கருவறை கீதம் -18

 


அத்தியாயம் 18


வருடம் 2014


பாஸ்கரன் சென்னை வந்து சில மாதங்கள் சென்றிருந்தது.  அவ்வப்போது ஸ்ரீரங்கம் போய் கலியபெருமாளைப் பார்த்து வந்தான். முதலில் சிலமுறை அவன்முன் அவர் தன்‌ மன உளைச்சலை காட்டிக்கொள்ளவில்லை. தன்னை மனோதிடமானவராகவே  காட்டிக்கொண்டார்.


“எப்டி இருக்கீங்கப்பா?”


“எனக்கென்னடா? உங்கம்மா போயிட்டா, அர்ஜூனையும் பார்க்க முடியலயேங்கறதைத் தவிர, மூணு வேளையும் நல்லா சாப்பிட்டு தெம்பா இருக்கேன்.”


“ம்ம்!”


“அனு எப்டி இருக்கா? அர்ஜூனை ஸ்கூல்ல சேர்த்துட்டியா?”


“ஆமாப்பா! சனாவும் அர்ஜூனும் ஒண்ணா தான் படிக்கறாங்க.”


“ஹாஹா… அந்தக் குட்டி சந்தனம் என்கிட்ட கோவிச்சுக்குதுடா பாஸூ. அனு அந்தக் கழிசடை காணாம போனதுக்கு தாத்தா தான் காரணம்ன்னு சொல்லிருக்கா போலருக்குது! ‘எனக்கு சஞ்சுத்தான் வேணும் தாத்தா. கூட்டி வா’ன்னு அழுவுது!” என்றவர் குட்டி சந்தனாவின் பேச்சை நினைத்து பெரிதாக சிரித்தார். பின் ஏதோ தன் போக்கில் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.


“அவன் நம்ம குடும்பத்துல பிறந்திருந்தா நம்ம சந்தனத்தை அவனுக்கே கட்டி வச்சிருக்கலாம். என்னடா?” 


பாஸ்கரன் அப்போதுதான் அப்பாவை ஊன்றி கவனித்தான். அவரின் சிந்தனை வேறெங்கோ வெகு தூரத்தில் இருப்பதாகத் தெரிந்தது. அப்பா தன் மகன் சஞ்சுவைத் தான் சொல்கிறாரா என்ற ஆச்சரியமும் எழுந்தது.


“இப்பவும் சஞ்சு நம்ம குடும்பம்தான்ப்பா! அதோட சனா பிறந்து அஞ்சரை வருஷம்தான் ஆகுது. அதுக்குள்ளே ஏன் இப்டி பேசணும்?”


“........”


“இப்பவும் சஞ்சுவைப் பத்தி உங்களுக்கு தெரிஞ்சதைச் சொல்லமாட்டீங்களாப்பா?”


“......”


“அப்பா என்ன யோசிக்கறீங்க?” அவன் அவர் தோள் தொட்டு கேட்ட பின்னர் நினைவு வந்தவரைப் போல் திரும்பினார்.


“ஹான்! என்ன கேட்ட?”


“சஞ்சுவைப் பத்தி ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா. ப்ளீஸ்…”


“அவன் எங்கே போனான்னு எனக்கென்னடா தெரியும்? புள்ள பிடிக்கறவன் கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை என்கிட்ட வந்து கேட்டுட்டு இருக்க?” எனக் கேட்டவரின் கம்பீரமும் அழுத்தமும் மீண்டும் திரும்பியிருந்தது.


இப்படியாக ஒவ்வொரு முறை இவன் ஸ்ரீரங்கம் சென்றுவிட்டு வரும்போதும் அனு ஆவலாக இவன் முகம் பார்ப்பாள். “மாமா ஏதாவது சொன்னாரா?”


“விடு அனு! நான் சிலபேர் கிட்ட சொல்லி வச்சிருக்கேன். திருச்சில டிடெக்டிவ் ஆளுங்களையும் ஏற்பாடு செஞ்சிருக்கோம்ல? அவங்களும் ஏதாவது தகவல் சொல்லுவாங்க. வெய்ட் பண்ணுவோம்.” என்று சமாதானம் செய்வான் இவன்‌.


அதன்பின் எத்தனையோ வாடகைத்தாய் முறையில் குழந்தை என்று நடிகைகளைப் பற்றிய செய்திகளைச் சாதாரணமாகக் கடந்தார்கள் மக்கள். அதையெல்லாம் வாசிக்கும்போது என் பிள்ளையை மட்டும் துரத்திவிட்டனரே என்று இவளுக்கு வயிறு குலுங்கும்.


