசினி’ ரகக் கதாபாத்திரம். பெயர் பாவனா! அக்னிக்கு அவள் ‘பாவி’. வயது இருபத்துநான்கு. முதுகலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படித்திருக்கிறாள்.


அக்னி, “அவ கூப்பிட்டது கவனிக்காம இருந்துட்டேன். அதைச் சொல்றா! ஹேய் பாவி, பிரகதி ப்யூட்டிஷியனைப் பார்க்க போயிருக்கா. நீ போகல?” என்று அவளைத் திசைதிருப்ப,


“அச்சோ! நான் வந்ததே அதுக்குத்தான் அத்தான். அவங்க வீடு நெக்ஸ்ட் ரோட்லதானே இருக்குது?” எனக் கேட்டவள், “அத்தை என் காஃபி கேன்ஸல்!” என்று சமைலறையைப் பார்த்து நிரஞ்சனாவிடம் கூவிவிட்டு, மற்றவர்களிடமும் சொல்லிவிட்டு குதித்தோடிப் போனாள்.


“பாவனாவுக்கும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிடலாமே மாமா?” -பிரபஞ்சன்.


“அக்னி அவனோட ஃப்ரெண்ட்ன்னு ஒரு பையனைப் பத்தி சொன்னானே…” என்று கண்ணன் யோசனையாக இழுக்க,


காஃபி தட்டைத் தூக்கி வந்த நிரஞ்சனா அலுப்புடன் சொன்னாள். “நீங்க வேற அண்ணா, இவனோட ஃப்ரெண்ட்ஸ் எல்லா பசங்களோட குழந்தைகளும் இப்போ ஸ்கூல் அட்மிஷனுக்கு நிற்குதுங்க. போவீங்களா…”


“ப்ச் ம்மா!”


“அவ சொல்றதுல என்னடா தப்பிருக்குது? முப்பது வயசாகிடுச்சு. இப்பவும் கல்யாணம் வேணாம்னா என்ன அர்த்தம்? துறவி கிறவி ஆகப் போறியா?” என வசுதா கேட்க,


அபிராமி பாட்டி முதற்கொண்டு அனைவரும் பதிலுக்காக அக்னியின் முகம் பார்த்தனர். அவன் புன்னகை மாறாமல் சொன்னான். “கல்யாணத்துல கமிட் ஆகறதுக்கு துறவறம் தௌசண்ட் டைம்ஸ் பெட்டர்ன்னு, கல்யாணம் ஆன என் ஃப்ரெண்ட்ஸ் புலம்பறதைப் பார்க்கும்போது, நான் இன்னும் ஸேஃப் ஸோன்ல இருக்கேன்னு சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன் அத்தை. அது பொறுக்கலையா உங்களுக்கு?”


“நீ மட்டும் இப்போவே சரின்னு சொன்னா பாவனாவுக்கு நான் வெளிலயே பார்க்கமாட்டேன் அக்னி. என்னங்க?” என கணவனையும் துணைக்கழைக்க,


“எனக்கு அக்னின்னா ட்ரிபிள் ஓகேதான்.” என்ற கண்ணன் பெரிதாய்ப் புன்னகைத்தார்.


“பாவிக்கு ஏத்த மாதிரி நாம வேற இடம் பார்ப்போம் மாமா.” என்று பிடிக்கொடுக்காமல் பேசியவனைக் கண்டு பெருமூச்செறிந்தனர் பெரியவர்கள். 


அதற்கு மேல் அவனை வற்புறுத்தாமல், நாசுக்காக பிரகதியின் திருமணம் பற்றி அபிராமியிடம் கேட்டார் கண்ணன். “சரி, தட்டு மாத்துறதுக்கு டேட்ஸ் பார்த்து வச்சிருக்கீங்களா அத்தை?” 


“நான் அடுத்த மாசத்துல மூணு தேதி பார்த்து வச்சிருக்கேன் மாப்பிள்ளை. உங்களுக்கு எது வசதியாயிருக்கும்ன்னு சொன்னீங்கன்னா, அவங்க வீட்டுலேயும் சொல்லிடலாம்.”


