கருவறை கீதம் -21


 

அத்தியாயம் 21


க்னி அவினாஷூடன் சில ரெடிமேட் உடைகளுக்காக ‘பர்சேஸிங்’ சென்றிருக்க, மதிய உணவு முடிந்து பிரபஞ்சன் அவன் தலைமுறை ஆண்களுடனும், பெண்கள் கூட்டணி ஒருபுறமும் ஐக்கியமாகியிருந்தனர். 


காலையில் அக்னி மாடியில் அமர்ந்திருந்த அதே இடத்தில் தற்போது பிரகதி இருந்தாள். நிர்மலாவின் கொழுந்தன் ரமேஷின் பிள்ளைகள் இருவருடன் கேரம் விளையாடிக் கொண்டிருந்தாள்.


அர்ஜூன் வந்து மற்ற இருவரையும் கிளப்பிவிட்டான். “அந்த ரூம்ல விர்ச்சுவல் கேம்ஸ் கேட்ஜெட்ஸ் இருக்குது.” 


“வாவ்!” என்று இரண்டும் எழுந்து ஓட,


தன் தோள் மீது விழுந்த கரத்தை ஆச்சரியமாகப் பார்த்தாள் பிரகதி. 


“ஹாய் அண்ணி!” -சந்தனா.


‘அண்ணியா?’ மயக்கம் மயக்கமாக வந்தது இவளுக்கு.


அந்த மயக்கத்தினூடே தயக்கமாக, “சீனியர்…” என்றதில் பக்கென சிரித்திருந்தான் அர்ஜூன்.


அவன் தலையில் தட்டிவிட்டு, பிரகதியிடம், “இன்னுமென்ன சீனியர்? சனா’ன்னு கூப்பிடு.” என்றபடி அமர,


அவளிடம் தலையசைப்பு மட்டும்!


அர்ஜூன் அவளெதிரே இருந்த இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு சொன்னான். “யம்மா! எதுக்கு இப்டி எல்கேஜி பொண்ணு மாதிரி முழிக்கற? அவ உன்னை ஒண்ணும் பண்ணமாட்டா! ஜஸ்ட் பீ ஃப்ரெண்ட்லி!”


பின்னரே கொஞ்சமாக தெளிந்து, “சரி அண்ணா.” என்றாள்.


“ஐ நீட் அ ஃபேவர் ஃப்ரம் யூ அண்ணி.” -சந்தனா.


“நீங்களும்… வந்து… ஃப்ரெண்ட்லின்னு சொல்லிட்டு… அது… நான் ஜூனியர்தானே? சும்மா பிரகதின்னே கூப்பிடுங்களேன்…”


கல்லூரி நிகழ்வை நினைவில் கொண்டு சொன்னாள் சந்தனா.

“அன்னிக்கு நிதினைப் பார்த்து அப்டி சவுண்ட் விட்ட பொண்ணு, என்கிட்ட ஏன் இப்டி நெளியற? இந்த நாத்தனார் - வாழைநார்…”


“அண்ணி - பன்னி…” -அர்ஜூன்.


அவன்மேல் குஷனைத் தூக்கி எறிந்தவள் பிரகதியிடம், “இதெல்லாம் விட்டுட்டு ஃப்ரெண்ட்லியா பேசலாமே?” என,


“பேசலாமே!” என்று குதூகலித்தாள் பிரகதி. அவளுக்கு ஏற்கனவே சந்தனாவின் மீதிருந்த பக்தியில் அவளின் இந்தத் தோழமை உவகையளித்தது. “சொல்லுங்க, என்ன ஃபேவர்?”


“வேற ஒண்ணுமில்ல பிரகதி. எனக்கு உங்க பாட்டியைக் கரெக்ட் பண்ண ஒரு ஐடியா வேணும்.”


“ஈனூ?! பாட்டியா?”


“இதுக்கு ஏன் நீ இவ்ளோ ஷாக் ஆகற?”


வியப்பு மாறாமல் தன் போக்கில் சொன்னாள். “இல்லை… எங்கண்ணனைக் கரெக்ட் பண்றதுக்கு ஐடியா கேட்டாலாவது ஒரு லாஜிக் இருக்குது. ஏன் பாட்டியை?”