சில வருடங்களில், ஸ்ரீரங்கம் செல்லும் பாஸ்கரன் ஒவ்வொரு முறையும் அப்பாவின் நடவடிக்கைகளிலும் உடல்நிலையிலும் வித்தியாசத்தைக் கண்டான். அக்கம்பக்கம் இருப்பவர்களும், வீட்டு வேலைகளில் உதவிக்கு வந்துவிட்டு போகும் இரு பெண்களும் கூட அவர் நடவடிக்கையின் மாற்றம் குறித்து சொன்னார்கள். அவர் தனிமையில் கிடந்து பித்து நிலைக்கு ஆளாகிக் கொண்டிருப்பது புரிந்து, அவன் அவரைத் தன்னுடன் சென்னை வருமாறு அழைத்தான். 


“அர்ஜூனை இங்கே அழைச்சுட்டு வாடா பாஸூ! அவனைப் பார்த்தா என் காயமெல்லாம் ஆறிடும். அப்புறம் அந்தக் கழிசடை என் கண்ணுக்கு தெரியமாட்டான். என் குல வாரிசு அர்ஜூனைக் கண்ணிலே காட்டுடா!” என்றவர் பிடிவாதமாய்க் கெஞ்ச, 


“நீங்க அங்கேயே வந்து இருந்து அர்ஜூனோட டைம் ஸ்பெண்ட் பண்ணுங்கப்பா. உங்களுக்கும் ஒரு மாற்றமா இருக்கும்ல?” என்றான்.


“செத்தாலும் பரம்பரை வீட்டுலேயே நானும் போகணும் பாஸு! உங்கம்மாவுக்கு அந்த கொடுப்பினை இருந்திருக்குது பாரேன்!”


பாஸ்கரன் நிதானித்தான். அனு அர்ஜூனைத் தரமாட்டாள். அவளைக் காயப்படுத்தி குழந்தையைத் தூக்கி வர தன்னால் இயலாது. ஆக, இருவரின் மனக்காயங்களும் ஆற சிறிது காலம் ஆகட்டும் என்று இவனும் அவரைப் பொறுத்திருக்குமாறு சொன்னான்.


“அட்லீஸ்ட் நீங்க அங்கே ஒருமுறை வந்து அவனைப் பார்த்துட்டு போங்கப்பா! அனு முந்தி மாதிரி இல்லை. எதுவும் சொல்லமாட்டா!”


“அப்போ நீ குழந்தையை அழைச்சுட்டு வரமாட்டியா?” எனக் கேட்டவர் அதன்பின் பேச மறுத்தார்.


இரண்டு பிடிவாதங்களுக்கு இடையில் அவனும்தான் வேறென்ன செய்துவிட முடியும்? தைரியம் சொல்லிவிட்டு வருவதைத் தவிர அவனுக்கும் வேறு வழி தெரியவில்லை.


நிர்மலா சென்னையில் அண்ணன் வீட்டிற்கு அவ்வப்போது கணவனுடன் வந்து பார்த்து செல்வாள். அனுவின் மனநிலையை எண்ணி அவளுக்கும் வருத்தம்தான். ஆனால் சஞ்சய் தொலைந்ததைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவள் அப்பா பெண்! அப்பாவின் குணம் பற்றி முழுமையாக அறியாத பெண்! 


இவள் ஸ்ரீரங்கத்தில் அம்மா வீட்டிற்கு சீராட போகும் போதெல்லாம் சஞ்சயுடன் தன் மக்களைச் சேர்த்து விளையாடும் அனுவின் மேல், அவள் அப்பாவைப் போலவே இவளுக்கும் ஆத்திரம் பொங்கும். பாஸ்கரன் வீட்டிலிருந்தால் அவனுக்காக பொறுத்துப் போவாள். இல்லையெனில் அனுவிடம் முகத்தில் அடித்தாற்போல் பேசி தன் பிள்ளைகளை இழுத்துக்கொண்டு போய்விடுவாள்.


இதற்காகவே அனு, ‘குழந்தைகளுக்குள் என்ன தீண்டாமை?’ என்று பாஸ்கரன் இருக்கும்போது குழந்தைகளை ஒன்றாக வைத்து விளையாடுவாள். சில நேரம் அம்மாவின் கண்ணிற்கு பயந்து பெரியவனான அவினாஷ் வரவில்லை என்று சொல்லிவிட்டு, விளையாடுபவர்களை ஏக்கமாக பார்த்திருப்பான். சஞ்சய்யுடன் விளையாடியதற்காக அவினாஷ் பலமுறை அடி வாங்கியிருக்கிறான்.


ஆனால் சின்னப் பெண்ணான சந்தனமாரி அப்போதே அவளுக்கு பிடித்ததை மட்டும்தான் செய்வாள். அம்மாவோ, தாத்தாவோ, அத்தையோ யாராக இருந்தாலும் சரி, அவளை அவள் விருப்பமில்லாமல் எதையும் செய்ய வைத்துவிட முடியாது. அதைச் சரியாக புரிந்து வைத்திருந்த அனு, அர்ஜூனை எப்படி சஞ்சய் மேல் பாசத்துடன் இருக்கப் பழக வைத்தாளோ, அதேபோலவே சந்தனாவையும் சஞ்சய்யுடன் பழக வைத்திருந்தாள். அதன்பொருட்டு சந்தனமாரியின் பிடித்தத்தில் முதலாவதாக இடம்பெற்றிருப்பவன் அவளின் ‘சஞ்சுத்தான்!’


