ஆயர்பாடியில் கண்ணனில்லையோ -2.

அத்தியாயம் 2


ப்ரித்வியின் முகத்தில் வியர்வைத் துளிகள் மினுமினுத்தன. தாங்கவியலா அழுத்தத்தில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது. தலையை அழுந்தக் கோதியபடி கண்கள் மூடி அமர்ந்துவிட்டான்.


மியாவைப் போல் யமுனாவும் திருமணமே வேண்டாம் என்று இருக்கிறாள் போலும் என்றே நினைத்திருந்தான் ப்ரித்வி. தன்னிடம் குறை என்று எதுவுமில்லை. ஆக இத்தனை வருடங்கள் கழித்து திருமணத்திற்கு சம்மதித்திருக்கும் மியாவைப் போல் யமுனாவும் மனம் மாறிவிடுவாள் என்று கணித்துவிட்டான்.


"ப்ரித்வி! ப்ரித்வி! என்னடா பண்ணுது?" மாரடைப்பு வந்தவன் போல் அமர்ந்திருந்தவனை உலுக்கினாள் மியா.


யமுனாவிற்கு இன்னமும் திருமணமாகவில்லை என்று இவன் உள்மனம் எப்படி அத்தனை நிச்சயமாய் நம்பியது? அதனாலல்லவோ அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தியிருந்தான்! 


"டேய் ப்ரித்வி!"


"யாரு அவரு?"


"நீ வீட்டுக்கு வா! நான் எல்லாம் சொல்றேன்."


"பேரென்ன?"


"ப்ச் ப்ரித்வி!"


"மிஸஸ் யமுனா..?" 'பெயரை முழுமையாக்கு' என்று அடத்துடன் பார்த்தான்.


சொல்லாமல் இடத்தை விட்டு நகர மாட்டானென புரிந்த மியா சொன்னாள். "யமுனா ரா‌ஜீவன்."


'யமுனா ராஜீவன்!' காதில் எதிரொலித்த அவ்வேழெழுத்துக்களால் ப்ரித்வியின் காதல் அணுக்கள் ஒவ்வொன்றும் பலமாய்க் காயப்பட்டுத் துடித்தன. 


இந்த இரு மாதங்களாக நிற்கும் போது, நடக்கும் போது, தூங்கும் போது, சாப்பிடும் போது என எங்கும், எப்போதும் மனதை ஆக்ரமித்து சிரித்த யமுனா தனக்கில்லையா? 


அழிச்சாட்டியமாக அமர்ந்திருந்தவனை வம்படியாக தன் வீட்டிற்கு இழுத்துச் சென்றாள் மியா.


இரயிலில் ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த தன் இருக்கையைத் தேடி அமர்ந்த யமுனாவின் முகத்தில் இறுக்கம் இடம்பிடித்திருந்தது. சதா புன்னகைத்துக் கிடக்கும் மலர் முகத்தில் எதற்காம் இத்தனை இறுக்கம்?


இருக்கையில் கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்திருந்தவளிடம் மழைக்காற்று ஏதோ ரகசியம் பேசியிருக்க வேண்டும். இறுக்கம் தளராமல் விழிதிறந்தவள், 'உன்‌ ரகசியம் ஒன்றும் வேண்டாம்.' என்பதைப் போல் காற்று கலைத்துவிட்டிருந்தக் கூந்தலை காதோரம் தள்ளிவிட்டு, தன் மடிக்கணினியை எடுத்து உயிர்ப்பித்தாள்.


மடிக்கணினி திரை விரியும்முன் அலைபேசி ரீங்கரித்தது. எடுத்துப் பார்த்தவளின் முக இறுக்கம் தளர்ந்து, தன் இயல்புநிலையான புன்னகைக்கு மாறியது.


நம் மன இறுக்கத்தைத் தளர்த்தி, இதழ்களுக்கு இதமான குறுஞ்சிரிப்பைப் பரிசளித்து, தீரா பிரியத்தோடு நம்முடன் பயணிக்கும் ஒருவர் இருந்துவிட்டால், வாழ்வில் அதைவிட ஆத்ம திருப்தி என்ன இருந்துவிட முடியும்? 


