கருவறை கீதம் -23

 


அத்தியாயம் 23


“மீட் அவர் சித்திப்பாட்டி.” என்ற அவினாஷ், காமாட்சியிடம் சொன்னான். “பாட்டி, திஸ் இஸ் அக்னிஸ்வரூப்! பிரகதியோட அண்ணன்.”


அவரை வணங்கிய அக்னியை, மூக்குக் கண்ணாடியைச் சரி செய்தபடி அளக்கும் பார்வைப் பார்த்தார் காமாட்சி. அக்னிக்கு உள்ளே அடித்துக்கொண்டது. எங்கே அனுவைப் போல், சந்தனாவைப் போல் இவரும் தன்னை அடையாளம் காண முயல்வாரோ என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது.


ஆனால் தள்ளாமையிலும் உடல்நல பழுதிலும், நினைவாற்றலும் பார்வையும் மங்கியிருந்த காமாட்சிக்கு பாஸ்கரனின் கண்கள் எல்லாம் எங்கே நினைவிருக்கப் போகிறது? ஆகையால் மரியாதை நிமித்தம் தன்னை நமஸ்கரித்த அக்னியைத் தானும் வணங்கி, பொய்ப் பற்கள் தெரிய சிரித்தார்.


“ராஜா கணக்கா இருக்கீங்க தம்பி!”


‘ஆமாம்டா கண்ணா, சாக்கடைல தவறி விழுந்த உன்னைத் தூக்கி குளிப்பாட்டி, சந்தனம் பூசி வாசமா வச்சிக்க நினைக்கறா உங்கம்மா’ 


பல்லைக் கடித்துக்கொண்டு சின்னதாய்ப் புன்னகைத்தான். “சாப்பிட போங்க பாட்டி.” 


அதிக அலைச்சல் ஆகாத காமாட்சியின் உடல்நிலையின் பொருட்டு, அவரை இன்றுதான் அழைத்து வந்திருந்தான் பாஸ்கரன்.


மூளை சிறிதும் ஓய்வில்லாமல் தவித்திருத்த நிலையில், அவரின் வருகை இவன் நினைவுகளை மேலும் கிளறிவிட்டது. பொதுவாக யாருக்கும் எட்டு வயதிற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளெல்லாம் புகைக் காட்சியாகவே நினைவிருக்கும். சில தெளிவாகவும், பல அறவே மறந்தும் போயிருக்கலாம்.


ஆனால் அக்னி, சஞ்சயாக இருக்கையில் அனுபவித்த கொடுமைகளும் கேட்டு வளர்ந்த வார்த்தைகளும் அசாதாரணமானவை! அவைகளை அவன் அக்னிஸ்வரூப் ஆக மாறிய பின்பும் பல வருடங்களாக அவர்கள் பேசியதையெல்லாம் சிந்தித்து, அடிமனதில் தேக்கி வைத்திருந்தான். முக்கியமாக அவற்றையெல்லாம் இன்று வரையிலும் யாரிடமும் பகிர்ந்து கரைத்து விடவில்லை.


சில அசந்தர்ப்பமான சூழ்நிலைகளில் -அதாவது இவனைப் போல் பாதிக்கப்பட்ட, பிரச்சினையின் விளிம்பில் நிற்கும் குழந்தைகளைக் காணும்போது, சினிமா நடிகைகள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதைச் செய்தியாக கடக்கும்போது,         பாட்டி, தாத்தா, சித்திப்பாட்டி, நிர்மா அத்தை, சில அக்கம்பக்கத்தினரின் பேச்சுக்களும், தாத்தாவிடம் தான் அனுபவித்த வன்முறைகளும் நினைவு வந்து போகும். அப்போதெல்லாம் அக்னி நாடுவது தனிமையைத்தான்!


அவனின் சுபாவமே அதுதான் என்ற வகையில் புரிந்திருந்த பிரபஞ்சனும் நிரஞ்சனாவும் கூட அவனைத் தொந்தரவு செய்ததில்லை. சிறிது நேரத்தில் அவனே சிரித்த முகமாக தங்கையுடன் விளையாட வந்துவிடுவான். என்றுமே  அக்னியிடம் அவன் வயதிற்குரிய குறும்புகள் இருந்ததில்லை. ஸ்ரீரங்கத்து வீட்டில் தாத்தாவின் மேலுள்ள பயத்தில் எந்த விஷமங்களும் செய்ததில்லை. ஆகையால் இவர்களிடம் வந்து சேர்ந்த போதே அவனுக்கு பொறுப்புணர்வும் பக்குவமும் முதிர்ச்சியும் இருந்தது. வளர வளர ஆண்பிள்ளையான அக்னியின் தனிமைப்படுத்தி கொள்ளும் குணம் பற்றி அவர்களுக்குமே தெரியாமல்தான் போனது.


