கருவறை கீதம் -11

 


அத்தியாயம் 11


வருடம் 2007


னுவின் கர்ப்பம் உறுதிசெய்யப்பட்டதும் இத்தனை நாட்கள் அவள் மீதிருந்த மனஸ்தாபம் நீங்கி, வீட்டுப் பெண்கள் அனைவரும் அவளைக் கொண்டாடினர். 


அனுவின் அம்மா லட்சுமி அவளைத் தன்னோடு திண்டுக்கல் அழைத்துச் சென்று மூன்று மாதங்கள் வைத்திருந்து, பிடித்த உணவுகளைச் சமைத்துத் தந்து சீராட்டி மகிழ்ந்தார். பின்னர் ஸ்ரீரங்கம் திரும்பியதும் நிர்மலாவும் வந்துப் பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்துவிட்டுப் போனாள். அவளும் அப்போது இரண்டாவது முறை கர்ப்பமாகியிருந்தாள். குடும்பத்தினருக்கு ஆனந்தம் இரட்டிப்பானது.


சும்மாவே பாஸ்கரன் மனைவியிடம் காதலை மழையாகத்தான் பொழிவான். தற்போது மழையுடன் கூடிய தேநீராய்க் காதல் செய்தான்.


அனைத்தையும் ஒருவித குரூர மௌனத்துடன் கடந்துபோனார் கலியபெருமாள். அனுவின் வயிறு வளர வளர, அவரின் வன்மமும் வளர்ந்துகொண்டே போனதை அவ்வீட்டில் யாருமே அறியாமல் போனதுதான் துரதிர்ஷ்டத்தின் உச்சம்! அவளை ஜெயித்துவிட வேண்டி நேரம் பார்த்து காத்திருந்து அவர் செய்த செயல், சஞ்சய்யின் மேல் அலாதி பிரியம் கொண்டிருந்த அனுவை ஒரேயடியாக ஒடித்துப்போட்டது.


பத்தாம் மாதத் துவக்கத்தில் அனுவிற்கு வலியெடுத்தபோது, முதல் ஆளாகப் போய் டாக்ஸியை அழைத்து வந்தவர், பாஸ்கரன் அனுவுடன் ஏற, இவர் மங்கைக்கும் முதலாக அவர் எடுத்து வைத்திருந்த பொருட்களுடன் உள்ளே ஏறி அமர்ந்துகொண்டார்.


“அவர் வீட்டு வாரிசு வரப்போகுதுன்னதும் முதல் ஆளா கிளம்பிட்டார் பாரேன்.” என்று காமாட்சி அதிசயிக்க,


“இந்த அனு முதல்லயே பிள்ளையைப் பெத்து நம்மக்கிட்ட கொடுத்திருந்தா இத்தனை நாளும் இவர் மனஸ்தாபத்தோட இருந்திருக்கமாட்டார். வேலையைப் பார்க்கணும், உடம்பு ஒத்துழைக்காதுன்னு அல்பமா காரணம் சொல்லி தள்ளிப் போட்டுட்டா!” என்ற மங்கை தங்களுக்காக ஆட்டோவை அழைக்கப் போனார்.


இவர்கள் நான்கு வயது சஞ்சயுடன் மருத்துவமனை போய் சேர்ந்த போதுதான், ஆண் குழந்தைப் பிறந்திருப்பதாக சொல்லி குழந்தையைத் தூக்கி வந்தாள் செவிலியர் பெண். பாஸ்கரன் மரியாதைக் கருதி குழந்தையை அப்பாவிடம் தரச் சொல்லுமுன், அவரே முன்னால் வந்து கை நீட்டி வாங்கிக்கொண்டார்.


அப்பாவின் சிறுபிள்ளைத்தனத்தை எண்ணி சிரித்துக் கொண்டவனுக்கு, அம்மாவிடம் இருந்த சஞ்சய்யைத் தூக்கி வந்து குழந்தையை அவனிடம் காட்ட ஆசைதான். ஆனால் அப்பா அதை விரும்பமாட்டார் என்று தெரியும்.


