கருவறை கீதம் -14

 


அத்தியாயம் 14


வருடம் 2012


திகாலை மூன்றரை மணியளவில் அடித்த அலாரத்தில் அடித்து பிடித்து எழுந்தாள் நிரஞ்சனா. தன் நிறைமாத வயிற்றைப் பிடித்துக்கொண்டு மெதுவாகக் கட்டில் முகப்பில் சாய்ந்து மூச்சு வாங்கியவள் விழிகளைச் சுழற்றினாள். அந்த விடுதி அறையில் வேறு யாருமில்லை.


தன் ‘Nokia 1100’ அலைபேசியை எட்டி எடுத்து, பிரபஞ்சனுக்கு அழைத்தாள். அழைப்பு ஏற்கப்படவில்லை. பின்னும் இருமுறை அழைக்க மறுபுறம் மௌனம் சாதித்தது. மனம் படபடக்க, வயிற்றைப் பிடித்தவாறே எழுந்து சென்று முகம் கழுவி, தன்னைச் சுத்தம் செய்துகொண்டு வந்து மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள்.


நிரஞ்சனாவின் சொந்த ஊர் நாகர்கோவில். அவள் கணவன் பிரபஞ்சனின் சொந்த ஊர் திருச்சி. பிரபஞ்சனின் அக்கா வசுதாவை பெங்களூரில் மணம் முடித்திருக்கிறார்கள். அதனால் தந்தை மறைந்த பிறகு பிரபஞ்சனும் படித்து முடித்து அம்மா அபிராமியுடன் பெங்களூரிலேயே செட்டில் ஆகிவிட்டான்.


அவன் அக்கா வசுதாவின் கணவன் கண்ணனுக்கு வக்கீல் தொழில். கண்ணன் வழி தூரத்து சொந்தம்தான் நிரஞ்சனா. அம்மா இல்லை. அப்பாவிற்கு அரசாங்க உத்தியோகம். மூன்று பெண்களில் இரண்டாமவள் தான் நிரஞ்சனா. ஏற்கனவே அவளின் நற்குணங்கள் தெரிந்திருந்ததால், அம்மா அபிராமியிடம் சொல்லி அவருக்கும் நிரம்ப திருப்தி என்ற பின்னர் ஆசையாசையாக தம்பிக்கு அவளை மணம் முடித்து வைத்தாள் வசுதா. 


அவ்வப்போது ஏற்படும் மாமியார்- மருமகள் உரசல்கள் தவிர, பிரபஞ்சனும் நிரஞ்சனாவும் அபிராமியுடன் நிரம்ப மகிழ்ச்சியுடனேயே வாழ்ந்தார்கள். எல்லாம் சிறிதுகாலம் தான். ஒவ்வொரு வருடமும் தேய தேய, நிரஞ்சனாவின் நம்பிக்கையும் தேய்ந்துகொண்டே வந்தது.


ஐந்து வருடங்கள் ஆனப் பின்னும் அந்த தம்பதிக்கு குழந்தைப்பேறு கிட்டவில்லை. அபிராமியில் ஆரம்பித்து யார் யாரோ சொன்ன கோவில்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கினார்கள். 


நிரஞ்சனா சோர்ந்து அமரும் போதெல்லாம் பிரபஞ்சனை முந்திக்கொண்டு அபிராமி மருமகளைத் தாங்கிக் கொள்வார். “இப்போ என்ன அஞ்சு வருஷம்தானே ஆகுது? ரெண்டு பேரும் நல்ல ஆரோக்கியமா இருக்கீங்க. வேறென்ன வேணும்? அந்த நரசிம்மனுக்கு இப்போ மனசில்லை போல… ஆனா ஒருநாள் மனசு இரங்குவான்.”


“அத்தை… நான்… என்னால எப்பவுமே முடியலைன்னா…” 


“ச்சீ ச்சீ! முதல்ல அழறதை நிறுத்து. உன்னை மாதிரி நான் நம்பிக்கையை விட்டுடலை. அந்த நரசிம்மன் கணக்கு நமக்கு புரியுமா? ஒருநாள் சிங்கம் போல என் பேரன் வருவான் பாரு!”