அவன் வாடகைத்தாய் முறையில் பிறந்தவன் என்பதே பின்னாட்களில் தாத்தா, பாட்டி, அத்தையின் பேச்சுக்களை நினைக்கையில் அவனாக யூகித்து புரிந்து கொண்ட விடயம்தான். இருப்பினும் அனுவோ, பாஸ்கரனோ ஒருபோதும் தங்கள் நேசத்தில் பிறழ்ந்ததில்லை. அவனை மற்றவர்களைப் போல் ஏசியதில்லை என்று தெரியும். 


பிரபஞ்சன் வீட்டினரிடம் தன் கடந்த காலம் குறித்து எதையும் வாய் திறந்திராத சஞ்சய், தன் பிறந்தநாளை மட்டும் சொல்லியிருந்தான். அதுவும் பள்ளி கையேட்டில் எழுதி பழகியிருந்த பழக்கத்தில் வெகுளித்தனமாக சொன்னதுதான். 


அதன்படி அவர்களிடம் சென்ற பிறகு வந்த முதல் பிறந்தநாளில் அனுவின் மடி தேடி அழுதிருக்கிறான். அதுவரை பார்த்திராத விளையாட்டு பொருட்கள், பரிசுகள், இனிப்புகள் அனைத்தும் இருந்தும், அம்மா இல்லாத அந்த பிறந்தநாள் அவனுக்கு சோபிக்கவில்லை. அம்மா இல்லாத குழந்தைகளின் மனநிலையே நம்மால் நினைத்துப் பார்க்க முடியாதபோது, அவள் இருந்தும் அவளைக் கண்ணால் காண இயலாத குட்டி சஞ்சுவின் நிலை கொடுமையின் உச்சம்!


தாய் முகம் காணாமல் குழந்தை ஏங்கித் தான் போனான். அப்போதெல்லாம் தனியாக இருக்கும் நேரங்களில் அம்மா வேண்டும் என்று அழுகையில் கீழ் நோக்கி வளையும் இதழ்களைக் கட்டுப்படுத்த முடிந்ததேயில்லை. அதுபோன்ற சமயங்களில் அபிராமி தான் அவன் முகம் பார்த்து புரிதலுடன் ஆறுதலாக இருந்திருக்கிறார். அதனாலேயே பாட்டியின் மேல் கூடுதல் பாசம் உண்டு!


ஆனால் வளர்ந்த பின்னர் மீண்டும் ஸ்ரீரங்கம் செல்ல, அனுவைக் காண அவன் நினைக்கவில்லை. வளர வளர படிப்பு, நண்பர்கள், புதிய சொந்தங்கள், நிரஞ்சனாவின் தாயன்பு எல்லாம் சேர்ந்து அவனை அனுவிடம் செல்ல நினைப்பது ஏதோ பெருந்தவறிழைப்பதாகப் பட்டது.


ஏனெனில் நிரஞ்சனா அவனைத் தன் வயிற்றில் சுமந்த குழந்தையைப் போலவே பாசமூட்டி வளர்த்தாள். அபிராமி, பிரபஞ்சன்… ஏன் வசுதா குடும்பத்தினரும் கூட அக்னியை வேற்று மனிதனாக நினைக்கவில்லை. அவனுக்கும் அப்படியோர் உணர்வைத் தரவில்லை. ஆக, இவனிடம் ஸ்ரீரங்கமும் அனுவும் தாத்தாவும் முகவரி இழந்தனரே தவிர முகங்களை இழக்கவில்லை. அதிலும் அனுவின் முகம் இவன் சாகும் தருவாயிலும் மறக்கக்கூடியதல்ல!