“நெக்ஸ்ட் மன்த் நான் ஃப்ரீ தான் அத்தை.”


“அவங்க வீட்ல எந்த முடிவும் அந்தம்மாவோட அண்ணனும் கொழுந்தனும்தான் ஃபைனல் பண்ணுவாங்களாம் மாமா.” - பிரபஞ்சன்.


“அப்போ மூணு தேதியையுமே கன்வே பண்ணிடு மாப்பிள்ளை. அவங்களுக்கு எது வசதிப்படுமோ ச்சூஸ் பண்ணிட்டு சொல்லட்டும். ஃபங்ஷன் எங்கே வைக்கற ஐடியா?”


“நம்ம வீட்டுலேயேதான்! கொஞ்சம் பேருக்குதான் சொல்ல நினைச்சிருக்கேன். கல்யாணத்துக்கும் ரிசப்ஷனுக்கும் பெரிய ஹால் பார்த்துக்கலாம்.”


இப்படியாக அவர்களிடையே சம்பிரதாயப் பூர்வமான பேச்சுகள் சென்றுகொண்டிருக்க, பாவனாவும் பிரகதியும் சுணங்கிய முகத்துடன் வந்தார்கள். 


“பாட்டி நீங்க தந்த மூணு தேதிலயும் அந்தக்கா பிஸியாம்.” ஏமாற்றத்தில் உதட்டைப் பிதுக்கினாள் பிரகதி.


“நான் எனக்கு மட்டும் லைட்டா மேக்கப் பண்ணக் கேட்டேன்‌. அது கூட முடியாதாம்.” -பாவனா‌.


“இது உனக்கே ஓவரா தெரியலயாடி? கல்யாணப் பொண்ணு அவ தானே?” -வசுதா.


நிரஞ்சனா, “அத்தை ஃப்ரெண்ட் ஒருத்தவங்க பார்லர் வச்சிருக்காங்க. பேசிப் பார்க்கறேன். டோண்ட் ஃபீல்’டா பாவனா…” என்று மருமகளைச் சமாதானப்படுத்த,


பிரகதி, “உங்க ஃப்ரெண்ட்ன்னா அந்த சுமதி ஆன்ட்டிதானேம்மா? அவங்க ஓல்டு ஸ்டைல்ல ஃபவுன்டேஷனை அப்பி விடுவாங்க. நமக்கு அவங்க வேண்டாம் பாவனா. ஏர்ஃப்ரெஷ் மேக்கப்’க்கு நாம வேற இடம் பார்ப்போம்.” என்று அவளை மூளைச்சலவைச் செய்ய,


இந்த பெண்களுக்கு மட்டும் கவலைப்படுவதற்கென்றே ஏதேனும் காரணிகள் இருந்துகொண்டே இருக்கும் போலும் என்று தோன்றியது அக்னிக்கு. “பிடிக்காத மாப்பிள்ளையைப் பார்க்கறதுக்கு மேக்கப் எதுக்குன்னு மூஞ்சியைக் கூட கழுவாமதானே போன? உன் எண்ணெய் வழியற மூஞ்சியைப் பார்த்துதான் உன் ஆளு மயங்கினார்ன்றதை மறந்துட்டியா ப்ரூ காஃபி?”


“வேலிட் பாயிண்ட்!” என்ற கண்ணன் அக்னிக்கு ஹைஃபை அடித்துக்கொண்டார்.


அப்போதே அவினாஷ் வீட்டிற்கும் பேசி, இரு தரப்பும் அடுத்த மாத முதல் வாரத்தில் திருமணத்தை உறுதி செய்ய ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தனர்.


நாள் நெருங்க நெருங்க எதிர்க்கொள்ளவிருக்கும் முகங்களை நினைத்து, காற்றில் அலையும் துரும்பானான் அக்னிஸ்வரூபன்.


இசைக்கும்...

Comments

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25