கருவறை கீதம் -15

 


அத்தியாயம் 15


வருடம் 2012


ந்த வீட்டில் அனுராதாவின் ஓலக்குரல் கூரையை முட்டி எதிரொலித்தது. அவளின் உள்ளுணர்வு பலித்தேவிட்டதே! “தப்பு பண்ணிட்டேன்ங்க… அவனை இந்தாளு கிட்ட விட்டுட்டு போய் தப்பு பண்ணிட்டேனே…”


“அனு! ப்ளீஸ் கால்ம் டௌன்!” என்ற பாஸ்கரன் தன் பதற்றத்தை மறைத்து, மனைவியைக் கைக்குள் வைத்துக்கொண்டு கலியபெருமாளிடம் கேட்டான். “அப்பா! நடந்ததைக் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க. அன்னிக்கு சஞ்சு என்ன பண்ணிட்டிருந்தான்? அம்மா, சித்தி எங்கே போனாங்க?”


“என்னத்தைடா சொல்ல சொல்ற? அதான் சொன்னேனே… உங்கம்மாவும் காமாட்சியும் கல்யாண ராமய்யர் வீட்டு விசேசத்துக்கு போயிருந்தாங்க. நான் அர்ஜூனைக் கூட்டிக்கிட்டு பெருமாளைப் பார்க்க போயிட்டேன். அன்னிக்குன்னு பார்த்து கோவில்ல சரியான கூட்டம். முழுசா மூணு மணி நேரம் கழிச்சுதான் வீட்டுக்கு வந்தேன். அப்போ அந்த கழிசடை என்ன பண்ணிட்டிருந்ததுன்னு எல்லாம் நான் பார்க்கல. உங்கம்மா தான் வந்ததும் ராவுக்கு சோறு ஊட்ட தேடினா! அப்போதான் அவனைக் காணோம்ன்னே தெரிஞ்சது.”


மங்கையும் காமாட்சியும் கூடத்தின் ஓரத்தில் பதுங்கியிருந்தனர். மங்கை அழும் குரலில் சொன்னார். “ஆமாம்டா பாஸு. எனக்கே அப்போதான் தெரியும். நானும் காமுவும் நாலு தெரு வரைக்கும் போய் தேடிப் பார்த்துட்டு வந்தோம். அவனை எங்கேயும் காணலை.”


பாஸ்கரனிடமிருந்து விடுபட்டு அவரை அடித்துவிடுவதைப் போல் முன்னால் போய் ஆவேசமாகக் கேட்டாள் அனு. “உடனே ஏன் எங்கக்கிட்டே சொல்லல? நாலு நாள் வரை என்ன பண்ணிட்டிருந்தீங்க? நான் கால் பண்ணப்போ எல்லாம் அவன் தூங்கறான்னு தானே சொன்னீங்க?”


“அந்த கழிசடை எக்கேடு கெட்டுப் போனா எங்களுக்கென்ன வந்தது? நாங்க ஏன் அவனைக் காணோம்ன்னு பதறி உன்கிட்டே சொல்லணும்?” -கலியபெருமாள்.


அவர் கேள்வியில் இத்தனை நாட்கள் அனுவை ஜெயிக்க முடியாத ஆத்திரமெல்லாம் வன்மமாக, அலட்சியமாக வெளிப்பட்டது. இப்போது அவளை ஜெயித்துவிட்டதான மமதையில் திமிராக நின்றார்.


“இவர்தான்… இவர்தான் என் குழந்தையை என்னவோ செஞ்சிருக்கார் பாஸ்கர். ஐ’ம் ஷ்யோர். இந்தாள் மேல முதல்ல கம்ப்ளெய்ண்ட் கொடுங்க!” என்று பாஸ்கரனைப் போட்டு அடித்தாள் அனு.


“ஸ்டாப் இட் அனு! என்னதிது மரியாதை இல்லாம? கொஞ்ச நேரம் அமைதியா இரு!”


“என் பிள்ளைங்க! காணாம போனது என் பிள்ளை! உங்க வீட்டு பெரியவங்களை நம்பி விட்டுட்டுப் போனேன். இப்போ இந்தாளு இவ்ளோ திமிரா பேசிட்டு இருக்கார். நீங்க என்னைப் பொறுமையா இருக்க சொல்லிட்டு இருக்கீங்க!”


“முதல்ல நீ வா! நாம ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதி கொடுத்துட்டு வருவோம்.” என்று அவளை இழுத்துக்கொண்டு போனான்.


அனு கலியபெருமாளைத் திரும்பிப் பார்க்க, அவளிடம் ஓர்‌ வன்மப் புன்னகையை வீசினார் அவர்.


