ஆயர்பாடியில் கண்ணனில்லையோ -14
அத்தியாயம் 14
மரியம் அம்மா முதல் இந்த வீட்டிலிருக்கும் அனைவரும் சிறு முகச்சுளிப்புமில்லாமல், அதிக அக்கறையுமில்லாமல் என்னை இயல்பாகவே நடத்தினர்.
ராஜீவன் எதிலும் நேர்மறை சிந்தனையோடே பேசினான். எதிர்மறையாக ஏதேனும் நடந்துவிட்டால் இதை உன் அனுபவத்தில் சேர்த்துக் கொள்; தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என சொல்லுவான். உண்மையில் ராஜீவனுடனான இந்த வாழ்க்கையில் ஆசிர்வதிக்கப்பட்டவளாகத் தான் உணர்கிறேன்.
அநேக தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில புத்தகங்களை வாசிக்கிறான். புதுமைப்பித்தனைப் புகழ்வான்; சுஜாதாவை சிலாகிப்பான்; மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரைக் கொண்டாடுவான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் சே-வையும் பேசுவான்; ஃபிடலின் மீது அதீத காதல் என்பான்.
சுஜாதாவின் ஒரு துளியையும் வாசியாதவர்கள் அவரை விமர்சிப்பதும் பரிகசிப்பதும் நகைப்பிற்குரியதாம். இதற்கு சுஜாதாவே, 'என்னைப் பற்றிப் படிக்கும் போது எனக்கு வியப்பாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது. இத்தனை மனங்களை பாதித்துவிட்டோமோ என்பது வியப்பு. தனக்கு செய்யப்படும் குடல் ஆபரேஷனை சர்ஜன்களுடன் தானும் ஒரு ஓரத்தில் பின்கையைக் கட்டி நின்றுகொண்டு பார்க்கும், கார்ட்டூன் பாத்திரத்தின் ஞாபகம் வரும்போது சிரிப்பு.' என்றிருக்கிறாராம்.
ஆழமான வாசிப்பிற்கு மலையாள நாவல்கள்தான் சரியென்பான். மேலும் அவன் சொன்ன மலையாள எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை நான் அறிந்திருக்கவில்லை. சிலநேரங்களில் யுனிவர்ஸ், ப்ளாக் ஹோல், வார்ம் ஹோல், த்ரீ டி டைமென்ஷன் என்றெல்லாம் பேசி அலறவிடுகிறான்.
நான் எனக்கு பிடித்த தமிழ் சினிமா பாடல் வரிகளைக் கேட்க செய்கையில் ரிதமும் வரிகளும், ராஜீவனும் யமுனாவும் போலுள்ளது என்று கண்ணடித்து குறுநகை புரிவான். நான் சொன்னேனல்லவா, இவன் ரசனைக்காரனென்று?
ரசனைக்காரன் மட்டுமல்ல; தத்துவார்த்தமாக பேசவும் செய்கிறான். ஒருமுறை எங்களுக்குள் ஒரு சண்டை வந்து நான் இரு நாட்களுக்கு கோபத்தை இழுத்துப் பிடிக்க நினைக்கையில், "முரண்பாடுகள் இல்லாத உறவுன்னு எதுவுமே கிடையாது யமுனா. அப்டிலாம் யூனிஃபார்மா ஒரே கருத்துக்கள் இருக்கறவங்களா இருந்தா லைஃப் ரொம்பவே போரடிச்சிடும். நாம சுவாரஸ்யமா நிறைய சண்டைப் போடுவோம். ஆனா தூங்கப் போறதுக்கு முன்னாடி சண்டையை முடிச்சிட்டு தூங்கலாம். இப்டி கோவமா எந்த வார்த்தையையும் மனசுல வச்சிக்கிட்டு இருக்க வேணாமே…" என்றான்.
உண்மை தானே? மனதிற்குள் மற்றவரின் தேவையற்ற வார்த்தைகளைப் போட்டு வைத்திருப்பதில், நாட்பட்ட பண்டம் போல் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் மனதினுள் சிக்கு வாடை அடிக்குமல்லவா?