அவர் இன்றளவிலும் சஞ்சய்யை ஏற்றுக்கொள்ளவில்லை‌. அவன் தெரியாமல் ஓடிப்போய் அவரைத் தொட்டுவிட்டால் கூட, அவன் தொட்ட அந்த சட்டையைக் கழற்றிப் போட்டுவிடுவார். அந்தளவிற்கு அவனைத் தீண்டத்தகாதவனாகவே நடத்தினார். கோபம் கொள்ளுதல், கோபத்தை இரைந்து வெளிப்படுத்துதல் என்று எதுவுமில்லாமல் மௌனமாகவே அத்தனையும் செய்யும் குயுக்தி குணம் படைத்தவர்.


அதுவும் அனுவின் முன் வேண்டுமென்றே அந்தக் குழந்தையிடம் பேதத்துடன் நடந்துகொள்வதில் அற்ப சுகம் காண்பார். அது குழந்தைக்கு புரியாது. ஆனால் அவன் அன்னைக்கு புரியுமே? அனு சில நேரங்களில் அவரைப் போலவே மௌனமாக இருந்துவிடுவாள். சில சமயம் சாட்டையால் சுழற்றியடித்ததைப் போல் மனம் வலிக்கும். ஊமையாக அழுவாள்; கணவனிடம் புலம்புவாள். சஞ்சய் மேல் அவருக்கும் சேர்த்து அன்பைப் பொழிந்து மகிழ்வாள். 


இப்போது அவர் ஆசைப்படி மதம், ஜாதி, ஜாதகம் பார்த்து முடித்த தன் வயிற்றிலேயே அவரின் பேரப் பிள்ளையைப் பெற்றுக் கொடுத்தாயிற்று. இனி மாறிவிடுவார் என்று நம்பினாள் அனு. ஆனால் இப்போதுதான் அவர் ஆட்டம் ஆரம்பமாகி இருப்பதை அவள் அறியவில்லை.


அதன்படி ஒருநாள் தன் தம்பியைத் தொட வந்த சஞ்சய்யை விரட்டியடித்தார். அது அவனுக்கு விவரம் புரியாத வயது. நேற்று பிறந்த அவன்தான் இந்த வீட்டின் ராஜா; நீ சாக்கடையில் இருந்து வந்தவன் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அவன் மனதில் பதிய வைத்தார். குழந்தைக்கு தினப்படி ஒரு புதுத்துணி, விளையாட்டு பொருட்கள் என வாங்கி குவித்தவர், அதனை வேண்டுமென்றே சஞ்சயிடம் காட்டி நீ இதற்கு தகுதியற்றவன் என்றார். உன் மூச்சுக்காற்று என் பேரனின் மேல் படக்கூடாது என்று இவனைத் தூர நிறுத்தினார்.


இதைச் சில நேரங்களில் அனு பார்த்துவிட்டால் வரிந்துக் கட்டிக்கொண்டு மாமனாருடன் சண்டைக்கு நிற்பாள். பாஸ்கரனிடம் புலம்புவாள்.


“அவருக்கு என் மேல தானே கோபம்? அதை என்கிட்ட காட்ட வேண்டியதுதானே? அவன் குழந்தை பாஸ்கர். நாம நம்மளோட ரெண்டு குழந்தைகளுக்கும் நடுவில் எந்த வேற்றுமையும் காட்டக்கூடாது.”


“விடு அனு. அவர் இல்லாத நேரம் அம்மா ரெண்டு பேரையும் ஒண்ணா தான் நடத்துவாங்க.”


“இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நாடகம்? பசங்க வளர்ந்தப்புறமும் மாமாவுக்காக பார்த்துக்கிட்டே இருக்கமுடியுமா? இது நல்லதுக்கில்லைங்க!”


“...”


“யாரும் இல்லைன்னு சொன்னாலும் சஞ்சு இந்த வீட்டு வாரிசு! அவனைச் சரகேட் சைல்ட்ன்னு இவங்க தள்ளி வச்சிடக் கூடாதுன்னு தான் நீங்க தனியா‌ போயிடலாம்ன்னு கூப்பிட்டப்போ கூட நான் வரலை. இந்த வீட்டுல எனக்கு அவங்க தந்த எல்லா தொந்தரவையும் பொறுத்துக்கிட்டேன். அது என் குழந்தைக்காக மட்டும்தான்!”


