கருவறை கீதம் 29

 


அத்தியாயம் 29


க்னிஸ்வரூபனைத் தொழில் ரீதியான வேலைகள் இழுத்துப் பிடித்தது. அவன் இல்லாமல் ஒரு மாதம் வரை வேலைகள் தங்குதடையின்றி நடந்தேற ஆவண செய்துவிட்டு தான் வந்திருந்தான். ஒரு பெரிய நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வந்திருக்க, அதற்கான உற்பத்தி வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இவன் இல்லாத நேரத்தில் வேறொரு பிரச்சினையைக் கொண்டு வந்த போட்டி நிறுவனம் ஒன்று உள்ளே வந்து தகராறு செய்ததன் காரணமாக, உற்பத்தி வேலைகள் நிறுத்தி வைக்கப்படுவதாகத் தகவல் வர இவன்‌ போயே ஆக வேண்டிய நிலை!


நாளை மறுநாள் திருமணம் என்ற நிலையில், பெங்களூர் சென்றுவிட்டு வேலை முடிய உடனேயே திரும்பி விடுவதாக அவினாஷ், அர்ஜூன் உட்பட முக்கிய ஆண்கள் சிலரிடம் மட்டும் சொல்லிவிட்டு புறப்பட்டு போய்விட்டான். இங்கே கல்யாண வேலைகள் அனைத்தும் தரமான, சிறந்த நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்ததால் கல்யாண வீட்டுக்காரர்கள் இலகுவாக இருக்க முடிந்தது.


அன்று மாலை மண்டப அலங்கார தீம்-ற்கு ஏற்றாற் போல் தங்க நிற நீண்ட பாவாடையில், டிஷ்யூ ரக தாவணியின் மடிப்புகள் பின்னிடையில் செருகப்பட்டிருக்க, சீக்வென்ஸ் கற்கள் பதித்த ஃபேன்ஸி க்ராப் டாப்பும், அதே துணியில் இடைப்பட்டியும் அணிந்திருந்தனர் இளவயது பெண்கள். ஆண்களுக்கு சந்தன நிற ஷெர்வாணி!


எப்போதும் போல் மிதமான நகை மற்றும் அலங்காரத்தில் தேவதைப் பெண்ணாக இருந்தாள் சந்தனா. தலைமுடியை கர்லிங் செய்து விரித்துவிட்டிருந்தாள். தங்கநிறத்தில் பெரிதாக கல் பதித்த தோடு. அம்மா நிர்மலா கழுத்தில் அணியக் கொடுத்திருந்த நெக் பீஸ் ஒன்று, நெற்றிச் சுட்டியின் இடத்தைப் பிடித்திருந்தது. ஆக, இன்றும் வெற்றுக் கழுத்தே!


“சனா அக்கா, உங்க ஜூவல்ரி ஸ்டைல் எப்போவும் யுனிக்கா அழகா இருக்குது. ரியலி கார்ஜியஸ்!” என்று அவளோடே சுற்றிக்கொண்டிருந்த பாவனா மனந்திறந்து பாராட்ட,


“தாங்க்ஸ் பாவனா. நம்ம ஊர்ப் பக்கம் இந்த ஹாலோ நெக் நிறையப் பேருக்கு பிடிக்கறதில்ல.” என்றபடி திரும்ப, அங்கே ஓர் உறவினரிடம் பேசிக்கொண்டு அமர்ந்திருந்த அபிராமி தன் வைர மாலையைச் சரி செய்தபடி இவளை முறைத்துப் பார்த்தார்.


‘ஆத்தாடி! இவங்க ஏன் திடீர் திடீர்ன்னு இப்டி முறைக்கறாங்க?’ என நினைத்தவளுக்கு, அவர் வைர மாலையைத் தடவிய விதத்தில் சட்டென்று காரணம் புலப்பட்டது. 


