சீதையின் பூக்காடு - 3

 

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 3

 

'சாப்பிட்ட பின் கற்பழிப்பாயா?' என்றதொரு அனர்த்த கேள்வியைத் தன்னிடம் குழந்தையாய் விழி விரித்து பயத்தோடு கேட்டு அமர்ந்திருந்தவளின் முன் மெதுவாக குனிந்தான் அவன். தன் காதலியை முத்தமிடப் போகும் காதலனைப் போல் கண்களில் நிரம்பித் ததும்பும் காதலோடு, அவளின் பயத்தில் மிதக்கும் கண்களைப் பார்த்து கேட்டான்.


"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?" 


"ம்ம்??"


"நான் ஐயராத்து பொண்ணுங்க மேல கை வைக்கறதில்லன்னு எங்க செத்து போன தாத்தாவுக்கு தாத்தாவோட தாத்தா மேல சத்தியம் பண்ணிருக்கேன்."


"ஹான்!?"


"ம்ம்! இதுவரை மீட் பண்ண எத்தனையோ வகை வகையான பொண்ணுங்களைப் பார்த்தாச்சு. ஆனா, இந்த 'ஏன்னா'னு அண்ணாவ கூப்பிடற மாதிரியான ஐயர் பொண்ணுங்கள மட்டும்… உவ்வே! புடிக்க்கவே இல்ல. அதுங்க கூட ஒரு நாள் கம்பெனி குடுக்கறதே வேஸ்ட் தெரியுமோ?"


ஆரவிக்கு பயம் போய் கோபம் வந்து மூக்கில் அமர்ந்து சிவக்கடித்து விட்டு, சற்றே மேலேறி அவள் விழிகளிலும் தன் செந்நிறத்தைப் பூசியது. இருப்பினும், அவனிடம் இதற்கு என்ன பதில் கூற என்று தெரியாமல் பல்லைக் கடித்து வந்த கோபத்தை அடக்கினாள்.


ஆமாமென்றாலும் இல்லையென்றாலும் தவறாகியே போகும். எனவே அமைதியாகவே அவனை முறைத்தாள்.


"சும்மா முறைக்காம வா! சாப்பிட ஏதாவது இருக்கானு பார்க்கலாம்."


"நாம என்ன இங்க பிக்னிக்கா வந்திருக்கோம்? எப்பேற்பட்ட இக்கட்டுல மாட்டிண்டு இருக்கோம்? இந்த நேரத்துல நோக்கு பசிக்கறதோ?"


"இந்த நேரத்துல நோக்கு அழுகை வரும் போது நேக்கு பசி வரக் கூடாதோ?"


"இதென்ன லாஜிக்?"


"இது தான் என்னோட லாஜிக்! வா, ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிருக்கறவன் சாப்பிட ஏதாவது வச்சிருக்கானா பார்ப்போம்."


இருவரும் அந்த திறப்பு பகுதி கொண்ட சமையலறைக்குள் நுழைந்தனர். சிறியதாக இருந்தாலும் ஓர் உயர்தர உணவு விடுதியின் உள் அலங்காரத்தைக் கொண்டிருந்த, சுத்தமான அந்த சமையலறை ஆரவியைக் கவர்ந்தது. இவள் ஒவ்வொரு கப்போர்டாக திறந்து பார்த்தாள். அவன் ஃப்ரிட்ஜிற்குள் தலையை நுழைத்தான்.


கப்போர்டில் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் இருந்தன. ஃப்ரிட்ஜில் முட்டை, சீஸ், பனீர், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள் என நான்கு நாட்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருந்தன. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


"சோ? நம்மள அடைச்சு வச்சிருக்கவாளுக்கு நம்மள பட்டினி போடற எண்ணமுமில்ல?"


"ஹ்ம்ம். அப்டி தான் போல! சரி நீ என்ன சாப்பிடற? பிரெட் ஆம்லெட்?"


"ஆம்லெட்டா?" என்று முகத்தைச் சுளித்தாள்.


"ஓ! நீ மடிசார் பார்ட்டில? அங்க ரவை இருக்குது பாரு. எடுத்து நம்ம தேசிய உணவான உப்புமா செஞ்சு சாப்பிடுமா." எனவும்,


"பார்ட்டி கீர்ட்டினு பேசுன… கொன்னுடுவேன்." அவனின் பெண்களைப் பற்றிய எண்ணங்களை நினைத்துக் கொண்டு ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்தாள்.


"என்னைக் கொன்னுட்டு தனியா இந்த வீட்ல இருக்கப் போறியா? அப்டியே நீ என்னைக் கொன்னாலும் நான் உன்னை அம்போனு விட்டுட்டு போய்ட மாட்டேன் பேபி மாமி. பேயா உன் பின்னாடியே சுத்தி வந்து உன்னைப் ப்ரொடக்ட் பண்ணுவேன். ஹாஹாஹா..."