அப்போதுதான் தனது ஆராய்ச்சி படிப்பை முடித்திருந்த வசுதா இரண்டாவது பெண் குழந்தையைப் பிரசவித்திருக்க, நிரஞ்சனாவின் ஏக்கம் அதிகமானது. அபிராமி தன் உடல் உபாதைகளுடன், பிரசவத்திற்கு பிறந்த வீடு வந்திருந்த மகளையும் பார்த்து, குழந்தையைக் கண்ணின் மணியாய்க் கொஞ்சிவிட்டு, தனியே போய் குமுறும் மருமகளையும் தேற்ற முடியாமல் திண்டாடிப் போனார்.


மேலும் ஒரு‌ வருடம் செல்ல, அனைத்து ஆறுதல்களையும் தாண்டி நிரஞ்சனா நடைப்பிணமாக மாறி, தீவிர மன அழுத்தத்தில் இருந்த சமயம், நிரஞ்சனா மேலும் கழிவிரக்கத்தில் கரையும் முன்னர், அபிராமி நம்பியிருந்த நரசிம்மர் மனமிறங்கியேவிட்டார்.


நிரஞ்னா நாற்பது நாட்களான சிசுவை அவள் வயிற்றில் சுமந்துகொண்டிருப்பதாக மருத்துவர் சொன்னதில், இத்தனை வருட ஆசைகளையும் ஏக்கங்களையும் அந்த ஒரே நாளில் கண்ணீரில் கழுவினாள்.


கண்டிப்பும் கவனமுமாக அபிராமி மருமகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார். நிரஞ்சனாவிற்கு எட்டு மாதங்கள் முடிந்திருந்த போது, அபிராமி சொந்தத்தில் ஒரு திருமணத்திற்காக திருச்சி போக வேண்டிருந்தது.


அவரைத் தனியே அவ்வளவு தூரம் அனுப்ப முடியாது என்று ஒற்றைக் காலில் நின்ற பிரபஞ்சன், தற்காலிக ஓட்டுநர் ஒருவரை அபிராமியை அழைத்துப் போய் வர அமர்த்தினான்.


“எதுக்குங்க ஆக்டிங் டிரைவர்? அத்தை கூட நாமளும் கல்யாணத்துக்கு போயிட்டு வரலாமே?” என்றாள் நிரஞ்சனா.


அபிராமி பிரபஞ்சனை முந்திக்கொண்டு சொன்னார். “நீ சும்மா இரு! ஒன்பது தொடங்கிடுச்சு. இனி ரொம்ப கவனமா இருக்கணும். எப்போ வேணாலும் வலி வரும். நானென்ன குமரியா என்னை எவனும் தூக்கிட்டு போயிடுவான்னு பயப்படறதுக்கு?”


“குமரியா இருந்தாதான் தூக்கணும்ன்னு இல்லை. அப்பா வீட்டு ரிலேட்டிவ்ஸ் கிட்ட பந்தா காட்டறதுக்காக கல்யாணப் பொண்ணுக்கு போட்டியா கழுத்துல, கைல’ன்னு போடறதுக்கு முப்பது சவரன் நகையைக் எடுத்துட்டு போறீங்களே… அதுக்காகவாவது உங்களைத் தூக்குவான்.”


“என் புருஷன் எனக்கு செஞ்சு போட்ட நகையை நான் போடறேன். உனக்கேன்’டா வயிறு எரியுது?”


“அத்தை, நீங்க ஊருக்கு போயிட்டாலும் நான் இங்கே தனியா தானே இருக்கணும்? இவர் காலைல போனா நைட் பத்து மணிக்குதான் வருவார். அதோட இவர் பார்த்து வச்சிருக்க டிரைவரை மட்டும் எப்டி நம்ப முடியும்?”


நிரஞ்சனா சொன்னதை மற்ற இருவரும் யோசித்தனர். வசுதா இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு மாமியாருடன் கூட்டுக்குடும்பத்தில் இருப்பதால் அங்கேயும் நிரஞ்சனாவை விடாமல், வயதான அப்பா மட்டும் இருக்கும் அவளின் பிறந்த வீட்டிற்கும் அனுப்ப மனதில்லாமல் மூவருமே திருமணத்திற்கு திருச்சி செல்வது என்று ஏற்பாடனாது.