முதல்முறை தன் உடையிலும் அலங்காரத்திலும் அவரின் பிடித்தமின்மையை முகத்தில் காட்டினார். அடுத்த ஒவ்வொரு முறையும் பாட்டி முகம் திருப்பும்போது, நளினமாகவும் நாகரீகமாகவும் நம் கலாச்சாரத்தையொட்டியும் தான் உடையணிந்திருக்கிறாள். ஆனாலும் அவரின் கோபம் எதனால் என்று புரியாமல் இருந்தவளுக்கு, தற்போது பாவனாவிடம் சொன்னது நினைவு வர, புரிந்து போனது. அது தன் வெற்றுக் கழுத்து!


‘அட! இதுக்கா இந்த முறைப்புகள்? ஆனா இதுல நானென்ன செஞ்சிட முடியும்? எனக்கு பிடிச்சதை நான் செய்யறேன்.’ என்று அசட்டையாக எண்ணமிட்டவளுக்கு மற்றுமொரு உண்மை உரைத்தது.


‘அதனாலதான் அன்னிக்கு பிரகதிக்கு நகை வாங்க போனப்போ எனக்கும்…’ அன்று அவர்கள் பரிசளித்த கழுத்தையொட்டிய சிறிய சங்கிலி நினைவு வந்தது. கூடவே அன்று பிரகதிக்கு நகைகள் தேர்ந்தெடுத்ததெல்லாம் அக்னிஸ்வரூபன் தான்! அப்படியானால் தனக்கும்…


உதட்டைக் கடித்துக்கொண்டாள். வெளியே சாதாரணமாக தெரிந்தாலும் உள்ளுக்குள் இருக்கும் இரத்த நாளங்களெல்லாம் பரபரப்பில் குளித்துக் கொண்டிருந்தன.


‘அதை எங்கே வச்சேன்?’ 


உன் வீட்டில் உன்‌ மூட்டை முடிச்சுக்களுடன் பத்திரமாக இருக்கிறது என மூளை பதில் தர, பாவனாவைப் பார்வையிடும் பொருட்டு அபிராமியிடம் பேச வந்த அர்ஜூனின் முன் போய் நின்றாள்.


“அஜூ!” என்றுமில்லாத மென்குரலில் அழைக்க,


சடுதியில் கவனத்தை இவள்புறம் திருப்பியிருந்தான் அவன். “என்னடா?”


“ஹ… பிரகதி அண்ணன் எங்கே?”


“அவர் பேங்களுர் போயிருக்காரே? என்னாச்சு அண்ணி?” முதலில் அர்ஜூனுக்கு புரியவில்லை. சந்தனாவின் இந்த மென்மையும் தயக்கமும் இளக்கமும் அவனுக்கு புதியது. அதிலும் தன்னிடம்?!


“சும்மா தான்! சரி உன் கார்க் கீ கொடு. நான் கொஞ்சம் வீடு வரை போகணும்.”


“இந்நேரத்துக்கு எதுக்கு? வா, நானும் வர்றேன். எதுவும் எடுக்கணுமா?”


“தட்’ஸ் மை பிஸினஸ்!” என்று அமர்த்தலாகச் சொன்னவள், “உன்னை மாமா அவுட்டோர் லைட்டிங்ல என்னவோ பார்க்க சொன்னாங்கதானே? அதைப் பார்க்காம இங்கே என்னடா ஜொள்ளு விட வந்துட்ட?” என்று அவன் கையில் எடுத்திருந்த சாவியைப் பிடுங்கிக்கொண்டு, அவன் மேலே எதுவும் கேட்கும் முன் நகர்ந்துவிட்டாள்.


அவளை அரை வயதிலிருந்து அறிந்து வைத்திருப்பவன், இந்த அரைநொடி தடுமாற்றத்தைக் காணாமல் போவானா? அக்னியை ஏன் தேடுகிறாள்? யோசனையில் சுருங்கியது அவன் முகம்!


                         *********


மெல்லிய சங்கிலியில் கோர்க்கப்பட்டிருந்த சுண்டுவிரலின் அளவில் கால்வாசியே இருந்த, குங்கும சிமிழ் வடிவத்தில் ரூபி கல் பதித்த, அந்தக் குட்டி டாலரை உள்ளங்கையில் வைத்து இமைக்காமல் பார்த்திருந்தாள் சந்தனமாரி. 