சந்தனாவிற்கு முகம் மாற, அர்ஜூன், “உங்கண்ணனைத் தானே? கரெக்ட் பண்ணலாமே?” என்று நமுட்டுச் சிரிப்புடன் சொல்ல, சந்தனாவிடமிருந்து மீண்டும் ஒரு குஷன் அவன் முகத்தில் வந்து விழுந்தது.


இருவரையும் பார்த்த பிரகதி தவறிழைத்தவளாகச் சொன்னாள். “ஸாரிண்ணா! உங்க ரெண்டு பேருக்கும்தானே பேசி வச்சிருக்காங்க! நான் ஏதோ சும்மா…” 


“அட நீ வேற ஏன்மா? இந்த ஜந்துவுக்கு வாழ்க்கை கொடுக்கற அளவுக்குலாம் எனக்கு பெரிய‌ மனசில்லை.”


“இந்த காண்டாமிருகத்தைக் கட்டிக்க எனக்கும் தலையெழுத்தில்லை.” 


பிரகதி இருவரையும் திருதிருவெனப் பார்க்க, “பெரியவங்க ஏதாவது சொல்லிட்டிருப்பாங்க. அதெல்லாம் நாங்க கண்டுக்கறதில்லை. வீ ஆர் ஜஸ்ட் க்ரைம் பார்ட்னர்ஸ்.” என்று கண்ணடித்தாள் சந்தனா.


“அப்போ நீங்க வேற யாரையாவது லவ் பண்றீங்களா?”


“லவ் பண்ணிட்டு அவி மாதிரி என்னையும் ராத்தூக்கம் கெடுத்துக்க சொல்றியா?” என்று நக்கல் த்வனியில் கேட்க,


“ஹய்யோ! அப்போ ஏன் நீங்க எங்க அக்னியை…” அவள் முடிக்கும் முன்பே,


அர்ஜூன் வாய்விட்டான். “நீ என்ன? விட்டா உன் கல்யாணத்துக்கு முன்னாடி உங்கண்ணனுக்கே இவளைக் கன்ஃபர்ம் பண்ணி கட்டி வச்சிடுவ போல?” 


“அர்ஜூன்ன்!!” இத்தனை நேரம் இலகுவாக அவனுடன் விளையாடிக் கொண்டிருந்த சந்தனா, இப்போது ஒரே அதட்டலில் அனல் தெறிக்கவிட்டாள். “யூ கிராஸ் தி பௌண்ட்ஸ் அர்ஜூன்!”


அதற்கு அவனிடம் ஒரு தோள் குலுக்கல் மட்டுமே!


சந்தனா அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள். காலையில் அக்னியுடன் உரசல் ஏற்பட்டதையடுத்து இப்படி பேசுகிறான். எப்போதும் அர்ஜூன் இப்படியெல்லாம் அவளை யாரிடமும் விட்டுக்கொடுப்பதில்லை! விளையாட்டு பேச்செனினும் சிறு எரிச்சல் மூண்டது.


அவளின் அதட்டல் அர்ஜூனுக்கு மட்டுமல்ல தனக்கும்தான் என்று புரிந்த பிரகதி, “ஓகே ஓகே! நீங்க கேட்க வந்ததைக் கேளுங்க. பாட்டியைப் பத்தி நான் சொல்றேன்.” என்று அவளைச் சமன் செய்யும் நோக்கில் சொல்ல,


“ஃபர்ஸ்ட் பாட்டிக்கு பிடிச்ச விஷயம் என்னன்னு சொல்லு. அதுலருந்து ஆரம்பிப்போம்.” என்றாள் இவள்.


சந்தனா தன்னிடம் இலகுவாக பேசியதில் மகிழ்ந்த பிரகதியும் தன் பாட்டியின் விருப்பங்களைப் பட்டியலிட்டாள். அதில் பாட்டி அடிக்கடி கேட்கும் பாடலும் அடக்கம்.


“பாட்டிக்கு அவ்ளோ ஸ்பெஷலா அந்த சாங்?” - அர்ஜூன்.


