கருவறை கீதம் -13

 


அத்தியாயம் 13


வருடம் 2011


"என்னம்மா பண்ணுது? நானும் பக்கத்துல இல்லாதப்போ எப்டிம்மா?” 


“பயப்படறதுக்கு ஒண்ணுமில்லை அனு. பிரஷர்தான் ஜாஸ்தி இருக்குதுன்னு சொன்னார் டாக்டர்.”


திண்டுக்கல்லில் இருக்கும் அனுவின் அம்மா லட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, வெளியே கடைவீதிக்கு போன இடத்தில் தலைசுற்றி விழுந்திருந்தார். நல்லவேளையாக அண்டை வீட்டுப் பெண்ணுடன் சென்றிருந்ததால் அவர் மருத்துவமனை அழைத்துச் சென்று உதவியிருந்தார்.


“தலை சுத்தி விழறளவுக்கு பிரஷர் கூடிப் போயிருக்குதா? உடம்பைப் பார்த்துக்கோம்மா. இந்த வீக் எண்ட் நானும் அவரும் வர்றோம்.”


“சரி, ஆனா அர்ஜூனை மட்டும் கூட்டிட்டு வா அனு. அந்த பையன் எல்லாம் வேணாம். அப்புறம் ‘அர்ஜூனை மட்டும் கவனிக்கற!, அவனை ஏன்னு கேட்கல’ன்னு என் கூட மல்லுக்கு நிற்ப!”


அத்தனை நேரம் அன்னையின் உடல்நிலைக் குறித்தும், தான் எதற்கும் உதவாமல் இங்கே கிடக்கிறோம் என்றும் கவலையில் உழன்றவள் அவர் சஞ்சய்யைப் பேசியதில் மகிஷாசுரமர்த்தினி ஆகிவிட்டாள். “அதென்ன அந்த பையன்? எந்த பையன்? என் கரும்மா அவன்! என் பிள்ளை! எனக்கு பிள்ளைன்னா உனக்கு பேரன். நீ அர்ஜூனை மாதிரி சஞ்சுவையும் நடத்தினா நான் ஏன்மா உன் கூட மல்லுக்கு நிற்கப் போறேன்?”


இதற்காக தானே அனைவரிடமும் போராடி கொண்டிருக்கிறாள்! ஏன்‌ யாருக்கும் இவளின் தாய்மை உணர்வு புரியவில்லை? புரியாவிடினும் கூட இவளின் உணர்வுக்காவது மதிப்பளிக்கக் கூடாதா? அவளின் கருவறையில் அவனுக்கு இடம் தரவில்லை என்றாலும், காலம் முழுவதும் அவளின் கதகதப்பில் அவனை வைத்துக்கொள்ளவே விரும்புகிறாள். என் மகன் என்று அவளின் உள்ளன்பில் நிறைந்திருப்பவனை அவள் யாரிடமும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.


“எனக்கு அவ்ளோ பெரிய மனசு இல்லை அனு. உன் வயித்துல பிறந்த அர்ஜூன்தான் என் பேரன்!”


“வந்தா சஞ்சுவைக் கூட்டிட்டு தான் வருவேன். இல்லைன்னா நீ எப்டி போனாலும் எனக்கு கவலை இல்லை.” என்றவள் பட்டென அழைப்பைத் துண்டித்தாள்.


அனுவிற்கு சஞ்சய்யை மாமியாரின் பொறுப்பில் விட்டு செல்ல மனதில்லை என்பதே உண்மை! முன்பெல்லாம் காலையில் வேலைக்கு சென்ற பின்னும் கூட அவன் நினைவாகவே இருக்கும். இப்போது அவன் பள்ளிக்கு செல்வதால் அத்துணைக் கலக்கம் தோன்றுவதில்லை.


ஆனாலும் ஏனோ சில தினங்களாக மனம் ஒருநிலையில் இல்லாமல் தவிக்கிறது. முன்பு ஒருமுறை இதுபோல் மனம் அலைகழிந்த போது சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு மகனுடனே ஐக்கியமாகியிருந்தாள். 