சில போது அவனின் கவிதைகளை வாசிக்கச் செய்து, கேட்பது அலாதியான அனுபவமாக இருக்கிறது. எனக்காக என்னைப் பற்றி ஒரு கவிதை சொல்லச் சொன்னால் மட்டும் சிரித்தே மழுப்புகிறான். எப்படியும் ஒரு கவிதையாவது வாங்காமல் நான் விடப் போவதில்லை.
இடையில் அம்மாவும் அப்பாவும் ஒருமுறை வந்தார்கள். அம்மாவிற்கு நான் பூரண நலமாக இருப்பதில் பரிபூரண திருப்தி! ஆனாலும் என்னைப் பற்றிய உறவுக்காரர்களின் முணகல்களையும் பரிகசிப்புகளையும் சொல்லி குறைப்பட்டுக் கொண்டார்கள். இன்னும் சிலர் யமுனா பெரிய இடமாக பிடித்துவிட்டாள் என பொறாமையில் இருக்கின்றனராம். உறவினர்கள் என்பவர்கள் வேறு எப்படி இருக்கக்கூடும்?
ராஜீவன் அதனைக் கண்டும் காணாமல் இருக்க, அம்மாவைப் பற்றி ஏதேனும் நினைத்துக்கொள்ளக் கூடுமென்று தனிமையில் அவனிடம் மன்னிப்புக் கேட்டேன்.
"ச்ச! அவங்க உன் அம்மா யமுனா. ஆரம்பத்துல ஜாதியை ஒரு காரணமா வச்சு, வேணாம்னு சொல்றாங்களேன்னு எனக்கும் வருத்தம்தான்! ஆனா இப்ப ஒரு அம்மாவா தன் பொண்ணைப் பத்தின மனத்தாங்கல்ல தான் பேசறாங்க. அதுவும் யாரோ என்னவோ சொன்னதை வச்சு தானே சொல்றாங்க? விடு, நாளைக்கு சரயுவுக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்க வீட்டு மனுஷங்களைப் பத்தி பேச ஆரம்பிச்சு டிராக் மாறிடுவாங்க." என்று குறும்பாய்ப் புன்னகைத்தான்.
"நிஜமா உங்களுக்கு அம்மா மேல கோவமில்ல தானே? நான் கொஞ்சம் பயந்துட்டேன்."
"ஹேய் இல்லடா! என்கிட்ட எதுக்கு பயம்?"
"இல்ல… அம்மா பேசினதுக்கு இனி அங்கெல்லாம் போகக்கூடாதுனு சொல்லிடுவீங்களோன்னு…"
என் நெற்றி முட்டி மிருதுவாக சிரித்தான். "எனக்காக உன்னைப் பெத்து குடுத்தவங்களை நான் வேணாம் சொல்லுவேனா? உனக்கும் உங்கம்மாவுக்கும் நடுவுல நான் வரக்கூடாது யமுனா!"
"......"
"மோர்ஓவர்…" என்றொரு வலிமிகு புன்னகை என் நெஞ்சத்தை புரட்டிதான் விட்டது.
"என்னாச்சு ராஜீவன்?"
"எனக்கு தான் இல்ல. உனக்கு இருக்கறதையும் வேணாம்னு நான் எப்டி சொல்வேன்?" கம்மிய குரலில் கேட்டவனைக் கண்டு என் ஆவி துடித்தது.
சத்தியமாக அவன் வலியை ஆற்றுப்படுத்துவதற்கு இணையான ஆறுதல் வார்த்தைகள் என்னிடம் இல்லை. அப்போதைக்கான விரல் அழுத்தம் மட்டுமே தர முடிந்தது. ஆனால் அதிலேயே ஆசுவாசப்பட்டவன் போல், பற்றிய என் விரல்களிலேயே முத்தம் வைத்தான்.