“ரிலாக்ஸ் அனு!”


“என் ரெண்டு குழந்தைங்களுக்கும் நல்ல பாண்டிங் இருக்கணும்ன்னு விரும்பறேன் பாஸ்கர். அது இப்டி விலக்கி வச்சா எப்டி முடியும்?”


“புரியுதுடா… ஆனா அப்பாவை மாத்த முடியாது.” என்று பேச்சை முடித்துக்கொள்வான்.


இதனாலேயே மங்கை கலியபெருமாள் இல்லாத நேரத்தில் மட்டும் சஞ்சய்யை அவன் தம்பியைப் பார்க்க அனுமதிப்பார். அவர் இருந்தால் சஞ்சய் காமாட்சியிடம் இருப்பான். அனு குழந்தைக்கு பாலூட்டுவதால் இரவில் பேரனை அவளிடம்தான் விட வேண்டிய நிலைமை! ஆனால் அதையே காரணம்காட்டி இரவில் சஞ்சய்யைக் காமாட்சியை வைத்துக்கொள்ள சொல்லுவார்.


ஏற்கனவே அவர் தங்கள் மீது கோபத்தில் இருந்ததால், பாஸ்கரன் இதற்குமேல் அப்பாவை எதிர்க்க விரும்பவில்லை. அதனால் அவனும் அவர் கண்முன் சஞ்சய்யைக் குழந்தையுடன் விளையாட விடவில்லை. அனுவையும் அவ்வாறே நடக்க சொன்னான்.


அனுவிற்கு இதில் துளியும் விருப்பமில்லை. அதனால் மாமனாரின் மேல் பொறுமை எல்லைக் கடக்கும் நேரங்களிலெல்லாம், வேண்டுமென்றே அவர்முன் சஞ்சயின் சின்ன மடியில் குழந்தையை வைத்து அழகு பார்ப்பாள்.


அதுபோல் புகைச்சலும் கரைச்சலுமாகச் சென்ற ஒருநாளில் கலியபெருமாள் வீட்டில் இருக்கும்போது, மங்கையின் மடியில் இருந்த, தன் தம்பிக்காக தாத்தா வாங்கி தந்த ராட்டினப் பொம்மையை வைத்துக்கொண்டு, “தம்பி வா, விளையாடலாம்” என்றவன் வாயில் ஒலியெழுப்பியவாறு, தம்பியின் கரம்பிடித்து ஆட்டிவிட, 


மங்கை எச்சரிக்கும் முன் விருட்டென எழுந்து வந்த பெரியவர், “என் பேரனோட விளையாட உனக்கென்னடா தகுதியிருக்குது?” என்ற கர்ஜனையுடன் இவனைத் தூக்கி எதிர்ப்புறம் வீசியிருந்தார்.


அதேநேரம் சரியாக உள்ளே வந்த அனு, பாஸ்கரனின் கண்களில் தூணோரமாக விழுந்து கிடந்த சஞ்சய் பட்டுவிட்டான். பாஸ்கரன் ஓடிப்போய் தூக்கிக்கொண்டு என்னவானது என விசாரிக்க, மகன் அழுதுக்கொண்டே சொன்னதைக் கேட்ட அனு ஆடித் தீர்த்துவிட்டாள்.


ஒரு காலத்தில் குழந்தைக்கு சேவகம் செய்வதெல்லாம் ‘தி ப்ரூட்டல் திங்’ என்ற அதே அனுதான், இன்று அவள் குழந்தைக்காக அவள் குடும்பத்தினரிடமே அறப்போராட்டம் நிகழ்த்துகிறாள். வாழ்க்கைப் பயணங்களெல்லாம் விந்தைகள் நிறைந்ததுதானே?