திருச்சியில் உயர்தர நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்திருந்த பிரபஞ்சன், அம்மா மற்றும் மனைவி சகிதம் விசேடத்திற்கு சென்று வந்தான். திருமணம், வரவேற்புடன் ஸ்ரீ அரங்கநாதர் தரிசனமுமென இரண்டு நாட்கள் திவ்யமாய்க் கழிந்தன.


நேற்றிரவு விடுதி திரும்பியவர்கள், இரவு நேர பயணம் வேண்டாமென்று மறுநாள் காலை பெங்களூர் செல்ல முடிவெடுத்து, அங்கேயே இரவைக் கழிக்க நினைத்திருந்தனர்.


இரவு பிரபஞ்சன் நல்ல உறக்கத்தில் இருக்கும்போது, சரி வர தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்த நிரஞ்சனா கண்விழித்துப் பார்க்க, அபிராமி கடுமையான வயிற்று வலியில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.


பதறிப்போய் எழுந்தவள், “என்ன செய்யுது அத்தை?” என்று கேட்க,


அவர் அவளுக்கு பதில் சொல்லும் நிலைமையில் கூட இருக்கவில்லை. ஏற்கனவே மெனோபாஸ் பருவமென்று சிற்சில அறிகுறிகளை வைத்துக் கண்டறிந்திருந்த அபிராமி, செய்கையில் மருமகளுக்கு புரிய வைக்க முற்பட, அதற்குள் அவள் கணவனை எழுப்பியிருந்தாள்.


பிரபஞ்சனும் என்னவோ ஏதோவென பதறிப்போய், நிரஞ்சனாவிடம் பத்திரம் சொல்லிவிட்டு, அம்மாவைத் தூக்கிக்கொண்டு அந்த நள்ளிரவில் மருத்துவமனைத் தேடி ஓடினான்.


அந்த இருபத்துநான்கு மணி நேர மருத்துவமனைப் போய், உறக்கம் கெட்ட விழிகளுடன் மருத்துவரைச் சந்தித்துவிட்டு, அவரின் அறிவுரைகளைக் கேட்டுக்கொண்டு, மருந்தின் வீரியத்தில் வலி குறைந்து சற்று முகம் தெளிந்திருந்த அபிராமியை அழைத்துக்கொண்டு மீண்டும் விடுதி திரும்பிக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.


காரை ராயல் சாலை திருப்பத்திற்கு திருப்பியபடி சொன்னான். “இன்னொரு வாட்டி ஊருக்கு போகணும். உல்லாச பயணம் போகணும்ன்னு அடம்பிடிச்சீங்க… சும்மா இருக்க மாட்டேன்மா!”


“இப்டி கல்யாணத்துக்கு வந்தா தான் சொந்த ஊரை, சொந்த மக்களைப் பார்க்க முடியும்டா பிரபு. என்னதான் கன்னடத்துக்கும் காரா பாத்துக்கும் பழகிப் போனாலும், திருச்சியோட வெக்கைக் காத்தும் கல்லணையும் காரக் கொழுக்கட்டையும் தர்ற சுகமே தனிதான்.”


“ம்ம்… காரக் கொழுக்கட்டைக்கு ஆசைப்பட்டுதான் இப்டி வயித்த வலியை இழுத்து வச்சிருக்…” என்று சொல்லிக் கொண்டிருந்தவன் சடாரென பிரேக்கை அழுத்தி மிதித்திருந்தான்.


அபிராமி ஒரு குலுக்கலுடன் ‘ஆவ்’வென அலறியிருந்தார். “என்னாச்சுன்னு போய் பாருடா?”