இப்போது இத்தனை வருடங்களுக்கு பிறகு, சம்மந்தப்பட்டவர்களை மீண்டும் பார்ப்பதால், தூர சென்றிருந்த நிகழ்வுகளை மீண்டும் அருகே வந்து பார்க்கும் உணர்வு! அதில் தன்னை மீண்டும் ஆறேழு வயது சஞ்சயாக உணர்ந்தான் அக்னிஸ்வரூபன். தாத்தா தந்த அழுகை, கதறல், வலியும்… அனு, பாஸ்கர், அர்ஜூன், சந்தனமாரியின் நெஞ்சை நெருக்கித் தள்ளும் நேசமும் அது தந்த குளுமையும் என மொத்த உணர்வுக் கலவைகளும் அவனைப் பெருவெள்ளத்தில் தள்ளிவிட்டதைப் போலிருக்கிறது. 


கூடுதலாக இப்போது சித்திப் பாட்டியின் வருகையும் சேர்ந்து நினைவுகளை நிஷ்டூரமாகக் கீறி விட்டதையடுத்து, உணர்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக படையெடுத்து அவனைப் படுத்தியெடுத்தது.


முயன்று பிரகதியின் சிரிப்பை மனதில் இருத்தியவன் மீண்டும் ஹாலுக்குள் வந்தான். ஆனால் இன்னும் சோதனைகள் தீரவில்லை என்பதைப் போல், சரியாக இவன் திறந்து வந்த கதவினருகே அர்ஜூனும் அனுவும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்க நேரிட்டது.


“கொஞ்சங்கூட அறிவே கிடையாதும்மா உனக்கு! அந்த சித்தி உன்னைப் பைத்தியம் ரேன்ஞ்சுக்கு பேசுது. திருப்பி கொடுக்க வேண்டியதுதானே?”


“அதான் நீ கொடுத்துட்டியே… அப்புறம் என்னடா? நம்ம வீட்டு விசேஷத்துக்கு வந்தவங்களை நாம அனுசரிச்சுதான் நடந்துக்கணும் அர்ஜூன்!”


“நீ இப்டி இன்னஸென்ட்டா இருக்கறதுனால தான்மா எல்லாரும் உன்னை யூஸ் பண்ணிக்கறாங்க! கொஞ்சமாவது மனுஷங்களைப் புரிஞ்சிக்க டிரைப் பண்ணு!”


“இப்போ என்னடா? எனக்கு அறிவில்லைன்னு நான் ஒத்துக்கணுமா?”


“சர்ட்டன்லி! அது இருந்திருந்தா முப்பது வருஷத்துக்கு முன்னாடி அப்பாவோட வாய் ஜாலத்துல விழுந்திருப்பியா? மானேஜரா ப்ரமோட் ஆகி என்ன பிரயோஜனம்? ஸ்டில் யூ ஆர் ப்யோர்லி இக்னோரண்ட்!”


“போடா அரட்டை! சும்மா சும்மா அப்பாவை வம்புக்கிழுத்துக்கிட்டு… முதல்ல வழியை விடு!”


“நீ முதல்ல சாப்பிட்டியாம்மா?”


“ஆச்சு! ஆச்சு! தள்ளு!”


“நிஜமா?”


“நிஜமா சாப்பிட்டேண்டா!”


“டேப்லெட்?”


“போட்டுட்டேன்.’


“ரெஸ்ட் எடுக்கணுமாம்மா? யூ ஸீம் ட்டூ பீ ஃபெட் அப்!”


“அதெல்லாம் ஒண்ணுமில்லை. சனா எங்கே?”


“இங்கேதான் எங்கேயாவது இருப்பா!”


“சரி.” என்றவளின் கண்கள் அசதியில் இருப்பதை கவனித்து கேட்டான். “அம்மா காலைல மெடிடேஷன் செஞ்சியா?”


“இவ்ளோ வேலைல எங்கேடா செய்ய நேரமிருக்குது?”


“சரி வா!”


“அர்ஜூன்.’


“அதை வச்சிட்டு வாம்மா!” என அவள் கையிலிருந்த பூவும் மஞ்சளும் நிறைந்த தட்டை வாங்க,


“சும்மா இரு அஜூ கண்ணா!” என அதட்டினாள் அவள்.


“யூ நீட் ரெஸ்ட்ம்மா! அப்போதான் கல்யாணத்தப்போ ஃப்ரெஷ்ஷா இருப்ப!” என்று வலுக்கட்டாயமாக அவள் கைப்பிடித்து இழுத்தான்.