அக்னிஸ்வரூபன் அன்றே அவன் உள்ளத்தைத் தன்னிடம் வெளிப்படுத்தியிருக்கிறானா என்ன?! மலைத்துப்போய் அமர்ந்திருந்தாள். 


அன்று நிரஞ்சனா மற்ற நகைகளை இவளிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டதைப் போலவே இதையும் காட்டியிருந்தாள். இவளும் மற்றதற்கு தலையாட்டியதைப் போல் இதற்கும் ஒரு புன்சிரிப்புடன் நன்றாக இருப்பதாகச் சொல்லியிருந்தாள். ஆனால் அதன் வடிவத்தை இத்தனை நுணுக்கமாக ஆராய்ந்திருக்கவில்லை. அப்போது இது இவளுக்கென்றும் தெரியாது. வாங்கி வந்த பின்னும் பிரித்துப் பார்த்திருக்கவில்லை.


தேவையென்ற ஒன்று வராத வரை, கையில் தேன் கிண்ணம் இருந்தாலும் உபயோகமற்றதாக தானே தெரியும்? இதோ! இப்போது இவளுக்கு அக்னியின் நினைவு வந்து, ஏதோ தோன்ற வீடு வரை வந்து இதை தேடியெடுத்து…


“சட்!” என்றவள் சங்கிலி இருந்த உள்ளங்கையை மூடி, மறுகையால் நெற்றியில் அறைந்துகொண்டாள். 


ஒரு நிமிடம் கண்கள் மூடி மூச்சை உள்ளிழுத்துக் கொண்டவள், “சஞ்சுத்தான்ன்…” என்ற ஒற்றைப் பெயரில் மன்னிப்பை யாசித்துவிட்டு, கண்களைத் திறக்காமலேயே நகைப் பெட்டியில் சங்கலியைப் போட்டு பூட்டி, அலமாரியில் தூக்கியெறிந்தாள். 


மண்டபத்தில் கார்ச் சாவியைப் பெற்று கொண்ட அர்ஜூனுக்கு அவளிடம் முன்பு கண்ட இளக்கம் பொய்யோ என்று தோன்றியது. அவனிடம் அவளின் வழமைத் திரும்பியிருந்தது.


அக்னி மறுநாள் அதிகாலையே சென்னை திரும்பியிருந்தான். சிறிது ஓய்வெடுத்துவிட்டு உபசரிப்பிலும் கல்யாண வேலைகளிலும் தன்னை இணைத்துக் கொண்டிருந்தான். கடந்த பத்து நாட்களும் நாளுக்கொன்றாக வடக்கத்திய முறையில் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அரங்கேறியிருக்க, இன்று தமிழ் பாரம்பரிய முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்வு!


சந்தனா, அர்ஜூன், பாவனா இணைந்த  மூவர் கூட்டணி மணமக்களை மறுநாள் காலை திருமணம் முடியும் வரை ஒருவரையொருவர் பார்க்கக்கூடாது, பேசக்கூடாது என்று கட்டளை விதித்ததோடல்லாமல் இருவரின் அலைப்பேசிகளையும் பறித்து, மறைத்து வைத்துக் கொண்டது.


அவினாஷ், “டேய் கிளையண்ட்ஸ் கால் வரும்டா!” என்றதற்கு,


“அட்டெண்ட் பண்ணி மாப்பிள்ளை பிஸின்னு நான் சொல்லிக்கறேன் அத்தான்.” என்று கொக்கரித்தான் அர்ஜூன்.


இவர்களின் அட்டூழியங்கள் இப்போது பிரகதியின் வீட்டினருக்கும் பழகிப் போனதால், அபிராமி பாட்டி கூட சின்ன சிரிப்புடன் ரசிக்க ஆரம்பித்திருந்தார். அவினாஷூக்கான பிரகதியின் தவிப்புகளைப் பார்க்க பாவமாக இருந்தாலும், பின்னாட்களில் இந்நிகழ்வுகளெல்லாம் நினைத்துப் பார்த்தால் தித்திக்கவே செய்யும் என்று நிரஞ்சனா சொல்லிக் கொண்டிருந்தாள்.


