கருவறை கீதம் -12

 


அத்தியாயம் 12


வருடம் 2008


“அர்ஜூன்? வாவ்! சஞ்சுக்குட்டி தம்பிக்கு செலக்ட் பண்ண பேர் நல்லாயிருக்கே… யார் சொன்னாங்க இந்த பேரு?” தன்மேல் சாய்ந்து நின்றவனைக் கொஞ்சிய படி அனு கேட்க,


“சித்திப் பாத்தி…” என்றான் மழலை பாஷையில்!


முந்தைய நாள் சஞ்சய்யைத் தூங்க வைக்கும்போது காமாட்சி மகாபாரத அர்ஜூனனின் வில்வித்தைப் பற்றி விவரித்து சொல்லியிருக்க, பிஞ்சு மனதின் கற்பனையில் அர்ஜூனன் பிரம்மாண்ட கதாநாயகனாக விரிந்திருந்தான். அதை நினைவில் வைத்து ‘அர்ஜூன்’ என்ற பெயரைச் சொல்லி தம்பியை அழைக்க, அனு அதையே தன் சின்ன மகனுக்கு வைத்துவிட்டாள்.


அதிலும் கலியபெருமாளின் வயிற்றெரிச்சல் வெளிப்படவே செய்தது. இப்போதெல்லாம் பாஸ்கரன் அப்பாவிற்கு எதிராக வாய் திறக்காததால், அனுவே பிடிவாதம் பிடித்து அர்ஜூன் என்ற பெயரை மகனுக்காகத் தக்க வைத்துக்கொண்டாள். பாஸ்கரனை எதிர்பாராமல் தொட்டில் போடும் வைபவத்தின் அடுத்த நாளே போய் கெஸட்டில் பதிந்துவிட்டு வந்துவிட்டாள்.


இதேபோல் ஒவ்வொரு விடயத்திலும் குழந்தைகளைச் சேர்ப்பது, பிரிப்பது என நாள்தோறும் மருமகளுக்கும் மாமனாருக்கும் பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதுநாள் வரை அனுவுக்கு சாதகமாகப் பேசி வந்த பாஸ்கரன், அர்ஜூன் பிறந்த பிறகு இத்தனை நாட்கள் அப்பாவை எதிர்த்தது போதுமென்று அமைதியாகிவிட்டான்.


குழந்தைகளைச் சேர விடாமல் செய்யும் அவரின் செயல்களைக் கண்டுகொள்வதில்லை. அதேநேரம் விடுமுறை நாட்களில் அனு அவர்களைச் சேர்த்து வைத்து விளையாடுவதைத் தடுக்கவுமில்லை. நிலைமை புரிந்தாலும் இதற்குமேல் அப்பாவை எதிர்க்க வேண்டாமென நினைத்து மௌனம் சாதித்தான். அப்படி ஒருநாள், இரு நாட்களல்ல; நான்கு வருடங்கள் அறிவுக்கு திரைப் போட்டு கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கும் சேர்த்து அனு சஞ்சய்யை ஆராதித்தாள்.


அவ்வப்போது அவன் முகத்தில் தெரியும் பயமும் சோகமும் இவளை உறுத்திக் கொண்டேயிருக்கும். தன்னைக் கடவுளைப் போல் பார்க்கும் குழந்தையைக் கண்டு ஏனோ மனம் நடுங்கிய நாட்களும் உண்டு. ‘என்னடா?’ என்று விசாரித்தால் உதட்டைப் பிதுக்கி தூக்கம் என்று மடியில் விழும் குழந்தையை தன் அடிவயிற்றுடன் சேர்த்தணைத்துக் கொள்வாள். வீட்டில் இருக்கும் அநேக நேரங்களில் தினமும் தைரியமளிப்பதைப் போல் ஏதேனும் விளையாட்டுக்கள், கதைகள் என அவனுடனே நேரம் கழியும்.