வில்லிலிருந்து விடுபட்ட அம்பைப் போல் பாய்ந்து இறங்கியவன், காரின் குறுக்கே வந்து விழுந்தது என்னவென்று பார்க்க, ஒரு சிறுவன் சிராய்ப்புகளுடன் எழுந்து நிற்பது தெரிந்தது. பிரபஞ்சன் காரிலிருந்து இறங்கி நிற்பதற்கும், சிறுவனை நான்கைந்து திருநங்கைகள் துரத்தி வருவதற்கும் சரியாக இருந்தது.


பாஸ்கரனின் உயரத்திலும் அவனைப் போன்றே சரியான பருமனிலும் இருந்த பிரபஞ்சனை அந்த அரையிருளில் கண்ட சஞ்சய், வந்திருப்பது தன் அப்பா பாஸ்கரன் தான் என்று நினைத்து, “அப்பா!” என்றழைத்தபடி ஓடிப்போய் பிரபஞ்சனின் கால்களைக் கட்டிக் கொண்டான்.


அவனைத் துரத்தி வந்த திருநங்கைகள் அதிர்ச்சியாக, “அப்பாவாம்!”


“கிழம் ஏமாத்திடுச்சு!” என்று பலவாறு தங்களுக்குள் முணுமுணுப்பாக பேசிக்கொண்டு, கோபத்துடனும் ஏமாற்றத்துடனும் சத்தமின்றி அவ்விடம் விட்டு நகர,


“ஏய் நில்லு!” என்று மிரட்டல் குரலில் அழைத்து, தன் கால்களைக் கட்டிக் கொண்டிருந்த சின்னவனை, கீழே இறங்கி நின்றிருந்த அபிராமியிடம் தந்துவிட்டு, அவர்களைப் பிடிக்க ஓடிய பிரபஞ்சனைக் கத்தி அழைத்தார் அபிராமி.


“பிரபு!! முதல்ல இங்கேயிருந்து கிளம்பலாம். வா பிரபு!”


அது பேருந்து நிலையத்திற்கு பின்புறம் சற்று தள்ளி ஓடிய குறுக்குச் சாலையாதலால், பிரபஞ்சன் துரத்திச் சென்றாலும் அவர்களைப் பிடித்துவிட முடியாது. அது புரிந்தவன் அம்மாவின் குரலுக்கு கட்டுப்பட்டு காருக்குள் ஏறினான்.


சஞ்சய்யுடன் அபிராமியும் ஏற, அவர் மடியில் வாகாக சாய்ந்துகொண்டான் சஞ்சய். அதில் பிரபஞ்சனுக்கு புன்னகை வர பார்க்க, அபிராமியிடம் கண்களால் சிரித்துக்கொண்டான்.


அன்று அந்த இருளும் அதில் சிரித்த பிரபஞ்சனின் கண்களுமே சஞ்சய்யின் வாழ்விற்கு ஒளியூட்டின.


“உங்க வீடு எங்கே இருக்குது?”


குழந்தை தலைக் கலைந்து மிகவும் சோர்ந்து தெரிந்தான். உடலெங்கும் சிராய்ப்புகள்!


“டெல் மீ மை பாய்! அங்கிள் உன்னை உங்கப்பா கிட்ட விட்டுடறேன்.”


“அவன் உன்னை தானேடா அப்பான்னு சொன்னான்?” அந்த நேரத்திலும் கிண்டல் செய்த அம்மாவைக் கண்டு ஆயாசமாக இருந்தது.


“சும்மா இருங்கம்மா! அவன் தவறுதலா என்னை அவங்கப்பான்னு நினைச்சுக்கிட்டான்.” என்றவன் மீண்டும் சஞ்சய்யைப் பார்க்க, அவன் அபிராமியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு மறுபுறம் திரும்பிக்கொண்டான்.


அதில் பிரபஞ்சனின் புருவங்கள் உச்சி மயிரைத் தொட்டது. 


“நிரஞ்சனா தேடிட்டிருப்பா பிரபு. காரை எடு!” என்ற அபிராமி கண்ணைக் காட்ட, 


அவனும் மனைவியின் நினைவில், “ஆமாம்மா. மொபைல் வேற ஆஃப் ஆகிடுச்சு. இந்நேரம் எத்தனை கால் பண்ணினாளோ!” என்றபடி காரை விடுதிக்கு விட்டான்.