அக்னிஸ்வரூபன், பிரபஞ்சன், அவினாஷின் தொழில்முறை வட்டங்கள் பெரிது என்பதால், திருமணத்திற்கு அவர்களின் தொழில் வட்டார பிரபலங்கள் அநேகம் பேர் வந்திருந்தனர். மாலையில் நிச்சயதார்த்தமும், மறுநாள் காலை திருமணமும் இனிதாக நடந்தேறியது. கல்யாணம் முடிந்ததும், சடங்கு சம்பிரதாயங்களில் மூவர் கூட்டணி அடித்த கூத்தில் விழி பிதுங்கிப் போன மாப்பிள்ளை, அதற்கு மேல் தாங்காது என்று யாருக்கும் சொல்லாமல் பிரகதியைத் தனியே தள்ளிக்கொண்டு போய் காரிலேற்றி வீட்டிற்கு போய்விட்டான். 


பாஸ்கரன் வந்து மாப்பிள்ளை, பெண்ணைக் காணவில்லை என்று பதற, மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்க வீட்டிற்கு சென்றிருந்த பெண்கள் குழு, உடன் யாருமில்லாமல் இவர்கள் இருவர் மட்டும் வந்து நிற்பதைக் கண்டு திகைக்க, ஆங்காங்கே அலைபேசி அழைப்புகள் பறக்க, எதற்கும் அசராமல் ஆரத்தித் தட்டில் பணத்தைப் போட்டு, மனைவியுடன் தன்னறைக்கு போய்விட்டான் அவினாஷ்.


அவர்கள் வீட்டிலிருப்பது தெரிந்து மூவர் கூட்டணியும் அங்கே பறந்தது. விடயம் கேள்விப்பட்டு அவினாஷை நினைத்து சிரிப்பு வந்தாலும், இவர்கள் மீண்டும் ஏதேனும் விஷமம் செய்வார்கள் என்று அக்னியும் அங்கே வந்து நின்றான். அவனின் ஒரே பார்வையில் பாவனா அடங்கிவிட்டாள்.


அர்ஜூனிடம், “போதும்! இதுக்கு மேல அவங்களைத் தொந்தரவு செய்ய வேணாம்.” என்றவன் பாஸ்கரனை ஒரு பார்வை பார்க்க,


அவன், “நான் சொன்னா கேட்டுப்பாங்க தம்பி. நான் பார்த்துக்கறேன்.”  என்று தன்மையாக சொல்ல,


“இங்கே யாரு மாப்பிள்ளை வீட்டுக்காரங்கன்னே தெரியலை.” எனச் சந்தனாவின் காதில் கிசுகிசுத்தான் அர்ஜூன்.


நேற்றே சந்தனாவுடன் ஈஷிக்கொண்டு திரியும் அர்ஜூனைப் பார்த்த அக்னிக்கு, அவனின் இரு வேறு முகங்கள் காணக் கிடைத்தது. அவனின் தொழில்முறை நண்பர்கள் மற்றும் பெரியவர்களிடம் அவன் காட்டும் மரியாதையும் கம்பீரமும் சந்தனாவுடன் இருக்கையில் காணாமல் போகிறது. 


அதனையும் பாஸ்கரனிடம் பேச்சுவாக்கில் கேட்டுவிட்டான். “நிஜமாவே உங்க பையன் அர்ஜூன் ஒரு கம்பெனியோட சேர்மன்தானா?”


அவன் கேட்ட விதத்தில் பாஸ்கரன் முழி முழியென்று முழித்து, சிரித்து சமாளித்து என அக்னிக்கும் சிரிப்பை வரவழைத்திருந்தான். அதனால்தான் இன்று அக்னி சொன்னதும் பாஸ்கரன் உடனடியாகத் தலையாட்டியது! அதற்காக தம் மக்கள் முகம் வாடுவதும் பொறுக்கவில்லை.