அன்று சஞ்சய் பள்ளியில் ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்திருந்தான். அனு மிகுந்த உற்சாகத்துடன் அவனை அழைத்துக்கொண்டு வந்தாள். அன்று அவள் விடுப்பு எடுத்ததோடல்லாமல் பாஸ்கரனையும் நச்சரித்து விடுப்பெடுக்கச் செய்திருந்தவள், மகனுடனேயே பள்ளிக்கு போய் அவனை உற்சாகப்படுத்தி, அவன் வெற்றியைக் கொண்டாடி, பரிசு வாங்கியதில் பெருமையடைந்து என அன்று அனு நிரம்ப மகிழ்ந்திருந்தாள்.


வாங்கியப் பரிசை வீட்டில் அனைவரிடமும் காண்பித்து பூரித்துப் போனாள். கலியபெருமாள் வழக்கமான மர்மப் பார்வையுடனும் வன்மப் புன்னகையுடனும் சஞ்சய்யைப் பார்த்திருந்தார்.


அனுவின் ஆர்ப்பாட்டத்தில், “நீ குழந்தையா அவன் குழந்தையான்னு தெரிலடீ!” என்று நகைத்தான் பாஸ்கரன்.


“சும்மா இருங்க பாஸ்கர். குழந்தைங்களை நாம எவ்ளோ என்கரேஜ் பண்றோமோ அத்தனைக்கு ஜெயிச்சுட்டு வருவாங்க. என் பிள்ளை ஜெயிக்கவே பிறந்தவன்!” என்று அவனை உச்சி முகர்ந்தாள்.


“அர்ஜூன் எப்போம்மா என்னை ஜெயிப்பான்?”


“அவன் குட்டிக் குழந்தை இல்ல? அவனால குட்டி கால் வச்சு நடக்க முடியாதில்ல? நீதான் அவன் அண்ணன். அவனைப் பத்திரமா பார்த்துக்கணும். சஞ்சு இஸ் தி சூப்பர் பாய்!”


“அர்ஜூன்… அண்ணா பிக் பாய்!” என்ற சஞ்சய்யின் பிஞ்சு முகத்தில் தெரிந்த பெருமிதத்தை இன்னும் எத்தனை ஜென்மமானாலும் தன்னால் மறக்க முடியாது என்ற அனு தாய்மை பொங்க இரு மக்களையும் அணைத்துக் கொண்டாள்.


மாமனாரை ஜெயித்து, அவரால் அவ்வப்போது மகனின் முகத்தில் படியும் பயத்தை, ஒவ்வாமையை, ஒடுக்கத்தைத் துடைத்தெறிந்து, வீரத்தை, துணிச்சலை, துள்ளலை விதைத்து விட முப்பொழுதும் அவனை உற்சாகப்படுத்தி கொண்டே இருந்தாள் அனுராதா.

 

வருடம் 2034

லுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தாள் சந்தனா. டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் முடித்துள்ள சந்தனா, தற்சமயம் பெங்களூருவின் பிரபல நிறுவனத்தில் உற்பத்தி பொறியாளராக பணிபுரிகிறாள்.


கீழே வீட்டின் உரிமையாளர் இருக்க, இவள் மேல் போர்ஷனில் ஒற்றைப் படுக்கையறைக் கொண்ட வீட்டில் வாடகைக்கு இருக்கிறாள். அவர்களும் தமிழர்கள் என்பதால், ஆறு வருடங்களாகக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தவளுக்கு குடும்ப அமைப்பிலிருக்கும் உணர்வினையும் பாதுகாப்பினையும் தந்திருந்தார்கள்.


அப்படித்தான் ஒரு விடுமுறை நாளில் வீட்டு முதலாளியின் மகளான தர்ஷினியை நாட்டியப் பள்ளியில் இருந்து அழைத்துவர சென்ற இடத்தில் அக்னிஸ்வரூபனின் கண்ணில் விழுந்து கருத்தில் நுழைந்திருந்தாள்.