அங்கே நிரஞ்சனா விரல் தேய கணவனை அழைத்துப் பார்த்துவிட்டு, அறையைத் திறந்துகொண்டு கீழேயுள்ள வரவேற்பறைக்கு செல்வதற்கு லிஃப்டின் அருகே வர, உள்ளிருந்து அவர்கள் மூவரும் வந்தனர். கணவனைக் கண்ணால் கண்டதும்தான் நிம்மதியடைந்தாள் நிரஞ்சனா. 


மனைவியின் முகமே அவளின் தேடலைப் பறைசாற்ற அவளைத் தோளோடு அணைத்துக் கொண்ட பிரபஞ்சன் அவள் கேட்கும் முன்னரே சொன்னான். “நைட் மொபைல்ல சார்ஜ் போடாம விட்டுட்டேன் ரஞ்சி. பயந்துட்டியா?”


“ரொம்ப!” என்றவள் முழுதாக ஒரு நிமிடம் அவன் தோளில் சாய்ந்து கண்மூடிக் கொண்டாள்.


“உள்ளே வா, காஃபி ஆர்டர் பண்ணலாம்.” என்றதும்,


தலை நிமிர்த்தி, “ஹாஸ்பிடல்ல என்ன சொன்னாங்க அத்தை?” என்று கேட்கையில்தான் பார்த்தாள், தன் மாமியாரின் கைபிடித்து நின்றிருந்த அந்த சிறுவனை!


தன் உடல்நிலை பற்றி மருமகளிடம் பகிர்ந்தபடி உள்ளே வந்து அமர்ந்த பின்னும் கூட, சஞ்சயின் பார்வை இங்கங்கென அலைபாயாமல் நிரஞ்சனாவின் பெருத்த வயிற்றிலேயே படிந்திருந்தது.


“இனி கவனமா இருங்க அத்தை. எதுவா இருந்தாலும் முன்னாடியே சொல்லுங்க. ரொம்ப பயந்துட்டேன்.” என்றவள் சஞ்சய்யை, “யாரிந்த குட்டிப்பையன்? இங்கே வா!” என்றழைத்து, சீப்பை எடுத்து அவனின் கலைந்திருந்த தலையை அழகாக வாரி, சட்டைக் கசங்கலை நீவிவிட்டாள். சிராய்ப்புகளின் மேல் தேங்காய் எண்ணெய் பூசினாள். “எங்கேடா போய் இப்டி விழுந்து வாரிட்டு வந்திருக்கே?” 


கணவனும் மாமியாரும் அவன் யார்?, என்னவென்று கூட இன்னும் விபரம் சொல்லவில்லை. யாரென்று தெரியாமலேயே அவனை அரவணைத்தாள். அதுதான் அவளின் குணம். இயல்பிலேயே சகிப்புத்தன்மை கொண்ட நிரஞ்சனா, வருட கணக்கில் குழந்தை பாக்கியத்திற்கு தவமிருந்ததாலோ என்னவோ எந்தக் குழந்தையையும் அனிச்சையாக தாய்மையோடே அணுகினாள். அதனாலேயே நாத்தனார் வசுதாவின் குழந்தைகளிடத்தில் அவளுக்கு நிரம்பப் பிரியம்!


அவள் குணம் புரிந்திருந்த மற்ற இருவரும் அவளின் செயலுக்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. 


அந்த வைகறைப் பொழுதில் திருச்சி மாநகரம் பள்ளியெழுச்சிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.


வரவழைத்திருந்த காபியைப் பருகியபடி அபிராமி, “வர்ற வழில தான் இவனைப் பார்த்தோம்.” என்று ஆரம்பித்து முழுதாக சொல்லி முடிக்க,


“அச்சோ! பேசாம நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு போயிடலாமாங்க?” எதைப் பற்றியும் சிந்திக்காமல் கேட்டுவிட்டாள்.