ஆக, அனு சொல்லாமலேயே ஸ்ரீரங்கத்துப் பாட்டி வீட்டிற்கு வந்தால், சந்தனாவின் கண்கள் முதலில் தேடுவது சஞ்சய்யைத் தான்! இதற்குத்தான் என்றில்லாமல் எல்லாவற்றுக்கும் அர்ஜூனுக்கும் சந்தனாவிற்கும் ‘வாய்க்கா தகராறு’ வந்துகொண்டே இருக்கும். அப்போதெல்லாம் நாட்டாமையாக இருந்து தீர்ப்பு சொல்பவன் குட்டி சஞ்சய். தீர்ப்பு சந்தனமாரிக்கு சாதகமாக வந்துவிட்டால் நாட்டாமைக்கு பூக்கரங்களின் அணைப்பும் முத்தமும் கிடைக்கும். 


“அய்யே… மாரியாத்தா பல்லு விளக்கலைம்மா!” என்று குட்டி நாட்டாமை, பெரிய நாட்டாமையான அனுவிடம் சொல்ல, அதில் அர்ஜூன் பால் பற்கள் தெரிய அண்ணாந்து சிரிப்பான்.


நிர்மலா எத்தனையோ முறை மகளிடம் அவன் சாக்கடை, அழுக்கு என்றெல்லாம் சொன்னபோதிலும், “சஞ்சுத்தான் வாசம்…” என்றவள் மிழற்றுவது, கண்கள் கலங்கி, உதட்டைப் பிதுக்கி நின்றிருக்கும் சஞ்சுவின் சிதிலமாகியிருந்த சின்ன இதயத்திற்கு மருந்திட்டிருப்பதை அவள் அறிந்திருக்கமாட்டாள்.


பெரியோர்கள் புரிந்துகொள்ளாமல் போனாலும் பிற்காலத்தில் தங்கள் குழந்தைகள் அவர்களுக்குள் பிரிவினையில்லாமல் ஒருமித்து வாழவேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தைகளுக்குள் நேசத்தை விதைத்தாள் அனு.


இப்போது சென்னைக்கு வந்த பின்னரும் அதே கதையே தொடர்ந்தது. இனி அண்ணன் வீட்டில் சஞ்சய் இல்லை என்ற நிம்மதியில் நிர்மலா வர ஆரம்பிக்க, வந்தவுடனேயே அனு சந்தனமாரியிடம் ஆரம்பிப்பாள். “சனாக்குட்டி, சஞ்சுத்தான் எங்கே?”


அவளைப் போலவே குழந்தையும் கேட்கும். “சஞ்சுத்தான் எங்கே?”


“ஊருக்கு போயிருக்கானாம். சனா ஸ்கூல் போகும்போது வருவானாம்.”


இதையெல்லாம் பார்க்கும்போது நிர்மலா கடுகடுப்புடன் எரிந்து விழுவாள். “குழந்தைக்கிட்ட என்ன பேசறீங்க? அவன் போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது. இனியும் வரவா போறான்? இல்லைன்னு ஆனதுக்கப்புறம் ஏன் நாம பசங்க மனசைக் கெடுக்கணும்?”


குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை எந்த பொருளோ, நபரோ கண்ணில் படவில்லை என்றால் கருத்தில் கொள்ளாமல் மறந்துப் போவார்கள். ஆனால் சந்தனாவும் அர்ஜூனும் சஞ்சுவை மறக்கவில்லை. காரணம் அனு! 


அவனை மறக்கவே விடாமல் இரு குழந்தைகளிடமும் விளையாடும்போது, உணவுண்ணும் போது, தூங்க வைக்க கதை சொல்லும்போது கூட, சஞ்சுவில் ஆரம்பித்து சஞ்சுவிலேயே முடித்தாள். அவன் புகைப்படங்களை பாஸ்கரனின் குழந்தை வயது புகைப்படங்களுடன் ஒப்பிட்டு காட்டினாள். 


இத்தனை நாட்கள் அண்ணனுக்காக என்று பொறுத்து பார்த்த நிர்மலா, இன்று எரிச்சல் மிகுதியில் கத்திவிட்டாள். அத்துடன் தன் அப்பாவை அண்ணன் கை கழுவிவிட்டான் என்ற ஆத்திரம் வேறு அவள் அடிமனதில் புகைந்து கொண்டேயிருந்தது.


அனைத்துக்கும் காரணம் அண்ணன் மனைவியாகிய இந்த அனுதானே?


“நிர்மா!”


“உனக்காக நானும் பொறுத்து போகலாம்ன்னு பார்த்தா வர்ற நேரமெல்லாம் அந்த கழிசடையைப் பத்தியே பேசுறாங்க.”


“இன்னொரு முறை என் பிள்ளையைக் கழிசடை அது இதுன்னு பேசின… பல்லைப் பேத்துடுவேன்.” என்று ஆங்காரமாய் எழுந்து வந்தாள் அனு.