“உங்கத்தை பார்த்தா ஏதாவது சொல்லுவாடா.”


“அப்போ வா, நம்ம வீட்டுக்கு போகலாம்.”


“ச்சச்ச! நம்ம அவி ஃபங்ஷன் இது. அப்படியெல்லாம் விட்டுட்டு போகக்கூடாது. நான் கொஞ்ச நேரம் ரூம்ல இருக்கேன்.”


“அது!”


ஓரமாக நின்று அலைபேசியுடன் பாவனைச் செய்தபடி, இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த அக்னிக்கு, அர்ஜூன் இடத்தில் தான் இருந்தால் எப்படியிருக்கும் எனத் தடுக்கவே முடியாத பேராவல் எழுந்தது. இவன் அன்பின்‌ பெருந்தாகமல்லவா அவள்?


அர்ஜூனின் விளையாட்டு பேச்சிலும் அவனுக்கு அம்மாவிடம் இருக்கும் ஸ்வாதீனத்திலும் உண்டான பொறுமலில், ‘அவங்க எனக்கும் தாண்டா அம்மா!’ என்று சொல்லி அவனைத் தள்ளிவிட வேண்டும் போலிருந்தது.


சத்தியமாக முடியவில்லை. மீண்டும் சிறுவனாக மாறி அவள் மடித் துஞ்சிவிட ஏக்கம் வந்து அடிவயிற்றை எக்கிப் பிடித்தது. யாருக்கும் சொல்லாத இந்த வலியை எங்ஙனம் கடப்பது? அழுது தீர்த்துவிட்டால் வலியில் சிறு துளி குறையுமோ? 


இதுபோன்ற நேரங்களில் அவன் நாடுவது தனிமையைத்தானே! 


இங்கே தனிமைக்கு எங்கே போவது? போனால் அருகே விருந்தினர் விடுதியிலிருக்கும் அவனறைக்கு தான் போகவேண்டும். நாலாபுறமும் பார்வையை ஓட்டினான். மாடிப்படிகளைத் தேடி மொட்டைமாடிக்கு ஏறினான்.


ஏறும் போதே கசகசவென்றிருந்த சட்டையைக் கழற்றி, விரல் நுனியில் பிடித்தவாறு தோளில் போட்டுக்கொண்டான். மேல் படியில் கால் வைத்தவனின் முகத்தைச் சில்லென்று உரசிய தென்றல் மாய உலகிற்கு போகலாமா எனக் கேட்டது. ஒரு கணம் கண்மூடி நின்றவனுக்கு மனதின் வெம்மைகள் தணியும் உணர்வு!


சிறுமழைப் பெய்திருக்கிறது போலும். இத்தனை நேரம் ஏசி ஹாலில் இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. மெதுவே நடந்து வர, அவன் பார்வை இடப்பக்கம் போனது. அங்கே சந்தனா இருந்தாள். எதற்கோ பயந்து எதிலோ வந்து விழுந்த கதையாகிப் போனது இவன் நிலை! அனு மற்றும் சந்தனா இருவருமே அவன் வாழ்வின் மிக முக்கிய அங்கமாக இருக்கும் அல்லது இருந்திருக்கக் கூடிய பெண்கள்!


‘ஷ்ஷ்! இப்டியே ரெண்டு பேரையும் மாறி மாறி பார்த்து கல்யாணத்துக்குள்ள பைத்தியமா தான் ஆகப் போறடா நீ!’ என்றெண்ணினாலும் அவன் கண்கள் பார்த்த காட்சியில் கால்கள் நகர மறுத்தன. மனம் ஆட்டுக்குட்டியைப் போல் அவள் பின்னேயே சென்றது.


அவள் அணிந்திருந்த கேரமல் நிற லெஹங்காவில் பல வண்ணப் பூக்கள் அழுத்தமாக எம்ப்ராய்டரிங் செய்யப்பட்டிருந்தது. அதன் தாவணி அவளின் பின்னிடையில் பிணைந்தும் பிணையாமலும் ஊசலாடியது. 


சந்தனாவிற்கு நீண்ட தலைமுடி கிடையாது. ஐந்து பின்னல்கள் நின்றால் அதிகம்! 