சரியாக சொல்ல வேண்டுமென்றால் அது நிர்மலாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்த சமயம்! அர்ஜூனுக்கு நான்கே மாதங்கள் ஆகியிருந்தது. அனுவின் உடல்நிலைக் கருதி அவளைத் தவிர்த்து, வீட்டில் பாஸ்கரன் உட்பட அனைவரும் புதுவரவைக் காண சென்னை செல்வதாக ஏற்பாடு! இரு குழந்தைகளை அவளால் தனியாளாகப் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால் சஞ்சயைத் தங்களுடன் அழைத்துச் செல்வதாகச் சொன்னார் கலியபெருமாள்.


அவளின் உள்ளுணர்வு எச்சரித்ததாலோ என்னவோ அவன் பேச்சு துணைக்காகவாவது தன்னுடன் இருக்கட்டும் என்றுவிட்டாள்.


“சரி!” என அமர்த்தலாக சொன்னவர், அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.


அதேபோன்ற உள்ளுணர்வு இப்போதும் சில காலமாக தோன்றி அவளை வதைக்கிறது. வீட்டில் இருக்கும் நேரங்களிலெல்லாம் அவள் ஒட்டுண்ணியாக சஞ்சுவுடனேயே இருக்க, “தான் வயித்துல பெத்த புள்ளைய கூட ஒழுங்கா கவனிக்கலை! ஆனா எவளோ ஒருத்தி பெத்ததை சதா கொஞ்சிக்கிட்டே கிடக்கறா! இந்த கூத்து எங்கேயாவது நடக்குமா?” என்று காமாட்சி குத்த,


“அந்த அறிவெல்லாம் இருந்திருந்தா சாக்கடையில இருந்து பிள்ளையைத் தூக்கிட்டு வந்திருப்பாளா?” என்று இகழ்ந்தார் மங்கை.


கலியபெருமாள் அவருக்கே உரிய அழுத்தத்துடனும் வன்மத்துடனும் மௌனப் புன்னகையுடனும் வேடிக்கைப் பார்க்க, 


அறைக்குள் வந்ததும் பாஸ்கரன் சொன்னான். “நீதான் அவனுக்கு அம்மா. நான்தான் அப்பா! இது யார் என்ன சொன்னாலும், செஞ்சாலும் மாறப் போறதில்லை. அப்புறம் எதுக்கு இத்தனை வெறித்தனமான அன்பு? பீ பிஹேவ் நார்மல் அனு! லெட் ஹிம் பீ நார்மல் ட்டூ!”


யார் சொல்வதும் அவள் தலைக்குள் ஏறவில்லை. யாருக்கும் பரிதவித்து கிடக்கும் அவள் மனம் புரியவுமில்லை. அதனால்தான் பெற்ற தாயிடம் கூட சஞ்சுவின் பொருட்டு எடுத்தெறிந்து பேசுகிறாள்.


அது கருவறை சொந்தத்தின் துடிப்பாக அல்லாமல் இருக்கலாம். ஆனால் அதைவிட இதய அறைகளின் வேகத் துடிப்பிற்கு ஆற்றல் அதிகமல்லவா? அவ்வாற்றல் அனு, சஞ்சுவுக்கிடையில் அசாத்தியமாக இருந்தது. அவள் அவன் மேல் கொண்டுள்ள பிணைப்பின் காரணமாக, தன் சேய்க்கு நேரப் போகும் கோரமும் அவன் கை நழுவி போகும் நேரமும் அனுவிற்கு முன்பே உள்ளுணர்வின் மூலம் உணர்த்தப்பட்டுவிட்டது.


உணர்ந்ததை எண்ணி திண்டாடுகிறது அவள் மனம். என்ன செய்தேனும் சஞ்சுவைத் தன்னுடனே வைத்துக்கொள்ள நினைக்கின்றாள். அவள் என்ன முயன்றாலும் எழுதப்பட்ட தீர்ப்புகள் திருத்தப்பட மாட்டாது என்பது அந்த நேசமிகு தாய்க்கு புரியவில்லை.

 


வருடம் 2034


டரிருள் அப்பிக் கிடந்த வானத்தை ஜன்னலின் வழி வெறித்துக் கொண்டிருந்தாள் அனு. 