இப்போது சில நாட்களாகதான் அனுவின் மன அழுத்தம் சற்று மட்டுப்பட்டிருக்கிறது. அர்ஜூனைப் பள்ளிக்கு அழைத்துப் போய் வருகிறாள்; வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். சிற்சில நேரங்கள் தவிர்த்து அவனை நன்றாகவே கவனித்துக் கொள்கிறாள். காரணம் முன்பு போல் சஞ்சயைக் கரித்துக் கொட்டும் ஆட்கள் சுற்றிலும் யாருமில்லை. காமாட்சி இங்கேதான் இருக்கிறார். இருந்தும் இறப்பிற்கு முன் தன் அக்கா சொன்ன போதனையும் அனுவின் நிலைமைப் புரிந்ததாலும் அவனைப் பற்றி பேசுவதில்லை. 


சஞ்சய் இல்லாத போதும் அவன் பெயரைச் சொல்லி பாஸ்கரனும் அர்ஜூனும் கொண்டாடுகின்றனர். அதுவே அனுவிற்கு மகத்தான மருந்தாக இருக்கிறது. அது தன் பிள்ளை எங்கோ நலமுடன் வாழ்வான் என்ற ஒரு சராசரி தாயின் மனநிலை!


அப்படியிருக்க இன்று நிர்மலா தனது பேச்சால் அனுவின் மன ஓலங்களைத் தூண்டிவிட்டு விட்டாள். “எவளோ ஒருத்தி வயித்துல பிறந்தவனைக் கழிசடைன்னு சொல்லாம வேறென்ன சொல்லச் சொல்றீங்க?”


அனு அவளை அடிக்க எத்தனிக்க, தடுத்துப் பிடித்துக்கொண்ட பாஸ்கரன் சொன்னான். “நிர்மா, நீ என் குழந்தையை- உன் அண்ணன் குழந்தையைப் பேசறங்கறதை மறந்துடாதே! நான்னா அது என் குடும்பமும்தான்! என் குடும்பம்ன்னா அது சஞ்சுவும்தான்!”


கண்டிப்புடன் சொல்லிவிட்டு அனுவை ஆற்றுப்படுத்த உள்ளே அழைத்துப் போய்விட்டான். கூடவே இரண்டு வாண்டுகளும் பின்னேயே ஓட,


“அப்போ சஞ்சு இனி வரமாட்டானாம்மா?” என்று கண்கலங்கக் கேட்டு அவளிடம் நான்கடிகளை வாங்கிக்கொண்டான் அவினாஷ்.


அனுவை ஆறுதல்படுத்தி காவலுக்கு அந்த இரண்டு சின்ன ‘எஸ்கார்ட்ஸை’ நிறுத்திவிட்டு, தங்கையைச் சமாதானப்படுத்த வந்தான் பாஸ்கரன். “அனுவோட ஹெல்த் பத்தி தெரியும்ல நிர்மா? அப்புறமும் ஏன் அவளை ட்ரிக்கர் பண்ற மாதிரி பேசற?”


“திரும்பத் திரும்ப அவனைப் பத்தியே பேசவும்…”


“திரும்பத் திரும்ப அவனைப் பத்தி பேசறதாலதான் இன்னும் என் அனு உயிரோட இருக்கா நிர்மா! ப்ளீஸ் புரிஞ்சுக்கோ!”


“ம்ம்! டாக்டர் என்ன சொல்றாங்க?”


“இப்போ எவ்வளவோ பரவாயில்லை. அர்ஜூனை நல்லாவே கவனிச்சுக்கறா! சித்தியும் பேச்சுத் துணைக்கு இருக்கறதால நல்ல இம்ப்ரூவ்மெண்ட்!”


“பார்த்து! சித்தியை அடிச்சிட போறாங்க.” என்று முகத்தைச் சுருக்கிகொண்டு சொன்னாள், சற்றுமுன் அனு தன்னை அடிக்க வந்ததில் உள்ள மனத்தாங்கலில்!


“ஹாஹா… சித்தியும் ரொம்பவே மாறிடுச்சு. சஞ்சுவைப் பிடிக்கலைன்னாலும் முன்னாடி மாதிரி வெடுக் வெடுக்குன்னு பேசறதில்லை.”


“ஆங்! வேற போக்கிடம் இல்லையே… அதனால இருக்கும்.”


இப்படித்தான் அண்ணி -நாத்தனார் இடையேயான உறவு சென்றது.


வருடம் 2018


ந்தனா, அர்ஜூனிற்கு பத்து வயது இருக்கும்பொழுது, நிர்மலாவின் கொழுந்தன் மகளின் நீராட்டு விழா என்று அழைத்திருந்ததால், விசேஷத்திற்கு பாஸ்கரன் குடும்பத்துடன் போயிருந்தான். அங்கே வந்திருப்பவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த நிர்மலா, வந்திருந்த நண்டு சிண்டுகளின் நச்சரிப்பு பொறுக்காமல், அங்கே இருந்த வயது போன பாட்டி ஒருவரிடம் அவர்களைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்ல, சற்றுநேரம் கதை சொல்லி அவர்களை மேய்த்துக் கொண்டிருந்த பாட்டி, பின்னர்   முருகன் பாடல்களைப் பாடிக் காட்டினார். 


“வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன்…”


அங்கே இருந்த குழந்தைகளில் சந்தனா, அர்ஜூன்தான் பெரிய பிள்ளைகள். சந்தனா கேட்டாள். “யாரு பாட்டி வருவான்?”


“ஆங்… உங்க அயித்தான் வருவான். பேசாம பாட்டைக் கேளுடி!” பாடல் தடைப்பட்ட கோபத்தில் அவர் சொல்ல,


“அயித்தான்னா யாரு?” என்று அடுத்தக் கேள்வி வந்தது.


“உம்மாமன் மவன் தாண்டி உன் அயித்தான்.” என்றார் அந்த கொங்குப் பாட்டி!


“இவனா? கிகிகிகி…” 


“போ பாட்டி, என் பேரு அயித்தான் இல்லை. அர்ஜூன்.” 


“பாட்டைக் கேளுடா பேராண்டி…”


சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த

சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி…”


அர்ஜூனின் காதில் கிசுகிசுத்தாள் சந்தனா. “பாட்டி தப்பு தப்பா பாடுதுடா அஜூ. மாமா பேரு பாஸ்கர்தானே?”


இரண்டும் தங்களுக்குள் என்னவோ பேசிக்கொண்டு அறையிலிருந்து வெளியேறி தடதடவென பாஸ்கரனிடம் ஓடி வந்ததுகள். “பாஸ் மாமா, பாட்டி மாமன் மகன் வருவான்னு பாடினாங்க. அப்போ நம்ம சஞ்சுத்தான் தானே வருவான்?”


பாஸ்கரன் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் விழிக்க, “ஆமாம்பா, வந்து வரம் தருவானாம்! அப்போ அம்மா நீங்க, நானு, சனா… எல்லாரும் ஜாலியா பீச்சுக்கு போகணும்.” என்றான் அர்ஜூன்.


“நான் என்னோட பக்கெட், ஷாவெல் எடுத்துட்டு வர்றேன் மாமா. சஞ்சுத்தானும் நானும் வீடு கட்டுவோம்.”


கடந்து போன நிர்மலா இவர்களின் பேச்சைக் கேட்டு நின்றவள், அனு அருகே இல்லாததைப் பார்த்துவிட்டு, “அவன் வரமாட்டான். பெரியவங்களாகி நீயும் அர்ஜூனும்தான் வீடு கட்டணும்.” என,


அவள் சொன்னதின் உள்ளர்த்தம் புரிந்த பாஸ்கரன் கடுகடுப்புடன் கேட்டான். “நிர்மா, எதுக்கு இப்போ இந்த பேச்சு?” 


“என்‌ மனசுல ரொம்ப நாளாவே இருந்தது தான்’ண்ணே! நம்மப் பக்கம் சொந்தத்துல முடிக்கிறது ஒண்ணும் புதுசில்லையே? எனக்கும் பிறந்த வீட்டு சொந்தம் விட்டுப் போகாதுல்ல?”


“ஆமாமா புதுசே இல்ல! சஞ்சுவுக்கு சனாவைக் கொடுத்தா கூட உனக்கு பிறந்த வீட்டு சொந்தம் என்னைக்கும் விட்டுப் போகாது.” என்றாள் நிர்மலாவின் பேச்சைக் கேட்டவாறு வந்த அனு!


பாஸ்கரன், “ரெண்டு பேரையும் தூக்கிப் போட்டு மிதிக்கப் போறேன் இப்போ! உங்க பாலிட்டிக்ஸ்ல ஏன் குழந்தைங்களை வச்சு பேசிட்டிருக்கீங்க? படிச்ச உனக்கும் அறிவில்லையா அனு?” என்று அடிக்குரலில் இருவரையும் காய்ச்சிவிட்டான்.


அன்று முதல் இருவரிடையேயும் ஒரு போட்டி மனப்பான்மையே வந்திருந்தது. பாஸ்கரன் இல்லாதபோது சிறுமியான சந்தனமாரி சஞ்சுவுக்கு என்று அனுவும், அர்ஜூனுக்கு என்று நிர்மலாவும் பனிப்போரில் பறைசாற்றிக் கொண்டார்கள்.


இதில் நிர்மலாவுக்கு ஒரு கை கூடியது. அது அவளின் சித்தி காமாட்சியன்றி வேறு யாராக இருக்கமுடியும்? 


தத்தம் சண்டையில் இருவருமே சந்தனமாரியின் குணத்தை, யார் என்ன சொன்னாலும் அவள் மனது வைத்தால் ஒழிய அவள் மனதுக்குள் யாரும் நுழைய முடியாது என்பதை நினைக்க மறந்தனர்.