அலைபேசி அழைக்க, வீட்டைப் பூட்டியபடியே அழைப்பை ஏற்று, மாடிக் கைப்பிடிச் சுவற்றைத் தொட்டு வருடிக் கொண்டிருந்த வேப்பங்கிளையில் சாய்ந்து நின்றாள். அழைப்பில் நிர்மலா. “என்னம்மா இந்த நேரத்துல?”


“சாப்பிட்டியா சனா?”


“டைமாச்சும்மா. இனி கேண்டீன்தான்!”


“டெய்லி உன்னோட இதே பிரச்சினை. கொஞ்சம் சீக்கிரம் எழுந்து வீட்டுல சமைச்சு சாப்பிடுன்னு எத்தனை வாட்டி சொல்றேன்?”


“ப்ச்! என் மேல இருக்க உங்க பாசத்தைக் காட்டத்தான் இப்போ கூப்பிட்டீங்களா?”


“அதில்லடி… சம்பந்தி வீட்டுல இருந்து கால் பண்ணினாங்க. பிரகதிக்கு நியூ மாடல் டிஸைன்ல ஜூவல்ஸ் வாங்க போறாங்களாம். நீ அங்கே தானே இருக்க? அதான் கூப்பிட்டா நீ வருவியான்னு கேட்டாங்க நிரஞ்சனா அண்ணி.”


“ஸாரிம்மா. என்னால இந்த ஃபார்மாலிட்டீஸ்லலாம் கலந்துக்க முடியாது.”


“என்னதிது எடுத்தவுடனேயே முடியாதுன்னு… நீதானே நாத்தனார்?”


“அவளுக்கு பிடிச்சதை அவ வாங்கப் போறா! அதுக்கு ‘நாத்தம் பிடிச்ச நார்’ எல்லாம் எதுக்கும்மா?”


“நக்கலைக் குறைடீ! அப்புறம் பிரகதி உன்னை விட சின்னப் பொண்ணா இருந்தாலும் அவ இவ’ன்னு பேச வேணாம் சனா. அண்ணன் பொண்டாட்டிக்குரிய மரியாதையைக் கொடுக்கணும்.”


“ஷப்பாஆ… யப்பா! கால் கட் பண்றீங்களா? எனக்கு வேலைக்கு நேரமாச்சு.”


“இருடீ! நான் இன்னும் பேசி முடிக்கலை.”


“யம்மா…”


“இன்னிக்கு ஒருநாள் லீவு போடு சனாக் குட்டி. அவங்க ஆசையா கூப்பிடறாங்க இல்ல? நீ வருவ’ன்னு சொல்லி, வீட்டு லொகேஷனும் அந்தத் தம்பிக்கு ஷேர் பண்ணிருக்கேன். இந்நேரம் கிளம்பியிருப்பாங்க. கொஞ்சம் வெய்ட் பண்ணுடா.”


சந்தனமாரி மாரியாத்தா அவதாரம் எடுத்து, வேப்பிலையை ஏந்த ஆயத்தமாகவும், அக்னிஸ்வரூபனின் கார் அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.


கார் ஹார்ன் சப்தத்தில் இவள் அழைப்பில் இருந்த அலைப்பேசியுடன் மாடி தாழ்வாரத்தில் மரக்கிளைகள் மறைக்கும் பகுதியிலிருந்து குனிந்து பார்க்க, அக்னி ஓட்டுநர் இருக்கையிலிருந்து சற்றே தலை சாய்த்து, விழியுயர்த்தி பார்த்தான். பார்த்தவன் ஒரு கணம் இறந்து மறுகணம் ஜனித்தான். கரும்பச்சை நிற காட்டன் புடவை! அன்று போல் உயர்த்தி பின்னலிட்ட ஜடை! காதில் என்னவோ பெரியதாக அணிந்திருக்கிறாள். கழுத்தில் ஒன்றுமில்லை. நிறுவன அடையாள அட்டையைக் கையில் சுற்றியிருந்தாள். தோளில் ஒய்யாரமாகத் தொங்கியபடி இவனை இளக்காரமாகப் பார்த்தது மடிக்கணினி வைக்கும் லெதர் பை!