அனுவும் பாஸ்கரனும் அனுவின் அம்மாவிற்கு மீண்டும் உடல்நிலை சரியில்லை என்று நான்கு நாட்களுக்கு முன்பு மாலையில் வேலை முடிந்து வந்த நேரம் தகவல் வர, இருவரும் குழந்தைகளை வீட்டுப் பெரியோர்களிடம் விட்டு விட்டு, அவசரமாக திண்டுக்கல் சென்றிருந்தனர்.


அனுவின் அம்மாவிற்கு ‘மைல்ட் அட்டாக்’ என்று சொல்லப்பட, இந்த நான்கு நாட்களும் அவரை மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளித்துவிட்டு வீட்டில் ஒரு செவிலியரைத் துணைக்கு அமர்த்திவிட்டு வந்திருந்தனர். இருவரும் இங்கே வந்தபின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மீண்டும் அனு மட்டும் அம்மாவைப் பார்த்துக்கொள்ள செல்வதாக ஏற்பாடு! ஆனால் வந்து பார்த்தபோது சஞ்சய்யைக் காணவில்லை என்ற செய்தியே தம்பதியருக்கு காத்திருந்தது. 


திடுமென மகனும் மருமகளும் ஊருக்கு போகிறார்கள். வருவதற்கு நான்கைந்து நாட்கள் ஆகலாம் என்று சொல்லப்பட்டதும், இத்தனை நாட்கள் காத்திருந்த காத்திருப்பு வீண் போகவில்லை என்று உள்ளூர மகிழ்ந்தார் கலியபெருமாள். இதற்கு முன்பு அனு வெளிநாடு போன போதெல்லாம் கூட அவருக்கு இப்படியான சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. அந்நாட்களில் பாஸ்கரன் சஞ்சய்யைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வான். தவிர, அப்போது அர்ஜூனும் பிறந்திருக்கவில்லை.


ஆக, இந்த சந்தர்ப்பந்தை விட்டாலொழிய வேறு சந்தர்ப்பம் அமையாது என்று கலியபெருமாள் தனக்குள் கெக்கலித்துக் கொண்டார். எங்கும் சிறு பிசிறு ஏற்பட்டு விடாதபடி தனக்குள் நிறைய திட்டங்கள் வகுத்துக்கொண்டார்.


அதன்படி முதற்கட்டமாக அன்றிரவே ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி போய் இறங்கியவர், பாலத்திற்கு கீழ் செல்லலாமா என்று சிந்தித்துவிட்டு, பின் அங்கே நடக்கும் நேரடி ஒளிபரப்பைத் தன்னால் சகிக்கமுடியாது என்று அருவருத்து, பேருந்து நிலையத்தின் பின்புறமாக செல்ல முடிவெடுத்தார். ஏற்கனவே அங்கே ஆண், பெண் பேதமின்றி மோசமான சங்கதிகள் நடைபெறுவதற்கான முஸ்தீபுக்கள் நடப்பதைப் பலமுறை பார்த்திருந்ததால், நேரே அங்கே போய் சிறிதுநேரம் நின்றவர், தன்னை அணுகிய ஓர் திருநங்கையிடம் பேரனை வைத்து பேரம் பேசினார். அவர்கள் தொழில் வேறாயினும் இதுபோல் குழந்தைகளைக் கைமாற்றி விடுவதையும் அவ்வப்போது செய்து வந்தார்கள்.


அவளும் அவளுக்கு தெரிந்த நபர்களின் எண்களைப் பகிர முற்பட, “எனக்கு யார் நம்பரும் வேண்டாம். பையனைக் கொண்டு வாரேன். உங்க ஆளுங்க வந்தா வாங்கிக்கிட்டு நடையைக் கட்டலாம். அவ்வளவுதான்!” என்று ஒரே முடிவாகச் சொன்னார்.


“அப்போ சரியா நாளைக்கு ராத்திரி பத்து மணிக்கு இங்கே வந்து பையனை விடும் பெரிசு!” 


“இங்கே பாரு! காதும் காதும் வச்ச மாதிரி வேலையை முடிக்கணும்னு சொல்லிட்டு இருக்கேன். மறுபடியும் நான் நாளைக்கு திருச்சி வந்தா, முதல்ல என் மேல தான் சந்தேகம் வரும்.”


“அப்போ என்ன செய்யலாம்? உம்ம வீடு எங்கே?”


“அது உனக்குத் தேவையில்லை. நாளைக்கு பொழுது சாய **** கோயிலுக்கு உன் ஆளுங்களைக் கூட்டிட்டு வா!” 


மறுநாள் மாலையில் வீட்டுப் பெண்கள் அடுத்தத் தெருவில் இருக்கும் கல்யாண ராமய்யர் மருமகளுக்கு சீமந்தம் என்று அங்கே போய்விட, இவர்கள் தெருவில் இருக்கும் அநேக ஆட்களும் அங்கே போய் விட்டதும் கூட இவருக்கு வசதியாகிப் போனது.


