🌻முழு நாவல்கள், தொடர்கதைகள் மற்றும் சிறுகதைகள் 🌻

வாழ்க்கையில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பொக்கிஷம் கிடைத்திருக்கும். அது ஒரு பொம்மையாகவோ, பேனாவாகவோ, உங்களுடைய குரலாகவோ, இல்லை... வேறு துறை சார்ந்த திறமையாகவோ, ஒரு கிரிக்கெட் மட்டையாகவோ, தோழனாகவோ, மனைவியாகவோ, காதலாகவோ இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அந்த வகையில் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்திருப்பவர், என்னுடைய பொக்கிஷம் என்று நான் நினைக்கின்றவர்… என் அப்பா!
என்னுடைய ஒவ்வொரு செயல்களிலும் வழிகாட்டியாக இருந்தவர்! ஒவ்வொரு சறுக்கலிலும், 'எழுந்துக்கோ அர்ஜூன்!' என்று ஊக்கம் தந்தவர்! என் மனதில் விழும் எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறையாகவும், நேர்மையாகவும் சிந்திக்க கற்றுத் தந்தவர்!
என் அப்பாவோடான நேரங்களையும், அவரின் நேர்மறை சிந்தனைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
என் ஐந்தாம் வயதில் என் தம்பி அஷ்வந்த் பிறந்தான். அப்போது எல்லா தலைச்சன் பிள்ளைகளையும் போல நானும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்.
ஒரு நாள் வீட்டின் பின்புற மாமரத்தினடியில் பறந்து செல்லும் தும்பிகளை வேடிக்கை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தேன். என்னருகே நிழலாடியது. நிமிர்ந்து பார்த்தவனை தன் கைகளில் ஓர் பூனைக்குட்டியைப் போல் அள்ளிக் கொண்டார், என் அப்பா!
"அர்ஜூன்! தனியா இங்க என்ன பண்ணிட்டு இருக்க? பட்டுக்குட்டி முழிச்சிக்கிட்டான் பாரு. போய் விளையாட்டு காட்டுடா." என எங்கள் வீட்டிற்கு புதிய வரவாய் வந்திருந்த என் தம்பியைக் குறித்து பேசினார்.
"அவன் பட்டுக்குட்டினா அப்போ நான் யாரு? இத்தன நாள் என்னை தானே ரெண்டு பேரும் பட்டுக்குட்டி சொன்னீங்க? இப்ப புது தம்பி வந்ததும் அவனைக் கொஞ்சறீங்க!" என்று கோபத்தில் மூக்கை உறிஞ்சிக் கொண்டவன், அப்பாவின் கைகளில் இருந்து உடலை நெளித்து, துள்ளி இறங்கப் பார்த்தேன்.
அதற்கு விடாமல் அணைத்து பிடித்தபடியே, "ஹாஹா... இது தான் அர்ஜூன் பட்டூக்கு கோவமா? நீ எங்களோட பட்டுக்குட்டி. புது தம்பி உன்னோட பட்டுக்குட்டி. நாங்க உன்னை எப்டி பார்த்துக்கறோமோ... அதே மாதிரி நீ உன்னோட பட்டுக்குட்டிய பத்திரமா பார்த்துக்கோ! சரி தானா?" என்று என் பொறாமையை தணித்து, என் சின்ன மூக்கை பிடித்து ஆட்டிய என் அப்பா!
"அவன் என் பட்டுக்குட்டியா? அப்ப என்னோட விளையாடுவானாப்பா?"
"பின்ன? நீதானே அவனோட அண்ணன்? உன்னை தான அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்?"
இன்றளவும் என் தம்பியின் மீதான பாசத்திற்கு ஊற்று நீராய் இருக்கும் வார்த்தைகள் இவை!
என் பத்தாம் வயதில் என் ஆதர்ச நண்பன் ஆதர்ஷூடன், அப்பா வாங்கி தந்த புதிய பொம்மைக் கார் வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். திடுமென கார் பட்டென்று நொறுங்கிய சப்தம்! ஆதர்ஷ் காரின் மேல் ரோலிங் ஸ்கேட்டரை விட்டிருந்தான். பார்த்த எனக்கு அழுகை வெடிக்க தயாராக இருந்தது.
