கருவறை கீதம் -26.1


அத்தியாயம் 26.1

ந்தனாவுடன் தன்னைக் காண வந்த அக்னிஸ்வரூபனை கலியபெருமாள், “சஞ்சு!” என்றழைக்க, திடுக்கிட்டு போனான் அவன்.


“தாத்தா, இவர் நம்ம சஞ்சு இல்லை!” என்றாள் சந்தனா.


அவளைச் செவிமடுக்காதவர், மெதுமெதுவாக தன்னை நெருங்கி வந்தவனிடம், “வாடா வாடா சஞ்சு! தாத்தாவை விட வளர்த்தியா இருக்கியேடா… குனி!” என, அவர் முன் குனிந்து நின்றான்.


அவன் முகம் முழுவதும் சுருக்கம் விழுந்த தன் இரு கரங்களால் வருடினார். ஒரு காலத்தில் இவன் தொட்டுவிட்டால் தீட்டு என்று சட்டையைக் கழற்றி எறிந்த அதே மனிதர்!


சஞ்சய்யின் எரிந்த நினைவுகளெல்லாம் ஃபீனிக்ஸானது. உள்ளம் நடுங்க விழி மூடிக்கொண்டவனின் இமைகள் ஈரமானது.


தாத்தாவிற்கு வளர்ந்து நிற்பவனின் மேல் வன்மம் தளர்ந்துவிட்டதோ!


அவன் இரு தோள்களையும் பிடித்துக்கொண்டவர், “உனக்கு செஞ்சதைத் திருப்பி செஞ்சிடு சஞ்சு. ஆனா எனக்கு நல்ல கதியை மட்டும் கொடுத்திடுடா அப்பா.” எனக் கண்களில் நீர் வழியக் கேட்டவர் கட்டியிருந்த வேஷ்டியை அவிழ்க்க, அருகே தயாராக நின்றிருந்த இரு சிற்றூழியர்கள் ஓர் அதட்டலுடன் அவரைப் பிடித்துக்கொண்டனர்.


அவர்களிடம் தான் பார்த்துக் கொள்வதாகக் கண்ணசைத்தவன், அவரை விடுவிக்கச் செய்தான். சஞ்சுவிற்கு தாத்தாவின் இந்த அணுகுமுறை அதிர்ச்சிதான்! அவர் நல்ல மனநிலையில் இல்லை என்பதும் புரிந்தது.


“தாத்தா அவர் நம்ம சஞ்சு இல்லைன்னு சொல்றேன்ல?” என்றவளின் குரல் அவர்கள் இருவரின் உலகிற்குள்ளும் நுழையவில்லை. 


“உன்னைச் சாக்கடைன்னு சொன்னதுக்காக இந்த தாத்தாவை மன்னிச்சிடுடா சஞ்சு… நீ சாக்கடை இல்லை; சந்தனத்துக்கு உகந்தவன்!” என படபடவென அவன் கைப்பிடித்துச் சொன்னவர், அவன் காலிலும்‌ விழத் தயாராக,


“தாத்தா!” என்ற அதட்டலுடன் சந்தனா அவரை நிமிர்த்தி, அவர் கரத்தை சஞ்சய்யின் கரத்திலிருந்து பிரித்துவிட, இப்போது அவர் அவளின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்.


“நீ போனதுக்கப்புறம் பாஸூ கண்ல ஜீவனே இல்லை சஞ்சு. நான் செஞ்ச பாவம்தான் என் பிள்ளையைப் பிடிச்சு ஆட்டுது. உன்னால முடிஞ்சா தாத்தாவை மன்னிச்சிடுடா… என் பிள்ளை சந்தோஷத்தை மீட்டுக் கொடுத்துடுடா…” என்றவர் பேரனின் முன் கூனி குறுகி நின்றார்.