புரண்டு படுத்த பாஸ்கரன் அருகே மனையாள் இல்லாததை உணர்ந்து துயில் கலைந்து எழுந்தான். இடதுப்புற ஜன்னலோரம் அநாதரவான குழந்தைப் போல் அவள் நிற்பது நெஞ்சைப் பிசைந்தது. 


கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இந்த இருபது வருடங்களில் அனுவின் கண்ணீர் நனைக்காத இரவுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். காதல் கணவனாக அவளின் ஈர இரவுகளை ஆறுதல்களாலும் அணைப்புகளாலும் உலர்த்துவதே பாஸ்கரனின் பணியென்றாகிவிட்டது. அப்பணி செய்வதில் ஒருநாளும் அவன் சலித்து கொண்டதில்லை.


நேரம் பார்த்தான். இரண்டு நாற்பந்தைந்து. 


ஏசியை அணைத்துவிட்டு, அவள் பின்னே போய் நின்றான். “அனு, ஏசி ஓடிட்டு இருக்கும்போது ஏன் ஜன்னலைத் திறந்து வச்சிருக்கே?”


“ஓ! ஏசி ஓடுதுல்ல? மறந்துட்டேன் பாஸ்கர்.”


“சரி தூங்கலாம், வா.”


இருளில் தொலைதூரத்தில் தொலைந்திருந்தவளிடம் சற்று நேரம் மௌனம்.


விழி திருப்பாமல் சொன்னாள். “இதுமாதிரி ஒரு இருட்டுல தானே என் குழந்தை ரோட்டுல அலைஞ்சிருப்பான்? நானும் ஒவ்வொரு நாள் இருட்டுலேயும் அவன் வருவானான்னு பார்த்துட்டே இருக்கேன். இப்போ வரை அவன் வரவே இல்லையே பாஸ்கர்?”


“வருவாண்டா. அர்ஜூன் சீக்கிரமே கண்டுபிடிச்சிடுவேன்னு சொன்னான்தானே?”


“என்… எனக்கு ரொம்ப பயமாயிருக்குது பாஸ்கர்… ஒ ஒருவேளை…” காற்றுக் குரலில் தடுமாறினாள்.


“நம்பிக்கையோட இருக்கணும் அனு. ஏற்கனவே உன்கிட்ட சொல்லிருக்கேன். சஞ்சு காணாமப் போகும்போது விவரம் தெரியாத குழந்தையா இருந்தாலும், நினைவுகள் எதையும் மறந்து போறளவுக்கு சின்னக் குழந்தை இல்லை. சோ, நிச்சயமா எங்கேயோ நம்ம எல்லாரோட ஞாபகத்தோட தான் இருப்பான். ஞாபகம் இருக்கற பட்சத்துல ஒருநாள் கண்டிப்பா வருவான். ஐ ஸ்ட்ராங்லி பிலீவ் திஸ்!”


“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்குதுங்க. அதனால தானோ என்னவோ இப்போல்லாம் சில நேரம் மனசு ரொம்ப தவிக்குது. அதுவும் அவிக்கு பொண்ணு பார்த்த பிறகு சனாவை நினைக்கும்போது…”


“ரிலாக்ஸ் அனும்மா… இப்போ எதுவும் பேச வேணாம். வந்து தூங்கு!” என்று அவளின் கைப் பிடித்து படுக்க வைத்தான்.


பாஸ்கரனின் கையணைப்பிற்குள் படுத்துக்கொண்டாள். “எல்லாரும் சொல்ற மாதிரி நான் சனா மனசைக் கெடுத்துட்டேனோன்னு கில்ட்டியா இருக்குது பாஸ்கர். அவளுக்கும் மாப்பிள்ளை பார்க்கலாம்ன்னு நினைக்கறேன். காலைல நிர்மலா கிட்ட பேசப் போறேன்.”


“போதும் அனு. நல்லா தூங்கணும்னு டாக்டர் சொல்லிருக்காரில்ல?”


