கருவறை கீதம் -28.1

 


அத்தியாயம் 28.1


க்னிஸ்வரூபன் பொக்கிஷம் போல் பொத்தி வைத்திருந்த தன் காதலைச் சந்தனாவிடம் வெளிப்படுத்திவிட்டு உள்ளூர உண்டான பதற்றத்துடன் அவள் முகம் நோக்கியிருக்க, ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு அவன் பொக்கிஷக் காதலை‌ப் புஸ்வாணம் ஆக்கி வைத்தாள் அவனின் மாரியாத்தா!


“அர்ஜூன் பாவனாவை லவ் பண்றான்னு, அவனைப் பழிவாங்க தான் என்கிட்ட இப்டி கேட்கறீங்களா அக்னி?”


அவளால் வேறு எப்படியும் நினைக்க முடியவில்லை. ஏனெனில் வந்ததிலிருந்து ஒருமுறை கூட அக்னியின் கண்களில் தனக்கானக் காதலை அவள் பார்த்திருக்கவில்லை. 


அத்தனைக்கு அவன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் கட்டுப்பாடுடன் இருக்கிறான் அல்லவா? அதுவே இப்போது அவனெக்கெதிராக திரும்பியுள்ளது. 


அதனால்தான் அர்ஜூன் கூட எங்கே அண்ணன் கை நழுவிப் போவானோ என்ற எண்ணத்தில் உடனே அவளிடம் பேசு என்று அடமாய் நிற்கின்றான். அனுவிடம் போல் இவளிடமும் இவன் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தால், இந்த பத்து நாட்கள் தீவிர கண்காணிப்பில் அண்ணனின் காதலைக் கண்டுகொண்டிருப்பானே?


“ஓ மேன்!” என்று வெளிப்படையாகவே நெற்றியில் கை வைத்து நொந்துகொண்டான் அக்னி. 


‘ஏண்டா எல்லாருமா சேர்ந்து என்னைச் சாவடிக்கறீங்க?’ என்பதாக இருந்தது அவன் உடல்மொழி!


“பின்னே? நிஜமாவே என்னை லவ் பண்றேன்னா சொல்றீங்க?”


“ஏண்டி எனக்கெல்லாம் லவ் வராதா?” அர்ஜூனின் மேலிருந்த எரிச்சலும் சேர்ந்தே வெளிப்பட்டது.


களுக்கென சிரித்துவிட்டாள் அவள். “அப்டியில்லை… நான் உங்களை சைட்டடிச்சேன்னு சொன்னீங்க… ஐ அட்மிட் தட்! பட் ஒருமுறை கூட நீங்க என்னை அப்டி பார்த்த மாதிரி நான் ஃபீல் பண்ணலையே…”


இவன் கண்கள் சிரித்தன. சற்றே முன்னால் சாய்ந்து அவளை நெருங்கியவன், இதயத்திலிருந்த மொத்த காதலையும் கண்களில் நிரப்பிக்கொண்டு, “உன்னை எப்டியெல்லாம் பார்த்தேன்னு சொல்லவா?” எனக் கேட்க,


நொடியில் மாறிப் போன அவனின் பார்வையிலும் பேச்சிலும் அவளின் சிரிப்பு தேய்ந்து, குங்குமமாய்ச் சிவந்துபோனது அந்தச் சந்தனம். காரில் வரும்போது ஒருமுறை இந்தப் பார்வையை எதிர்கொண்ட ஞாபகம்! அவன் முகம் பார்க்காமல் குனிந்துகொண்டவளின் குரல் மென்மையுற்றிருந்தது. “பட் ஐ கான்’ட் அக்செப்ட் யோர் லவ், அக்னிஸ்வரூப்!”  


“ஏன்?” அவளின் சிவந்த முகமும் குரலும் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லையே!


அவனிடமிருந்து விலகி நிமிர்ந்து அமர்ந்துகொண்டாள். “நான் இதுக்கு முன்னாடி எனக்கு வந்த எந்த ப்ரோபஸலையும் நோ சொல்லி கடந்து போயிருக்கேன். யாருக்கும் எந்த விளக்கமும் சொன்னதில்லை.”