யமுனாவின் வாழ்விலும் அப்படிப்பட்ட ஒருவர் இருக்கிறார் போலும். நாமும் அவளின் கைப்பேசி திரையை எட்டிப் பார்த்தால், 'Mariya Amma' என்ற பெயர் ஒளிர்கிறது.


"சொல்லுங்கம்மா! சாப்பிட்டீங்களா?"


"......."


"ம்ம் ஆச்சு! டிரெயின் ஏறியாச்சு. காலைல உங்க பக்கத்துல இருப்பேன்."


"......"


"மியாவா? அதான் கல்யாணத்துக்கு வந்துட்டு போயிட்டீங்களே… அதெல்லாம் ஒண்ணும் கோவிச்சுக்க மாட்டா! என்னை விட உங்களுக்கு அவ மேல தான் பாசம் அதிகம் இல்ல?" என்றவளின் வதனம் மேலும் சிரிப்பில் விரிந்தது.


"......."


"ஹாஹா சும்மா சொன்னேன்மா. அவ ஹஸ்பண்ட் கூட ஹனிமூன் போக ரெடியாகிட்டு இருக்கா."


"......."


"ஆமா! சரிம்மா நாளைக்கு பார்க்கலாம். இட்'ஸ் டைம் டூ ட்ரீம்!"


மேல் படுக்கையில் இருந்த ஒருவர் விளக்கை நிறுத்திவிடலாமா என்று கேட்டுக்கொண்டதன் பேரில் விளக்கை நிறுத்திவிட்டு, நல்லவேளை சைட் பர்த் கிடைத்திருக்கிறது என்றெண்ணியபடி மடிக்கணினியோடு ஐக்கியமாகிவிட்டாள். ஏதோ கணக்கு வேலை செய்யப் போகிறாள் போலும். 


ஷ்ஷ்! என்ன இது? ஓடும் ரயில்! அதில் உறங்கும் மனிதர்கள்! நட்சத்திரங்கள் இல்லா மழை வானம்! இதில் சலிப்பின் உச்சமாய் இந்த யமுனா வேறு கணக்கைத் தூக்கி வைத்துக்கொண்டு கடுப்பேற்றுகிறாள். நமக்கு இங்கே சுவாரஸ்யமான விடயம் ஏதுமில்லை போலவே!


கொஞ்சம் இருங்கள்! யமுனா கணக்குவழக்கைப் பார்க்கவில்லை.‌ ஏதோ எழுதுகிறாள். என்னவாக இருக்கும்? நகருங்கள், நான்தான் முதலில் பார்ப்பேன்.


அட! இது ஒரு word document. ஆங்காங்கே சிற்சில பொம்மைகள் மற்றும் பூக்கள் படங்களைப் பதிவேற்றியிருக்கிறாள்.  


இவள் காலையில் ஏதோ மியாவைப் பற்றி எழுதியிருக்க வேண்டும். வாசிக்கிறேன் கேளுங்கள்.


"நாம ரெண்டு பேரும் யமுனாக்கா மாதிரி காதலிக்கணும் ரித்தி!" 


இப்படி தான் இப்போது இந்த மியா தன் புதுக் கணவனிடம் பிதற்றிக்கொண்டிருப்பாள். ஹாஹா!


எனக்கு நிச்சயம் தெரியும். அவள் கல்யாணத்தன்றே என்னை அறிமுகப்படுத்தியபின் அவரிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். அவர்தான் நண்பர்களிடம் பேசும் சுவாரஸ்யத்தில் இவள் சொல்ல வந்ததை சரியாக காதில் வாங்கவில்லை.


நேற்று அவர்கள் வீட்டுப் பார்ட்டியிலும் கூட என்னை அறிமுகப்படுத்தும் விதத்தில், "ரித்தி, இவங்க…" என்று ஆரம்பிக்கவும் வேறொரு விருந்தினர் வரவும் சரியாக இருந்தது.


ஆக நேற்றெல்லாம் சொல்ல முடியாததை இப்போதுதான் சாவகாசமாக சொல்லிக்கொண்டிருப்பாள். இன்னும் கூட சொல்லுவாள்தான். மியாவிற்கும் பிரியாவிற்கும் என் மேல் தனிப்பட்ட பிரியங்கள் உண்டு. எனக்கும் கூட தான்!


அதனால்தான் நான் இங்கே அவளை நினைக்கும் வேளையில், அவளும் என்னை நினைத்துக் கொண்டிருப்பாளென என்னால் சரியாக அவதானிக்க முடிகின்றது.