'என் வாழ்வில் இல்லாததையெல்லாம் ஈடுகட்ட தான், என் உயிர் கூட்டில் இந்நாள் வரை வெற்றாயிருந்த மிச்சப்பகுதியில் நீ நிரம்பியிருக்கிறாய் யமுனா' என்றதும், என்ன மாதிரி காதலனைப் பெற்றிருக்கிறேன் என்று பூரித்தேன். ராஜீவனை விட தாழ்ந்த நிலையில் இருக்கிறேன் என்ற எண்ணமும் கரைந்தோடியது.
முதன்முதலாக நானே அவனை அழுத்தமாய் அணைத்துக் கொண்டேன்.
🍁🍂🍁🍂🍁🍂🍁
அன்றொரு மாலையில் என் தோழி பிரியா அழைத்திருந்தாள். அம்மா மனஸ்தாபத்தில் பேசாத போதெல்லாம் கூட இவள்தான் எனக்கு ஆறுதலாக இருந்திருக்கிறாள். ராஜீவனுடனான என் காம்ப்ளக்ஸ் புரிந்தவள் திருமணமான ஆறு மாதங்களிலும், தினமும் அழைத்து ஏகப்பட்ட அறிவுரைகளை வழங்குவாள். நான் ராஜீவனை எவ்வித தயக்கமுமில்லாமல் சாதாரணமாக தொடுவதின் பின்னால், ப்ரியாவின் கவுன்சிலிங்கும் இருக்கிறது. அப்படியொரு ஆத்மார்த்தமான தோழி அவள்!
அவளுக்கும் ஒரு கவலை. அவளின் தங்கை மியாவிற்கு ஏற்கனவே ஆண்களின் மீது வெறுப்புண்டு. சரயுவும் இவளும் காலம் முழுவதும் சிங்கிளாகவே இருக்க வேண்டுமென சபதம் கூட எடுத்துள்ளனர்.
இப்போது கல்லூரியில் மியாவை தொந்தரவு செய்த ஒரு சீனியர் மாணவனை, அவள் கிரிக்கெட் மட்டையால் மைதானத்தில் வைத்து அடித்து, அவனுக்கு நினைவு தப்பிவிட்டதாம்.
அவன் வீட்டினர் மியாவை தேடுவதாகவும் அவளை அவசரமாக எங்கேனும் அனுப்பிவிட வேண்டுமெனவும் சொன்னதும், நான் இங்கே வரச் சொல்லிவிட்டேன். மியா வருகைக்கு நிச்சயம் ராஜீவனோ, மரியம் அம்மாவோ மறுப்பு சொல்ல மாட்டார்கள். இருந்தாலும் அவர்களிடம் ஒருமுறை அனுமதி கேட்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.
"தாங்க்ஸ் யம்மி! இந்த மியா படிச்சு முடிச்சதும் கல்யாணத்தை பண்ணி வச்சிடணும்னு அம்மா சொல்றாங்க. கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு இவ பிடிவாதமா இருக்கா. ரெண்டு பேருக்கும் நடுவுல நான் மாட்டிக்கிட்டு முழிக்கறேன்டி." என்று நொந்து கொண்டாள் பிரியா.
பிரியா, மியாவிற்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அதனால் தான் பிரியா யுஜி முடித்ததும் சொந்தத்திலேயே மாப்பிள்ளை பார்த்து முடித்துவிட்டனர்.
எருமைமாடு எல்லாம் பேசி முடித்ததும் முதலில் சொல்ல வேண்டிய விஷயத்தை கடைசியாக சொன்னாள். அப்போது பிரியாவிற்கு அறுபது நாட்கள் தள்ளிப் போயிருந்தது.
அதே சந்தோஷத்தோடு, எனக்கும் ராஜீவனிடம் மனம் லேசாகி இருப்பதைப் பகிர்ந்து கொண்டேன். அவளும் சந்தோஷித்து அவள் மகனுக்கு நான் ஒரு பெண்ணைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றாள்.
ராஜீவனிடம் சொல்கிறேன் என்றேன்.