அவரின் தோள்களைப் பிடித்து நிமிரச் செய்தவன், வருந்த வேண்டாமென பிடித்த தோள்களில் சிறு அழுத்தம் கொடுத்தான். அவனுக்குதான் பேச்சே எழவில்லையே!


“நீ… நீ… பத்திரமா இருந்தியா சஞ்சு? எங்கே இருந்த’ன்னு நான் கேட்கலாமா?” இந்தக் கேள்வி கேட்க நான் தகுதியற்றவன் என்ற உணர்வு முகம் முழுவதும் வியாபித்திருக்க, தலையைக் குனிந்தபடி கேட்டார்.


“பேங்களூர்ல இருந்தேன்.” என்றவனின் குரல் கமறியது.


“ஹ…” என்றோர் ஒலியெழுப்பியவர் மூச்சு வாங்கிக்கொண்டு, சந்தனாவின் கையை விடுவிக்காமல் அவளிடம் சொன்னார். “சந்தனம், அவன் அந்த வயசுலேயே அவனோட அம்மாவுக்காக ஆலமரத்தோட அடிவேர் மாதிரி எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தான். அதனாலதான் அவனைச் சந்தனத்துக்கு உகந்தவன்னு சொல்றேன். அப்படிப்பட்டவன் நிச்சயம் இப்போ ஒரு நல்ல மனுஷனா தான் இருப்பான். நீ தாத்தாவை நம்பற இல்ல?”


அக்னியைச்(?) சங்கடத்துடன் பார்த்தாள் அவள். “தாத்தா ப்ளீஸ்… நான் சொல்றதைக் கேளு…” என அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல,


அவர் மீண்டும் அவனிடம் திரும்பினார். “சாகறதுக்கு முன்னாடி உன்னைப் பார்த்து மன்னிப்பு கேட்கணும் நினைச்சேன். பார்த்துட்டேன் சஞ்சு. ஆனா தாத்தாவுக்கு ஒரு ஆசைடா…”


“தாத்தா!” பல்லைக் கடித்தாள் பேத்தி.


“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?”


இல்லையெனத் தலையசைத்தான் பேரன்.


“ஆங் நல்லது! நீ சந்தனத்துக்கு உகந்தவன்னு சொன்னேனா… என் வாநாள் (வாழ்நாள்) ஆசைடா இது! உனக்காக தாத்தா என் பேத்தி சந்தனத்தைக் கொடுக்கறேன். நல்லபடியா பார்த்துக்கறியா அவளை? அவளோட இருந்தா வாசமா இருப்பே… உன் வாழ்க்கை முழுசும் வாசமா இருக்கும்… பார்த்துக்கறியா?” ஆதுரமாகக் கேட்டவர், தன்னிடமிருந்த சந்தனாவின் கரத்தை பேரனின் புறம் நீட்டினார்.


அவன் அவளைப் பார்க்க, கண்களால் வேண்டாமென்றாள் அவள். 


வேண்டாமென்ற அந்தக் கண்களைப் பார்த்தபடியே அவள் கரத்தை இறுக்கிக்கொண்டவன், “பார்த்துக்கறேன் தாத்தா!” என்றான்.


“அக்னி…” என ஆட்சேபித்தவளின் விரல்களில் அழுத்தம் தந்தான்.


“சந்தனம்!”


“சொல்லு தாத்தா!”


“சஞ்சுவை நல்லா பார்த்துக்கோ! அவன் விரலைக் கெட்டியா பிடிச்சுக்கோ! இல்லைன்னா அவனைப் பூச்சாண்டி தூக்கிட்டு போயிடுவான்.” எனவும்,


சஞ்சய்யின் கண்கள் மழுக்கென்று கண்ணீரைப் பிரசவித்தது. சந்தனா பார்க்கும் முன் விழி சிமிட்டி அதனைத் துரத்தினான்.


ஆயாசமாக, “ச்சு உளறாதே தாத்தா! இவர் நம்ம சஞ்சு…” என்றவளை இடையிட்டு சொன்னான் அவன்.