"அப்பா... என் காரை ஆதர்ஷ் உடைச்சிட்டான்!" வீடு அதிரும் மட்டும் கத்தினேன். அப்பா என்னைப் போல் கோபம் கொள்ளவில்லை.
மாறாக, "ஓ! கார் உடைஞ்சிடுச்சா? சரி வா. உள்ளே என்னென்ன பார்ட்ஸ்லாம் வச்சிருக்காங்கனு பார்ப்போம். நீ பெரியவனா ஆனதும் ஒரு வேளை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சூஸ் பண்ணினா? சோ, அது பத்தின நாலெட்ஜ் இப்பவே தெரிஞ்சுக்கலாம். வா அர்ஜூன்." என்று என் தலை கலைத்து, மடியில் அமர்த்திய என் அப்பா!
அதே நேரத்தில் ஒரு வாகனத்தை உருவாக்க எத்தனை உதிரி பாகங்கள் தேவைப்படுகின்றன, எத்தனை மெனக்கெடல்கள் இருக்கின்றன என்பதையும் விளக்கிக் கூறி, இனி சிறு பொருளானாலும் அதனை பத்திரமாகப் பாதுகாக்க செய்யும் எண்ணத்தை என்னுள் விதைத்தவர், என் அப்பா!
என் பதினைந்தாம் வயதில், என்னோடு பத்தாம் வகுப்பில் பயின்றவன் சரண்! முதன்முதலாக, 'தோள் கொடுப்பான் தோழன்' என்பவனாக என் மனதில் பதிந்தவன். எந்த நட்பாக இருந்தாலும் சிறு மனஸ்தாபம் வந்துவிடுமல்லவா? என் நட்பினூடான மனஸ்தாபத்திற்கும் எனக்கு வடிகாலாக இருந்தவர் அப்பா தான்!
"அப்பா, இன்னிக்கு சரண்க்கும் எனக்கும் சண்டைப்பா. நான் அவனுக்கு எப்பவும் நல்லது தானே நினைச்சிருக்கேன்? என் ஃப்ரெண்ட்ஷிப்ப மதிக்காம தூக்கிப் போட்டுட்டான்ப்பா. இனி எப்பவும் அவன்கிட்ட நான் பேசவே மாட்டேன். இனி என்னோட எனிமி சரண் தான்." என்று ஆற்றாமையில் அனர்த்தினேன்.
"தப்புடா கண்ணா. உன் நேசத்தைப் புரிஞ்சிக்க முடியாத புவர் பாய். இனி அவனைப் பார்க்கும் போதெல்லாம் முகம் திருப்பாம சின்னதா சிநேகமான சிரிப்போட கடந்து போ அர்ஜூன். என்னைக்காவது ஒரு நாள் அவன் உதவினு உன்கிட்ட வந்தா... ஒரு வார்த்தையும் சொல்லாம செஞ்சு, உன் ஃப்ரெண்ட்ஷிப்புக்கு நீ கிரீடம் வை! அவன் அர்ஜூன்!" என்று கட்டை விரல் உயர்த்திய என் அப்பா!
என் மனதில் விழுந்த வன்மத்தைப் போக்கி, உண்மையான நட்பு தோற்காது என்பதை உணர்த்தியவர் என் அப்பா!!
என் பத்தொன்பதாம் வயதைக் கடக்கையில் பூத்தது காதல் பூ! மதுமிதா! ‘அழகி! பேரழகி!!’ என்றெல்லாம் மற்றவர்களால் கூற முடியாவிட்டாலும், எனக்கு பிரத்யேக அழகாகவே தெரிபவள்! என் மனதின் நட்டநடுவில் அமைந்துள்ள வெற்றிடத்தை உயிர் பிரவாகமாய் ஓடி வந்து ஆக்கிரமித்தவள்!
காதலித்தோம்! கண்களால் காதலித்தோம்!! விரல்கள் பின்னிக் கொள்ள கணநேரமும் இமைக்காமல் காதலித்தோம்!!!
எங்கு பிழையாகிப் போனதோ தெரியவில்லை. ஒருநாள் நம் பந்தத்தை முறித்துக் கொள்ளலாம் என்றாள். நண்பர்களாக இருப்பதில் தவறில்லை என்றாள். என்னால் எப்படி முடியும்? தோழியை காதலியாக நினைக்க முடிந்தவனால், காதலியைத் தோழியாக எண்ண முடியவில்லையே?