வருடம் 2034


“உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டிருக்கே சனா?” நிர்மலாவின் கத்தலில் அலைபேசி அதிர்ந்தது.


“எங்க மேனேஜரை’ம்மா!” அலட்சியம் போல் சொன்னாள் சந்தனா. இரவு உணவிற்காக இன்ஸ்டென்ட் நூடுல்ஸைச் சமைத்துக் கொண்டிருந்தாள்.


அவள் பதிலில் இவளுக்கு இரத்த அழுத்தம் அதிகரித்தது. “சனாஆஆ!”


“டிசைனிங் செஞ்சு கொடுத்தது, ப்ரொடக்ஷன் வேலை எந்த அளவுல இருக்குது, ஃபாப்ரிகேஷன், சர்ஃபேஸ் ஃபினிஷிங்ன்னு ஏகப்பட்ட வேலை இருக்குதும்மா. இதையெல்லாம் இந்த பத்து நாளைக்குள்ள நான் முடிக்கணும். அதுக்கப்புறம்தான் லீவைப் பத்தி அந்தாள் கிட்ட பேச முடியும்.”


“பூ வைக்கறதுல ஆரம்பிச்சு வளையல் போடற வரை பிரகதிக்கு எல்லாம் நீதான் செய்யணும்டீ! யாரோ மாதிரி கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி வருவியா நீ?”


“அதுக்கு முன்னாடியே வரப் பார்க்கறேன்ம்மா!”


“தாலி, புடவை வாங்கறதுக்கும் வரல!”


“அனு அத்தை வந்தாங்க தானேம்மா? அத்தைக்கு எல்லாமே அவங்களே அவி விஷேசத்துக்கு செய்யணும்ன்னு ஆசை!” என்று சொல்லிக் கொண்டிருக்க, மறுமுனையில் அலைப்பேசி கை மாறியது.


“உடனே கிளம்பி வரல… உங்க மேனேஜர்க்கு கால் பண்ணி உன்னை வேலையிலிருந்து ரிலீவ் பண்ண சொல்லிடுவேன்‌ ஜாக்கிரதை!” என்ற அண்ணனின் குரல்!


அவினாஷ் பெரிதாக எந்த விடயத்திலும் தலையிடமாட்டான். அப்படி தலையிட்டு, அதை முடிக்கவேண்டும் என அவன் நினைத்தால் அதிரடியாக ஏதேனும் செய்து முடித்துவிட்டு தான் ஓய்வான்.


பிரகதியைக் கை காட்டியதும் இந்த அதிரடி குணத்தால்தான். அதனால்தான் அப்போது நிர்மலாவே அடங்கிப் போனாள். இப்போது சந்தனாவிற்கும் அடங்கிப் போவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.


“அநியாயம் பண்றடா அவி!”


“ஆஹ் மேடம் ரொம்ப நியாயவாதிதான்! உடனே கிளம்பு! எதுல டிக்கெட் புக் பண்ணட்டும்?”


“ப்பே, எனக்கே புக் பண்ணிக்க தெரியும். ஆனா ரெண்டு நாள் கழிச்சுதான் வருவேன்.” என்று ரோஷமாக சொல்லிவிட்டு, நாளை செய்யவேண்டிய வேலைகளை மனதிற்குள் வரிசைப்படுத்த ஆரம்பித்தாள்.


                   *********


"அந்த பையன் அர்ஜூன் கூப்பிட்டிருந்தான் அக்னி.” என்றான் பிரபஞ்சன். 


காலை உணவு நேரம்! அனைவரும் டைனிங் ஹாலில் இருந்தனர்.


வேண்டுமென்றே மறந்தாற் போல் கேட்டான் அக்னிஸ்வரூபன். “எந்த அர்ஜூன்ப்பா?”


“அந்தப் பொண்ணு சனாவைக் கட்டிக்கப் போற பையன்!” -நிரஞ்சனா.


கேட்காமலே இருந்திருக்கலாம். இவன் விரலிடுக்கில் எடுத்த சப்பாத்தி விள்ளலுக்கு ‘வீசிங்’ வந்தது. “என்னவாம்?”


“சென்னைக்கு போகும்போது சந்தனாவை நம்மளோட அழைச்சிட்டு வர முடியுமான்னு கேட்டான்.”


“அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிடுங்கப்பா!” என அனைவரையும் முந்திக்கொண்டு சொல்ல, 


“என்ன அக்னி இப்டி சொல்ற?” சற்று திகைப்புடன் கேட்டான் பிரபஞ்சன்.


“ஏன் அவங்க வந்தா என்ன?” - பிரகதி.


“நல்ல பொண்ணுடா அக்னி.” - நிரஞ்சனா.


அபிராமி, “ஆமா, வால்தான் ஜாஸ்தி! என் பக்கத்துல உட்கார வைக்காத அவளை!” என்றார் மருமகளிடம்.