ஏதோ முக்கியக் குறிப்பைச் சொல்பவளைப் போல் மிகத் தீவிரத்துடன் காணப்பட்டது அவள் முகம். “ஆனா உங்களுக்கு சொல்லலாம்ன்னு தோணுது. பிரகதியோட அண்ணன் மட்டுமில்லாம, நானுமே பழகின வரை உங்க மேல நிறையவே மரியாதை வச்சிருக்கேன்.”


அவளை மௌனமாக பார்த்திருந்தான் அக்னி.


“சோ… ஹோப் யூ வில் அண்டர்ஸ்டாண்ட் மீ! எனக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கான்னு தெரிஞ்சும் எப்டி லவ் சொல்றீங்க அக்னி?”


“ப்ச்!” எரிச்சலுடன் பக்கவாட்டில் முகம் திருப்பிக் கொண்டவன் கேட்டான். “எவன் அவன்?”


அவனுக்குமே ‘அவன்‌’ யாரென்று தெரிய வேண்டியிருந்ததே!


“சஞ்சுத்தான்.”


பட்டென்று திரும்பிய அக்னியின் விரலிலிருந்த ஸ்பூன் நழுவி மேசையில் விழுந்தது. “ஈன்… ஈனு ஹெலிதிரி?!”


“ஹ்ம்ம்! யூ ஹியர்ட் மீ ரைட் ஸ்வரூப்!”


அர்ஜூன் இதைச் சொல்லவில்லையே! இதற்கு தான் அவளிடம் பேசு பேசு என்று நச்சரித்தானா? 


கண்கள் மூடி வாயைத் திறந்து மூச்சை உள்ளிழுத்துக் கொண்டான். “ஐ டோண்ட் கெட் யூ! காணாம போனவன் எப்டி…?”


“திரும்ப வந்துடுவான். அவி அண்ணாவும் அர்ஜூனும் கண்டுபிடிச்சிடுவாங்க.”


“எனக்கு இப்பவும் புரியல. நீ சொன்னபடி பார்த்தா அவன் காணாம போகும்போது நீ நாலு வயசு குழந்தைடீ!”


“ஆனா பதினாலு வயசுல பெரியவளானப்போ சஞ்சுவுக்கு சந்தனம்ன்னு பேச்சு வந்தது.”


“யாரு? தாத்தாவா?”


அவர்தானே அவளைச் சந்தனம் என்றழைக்கிறார்!


“ம்ம்! என்னைப் பார்க்கும் போதெல்லாம், ‘அவன் சாக்கடை இல்லை; சந்தனத்துக்கு உகந்தவன்! நீ தாத்தாவை நம்பறதானே?’ன்னு கேட்டுட்டே இருப்பார். ஆரம்பத்துல யாரை அப்டி சொல்றார்ன்னு எனக்கு புரியல.”


இவள் தாத்தாவைப் பார்க்க பாஸ்கரனுடன் சென்றிருந்தால், எதற்கும் பேசாத கலியபெருமாள் இவளைக் கண்டால் மட்டும் மேற்கண்ட வசனத்தைச் சொல்லி இவள் முகம் பார்த்து நிற்பார். பாஸ்கரன் கலியபெருமாளுக்கு அதட்டல் போடுவதுடன் இவளையும் வெளியே போய் நிற்க சொல்லிவிடுவான். நிர்மலாவுடன் வந்திருக்கும் போது அவர் இப்படி சொல்லி வைக்க, அதன்பின்னர் தாத்தாவைப் பார்க்கவே வேண்டாமென இவளுக்கு தடைவிதிக்கப்பட்டது.


“அதனால என்னோட போஸ்ட் டீனேஜ் வரைக்குமே தாத்தா யாரைச் சொல்றார்ன்னு எனக்கு தெரியல. அப்புறம் ஒருமுறை அனு அத்தை சஞ்சுத்தான் பர்த்டே அன்னிக்கு வீட்டுல பூஜையை முடிச்சிட்டு, கோவில்ல அபிஷேகத்துக்கு சொல்லிருந்தாங்க. அப்போ நான் யூஜி ஃபர்ஸ்ட் இயர்!”


ஏதோ விடுமுறை என்று சென்னை வந்திருக்க, பூஜைக்கு இவளையும் அழைத்தாள் அனு. ஆனால் நிர்மலா இவளைப் போகவிடவில்லை. 