இனி வாழ்க்கையில் எதுவுமில்லை என்ற விரக்தியின் விளிம்பில் நின்றவன், மீண்டும் சிறுவனாகி தேடிச் சென்றேன், என் அப்பாவின் தோள்களை!
"அப்பா... மதுனு ஒரு பொண்ணு... ப்ரேக்கப்னு சொல்லிட்டாப்பா..." என்று சின்னக் குரலில் அப்பாவிடம் அரற்றினேன்.
"காதல் தோல்வியா? ஸீ அர்ஜூன்! லைஃப்ல நீ பார்க்க வேண்டிய தோல்விகள்ல இது வெறும் 0.001 பர்சண்ட் தான். வாழ்க்கை இன்னும் பல விஷயங்களை உனக்கு வலிக்க வலிக்க கத்துக்குடுக்க காத்துக்கிட்டு இருக்குது. ச்சியர் அப் மேன்! பொண்ணுங்க எப்பவும் பூஜிக்க பட வேண்டியவங்க அர்ஜூன். அந்த ஆராதனைக்கு உனக்கு இன்னும் நேரம் இருக்குது. கடந்து வா மை டியர் பாய்..." என்று தோளணைத்து இறுக்கி கொண்ட என் அப்பா!
என் மதுவை மறக்க நிச்சயம் திரவ மதுவை நாடி சென்றிருக்கும் நேரத்தில், என் அப்பாவின் வார்த்தைகளும், அணைப்புமே என்னை அவள் நினைவுகளிடமிருந்து மீட்டுத் தந்தது.
கல்லூரி மேற்படிப்பை முடித்து விட்டு, அப்பாவை ஓய்வெடுக்கச் செய்தவன் என் இருபத்து ஐந்தாம் வயதில் எங்கள் நிறுவனப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டிருந்த நேரம்! தொழிலில் நான் முதன்முதலாக சந்தித்த நஷ்டம் அது! அப்பாவின் உழைப்பை வீணாக்கிவிட்டோம் என்ற குற்ற உணர்வில் அப்பாவிடமே அடைக்கலமானேன்.
"அப்பா... சாரிப்பா... வன் லாக் (lac) பிஸினஸ்ல லூஸ் பண்ணிட்டேன்."
குனிந்திருந்த என் தலையை நிமிர்த்தியவர்
சிறு மென்னகையுடன், "நோ அர்ஜூன். தப்புல இருந்து தான் சரியான விஷயத்தைத் தெரிஞ்சிக்க முடியும். இன்னிக்கு நீ ஒரு புது விஷயத்தைக் கத்துக்கிட்டு இருந்திருக்கே! அதுக்கு நீ கொடுத்த விலை தான் அந்த ஒன் லாக்..! இனி நீ அந்த தப்பைச் செய்ய மாட்டே! எப்பவும் இழப்புகளிலிருந்து தான் அனுபவங்களையும், படிப்பினைகளையும் நாம பெற முடியும். சோ, டோண்ட் ஃபீல் மை பாய்!" என்று தட்டிக் கொடுத்து எனைத் தேற்றிய என் அப்பா!
ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்குள் இருந்த பொறாமை, கோபம், வன்மம், வலி, தோல்வி என அனைத்திலும் இருந்து என்னை விடுவித்து, அன்பையும் பண்பையும், ஊக்கத்தையும், வெற்றிக்கான உழைப்பையும் என்னுள் விதைத்தவர் என் அப்பா!
விரிந்த கடல் அளவில் தாயுமானவராய் என்னுள் நேர்மறை எண்ணங்களை விதைத்த என் அப்பா! என் அளப்பரிய நேசத்தை வாரி சுருட்டி நெஞ்சாங்கூட்டில் ஒளித்து வைத்திருக்கும் என் அப்பா! இன்று என் முப்பதாம் வயதில் என் இரண்டு வயது மகனோடும் சிந்துபாத், முல்லா கதைகளோடும் என் அப்பா!
✨🫶✨🫶✨🫶✨
அப்டேட்களை உடனுக்குடன் பெற கீழே scroll செய்து follow செய்யுங்கள்💝🎉
Comments
Post a Comment