"ஹேய் யம்மி, மலையாளத்துல ஹஸ்பெண்டை எப்டிடீ கூப்பிடுவாங்க?"
"இச்சாயன்."
"வாவ்! இச்… இச்… இச்… " என்று கேலி செய்தாள்.
ஹய்யோ! எங்களின் பேச்சுக்களை நினைக்கையில் இன்னமும் கூட கன்னங்கள் குறுகுறுக்கின்றனவே! வெட்கமா? ஆம், வெட்கமேதான். என் வெட்கத்தை உணரச் செய்தவன் ராஜீவன்! என் பிரேம இச்சாயன்!
அன்றிரவு பிரியா பேசியதை ராஜீவனிடம் சொல்ல, "பொண்ணு தானே? சீக்கிரமே பெத்துக்கலாமே… என் யமுனா மாதிரியே!" என்று என் மூக்கைப் பிடித்திழுத்தான்.
"நிஜமாவா ராஜீவன்? என்னால குழந்தை பெத்துக்க முடியுமா?"
"ஏன் முடியாது? குழந்தையை என்ன கால்லயா சுமக்கப் போற?" என்றவன்,
என் சுணங்கிய முகத்தைப் பார்த்துவிட்டு தோளோடு அணைத்துச் சொன்னான். "நமக்கு குழந்தையே பிறக்கலைன்னாலும் நீ ஃபீல் பண்ணக் கூடாது யமுனா. நம்ம ஆசிரமத்துல இருக்க அத்தனை குழந்தைகளும் நம்ம குழந்தைகள்தான்! மரியம்மாவுக்காக நான் பிடிவாதமா வாங்கின இல்லமா இருந்தாலும், அங்கே இருக்க ஒவ்வொரு குழந்தையும் அவங்க இங்கே இருந்து வெளியேறும் வரை என் பிள்ளைங்களா தான் நினைக்கறேன். நீயும்… " என்றிழுத்தவன், "நினைப்ப இல்ல?" என ஆவலும் சங்கடமுமாகப் பார்த்தான்.
என் சிரிப்பை மறைத்துக் கொண்டு கேட்டேன். "அன்னிக்கு மரியாம்மாவும் இப்டி தான் பார்த்தாங்க. நிஜமாவே உங்க ரெண்டு பேருக்கும் என்னைப் பார்த்தா சோம்பேறியா, பொறுப்பு துறப்பு அமைச்சரா தெரியுதா ராஜீவன்?"
"ச்சச்ச! ஸாரி யமுனா, ரொம்ப செல்லமா வளர்ந்த பொண்ணு நீ! இங்கே… நான் உன் பொறுப்புகளை அதிகப்படுத்துறேனோன்னு தோணுச்சு… அதான் கேட்டேன்." என்றான் சமாதானமாக!
"ம்ஹூம் ஒத்துக்க முடியாது. அம்மாவுக்கும் பிள்ளைக்கும் என்னைப் பார்த்தா எப்டி தெரியுதாம். கொத்து சாவி மட்டும் என் கைக்கு வரட்டும். இந்த யமுனா யாருன்னு காட்டுறேன்." என்று மிடுக்கான முகபாவனையோடு சொல்ல,
வழக்கம் போல் என் விரல்களில் முத்தமிட்டபடியே சொன்னான். "இனி சரயு கூட உன்னைச் சேர விடக்கூடாது. அவ வாய்ல பாதி உனக்கும் இருக்குது."
அந்த ஆறுமாதங்களில் கால் சரியானதைப் போல் இருந்தாலும் திடுமென தசைகள் பிடித்துக் கொள்ளும். நானும் ஆர்வக்கோளாறில் வேகமாக நடந்து வலியை இழுத்துக் கொள்வேன். தசை சிதைவு ஏற்பட்டிருந்தால் நடக்கவே மிகுந்த சிரமமாக போயிருக்கும் என்று எங்கள் டாக்டர் சொன்னதை நினைத்து சிலிர்ப்பாக இருக்கும்.