“இவன்தான் மாமா இந்த வீட்டோட மூத்த வாரிசு. நீங்க ஒத்துக்கலைன்னாலும் நான் எல்லா இடத்திலேயும் சஞ்சுவைத் தான் முதல்ல நிறுத்துவேன்.” என்றவள் மாமியாரிடம், “பிஞ்சுக் குழந்தையைத் மிருகத்தனமா தூக்கி வீசிருக்கார். எப்டியத்தை உங்களால பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியுது? பேரனைப் பார்க்கணும் பார்க்கணும்ன்னு நீங்க எல்லாருமா சேர்ந்து எனக்கு அழுத்தம் தந்ததால தான் நான் சரகஸிக்கு போனேன். இப்ப அந்தக் குழந்தையை நீங்க இப்டி தீண்டத் தகாதவன் மாதிரி நடத்தறது உங்க வயசுக்கு கொஞ்சமும் நல்லாயில்லை!” என்று ஆக்ரோஷமாகச் சொன்னவள்,


வேண்டுமென்றே மங்கையிடமிருந்து குழந்தையை வாங்கி அவர்களின் முன்னிலையிலேயே, “சஞ்சு கூட விளையாடத்தான் தம்பி பிறந்திருக்கான். உன் தம்பிக்கு ஹாய் சொல்லு!” என இளையவனின் கரத்தைப் பிடித்து மூத்தவனிடம் நீட்ட, 


அம்மாவின் மேல் சலுகையாகச் சாய்ந்துகொண்டு, “ஹாய் அஜ்ஜூன்…” என்று அப்பிஞ்சு கரத்தைப் பற்றிக் குலுக்கினான் குட்டி சஞ்சய் பாஸ்கர்.


வருடம் 2034


"ஹாய் அர்ஜூன்!” என்று கம்பீரத்துடனும் ஆளுமையுடனும் புறங்கை மேல்நோக்கியிருக்க, அர்ஜூனிடம் கரம் குலுக்கினான் அக்னிஸ்வரூப் பிரபஞ்சன்.


பெங்களூரில் வானம் கசிந்த ஒரு மாலை நேரத்தில் பிரபஞ்சன் வீட்டிற்கு வந்திறங்கினார்கள் அவினாஷ் குடும்பத்தினர். 


முதலாவதாக வந்த காரில் இருந்து முதலில் இறங்கிய அர்ஜூன் விரிந்த புன்னகையுடன், முன்னால் நின்றிருந்த பிரபஞ்சனிடம் தான் யாரென்று சொல்லி, ‘அர்ஜூன் பாஸ்கர்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவனிடமும் அவனையடுத்து வரிசையாக வரவேற்ற ஆண்களிடமும் கரம்குலுக்கினான். 


அப்போதுதான் அக்னிஸ்வரூபனின் புறமும் அவன் கரம் நீண்டது. இருவரும் பரஸ்பரம் புன்னகைத்துக் கொண்டார்கள். அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் இறங்கி வர,


எவளாக இருந்து விடக்கூடாது என்று அக்னி நினைத்தானோ அவளாகவே அவள் இருந்துவிட்டாள். சந்தனமாரி என்ற திருநாமம் கொண்ட சந்தனா! உறவினர்கள் மற்றும் நட்புக்களுக்கு சனா. அவினாஷின் தங்கை; அன்றொரு மழை நாளில் நம் அக்னியின் மனதில் காதல் திரியைப் பற்ற வைத்த வேகத்தில், தான் ‘அருணு’க்கென்று எழுதி வைக்கப்பட்டிருப்பவள் என்று சொல்லி அவன் மனதினைப் பொசுக்கியத் தெற்றுப்பல்காரி! இன்றளவும் அவன் இரவுகளைப் பொசுங்கிய வாசனைக் கொண்டு நிரப்பிக் கொண்டிருக்கும் மோசக் காதல்க்காரி.


மழையன்னையின் மகளா இவள்? சந்திக்க நேரும் போதெல்லாம் மழையையும் துணைச் சேர்க்கின்றாளே!


ஒரு கணம் இமைக்காமல் பார்த்தான். ‘இத்தனை அண்மையில் என் மனதினைக் கட்டுக்குள் வைக்க திடம் கொடு இறைவா!’ என்று பரம்பொருளிடம் கோரிக்கை வைத்தவனின் வதனத்தில் வஞ்சனையில்லா புன்னகையின் சாயல் மட்டுமே! மறந்தும் கண்களில் காதலின் கீற்றையும் காட்டி விடவில்லை.