பாஸ்கரனின் வார்த்தைகள் எதுவும் அவளுக்குள் இறங்கவில்லை. அவளுக்கென சித்தரித்து வைத்திருக்கும் ஓர் சாப உலகத்திற்குள் அவள் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். “குழந்தை பிறந்தா வாழ்நாள் பூரா அதுக்கு சேவை செய்யணும்ன்னுதான், முதல்ல உங்கக்கிட்ட குழந்தைப் பெத்துக்கறதா இல்லைன்னு சொன்னேன். அதனாலதான் இந்தக் கடவுள் என் குழந்தைக்கு என் சேவை தேவையில்லைன்னு நினைச்சுட்டாரோ… ஓஓ…” என்று அழுகையில் கதறும் மனைவியைக் கண்டு இவனுக்குள் இரக்கம் சுரந்தது.


தாய்மையோடு அணைத்துக் கொண்டான். “அனும்மா! அனு, இங்கே பாரு! பழைய தவறெல்லாம் இத்தனை தூரம் தூக்கி சுமக்கணும்ன்னு அவசியமில்லை. அதைத் தப்புன்னும் சொல்லிட முடியாது. இப்பவும் நீ அன்னிக்கு அப்டி சொன்னதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அந்த வயசுல உன் வாழ்க்கையை உன் வழில நேர்மையா வாழத் தான் நீ ஆசைப்பட்ட! அதையே நினைச்சு உன்னைக் கரைச்சுக்காதேடீ!”


“என்னால முடியலீங்க!”


“நான் உன்கிட்ட கேட்கறது ஒண்ணே ஒண்ணுதான். தாளமாட்டாம உன் மனசுல சுமக்கற சுமையை இறக்கி வச்சிடு அனு. நடக்கறதுதான் நடக்கும். காலம் பூரா நீ இப்டி அழுது புலம்பறது அர்ஜூனுக்கு தெரிஞ்சா என்னாகும்ன்னு யோசிச்சியா? அம்மா ஒருதலைப்பட்சமா நடந்துக்கறாங்கன்னு நினைக்க மாட்டானா?”


“பாஸ்கர்…” விசும்பினாள்.


“ஈஸி! ஈஸி! தூங்கு.” என முதுகில் தட்டிக் கொடுத்தான்.


அவளின் ஓலத்தை நிறுத்தி, அழுகையை மட்டுப்படுத்தி விசும்பலாக்க மட்டுமே முடிந்தது அந்த காதல் கணவனால்! அந்த விசும்பலையும் நிறுத்த தன்‌ முதலாவது உயிர்வித்தால், அவனொருவனால் மட்டுமே முடியும் என்று புரிந்தது. அவன் வந்து தன் மனைவியின் விசும்பலை நிறுத்தி அவளின் சிரிப்பை மீட்டுக் கொடுத்துவிட மாட்டானா என்று ஏங்கிய பாஸ்கரனின் கண்ணோரம் கசிந்தது.


                  **********


அதேநேரம் அலைபேசியில் இருந்த அனுவின் புகைப்படத்தைக் கண்டு கண்கள் கசிந்து கொண்டிருந்தான் அக்னிஸ்வரூபன். அனு எப்படி தன்‌ மகனை நினைத்து மருகி கிடக்கின்றாளோ… அதேபோலவே இங்கே இவனும் அவளை நினைத்து மருகி நிற்கின்றான்.


“அம்மா..!” அடிவயிற்றை எக்கிப் பிடித்த ஏக்கத்துடன் அழைத்தான் அவன், சஞ்சய் பாஸ்கர்!


அவன் நினைவடுக்குகளில் சாகாவரம் பெற்றிருக்கும் இரண்டு முகங்கள் அவனின் அம்மா அனு மற்றும் அவனின் தாத்தா கலியபெருமாளுடையது! பாஸ்கரனின் முகம் கூட இத்தனை வருடங்களில் மறந்துதான் போனது.


அம்மா! இவன்மேல் அடர்ந்த அன்பினைக் கொண்டிருந்த அம்மா அவர்! அந்த அடர்ந்த அன்பில் அவர் அர்ஜூனை விட தன்னைத் தான் தாங்கிப் பிடித்தார் என்று அப்போதே இவனுக்கு புரிந்துதான் இருந்தது.