என் வாழ்வில் நான் நிர்க்கதியாக வீழ்ந்து, உயிரற்ற சவமாய் சமைந்து, இயலாமையோடு சூனியத்தில் படபடத்த தருணமெல்லாம் என்னை ஆதரவாய்த் தேற்றி, தூக்கி நிறுத்தியவர்கள் மியாவும் ப்ரியாவும் தான்!


ஏன் இன்று வரையிலும் கூட அவர்களுக்கு என் சின்ன மனச்சுணக்கத்தையும் கண்டறிந்து களைந்தெறிந்த பின்னரே மறுவேலை! இருவரும் பிரபஞ்சம் எனக்களித்த மாபெரும் பரிசுகள்! அண்டத்தின் ஆதிபுள்ளி தந்த ஆசுவாசங்கள்! 


ஆனால் மியாவின் நண்பன் ப்ரித்வியின் நடவடிக்கைதான் சற்று வருத்தத்தை அளிக்கிறது. மதிய உணவிற்கு அழைத்திருக்கிறான். இன்று அவனிடம் பேசிவிட முடிவெடுத்திருக்கிறேன். 


நான் திருமணமானவள் என்று தெரியாமலா இருக்கும்? எனக்கு புரியவில்லை. எது எப்படியோ இன்று ராஜீவனைப் பற்றி அவனிடம் சொல்லி புரிய வைத்துவிட வேண்டும்.


ப்ரித்வி நல்லப் பையன். நல்ல எதிர்காலம் இருக்கிறது. சொன்னால் புரிந்துகொள்வான். நான் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வான் என்று யோசிக்கிறேன்.


சதா ஜடம் போல் திரியும் இந்த யமுனாவிற்குள் காதலிருக்கிறதா என்று ஆச்சர்யப்படலாம். நானும் காதலிக்கிறேன். அதைவிட காதலோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று சொன்னால் ப்ரித்விக்கு நிச்சயம் வியப்பாகத் தான் இருக்கும்.


           🍁🍂🍁🍂🍁🍂🍁


ஆஹா! யமுனா அன்றாட நிகழ்வுகளை இந்த கோப்பில் பதிந்து வைக்கிறாள் போலும். இப்போது கூட ப்ரித்வியைப் பற்றி தான் ஏதோ எழுதுகிறாள். நாமும் வாசிப்போமா? இந்த ரயில் பயணம் நமக்கு சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது. வாருங்கள்!


           🍁🍂🍁🍂🍁🍂🍁


ப்ரித்வியின் மேல் கடுங்கோபத்தில் இருக்கின்றேன். இத்தனை தீவிரமாக இருப்பவனுக்கு, எனக்கு கல்யாணமாகிவிட்டது என்பது தெரியாது என்றே தோன்றுகிறது.


முதலில் இவன் இவ்வளவு தீவிரமாக இருப்பானென்றும் நான் நினைத்திருக்கவில்லை. ஏதோ கல்யாண வீட்டில் பெண்களைப் பார்வையிடும் பையனாக அல்லவா நினைத்துவிட்டேன்? எனக்கு இன்னமும் மனிதர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள தெரியவில்லையோ?


உன் அக்கா வயதிலிருக்கும் நான் கல்யாணம் ஆனவள் என்று சொல்லத்தான் வந்தேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கூட முழுதாகக் கேட்காமல் என்னமாய்க் கத்துகிறான்! இவனிடம் இனி பேசுவது வீண் என்று மியாவை அழைத்துவிட்டேன்.


எனக்கு இன்னமும் மனம் ஆறவில்லை. அதுவும் 'டி' போட்டு வேறு பேசுகிறான். என்ன திமிர்! இருக்குமிடம் கருதியும் மியா பார்த்துக்கொள்வாள் என்ற நினைப்பிலும், உதட்டை இழுத்து வைத்து சிரித்திருந்தேன். இல்லையெனில் நிச்சயம் மரியாதையற்று பேசியதற்கு இன்று ப்ரித்வியின் கன்னம் பழுத்திருக்கும்!