சந்தனா தன் தாய்மாமனிடம் சலுகையாக முகச் சிணுக்கத்தைக் காட்ட, பாஸ்கரன், “சனாக்குட்டி!” என்றழைத்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். 


அங்கிருந்து நகர்ந்து வந்த அக்னிக்கு, சந்தனாவின் எண்ணமே! நேற்று காலை ஊரிலிருந்து வந்த பின்னர், பின்மதிய நேரம் மண்டபத்தில் தான் அவளைப் பார்க்க முடிந்தது. வழக்கம்போல் இவனைக் கிறுகிறுக்க செய்யும் ஒப்பனையற்ற, ஒப்பற்ற பேரழகில் பாவனா, அர்ஜூனுடன் சுற்றிக்கொண்டு, வரிசையற்ற தெற்றுப்பல்லில் சிரித்தபடி, விருந்தினர்களை உபசரித்துக் கொண்டிருந்தாள்.


புதிதாய் அவளிடம் பிறந்த உரிமையில் மனசாட்சி சொல்வதையும் செவிமடுக்காமல், அவளிடம் ஏதோ கேட்க நினைத்து அருகே போனவனை, யார் கண்ணுக்கும் தெரியாமல் அழகாய்த் தவிர்த்திருந்தாள். ஆனால் அருகே நின்ற அக்னிக்கு புரிந்தது. காரணமும் ஊகிக்க முடிந்தது.


அப்போதிருந்து இப்போது வரை இவனும் அவ்வப்போது அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். கண்ணிமையைக் கூட இவன்புறம் அவள் திருப்பவில்லை. அவள் மனதின் சலனம் அங்கே புரிந்தது இவனுக்கு. அதற்காக சந்தோஷிக்க முடியவில்லை. மாறாக வருத்தமும் வியப்புமே!


அவளின் பருவ வயது சலனங்களையெல்லாம் இப்படித்தானே கடந்திருப்பாள் என்று நினைத்து வருத்தமெனில், மிக மிக இயல்பாக, மகிழ்ச்சியாக அர்ஜூன், பாவனாவுடன் சேர்ந்து விளையாடி, கல்யாண வீட்டுக்காரியாக அனைவரிடமும் இன்முகத்துடன் பேசித் திரிந்தவள், சலனமுற்றாலும் சிறு பார்வை கூட இவன் வசம் வீசவில்லையே என்று வியப்பு!


இவனால் கூட சில பொழுது தறிக்கெட்டோடும் மனதை இறுக்கி வைக்க முடியவில்லையே! அவளால் மட்டும் எப்படி முடிகிறது? LGBTQ, EMA, ONS போன்ற இன்னும் எத்தனையோ முறையற்ற உறவுகளுடன், பழக்கங்களுடன் மனிதர்கள் உலகம் சுழன்று கொண்டிருக்க, அந்த உலகத்தைப் பார்த்து பயணிக்கும் இவள் தன்னிடம் சலனமுற்று தன்னைத் தவிர்ப்பதிலும், முகம் தெரியா சஞ்சுவிற்காக எத்தனை நேர்மையாக இருக்கிறாள் என்பதிலும் அக்னிக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தினாள் சந்தனமாரி.


பாஸ்கரன் சந்தனாவைச் சமாதானப்படுத்துவதற்காக, அன்றிரவு அவள் அர்ஜூனுடன் புதிதாய் வந்த தமிழ்த் திரைப்படத்திற்கு 3டி தியேட்டர் போகலாம் என்றான். 3டி தியேட்டர் என்பது 360 டிகிரி கோணத்தில் பார்க்கும்படியாக, நாமும் களத்தில் இருக்கும் உணர்வை ஏற்படுத்தும் வண்ணம் முழுமையாக குவிமாடம் (immersive dome) போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் திரையரங்கம். கதாபாத்திரங்களுடன் ஒருவராக நின்று பார்க்கும் உணர்வைத் தரும். 