“நான் பிடிச்சுக்கறேன் தாத்தா. நீ நிம்மதியா இரு!”


“என்னை மன்னிச்சிட்டியாடா? இந்தக் கிழவனை மன்னிச்சிட்டியா? உன்னைத் துரத்திவிட்டதும் எனக்கு பைத்தியமே பிடிச்சிடுச்சுடா சஞ்சு! எங்கே பார்த்தாலும் நீதான் வந்து நிற்கற… அனு வேற அர்ஜூனைக் காட்ட மாட்டேனுட்டா… அவக்கிட்ட சொல்லி அர்ஜூனைக் காட்ட சொல்றியா?”


“இதோ இப்பவே அர்ஜூன் வருவான்.” என அலைப்பேசியை உயிர்ப்பிக்க,


“ஸ்வரூப்! தாத்தாவுக்கு அர்ஜூன் வளர்ந்துட்டான்றதே தெரியாது. அவனை இன்னும் அஞ்சு வயசு குழந்தையா நினைச்சிட்டிருக்கார்.” என்று வேதனையுடன் உரைத்தாள் சந்தனா.


நம்ப இயலாமல் அவளைத் திரும்பிப் பார்த்தான். 


“ம்ம்!” என கண்மூடித் திறக்க, பெரியவர் தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தார்.


“உங்க பாட்டி கூட என்னை கோவிச்சுக்கிட்டு, என்னைத் தனியா தவிக்கவிட்டு போயிட்டா சஞ்சு. உங்கப்பன் என்னை அவன் வீட்டுக்கு கூப்பிட்டான்தான்… ஆனா அவன் பிள்ளையைத் தொலைச்சிட்டு அவன் வீட்டிலேயே உட்கார்ந்து எப்டிடா என்னால ஒரு வாய் சோறு சாப்பிட முடியும்? அனு நல்லப் பொண்ணுதான்… ஆனா ஒருநாள் ஒருபொழுது என் பிள்ளையைத் தொலைச்சவன்னு சொல்லிக் காட்டிட்டா என் உசுர் அங்கேயே போயிடாதா?” 


தாத்தாவின் தேம்பலில் சந்தனாவிற்கும் அழுகை வந்தது. அழுதுகொண்டே சொன்னாள். “அனு அத்தை அப்டியெல்லாம் சொல்ல மாட்டாங்க தாத்தா. ரொம்ப நல்லவங்க! நம்ம அர்ஜூன் இப்போ பெரியவனா வளர்ந்துட்டான். சீக்கிரமே சஞ்சுத்தானைக் கண்டுபிடிச்சிடுவான். நீ பாஸ் மாமா வீட்டுக்கு வா தாத்தா!”


“இங்கே இருக்கறவனை எதுக்குடி கண்டுபிடிக்கணும்?”


தன் உளறலில் அவள் விழிக்க, “நான்தான் இப்போ வந்துட்டேன்ல தாத்தா? நீ வீட்டுக்கு வாயேன்…” என்றான் சஞ்சய்.


“ப்ச்! வேணாம்டா. நீ என்னை மன்னிச்சதே போதும். இந்தப் பைத்தியம் இனி செத்து சுண்ணாம்பா போனாலும் சந்தோ…ஷமா போகும்டா. உனக்கு என் மேல கோபமிருந்தா உனக்கு செஞ்ச மாதிரி திருப்பி செஞ்சிடு சஞ்சு!” என்று கைக் கூப்பியவரின் விழிகள் விடாது கண்ணீர் மழைப் பொழிந்தது.


கூப்பிய கரங்களை இறக்கிவிட்டான். “உனக்கு ஒண்ணுமில்லை தாத்தா. எனக்கு உன் மேல கோபமில்லை. நீ இவ்ளோ வருத்தப்பட தேவையுமில்லை.” 