“ஆமாண்ணா. அந்தக் காலத்துல அது ரொம்ப பாப்புலரான சாங்’ஆமாம்! எங்க வசு அத்தை காலேஜ் கல்ச்சுரல் நடந்தப்போ, அதுல நியூ ரிலிஸ் ஸாங்ன்னு இந்தப் பாட்டைப் பாடறதுக்காக அத்தைக்கு ப்ராக்டீஸ் கொடுத்ததே பாட்டிதானாம்! அதுக்கப்புறமும் பாட்டி அதைப் பாடும்போது, ‘நம்ம காலத்து பாட்டை விட்டுட்டு இதையே பாடறியே?, என்னைப் பார்த்துதானே பாடற?, எனக்காகதானே பாடற?’ன்னு தாத்தா கேலி செஞ்சுக்கிட்டே இருப்பாராம். லாஸ்ட்டா தாத்தா இறக்கும்போது பாட்டியைப் பாட சொல்லி கேட்க, ‘இத்தனை நாளும் உங்களை நினைச்சுதான் பாடினேன். இப்பவும் உங்களுக்காகதான் பாடறேன்’னு சொல்லி சேம் சாங் அழுதுக்கிட்டே பாடினாங்களாம்.”


“சச் அ டிராஜெடி!” என அனுதாபம் கொண்டான் அர்ஜூன்.


“எங்கே காட்டு! ப்ராக்டீஸ் பண்ணுவோம்.”


“ஹஹ… என்ன எங்க பாட்டியைக் கரெக்ட் பண்றதுல இவ்ளோ ஆர்வம்?”


“ப்ளாக் அண்ட் வைட் மூவி ஹீரோயின் மாதிரி சும்மா வெடுக்கு வெடுக்குன்னு முகத்தை திருப்பிக்க வேண்டியது. இந்த சனாவைப் பார்த்து ஒருத்தவங்க முகத்தைத் திருப்பினா சும்மா விட்டுடுவேனா என்ன?” வீரவசனம் போல் சொல்ல, பிரகதிக்கு சிரிப்பு வந்தது.


“என்ன சிரிப்பு?”


“காலேஜ்ல பார்த்த சனாவும் நீங்களும் ஒரே ஆள்தானான்னு நினைச்சேன். சிரிப்புதான் வருது. அங்கே ஆக்ஷன் ஹீரோயின் மாதிரி சும்மா அதிர விடுவீங்க. இங்கே…”


“டம்மி பீஸ் மாதிரி இருக்கா தானே?” - அர்ஜூன்.


“அச்சோ இல்ல! உங்களோட சேர்ந்து சைல்டிஷ்ஷா நடந்துக்கறாங்க.”


“அது! அதைச் சொல்லு. இவனோட சேர்ந்து யாரும் உருப்பட்டதா சரித்திரமே இல்லை.”


இப்போது அர்ஜூன் குஷனைத் தூக்கி சந்தனாவின் மேல் எறிய, அவள் அதை அவன்புறம் திருப்பிவிட, அவர்களுடன் பிரகதியும் இணைந்து கொள்ள, அந்த கூடம் அவர்களின் நகையொலியால் ரம்யமாக மீட்டப்பட்டது.


                      ********


அன்றிரவு உணவிற்கு அனைவரும் அமர்ந்திருக்க, வீட்டுப் பெண்களும் அர்ஜூனும் உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். இரண்டு பெரிய மேசைகளைச் சேர்த்து அனைவரும் அமர்ந்து உண்பதற்கு ஏதுவான உணவு மேசையாக மாற்றியிருந்தனர். 


அனைவரும் கலகலவென பேசியபடி சாப்பிட, அனு அக்னியை மட்டும் அதிகமாக உபசரிப்பதாக அவனுக்கு தோன்றியது. மதிய உணவை அவன்‌ அவினாஷூடன் வெளியே முடித்திருக்க, இப்போது கூடுமானவரை அம்மாவைப் பார்க்காமல் தவிர்க்க நினைத்தான். அக்னியின் உள்ளுணர்வு சரியே என்பது போல் அனு அவனைத் தான் அதிகமாக கவனித்துக் கொண்டிருந்தாள். 


மாலையில் அவள் தந்த ஆப்பம் சாப்பிட்டிருந்தவன், நன்றாக இருப்பதாகப் பாராட்டியிருந்தான். ஒருவேளை இப்போதும் அதுபோல ஏதாவது பாராட்டுவான் என்று எதிர்ப்பார்க்கிறாளா? 


ஆனால் இரவு உணவை சமையல் ஆட்களை வைத்துதான் செய்திருந்தார்கள். அவளுக்கே ஏனென்று புரியவில்லை. அக்னியின் இலையில் குறைவதை, அவன் விரும்பி சாப்பிடும் பலகாரத்தை நோட்டமிட்டபடி இருந்தாள்.