அதன்பின் கவனமாக இருக்கக் கற்றுக்கொண்டு, மாத்திரைகள் சாப்பிட்டதால் உண்டான பக்கவிளைவுகளும் சரியாகி கொஞ்சம் கொஞ்சமாக உடல் தேறியது.
🍁🍂🍁🍂🍁🍂🍁
மியா இங்கு வந்து ஒரு வாரம் போயிருக்கும். மரியா அம்மாவிடம் அனுமதி கேட்டதற்கு தாராளமாக வந்து தங்கட்டும் என்றார். உடனே பிரியாவிடம் சொல்லி மியாவை இங்கு அழைத்துக்கொண்டேன்.
மியா இங்குள்ள எங்கள் இல்லத்து குழந்தைகளுக்கு மிகவுமே உதவியாக இருந்தாள். முதலில் இங்கு அவளைக் கல்லூரியில் சேர்க்க அவள் அம்மா வந்திருந்தார்கள்.
என்னிடம், 'நீ என்பதால் தான் மியா இங்கு வர சம்மதித்தேன். இல்லையெனில் வேறொருவர் வீட்டில் இருக்க அனுமதித்திருக்க மாட்டேன். பார்த்துக் கொள் யமுனா.' என்றதும் அவரின் நியாயமான கவலைப் புரிந்தது. நிச்சயம் நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று உறுதியளித்ததும்தான் நிம்மதியாகக் கிளம்பினார்கள்.
அன்றிலிருந்து மியாவும் மரியம் அம்மாவும் கல்லூரி தோழிகளைப் போல் ஒட்டிக் கொண்டார்கள். அவள் மூச்சுக்கு மூச்சு 'யமிகா, யமிகா' என்றழைப்பதில் தான் ராஜீவன் முறைப்பான்.
"இதென்ன யமி யொமின்னு…" என்று முணுமுணுக்கையில்,
"ஏன்னா அவங்க எப்பவுமே யம்ம்ம்மிஈஈ… இல்ல யமிகா?" என்று வேண்டுமென்றே வெறுப்பேற்றுவாள் அவள்.
ஹாஹா… உண்மையில் மியா வந்தப் பின் இந்த வீடே கலகலப்பாக இருக்கிறது. எனக்கொரு தங்கை இல்லாத குறையைத் தீர்த்துவிட்டாள் இவள் என்று ராஜீவன் அடிக்கடி சொல்லுவான். அவளும், 'ராஜ் அண்ணா, ராஜ் அண்ணா' என்று நன்றாக காக்காய்ப் பிடித்து வைத்திருக்கிறாள்.
நான் கொஞ்சம் கொஞ்சமாக ஸான்பயோ நிறுவன வேலைகளைக் கற்றுக்கொண்டேன்.
அன்று ஒரு டீலிங்கை வெற்றிகரமாக முடித்ததற்காக ராஜீவன், "உனக்கு ஏதாவது நிறைவேறாத ஆசை இருக்குதா யமுனா?" என்று கேட்க,
நானும் சொன்னேன், என் ஆசையை! கேட்டுவிட்டு என்னை மேலும் கீழும் பார்த்தவன், "சரி அது நிறைவேறாத லிஸ்ட்லயே இருக்கட்டும்." என்றுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டான்.
பின்னோடே போனவள், "அப்புறம் ஏன் கேட்டீங்க? நல்ல புருஷனா பொண்டாட்டியோட ஆசையை நிறைவேத்தி வைங்க!" என்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள,
"இந்த சின்னப் பிள்ளைத்தனமான ஆசையை நான் நிறைவேத்தி வேற வைக்கணுமா? அதுவும் நடுராத்திரியாம்! உடம்புக்கு ஏதாவது வந்துட்டா என்ன பண்றது?"
"ஒண்ணும் வராது! வந்தா நாலு நாள் கஷ்டமாருக்கும். அப்புறம் சரியாகிடும். ப்ளீஸ்ஸ்…"
"நோ!"
