கருவறை கீதம் -22

 


அத்தியாயம் 22


“ஆவ்! விடுங்கத்தான் வலிக்குது.”


“உண்மையைச் சொல்லுடி! அந்த ஃப்ராடுங்க கூட சேர்ந்து என்ன பண்ணி வச்சிருக்கே?” என்ற அக்னிஸ்வரூபன் பாவனாவின் காதைப் பிடித்து திருகிக் கொண்டிருந்தான்.


“அது‌… அது… எப்டி கண்டுபிடிச்சீங்க அத்தான்?” என்ற பாவனா முகம் வெட்கத்தை வெளிப்படுத்துவதைக் கேலியாக பார்த்தான்.


வசுதாவின் குடும்பத்தினர் அன்று காலையில்தான் சென்னை வந்திருந்தனர். கண்ணனின் நீதிமன்ற வழக்குகள், வசுதாவின் கல்லூரி வேலைகளின் பொருட்டு அவர்கள் இரண்டு நாட்கள் கழித்து வருவதாகச் சொல்ல, பிரபஞ்சன் வீட்டினர் மட்டும் முன்பே வந்திருந்தனர்.


காலையில் பல் விளக்கியதுமே பாவனாவின் அறையில்தான் போய் நின்றான் இவன். இயல்பு போல் அவளின் அலைபேசியைக் கேட்டு வாங்கி அழைப்பு பட்டியலைப் பார்த்திருந்தான். இவன் சந்தேகப்பட்டது சரிதான் என்பதைப் போல் சற்று முன்னர்தான் அர்ஜூனிடம் பேசியிருந்தாள் இவள்.  


“எல்லாம் எனக்கு தெரியும். பதில் சொல்றியா? இல்ல உங்கப்பாகிட்ட போட்டு கொடுக்கவா?”


“முதல்ல காதை விடுங்க! பிச்சு தனியா எடுத்துவீங்க போல!” என்றவள் அவன் கையைத் தட்டிவிட்டு காதைத் தேய்த்துக்கொண்டாள். “அதான் எல்லாம் தெரியும்ன்னு சொல்றீங்களே? அப்புறம் என்ன சொல்லு சொல்லுன்னு…”


“ஏய்! அவன் என்ன சொல்லி உன்னைக் கவிழ்த்தான்’டி?”


“நான் ஒண்ணும் கவுந்து போகல! நனகு இஸ்டவாகிதே.” என்று மீண்டும் வெட்கம் கொண்டாள்.


“பார்த்த உடனே இஸ்டவாகிதேவோ?” என்று குரல் உயர்த்த, எப்போதும் அதிகம் பேசாத அத்தான் இன்று முறைத்து நிற்பதில் வெடவெடத்துப் போனாள் பாவனா.


அவன் முறைப்புக்கு பலனும் இருந்தது.


முதன்முதலில் பிரகதியைப் பார்க்க அவினாஷ் வீட்டினர் பெங்களூர் வந்தபோது, தூய வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற லெஹங்காவில் அனைவருக்கும் துள்ளலுடனும் வாய்க்கொள்ளா சிரிப்புடனும் சிற்றுண்டி பரிமாறினாள் பாவனா. அப்போதே அர்ஜூனின் வில் போன்ற உள்ளம் இவளிடம் வளைந்துபோனது.


பெரியவர்கள் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, பாவனா ரமேஷின் பிள்ளைகளை அவளின் அக்கா கீதாஞ்சலியின் குழந்தையுடன் சேர்ந்து கன்னடத்தில் பேசி அவர்களைக் கலங்கடித்து சிரித்துக் கொண்டிருந்தாள். 


சந்தனாவிடம் பேசிக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது அவன் கண்கள் இவளைத் தான் வருடிக் கொண்டிருந்தது. அவள் அவர்களுடன் வெளிப்புறம் நகர, இப்போது விட்டால் வேறு சந்தர்ப்பம் அமையாதென இவனும் சந்தனாவிடம், “ஒரு ஃபோன்கால்!” என்றுவிட்டு எழுந்து போனான்.


“ஹாய்! கன்னடம் நல்லா பேசறீங்க.”