ஆனால் சந்தனாவைக் கண்டு காதலை வெளிப்படுத்தாமல் உறுதியோடிருந்த கண்கள், அடுத்த கணம் அனுராதாவைப் பார்த்த மாத்திரத்தில் அடக்கவியலா கண்ணீரை வெளிப்படுத்திவிட ஆயத்தமானது. அவன் வாழ்க்கையில், நியாபக பக்கங்களில் அழிக்கவியலா இரு முகங்கள் உண்டு. அதில் ஒன்று இந்த அனுராதாவினது! 


கன்னக்கதுப்புகளின் சின்னத் துடிப்பினைப் பற்களை இறுகக் கடித்து நிறுத்திவிட முயன்றான்.


அசாதாரண சூழ்நிலைகளைப் பற்றியெல்லாம் -இந்த மனதிற்கெங்கே அக்கறையிருக்கிறது?      அழுதுவிடத் தானே அரற்றுகிறது?


கணநேரத்தில் சுதாரித்தவன் குரலைச் செருமிக்கொண்டான். கண்ணீரை இமைத் தாண்ட விடவில்லை. கதறி துடித்த இதயத்தை, குருதியில் தோய்ந்து கருகிய உயிரை, பொங்கி பெருகியப் பாசத்தைச் சூழ்நிலையின் பொருட்டு இரக்கமேயின்றி அடக்கி வைத்தான் அக்னிஸ்வரூபன். 


அவள் மேல் அவன் கொண்டிருக்கும் கோபமொன்றை தன் கண்ணீருக்கு கேடயமாக்கிக் கொண்டான். அக்கோபம் அணையா தீபமாய் இன்னமும் அக்னிக்குள் எரிந்து கொண்டிருக்கிறதே!


மீண்டும் புன்னகையைப் பூசிக்கொண்டான். 


அக்னியின் அருகே நின்றிருந்த அர்ஜூன் சிரத்தையெடுத்து வாரியிருந்த சிகையை, வந்த வேகத்தில் அலட்சியமாகக் கலைத்துவிட்டு, அவன் தலையில் நறுக்கெனக் குட்டிய சந்தனா, “என் பூவையா பிச்சுப் போடற?” என்றவள் பிரபஞ்சனிடம் சொன்னாள். “ஸ்நாக்ஸ் எல்லாம் ஒளிச்சு வைங்க அங்கிள். இவன் முதல் ஆளா இறங்கி வந்ததே அதுக்குத்தான்.”


“ஒளிச்சு வச்ச ஸ்நாக்ஸ் எல்லாம் ஒத்தையா மொக்க பார்க்கறா. தப்பி தவறி கூட இந்த விஷச்செடிக்கு உரம் போட்டுடாதீங்க அங்கிள்.” என்றான் அவன் தலையைத் தடவியபடி!


இருவரின் சம்பாஷணையில் வாய்விட்டு சிரித்த பிரபஞ்சன் அனைவருடனும் வீட்டினுள் நுழைந்தவாறே சந்தனாவிடம் கேட்டான். “என்ன கேர்ள்… ஸ்பேஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்தாச்சா?”


“இந்த அவி ஏமாத்திட்டே இருக்கான் அங்கிள். நீங்கதான் சாட்சி சொல்லிட்டேன்.”


“ஹாஹா… எங்க வீட்டு மாப்பிள்ளை நாணயஸ்தராச்சே!”


“கவுத்துட்டார்!” என அவள் சடைத்துக்கொண்டு நெற்றியில் உள்ளங்கை வைக்க, சத்தமாக சிரித்தான் பிரபஞ்சன்.


“அதென்ன மேட்டர்?” என்று அர்ஜூன் கேட்க, அவனுடன் சேர்ந்து அந்த ஒற்றை மெத்திருக்கையில் அமர்ந்துகொண்டு, அன்று கோவிலில் நடந்தக் கூத்தையும், அதற்கு அவினாஷ் தன்னை ‘ஸ்பேஸ் ஸ்டேஷன்’ அழைத்துப் போவதாகச் சொன்னதையும் அவனுக்கு மட்டும் கேட்கும்படி விவரித்தாள் சந்தனா‌.