இல்லாதவர்களுக்கு இருப்பின் மேல் ஒரு ஆசைக் கண் இருந்துகொண்டே இருக்கும். சமூக விதிமுறைகளுக்கும் விழுமியங்களுக்கும் கட்டுப்பட்டு மூடி இருக்கும் அந்த ஆசைக் கண்ணானது, சிறிய சந்தர்ப்பம் வாய்த்தாலும் வாய்ப்பைத் தனக்கேற்ப அனுகூலமாக்கிக் கொள்ளும் முனைப்பில் மெல்ல திறக்கவே செய்யும். 


அப்படித்தான் இங்கே நிரஞ்சனாவின் குழந்தை மீதான ஆசை உள்ளம் தன்னையுமறியாமல் வெளிப்பட்டது. திருமணமான போதே கர்ப்பம் தரித்திருந்தால், இப்போது இந்த சிறுவனைப் போல் தனக்கும் ஒரு மகன் இருந்திருப்பானே என்ற ஏக்கமும் ஆவலும் அவளை அப்படிக் கேட்க தூண்டியிருக்க வேண்டும்.


“கம்முன்னு இரு! ஏதாவது சொல்லிடப் போறேன்.” என்று மனைவியைக் கண்டனத்துடன் முறைத்த பிரபஞ்சன், சஞ்சய்யைப் பார்க்க, அவன் பார்வை இன்னமும் நிரஞ்சனாவின் வயிற்றில்தான்!


தட்டில் இருந்த ரொட்டியை அவன் கையில் தந்துவிட்டு மென்மையாகக் கேட்டான். “உன் பேரென்ன?”


“வயித்துக்குள்ளே பாப்பாவா?” -சஞ்சய்.


“ஆமா. உனக்கு பாப்பான்னா பிடிக்குமா?” -நிரஞ்சனா.


“ம்ம்! வெளியே வந்ததும் என் கூட விளையாட விடுவீங்களா?” 


‘தாத்தா அர்ஜூனைத் தன்னுடன் விளையாடவிட்டதே இல்லையே!’


சற்று நேர நிசப்தத்திற்கு பிறகு, மீண்டும் பிரபஞ்சன் ஆரம்பித்தான். “விளையாடலாமே! சரி உன்னை நாங்க எப்டி கூப்பிடறது?”


“மை பாய்!” என்றான், காரில் பிரபஞ்சன் இவனை ‘மை பாய்’ என்றழைத்ததை நினைவு வைத்துக்கொண்டு!


“அதில்லடா… உன் பேரென்ன? உன் வீடு எங்கே இருக்குது?” எனக் கேட்ட பிரபஞ்சனிடம் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டிருந்தது.


‘சொல்லமாட்டேன்’ என்பதாகத் தலையாட்ட, அவனுக்கு வீடு எங்கே என்று தெரியவில்லை என்பதாக அவர்கள் அர்த்தப்படுத்திக் கொண்டனர்.


“சரி, உன்னைத் துரத்திட்டு வந்தாங்களே அவங்க யாருன்னு தெரியுமா?”


ரொட்டியை வாயில் உப்பலாக அடைத்துக் கொண்டு, ‘ஆம்’ என தலையசைக்க,


ஆர்வமான பிரபஞ்சன், “யாரு?” என வினவ,


“பூச்சாண்டீ…” என்றான்.


சப்பென்றாகி விட்டதில் கண்மூடி திறந்து பொறுமையை இழுத்து வைத்துக்கொண்டு சொன்னான். “இங்கே பாரு! உன்னைப் பத்தின டீடெயில்ஸ் தெரிஞ்சா தான் என்னால உன்னை உங்கம்மா கிட்ட பத்திரமா கொண்டு போய் விட முடியும்.”


‘மீண்டும் வீட்டிற்கு போனால் யாருக்கும் தெரியாமல் தாத்தா ‘அங்கேயே’ அடிப்பாரே! உண்மையை அம்மாவிடம் சொன்னால் அம்மா செத்துப் போவாரே! அம்மா! என் தங்க அம்மா!’ சின்னவனின் உள்ளம் வலி தாங்காத பறவையாய்த் துடிக்க, கண்ணீர் இமைத் தாண்டியது.