“உங்களுக்கும் கன்னடா தெரியுமா?” என்று அவள் ஆவலாகக் கேட்க,


‘சிரிக்கறா! அப்டியே மெய்ன்டெய்ன் பண்ணுடா அர்ஜூன்!’


“ஓ! தெரியுமே! பாருங்க உங்களுக்கும் கன்னடம் தெரியும். எனக்கும் கன்னடம் தெரியும். அப்போ…” என,


இவனைக் கவனியாமல், “ஹேய் அந்த டேலியாவைத் தொடாதே! இன்னிக்குத்தான் பூத்திருக்குது.” என தன் அக்கா மகனை அதட்டிக் கொண்டிருந்தாள் அவள்.


“ஹலோ! நான் பேசிட்டிருந்தேன்.”


“ஹான் சொல்லுங்க!”


“அது… என்ன சொன்னேன்? ஹாங்! நீயும் வைட்! நானும் வைட்! அப்போ அதுதானே ஜெஸ்ஸி?”


“நான்‌ ஜெஸ்ஸி இல்லை; பாவனா!”


“வாவ்! பாவனைகளின் சொந்தக்காரியின் பெயர் பாவனா’வா?”


“நீவு ஒல்லியா ஹாஸ்ய மாடுத்ரீ.” என்றுவிட்டு சிரிக்க,


“ஏதே? ஒல்லி மாடா? நானா? ஹேய் ஐ’ம் அர்ஜூன் யூ நோ?” எனக் கேட்க,


“டோன்னோ!” என்று அலட்டிக்கொள்ளாமல் சொல்லிவிட்டு நகர்ந்தவளைக் கைப்பிடித்து நிறுத்தினான்.


“இங்கே பாரு! இப்போ அத்தானுக்கு டைமில்ல. நீ உன் நம்பர் சொல்லு. நாம அப்புறமா பேசலாம்.”


“அத்தானா?!” என்று முழிக்க,


“ஹான்! பிரகதிக்கு நீ அண்ணின்னா நான் உனக்கு அத்தான்தான்!” என்றான். 


சற்றுமுன்னர் தானே அனைவரும் அறிமுகமாகி இருந்தனர்? ஆக, பாவனா தனக்கு என்ன‌ முறையில் வருகிறாள் என்று உறவுமுறையைக் கணக்காக பார்த்து வைத்துக்கொண்டான் இவன்.


அப்போதுதான் வந்தவர்களுக்கு உணவு பரிமாற, இவளைத் தேடிக் கொண்டிருந்தான் அக்னி. “பாவி!”  


“ஹய்யோ அத்தான்!” என்றவள் பதற,


“அதைத்தான் நானும் சொன்னேன்.” என்று இவன் சிரிப்பு காட்ட,


“அய்யோ! நான் எங்க அக்னி அத்தானைச் சொன்னேன்.” என்று பல்லைக் கடித்தவள் உள்ளே போக திரும்ப,


சடுதியில் அவளைக் கார் ஓரமாக இழுத்து நிறுத்திக்கொண்டு, “நம்பர் சொல்லிட்டு போ! இல்லைன்னா உன்னால என் கற்பு போச்சுன்னு கத்துவேன்.” எனவும், 


அவளுக்கு இதயம் எகிறி குதித்தது. “ஈனு?”


“நம்பர் தாம்மா பானூ…”


“பாவி!” என்றழைத்தபடி வந்த அக்னி, அங்கே விளையாடிக் கொண்டிருந்த கீதாஞ்சலியின் குழந்தையிடம், “உன் சித்தி எங்கேடா?” என்று கேட்டுக் கொண்டிருக்க,


அவன் இவள்புறம் கை நீட்டும் முன், தன் அலைபேசி எண்ணைச் சொல்லியபடி, அர்ஜூனைத் தள்ளிவிட்டு விட்டு, “இதோ வர்றேன் அத்தான்” என்றவாறு ஓடிப் போனாள் பாவனா.


அவள் தள்ளிவிட்டதில் காரின் பின்னால் விழுந்த அர்ஜூனின் வதனத்தை, பாவனாவின் இளஞ்சிவப்பு நிற தாவணி வருடிச் சென்றதில் அர்ஜூனின் காதல் பக்கங்கள் இனிய அத்தியாயங்களால் நிரம்ப ஆரம்பித்தது.