வரவேற்பும் உபசரிப்பும் அறிமுகமும் இனிதாய் நடந்தது. பெரியவர்கள் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, அபிராமி பாட்டியின் பார்வைச் சந்தனாவின் மீது ஆராய்ச்சியாக படிந்தது. அழகாகப் புடவை அணிந்து, பூச் சூடி, பளிங்குச் சிலை போல் வந்திருந்தவளை வாயைப் பிளந்து பார்த்தார். 


“மாப்பிள்ளையோட தங்கச்சிதானே? அன்னிக்கு கோவில்ல பார்த்த பொண்ணா நீ?”


அவரின் ஆராய்ச்சி பார்வையைக் கண்டு நகைத்தவள், “அஃப்கோர்ஸ் யங் லேடி! எவ்ளோ மார்க் போடுவீங்க? தேறுவேனா?” என்று ஒற்றைக் கண் சிமிட்ட,


அர்ஜூன், “ப்ர்ர்! அத்தான் இன்னிக்கு உங்க ஃபங்ஷன் நடந்த மாதிரிதான்.” என்று அவினாஷிற்கு பயம் காட்டினான். 


“சனா!” நிர்மலாவிடமிருந்து வந்தது அதட்டல்! 


“கப்சிப்!” என்றவள் இதழ்களை அழுந்த மடக்கிக்கொண்டாள்.


அதில் பிரபஞ்சன் மேலும் சிரித்தான். பிரகதி அவனிடமும் சந்தனாவைப் பற்றி சொல்லியிருந்தாள். அதனால் அவனுக்கு சந்தனாவை, அவளின் குணாதிசயங்களை, இம்மாதிரி சேஷ்டைகளையும் கூட மிகவும் பிடித்திருந்தது.


நிரஞ்சனா, “நிஜமா புடவைல ரொம்ப அழகா இருக்கே சனா! அதான் பாட்டி கேட்கறாங்க.” என்று மாமியாரையும் விட்டுக்கொடுக்காமல் அவளைப் பாராட்ட,


“தாங்க்ஸ் ஆன்ட்டி.” என்று மென்மையாகப் புன்னகைத்துக் கொண்டாள். 


தன்னை மட்டுமல்ல அப்பாவையும் அம்மாவையும் கவர்ந்திருக்கிறாள் என்றெண்ணிய அக்னி, கவனமாக அவள்புறம் விழி அசைவதைத் தவிர்த்தான். அனுவும் சந்தனாவும் ஒவ்வொரு விதத்தில் இவனுக்குள் பெரும் பிரளயம் நடத்திக் கொண்டிருக்க, பிரகதிக்காகப் பிரகாசமான முகத்தைப் பிரதிபலித்து நின்றான் அந்த பாசமிகு அண்ணன்.


ஆனால் தன்னைப் போலவே பாட்டியை, ‘யங் லேடி’ என்றழைத்தவளின் குரலை மானங்கெட்டுப் போய் ரசித்தன, அவன் காதின் மென்னரம்புகள்!


உபசரிப்புகள் ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்க, தங்களை வரவேற்ற பிரகதியை, அனு இயல்பாக தன்னருகே அமர்த்திக் கொண்டு பேச, 


இப்போது அக்னியின் கண்கள் சந்தனாவைத் தான் அளந்தன. என்ன தான் பிரகதி சந்தனா நல்லவள் என்று சொல்லியிருந்தாலும், ஒரு அண்ணனாக பிரகதிக்கு அவளிடமிருந்து நாத்தனார் துன்புறத்தல் எதுவும் வருமோ என்ற ரீதியில் அளவிட்டான். ஏனெனில் அவனுக்கு நிர்மலாவின் குணமும் தெரியுமே! அவரின் மகள் எப்படிப்பட்டவளாக இருப்பாளோ!


அவள் முகத்தில் அப்படிப்பட்ட வஞ்சம் ஒன்றும் இருப்பதுபோல் தெரியவில்லை. சாதாரணமாக இருந்தாள். பிரகதியைக் கண்டு அவினாஷ் ஊற்றும் ஜொள்ளைப் பார்த்து, அர்ஜூனும் அவளும் கிசுகிசுத்து சிரித்துக் கொண்டிருந்தனர். அதில் அவன் நிம்மதி மூச்சு விடும்போதே, அதைக் குலைத்துப்போட்டார் அபிராமிப்பாட்டி.