"ப்ளீஸ் ராஜீவன்… சின்ன வயசுல இருந்து அம்மா பொத்தி பொத்தியே வளர்த்துட்டாங்க. உங்கக்கிட்ட வந்தப்புறம் தான் நான் வெளியுலகத்தையே பார்க்கறேன். ப்ளீஸ் ஒரே ஒரு வாட்டி கூட்டிட்டு போங்களேன்."
என் 'ப்ளீஸ்'-கள் அவனின் 'நோ'-களுக்கு சவால் விட்டிருக்க வேண்டும். வழக்கம் போல, "யமுனா! யமுனா! யமுனாஆ…" என்று டென்ஷனாகிவிட்டான். நானும் வழக்கம் போல் என் பெயரை உள்ளுக்குள் கொண்டாடிக் கொண்டிருந்தேன்.
"ஏன் இப்டி சின்னப்புள்ள மாதிரி அடம்பிடிக்கற யமுனா?"
"நான் பாட்டுக்கு இருந்தேன். நீங்க தானே கேட்டீங்க, ஆசை என்ன? மண்ணாங்கட்டி என்னனு?" என்று நானும் முறுக்கிக் கொண்டேன்.
இந்த சின்ன ஆசைக்கு போய் எதற்கு இத்தனை அலம்பல்?
கடைசியில் "சரி பத்து நிமிஷம் தான்!" என்று இறங்கி வந்தான்.
அதுவே எனக்குள் பெரிய குதூகலிப்பைக் கொண்டு வந்தது. சரி சரியென்று வேகமாக பைக் சாவியை எடுக்க, அதற்கும் தடை போட்டவன் கார் சாவியை எடுத்தான்.
சரி பரவாயில்லை, அவன் மனம் மாறி விடும்முன் போகலாமென கீழே வந்தால், விஷயத்தை கேட்டுவிட்டு மரியம் அம்மா காய்ச்சி எடுத்துவிட்டார்கள்.
ஆனால் மறுநாள் அதிகாலையில் அறைக்கதவு தட்டப்பட்டது. தூக்கக் கலக்கத்தோடு கதவைத் திறக்க, மியா சத்தம் செய்யாமல் என்னை வெளியே இழுத்து வந்தாள். மிகவும் கவனமெடுத்து மெதுவாக மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றவள், என்னை மொத்தமாக மழைத்தூவல்களில் நனைத்தெடுத்தாள்.
அந்த விடியாப் பொழுதில் சோம்பலாய்க் கொட்டிய மழையில் ஆனந்தமாய் நனைந்தோம். சற்று பொறுத்து கீழிறங்க நினைக்கையில், வாசலினருகே சுவரில் சாய்ந்து, கைக்கட்டி நின்றிருந்த ராஜீவன் மயங்கிய பார்வை… என்னைக் கிறங்கடிக்கும் பார்வைப் பார்த்திருந்தான்.
அவனைப் பரிகசிப்பாகப் பார்த்த மியா, "ஏற்கனவே மழை, இதுல இப்ப ராஜ் அண்ணனால மொட்டைமாடில வெள்ளமே வந்துடும் போலருக்குது யமிகா. எப்டியோ என்னைத் திட்டு வாங்க விடாம காப்பாத்திட்டீங்க!" என்றபடியே ஓடிவிட்டாள்.
அவள் போனதும் பார்வை மாறாமல் அடி மேல் அடி வைத்து என்னருகே வந்தவனிடம் என் மனம் என்ன எதிர்பார்த்தது? மொழிபெயர்க்க உடன்பாடில்லை.
ஆனால் வந்தவன் சொன்னான். "போதும் யமுனா! உடம்புக்கு வந்துடும்." உதடுகள் இப்படி உரைக்க, பார்வையின் பொருள் வேறாக இருந்தது.
முயன்று பார்வையைத் திருப்பி என்னைத் தூக்கிக் கொண்டான். அவனின் அவஸ்தையைப் பார்த்துவிட்டு சொன்னேன். "ஐ'ம் வெரி ஃபிட் அண்ட் ஹெல்தி ரைட் நௌ, ராஜீவன்."