சஞ்சய் தாத்தாவுடன் தனியே இருக்க பயந்து, தன்னையும் விசேஷத்திற்கு அழைத்துச் செல்லுமாறு பாட்டிகளிடம் அடம்பிடித்தான். “சித்திப் பாட்டி, என்னையும் கூட்டி போ!”


“நல்ல காரியம் நடக்கும்போது இந்த சாக்கடையைக் கூட்டிப் போகப் போறியா? அங்கே வர்ற ஐய்யமாரெல்லாம் ஆச்சாரமானவுங்க தெரியுமில்ல? இவனைப் பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று பெண்களின் மனதைக் குழப்பிவிட்டு, சஞ்சய்யைத் தன்னுடன் இருத்திக் கொண்டவர், 


பெண்கள் படியிறங்கியதும், தன் திட்டத்தின் முதல் கட்டத்தை அரங்கேற்றினார். அதன்படி மங்கைக்கு மருத்துவரின் அறிவுரைக்கேற்ப தரப்பட்டிருந்த தூக்க மாத்திரை ஒன்றில் கால்வாசியைப் பாலில் கலந்து அர்ஜூனுக்கு புகட்டினார்.


பார்த்துக் கொண்டிருந்த சஞ்சய்யிடம் சொன்னார். “கவலைப்படாதேடா கழிசடை! இன்னிக்கு என்கிட்ட இருந்து உனக்கு விடுதலை கிடைக்கப் போகுது. ஹாஹா… இரு இவனைத் தூங்க வச்சிட்டு வந்து மீதத்தைச் சொல்றேன்.”


பாலை அருந்தியதும் அவரின் தோளிலேயே தலைசாய்த்த அர்ஜூனை உள்ளே படுக்க வைத்துவிட்டு வர, 


இவன், “தாத்தா வேணாம் அடிக்காதே…” என்று அச்சத்துடன் அறைக்குள் போய் கதவை மூடிக்கொள்ள, உயரத்திலிருக்கும் தாழ்ப்பாளைப் போடத் தெரியாதக் குழந்தையைப் படாரெனக் கதவைத் திறந்து மூர்க்கத்தனமாக வெளியே இழுத்தார்.


முகத்தில் குரூரத்தையும் குரலில் போலி பாசத்தையும் தேக்கி சொன்னார். “இனி நான் உன்னை அடிக்கமாட்டேன்டா தங்கம். ஏன்னா இப்போ உன்னை ஓரிடத்தில விற்கப் போறேன். ஹாஹா… அங்கே நீ யாருக்கும் பயப்படாம சந்தோஷமா இருக்கலாம். எனக்கும் தலை வாரிசா ராஜா மாதிரி என் பேரன் இருக்க வேண்டிய இடத்துல உன்னை வைக்க வேண்டிய நிலைமை கிடையாது பாரு! ஹாஹா…”


“அம்… அம்மா…” என சஞ்சய் அழ ஆரம்பிக்க,


“இனி உனக்கு அம்மாவே கிடையாதுடா சாக்கடைப் பயலே! அவ அர்ஜூனுக்கு மட்டும்தான் அம்மா. இதை யார்க்கிட்டேயாவது சொன்ன… அவளை நானே சாகடிச்சிடுவேன். ஜாக்கிரதை!” என்று கண்களை உருட்ட, அவர் சொல்வது உண்மை என்று நம்பிய பிஞ்சு மனம் அலறி துடித்தது. 


ஏற்கனவே அவர் சொன்னதைப் போல், அனு செத்துப் போவாள் என்ற பயத்தில்தான் இவன் தாத்தா தனக்கு செய்யும் கொடுமைகள் எதையும் யாரிடமும் சொல்வதில்லை‌. குழந்தை முகம் சரியில்லாததைக் கண்டு அனு எத்தனையோ முறை எப்படியெல்லாமோ கேட்டிருக்கிறாள். தூக்கம் என்று சொல்லி அவள் மடியில் கவிழ்ந்துவிடுவான்.


“இன்னையிலேருந்து உனக்கு அம்மா, அப்பா, பாட்டி யாரும் கிடையாது. புரிஞ்சுதா? கண்ணைத் துடைச்சிட்டு சத்தம் போடாம என் பின்னாடி வா!”


“பாட்டி கிட்ட போறேன்…” என்று அவன் மேலும் அழ,


“படவா! நான் சொல்றது புரியுதா இல்லையா? உன்னை பூச்சாண்டி கிட்ட விற்கப் போறேண்டா. இனி அம்மா, அப்பா, அர்ஜூன், பாட்டின்னு யாரும் வரமாட்டாங்க. அங்கே போயும் உன் பேரைக் கூட யார்க்கிட்டேயும் சொல்லக்கூடாது. மீறி சொன்னா அனு செத்துடுவா! புரிஞ்சுதா?” எனக் கேட்டு, குழந்தையின் அந்தரங்கத்தில் அழுத்தம் கொடுக்க, வீலென்று கத்தினான்.