பிரபஞ்சனைப் போல் அவரால் சந்தனாவின் செயல்களை, வாய்துடுக்கை ரசிக்க முடியவில்லை. அன்று கோவிலிலும் அவள் மேல் நல்ல அபிப்பிராயம் வரவில்லை. இன்றும் வந்ததுமே கொஞ்சமும் நாகரீகமற்று ஒரு ஆண்மகனின் தலைக் கலைத்தாள். இப்போது ஒற்றை மெத்திருக்கையில் அவன் தோள்களை உரசியவாறு ஈஷிக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். போதாதற்கு வயதில் மூத்தவளான தன்னிடம் கொஞ்சமும் மரியாதையற்று விஷமத்தனமாகப் பேசுகிறாள் என்று அம்மூதாட்டிக்கு சிறு புகைச்சல்.


ஆக, தன்னருகே அமர்ந்து பிரபஞ்சனுடன் பேசிக் கொண்டிருந்த பாஸ்கரனிடம் வெடுக்கெனக் கேட்டார். “இவளுக்கு கல்யாணம் செய்யலையாப்பா? வீட்டுல வயசு பிள்ளையை வச்சிக்கிட்டு பையனுக்கு முதல்ல முடிக்கறீங்களே?”


பிரபஞ்சன் வீட்டில் யாரும் இப்படியொரு கேள்வியை அபிராமியிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. பிரபஞ்சனுக்குமே அம்மாவின் இந்த அணுகுமுறை அதிர்ச்சிதான். 


நெற்றியில் அடித்தாற்போல் கேட்டதில் அக்னிக்கும் கோபம் வந்தது. “ப்ச் பாட்டி!” என்று சிறு முறைப்புடன் கண்டிக்க,


சந்தனா அலட்டிக் கொள்ளவேயில்லை. அம்மா சொன்னதைப் போல் முதல் கோணல் முற்றும் கோணல்! பாட்டிக்கு முதலில் தன்னைக் கறுப்பு உடையில் கண்ட அந்த அலங்கோலமானத் தோற்றமே மனதில் பதிந்திருக்கிறது. அதன் காரணமாகவே அவருக்கு தன்னையும் தன் பேச்சையும் பிடிக்கவில்லை என்று கணித்திருந்ததால் அவள் அவரின் கேள்வியைப் பெரிதாக நினைக்கவில்லை.


“நான் ஆல்ரெடி புக்ட் யங் லேடி!” என்று விளையாட்டாக சொல்லி வேண்டுமென்றே மீண்டும் ஒற்றைக் கண் சிமிட்டினாள்.


அதில் அபிராமிக்கு கோபமோ இல்லையோ அக்னிக்கு அக்னியின் மேல் இருப்பதைப் போல் இருந்தது.


‘அருண்.’ என அவன் மனம் துன்புற்றது.


“ஆமாங்கம்மா. என் பையனுக்குத்தான் அவளைப் பேசியிருக்கோம்.” என்று விரிந்த புன்னகையுடன் சொன்னாள் அனு.


பெண் வீட்டாரைப் போல், மாப்பிள்ளை வீட்டினருக்கு அபிராமியின் கேள்வியில் வருத்தம் எதுவுமில்லை. இந்தக் கேள்வியை ஏற்கனவே அவர்கள் பலமுறை கேட்டிருப்பதைப் போல் இயல்பாக இருந்தனர்.


சந்தனாவிடம், “வாவ்! கங்கிராட்ஸ் கேர்ள்” என்றான் பிரபஞ்சன்.


“ஹிஹி… தாங்க்ஸ் அங்கிள்.”


“அவன் இப்போதான் பிஸினஸ் ஆரம்பிச்சிருக்கான். அதுதான் இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம் போகட்டும்ன்னு பார்க்கறோம்.” என்ற நிர்மலாவை அனு முறைக்க, பாஸ்கரன் அவளைக் கண்களாலேயே அமைதியாக இருக்கும்படி கட்டுப்படுத்தினான்.


அதில் வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அனு. இந்த நாடகத்தைக் கண்டது நிரஞ்சனா மட்டும்தான்! அவளும் அதனைப் பெரிதாக நினைக்கவில்லை. அந்தளவிற்கு அடுத்தவரின் குடும்ப சங்கதியில் தலைநீட்டாத அவளின் குணமே அதனைப் பெரிதாக நினைக்கவிடவில்லை.