“கார்ல நமக்கு மட்டும்தான்ப்பா இடமிருக்கும்! இன்னொரு ஆள் வந்தா பாட்டி கொஞ்சம் சாய்ஞ்சுக்கணும்னா கூட கஷ்டமா இருக்கும்.”


“நானும் அவங்களும் பின்னாடி சீட்’ல இருந்துக்கறோம்.” -பிரகதி.


“நீ அவ மேல இருக்க ஹீரோயின் வொர்ஷிப்ல பேசற ப்ரூ காஃபி!”


“அவ தனியா கிளம்பறாளாம். அவங்க வீட்ல நைட் டைம்ன்னு யோசிக்கறாங்களாம். நாம எப்டிடா மறுக்கமுடியும்?”


“அவ படிப்பு, வேலைன்னு எல்லாமே இங்கேதான்னு சொன்னாங்க. அப்டி பார்த்தா ஆல்மோஸ்ட் எட்டு வருஷம் இங்கேதான் குப்பைக் கொட்டுறா! இத்தனை வருஷத்துல அவ தனியா போனதே இல்லையாமா?”


அனைவருக்கும் பிடிவாதம் பிடிக்கும் இந்த அக்னி புதியவனாகத் தெரிந்தான். அதனைத் தத்தம் பார்வையிலும் வெளிப்படுத்தினர்.


“உனக்கு இஷ்டமில்லைன்னா வேண்டாம். ஆனா உன் விருப்பம் தெரியாம நான் அவன்கிட்ட சரின்னு சொல்லிட்டேனே…”


அபிராமி, “இப்போ அவ நம்மளோட வந்தா என்னடா குறைஞ்சிடுது? அவளை நாம கைக்குள்ள போட்டு வச்சிக்கிட்டா நாளைக்கு நம்மப் பொண்ணுக்குத்தான் நல்லது! என்னம்மா சொல்றே?” என்று மருமகளைப் பார்க்க, நிரஞ்சனா அதை ஆமோதிக்க,


பிரகதி, “அவங்களைக் கைக்குள்ள, கால்குள்ளே எல்லாம் யாரும் போட்டுக்க முடியாது பாட்டி!” என,


அக்னிக்கு பட்டென்று புரையேறிக் கொண்டது. ‘அக்னி வர வர நீ சரியே இல்லடா!’ உள்ளூரச் சிரிப்புடன் மனதினுள் பேசிக்கொண்டான். 


“யாரா இருந்தாலும் எப்பவும் ஹானஸ்ட்டா இருந்தா தான் சனாவுக்கு பிடிக்கும்.” என்றாள் அவள்.


“சோ, பாட்டில இருந்து பேத்தி வரை எல்லாரும் அவளுக்காக க்ரீன் ஃப்ளாக் பிடிக்கறீங்க? சரிதான்!”


“உனக்கு வேண்டாம்ன்னா நான் இப்பவே அர்ஜூனைக் கூப்பிட்டு தப்பா எடுத்துக்க வேணாம்ன்னு சொல்லிடறேன்.” என்ற பிரபஞ்சன் இடக்கையால் அலைப்பேசியை உயிர்ப்பிக்க,


“இருக்கட்டும்ப்பா! சரின்னு சொல்லிட்டு இப்போ கூட்டிட்டு வர முடியாது சொன்னா நல்லா இருக்காது.” எனவும், அப்பாவின் முகம் மலர்வதை ஒருவித அவஸ்தையுடன் பார்த்தான் அக்னிஸ்வரூபன்.


அலுவலகம் போய் அமர்ந்தவனுக்கு வேலையில் மனம் செல்லவே இல்லை. அபிராமி பாட்டி, பிரபஞ்சன், நிரஞ்சனா என அனைவரின் உறவுகளும் தமிழ்நாட்டில்தான் இருப்பதால் கல்யாணத்தை மாப்பிள்ளை ஊரான சென்னையிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவாகியிருந்தது.


அந்த நியாயமான காரணத்தால் இவனால் மறுத்து பேச முடியவில்லை. அதுவும் பாஸ்கரனும் ஸ்ரீரங்கத்தை விட்டு சென்னையில் செட்டில் ஆகிவிட்டதில், அங்கே போய் கல்யாணத்தை வைக்க வேண்டுமா என அவ்வளவு யோசித்தான். அவன் வளர்ந்துவிட்ட போதிலும், உலகம் சுருங்கிவிட்டதையும் இனி அடுத்து நடக்கவிருப்பதையும் எண்ணி, நிரம்பவே தயக்கமும் மனதில் பாரமும் ஏறிக்கொண்டது. திருமணம் முடியும் வரை அம்மாவையும் அப்பாவையும் (அனு, பாஸ்கர்) எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று கலங்கிப் போனான்.


இவன் தினமும் மனதில் பூஜிக்கும் அம்மாவை அத்துணை அண்மையில் பார்த்துக்கொண்டு தன்னால் யாரோ போல் இருந்துவிட முடியுமா?