எப்போதும் ஃப்ரென்ச் ப்ளாட் பின்னலில் சிக்கிக் கிடக்கும் கூந்தல் இன்று விடுதலைப் பெற்று விரிந்து, காற்றில் நர்த்தனமாடிக் கொண்டிருந்தது. காதில் பெரிய தொங்கட்டான்கள்! கழுத்தில் எதுவுமில்லை.  இவனுக்காகவே மண்டபத்தின் வெளிப்புற அலங்கார விளக்குகளின் வெளிச்சம் அவளின் முன்னுடல் அழகில் விரவிக் கிடந்தாற் போலிருந்தது.


இடுப்புயர சுற்றுச் சுவரை வலக்கையால் பற்றி, தூறல்கள் அவள் விரல் நுனியைத் தொட யாசித்ததற்காக, இடக்கையை வான் நோக்கி ஏந்தியிருந்தாள். உடலை பின்னோக்கி வளைத்து, முகம் வானம் பார்க்க, கண்மூடி நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்கு இதயம் எம்பி குதித்தது. 


பின்புறம் அரை வட்டத்தில் வளைந்திருந்த அவளிடையில் இவனின் இடக்கையை நுழைத்து, விரிகோணத்திலிருந்த கழுத்தில் கண்மூடி புதைந்தாலென்ன என்று தோன்றியது. ஹார்மோன்களெல்லாம் அவள் வாடைக் காற்றிற்கு மூடிக்கொள்ளும் வஸ்திரமாக மாறிவிடத் துடித்தது. அங்க லாவண்யங்கள் இவனின் கட்டுபாடுகளை ஆட்டம் காணச் செய்ய, சன்னமான ஒளியில் தெரிந்த அந்த பேரின்பத்தைக் கிறுகிறுத்துப் போய் பார்த்தான்.


அப்பா தன் மியூசிக் சிஸ்டத்தில் அடிக்கடி கேட்கும் பழைய பாடலின் வரியொன்று நினைவிற்கு வந்தது.


நூறடி பளிங்கை ஆறடி ஆக்கி

சிற்பிகள் செதுக்கிய உருவமடி…


(நான் 1st time create செஞ்ச AI pic)


மனதிற்கு நெருக்கமான பெண்ணல்லவா? விலகி செல்ல மனம் வரவில்லை. அவள் கையில் மாயக்குச்சியை வைத்து இவனை ஆட்டுவிப்பதான மாயத் தோற்றம் உண்டானது. சில்லென்ற கூதல் காற்றில் மீட்டப்படாமல் நிற்பவளைக் கண்டு, ‘மாரியாத்தா, யூ ஆர் ஜஸ்ட் கில்லிங் மீ!’ என மனக்குரல் கிறக்கமாய் கிளர்ச்சி மொழி பேசியது.


சொந்தம்தான்; ஆனால் இவனுக்கு சொந்தமில்லை. காதல்தான்; ஆனால் அவளின் காதலனில்லை. ஒருதலை ராகம் பாடுபவனுக்கு இந்த ஆசையெல்லாம் அதிகப்படியல்லவா?


முயன்று அருணின் பெயரை நினைவிற்கு கொண்டு வந்து, வந்த வழி திரும்பிவிட நினைக்கையில், அவனின் அலைபேசி ஒலியெழுப்ப இருவரும் தத்தம் மோனநிலையிலிருந்து கலைந்தனர். அவளைப் பார்க்காது வேறுபுறம் திரும்பி அழைப்பை ஏற்று பேசினான்.


அவன் பேசி முடிக்கும் வரை அவனையே பார்த்தாள் சந்தனா. மேல் சட்டையில்லாமல் உள் பனியனுடன் வயதுப் பெண்களின் கண்களுக்கு விருந்தளிப்பவனாக இருந்தான். 


‘அபிந்தா சொன்ன மாதிரி செம ஹேண்ட்சம்!’


அவ்வப்போது தலைக்கோதிக் கொள்ளும் அவன் மேனரிசம் மனோகரமாக இருந்தது. 


‘சூப்பர் சைட் மெட்டீரியல் ஸ்வரூப் நீ!’ என ரசித்தவளுக்கு அதற்கு மேல் அவனிடம் வேறெந்த ஈர்ப்பும் தோன்றவில்லை; இன்னும் ஆழமாக கவனிக்கும் எண்ணமுமில்லை. மனதில் ஒருவன் அழுத்தமாக இடம் பிடித்திருக்கையில் வேறொருவனை எங்ஙனம் ரசனைக்கு மேலாகப் பார்க்கத் தோன்றும்?