இவள் போகவேணுமென அடம்பிடிக்க, “அந்தச் சாக்கடை பிறந்ததே வீட்டுக்கு தரித்திரம் தான்! அதுக்கு பூஜை வேற ஒரு கேடு!” என்று கடுமையாக பேசிவிட, அப்போதுதான் சஞ்சுவைச் சொல்கிறார்கள் எனத் தெரிந்துகொண்டாள் இவள்.


ஆனால் இப்போது அக்னியிடம் அம்மாவை விட்டுக் கொடுக்காமல், “அன்னிக்குதான் அம்மா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் நான் வேணும்னே தாத்தாவைப் பார்க்க தனியா போவேன்.”


“புல்ஷிட்! அவர் மெண்ட்டலி அன்ஸ்டாபிள்ன்னு தெரிஞ்சுமா அவர் வார்த்தையைப் பிடிச்சிட்டிருக்கே?”


“ம்ஹூம்! தாத்தா வார்த்தை மட்டுமில்ல; அனு அத்தை ஆசையும் அதுதான்!”


திகைப்புடன் கேட்டான். “வாட் டூ யூ மீன்? அ… உங்கத்தையுமா?”


“ம்ம்! ஆனா அத்தை என்கிட்ட நேரடியா சொன்னதில்ல.” என்று இடக்கையைக் கழுத்தினடியில் தாங்கி சிரித்தவள், அனுவுக்கும் நிர்மலாவுக்கும் நடக்கும் பனிப்போர் பற்றி சொன்னாள்.


இவனுக்கு ஐயோவென்றிருந்தது. தன் பொருட்டு அம்மா எத்தனை இன்னல்களை இழுத்துக் கொண்டிருக்கிறார்! யாரோ என்னவோ சொல்லிவிட்டு போகட்டும் என்று விடக்கூடாதா?


அவன் மனசாட்சி கேட்டது. ‘நிர்மா அத்தை அம்மாவைப் பேசும்போது உனக்கும்தான் ஏன் கோபம் வருகிறது?’


“படிச்ச பொண்ணுதானே சந்தனா நீ? பெரியவங்க ஏதோ பேசறாங்கன்னு எதிர்காலமே இல்லாத ஒரு விஷயத்தைப் போய்…” மனம் ஆறமாட்டாமல் கேட்க,


அலட்டாமல் சொன்னாள் அவள். “அர்ஜூன், அவி மாதிரியே பேசறீங்க அக்னி! பெரியவங்களுக்காக மட்டும் இல்லை. எனக்கே சஞ்சுத்தானைப் பிடிக்கும்.”


“ரப்பிஷ்! அவங்க யாரும் சொல்லலைன்னா அவனோட பிரிஸென்ஸே உனக்கு தெரிஞ்சிருக்காது!”


“ம்ம்! நிஜம்தான். நானும் அர்ஜூனும் சஞ்சுத்தானை அனு அத்தை கண் வழிதான் பார்த்திருக்கோம். அவங்க மனசு வழிதான் உணர்ந்திருக்கோம். அவங்க எங்களுக்கு சஞ்சுவோட ஞாபகங்களை மறக்கவே விடல. பதினாறு வயசுல நான் ரூம்ல இல்லைன்னு நினைச்சிட்டு அத்தையும் அம்மாவும் இதுக்காக சண்டைப் போட்டுட்டு இருந்தாங்க. முன்னாடியும் இது நடக்கும் தான்னாலும், ஏனோ அன்னிக்கு தான் மனசுல ஒரு குறுகுறுப்பு! அத்தான் இப்போ எப்டி இருப்பான்னு பார்க்க ஆசை!”


இவன் நொந்துபோய் கண்மூடி நெற்றியில் கைவைக்க, அவளிடம் சிறு கோபம்! “கேட்கறதுக்கு இஷ்டமில்லைன்னா போகலாம் அக்னி! நானும்தான் என் பர்சனல் எல்லாத்தையும் ஏன் உங்க கிட்ட ஷேர் பண்ணனும்?”