தனக்கு உயிர் கொடுத்த பெற்றோரின் ஞாபகங்கள் அவ்வப்போது எழவே செய்யும். அதிலும் அனு, அனுதினமும் இவன் மனதில் உன்னதமான இடத்தில் வைத்து பூஜிக்கும் ஓர் விக்கிரகம்! அந்த விக்கிரகத்திற்கு உற்சவம் செய்யும் வாய்ப்பு இப்பிறவியில் தனக்கில்லை; இனியொரு வாய்ப்பிற்காக பிறவியெடுக்க வேண்டுமாயின் ஆனந்தமாக அவள் வயிற்றில் பிறக்கவேண்டுமென்பதே இவனின் விருப்பம்!


மறக்க நினைக்கும் முகம் தாத்தாவினது! சிறு வயதில் தாத்தா தனக்கிழைத்தக் கொடுமைகளை மறக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே, இப்போது வரை ஞாபக அடுக்குகளில் இருக்கும் அவற்றைப் புதுப்பித்துக் கொண்டே தான் இருக்கிறான். அதனால் அவரின் முகமும் மறந்து போகவில்லை.


இருந்தும் பிற்பாடு பள்ளி, கல்லூரி, வேலை, நண்பர்கள், உறவுகள் என வாழ்க்கை சமநிலையில் செல்ல, மற்றதை நினைத்து ஒடுங்கி போகாது, மகிழ்வுடன் வாழவும் பழகியிருந்தான்.


என்று பிரகதிக்காக என அவினாஷ் குடும்பத்தைப் பற்றி அகழ்வாராய்ச்சி செய்தானோ, அன்றிலிருந்து அவனின் இரவுகள் இங்ஙனம்தான் செல்கிறது. அடிவயிற்றிலிருந்து கிளம்பும் கேவலை அழுத்தி அழுத்தி நிறுத்தி வைக்கின்றான். முடியவில்லை. சந்தனாவின் மீதான காதலைப் பூட்டி வைக்க முடிந்தவனால், அனு மீதான சேய்ப் பாசத்தைப் பொத்தி வைக்க முடியுமென்று தோன்றவில்லை.


கண்ணில் நீர் கசிய அமர்ந்திருந்த சஞ்சயின் எண்ணங்களில் பழைய நினைவுகள். அலைப்பேசியில் அவினாஷ் வீட்டார் வந்தபோது எடுத்த புகைப்படங்களில் பார்வையைப் பதித்திருந்தான். அத்தனையிலும் அனுராதா.


அம்மாவிற்கு மிக நீண்ட தலைமுடி! அழகிய மஞ்சள் நிற முகம்! ஆனால் தற்போது அம்முகம் வயதின் காரணமாகவோ என்னவோ ஒளியிழந்து தெரிந்தது. அவரின் சின்ன முகத்திற்கு சற்றும் பொருந்தாமல் உடல் எடை கூடியிருந்தது. முன்பிருந்த கூந்தலில் பாதி கூட இப்போது இல்லை. 


“எப்டிம்மா இருக்கே? அர்ஜூனோட சந்தோஷமா இருக்கியாம்மா?” 


ஆக்ஸிஜன் போதாதவன் போல் தவணை முறையில் மூச்செடுத்துக் கொண்டு கேட்டான். “எப்பவாவது என்னை நினைச்சுப்பியாம்மா? நான் டெய்லி உன்னை நினைச்சுக்குவேன் தெரியுமா?”


பின்னாட்களில் இதுபோல் பழைய நினைவுகளில் உழலும்போது, தான் சாக்கடையிலிருந்து வரவில்லை. வாடகைத்தாயின் வயிற்றில் பிறந்திருக்கிறோம் என்று அவனாகவே ஊகித்துத் தெரிந்து கொண்டிருந்தான். அந்தக் கோபம் இன்னமும் அனுவின் மேல் இவனுக்கு இருக்கிறது. “ஏன்மா? ஏன்மா அர்ஜூன் மாதிரி என்னை நீ உன் வயித்துல பெத்துக்கல?” என்றவனின் உடல் குலுங்கியது.


“அதனால தானே தாத்தா என்னை அவ்ளோ கீழ்த்தரமா நடத்தினார்? இட் ஃபெல்ட் க்ளூமி வென் ஐ வாஸ் ஹிட்! இட் ஹர்ட் அ லாட்’ம்மா!”