அப்படித்தான் அவனைக் காணும்போது, அவனுக்கு புரையேறப் பார்ப்பதையும் கவனித்தாள். சடுதியில் கையிலிருந்த உணவுப் பாத்திரத்தை அங்கேயே வைத்துவிட்டு அவனருகே விரைந்திருந்தவள், எதையும் சிந்திக்காமல் தண்ணீரைக் கொடுத்து தலையில் தட்டிவிட்டாள். உண்மையில் அவனின் புரையேறும் சப்தம் கூட வெளிப்பட்டிருக்கவில்லை.


அக்னி சட்டென விழியுயர்த்தி பார்க்க, அனுவின் விழிகள் அவனிடம் பாஸ்கரனின் விழிகளைக் கண்டது. அவன் சிகையிலிருந்து கையெடுக்கும் எண்ணமில்லாமல், தன்னிச்சையாய் ஆசிர்வாதம் போல் அங்கேயே கை வைத்திருக்க, அம்மாவின் ஸ்பரிசத்தில் அக்னி அழுகையைத் தொண்டைக் குழிக்குள் நிறுத்தி வைக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.


அவளின் நிலை புரிந்தவன், அரட்டையும் உணவுமாக இருக்கும் யாரும் கவனிக்கும் முன் அவனாகவே அவள் கரத்தை எடுத்துவிட்டான். அப்போதும் அனு அவன் தலைக் கோதிவிட்டே தன் கரத்தை அகற்றினாள். வராத புன்னகையொன்றை வரவழைத்த அக்னி பிரயாசையுடன் இலைக்குள் தலையைக் கவிழ்த்துகொண்டான். அவனின் இரு துளிக் கண்ணீர் உணவோடு கலந்தது.


இந்த நாடகத்தை இரு விழிகள் குறிப்பெடுத்துக் கொண்டு, ‘அன்பின் இதயங்கள் தத்தம் துடிப்பின் ஆற்றலை மௌனப் பரிபாஷையில் கூட பறைசாற்றிவிடுமா என்ன?’ என்று அனுவைக் கண்டு வியந்து, அக்னியைக் கண்டு மர்மமாய்ப் புன்னகைத்தன. 


ஏனோ தன் இதயம் அவனிடமே போகிறது; அவனையே கவனிக்கச் சொல்கிறது. அவன் கண்கள் ஏன்தான் தன் உணர்வுகளை உறுத்துகின்றனவோ? அவனில் நான் என் சஞ்சுவைத் தேடுகிறேனோ?!


இப்படியாக அனு அலைக்கழிந்திருக்க, நிர்மலா அழைத்தபின்னர் தான், அவளின் மாயவலை அறுபட்டு சூழ்நிலை உரைத்தது. அவளின் மனம் மீண்டும் பிறழ்ந்து போக யத்தனிக்கிறது என்றெண்ணியவள், இனி தினமும் தியானப் பயிற்சியை ஒழுங்காக செய்யவேண்டும் என நினைத்துக் கொண்டாள். அதன்பின் அவள்‌ அக்னியை அதிகம் கவனிக்கவில்லை.


அக்னிஸ்வரூபன் விரைவில் உண்டுவிட்டு எழுந்துகொண்டான். அவன் வாஷ்பேசின் அருகே கைக் கழுவிக்கொண்டு நிற்க, கையில் ஏதோவொரு பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு அவனைக் கடந்து சமையலறையினுள் சென்று வந்தாள் சந்தனா.


இவள் வேறு!


உடை மாற்றியிருந்தாள். சந்தன நிற ஆர்கொன்ஸா பாவாடை, தாவணி. வித்தியாசமான இறுக்கிய பின்னல். பெரிய காதணி.


‘கழுத்துல மட்டும் ஏன்தான் ஒண்ணத்தையும் போட மாட்டேங்கறாளோ!’


‘ஏண்டி சும்மா என் முன்னாடியே வந்து சோதிக்கற?’ எனக் கேட்கத் தோன்றியது.


அன்றைய மழை நாளில் இவளைப் பார்க்காமல் இருந்திருக்க வேண்டும். பார்த்தாலும் காரில் இருந்து இவளுக்காக இறங்காமல் இருந்திருக்க வேண்டும். இறங்கினாலும் யாரோ ஒருத்தியெனக் கடந்து போயிருக்க வேண்டும். இதில் எதையுமே செய்யாததினால் இப்போது அவளை அவினாஷின் தங்கையாக மட்டுமே பார்க்க முடியாமல் அல்லாடுகிறான்.