அவனின் அலறலில் அற்ப சுகம் கண்டவர், தூங்கிக் கொண்டிருந்த அர்ஜூனைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு வந்தார். “அழுதது போதும். கண்ணைத் துடைச்சிட்டு வந்து தொலை!”


இந்த நரகத்திற்கு பூச்சாண்டியிடம் சென்றுவிடுவதே மேல் என்று நினைத்தானோ என்னவோ, கண்ணைத் துடைத்துக்கொண்ட சஞ்சய் மலங்க மலங்க விழித்தபடி, தன் முன் நீட்டப்பட்ட தாத்தாவின் விரலைப் பிடித்துக்கொண்டான்.


அவர் நினைத்திருந்தால் சஞ்சய்க்கும் தூக்க மாத்திரை கொடுத்து, தூக்கத்திலேயே அவனை அந்த மாபாதகர்களிடம் விற்றிருக்க முடியும். ஆனால் அவனுக்கு வலிக்கச் செய்ய வேண்டுமெனவும், ஆஸ்துமா நோயாளியான அவரால் அர்ஜூனைப் போல் சஞ்சய்யைத் தூக்கிக்கொள்ள முடியாது என்பதாலுமே அவனை சுயநினைவுடன் வைத்திருந்து நடத்திச் சென்றார்.


ஆம்! நடந்தேதான் சென்றார். எந்த ஆட்டோகாரனையும் டாக்ஸிக்காரனையும் அவர் நம்ப தயாராக இருக்கவில்லை. இருட்டான தெருக்களை மட்டுமே நம்பி அந்த கோவில் பாதையில் நடந்தார். கோவிலில் ‘அவர்களைக்’ கண்டுவிட்டு கண்ணால் சஞ்சய்யைக் காட்டியவர், பிரகாரத்தைச் சுற்றும்போது, அவனின் பிஞ்சுக் கரத்திலிருந்து தன் விரலை உருவிக்கொண்டு முன்னால் நடந்துவிட்டார்.


அவர் கைவிட்ட கரத்தை, வேறொரு முரட்டுக் கரம் வந்து பற்றிக்கொண்டது. அக்கரம் அவனை ஓர் பூக்கூடையைப் போல் தூக்கிக்கொண்டதுடன், அவன் ‘தாத்தா!’ என்று அலற வாய்த் திறக்கும்முன், மயக்க மருந்து தெளித்த கைக்குட்டையை அவன் முகத்தில் வைத்து அழுத்தியுமிருந்தது.


அத்துடன் சஞ்சய் கண்விழிக்கும் போது திருச்சியில் ஒரு மட்டரகமான விடுதியறையில், அழுக்கேறியப் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தான்.


இன்னும் நேரமிருக்கிறது என்று அறையில் இருந்த அந்த நான்கு பூச்சாண்டிகளும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டான். “இந்த தரம் ரேட்டு அடிச்சு பேசுடீ… போன தரம் லட்டு போல கொடுத்த பொம்பிளைப் பிள்ளைக்கு அந்த மாணிக்கம் கொடுத்த அமௌண்ட் ரொம்ப கம்மிதான்.”


“ஏன் அன்னிக்கு நீயும்தானே கூட இருந்த… நீ பேசிருக்கறது…”


“அவனுக்கு எப்பவுமே நாம’ன்னா இளக்காரம்தான்! அதோட எனக்கு அவன் பார்ட்டி பேசி அனுப்புறதால என்னால ஒண்ணும் சொல்ல முடியல.”


“ஆஹ்… இங்கேயும் அதே கதைதான்!”


சற்றுநேரத்தில் குழந்தை முன்னேயே உடைமாற்றிக் கொண்டார்கள். 


கொடுமையின் உச்சமாக, “பேபி அம்சமா இருக்கானில்ல?” என்றொருத்தி அவனை அள்ளி முத்தமிட, பரம்பொருளுக்கு அவன்மேல் சிறிது கருணை இருந்திருக்க வேண்டும்.


வேறொருத்தி சொன்னாள். “அம்சமா இருந்தா அப்போவே முடிச்சிருக்கலாமில்ல? இப்போ நேரம் போகுது. கிளம்பு!”


ஏக்கத்துடன் மீண்டும் ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு, அவனை இடுப்பில் வைத்துக்கொண்டாள். சஞ்சய்க்கு தான் தவறான இடத்தில், தவறான நபர்களிடம் இருக்கிறோம் என்று மட்டும் புரிந்தது. தன்னை முத்தமிட்ட பூச்சாண்டியிடம் வெறுப்பைத் தேக்கி வைத்துக்கொண்டான்.