“வந்துட்டாங்க. உனக்கு ஈவ்னிங் வந்து பாலபிஷேகம் பண்றேன்ம்மா.” அழைப்பைத் துண்டித்துவிட்டு கீழிறங்கியவள், கீழ் போர்ஷனில் வாசலில் நின்ற பெண்ணிடம் ஏதோ பேசிவிட்டு, அவளின் சிறு பெண்ணைக் கொஞ்சிவிட்டு வந்தாள். அருகே அன்று அவள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம்! இந்த சின்னப் பெண்ணை அழைக்கத் தான் அன்று நாட்டியாலயா வாசலில் நின்றிருந்தாள் என்பதை நினைவு கூர்ந்தான் அக்னி. 


அலைபாயும் மனதை அடக்கவியலாமல் பின்னங்கழுத்தைத் தேய்த்தபடி மறுபுறம் திரும்பிக்கொண்டான். இவளை வரவேற்கும் பொருட்டு காரிலிருந்து இறங்கியிருந்த பிரகதி, காரைச் சுற்றி வரும்முன் சந்தனாவின் கருத்தில் பதிந்தது அக்னி இவளைக் கண்டதும் முகம் திருப்பிக்கொண்ட காட்சிதான்.


“புடவைல என்ன மிடுக்கா இருக்கா பாரேன்…” என்று பின்னிருக்கையில் நிரஞ்சனாவுடன் அமர்ந்திருந்த அபிராமி சொல்ல,


நிரஞ்சனா சன்னக் குரலில், “அத்தை அவக்கிட்ட இந்த மாதிரி எதுவும் நேரடியா சொல்ல வேண்டாமே…” என, அதற்குள் தனக்காக பிரகதி திறந்து வைத்திருந்த பின்பக்கக் கதவருகே வந்திருந்தாள் சந்தனா.


எப்போதும் போல் தன்னை ஆராய்ச்சியாகப் பார்க்கும் பாட்டியைக் கண்டு இவளுக்குள்ளிருந்த குறும்புத்தனம் தலைதூக்கியது. “ஹாய் யங் லேடி!” என்று ஒற்றைக் கண் சிமிட்டியவாறு அவரை வேண்டுமென்றே இடித்துக்கொண்டு அமர,


திரும்பி நிரஞ்சனாவிடம் புகாரளிக்கும் பார்வைப் பார்த்தார் அவர். ‘கொழுப்பைப் பார்த்தியா? நானா ஆரம்பிக்கிறேன்?’


அந்த வளர்ந்த குழந்தையிடம் அமைதியாக இருக்கும்படி கண்மூடித் திறந்த நிரஞ்சனா, சந்தனாவிடம் சம்பிரதாயமாக பேசினாள். 


அவளுக்கு தெற்றுப் பல் மென்னகையுடன் பதிலளித்தாலும் பாட்டியைச் சீண்டுவதை விடவில்லை இவள். “இந்த சாரில செம கெத்தா இருக்கீங்க யங் லேடி. மார்வலெஸ்!” என்று குறுஞ்சிரிப்புடன் சொல்ல, காருக்குள் இருந்த அனைவருக்கும் சந்தனாவைக் குறித்து ஒரே கருத்துதான்.


‘பாட்டியின் பார்வையை வைத்தே அவரின் மனதைக் கணித்துவிட்டாள். பிரகதி சொன்னது சரிதான். புத்திசாலி பெண். இவளிடம் உஷாராக இருக்கவேண்டும்.’


அக்னி, ‘இவளிடம் சின்னப் பார்வையில் கூட தன் காதலைக் காட்டி கொடுத்து விடக்கூடாது.’ என்று சங்கல்பமே செய்துவிட்டான்.