என் ராஜீவன் ஒருமுறை கூட என்னை டி போட்டு பேசியதில்லையே! கோபத்தில் கூட கண்கள் மூடி பல்லைக் கடித்து, "யமுனா யமுனா யமுனாஆ…" என்று என் பெயரை ஏலம் விடுவானே… அப்பொழுது தோன்றும் இந்த பெயர் எத்தனை அழகு என்று! அப்போதெல்லாம் என் பெயரை நானே கொண்டாடிக் கொள்வேன். 


பிறிதொரு நேரம் அதை அவனிடம் சொல்லும் போது, "என் கோபம் உனக்கு கொண்டாட்டமா?" என்று அடிமனதின் தித்திப்பிற்கு கோப சாயம் பூசுவான்.


ஒவ்வொரு முறையும் முழுப்பெயர் சொல்லி யமுனா என்றே அழைப்பான். அவன், 'ஹேய் யமுனா!' என்று என் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் எனக்குள் என்றும் வற்றாத யமுனையின் பிரவாகமே! 


எனக்கும் 'ராஜீவன்' என்ற அவன் பெயரின் மீது பெரும் மயக்கம். கோடைக்காலத்தில் திடுமென மாறிப் போகும் சோம்பேறி வானம் போல, அவன் பெயரை உச்சரிக்கையில் என்னுள் ஓர் கிறக்கம். 


ராஜீவன்! என்னுள் ஊறும் ஜீவனும் அவன்தான். என் பெண்மையின் ஆழ்ஜீவனைத் தொட்டுச் சென்றவனும் அவன்தான். எங்கும் நிறை பரப்பிரம்மமாய் என்னுள் விரவிக் கிடப்பவனும் அவன் மட்டும்தான்!


மற்றவர்களெல்லாம் தங்களுக்கு பிடித்தமானவர்களின் பெயர்களை அன்போடு சுருக்கி அழைப்பார்கள். ஆனால் எனக்கு ராஜீவன் பெயரை மற்றவர்கள் போல் ராஜி, ராஜ், ஜீவா, ராஜீவ் என்றெல்லாம் பிய்த்து போடுவதில் உடன்பாடில்லை. போலவே செல்லப் பெயரும் வைத்ததில்லை. ஒவ்வொரு முறையும் முழுமையாக 'ராஜீவன்' என்றே அழைப்பேன். ராஜீவனைப் போல் அவன் பெயரையும் முழுமையாக என் செல்லமாக்கிக் கொண்டேன்.


என் 'ராஜீவன்' என்ற அழைப்பில் நெஞ்சத்தில் பன்னீர் பூக்களைக் கொட்டி பரப்புகிறாய் யமுனா என்பான். சில நேரம் நதியொன்று காதோரம், 'ராஜீவன்' என கிசுகிசுப்பதை போல் குளிர்ச்சியாக இருக்கிறது என்பான். 


என் ராஜீவன் என்ன மாதிரியான குணக்காரன் என்று கேட்டால் இன்று வரையிலுமே எனக்கு பதில் தெரியாது. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு குணம் காட்டுவான். அதில் ஒன்றுமே எதிர்மறையாய் இருக்காது. அப்படியோர் உன்னதமானவன்!


நா. பார்த்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள் வாசித்துக் கொண்டிருப்பவன், ஐபிஎல்-இல் எதிரணி ஆடுவதைப் பார்த்து, 'ரன்அவுட் தான், ரன்அவுட் தான்!! நான் பார்த்தேன்! நான் பார்த்தேன்!!' என்று பதின்பருவனாக கத்தி, கைதட்டி ஆர்ப்பரிப்பான். அவன் கேட்கும் மலையாள பாடல்கள்….


      🍁🍂🍁🍂🍁🍂🍁


குறுக்கிடுவதற்கு பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த யமுனா என்ன ஒரேயடியாக ராஜீவன் புராணம் பாடுகிறாள்? அப்படியென்ன அவன் பெரிய்ய்ய இவன்? சரி, அதையும்பார்த்துவிடுவோம்.


ஆனால் இவள் மேலே ஸ்க்ரால் செய்தாலல்லவா நாம் முதலில் இருந்து இவளின் ராஜீவனை வாசிக்க முடியும்? இவள் பாட்டுக்கும் ஏதேதோ எழுதிக்கொண்டே போகிறாளே! எனக்கு கதையில் நான்கு வரிகள் எழுதுவதற்குள்ளும் நாற்பது முறைகள் கொட்டாவி வந்து போய்விடுகின்றது. இவள் எப்படி தான் 'சட் சட்' எனச் சலிக்காமல் கீபோர்டில் விரல்களைத் தேய்த்தெடுக்கிறாளோ தெரியவில்லையப்பா!