அந்த இருட்டான வேளையில் அவர்கள் சாலையில் இறங்கியதும் எதைப் பற்றியும் சிந்திக்காமல், உச்சபட்ச எரிச்சலுடன் தன்னைத் தூக்கி வைத்திருப்பவளின் தோளில் கடித்து வைத்துவிட்டு, நொடியும் தாமதிக்காமல் தளர்ந்திருந்த அவளின் கையிலிருந்து விடுபட்டு, முடிந்தமட்டும் விரைவாக ஓடினான்.


பள்ளியில் ஓட்டப் போட்டியின் போது, அனு எழுப்பிய உற்சாகக் கூச்சலை நினைத்துக் கொண்டவன் இன்னுமின்னும் வேகமாக ஓடினான். ஊரடங்கி வெறிச்சோடியிருந்த கடைத் தெருக்களிலெல்லாம் விழுந்து எழுந்து ஓடினான்.


சத்தமில்லாமல் அவர்களும் பின்னால் தொடர்ந்து வந்தார்கள். “பிஞ்சுன்னு நினைச்சா உடைக்க முடியாத காய் போலவே…” என்றாள் குழந்தையின் மேல் மோகம் கொண்டவள்!


ஒரு தெருவில் அவனைக் காணாமல் தேட, அவன் ஒரு குப்பைத் தொட்டியின் பின்னால் பதுங்கியிருந்ததைக் கண்ட ஒருத்தி கத்திவிட, சஞ்சய் தனக்கு எதிரே தெரிந்த பிரதான சாலையில் பாய்ந்திருந்தான். மூன்று வளைவுகளில் திரும்பியவன் எதிர்பாராமல் வந்து பிரபஞ்சனின் காரின் குறுக்கே விழுந்தான்.


ஒரு கதவு அடைக்கப்பட்டால் மறு கதவு திறக்குமென்ற சித்தாந்தம் அறியாத பாலகன், தன்னை மீட்க தன் அப்பா தான் வந்துவிட்டார் என்று நினைத்து பிரபஞ்சனை, “அப்பா!” என்று அழைத்திருந்தான். 


அபிராமி சொன்னதைப் போல் அவர் நித்தமும் தொழும் நரசிம்ம பெருமாளின் கணக்கு நமக்கெங்கே புரிகிறது?


சஞ்சய்யை அந்தக் கொடியவர்களிடம் விட்டுவிட்டு ஒன்றுமறியாதவரைப் போல் வெளியேறிய கலியபெருமாள், அர்ஜூனைத் தூக்கியவாறே ஸ்ரீரங்கத்து அரசராகிய ஸ்ரீஅரங்கநாதர் கோவிலுக்குள் புகுந்திருந்தார். சிறு உறுத்தலுமில்லாமல் அரங்கநாதனை நிதானமாக தரிசித்துவிட்டு, தனக்கு சாட்சி சொல்ல யாரேனும் தென்படுகிறாரா எனப் பார்க்க, ஒருவரல்ல நான்குபேர் இருந்தனர். 


“என்ன ஓய்! பேரனோட ஊர்கோலமா?”


“ஆமா சாமி. இன்னிக்கு ஏகாதசி இல்ல?” என்றுவிட்டு நகர, மீண்டும் ஒருவர் அவர் வருகையை விசாரித்தார்.


‘அந்த அரங்கனே நம்மப் பக்கம்தான்!’ என்று தனக்குள் புன்னகைத்துக் கொண்ட கலியபெருமாளை மேலும் குளிர்விக்க, இன்னுமிரு நபர்களை நலம் விசாரிக்க அனுப்பினார் ஸ்ரீஅரங்கநாதர்!


அப்படியே தூக்கம் கலைந்து சிணுங்கிய அர்ஜூனுக்கு விளையாட்டு காட்டியபடி வீடு வந்து சேர்ந்தார். ஏற்கனவே வீடு திரும்பியிருந்த பெண்களிடம் அர்ஜூனுக்கு உணவு கொடுக்க பணித்துவிட்டு, முதல் காரியமாக வீட்டிலிருந்த சஞ்சயின் புகைப்படங்களைச் சேகரித்து, அனைத்தையும் வீட்டின் பின்பக்கம் வைத்து எரித்து சாம்பலாக்கி, அதனையும் தடம் தெரியாமல் அழித்தார். 


“எவ்ளோ நேரமா கேட்கறேன். சஞ்சு எங்கேங்க? இப்போ எதுக்கு அவனோட ஃபோட்டோவையெல்லாம் எரிக்கறீங்க?” பதற்றமும் கோபமுமாக கேட்ட மனைவியை அலட்சியம் செய்தார்.