ஊர் திரும்பும் போது மற்றவர்கள் குடும்பமாக அவரவர் கார்களை எடுத்துக்கொள்ள, நிர்மலாவை பாஸ்கரனுடன்‌ அனுப்பிவிட்டு, இங்கே தங்கியுள்ள சந்தனாவை அவள் வீட்டில் விடும் பொருட்டு, இவர்கள் இளையவர்கள் மூவர் மட்டும் ஒரு காரில் வந்தனர். அர்ஜூனின் முகம் கொண்டே அகம் கண்டுகொண்டாள் சந்தனா. 


காரோட்டிக் கொண்டிருந்த அவினாஷிடம் கேட்டாள். “ப்ரோ! வெள்ளையும் சொள்ளையுமா திரிஞ்ச வெள்ளெலி ஒண்ணு, இன்னிக்கு விரதத்தைக் கலைச்சிடுச்சாம். உனக்குத் தெரியுமா?”


சட்டென அவளருகே இருந்த அர்ஜூன், “அத்தான், அத்தை இவ மூளையை எந்த ப்ரோக்ராமர் கிட்ட செஞ்சு வாங்கினாங்க? சரியான ஷார்ப்!” என்று புகைய,


பிரகதியின் மயக்கத்தில் இருந்த அவினாஷ், எப்போதும் போல் இது இருவருக்குள்ளான விளையாட்டு என்று நினைத்து சிரித்துவிட்டு கார் ஓட்டுவதில் கவனமானான்.


“ஹ! இதுக்காக எதுக்குடா ப்ரோக்ராமர் கிட்ட போகணும்? உன் மூஞ்சில எரியுற லைட்டுதான் முந்நூறு கிலோமீட்டர் வரைக்கும் வெளிச்சமடிக்குதே?”


“ஆஹான்?” என்றபடி அலைபேசியில் முகம் பார்த்துக் கொள்ள,


“ஹான்!” என்றவள், “ஏதோ இந்தளவுக்காவது உன் டேஸ்ட் பரவாயில்லடா அஜூ…” என்றாள்.


“எல்லாரும் என் கூட தானேடி இருந்தாங்க? உனக்கு மட்டும் எப்டி தெரிஞ்சது?”


இப்போது அவினாஷ் ‘ரியர் வ்யூ’ கண்ணாடியைப் பார்த்துக் கேட்டான். “என்ன மேட்டர்டா அஜூ கண்ணா?”


அவனை முந்திக்கொண்டு சந்தனா சொன்னாள். “அதான் சொன்னேனே… இந்த வெள்ளெலி விரதத்தைக் கலைச்சிடுச்சுண்ணா!”


“என்ன விரதம் ப்ரோ?”


“லவ்வு ப்ரோ… லவ்வு!”


“வாயை மூடுடி அண்ணி!”


“என்னடா சொல்றா இவ? யாரு?” -அவினாஷ்.


“அதான் பிரகதி வீட்டுல பார்த்தோமே… ஒரு ஹாசினி கேரக்டர்?” -சந்தனா.


தலையில் கை வைத்துக்கொண்டான் அர்ஜூன். “இவகிட்ட ஒரு ரகசியத்தை மெயின்டெய்ன் பண்ண முடியல அத்தான்.”


“ஹஹ்ஹஹ… ரகசியமாம்! அந்தப் பொண்ணு பிரகதியோட அண்ணன் பின்னாடி நின்னுக்கிட்டு இவனையே முறைச்சிட்டிருந்தா… அப்போவே எனக்கு புரிஞ்சிடுச்சு. இவன் ஏதோ அவகிட்ட வம்பு பண்ணிருக்கான்.”


“என்னடா செஞ்ச?” அவினாஷ் சிறு கண்டிப்புடன் கேட்க,


“ஒரு வம்பும் பண்ணல’த்தான். ஜஸ்ட் மொபைல் நம்பர் வாங்கினேன். அதுக்குள்ள அண்… பிரகதியோட அண்ணன் வர்றார்ன்னு ஓடிட்டா!”


“பேரு என்னடா?” என அவினாஷ் கேட்க,


“பாவனா!” என்று முகம் மென்மையுறச் சொன்னவனின் தலைக் கலைத்துவிட்டு சிரித்தாள் சந்தனா. “நல்லா இருடா மகனே!”