அடடா! நடுவில் மொக்கைப் போடுகிறேனென கழுவி ஊற்ற ஆரம்பித்துவிட்டீர்களா? சரி பொறுங்கள். நைசாக 'Home' பட்டனைத் தட்டிவிட்டு முதலில் இருந்து வாசிப்போம்.


         🍁🍂🍁🍂🍁🍂🍁 


என் மனதினைத் தொல்லை செய்துகொண்டிருக்கும் ராஜீவன் பற்றி, அவன் அறிமுகமான நாளிலிருந்து இதில் எழுதி வைக்கப் போகிறேன். என் மனம் சற்று சமன்பட இது உதவும் என்று நினைக்கிறேன்.


அந்த நாளை இப்போது நினைத்தாலும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியாது. ஆனால் அன்று நான் அடைந்த அச்சத்திற்கு அளவேயில்லை.


என் இரு தங்கைகளில் சின்னவள் ஜனனி அமைதிக்கெல்லாம் அமைதியானவள் என்றால், சரயு அப்படியே அவளுக்கு நேரெதிரான சுபாவமுடையவள். மிகுந்த சேட்டைக்காரி. செய்யாதே என்றால் செய்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பேனென நட்டமாய் நிற்பாள். 


அப்போது அவள் கல்லூரி கடைசி வருடத்தில் இருந்தாள். பயாலஜியில் குறைந்த மதிப்பெண் எடுத்திருக்கிறாளென, அன்று காலை அப்பா அவளை இரைந்து திட்டிவிட்டு, படிப்பு முடியும் வரை மொபைல், டிவி, சினிமா எதுவும் கூடாது என்று நிபந்தனைகளையும் வாரி இரைத்துவிட்டு சென்றிருந்தார்.


அவர் போகும் வரை அமைதியாக நின்றிருந்தவள் அவர் தலை மறைந்ததும் நேராக என்னிடம் வந்து நின்றாள்.


"யம்மி, ஷாப்பிங் போகலாமா?"


நானாக இருந்திருந்தால் அப்பா மானக் கேடாக திட்டியதற்கு இந்நேரம் அந்த பாட புத்தகத்தைத் திருமணமே செய்துகொண்டிருப்பேன். இவளானால் கடைவீதி செல்லலாமென வாயில் கடலையை அரைத்தபடி கேட்கின்றாள். 


"ஓ போலாமே! ஷாப்பிங் போயிட்டு வந்து அப்பா தர்ற செப்பல் ஷாட்டையும் வாங்கிக்கலாம்."


"பயப்படுறியா யம்மி? பயம் தான் நம் பெண்ணினத்திற்கே முதல் எதிரி! அதை களைந்தெறிந்துவிட்டு , வீறுகொண்டு எழுந்து வா யம்மி, எழுந்து வா! அப்பா என்ன அந்த அம்மையப்பனே வந்தாலும் அச்சமின்றி தலை நிமிர்ந்து நடைபோடுவோம்! வா யம்மி!!" என்று வீரவசனம் பேச,


"நடைபோட்டு எங்க போகப் போற?" எனக் கேட்டபடியே அம்மா வரவும், பாதகத்தி அப்படியே பம்மிவிட்டாள்.


அம்மாவிடம் பயபக்தியோடு, "அது ம்மா… அப்பா ரொம்ப திட்டிட்டாருன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன்ல? அதான் யமுனா, 'நல்லா படிச்சா அப்பா ஏன் திட்டப் போறாரு? என் ஃப்ரெண்ட் ப்ரியா இதே சப்ஜெக்ட்ல சூரப்புலி. நான் உன்னை அவக்கிட்ட கூட்டிட்டு போறேன். ஆனா அப்பாவை நீதான் கன்வீன்ஸ் பண்ணனும்'னு சொல்றா. அதான் நல்ல காரியத்துக்கு தானே போறோம். இதுக்கு எதுக்கு பயம்னு… சொல்லிக்கிட்டு இருந்தேன். ஹிஹி… நாங்க ப்ரியாக்கா வீட்டுக்கு போய்ட்டு வரட்டுமா என் தெய்வத்தாயே?" என்று அநியாயத்திற்கு நடிகையர் திலகமானாள்.