சந்தனா நகைக்கடையில் முற்றிலும் தனித்திராமலும் அதேநேரம் அவர்களின் தேர்வுகளில் தன் தலையீடு இல்லாமலும் பார்த்துக்கொண்டாள்.


அக்னி அவள்புறம் திரும்பவில்லை என்றாலும், புலன்களனைத்தும் அவளிடமே மண்டியிட்டு கிடந்ததால் அவளின் ஒதுக்கம் புரிந்தது. நாத்தனார் அவதாரம் எடுப்பவளாக இருப்பாளோ என்று நினைத்ததற்கு மாறாக, அவள் யாருக்கு வந்த விருந்தோ என்று இருக்கிறாள். இவனுக்கு அதுவும் பிடிக்கவில்லை. இதுவும் பிடிக்கவில்லை.


எப்போதும் பிரகதிக்கு அனைத்தையும் தேர்ந்தெடுப்பது அக்னிதான் என்பதாலும், தங்கை வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு என்பதாலும், அக்னி தன் வேலைகள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு வந்திருந்தான். சந்தனாவும் அதேபோல் இருக்க வேண்டுமென நினைப்பது அதிகப்படி தானென்றாலும், தன் குடும்பத்துடன் அவளும் ஒன்றியிருக்க வேண்டுமென ஆசைக்கொண்டான் அவன்.


இவன் ஒரு நகையைத் தேர்ந்தெடுக்க, நிரஞ்சனா அதை சந்தனாவிடம் காட்டி, “இது நல்லாயிருக்கா சனா?” என்று கேட்க,


அவள், “ஹான் செமயா இருக்குது ஆன்ட்டி.” என்று இளித்து வைக்க,


பிரகதி, “இது ஓகேவாம். பாருங்க!” என்று அழைப்பில் இருந்த அவினாஷைப் படுத்தியெடுக்க,


அக்னி, அக்னி ஸ்வரூபமாக மாறும் நிலையை எட்டியிருந்தான். இடையே சந்தனாவிற்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வர, அவள் நகர்ந்த வேளையில், அவினாஷுடன் பேசிக்கொண்டிருந்த பிரகதியின் கவனத்தைக் கவராமல், வேறுபுறமிருந்த ‘ஷார்ட் செயின்’ பிரிவினருகே நகர்ந்து வந்து அம்மா, பாட்டியிடம் எரிச்சலுறக் கேட்டான். “என்னம்மா இது? அவளுக்கு நம்மளோட வர்றதுல இஷ்டமில்லையோ என்னவோ! நான் ஒண்ணு செலக்ட் பண்ண, நீ அதை அவக்கிட்ட கேட்டு… கடுப்பாகுது.”


“நாம எல்லாரும் அவளுக்கு புதுசுதானே? அதான் தயங்கிட்டிருக்கா. நீ ஏன் இந்த சின்ன விஷயத்துக்கு டென்ஷன் ஆகற அக்னி?” தன் மகன் அத்தனைச் சீக்கிரம் உணர்ச்சிவசப்படுபவன் இல்லையே என்ற சந்தேகம் நிரஞ்சனாவுக்கு.


அது புரிந்து அக்னியும் தன்னிலை உணர்ந்தான். “நத்திங்ம்மா.”


“சின்னக் கழுதைதானே… விட்டுத்தள்ளுடா!” என்ற அபிராமி, “அப்புறம் அக்னி… இவ்ளோ தூரம் வந்த பொண்ணை வெறுங்கையோட அனுப்ப வேண்டாம். அவளுக்கும் சின்னதா ஏதாவது ஒரு நகை வாங்கி கொடு!” என்றார்.


பரவசப் புன்னகையுடன் சொன்னாள் நிரஞ்சனா. “நானும் நினைச்சேன். உங்களுக்கு பிடிக்குமோ என்னவோன்னு தான் சொல்லலை…” 


“நான் என்ன சொல்லிட போறேன்? வாங்கிக் கொடு.” என்றுவிட்டு திரும்பும்முன் ஒரு சின்ன சங்கிலியை எடுத்திருந்தான் பேரன்.