“போடி!” அவள் கலைத்த சிகையைச் சிலுப்பிக் கொண்டவனுக்கும் சிரிப்பு வந்தது.


அதன்பின் ஊர் வந்ததும் நேரம் பார்த்து பாவனாவை அழைத்தான். முதல் முறை, இரண்டாம் முறை என அவனின் அழைப்புகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.


பாவனா முதலில் வெகுவாகத் தயங்கினாள்; பின் அவன் பேச்சில் மயங்கினாள். அவளின் வெகுளித்தனம் அவனை ஈர்த்தது; அவனின் குறும்புத்தனம் இவளைச் சாய்த்தது. அதோ இதோவென போக்கு காட்டி, கடந்த இரண்டு நாட்களில்தான் பாவனா அவள் உள்ளத்தில் அர்ஜூனுக்கென அதிகாரப்பூர்வமாக இடம் ஒதுக்கினாள்.


அன்று அர்ஜூன் அணியவிருந்த சட்டையில் ‘Bhavanarjun’ என்றுதான் சந்தனா எம்ப்ராய்டரிங் செய்திருந்தாள். அதைப்‌ பார்த்து அதிர்ந்த அக்னிக்கு, இது தன் வசுதா அத்தையின் மகள் பாவனா தானா என்ற சிறு சந்தேகமும் இருந்தது. 


இருப்பினும் அப்போதே அர்ஜூனின் குணம் பற்றி ரகசியமாக விசாரித்திருந்தான். அதில் திருப்தி தானெனினும் அவள் வந்ததும் அவளின் அலைபேசியைப் பரிசோதித்தவனுக்கு அவள் மனமும் தெரிய வேண்டியிருந்தது. தம்பியாகவே இருந்தாலும் அவன் காதலின் உண்மைத் தன்மையையும் அறிய வேண்டியிருந்தது. அதன்பொருட்டே இந்த விசாரணை!


இப்போது இவள் சொன்னதைக் கேட்டதும் மலைப்பாக இருந்தது. பிரகதிக்காக மீண்டும் இக்குடும்பத்திற்குள் பிரவேசித்து, இவனுள்ளமே அமளிப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இப்போது இவனின் அத்தை மகள் இவன் தம்பியை வேண்டுமென்கிறாளே! இது எங்கே போய் முடியுமோ! அக்னிக்கு தலைவலித்தது.


“அன்னிக்கு நீயும் கேட்டுட்டுதானே இருந்த? அர்ஜூனுக்கு அவனோட கஸின்தான்னு அவங்கம்மா சொல்லல?”


“ச்சச்ச! பெரியவங்க தான் ஏதோ தெரியாம பேசறாங்களாம் அத்தான். சனா அக்கா கூட என்கிட்ட பேசினாங்களே…” என்றவளை இடைமறித்தான் அக்னி.


“பாவி, நீ சின்னப் பொண்ணு… உனக்கு புரியல!”


“எல்லாம் புரியும். சனா அக்கா அர்ஜூனுக்கு அம்மா மாதிரின்னு சொன்னார்.”


“என்ன?!”


‘அதனால்தான் அன்று அவளை அண்ணி என்றழைத்தானா?’


“ம்ம்! சின்ன வயசுல அர்ஜூன் லோன்லியா ஃபீல் பண்ணும் போதெல்லாம் சனா அக்காதான் கூடவே வந்து இருப்பாங்களாம். அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுவாங்களாம். சோ, சனா எனக்கு இன்னொரு அம்மான்னு சொன்னார்.”


“.......”


“அர்ஜூன் என்கிட்ட ஓப்பனா இருக்கார் அத்தான். அதுதான் எனக்கும் அவரைப் பிடிச்சது. மோர்ஓவர் அந்தக்கா வேற யாரையோ லவ் பண்றாங்களாம்.”  


பிரகதி கேட்ட போது தன் காதலை  சொல்லாத சந்தனா, தன் பொருட்டு அர்ஜூனின் காதலில் குழப்பம் வரக் கூடாதென, பாவனாவிடம் தன் மனதில் வேறொருவன் இருக்கிறானென சொல்லியிருந்தாள்.


‘அருண்!’