அழைப்பைப் பேசி முடித்தவன் இவளிடம் கேட்டான். “இங்கே தனியா என்ன பண்ணிட்டிருக்கே?”


“எனக்கு ரொம்ப நேரம் மூடின கதவுக்குள்ள, ஏசில இருக்கறது ஒத்துக்காது. எல்லாரோட பர்ஃப்யூம் ஸ்மெல் வேற! நாஸி ஃபீல்!” என உடலைச் சிலிர்த்துக்கொண்டாள்.


அன்றொரு நாள் தன்னுடன் காரில் பயணிக்கையில் தெரிந்த அவளின் அசௌகரியத்தை நினைவு கூர்ந்தான். இருப்பினும் அவள் தன்னை ‘அன்நோன் பர்ஸன்’ என்றதற்காக அவளிடம் வம்பு வளர்க்கத் தோன்றியது.


“ஓ! நான் கூட லவ் ஃபெய்லியர் ஆகி சூஸைட் பண்ணிக்க வந்திருக்க’ன்னு நினைச்சேன்.”


சட்டென கண்களில் கனலை மூட்டிக்கொண்டு, “நான் கூடத் தான் நீங்க கள்ளக்காதலிக்கு கால் பண்ண வந்திருக்கீங்கன்னு நினைச்சேன்.” என்று பல்லைக் கடித்தாள்.


“கள்ளக்காதலியா?” என்று அவளை ஏற இறங்கப் பார்த்தவன், பின் நிலவில்லா வானத்தைப் பார்த்து சொன்னான். “போற போக்கைப் பார்த்தா அதான் நடக்கும் போலிருக்குது.” 


கூடவே, “எல்லாம் அந்த அருண் பயலால வந்தது!” என்று முணுமுணுக்க,


“என்ன?” எனக் கேட்டபடி அவனருகே வந்தாள்.


அதேநேரம் அவனும் அவள் முகம் பார்த்து திரும்ப, இப்போது பெண்ணின் கவனம் அவன் கண்களில்! அவளுக்கு மிக மிகப் பரிச்சயமான அந்த கண்கள் யாருடையதென்று தெரியவில்லையே!


பாஸ்கரன் பல வருடங்களாகவே கண்ணிற்கு கண்ணாடி அணிகின்றான் என்பதுடன் வயதின் காரணமாக கண்ணோர சுருக்கங்களும் சேர்ந்து, அவளுக்கு அனுவைப் போல் அக்னியின் கண்கள் பாஸ்கரனை நினைவுபடுத்தவில்லை. 


இருப்பினும் அவனின் இளவயது புகைப்படத்தைப் பார்த்திருந்தவளுக்கு, அக்னியின் கண்கள் கண்ணாமூச்சி ஆடுவது சுவாரஸ்யத்தைத் தந்தது. எதையும் ஆழமாக சிந்திக்கும் பெண், ஒவ்வொரு முறை அவனை இது போல் அருகே காணும்போதும் விடைத் தேடித் தவிக்கிறாள். 


சன்ன ஒளியில், அத்தனை அருகில் அவளின் மைத் தீட்டிய விரிந்த கண்களைக் கண்டதில் அடங்க மறுத்தது இவன் காதல்! ‘ஆல் இஸ் ஃபேர் லவ் அண்ட் வார்’ என்ற இற்றுப் போன வாசகத்தைப் பிடித்துக்கொண்டு அவளை நெருங்கிவிடலாமா என்று சித்தம் கலங்கி சிந்தித்தவனும், சட்டையைத் தோளில் பிடித்திருந்த வலக்கையை கீழே இறக்கி, ஒரு அடி அவள் முன்னே நகர்ந்திருந்தான்.


இவனுக்காகவே மின்னல் பளிச்சிட்டு எச்சரிக்கை விடுத்ததோ! சுதாரித்துக்கொண்டான்.


“ஏன் சும்மா என்னை சைட்டடிக்கற? உனக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கான்னு உன் ஃப்ரெண்டு சொன்ன மாதிரி ஞாபகம்!” கண்கள் கேலியாகச் சிரித்தன. 


சந்தனாவிற்கு கோபம் கொப்பளித்தது. அவளே அதில் சங்கடமடைந்திருக்கிறாள். இவன் வேறு அதனைச் சொல்லிக் காட்டிப் பேச எரிச்சலாக வந்தது. “நான் ஒண்ணும் உங்களைச் சைட்டடிக்கலை!”