முதல்முறை பார்த்த போதும் சரி, தங்கள் வீட்டிற்கு வந்தபோதும் சரி சந்தனா கழுத்தில் எந்த நகையும் அணிந்திருக்கவில்லை. இன்றும் அவள் மாடியில் இருந்து இறங்கும் பொழுதே பார்த்துவிட்டான் கழுத்தில் ஒன்றுமில்லை. உண்மையில் அந்த சந்தனநிற வெற்றுக் கழுத்தை பார்த்ததும் இவனுக்கு மூச்சடைத்துக் கொண்டு வந்தது. ‘என்னென்னவோ தோணுதுடா சாமி.’ என்றுதான் அவளைப் பார்க்காமல் திரும்பியிருந்தான்.


இப்போது, ‘இவள் ஏன் கழுத்தில் எதையும் அணிவதில்லை?’ என்று தோன்றவே அதனைத் தேர்ந்தெடுத்திருந்தான். குங்குமச்சிமிழ் போன்ற அமைப்புடைய மிகச் சிறிய பென்டண்ட் இணைந்த சங்கிலி அது. குங்குமச்சிமிழின் மேற்புற குமிழியில் ரூபிக் கல் பதிக்கப்பட்டு, சுற்றிலும் பொடிப்பொடியாக வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. 


“அழகாயிருக்குதுடா.” என்ற நிரஞ்சனா, மிக நுணுக்கமான வேலைப்பாடுடைய அந்த நகையைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்க, அபிராமி பேரனைச் சந்தேகமாகப் பார்த்தார்.


பின், ‘ச்ச! இருக்காது இருக்காது. கைக்கு வந்த டிசைனை எடுத்திருப்பான். வந்ததிலிருந்து இவன் அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லையே… தன் பேரனுக்கு அந்த ஸ்ரீரங்க நாச்சியார் போன்ற பெண்தான் வருவாள்.’ என்றெண்ணியவர் சந்தனாவின் வரவில் திரும்பினார். 


வரிசைக் கட்டி நிற்கும் வேலைகளைச் சிந்தித்தவாறு தீவிர முகபாவத்துடன் வந்தவள், பாட்டியைக் கண்டதும் ஒற்றைக் கண் சிமிட்டி சிரிக்க, அவளின் பூ முகம் அந்த பூதேவியை நினைவுபடுத்தியதில் வெடுக்கென முகம் திருப்பிக்கொண்டார். அதில் அவள் புன்னகை மேலும் விரிந்தது. ‘யூ க்யூட்டி ப்பை…’


பில் போட்டு வந்ததும் அவளுக்காக வாங்கிய நகையை நிரஞ்சனா கொடுக்க, திகைத்தவள், “அய்யோ ஆன்ட்டி… என்னதிது சும்மா கூட வந்ததுக்குப் போய்… ப்ளீஸ் இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் வேணாமே…” என்று வேகமாக மறுத்தாள்.


அபிராமி, “ஏன் நாங்கள்லாம் தந்தா வாங்கிக்க மாட்டியா? ஒருவேளை தங்க நகைப் போடுற பழக்கமில்லையோ?” என்றார் அவளின் வெற்றுக் கழுத்தை ஆராய்ந்தபடி!


“அது அப்டியில்லை பாட்டி… இதுவே பழகிடுச்சு.” அவளின் ‘யங் லேடி’ மறைந்ததில் அவளின் சங்கடத்தை உணர்ந்தாலும் வற்புறுத்தி அவளைத் தங்களோடு இணைத்துக் கொள்ளவே நினைத்தார்கள்.


“ஃபார்மாலிட்டிக்காக கொடுக்கலை‌ சனா. நீயும் எங்க வீட்டுப் பொண்ணுதான்… அதான் உனக்கும் வாங்கினோம்.” -நிரஞ்சனா.