இவனுக்கு தெரிந்த செய்தி என்றாலும், புதிய புண்ணைப் போல் மனம் ரணமாக வலித்தது. அவளை வேறொருவனுடன் நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் எரிந்தது.


எரியும் இந்த அக்னியை குளிர்விக்குமா அந்த சந்தனம்?

                    

                     **********


மாப்பிள்ளை, மணப்பெண்ணுக்கு ‘ப்ரீ ஷூட்’ எனும் திருமணத்திற்கு முன்பு புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்வு முடிந்திருந்த நிலையில் அன்றிரவு மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் மண்டப வளாகத்திலேயே இருந்த பிரம்மாண்ட விடுதியில் தங்கி கொண்டனர்.


பிரபஞ்சன், அக்னிஸ்வரூபனின் தொழில்துறை நண்பர்கள், பிரகதியின் நண்பர்கள் அனைவரும் திருமணத்தன்று வருவதாக இருக்க, சில நெருங்கிய சொந்தங்கள் பத்து நாட்களுக்கு முன்பு ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தனர். அதன்படி அன்றிரவு பாவனாவின் அக்கா கீதாஞ்சலி குடும்பத்தினர் சென்னை விமான நிலையம் வந்திறங்கியதையடுத்து, அக்னி அவர்களை முறைப்படி வரவேற்று அழைத்து வரப் போயிருந்தான்.


விமானம் தாமதத்தின் காரணமாக நள்ளிரவு வந்திறங்கியவர்களை அழைத்து வந்து, அவர்களுக்குரிய அறையில் வசதி பார்த்து, தங்க வைத்துவிட்டு அப்போதுதான் தன்னறைக்குள் நுழைய போனான். எதிரே இருந்த அறையைப் பிரபஞ்சன் தம்பதியர் எடுத்துக் கொண்டிருந்தனர்.


நள்ளிரவு தாண்டிய அந்த நேரத்தில் அங்கே விளக்கு எரிவதைக் கண்டுவிட்டு, சிந்தனையுடன் பிரபஞ்சனை அலைபேசியில் இழுத்தான். “டாட்!”


“அக்னி, அஞ்சலி ஃபேமிலி வந்துட்டாங்களா?”


“ஹ்ம்ம் ப்பா! இப்போ தான் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்க ரூம்ல விட்டுட்டு வர்றேன். நீங்க இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டிருக்கீங்க? லைட் எரியுது?” எனவும், பிரபஞ்சன் கதவைத் திறந்து வந்துவிட்டான். 


“என்ன டாடி?”


“நீயே வந்து உங்கம்மாவை என்னன்னு கேளு?” என்றவனின் முகத்தில் தூக்கம் கெட்ட அலுப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.


இவன் சென்று பார்க்கும்போது நிரஞ்சனா மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். அப்பாவின் முகத்தைப் பார்க்க, அங்கே சலிப்பைக் கண்டவன், விடயம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று புரிந்து கேலியாகப் பேசினான். “என்னம்மா? ரொமான்ஸ் டைம்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு அழறியா?”


பிரபஞ்சன் சிரித்துவிட, நிரஞ்சனா விழிகளை உருட்டினாள். “அப்பாவுக்கும் பையனுக்கும் என் ஃபீலிங்ஸ் கிண்டலா இருக்குதுல்ல?”


“என்ன ஃபீலிங்ஸ் மம்மி? பாட்டி அவங்களோட வைர அட்டிகையைத் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்களா?”


‘சப் சப்’ என அவன் முதுகில் நான்கடிகளை வைத்தாள். “எம்மா! சொல்லிட்டு அடிம்மா!”


சட்டென குழந்தையாய் மாறி மகனைக் கட்டிக்கொண்டு தேம்பினாள். “அக்னி! நீ மறுபடியும் எட்டு வயசு பையனா மாறிட்டியாம்! என்கிட்ட இருந்து தொலைஞ்சு போயிட்டியாம்!”


இது எப்போதும் உள்ள அவளின் ஆழ் மனதின் அச்சம் என்று இவனுக்கு தெரியும். ஆனால் அந்த அச்சம் திடுமென தற்போது வெளிப்படுவானேன்!