“பின்ன சும்மா உத்து உத்து பார்க்கற?”


“மிஸ்டர் ஸ்வரூப், உங்களுக்கு தம்பி யாராவது இருக்காங்களா?”


“ஏன் கேட்கற?”


“சித்தி பையன்… அந்த மாதிரி…”


“ம்ஹூம்!”


“இல்ல… உங்களை மாதிரியே யாரையோ இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரி இருக்குது. மேபீ காலேஜ்ல பார்த்திருக்கலாம்.” தனக்குள் பேசிக் கொள்வதைப் போல் சொல்ல, அன்றொரு நாள் பிரகதி சொன்ன இவளின் அந்த ‘ஷார்ப் ப்ரெசன்ஸை’ இன்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தான் அக்னி.


தொண்டையைச் செருமி கொண்டான். “ம்க்கும்! சித்திப் பையன்னு யாரும் இல்ல!” 


“ஓ! ஆனா கண்டிப்பா இந்த கண்ணை யார்க்கிட்டேயோ பார்த்திருக்கேன்.” என்று மீண்டும் அவனை நெருங்கி நின்றாள்.


‘ஐஸ்! கண்ணு அப்பாவை மாதிரி இருக்கா என்ன? அதான் ரெண்டு பேரும் இப்டி பார்க்கறாங்களா? நாளைல இருந்து கூலிங் கிளாஸைப் போட்டுக்கிட்டு சுத்தணும்டா அக்னி!’


இதழ் மடக்கி மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டவன், நடைபயில்பவன் போல் நகர்ந்துகொண்டு சாதாரணமாக கேட்டான். “நாளைக்கு மாப்பிள்ளை அழைப்பு இருக்குதுன்னு சொன்னாங்களே… உங்க வீட்டுக்கு போயிட்டு வரணுமா?”


திருமணம் முடியும் வரை இவள் தன்னைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று வேண்டிக்கொண்டான்.


ஒருவேளை அவள் வேறொருவனைக் காதலிக்காமல் இருந்திருந்தால், இவன் இதற்குள் அவளை மனதால் நெருங்க விழைந்திருக்கக் கூடும். அவளும் தன்னை நெருங்கும் அக்னியிடம் ஒருவேளை மனம் மயங்கியிருக்கக் கூடும். அப்படி அவள் இவனிடம் மனம் மயங்கியிருந்தால் இவ்விடத்தில், நமக்கும் ஓர் காதல் காட்சி கிடைத்திருக்கக் கூடும்.


மேற்சொன்ன எதுவுமே இல்லாததால் தற்போது இருளையும் ஈரக்காற்றையும் மட்டும் ரசித்துவிட்டு கடக்கச் சொல்கிறேன். அதற்காக என்னை வசைப்பாடாமல் அடுத்த அத்தியாயத்தில் சந்தனாவின் மனதைக் கவர்ந்த அருணைச் சந்திக்க ஆயத்தமாகுங்கள்.


                        **********


வந்ததிலிருந்து தன்னைக் தவிர்க்கும் பாவனாவைச் சிந்தனையாகப் பார்த்தான் அர்ஜூன். சரியாக சொன்னால் அவள் சென்னை வந்ததிலிருந்து கடந்த நான்கைந்து நாட்களாகவே சரியாக பேசுவதில்லை. இவன் அழைத்தாலும் ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி எடுத்தவுடனேயே வைத்துவிடுகிறாள்.


இதோ இப்போதும் இவனைப் பார்க்காத போது திருட்டுப் பார்வை பார்த்துவிட்டு இயல்பாக இருப்பதைப் போல் அவள் அக்காவிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். நடிப்பதையும் ஒழுங்காக செய்ய தெரியாத அந்தப் பெண்ணை அர்ஜூனுக்கு இன்னுமின்னும் பிடித்தது. ‘க்யூட் பேபி’ என மனதோடு செல்லம் கொஞ்சிக் கொண்டான்.