“அன்னிக்கு என்னைத் தாத்தா கிட்ட விட்டுட்டு எங்கேம்மா போன நீ? நான் ரோட்ல தனியா நின்னேன்ம்மா… ரொம்ப… ரொம்ப பயமா இருந்ததும்மா… இப்பவும் எட்டு வயசு குழந்தையைப் பார்த்தா பழைய ஞாபகம் வந்து வலிக்க வைக்குதும்மா.” 


சுவாசம் சமநிலைப் பெறும் வரை தேம்பலினூடே சற்றுநேரம் மௌனித்தான்.


“தாத்தா என்னை வித்துடுவேன்னு சொல்லி மிரட்டுவார்ம்மா. என்னை என்னை… சாக்கடைக்குள்ளே இருந்து எடுத்தீங்களாம். அர்ஜூன் தான் ஆளப் பிறந்தவனாம். நான்… நான் யூஸ்லெஸ், ஃபிட் ஃபார் நத்திங், இம்பொட்டண்ட்ன்னு… தினம் தினம் அடிப்பார்ம்மா… நீ ஏன்மா டெய்லி என்னை அவர்க்கிட்டேயே விட்டுட்டு போன? சரகஸில பிறந்தது என் தப்பாம்மா? உன் கருவறைல வளர்ற பாக்கியம் எனக்கில்லாம போனது என் சாபமாம்மா? ஆம் ஐ அ இம்பொட்டண்ட்?” என்று கேட்டு தாத்தா தன்னுடலில் அடித்த இடத்தை நினைத்து இப்போதும் அருவருத்தான்.


“தினம் பாட்டியும் சித்திப் பாட்டியும் என்னைத் தூங்க வச்சிட்டு மார்கெட் போனப்புறம் என்னை எழுப்பிவிட்டு அடிச்சு, அதுல நான் கத்தற சத்தத்தைக் கேட்டு… இதெல்லாம் யார்க்கிட்டேயும் சொன்னா உங்கம்மா செத்துப் போயிடுவா’ன்னு பயமுறுத்தி… அப்போல்லாம் நான் தூங்கவே பயந்தேன்ம்மா…”


பல வாக்கியங்களை முழுமையாக்கவியலாமல் அதீதமாக உணர்ச்சி வசத்தில் சிக்கியிருந்தான். இருபத்தி இரண்டு வருடங்களாக புதைந்து கிடந்த உணர்வுகளெல்லாம், வெடித்தெழுந்து வார்த்தை வடிவம் பெறவியலாமல் அல்லாடியது.


“அப்பா கூட தாத்தா முன்னாடி அர்ஜூனைத் தானேம்மா தூக்கிக் கொஞ்சுவார்? அப்போ தாத்தா என்னைப் பார்க்கறப் பார்வைல தன்னாலே எனக்கு, ‘என்னைச் சாக்கடைல இருந்துதான் எடுத்தாங்க போல’ன்னு தோணும். அதையும் பாட்டி கிட்ட எத்தனையோ முறை கேட்டிருக்கேனே… அதுக்கு சித்திப் பாட்டி, ‘ஆமாம்டா கண்ணா, சாக்கடைல தவறி விழுந்த உன்னைத் தூக்கி குளிப்பாட்டி, சந்தனம் பூசி வாசமா வச்சிக்க நினைக்கறா உங்கம்மா’ன்னு சொன்னது இன்னமும் என் காதிலே கேட்டுட்டு இருக்குதும்மா. நான் அசிங்கம்ன்னு ஒவ்வொரு நாளும் நினைச்சு அழுதிருக்கேன்ம்மா. நீயும் அந்த மாரியாத்தாவும் என் மேல காட்டின கருணையும் அன்பும் இல்லாம போயிருந்தா அப்பவே செத்திருப்பேன்மா.”


திரையில் தெரிந்த அனுவின் உருவத்தை ஓர் பக்தனைப் போல் வருடினான். “உன் வாசனையை நான் இன்னும் மறக்கலைம்மா. மிஸ் யூ ம்மா… மிஸ் யூ பேட்லி…” என்றெல்லாம் கதறியழுதவனை ஆற்றுப்படுத்த ஆளில்லாமல் போனது அன்றும் இன்றும்!