"படிக்கறதுக்குன்னா அப்பா என்ன சொல்லப் போறாங்க யமுனா? போயிட்டு வாயேன்."


இவளிடம் மட்டும் அம்மாவின் புத்திசாலித்தனம் மூர்ச்சையாகி போவது என்ன மாயமோ! புரியத்தானில்லை. 


நொந்துபோய் நான் உண்மையைச் சொல்ல எத்தனிக்கையில் வேகமாக இடையில் புகுந்தவள், "இவ இப்டி தான்மா எதுக்கெடுத்தாலும் பயந்துக்கிட்டே இருப்பா. ஆனா நான் உங்கள மாதிரி! எனக்கு தான் உங்கக்கிட்ட இருக்க தைரியம் அப்டியே வந்திருக்குது." என்று அம்மாவை ஐஸ்கட்டி சிலையாகவே மாற்றியவள் என்னிடம், "இன்னும் என்ன யமுனா பிடிச்ச வச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்துட்டே இருக்க? சீக்கிரம் கிளம்பு." என்றாள்.


அம்மாவும், "சீக்கிரம் போயிட்டு நேரத்தோட வீட்டுக்கு வாங்க." என்றுவிட்டு திரும்பியதும்,


முறைத்துப் பார்த்த என்னிடம், "ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீளீஸ் யம்மி… என் ஷாப்பிங் மூட்'அ ஸ்பாயில் பண்ணிடாதயேன்… ப்ளீஸ்ஸ்…" என்று உதட்டைக் குவிப்பவளைக் கோபிக்க மனம் வரவேயில்லை.


அப்பா வரும்முன் வீட்டிற்கு வந்து விட வேண்டுமென்ற நிபந்தனையோடு கிளம்பினேன். 


வெளியே அம்மா, "பிள்ளைங்களை பிரியா வீட்ல விட்டுட்டு வெயில் இறங்கினதும் கூட்டிட்டு வா, சிவா!" என்று டிரைவரிடம் சொல்லியதைக் கேட்டு, நான் வாய்மூடி சிரித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே அம்மாவைத் தாஜா செய்து ஸ்கூட்டியை எடுத்துவிட்டாள் சரயு.


"நீ மட்டும் எப்டிடீ அம்மா மூளையை ஃப்ரை பண்ணி சாப்பிட்டிடுற?"


"அதுக்கெல்லாம் ஸ்பெஷல் டேலண்ட் வேணும் யம்மி!" என்றவள் வண்டி ஓட்டுவதில் கவனமானாள்.


வழக்கமாக நாங்கள் போகும் கடையல்லாது அவளின் ஸ்கூட்டி வேறு திசையில் திரும்ப கடுப்பாகிப் போய், "ஏய்! கடைக்கு போவோம்னு சொல்லிட்டு எங்கடீ போற?" எனக் கேட்க,


"ப்ச் யமுனா… வழக்கமா போற நம்மூர் ஷோரூம் போய் யாரும் பார்த்துடுவாங்களோ என்னவோன்னு பயந்து பயந்து டிரெஸ் செலக்ட் பண்ண என்னால முடியாது. கொஞ்சம் தூரமா போய் ஆசை தீர சுத்திட்டு வருவோம்." என்றாள்.


"தூரமா-ன்னா?" நான் திகைக்க,


"மதுரை!" என்று அசராமல் அதிர்வேட்டைக் கொளுத்திப் போட்டாள்.


"என்ன? மதுரையா? நீ முதல்ல வண்டியை நிறுத்து!"


"ஏன் இப்டி பயந்து சாகுற யமுனா?"


"பயப்படாம? எம்டனுக்கு தெரிஞ்சா கையைக் காலை உடைச்சு எட்டுத் திக்கும் தூக்கி எறிஞ்சுடுவார் தெரியுமா?"


"அவர் எம்டன்-ன்னா நாம எம்டன் மகள்கள்!" என்று கித்தாய்ப்பாய் முகம் உயர்த்தியவள், அவள் ஸ்கூட்டியை ரயிலடியில் போட்டுவிட்டு, காத்திருந்த ரயிலில் வேகமாக ஓடிப்போய் ஏறிக்கொண்டாள்.