ஒரு நொடி முகம் மாறியவன், மீண்டும் குரலில் கேலியை வரவழைத்துக் கொண்டான். “கல்யாண வேலை எவ்ளோ கிடக்குது? அதையெல்லாம் விட்டுட்டு ஃபேன்டஸி சீரிஸ் எதுவும் பார்த்தியா மம்மி?”


“பாருங்க இவனை! நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டிருக்கேன். சீரிஸ் பார்த்தியா கேட்கறான்.” என்று கணவனைப் பார்க்க, அவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவாறே தூங்கியிருந்தான். 


அதைக் கண்டு அவள் பரிதாபமாக விழிக்க, அக்னிக்கு நிஜமாகவே சிரிப்பு வந்துவிட்டது. 


அவனைத் தள்ளிவிட்டு, “சிரிக்கறியாடா நீ? கனவு மாதிரியே இல்லை அக்னி. உண்மை போலவே இருந்தது!” என்றவளின் அழுகைத் தொடர,


“ப்ச்! கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாம்மா? மறுபடியும் நான் சின்னப் பையனா மாறப் போறேனா என்ன? ஏன்மா படுத்தற?” என, அவள் கைக்கோர்த்து இன்னும் சிறிது நேரம் பேசி அம்மாவை சமாதானம் செய்து, அப்பாவை எழுப்பி படுக்கையில் படுத்துக் கொள்ள சொல்லிவிட்டு வெளியே வந்தவனின் நெஞ்சமெல்லாம் அபார அன்பின் தீக்கங்குகள் சுட்டெரித்தன.


இரு இதயங்களும் இவனின் இன்னுயிரின் சாரத்தை, 

நெம்பித் தள்ளும் 

நேசக்குழல் கொண்டு உறிஞ்சுகின்றனவே! 

உருகி விடாமலும் 

உறைந்து போகாமலும் பெருஞ்சுமையான 

பேரன்பைச் சுமந்துகொண்டு,

இருவருக்கும் வரம் தரும் இன்சாபமாய் இவன்!


                    *********


அன்பே நீ என்ன

அந்த கண்ணனோ மன்னனோ…

தென்றல் தேர் மீது வந்த

காமனோ கள்வனோ…

கண்கள் கவர்ந்து நிற்கும்

விண் ஆளும் இந்திரனோ!

பெண்கள் மனம் மயங்கும்

பொன்னான சந்திரனோ!

சந்தம் கொஞ்சும் 

சங்கத்தமிழ் பாண்டியனோ…


சந்தனா கையில் சிறிய மைக்கை வைத்துக்கொண்டு அக்னியைப் பார்த்து பாடிக்கொண்டிருந்தாள். இவன் திகைப்பில் மூச்சையடக்கி இமைக்காது பார்த்திருந்தான்.


‘ஹல்தி’ எனும் நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில் அந்த மண்டபமே பெண்களின் ஆரவாரத்தால் ஆர்ப்பரித்து கொண்டிருந்தது. அங்கே ஓரமாக அபிராமியின் அருகே அமர்ந்து அலைப்பேசியில் கவனம் வைத்திருந்த அக்னிஸ்வரூபன் சந்தனாவின் குரலில்தான் நிமிர்ந்தான்.


இவனையே பார்த்தபடி பாடிக் கொண்டிருந்தாள் அவள். அவள் பல்லவியைப் பாடி முடிக்கும் வரை சுற்றம் மறந்து போனது இவனுக்கு! அதே பல்லவியை இரண்டாம் முறை பாடும்போது தான் அவனுக்கு அந்த சந்தேகம் வந்தது. 


‘நம்மள பார்த்துதான் பாடறாளா என்ன?’ 


அபிராமி பாட்டி உணர்ச்சி மேலீட்டால் தன்னருகே அமர்ந்திருந்த பேரனின் கரத்தை இறுகப் பிடித்துக்கொள்ள, அதன்பின்னே பக்கவாட்டில் பார்த்தான். பாட்டியின் கண்கள் கசிந்து கொண்டிருந்தது. 


“என்னாச்சு பாட்டி?” என இவன் கேட்கையில் மைக்கை அணைத்துவிட்டு ஓடிவந்தாள் சந்தனா.


“யங் லேடி!”