இன்னும் திருமணத்திற்கு இடையில் ஒரு மாதம்தான் இருக்கிறது. சென்னையில்தான் திருமணம். ஆக பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே இவர்கள் சென்னை போவதாக ஏற்பாடு. ப்ரீ ஷூட், மெஹந்தி, சங்கீத், வரவேற்பு, நிச்சயம் என்று பிரகதி ஏகப்பட்ட நிகழ்வுகளைத் திட்டமிட்டிருக்கிறாள்.


தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றுவது இந்த அண்ணனின் கடமையல்லவா? இவன் வேலைகளைக் காரணம் காட்டிவிட்டு கழன்று கொள்ளும் ரகமுமல்ல! பிரகதி ஒவ்வொன்றிற்கும் தன்னைத் தான் நாடுவாள் என்று தெரியும். ஆக, இவன்தான் தன் ஒற்றைத் தங்கையின் விழாக்களைச் சிறப்பிக்க வேண்டும். 


அப்படி அங்கே போய் தங்க வேண்டியிருக்கும் நாட்களை நினைத்துதான் தற்போது மலைத்து நிற்கின்றான். அத்தனை நாட்கள் அன்னையின் அண்மையில் அவரைக் கண்ணுற்று அவனால் யாரோவாக நடமாட முடியுமா? 


வேறு வழியுமில்லையே! நடப்பதை எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்? இவன் எண்ணங்கள் இப்படியாக தான் இருந்ததே தவிர, தற்போதைக்கு அனுவிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் எண்ணம் அறவே வரவில்லை. அதன் விளைவுகள் இரு சாரார் வீட்டில் உள்ள அனைவரையுமே பாதிக்கும். ஆக திருமணம் முடியும் வரையிலும் அம்மா, பாசம், வலி, வேதனை, காதல் என அனைத்தையும் தான் ஒருவனே அனுபவித்துவிடுவது என தீர்மானித்தவன் கண்களைத் தேய்த்துக்கொண்டான்.


நேரம் பின்னிரவு மூன்றைக் கடந்திருக்க, அலைபேசியை வைத்துவிட்டு படுத்துக்கொண்டான். 


மூடிய கண்களுக்குள் இளவயது அனு வந்து நின்றாள். தாத்தாவின் கொடுஞ்செயலில் பயந்திருந்த ஏழு வயது சஞ்சயின் பிஞ்சுக் கரங்களைப் பிடித்து சொன்னாள். “சஞ்சுக்குட்டி ஒரு சூப்பர் ஹீரோவாம். யாரைப் பார்த்தும் பயப்பட மாட்டானாம். யாருக்கும் தொந்தரவு தராத வெல்லக்கட்டியாம்! உம்ம்மா… வாழ்க்கைல வர்ற எல்லா கஷ்டத்தையும் சேலன்ஜஸையும் டிஷ்…யூம் டிஷ்யூம்ன்னு தனி ஆளா சமாளிப்பானாம். ஹாஹா… அம்மா ஆல்வேஸ் லவ்ஸ் தி ப்ரேவ் சஞ்சுக்குட்டி.” 


படுக்கையில் கிடந்த இவனின் தோள்கள் குலுங்கியது. தன் மேல் ஈரத்தை உணர்ந்தத் தலையணை அவனை உறங்க வைக்க பிரயத்தனப்பட்டது.


“தனி ஆளா சமாளிப்பேன்மா. லவ் யூ ட்டூ ம்மா…” என்று அரற்றியபடி அதிகாலையில் தூங்கிப் போனான்.


இசைக்கும்...

Comments

  1. அனுவின் பக்கம் இருந்து, ஒரு அம்மாவாகவும், அக்னியின் பக்கம் இருந்து, ஒரு மகளாகவும், எனக்கும் சில வரிகளை படிக்க தைரியம் இல்லாதது போன்ற உணர்வு😔
    அக்னியின் உணர்வுகளை முழுமையாக உணர்கிறேன்.😢

    ReplyDelete
  2. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭na mahadevi akka


    Enna akka ipdi ala vaikiringa

    ReplyDelete
    Replies
    1. ஹாய் மஹா, just 2,3 episodes... அப்புறம் ரொம்ப அழுத்தயிருக்காது. படிச்சிட்டு சொல்லுங்க 💞💞

      Delete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25