பர்சேஸிங் முடித்துவிட்டு வந்தால் பிரியாவோடு சற்றுநேரம் வெளியே போனோம் எனச் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்துதான் இவளோடு கிளம்பியிருந்தேன். இப்போது மதுரை என்றால் பைகளைப் பார்த்து அம்மாவுக்கு தெரிந்துவிடுமே என்ற அச்சம் கவ்வியது.


"சீக்கிரம் வா யம்மி! டிரெய்ன் கிளம்பிடும்." 


நானும் ஏறிய பின் மூச்சு வாங்கியபடி கேட்டேன். "ஆல்ரெடி டிக்கெட் எடுத்துட்டியா?"


"பின்ன?" 


"நீ இப்டியொரு சதித்திட்டம் செஞ்சிருப்பன்னு தெரிஞ்சிருந்தா உன் கூட கிளம்பிருக்கவே மாட்டேன் நானு! அப்பாவுக்கு தெரிஞ்சா உன்னோட சேர்த்து எனக்கும் தான் மண்டகப்படி கிடைக்கும். ஏன் சரயு இப்டி பண்ற?" கோபமும் எரிச்சலும் போட்டி போட கேட்டவளை,


"ஷ்ஷ்! சரயு இருக்க சஞ்சலமேன்? பேசாம வா!" என்று அசட்டையாக முடித்துவிட்டாள்.


எனக்கு அப்போதே பயம் அடிவயிற்றைப் பிறாண்ட ஆரம்பித்துவிட்டது. எங்கள் ஊரிலிருந்து அதிக தூரத்தில் இருக்கும் மதுரையின் பெரிய மாலிற்கு இதுவரை ஒருமுறை கூட நாங்கள் வந்ததில்லை. 


என்னவாகப் போகிறதோ என்னவோ என்று பதறி நின்ற என்னை, ரயிலின் தாலாட்டையும் ஜன்னலின் வழி ஆகர்ஷித்துப் போகும் குளுகுளு காற்றையும் அனுபவிக்கச் சொன்னாள் சரயு. சற்று நேரம் பயத்தையும் அப்பாவையும் ஒதுக்கி வைத்துவிட்டு அதிலேயே சுகித்துக் கிடந்தேன். 


ரயில் நிற்கவும் வேற்றூரில் கால் வைத்த எனக்கு அதுவரை ஓய்விலிருந்த பயம் ஓடிவந்து ஒட்டிக்கொண்டது. சரயு ஓர் ஆட்டோவை அமர்த்தி அந்தப் பெரிய மாலிற்கு அழைத்துப் போனாள்.


அங்கே போய் நிமிர்ந்து பார்த்த எனக்குமே உள்ளே போக ஆசை வந்தது. ஆசை பயத்தை சற்றே பின்னுக்கு தள்ளியது. 


"வா யம்மி, உள்ள எப்டி இருக்குதுனு பார்ப்போம்." என்று என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு குதித்தபடி உள்ளே போனாள் சரயு.


உள்ளே நுழைந்து அதன் பிரம்மாண்டத்தில் வாய் பிளந்து, ஆளுக்கொரு ஐஸ்கிரீமை காலி செய்து, செட் போட்டிருந்த பேய் வீட்டினுள் நடுங்கியபடி சுற்றிவந்து, எங்களிருவருக்கும் தேவையான பொருட்களையும் உடைகளையும் அலசி ஆராய்ந்து எடுத்துவிட்டு, கையில் ஒரு பாப்கார்னோடு எங்கள் ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு நடந்தோம்.


அப்போது நடந்துகொண்டிருந்த சரயு திடுமென ஒரு திடுக்கிடலோடு பாப்கார்னை சிதறவிட்டு நின்றாள். என்னவென அவள் திருதிருத்த முகத்தைப் பார்த்துவிட்டு, அவள் பார்வை போன திக்கைப் பின்பற்ற, அங்கே அப்பா எங்களை முறைத்துக்கொண்டு நின்றிருந்தார். கூடவே அவன்; ராஜீவன்!


நந்தவனம் இதோ இங்கேதான்

நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்… 


தொடரும்🍂🍂🍂

Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)