முன்பு ஒருமுறை இவர்கள் இருவரும் கல்லூரியில் முதல் வருடம் இருக்கும்போது, சென்னைக்கு புதிதாய் அறிமுகமாகியிருந்தது 3டி திரையரங்கம்! ஒரு விடுமுறை நாளில் அனுவிற்கு ஒரு மாற்றமாக இருக்கும் என்று நிர்மலாவுடன் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தான் பாஸ்கரன்.


அப்போது விடலைப் பருவத்தில் இருந்த அர்ஜூன், தன் தலைவனாக நினைக்கும் கதாநாயகனை அடித்துவிட்டதற்காக, வில்லன் மண்டையை உடைக்கிறேன் பேர்வழி என்று, “டேய்ய்!” என கத்தியபடி கையிலிருந்த குளிர்பான பிளாஸ்டிக் பாட்டிலை முன் வரிசையிலிருந்த நபரின் தலையில் அடித்துவிட, அவர் எகிறிக்கொண்டு வந்தார். உடனே அர்ஜூனுக்காக பரிந்துகொண்டு வந்த சந்தனா கையிலிருந்த ‘அருணை’ அவர் முகத்தில் எறிந்திருந்தாள்.


‘ஐஸ்கிரீம் போச்சே!’


கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்ட களேபரத்தால், பாஸ்கரன் அந்நபரிடம் மன்னிப்பு கேட்டு, தியேட்டர் நிர்வாகத்திடம் அபராதம் கட்டிவிட்டு, இவர்களிடம் சொன்னது, ‘இனி வாழ்க்கையில் 3டி தியேட்டருக்குள் இருவரும் கால் வைத்து விடக்கூடாது.’ என்பதுதான்.


அந்த தடை இன்று நீங்கி அவளின் மாமாவே அனுமதி தந்துவிட்டதில், சந்தனா சந்தனமாகக் குளிர்ந்து போனாள். அர்ஜூனுக்கும் மீண்டும் விடலைப் பருவத்திற்கு சென்றுவிட்டதைப் போல் ஏக மகிழ்ச்சி! உடனேயே சந்தனாவின் காதைக் கடித்தான்.


விழி விரித்தவள், “என்னால முடியாது. உனக்கு வேணும்னா நீயே கேட்டுக்கோ!” என்று நகர்ந்துவிட,


“அண்ணி… அண்ணி… அண்ணி… ப்ளீஸ் அண்ணி…” என்றபடி வால்பிடித்து போனான் இவன்.


இடையே நிர்மலா பார்த்து, “அர்ஜூன் அவளை அண்ணின்னு சொல்லாதேன்னு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன்?” என்று விழிகளை உருட்ட,


“நூறு அண்ணி சொன்னா அவன் கேட்டது கிடைக்கும்ன்னு நான்தான் சொன்னேன்.” என்று தன் அம்மாவிடமிருந்து அர்ஜூனைக் காப்பாற்றினாள் இவள்.


நிர்மலா மேற்கொண்டு எதுவும் பேசும்முன், “ம்க்கும்!” என்று தொண்டையைக் கனைத்தபடி அக்னிஸ்வரூபன் அங்கே வந்து நிற்க,


“உள்ளே ரூம்ல ஏசி இருக்குது தம்பி. வாங்க!” என,


“இல்லை. மண்டபம் போகணும். கொஞ்சம் வேலையிருக்குது.” என்று சொல்லி விடைபெற்றான்.


‘No matter how much work you have, finish it by evening.’ காரைக் கிளப்பும்போது இப்படியொரு செய்தி அர்ஜூனிடமிருந்து வந்துவிழ, மீண்டும் வீட்டை நிமிர்ந்து பார்த்தான்.


சந்தனா முறுக்கிக்கொண்டும், அர்ஜூன் அவள் துப்பட்டாவைப் பிடித்து, அதை அவள் காலாக எண்ணி கெஞ்சிக் கொண்டும் இருப்பது தெரிந்தது. “என்னவோ ப்ளான் பண்றான் இவன்!”