“இங்கே பாரு… அவன் எங்கே போனான், எப்டி போனான்னு எனக்குத் தெரியாது. உனக்கும் இப்பவும் எப்பவும் தெரியாது. புரிஞ்சுதா?” என்று அர்த்தத்துடன் கேட்க,


“என்ன மாமா சொல்றீங்க? எங்கே போனான்னு தெரியலைன்னா எப்டி? நாளைக்கு அவன் அம்மாக்காரி வந்து கேட்டா என்ன பதில் சொல்றது?” பரிதவிப்புடன் கேட்டார் காமாட்சி.


“தெரியலைன்னு சொல்றது.”


“என்னங்க…”


“மீறி வேற ஏதாவது சொன்னீங்க… இந்த வீட்டை விட்டு நானில்ல, என் பொணம்தான் வெளியே போகும்!”


அவரின் அழுத்த குணம் பற்றி தெரிந்த பெண்கள் இருவரும் வாய்மூடிக் கொண்டனர். அப்போது மட்டுமல்ல; இனி எப்போதும் வாய் திறப்பதில்லை என்று சங்கல்பம் செய்துகொண்டனர். அவர்களுக்கும் சஞ்சய் மேல் பெரிதாக பாசம் ஒன்றுமில்லையே! அதிலும் அர்ஜூன் பிறந்த பின்னர் சஞ்சய் அங்கே இரண்டாம்பட்சம்தான். இப்போது வீட்டுத் தலைவனை விட அந்த இரண்டாம்பட்சம் அவர்களுக்கு பெரிதில்லை.


கலியபெருமாள் நினைத்தது அனைத்தும் முடிந்து முழுதாக மூன்று நாட்கள் கடந்துவிட்டன. இப்போது வந்து அனு தலையிலடித்துக் கொண்டு அழுகிறாள்.


காவல்நிலையம் சென்று வந்த தம்பதியர் முதலில் தேடியது சஞ்சயின் புகைப்படம்தான். காவல்நிலையத்தில் கேட்டிருந்தனர். ஆனால் ஒன்று கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. அனு தங்கள் அறையில் பீரோவில் வைத்திருந்த ஆல்பங்களைத் தேடினாள். சஞ்சய்யின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் எடுத்த புகைப்படத் தொகுப்புகள் முற்றிலும் காணாமல் போயிருந்தது. அறையின் சுவரில் மாட்டியிருந்தது, ஏனைய புகைப்படங்கள் என எதையும் காணவில்லை‌.


இப்போது பாஸ்கரனுக்கும் கூட தந்தையின் மேல்தான் சந்தேகம் திரும்பியது. வீட்டிலிருந்த மூவரிடமும் எப்படியெல்லாமோ கேட்டுப் பார்த்துவிட்டான். தெரியாது என்ற ஒரே பதிலைத்தான் சொன்னார்கள்.


தோற்றுப்போன உணர்வுடன் சரிந்தமர்ந்தான். குழந்தையை எண்ணி நெஞ்சில் உதிரம் கசிந்தது. அப்பாவுக்கு சஞ்சய்யைப் பிடிக்காது என்று தெரியும். ஆனால் அந்த குழந்தை மேல் இந்தளவிற்கு வன்மம் இருந்திருக்கக்கூடும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. அவர் தவறே செய்யவில்லை என்றாலும் கூட, குழந்தைக் காணாமல் போனதில் குறைந்தபட்ச பதற்றம் கூட காட்டவில்லை. அதுவே பாஸ்கரனின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.


அனு ஒருபுறம் ஆடித் தீர்த்துவிட்டாள்.


“என் பிள்ளை உயிரோட இருக்கானோ இல்லை இந்தாளு கொன்னுட்டானோ தெரியலை. பாஸ்கர்! அன்னிக்கு கேட்டீங்களே… நாம தனியா போயிடலாமான்னு! இப்போ சொல்றேன். போயிடலாம் பாஸ்கர். நாம போயிடலாம். இவங்க காத்தே படாத இடத்துக்கு போயிடலாம். ஆனா இதை நான் சும்மா விடமாட்டேன். உங்கப்பா, உங்கம்மா, உங்க சித்தின்னு ஒருத்தரையும் விடமாட்டேன்ங்க. இந்தாளு மேல்தான் எனக்கு சந்தேகம்ன்னு சொல்லி ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுத்தா போதும். அரெஸ்ட் பண்ணி முதுகுத் தோலைக் கிழிச்சிடுவாங்க!”


“ஆஹா! என்ன மரியாதைம்மா மருமகளே!”


தன் முன்னால் கண்ணகியைப் போல் விழியுருட்டி பயமுறுத்தும் மருமகளை, ‘என்னவும் செய்துகொள்!’ என்ற ரீதியில் வெகு திண்ணக்கமாகவே பார்த்திருந்தார் கலியபெருமாள். 