அலைபாய்ந்து கிடந்த அவரின் ஆன்மா அவனின் அந்த சில வார்த்தைகளில் அமைதியுற்றது. பெருமூச்சுடன் அங்கிருந்த இருக்கையில் கண்மூடி அமர்ந்துகொண்டார்.


“தாங்க்ஸ் ஸ்வரூப்!” என்ற சந்தனா, தன் கரத்தை அவனிலிருந்து விடுவித்துக்கொண்டு தாத்தாவினருகே மண்டியிட்டு அமர்ந்தாள்.


“தாத்தா, சஞ்சுத்தான் தான் வந்துட்டானே… இப்போ நீ அவி கல்யாணத்துக்கு வரலாம்ல?” எனக் குழந்தையிடம் பேசுவதைப் போல் கேட்டாள்.


“இவன் உன் கழுத்துல தாலி போடும்போது வர்றேன் சந்தனம்.” என்று தீர்மானமாய்ச் சொன்னவர் எழுந்து உள்ளே போய்விட்டார்.


பேத்தியும் போகும் அவரைக் கவலையாக பார்த்துவிட்டு எழுந்துகொண்டாள். இருவரும் காரிடாரில் நடந்தனர்.


“தாத்தா இவ்ளோ பேசி நான் இன்னிக்கு தான் பார்க்கறேன். அவர் மனசுல என்ன இருக்குதுன்னு எங்க யாருக்குமே இதுவரை தெரியாது. டாக்டர்க்கு கூட ஒழுங்கா கோ-ஆபரேட் பண்ணமாட்டார். எப்போ வந்தாலும் சஞ்சு கிடைச்சுட்டானா? அர்ஜூனைப் பார்க்கணும் கூட்டிட்டு வான்னு தான் சொல்லுவார்.”


மௌனமாக இருந்தான் அவன்.


“நீங்க ஏன் பொய் சொன்னீங்க ஸ்வரூப்?”


“நம்மளோட ஒரு வார்த்தையால அவரோட இத்தனை வருஷத்து மனக்கலக்கம் தீரும்ன்னா அதைச் சொல்றதுல தப்பில்லை. வா!” என்றுவிட்டு காரை எடுக்கப் போய்விட்டான்.


ஓட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்தவன் தலையை இரு கரங்களாலும் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டான். தாத்தா எப்படி தன்னைக் கண்டுகொண்டார்? அவர் இவனை சஞ்சு என்றழைக்கையில் சந்தனா அதிரவேயில்லையே! ஏன்?


தான் எப்போதோ அந்த இருண்ட, கசப்பான அனுபவங்களில் இருந்து வெளிவந்து விட்டதாக நினைத்திருக்க, அப்படியில்லை என்று இந்த சிறிது நாட்களில் புரிந்திருந்தது. அதுவும் தாத்தாவும் அவரின் இப்போதைய மாற்றமும் இவனுள் பெரும் பிரளயத்தை தான் ஏற்படுத்திவிட்டது.  


அதற்கு எதிர்வினையாற்ற முடியாமல் அத்தனை உணர்வுகளையும் அடக்கிக்கொண்டு சந்தனாவின் முன் வேற்று மனிதனைப் போல் நின்றதுதான் கொடுமையாக இருந்தது. ஏசியை அதிகமாக வைத்து, காரிலிருந்த ஈர காகிதத்தால் (face wipes) முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டவனுக்கு, தாத்தா அவள் கரத்தைத் தன்னிடம் கொடுத்தபோது அவள் முகம் போனப் போக்கை நினைத்து குபீரென சிரிப்பு கிளம்பி இத்தனை நேர அழுத்தத்தையும் துரத்திவிட்டது.


உண்மையிலேயே இவன்தான் சஞ்சு என்று தெரிய வரும்போது எப்படி உணர்வாளோ!


[To be continued in the next post... அதையும் படிச்சிட்டு, நிறை குறைகளைச் சொல்லுங்க☘️☘️]

Comments

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25