மாலையில் விடைத் தெரிந்தது. இவன் மண்டபத்தில் அலங்காரங்களைக் கலைத்து, காலை வரவேற்பிற்கு ஏற்கனவே பேசியிருந்ததைப் போல வேறு தீம்’மில் மாற்றிக் கொண்டிருப்பதை மேற்பார்வைப் பார்த்துவிட்டு, மேலும் சில உத்தரவுகளைக் கொடுத்துவிட்டு அறைக்குச் செல்ல, அங்கே அபிராமியின் மடியில் படுத்து பாவனா விசும்பிக் கொண்டிருந்தாள்.


இவன் கேட்கும் முன் வசுதா சொன்னாள். “அந்த சந்தனா பொண்ணு சினிமாவுக்கு போறாளாம் அக்னி. 3டி தியேட்டராம்! பத்து நாளா இவளோட தானே சுத்திட்டிருந்தா! அதான் இப்பவும் இவளை வரச் சொல்லி கேட்டா! கூட போறது அர்ஜூன் மட்டும்தானாம்! எப்டி இவளை அனுப்புறது சொல்லு! வேணாம்னு சொன்னதுக்கு மூஞ்சியை ஏழு முழத்துக்கு தூக்கி வச்சிட்டிருக்கா!”


அர்ஜூன் பாவனாவை வரவழைக்க தான் சந்தனாவின் காலைப் பிடித்திருக்கிறான் என்று புரிந்தது. 


“நீ கூட போகலாம்ல அஞ்சலி?” என பாவனாவின் அக்காவைக் கேட்க,


“இவனை வச்சிக்கிட்டு நான் சினிமா போயிட முடியுமா அக்னி? விட்டுட்டு போனாலும் தேடுவான்.” என்று தன் மூன்று வயது மகனைக் கைகாட்டினாள் கீதாஞ்சலி.


நிரஞ்சனாவின் பிறந்த வீட்டில், அக்னிக்கு சித்தி முறையில் வரும் பெண்கள் இருவர், கல்யாண இரவிற்கு பிரகதியைத் தயார்படுத்தவென அவினாஷ் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். இங்கிருக்கும் பெரியவர்களைக் கேட்க முடியாது. அனைவருக்கும் கல்யாண அலுப்பு!


‘நூறு அண்ணி சொல்லிட்டியாடா அர்ஜூன்?’ என‌ மனதோடு கேட்டுக் கொண்டவன், “சரி அப்போ நான் கூட்டிட்டு போறேன். வாடி அழுமூஞ்சி!” என,


“உனக்கும் டயர்டா இருக்குமேடா!” என்றாள் நிரஞ்சனா.


“அத்தை!” என பாவனா மீண்டும் சிணுங்க ஆரம்பிக்க,


“ஒரு டயர்டும் இல்லைம்மா. எல்லாத்துக்கும்தான் ஆள் இருக்காங்களே…” என்றவன் எத்தனை மணிக்கு போகவேண்டும் எனக் கேட்டுக்கொண்டு தனக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்கு போனான்.


மாலையில் நால்வரும் அக்னியின் காரில்தான் போனார்கள். தியேட்டரில் பாவனா தன்னருகே அமர வேண்டும் என அடுத்த பிரச்சினையைக் கிளப்பினான் அர்ஜூன். சந்தனா முறைத்தாள். இருப்பினும் இயல்பாக பாவனாவின் கரம்பிடித்து தன்னோடு அமர வைப்பதைப் போல் அழைக்க, “அவ இந்தப் பக்கமே உட்காரட்டும்.” என்றான் அக்னி.


அர்ஜூன் சினந்தான். 


“நீங்க இவ்ளோ பயப்பட வேணாம். எங்க அஜூ ரொம்ப ஜென்யூன்!” - சந்தனா.


“ஆஹான்? ஜென்யூன்? நீ பார்த்த? சரியான கேடி அவன்!”