சஞ்சய் பிறந்தபோதும் இப்படிதானே போலீஸ் அது இதுவென பயமுறுத்தி அவனை இந்த வீட்டிற்குள் சேர்த்தார்கள்? இப்போது எந்த போலீஸிடம் வேண்டுமானாலும் போகட்டும். அவருக்கு தான் எங்கேயும் சந்தேகம் வரும்படி நடந்து கொள்ளவில்லை என்று நிரம்பவே நம்பிக்கை இருந்தது.


பாஸ்கரனால் அனுராதாவை இப்படி பார்க்கவே முடியவில்லை. குழந்தை வளர்ப்பில் நாட்டமில்லை என்று சொன்ன பெண், இன்று அவள் வயிற்றில் பெறாத அவளின் குழந்தைக்காக உயிர் போவதைப் போல் துடிக்கின்றாள்; அவனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகவும் இருக்கின்றாள். விதியின் விசித்திரம் என்றுதான் நினைக்க முடிந்தது. அத்துடன் அவளின் பேத வார்த்தைகளில் இன்னுமே மனம் வலித்தது.


அவளை இந்த வீட்டில் எப்படியெல்லாமோ தர குறைவாக பேசியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பாஸ்கரனை விடவும் பொறுமையைக் கடைபிடித்தவள் அனு தான்! அப்போது கூட உன் வீடு, உன் அப்பா, அம்மா என்று ஒருபோதும் பிரித்துப் பேசாத பெண், இன்று இப்படி பேசுவதில் மனம் வெதும்பி நின்றான்.


“அனு, வா! என் மொபைல்ல இருக்க சஞ்சுக்குட்டி ஃபோட்டோவை போலீஸ் கிட்ட கொடுத்துட்டு வரலாம்.” என்று அவள் மனதினைச் சற்று திசை திருப்ப முயன்றான்.


கடைசி முறையாக கண்ணீர் வழியும் கண்களுடன் கலியபெருமாளின் முன் சென்றவள், “தயவுசெஞ்சு சொல்லுங்க மாமா… இனி நான் அவனை அர்ஜூனோட சேர விடாம பார்த்துக்கறேன். இந்த வீட்டுல எல்லா விஷயத்துலேயும் அர்ஜூனே முதல் வாரிசா இருந்து எல்லாம் செய்யட்டும். சஞ்சுவை உங்க பக்கமே வராம பார்த்துக்கறேன். ப்ளீஸ்… ப்ளீஸ்… என் பிள்ளை எங்கேன்னு மட்டும் சொல்லிடுங்க…” என்று நெஞ்சிலடித்துக் கொண்டு மண்டியிட்டு கதறினாள்.


மனமிரங்கவே இல்லை அந்த பெரிய மனிதர்.


“அத்தை… ஹெல்ப் மீ… சின்னத்தை… உங்களுக்கு தெரிஞ்சா நீங்களாவது சொல்லுங்க… எத்தனை முறை அவனுக்கு சோறூட்டி கதை சொல்லியிருப்பீங்க? இப்போ குழந்தை எங்கே எப்டி கஷ்டப்படறானோ! சொல்லுங்க அத்தை…”


மற்ற இரு பெண்களுக்கும் அனுவின் நிலைப் பார்த்து நெஞ்சம் கனக்கவே செய்தது. இருந்தும் அனுவின் கண்ணீரை கலியபெருமாளின் எச்சரிக்கை வென்றதில் அழுதபடி அமைதியாக இருந்துவிட்டனர். அவர்களுக்குமே சஞ்சய் எங்கே போனான் என்று தெரியாதே!


அதற்கு மேல் மனைவியின் அழுகையைக் காண சகியாமல் அவளைத் தாங்கிக்கொண்டான் பாஸ்கரன். “அனு, ப்ளீஸ் வா!”


அவன் நெஞ்சில் சாய்ந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தவள், விடுவிடுவென உள்ளே போய் அர்ஜூனைத் தூக்கிக்கொண்டு வந்தாள். “சஞ்சு என்கிட்ட வர்ற வரை உங்க யாரையும் இவனைப் பார்க்க அனுமதிக்கமாட்டேன்.”


பாஸ்கரனால் அனுவின் செயலுக்கு தடை சொல்ல முடியவில்லை. 


“உங்க அப்பா, அம்மாவுக்கு ஃபேவரா என்னைக்கும் என்கிட்ட நீங்க பேசக்கூடாதுங்க.” என்று விரல் நீட்டி கணவனுக்கு கட்டளையிட்டவளின் கண்ணீர் நின்றபாடில்லை.