கோபமேறிய சின்ன நாசியும் சிறிதே குவிந்திருந்த இதழ்களுடன் தாடையும், இழுத்து வைத்து கொஞ்ச தூண்ட, ‘ச்சை! மானங்கெட்டவனே!’ என்று நிந்தித்துக்கொண்டு, அவளிடம் தன் கம்பீரத்தை விடாமல் சொன்னான். “லைஃப ஸ்பாயில் பண்றியேன்னு கொஞ்சம் ஃபீல் பண்ணிட்டேன்ம்மா. சரி சொல்லு, உன் உன்னத காதல் கதையை!” 


“உங்களை அக்செப்ட் பண்ணிக்கலன்னு கிண்டல் பண்றீங்க. போங்க!”


அர்ஜூன் இதற்குத் தான் தன்னை இவளிடம் பேச சொல்லியிருக்கிறான் என்று புரிந்தது. ஆக அவனுக்கு அவள் மனம் முழுதாக தெரிய வேண்டியிருந்தது. எங்கே கோபித்துக்கொண்டு சொல்லாமல் போய்விடுவாளோ என தாஜாவில் இறங்கிவிட்டான்.


“நிஜமா இல்லங்க… சொல்லுங்க…”


“......”


“உன்னை விட்டா வேற பொண்ணே எனக்கு கிடைக்கமாட்டா பாரு! அப்புறம் என்ன சொல்லு!”


அவளும் கொஞ்சமாக சமாதானமாகி தொடர்ந்தாள். “அனு அத்தைக்கிட்ட அத்தான் எப்டி இருப்பான்னு கேட்டேன். அவங்க மாமாவோட பழைய ஆல்பத்தை எடுத்துக் காட்டி இப்டிதான் இருப்பான் சொன்னாங்க. ஏன்னா ரெண்டு பேரோட சைல்ட் ஹூட் ஃபோட்டோஸ்க்கும் நிறைய சிமிலரிட்டீஸ் உண்டு.”


இவன் விழிகளைத் தாழ்த்திக்கொண்டான். “ம்ம்!”


“அப்புறம் ப்ளஸ் ட்டூ படிக்கும்போது அர்ஜூன் ஒரு லவ் லெட்டர் கொண்டு வந்தான்.”


“அர்ஜூன்?!”


“ச்சச்ச! அஜூ குட்டி என் பேபி! அந்த ஹிப்போ பேபி அவன் ஃப்ரெண்ட் கொடுக்க சொன்னான்னு என்கிட்ட கொடுத்துச்சு. அவன்கிட்ட நான் சஞ்சுத்தானை தான் லவ் பண்றேன்னு சொல்ல, அவன் தாத்தாவோட சேர்ந்து நானும் மெண்டலாகிட்டேன்னு சொல்லி, என்னை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் அத்தை, மாமா கிட்ட போட்டு விட்டுட்டான். அன்னிக்கு என்னால மாமா டென்ஷனாகி அத்தையை அடிச்சிட்டார்.”


“வாட்!!” கோபத்தில் தன்னிலை மறந்த அக்னியின் குரல் சிறிது உயர்ந்துவிட்டது.


சடுதியில் முகபாவனையை மாற்றிக்கொண்டு பின்னங்கழுத்தைத் தேய்த்து கொள்பவனை வினோதமாக பார்த்தாள் அவள். அவனுக்கு ஆறுதலளிக்கும் விதமாக மேசையின் மீதிருந்த அவனின் புறங்கையின் மீது தன் கரம் வைத்து கவலையாகக் கேட்டாள். “ஆர் யூ அஃபெக்டட் பை சம்திங் ஸ்வரூப்? நான் சொல்ற சில விஷயங்களால உங்களை நீங்க கனெக்ட் பண்ணிக்கறீங்க. இல்லையா?”


ஒரு கணம், ‘நான்தான் சஞ்சு!’ என்று சொல்லிவிடலாமா என யோசித்துவிட்டு, அர்ஜூனின் எச்சரிக்கையும் இவளுக்கு தன் அம்மாவின் மீதிருக்கும் நேசமும் நினைவு வர, உடனேயே அவ்வெண்ணத்தை அழித்துவிட்டான்.