‘அதனால்தான் இருவரும் இணை பிரியாமல் சுற்றுகின்றனர் போலும். இந்தக் காலத்து பிள்ளைகளுக்கு கல்யாணம் வரை காத்திருக்கும் பொறுமை இல்லை.’ என்றெண்ணிக் கொண்ட அபிராமி பாட்டி அதன்பின்னர் தன் பேத்தியின் கல்யாணத்தைப் பற்றி பேச துவங்கிவிட்டார்.


அக்னிஸ்வரூபனின் நிலையே வேறாக இருந்தது. அனு, நிர்மலாவின் பதில்களைக் கேட்டு அர்ஜூனும் சந்தனாவும் சிறுபிள்ளைத்தனமாக விஷமத்துடன் சிரித்துக் கொண்டதை சந்தேகமாகப் பார்த்தான். கூடவே அதிர்ச்சியும்!


‘இவன் பேரு அர்ஜூன்தானே? ஆனா அவ லவர் பேர் அருண் இல்ல? அன்னிக்கு இந்த மாரியாத்தா அருண்னு சொன்னாளா? அர்ஜூன்னு சொன்னாளா?’


‘சின்ன வயசிலேயே அருணுக்குத்தான் இந்த சந்தனான்னு எழுதிக் கொடுத்துட்டேன்.’ என்ற அவளின் குரல் வேறு அவனை ஏகத்துக்கும் குழப்பத்திலாழ்த்தியது.


அத்துடன் இதுவரை அவர்கள் இருவரின் நெருக்கத்தில் பாதிக்கப்படாதவனுக்கு, இப்போது அடிவயிறு புகைந்தது. விரக்தியும் வெறுப்புமாய் அமர்ந்திருந்தவன் முயன்று கல்யாணப் பேச்சில் தன்னை இணைத்துக்கொண்டான்.


சிறிது நேரத்தில் தட்டை மாற்றி திருமணத்தை உறுதி செய்தவர்கள், அடுத்த இரு மாதங்களில் திருமணம் எனத் தேதியைக் குறித்தார்கள். 


பின்னர் உணவு பரிமாற பாவனாவைத் தேடிக்கொண்டிருந்த அக்னியை நிறுத்திய அபிராமி, பேரனிடம் சிறு குரலில் சந்தனாவைப் பற்றி சொன்னார். “இந்தப் பொண்ணு இருக்காளே சரியான திமிர்பிடிச்சவ அக்னி! அண்ணன்காரன் அதிரடின்னா இந்தப் பொண்ணு சரியான ரவுடி!”


“ப்ச்! சும்மா யாரையும் இப்டி சொல்லக்கூடாது பாட்டி.”


“சும்மா என்ன சொல்றேன்? நீ அன்னிக்கு இவளைப் பார்க்கலையே… உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் மொத்தமும் கறுப்பு! அதுவும் தலைல கண்றாவியா ஒரு கறுப்புத் துணியைக் கட்டிட்டு வந்திருந்தா பார்க்கணும். எதுக்காம்? அவங்கண்ணன் பிடிக்கலைன்னு சொன்னதால அந்தப் பொண்ணு வீட்டுக்காரங்களை ஓட விடறதுக்காம்!” என்றவர் அன்று சந்தனா செய்து வைத்த வேலையையும் நடந்துகொண்ட முறையையும் அப்படியே பேரனிடம் ஒப்பித்தார்.


மீண்டும் அவள்புறம் ஓடும் விழிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு நகர்ந்தான் அக்னிஸ்வரூபன்.


இசைக்கும்...

Comments

  1. அக்னிதான் சஞ்சய்யா!?
    போன அத்தியாயத்துல கூட
    அர்ஜூனும், சனாவும் ரூம்ல வச்சி பேசிகிட்டாங்களே அதுகூட சஞ்சய் எங்க இருக்கான், என்னன்னு கண்டுபிடிக்குறதபத்திதானோ!🤔

    ReplyDelete
    Replies
    1. தானோ?🤔🤔 Haha... Smart guess. Thank u so much 💞💞

      Delete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25