அவளை நெருங்கி கண்ணீரைத் துடைத்துவிட, மேலும் பெருகிய கண்ணீருடன் தன் தோளிலிருக்கும் அர்ஜூனைக் காட்டி ஏக்கத்துடன் சொன்னாள். “இவனுக்கும் முதல்ல என்னை அம்மான்னு கூப்பிட்டது அவன்தானே பாஸ்கர்?”


வருடம் 2034

"பிரகதிக்கும் முதல்ல என்னை அம்மான்னு கூப்பிட்டவன் அவன்தானே?” என்ற நிரஞ்சனா பிரபஞ்சனின் தோளில் சாய்ந்திருந்தாள்.


நேரம் பிற்பகலில் தத்திக் கொண்டிருந்தது. மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்த பிரபஞ்சன், தங்கள் அறையில் அக்னிஸ்வரூபனின் சிறு வயது புகைப்படத்தைக் கையில் வைத்துக்கொண்டு வெறித்துப் பார்த்தபடி இருந்த மனைவியைக் கண்டான்.


எப்போதும் பிரபஞ்சனின் கார் உள்ளே நுழையும்போதே டிரோன் செக்யூரிட்டியின் உபயத்தில், சமையலில் மிச்ச சொச்சமாய் அப்பளம் பொரிப்பதும் ஆம்லெட் இடுவதுமாய் இருக்கும் மனைவி இன்று இப்படி மகனின் புகைப்படத்தில் நிலைத்திருப்பதைக் கண்டு ஆச்சரியம் எழுந்தது.


“ரஞ்சி, என்ன அக்னி ஃபோட்டோவை வச்சிக்கிட்டு கொசுவத்தியை சுத்திட்டிருக்கியா?”


தோள் தொட்ட கணவனின் ஸ்பரிசத்தில் திரும்பியவளின் கண்கள் பனித்தது. “வார்ட்ரோப் க்ளீன் பண்ண வந்தேன். இந்த ஃபோட்டோ பார்த்ததும் அக்னி நம்மக்கிட்ட எப்டி வந்து சேர்ந்தான்னு யோசிச்சிட்டிருந்தேன்.”


கலங்கும் மனைவியைத் தோளோடு அணைத்துக்கொண்டான். “சரி, இப்போ எதுக்கு பழசெல்லாம் நினைச்சு கலங்கிட்டிருக்கே? நடக்க வேண்டியதைப் பாரும்மா!”


“இல்லைங்க! பிரகதிக்கும் முதல்ல என்னை அம்மான்னு கூப்பிட்டவன் அவன்தானே? அவ கல்யாணம் முடியவும் அக்னிக்கும் பொண்ணைப் பார்த்துடலாம்ன்னு இருக்கேன். அவன் வேண்டாம்ன்னு தான் சொல்லுவான். அதுக்காக அப்டியே விட்டுட முடியுமா?”


“நீயாச்சு! உன் பிள்ளையாச்சு.”


“என்ன நீயாச்சு? இந்த விஷயத்துல நீங்கதான் அவனைக் கன்வீன்ஸ் பண்ணனும் சொல்லிட்டேன்.”


“அவன் மனசுல என்ன இருக்குதுன்னு தெரியாம எப்டி?” என்று தாடையைத் தடவ,


மீண்டும் அவள் கண்கள் அக்னியின் புகைப்படத்திற்கு போனது. “ம்ம்… அவன் மனசுல என்ன இருக்குதுன்னு தெரியல, அப்பவும் இப்பவும்!”


“அவன் வாய் திறந்தா தான் அதிசயம். அது சரி, நீ ஏன் இன்னிக்கு இவ்ளோ இமோஷனலாகற?”


“என்னவோ தெரியலைங்க. இவன் இப்படியே நின்னுடுவானோன்னு மனசு அடிச்சுக்குது. அன்னிக்கு எப்டி நீங்க இவனை நாம வச்சிக்க ஒத்துக்குவீங்களோ மாட்டீங்களோன்னு தவிச்சேனோ… அதேமாதிரி தவிப்பு இப்பவும்…”


“ரஞ்சி, ரிலாக்ஸ்! இப்போ எனக்கு சாப்பாடு போடுவியா மாட்டியா?” என்று கேட்டு மனைவியின் கலக்கத்தைப் போக்க நினைத்த பிரபஞ்சனுக்கும் கூட, அன்று அநாதரவாக நின்ற குழந்தைப் பையன் தேம்பலுடன் நிரஞ்சனாவின் நிறைமாத வயிற்றைக் கட்டிக் கொண்டிருந்த காட்சியும், அவனின் மௌனமும் அழுத்தமுமே நினைவில் மிதந்தது.


இசைக்கும்...

Comments

  1. 😟 அக்னி மாதிரி தனிச்சி விடப்படுற ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர்கள் கிடைக்கனும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25