“இருந்தாலும் ஆன்ட்டி…”


“ப்ளீஸ் என்னோட பிரசன்டேஷனா இருக்கட்டுமே… சொல்லுங்க அஷ்ஷூ.” என்ற பிரகதி இடக்கையின் புறங்கையைத் திருப்பி காட்ட, அங்கே தெரிந்த அவினாஷ், “இவ்ளோ சொல்றாங்களே… வாங்கிக்கோ ப்ரோ.” என்றதும்,


மேலும் மறுத்தால் நாகரீகமில்லை என்று, சிரித்தபடி வாங்கினாலும் அவளுக்கு இதில் கொஞ்சமும் விருப்பமில்லை என்று அனைவருக்குமே புரிந்தது. 


பின்னர் வெள்ளி சாமான்கள் வாங்கவேண்டும் என்று அவர்கள் வேறு பிரிவுக்கு போக, அக்னிக்கு நிறுவன வேலைகள் இருப்பதால், பெண்களை அழைத்துக்கொள்ள ஓட்டுநரை அனுப்புவதாக சொன்னான். “சீக்கிரம் சாப்பிடும்மா.”


“இஃப் யூ டோண்ட் மைண்ட்… நானும் கிளம்பவா ஆன்ட்டி? மார்னிங் மட்டும்தான் லீவ் சொல்லிருந்தேன்.” -சந்தனா.


“அச்சோ! உன் வேலையும் கெடுத்துட்டேனா? அக்னி, சனாவை அவ கம்பெனில டிராப் பண்ணிடேன்…” எனவும், அவள் மறுக்கும்முன் தலையசைத்துவிட்டு நகர்ந்தான். அனைவரிடமும் இன்முகத்துடன் விடைபெற்றுக் கொண்டாள் சந்தனா.


அக்னி காரை எடுத்துவிட்டு அவள் வந்ததும் உள்ளிருந்தபடியே முன்பக்க கதவைத் திறந்துவிட, சங்கோஜத்துடன், “தாங்க்ஸ்.” என்றபடி ஏறியமர்ந்து கொண்டாள்.


‘எங்கே போகவேண்டும்?’ என்று அவன் கேட்க இடங்கொடாமல், அவளே நிறுவனப் பெயரைச் சொல்லி வழி சொல்ல, அவனும் அவள் அதற்காகவாவது தன்னிடம் பேசுகிறாள் என்ற காரணத்தால் ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டுக்கொண்டான்.


சிறிதுதூரம் சென்றதும் காரை ஓரமாக நிறுத்தி, ஜன்னலை இறக்கிவிட, சாலையின் மறுபுறமிருந்த உணவகத்தின் ஊழியர் ஒருவன் ஓடிவந்து அக்னியிடம் ஒரு உணவுப் பெட்டியைத் தந்துவிட்டு போனான். 


நன்றி சொல்லி வாங்கிக்கொண்டவன், அதைச் சந்தனாவிடம் நீட்டி சொன்னான். “சாப்பிடுங்க. ஆஃபீஸ் போயிட்டா சாப்பிட டைமிருக்குமோ என்னவோ!”


தயங்கியபடி வாங்கிக்கொண்டாள். “தாங்க்ஸ். உங்களுக்கு?”


“டிரைவ் பண்ணிக்கிட்டே எப்டி? நான் கம்பெனி போய் பார்த்துக்கறேன். நீங்க சாப்பிடுங்க.”


“ம்ம்!”


“உங்களுக்கு டைமாகிடுச்சு போல… இல்லைன்னா ரெஸ்டாரண்ட் போயே சாப்பிட்டிருக்கலாம்.”