"அப்டியா? உன் ஹெல்த் பத்தி என்னை விட உனக்கு ரொம்ப தெரியுமா?" என்றவன், "சீக்கிரம் குளிச்சிட்டு தலையைக் காய வை!" என்று என்னை அறைக்குள் இறக்கிவிட்டு போய்விட்டான். அன்று நான் ஏதோ ஏமாற்றமாக உணர்ந்ததென்னவோ உண்மை!
எனக்கு அன்று மாலையே தும்மல் வர ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு தும்மலுக்கும் மியா ராஜீவனிடம் ஸாரி கேட்டுக் கொண்டிருந்தாள்.
"அவ தான் சின்னப் பொண்ணு. நீ ஏன் அவ கூப்பிட்டதும் போன?" என்று மரியம் அம்மா என்னைக் கடிந்தபடியே, பச்சிலைகள் போட்ட வெந்நீரில் ஆவி பிடிக்க செய்தார்கள்.
ராஜீவன் என் பாதங்களை சூடு பறக்கத் தேய்த்துவிட்டான். மியா ஒருபுறம் மாத்திரையும் கையுமாக நின்று கொண்டிருந்தாள். போதாதென்று சமையல் வேலைகளில் உதவியாக இருக்கும் அக்கா வேறு மலையாளத்தில் ஏதோ ஒரு மருத்துவம் சொல்லியபடி இருந்தார்.
சாதாரண தும்மலுக்கா இந்த அக்கப்போர் என்று தோன்றத்தான் செய்தது. இருப்பினும் நம் உடல் பலம் அப்பேற்பட்டதல்லவா? காய்ச்சலும் சளியும் வந்தால் உடல் தள்ளாடிவிடும். கண்களைக் கூட மலர்த்த முடியாமல் போன நாட்கள் உண்டு.
முன்பெல்லாம் இந்த பிரச்சினை இருந்ததில்லை. கால் அடிப்பட்ட பின்பு தான் இப்படி! காலில் ப்ளேட் வைத்து ஆபரேஷன் செய்திருக்கிறார்களல்லவா? கீழே விழுந்ததில் மிகுதியான இரத்த இழப்பு ஏற்பட்டுவிட்டது. மாத்திரைகளின் பக்க விளைவோ என்னவோ உடலின் எடையும் குறைந்து வருகிறது. நான்கைந்து படிகள் ஏறும்முன் மூச்சிரைத்துவிடுகிறது. மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைபாடுள்ளது என்றார்கள். அதனால்தான் இந்த வீட்டில் நான் மழையில் நனையவும், வேறு வலுவான வேலைகள் செய்வதற்கும் அவ்வளவு கெடுபிடி!
ராஜீவனும் உடல் தேற வேண்டும் என்று அத்தனை மெனக்கெடுகிறான். ப்ச்! எல்லாம் எனக்கும் தெரிந்ததுதான். ஆனால் இப்போது உடல் தேறிவிட்டது என்றே நம்பினேன்.
என் காதுகளில் ராஜீவன், 'உன் ஹெல்த் பத்தி என்னை விட உனக்கு ரொம்ப தெரியுமா?' என்றதே ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டிருந்தது.
அதன்பின் வந்த நாட்களில் நானும் மியாவும் மலையாளம் பேசுகிறோம் என்று மற்ற இருவரையும் அலற விடுவோம். மியா அவளின் கல்லூரி கலாட்டாக்களை தினமும் மாலையில் கடைப்பரப்புவாள். சில சமயம் சமையல் செய்யும் அக்காவிடம் நீங்கள் ரசம் வைக்கும் முறை தவறு, எங்கள் ஊரில் வெந்நீர் வைக்கும் முறையே வேறு என்றெல்லாம் அவரை முழி பிதுங்க வைப்பாள்.