இதில் சந்தனா வேறு! அவளாவது தன் மனதிற்கு பிடித்தவளாக இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது தனக்கு பிடித்தவள் அவினாஷின் தங்கையாக, தன் அத்தை மகளாக இல்லாமல் இருந்திருக்கலாம். அவள் அருணைக் காதலிக்காமல் இருந்திருக்கலாம். அவளுக்கு அவர்கள் அர்ஜூனை மணம் பேசாமல் இருந்திருக்கலாம். ஏ எப்பா! இந்த விடயத்திலேயே அக்னிக்கு நிரம்பவும் குழப்பம்தான். ஒருவேளை அவள் அருணைக் காதலிப்பதை வீட்டில் சொல்லாமல் இருக்கிறாளோ என்னவோ! இருவரும் ஒரே வயது என்பதால் அர்ஜூனுக்கு மட்டும் தெரிந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்? இரண்டும் கூட்டுக் களவாணிகள் போல் நடந்துகொள்கிறதுகள்!


சரி எப்படியோ போகட்டும் என்று ஒதுங்கி போகலாமென நினைக்கும்போது, இப்போது அவளைத் தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டுமாம்! “எவ்ளோ நேரம்டி நான் என் கண்ணைக் கட்டுப்படுத்தி வைப்பேன்?” என வாய்விட்டே சொன்னான்.


அவளைக் கண்டாலே கண்கள் காதலுடன் மோகத் துகள்களைத் தெறிக்கவிடுகின்றன! சந்தனா வேறு புத்திசாலியல்லவா? 


அவினாஷ் தான் மாப்பிள்ளை என்று தெரிந்தபோதே அப்பாவிடம், ‘இந்த இடம் வேண்டாம் என்றிருக்கலாமோ?’ என்று ஒரு கணம் சிந்தித்துவிட்டு அதற்காக தன்னேயே நிந்தித்துக் கொண்டான்.


‘ச்ச! தப்பா யோசிக்கறேன். பிரகதிக்காக தானே இத்தனையும்! என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்.’


இத்தனை நெருங்கிய பிறகு எப்படியும் விடயம் வெளிவந்தே தீரும் என்று தெரியும். இவனாலுமே உண்மை அறிந்த பின்னர் சும்மா இருந்துவிட முடியவில்லையே… எத்துணை தூரத்திற்கு சரிவரும் என்று தெரியாத போதும், ஏதேதோ நிழல் காரியமாக செய்து கொண்டிருக்கிறான். ‘இப்போது எதற்கு?’ என்று பிரபஞ்சன் கேட்டதற்கும் கூட சரியாக பதில் சொல்லியிருக்கவில்லை. 


பார்க்கலாம்! அனைவருக்கும் தெரியும் போது தெரியட்டும். அப்படி தெரிய வரும்போது அனைவரின் உணர்ச்சி வெளிப்பாடுகள் எப்படி இருக்குமோ என்பதுதான் இப்போது அக்னியின் கவலை!


இப்படியாக இவன் இங்கே சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போது பிரபஞ்சன் அழைத்தான்‌. “சொல்லுங்கப்பா.”


“அக்னி, அந்தப் பொண்ணு சனா கால் பண்ணிருந்தாடா!”


“.......”


“டேய்?!”


“ஹ்ம்ம்’ப்பா.  என்னவாம்?”


“அர்ஜூன் நம்மக்கிட்ட பேசினது தெரியாம இவ ஃப்ளைட்க்கு டிக்கெட் புக் பண்ணிட்டாளாம். அதனால நம்மளோட வரலை; ஸாரின்னு சொன்னா!”


“ம்ம்!”


“உனக்கும் அவ வர்றதுல விருப்பமில்லையே… அதான் டிக்கெட் கேன்சல் பண்ண சொல்லி நான் எதுவும் சொல்லிக்கலை.”


“ஓகேப்பா!” என்றவனின் குரலில் சுருதி குறைந்திருந்தது.


கைப் பொருளைக் களவுக் கொடுத்தாற் போல் வருத்தம் வந்து நலம் விசாரித்தது. வேண்டாம் என்று ஒரு மனமும்; அவள்தான் வேண்டும் என்று ஒரு மனமும் அக்னியைச் சுழற்றியடித்தது.


‘வேணாம் அக்னி! அவ மனசுல வேற எவனோ இருக்கான்.’


“ஆமா, அருண் இருக்கான்.”


தெரிந்தே அவளிடம் மனதை விடுவது முட்டாள்தனத்தின் உச்சமல்லவா? ஆனாலும்…


இருளில் தெருவிளக்கு வெளிச்சத்தில் சூறைக் காற்றிற்கு பேயாட்டம் போடும் மர நிழலைப் போல் மனமெங்கும் ஒரு நிலையிலில்லாமல் தவித்தது.

இசைக்கும்...

Comments

  1. அத்தியாயத்தின் முடிவு சுவாரசியமாக உள்ளது🙂📕அடுத்த அத்தியாயத்தைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25