வந்ததிலிருந்து தன் முகம் கூட பார்க்காதிருந்தவன் தன்னை எத்தனை தூரம் கவனித்திருக்கிறான் என்று ஆச்சரியமாக இருந்தது இவளுக்கு. உண்மையில் சந்தனா காலையில் சாப்பிடாததில் அசந்திருந்தாள் என்றால், தற்சமயம் காரும் அதில் ஏசியும் அடைத்து வைத்த ஜன்னலுமென்று வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வந்ததில் மேலும் சோர்ந்துதான் இருந்தாள். அத்துடன் நகைக்கடையில் இருக்கும்போதே, காத்திருக்கும் வேலைகளை நினைத்து அடிக்கடி யாருமறியாமல் புறங்கையைத் திருப்பி மணி பார்த்துக் கொண்டிருக்க, அத்தனையும் கவனித்ததோடல்லாமல், எந்தவித மேல்பூச்சுமின்றி உணவையும் வாங்கித் தந்ததில் அவன் மேல் நன்மதிப்பு தோன்றியது.


ஸ்பூனால் உணவினைக் கொறித்தபடி, “ஆமாங்க. அம்மா முன்னாடியே சொல்லிருந்தா நேத்து கொஞ்சம் வேலை முடிச்சு இன்னிக்கு ஃபுல் டே லீவ் சொல்லிருக்கலாம். அதான் என்னால இதுக்கு மேல பிரகதி கூட இருக்க முடியலை. ஸாரி…” என, 


“அட, வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் தான் வாங்க வேண்டியிருக்குது. அதெல்லாம் அம்மா பார்த்துப்பாங்க. இவ்ளோ நேரம் வேலையை விட்டுட்டு வந்ததுக்கு நாங்கதான் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லணும்.”


“அச்சோ! இதுல எனக்கு எந்த சிரமுமில்லைங்க.” என்றவள் சாப்பிட்டு முடித்து டப்பாவை மூடி வைத்துவிட்டு, அக்னி தந்த தண்ணீர் போத்தலை வாங்கிக்கொண்டாள்.


அவளின் நிறுவனக் கட்டிடத்தின் முன் காரை நிறுத்த, இறங்கிக் கொண்டவள் சொன்னாள். “வர்றேன்ங்க. தாங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்.”


அவளின் ‘ங்க’ பிடிக்காமல், “அக்னிஸ்வரூப்.” என்று சொன்னபோது கண்களில் அவனையுமறியாமல் காதலின் சிறு பிசிறு வெளிப்பட்டது.


அவசரத்தில் இருந்த சந்தனா அதைக் கவனிக்காமல் அழகாய் சிரித்தாள். “ஹாஹா… தாங்க்ஸ் மிஸ்டர் அக்னிஸ்வரூப். பார்க்கலாம்.”  


போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இவள் வளாகத்தினுள் நுழைய, உள்ளிருந்து வெளிப்பட்ட நிறுவன சீருடை அணிந்த ஒரு சிப்பந்தியிடம் பேசியபடியே உள்ளே போனாள்.


பாட்டியிடம் சேட்டைக்காரியாகவும், அப்பா, அம்மா, பிரகதியிடம் குழைவில்லாமல் சராசரி தோழமையுடனும் பழகுபவள், தன்னிடம் ஒரு மெல்லிய புன்னகையுடன் மரியாதைக் கோட்டில் நின்று பேசுகிறாள். இதோ இப்போது நிறுவன சிப்பந்தியிடம் பேசும்போது அவளின் ஆளுமைத்திறன் வெளிப்படுகிறது.


அவளை நினைத்து ஏக்கப் பெருமூச்சை வெளிப்படுத்திய அக்னிஸ்வரூபனுக்கு, இந்த பல்முகம் கொண்ட சந்தனாவின் மனதைக் கவர்ந்த அந்த ‘அருணைப்’ பார்க்க வேண்டும் போல் இருந்தது.


இசைக்கும்...

Comments

  1. அருண், சஞ்சய் எல்லாரும் ஒரே ஆள்தான். அது இந்த அக்னி தான். அப்டிதான🧐

    🙃😇

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25