அம்மாவைப் போல் மனிதர்களைப் படிக்க தெரியாத மக்கள் ஒருவித ஆபத்தென்றால், இவளைப் போல் கண்ணிமைகளையும் படிப்பவர்கள் வேறுவித ஆபத்தை இழுத்து விடக்கூடும்.


அதற்காக ஒன்றுமில்லை என்று சொல்லி மேலும் அவள் சந்தேகத்தை விசிறி விடவில்லை. கல்யாணம் முடிந்ததும் எப்படியும் உண்மை தெரியத்தானே போகிறது? அதனால் ஆமாம் என்றே சொன்னான். “யாஹ்! யோர் கெஸ் இஸ் ரைட்! நானும் அப்புறம் டைமிருக்கும் போது சொல்றேன். இப்போ நீ சொல்லு.” 


“பரவாயில்லை. உங்களுக்கு கஷ்டம்ன்னு தெரிஞ்சப்புறம் எதுக்கு அதைக் கேட்டு…” என்றவளை இடையிட்டான்.


“நீ சொல்லு. என் லவ்’அ ரிஜெக்ட் பண்ற அளவுக்கு உன் காதல் அவ்ளோ வொர்த்தா’ன்னு நான் தெரிஞ்சுக்க வேணாமா? இல்லைன்னா இப்போவே போய் சந்தனாவைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம்ன்னு சொல்றேன். உங்க வீட்ல என்னை வேணாம்ன்னு சொல்லிடுவாங்களா என்ன?” என்றவன் அவளைப் பார்த்தானே ஒரு பார்வை! உள்ளம் திணறிவிட்டது பெண்ணுக்கு! அவன் கரத்தின் மேலிருந்த தன் கரத்தைச் சட்டென்று எடுத்துவிட்டாள்.


இவன் இதழ்கள் இனிதாய் ஓர் பிரிவைச் சந்தித்து பின் இணைந்தன. தனக்கான பெண்ணின் நடுக்கமேறிய நாணம்தான் எத்தனை போதையேற்றுகிறது! மீண்டும் பின்னங்கழுத்தைத் தேய்த்துக்கொண்டான்.


உருகிவிட்ட ஐஸ்கிரீமைப் பார்த்திருந்தவளும் தன் மிடுக்கை மீட்டுக்கொண்டாள். “நீங்க அத்தை -மாமா லவ்’அ பார்த்ததில்லயே அக்னி? சும்மா கட்டிக்கிட்டு, கிஸ் பண்ணிக்கிட்டு எல்லாம் இருக்கறதில்லை. ஆனா சின்ன சின்ன விஷயத்துலயும் காதலுக்கே இவங்கதான் உயிர் கொடுத்தவங்க மாதிரி நடந்துப்பாங்க. கவிதை மாதிரி இருக்கும். அப்போவே எனக்கு அது புரியும்.” என்றவள் மீண்டும் பழங்கதைக்குள் நுழைந்துவிட்டாள்.


“அப்டிப்பட்ட மாமா அத்தையை கைநீட்டினது என்னாலதான்னு அழுகையா வந்தது. அத்தை எல்லாம் தன் தப்புதான்னு சொல்லி மாமா கால்லயே விழுந்துட்டாங்க.”


சந்தனாவிற்கு தெரியாத ஓர் விடயம், அன்றிரவு அனு உறக்கம் கொள்ளாமல் மன உளைச்சலால் மிகுந்த சித்ரவதையை அனுபவித்தாள்.


“அனு!” எனத் தன்‌ தோள் தொட்ட கணவனின் கரத்தை மூர்க்கத்தனமாகத் தட்டிவிட்டாள்.


“நான் நிர்மலா கிட்ட சண்டை போடறது தப்புதான்! அது குழந்தை மனசுல இப்டியொரு பாதிப்பை ஏற்படுத்திருக்கும்ன்னு நான்‌ நினைக்கல. ஆனா நீங்க… நீங்க நம்ம சஞ்சு கிடைக்கவே மாட்டான்ற நம்பிக்கைல தானே இன்னிக்கு என்னை அடிச்சீங்க?” என்று கேட்க அதிர்ந்து போனான் அவன்.


“ஹேய் என்னடி‌ பேசற? நீ உடைஞ்சு போகும்போது கூட நான் நம்பிக்கையோட தான் இருந்திருக்கேன் அனு.”