ராஜீவனுடனான என் காதல் நாட்களும், நிறுவன அலுவல்களும், ஃபேக்டரி விஸிட்களும் என மிகையான நிறைவோடு சென்றன. அலுவலகத்தில் தோரணையாக வேலை வாங்குபவன், வீட்டில் ஒட்டிக் கொள்வதும் கட்டிக் கொள்வதுமாய் என் அழகின் பாரத்தை அதிகரித்துக் கொண்டிருந்தான். உடல் எடையும் சரியான அளவில் கூடியிருந்தது.
திருமணத்திற்கு முன்பான ராஜீவனின் ஆசைகளை அறிந்தவளல்லவா? அதனாலேயே அவனுக்கான என் வருத்தங்கள் மிகுதியாகியது. சில போது என்னத்திற்காய் இந்த விரதம் என்று அவன் மேல் கோபம் கூட வந்தது.
"உன்னை எந்தளவுக்கு எதையும் தனியா ஃபேஸ் பண்ணனும்னு தயார் பண்றேனோ, அந்தளவுக்கு நான் உள்ளுக்குள்ள கோழையா இருக்கேன் யமுனா. உனக்கு ஏதாவது ஆச்சுனா என்னால எதுவுமே முடியாது. நீ இல்லனா நான் இல்ல.
இதுக்கு முன்னாடி நமக்கு தான் யாருமே இல்லயேன்னு மரத்துப் போயிருந்த மனசுக்கு, உன்னைப் பார்த்ததும் தான் உணர்வு வந்திருக்குது. அந்த உணர்வுக்கு பங்கம் வந்துடுமோன்ற பயம், ஒவ்வொரு முறை நீ உடம்பு சரியில்லாம படுத்துக்கும் போதெல்லாம் என்னை மிரட்டும்."
"ச்சு! இப்ப ஏன் இந்தப் பேச்சு ராஜீவன்? எனக்கு எதுவும் ஆகாது. இப்ப நான் ரொம்பவே நல்லா இருக்கேன். நாலு மாசமா சளி, காய்ச்சல் ஒண்ணும் வரல இல்ல? கால் கூட கம்ப்ளீட்டா க்யூர் ஆகிடுச்சு."
"இஸ் தட் ஸோ?"
"எஸ்!"
"ம்ம்ம்… ஸோஓஓ… ம்ம்?" என்றவனின் புருவங்கள் சிருங்காரமாய் உயர்ந்தன.
"ஹ்ம்ம்!" வெட்கத்தோடு சிரிப்பும் வந்து தொலைத்தது எனக்கு.
எப்போதும் போல் விரல்களில் மிருதுவாக முத்தம் பதித்தவன், "பிஃபோர் தட், நாளைக்கு டாக்டர் மைதிலிகிட்ட உனக்கு ஒரு ஃபுல் ஹெல்த் செக்கப் பண்ணிடலாம்." என்றுவிட்டு விலகியதும், எனக்கு எந்த மொழியிலும் ஒரு கெட்ட வார்த்தை கூட தெரிந்திருக்கவில்லையே என்று வருத்தம் கொண்டேன்.
ஆனால் நான் கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில், அன்று விடியக் காத்திருக்கும் ஒரு மழைப்பொழுதில்… ராஜீவனின் கண்கள் மொழிந்த பாஷையை மொழிபெயர்த்த எனக்கு ஆச்சரியமான ஆச்சரியமே!
என் இரத்த நாளங்களில் பரபரப்பாய்ப் பரவிய அவன் பேரன்பின் முடிவில், அவன் மார்பில் பிணைந்துக் கிடந்தவள் வானில் வட்டமடிக்கும் தேன்சிட்டாய் ஏகாந்தத்தில் லயித்திருந்தேன்.
அடுத்து வந்த நாட்களில் நிறுவன வேலைகள் நெட்டித் தள்ளினாலும், எங்களுக்கான பொழுதுகளை நாங்கள் வஞ்சனையின்றி சிறப்பித்துக் கொண்டாடினோம்.
குங்குமம் ஏன் சூடினேன்
கோலமுத்தத்தில் கலையத்தான்…
Comments
Post a Comment