அதற்கு மேல் பொறுக்க முடியாத நிரஞ்சனா, “ப்ளீஸ் அப்புறம் கேட்கலாம்ங்க. குட்டிப் பையனுக்கு பசிக்குதா? சாப்பிடலாமா?” என்று அவன் தலைக் கோத,


பதிலளிக்காமல் மெதுவாக அவள் வயிற்றில் கை வைத்து மறு கேள்வி கேட்டான். “பாப்பா வயித்துல இருந்தா உங்களுக்கு கஷ்டமா இருக்குமா?”


“இல்லையே… ரொம்ப ரொம்ப சந்தோஷமா தான் இருக்கும்.”


குழந்தை உள்ளே உதைப்பதை உணர்ந்து, அவன் பயந்துபோய் விருட்டென கையை இழுத்துக்கொள்ள, நிரஞ்சனா சிரித்தாள். 


“என்னடா கண்ணா பாப்பா உன்னை உதைக்கறாளா?” -அபிராமி.


“என்னை இல்லை, அம்மாவை!” 


ஸ்தம்பித்துவிட்ட நிரஞ்சனாவின் விழிகளில் ஈரத்திற்கான அறிகுறி! குழந்தையின் அம்மா என்ற அழைப்பின் மகோன்னதத்தை அவளைப் போன்றவர்களன்றி வேறு யார் உணர்ந்திருக்க முடியும்? கணவனைப் பார்த்தாள். அவன் ‘கூடாது’ என்பதாகத் தலையாட்டினான்.


“பாப்பா உதைச்சா உங்களுக்கு வலிக்குமா?”


வலி என்பதால்தான் அனுராதா உன்னை அவள் வயிற்றில் சுமக்கவில்லை என்று, விவரமறியா நாட்களிலேயே அவன் மனதில் பதிய வைத்திருந்தனர் அவன் வீட்டு பெரிய மனிதர்கள். அவர்களின் வாய்மொழி மகத்துவத்தில், தான் சாக்கடையில் இருந்து வந்தவன் என்றுதானே அவன் இப்போது வரை நினைத்துக் கொண்டிருக்கிறான்?


மூவரும் பரஸ்பரம் பார்த்துக்கொண்டனர். அவனின் இம்மாதிரி கேள்விகளெல்லாம் ஏனென்று தெரியவில்லை என்றாலும், குழந்தையை ஏதோவொரு சம்பவம் பெரிய அளவில் பாதித்திருக்க வேண்டும் என்று புரிந்தது.


“சரி! நான் ரிசப்ஷன் போய் போலீஸுக்கு சொல்லிடறேன். ரொம்ப நேரம் இவனை இங்கே வச்சிட்டிருக்க முடியாது.” என்ற பிரபஞ்சன் எழ,


“அத்தை!” மாமியாரைத் துணைக்கழைத்தாள் நிரஞ்சனா.


“கொஞ்சம் பொறுமையா இரு பிரபு. யோசிப்போம்.”


“என்னம்மா நீங்களும்? நாம இப்போ ஊருக்கு கிளம்பியாகணும். அவங்க வீட்டுல குழந்தையைக் காணோம்ன்னு கம்ப்ளெய்ண்ட் கொடுத்தா போலீஸ் தேட ஆரம்பிடுவாங்க. அதுக்கு நாமளே முதல்ல சொல்லிடறது பெட்டர்!”


“அவங்க தேட மாட்டாங்க. என்னை வித்துட்டாங்க!” உதட்டைப் பிதுக்கி, கசிந்த கண்களுடன் சொல்லிவிட்டு, இன்னுமொரு ரொட்டியை எடுத்து வாயில் அடைத்துக்கொண்டான் சஞ்சய்.


பெண்கள் நெஞ்சில் கை வைத்துக்கொண்டனர். பிரபஞ்சனுக்குமே அதிர்ச்சிதான்! விபரம் தெரிய ஆரம்பிக்கும் பருவம் என்றாலும் இன்னமும் அவன் குழந்தைதானே? அவனிடமிருந்து இத்துணைப் பாரதூரமான வார்த்தைகளை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.


இசைக்கும்...

Comments

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25