“யாரு இந்த பாட்டைச் செலக்ட் பண்ணது?” வழக்கமான முறுக்கலுடன் அவர் கேட்க,


“ஹிஹி… நான்தான்… பிரகதி இந்த ஸாங் உங்களுக்கு பிடிக்கும்ன்னு சொன்னா… அதான்…”


‘இவ்ளோ நேரம் பாட்டிக்காக பாடிருக்காடா மக்கு அக்னி! பல்பு! பல்பு!’


இவன் அபிராமியின் அருகே அமர்ந்திருந்ததால் அவள் அவரைப் பார்த்து பாட, இருபதடி தூரத்தில் நின்றிருந்தவள் தன்னைப் பார்ப்பதானத் தோற்றப் பிழையால் ஏமாந்திருக்கிறான்.


“ஓஹோ! உன் வால்த்தனத்தை இங்கேயும் காட்டுறியா?” -அபிராமி.


“கலிகாலம்! பிடிச்சதைச் செஞ்சாலும் திட்டுது; பிடிக்காததைச் செஞ்சாலும் திட்டுது.”


அவள் பாவனையில் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, “சரி சரி, மேலே பாடு!” என, திருதிருவென விழித்தாள் அவள்.


“என்ன? உன் குரல் அற்புதமா இருக்குது. பாடேன்!”


“அய்யோ என்னை உங்களுக்கு பிடிக்காதுன்னு நினைச்சு இவ்ளோ தான் நான் ப்ராக்டீஸ் பண்ணேன் யங் லேடி…” என்று பாவமாக சொன்னதில் அருகே உள்ளவர்கள் மட்டுமல்லாது அபிராமியும் கூட கண்களில் நீருடன் பக்கென சிரித்திருந்தார்.


“இருங்க நான் டிஜே கிட்ட இந்த ஸாங் கொடுத்துட்டு வர்றேன்.” என்று எழ நினைத்தவளைக் கைப் பிடித்து நிறுத்தினார். 


“அதிருக்கட்டும். வந்து கொஞ்ச நேரம் இப்டி உட்காரு!” என்றவரின் கவனம் வேறுபுறம் திரும்ப, இவ்வளவு நேரம் தன்னையே அழுத்தப் பார்வைப் பார்த்து கொண்டிருக்கும் அக்னியின் பக்கம் திரும்பினாள் இவள்.


‘ஹ’ என்று ஒருபுறமாக இதழ் வளைத்து அவளை அலட்சியமாகப் பார்த்துவிட்டு எழுந்துபோனான்.


பல்பு வாங்கிய ஆத்திரம் இருக்குமல்லவா?


‘பாட்டியைக் கவிழ்க்க ப்ளானா? ரொம்ப மொக்கையா இருக்குது.’ என்பதைப் போலிருந்த அவன் பார்வையில் இவளுக்கு கடுகடுத்தது.


அன்று அவன் அவனை சைட்டடிப்பதாகச் சொன்னதும் இவள் திருப்பி அலட்சியமாக  நக்கலடித்துவிட்டு வந்ததற்குத்தான் இப்போது பார்வையாலேயே பதில் கொடுத்துவிட்டு போகிறான் என்று நினைத்தாள். 


‘இருடா! உன்னை அப்புறம் கவனிச்சுக்கறேன்.’


அக்னி அங்கிருந்து நகர்ந்து காரிடார் வந்தான். ‘கண்ணனோ மன்னனோ’ என்று பாடி அவள் இவனுக்குள் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை, உள்ளே அழுத்திக் கொண்டிருந்த காற்றை உதடு குவித்து ஊதி வெளியேற்றிவிட்டு நின்றிருக்க, ஒரு வயதான பெண்மணியை இயந்திர சக்கர நாற்காலியில் வைத்து தள்ளியபடி வந்தான் அவினாஷ்.


அவரைப் பார்த்த அக்னிஸ்வரூபனுக்கு யாரென அடையாளம் தெரியவில்லை. 


புன்னகையுடன் அவனருகே வந்த அவினாஷ், “ஹாய் மச்சான், மீட் அவர் சித்திப்பாட்டி.” என்றான்.


இசைக்கும்...

Comments

  1. oru 2 or 3 episode onna podulngalen. Suspense thangala..

    ReplyDelete
    Replies
    1. Thanks 4 ur comment💞💞 Editing work irukudhu 🙂🙂 Next ud nalaiku podaren.

      Delete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25