அனுவை அவளறையில் விட்டு வந்தவன், இவனைக் காணாமல் தேடி ஓரமாக வந்திருந்த பாவனாவின் அருகே போய் நிற்க, அவள் சுற்றிலும் தேடியபடி இவன் மார்பிலேயே முட்டிக்கொண்டாள். அப்படியே கைப்பிடியாய் பிடித்து, மொட்டை மாடிக்கு செல்லும் படியை ஒட்டிய அறைக்கு இழுத்து வந்திருந்தான்.


“அர்ஜூன் விடு விடு!” என்றவளின் கண்கள் அச்சத்தில் நாலாபுறமும் சுழன்றது. 


அக்னிக்கு பயந்து அவனைத் தான் தேடினாள் அவள். அவன்தான் அர்ஜூனின் குணம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதுவரையில் அவனுடன் அதிகம் பேச வேண்டாம் என்றிருந்தான்.


மெய்க்காதலுக்கு பேச்சும் மொழியும் இரண்டாம் பட்சமல்லவா? ஆக, அறைக்குள் தள்ளி கதவைப் பூட்டியவனிடம் அவளுக்கு பயமில்லை.


“ஓய்!”


“நானு நின்ன ப்ரேதிசுத்திதேனெ அர்ஜூன்.”


“தயவுசெஞ்சு கன்னடத்துல பேசாதேடி! ஒண்ணும் புரியாம காண்டாவுது!”


சிரித்துவிட்டு கன்னடத்திலேயே தொடர்ந்தாள். “இந்த டிரெஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க அர்ஜூன்.”


“ஷ்ஷப்பா… ஹேஷ்டேக் போடாத போஸ்ட் மாதிரி ஒரு எழவும் புரியலைடி பொண்டாட்டி!”


“எனக்கும் புருஷன்னு சொல்லி உன்னைக் கட்டிக்கணும் போல இருக்குது அர்ஜூன்.” - கன்னடம்.


ஒவ்வொரு முறையும் அர்ஜூன், அர்ஜூன் என்று குவியும் அந்த உதடுகள் இவனை நல்லவனாக இருக்க விடவில்லை.


“சொன்னா கேளு பானு. தமிழ் பையனை லவ் பண்ணிட்டு அவனைக் கன்னடத்தால கண்டம் பண்ணாதே!” என்றவாறு அவளை நெருங்கியிருந்தான்.


அவன் பாஷை புரியாமல் முழிப்பதில் அவளுக்கு குஷியாகிப் போனது. மேலும் கன்னடத்திலேயே மிழற்றினாள். “உன்கிட்ட பேசக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க அர்ஜூன். ஆனா என்னால உன்கிட்ட பேசாம இருக்க முடியலை. இத்தனை வருஷமும் உன்கிட்ட பேசாம எப்டி உயிர் வாழ்ந்தேன் அர்ஜூன்? நீ நல்லப் பையன்னு சீக்கிரம் ப்ரூவ் பண்ணிடு அர்ஜூ…”


‘ன்’ அவன் இதழ்களுக்குள் போய்விட்டது. இரண்டு நொடிகள் பிரிந்தவன், “திரும்ப அர்ஜூன்னு சொல்லு!” என்றான்.


பேயறைந்ததைப் போல் பார்த்து கொண்டிருந்த பாவனாவின் விழிகள் கலங்கியிருந்தது. அவள் அவளின் முந்தைய பேச்சில் உணர்ச்சி வசப்பட்டிருந்தாள். “ஹேய் பிடிக்கலையா?”


கன்னடத்தில், “உன்னை ரொம்ப பிடிச்சிருக்குது அர்ஜூன்.” என்றவள் எக்கி, அவன் கழுத்தை வளைத்து முத்தமிட, அர்ஜூனின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்துகொண்டது.


“அர்ஜூன்னு சொல்லு!” என்று கேட்டு கேட்டு, குவிந்த உதடுகளைச் சுவைத்தவனுக்கு திகட்டவேயில்லை.


நல்லவேளை முத்தங்கள் மொழியறியவில்லை!


இசைக்கும்...

Comments

  1. ❣️
    கதாநாயகியை வர்ணிக்கிற எழுத்துகள் அழகா இருக்கு.
    Al pic நல்லா இருக்கு.
    பிரகதி கல்யாணம் முடியுறதுக்குள்ள, அர்ஜூன் கல்யாணம் முடிஞ்சிரும்போல 😋

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா... அவன் செம ஸ்பீட்ல்ல? நன்றி சிஸ் 🪻🪻

      Delete

Post a Comment

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25