அன்றே அழகையும் தாண்டி அவளிடம் எதுவோ தன்னை ஈர்ப்பதாக உணர்ந்ததாலேயே அன்று இவனின் அவயங்கள் அவள்புறம் கவிழ்ந்து நின்றன. ஏனென்ற காரணம் இப்பொழுதல்லவா புரிகிறது, அத்தை மகளே!


அக்னிக்கு வீட்டினுள் மூச்சு முட்டுவதைப் போலிருக்க, போர்டிகோ வழியாக வீட்டின் பக்கவாட்டிலிருந்த தோட்டத்திற்கு சென்றான். பெரிது பெரிதான மாமரங்கள் இரண்டும், வேம்பு, முருங்கை, சப்போட்டா மரங்களும் பிற பூச்செடிகள், காய்கறிகளும் வைத்திருந்தனர். சிறு வயதில் நிர்மலாவின் கணவன் ராஜேஷ் சிருஷ்டித்த தோட்டமாம்! மாலையில் அவினாஷூடன் கடைவீதி சென்றுவிட்டு இங்கே இளைப்பாறியதில் குளிர்ச்சியாக உணர்ந்திருந்தான்.


இப்போதும் அந்தக் குளிர்ச்சியைத் தான் நாடிச் சென்றான். ஆனால் அங்கே பிரகதியின் குரல் கேட்டு அவளை அழைக்க நினைத்து, பின் அவினாஷின் குரலும் சேர்ந்து கேட்க, அப்படியே நின்றுவிட்டான்.


இந்த பிரகதி இதற்குத்தான் வயிற்றுக்கு சரிவர ஈயாமல் ஓடி வந்திருக்கிறாள் போலும். தங்கையை எண்ணி சிரித்துக்கொண்டவன், வந்த சுவடு தெரியாமல் நகர்ந்துவிட நினைக்க, “எப்போ பாரு அண்ணன்தானா உனக்கு?” என்று பிணக்குடன் ஒலித்த அவினாஷின் குரலில், அந்த அடர்ந்து பருத்திருந்த வேப்ப மரத்தில் சாய்ந்தவாறு நின்றுவிட்டான்.


“......”


“ஷராரா… வேணாம்… சிரிச்சு வெறுப்பேத்தாதே!”


“எல்கேஜி பையன் மாதிரி பிஹேவ் பண்றீங்க அஷ்ஷூ. நாளைக்கும் மீட் பண்ணனும்னா வீட்ல கேட்க வேணாமா?”


“கோவில்ல பார்க்கலாம்ன்னு தானேடி சொன்னேன்? நீ வீட்ல சொல்லிட்டே வா! ஆனா தனியா வரணும்.”


அவர்கள் பேச்சுக்கள் அங்கே அப்படி சென்று கொண்டிருக்க, “இந்த பிரகதி எங்கே போயிட்டா?” என்றபடி, பாவாடையை இரு கை விரல் நுனியிலும் லேசாக தூக்கிப்பிடித்தவாறு அங்கே வந்தாள் சந்தனா.


அவினாஷூம் பிரகதியும் வீட்டின் பின் கோடியில் நன்கு பருத்திருந்த மாமரத்தின் பின் இருளில் நின்று பேசிக் கொண்டிருந்ததால் இங்கிருந்து பார்க்க பார்வைக்கு கிடைக்கவில்லை‌. ஆனால் பேச்சுக் குரல்கள் மெலிதாகக் கேட்டன. அவள் அதனைச் செவிமடுக்கும் முன், அவளின் ஒரு கரம் பற்றி இழுத்து, தன் வலக்கரத்தால் அவளின் வாய் மூடி இருந்தான் அக்னிஸ்வரூபன்.


ஒரு கணம் விழிகள் தெறித்துவிடும் போல் பார்த்தவள், அக்னியின், “ஷ்ஷ்!!” என்ற ஓசையில் அவன் கண்களைப் பார்த்தபடி நின்றுவிட்டாள்.


“சரி, ஆனா அண்ணா ஓகே சொன்னா தான் வருவேன்.” - பிரகதி. 