இல்லையென தலையாட்டியவள், “அப்டி நம்பிக்கை இருக்கறவர் ஏன் சனாவை சஞ்சுவுக்கு கட்டித் தர்றதுக்கு கோபப்படணும்?” என்று கேட்டு குமுறி அழுதாள்.


பாஸ்கரன் செய்த சமாதானங்களெல்லாம் வியர்த்தமானது. கடைசியில் சந்தனாவிற்கு திருமண வயது வரும்போது, அப்போதும் அவளுக்கு சஞ்சுவின் மீது விருப்பமிருந்தால் இருவருக்கும் திருமணம் செய்விக்கலாம் என்ற உடன்படிக்கைக்கு வர, அது அவளுக்கும் உவகையளித்தது.


அன்றிலிருந்து அனு நிர்மலாவிடம் மல்லுக்கட்டுவது குறைந்தது. ஆனால் அனுவுக்கும் நிர்மலாவுக்கும் கண்ணுக்கு தெரியாத ஒப்பந்தம் ஒன்று இருந்தது. சஞ்சய் எங்கே இருக்கிறான் என்று உறுதியாக தெரியாத போது, அவனுக்குதான் சந்தனாவை கொடுக்கப் போகிறோம் என்று யாரிடமும் வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை அனுவுக்கு!


அதேபோலவே நிர்மலாவுக்கும் காரணிகள் இருந்தன. அர்ஜூனுக்கும் சந்தனாவுக்கும் ஒரே வயது. அவர்களுக்குள் இருக்கும் நட்பைத் தாண்டி இருவருக்கும் வாழ்வில் இணைவதில் நாட்டமில்லை; அத்துடன் அர்ஜூன் இப்பொழுதுதான் வாழ்வில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவன் திருமணம் செய்து கொள்வதற்கு இன்னும் சில வருடங்களாகக் கூடும். 


இக்காரணங்களால் நிர்மலாவும் வெளியாட்களிடம் விரிவாக தங்கள் நிலையைச் சொல்வதில்லை. என் மகனுக்குத்தான் சந்தனா என்று அனுவும், என் அண்ணன் மகன் தான் சந்தனாவின் கணவன் என்று பொதுவாகக் கூறி முடித்துவிடுவார்கள்.


“மறுநாள் அத்தையும் மாமாவும் ஸ்கூலுக்கே வந்து, ‘தேவையில்லாத எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது; ஒழுங்கா படிக்கணும்; பெரியவளாகி நல்ல நிலைமைக்கு வரணும்’ன்னு ஒரே அட்வைஸ்! என்னாச்சோ ஏதாச்சோ தெரியாது அதுக்கப்புறம் அத்தையும் எங்கம்மா கிட்ட சண்டை போடறதே இல்லை. என் முன்னாடி சஞ்சுவைப் பத்தி பேசவே மாட்டாங்க.


அவங்க அப்டி என்கிட்ட மறைக்க மறைக்க எனக்கு இன்னும் தான் சஞ்சுத்தான் மேல கிரேஸ் அதிகமாச்சு. அப்புறம் ஃபர்ஸ்ட் இயர் அப்போ தாத்தாவும் சஞ்சுத்தானை தான் சொல்றார்ன்னு தெரியவும் என் லவ் ஸ்ட்ராங் ஆகிடுச்சு அக்னி. அர்ஜூனும் அவியும்… ஏன் பாஸ் மாமா கூட இதுக்காக என்கிட்ட நிறைய சண்டைப் போட்டிருக்காங்க. 


ஆனா என்னால அப்டி மாற முடியலை. சஞ்சுத்தான் இடத்துல வேற யாரையும் வச்சு பார்க்க முடியலை. என் மனசுலயே பதிஞ்சிடுச்சு, நான் சஞ்சுவோட வைஃப்ன்னு! பசங்க லவ் பண்றதா என்னை நெருங்கும் போதெல்லாம் சஞ்சுவோட பொண்டாட்டியா எனக்கு குற்றவுணர்வு வந்ததே தவிர, யார் மேலேயும் லவ் வரல!”


(To be continued in the next post...)

Comments

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25