“நீங்க மட்டும் அவன் கேடின்னு பார்த்தீங்களா என்ன?” என்றாள் ரோஷமாக!


சற்றே தலை சாய்த்து அவள் முகத்திற்கு நேரே குனிந்தவன், “பார்த்தேன். பார்த்ததைச் சொல்லிக் காட்டவா? இல்ல செஞ்சு காட்டவா?” என அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல, வெதுவெதுப்பூட்டும் கன்னங்களை அறவே வெறுத்தாள் அவள்.


“நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம். நான்தான் பக்கத்துல இருக்கேன்ல?” என்றவள், பாவனாவை அர்ஜூனருகே விட்டுவிட்டு இவள் அக்னியின் அருகே அமர்ந்தாள்.


‘என்னிடம் சைவக்காதல் செய்வேன் என்றாயே கிராதகா!’ என்று அக்னிக்கு தெரியாமல் அர்ஜூனை முறைக்கவும் தவறவில்லை.


சலிப்பூட்டும் திரைப்படத்தில் அக்னிக்கு தூக்கம் வந்துவிட, சற்றே கண்ணயர்ந்துவிட்டான். காதல் பாடல் வந்தபோது, மேலாடைக் குறைத்து சல்லாபமாய் நாயகனைத் தழுவிக் கொண்டிருந்த கதாநாயகியின் மேல் அங்கம் அக்னியின் இடக்கை அருகே வந்துவிட்டு போவதான தோற்றத்தில், இவளுக்குள் உஷ்ணம் பரவியது.


மனதினை அடக்க‌ முயன்றாள். யாரிடமும் இதுவரை இந்தளவிற்கு இதயம் அலைபாய்ந்ததில்லை. இப்போது அக்னியின் புறம் நழுவும் இதயத்தின்‌ மீது கோபம் வந்தது. தன்னைப் பாதிக்கும் அக்னியை இம்முறை வெளிப்படையாகவே தவிர்த்தாள்.


திரைப்படம் முடிந்து வெளியே வருகையில், “சாப்பிட எங்கேயும் போகணுமா?” என அக்னி கேட்க, காதே கேட்காதவள் போல் அவனைக் கடந்து சென்றுவிட்டாள்.


இதனைப் பின்னால் வந்த அர்ஜூன் கவனிக்கவில்லை. ஆனால் பாவானா பார்த்தாள். 


“உனக்கென்ன வேணும் பாவி?”  அலைபேசியில் அருகிருக்கும் உணவகத்தைத் தேடுவதைப் போல் கேட்டு, பாவானாவை அதிகம் சிந்திக்கவிடவில்லை அவன்.


இதே போல் மறுநாளும் சந்தனாவின் அலட்சியம் பாவனாவின் கண்ணில்பட்டு, அவள் அர்ஜூனுடன் சண்டைப் பிடிக்க நேர்ந்தது. “எங்க அத்தான் எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா? சனா அக்கா அவரைக் கொஞ்சமும் மதிக்க மாட்றாங்க!”


விடயத்தை விவரித்துச் சொல்லும்படி கேட்டவன், சிறிது சிந்தித்துவிட்டு தன் காதலிக்கு சந்தேகம் வராதபடி சொன்னான்.


“சனா அந்த மாதிரி டைப் இல்லைன்னு உனக்கு தெரியும் பானு! ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்தானே? அவங்களுக்குள்ள ஏதாவது சண்டையா இருக்கலாம். அவங்களே சரி பண்ணிக்குவாங்க. நானும் அவக்கிட்ட சொல்லி வைக்கறேன்.”


“என்னவோ சொல்றீங்க. திரும்ப இந்த மாதிரி செஞ்சாங்கன்னா நான் பாட்டிக்கிட்ட சொல்லுவேன் அர்ஜூன்!” என்று மிரட்டிவிட்டு போனாள் பாவனா.


இசைக்கும்...

Comments

Popular posts from this blog

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம் -4

கருவறை கீதம் -25