தங்கையின் பாசத்தில் நனைந்த அக்னிக்கும் சந்தனாவின் கன்னங்களையும் உதடுகளையும் தன் விரல்கள் ஸ்பரிசித்துக் கொண்டிருக்கும் நினைவில்லை. அவனின் கண்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவளுக்கும் அவனின் ஸ்பரிசம் கருத்திலில்லை.


தோட்டத்து விளக்கொளியும் மறுபுறம் தெரு விளக்கின் ஒளியும் ஒருசேர அக்னியின் முகத்தில் விழ, அத்தனை நெருக்கத்தில் அன்று இரண்டாம் முறையாக அவன் கண்களைப் பார்த்தாள் சந்தனா. அந்தக் கண்கள் சிரித்தது; ஆச்சரியப்பட்டது; போலி கோபம் கொண்டது; நிறைவை வெளிப்படுத்தியது; லேசாக கலங்கவும் செய்தது. இரண்டு நிமிடங்களுக்குள்ளாக அத்தனை பாவனைகளைக் காட்டி சந்தனாவை அதீத குழப்பத்தில் ஆழ்த்தியது.


பிரகதியின் பேச்சில் சிரித்தபடி திரும்பியவனின் கவனம் அப்போதுதான் இவள் மேல் குவிந்தது. முதலில் உள்ளங்கைக் குறுகுறுத்தது. உணர்வுகள் விழிக்க ஆரம்பிக்கும் முன், அவளின் குழப்பமும், மறந்த எதையோ நினைவுபடுத்த முயல்வதும் அவளின் புருவ சுளிப்பில் வெளிப்பட, அக்னி சுதாரித்துக்கொண்டான். சட்டென்று அவள் அதரங்களிலிருந்தக் கரத்தை எடுத்துவிட, அவள் இன்னமும் அவன் கண்களையே பார்த்திருந்தாள். ‘யார்? யார்? யார்? இந்தக் கண்களில் நான் யாரை உணர்கிறேன்?’


“ஹோய்! இன்னும் எவ்ளோ நேரம் என்னைச் சைட்டடிக்கப் போற?” என்று குனிந்து அவளின் காதைக் கிசுகிசுக் குரல் கொண்டு உரச, தலைசாய்த்து தோளைக் குறுக்கி சிலிர்த்தாள் அவள்.


‘ஹூ ஆர் யூ மிஸ்டர் அக்னிஸ்வரூப்?’ என்று உள்ளத்தோடு கேட்டுக் கொண்டவள், “ஸாரி! அன்நோன் பர்ஸனை எல்லாம் நான் சைட்டடிக்கறதில்லை‌. லவர்ஸ் பேசறதை ஒட்டுக் கேட்கற புத்தியும் எனக்கில்லை.” என்று மிடுக்குடன் வெடுக்கெனச் சொல்லிவிட்டு போனாள்.


‘அடியே தெற்றுப்பல்காரி! நான் உனக்கு அன்நோன் பெர்ஸன் இல்லடி; வெல்நோன் பெர்ஸன்!’


அக்னிக்கு ஒரு விடயம் புரியவில்லை. அம்மா கூட தன்னை அப்படி உற்றுப் பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இவள் ஏன் இப்படி பரிச்சயமான நபரைப் பார்ப்பதைப் போல் பார்க்கவேண்டும்?


சிந்தனையுடனே அன்று மாப்பிள்ளை வீட்டாரிடம் விடைபெற்றுக் கொண்டான்.


அவனுக்குத் தெரியாதே! சந்தனமாரி புத்திசாலிப் பெண் என்பதுடன், பாஸ்கரனின் வாலிப வயது புகைப்படத்தைக் காட்டி, உன் அத்தான் இப்போது இப்படித்தான் இருப்பான் என்று அவள் மனதில் உருவேற்றப்பட்டுள்ளது என்பது அக்னிஸ்வரூபன் அறியாத தகவல் அல்லவா?


அவள் இவனைப் பாஸ்கரனுடன் ஒப்பிட்டுப் பார்க்காத வரை தான், அவனின் இந்நாடகம் பிழைத்திருக்கும்.


இசைக்கும்...

Comments

  1. அந்த குறிப்பெடுத்துக்கொண்ட இரு விழிகள் பிரபஞ்சனோடதா இருக்குமோ!? 🤔

    ReplyDelete
  2. Arjun thane kandu pidichathu?

    ReplyDelete
    Replies
    1. Haha... That will be revealed in two or three more episodes🙂🙂 Many thanks for ur comment 💞💞

      Delete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25