"போறும். பேய் மாதிரியே சிரிக்காத. கருமம்! கருமம்!! நான் சமைச்சிண்டு போனதுக்கப்புறம் அந்த கண்றாவி முட்டைய உடைக்கலாமோல்லியோ?"


"மாமி! சாப்பிடற பொருள கண்றாவி, கருமம்னுலாம் சொல்லாத! அப்புறம் எப்டி என்னால சாப்ட முடியும்?"


"சரி சரி! சீக்கிரம்! நான் சமைக்கணும். நேக்கும் பசிக்கறது." என்றாள், எங்கோ பார்த்துக் கொண்டு!


அவளறியாமல் புன்னகைத்தவன் வம்பு செய்யாமல், "நான் வேணும்னா ஏதாவது செஞ்சு கொண்டு வரேன். நீ போய் ஹால்ல இரு!" எனவும்,


"நோக்கு சமைக்கத் தெரியுமோ?" எனக் கேட்டாள், ஆச்சரியமாக!


"வாட்!!! ஹாஹாஹா… வாட் அ ஸில்லி க்வஸ்டீன்!! ஹாஹாஹா.."


அமைதியாக உறுத்து விழித்தவள், "இப்ப வில்லன் சிரிப்பு சிரிக்கறளவு அப்டியென்ன ஸில்லியா கேட்டேனாம்?" என்றாள்.


"மாமி! இந்த கேள்விய நீ யாரப் பார்த்து கேட்ருக்கனு தெரியுமா? 'தி கிரேட் செஃப் விபுநந்தன்!'" என்று அணிந்திருந்த கேஷூவல் சட்டையின் காலரை உயர்த்திக் கூறினான்.


அவனின் கித்தாய்ப்பை கீரையென கிள்ளி தள்ளி விட்டு, "ஓ! பரோட்டா மாஸ்டரா?" என்றாள், அலட்சியமாக! சற்று முன் இவளை கற்பழிப்பு என்று கூறி கலவரப்படுத்தினானல்லவா? அதற்கு பழிவாங்குகிறாளாம்!


காதில் புகை வராத குறையாக உச்சக்கட்ட கோபத்தோடு விருட்டென அவளை நெருங்கி, "என்ன சொன்ன? பரோட்டா மாஸ்டரா? கனடா போய், கஷ்டப்பட்டு ரெண்டு வருஷம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிச்சிருக்கேன். ஒரே வார்த்தைல பரோட்டா மாஸ்டர்னு டேமேஜ் பண்ற? ஒழுங்கு மரியாதையா, செஃப் நந்தன் சார்னு கூப்பிடு!" என்று இரைந்தான்.


"உங்களுக்கு அது செஃப்பு! எங்களுக்கு பரோட்டா மாஸ்டர் தான்!" என்றாள் இவள் இன்னும் அசராமல்!


தஸ்ஸூ புஸ்ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு, தயாரான பிரெட் ஆம்லெட்டை தக்காளி கெட்ச்சப்புடன் தட்டில் வைத்து அவளை முறைத்துக்கொண்டே வெளியேறினான். 


அவன் போவதை இதழ்கள் மடக்கி சிரிப்புடன் பார்த்தவள் அவன் சொன்னதைப் போல் உப்புமாவே செய்தாள். வேறு வழி? பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. 


சமைத்ததை எடுத்துப் போன போது, அவன் சமையலறையை ஒட்டியிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். இவளும் அவனைப் பார்த்தபடி ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். நந்தன் அவளை நிமிர்ந்தும் பாராமல் உணவிலேயே கவனமாக இருந்தான்.


ஏதாவது பேச மாட்டானா என்று ஒரு வாய் சாப்பிடுவதும், அவன் முகத்தைப் பார்ப்பதுமாக இருந்தாள். இவ்வளவு நேரம் தன்னிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தவனின் இந்த அமைதி ஆரவியை இம்சித்தது. அதை விட, அத்தனைப் பெரிய பங்களாவில் அந்த நிசப்தம் அமானுஷ்யமாகத் தோன்றியது.


தேவையில்லாமல் வெறுப்பேற்றிவிட்டோம் என தன்னையே நொந்து கொண்டாள். அவன் வேலையை கிண்டலடித்தது தான் கோபம் போலும்! தவறு தன் மேல் தானென புரிந்துகொண்டு, தானே முதலில் பேசுவோமென வாய் திறந்தாள்.


ஆனால் அதற்குள் உண்டு முடித்திருந்தவன் பட்டென எழுந்து கிச்சனுள் சென்றுவிட்டான். 'போனால் போயேன்!' என்பது போல் உதட்டைச் சுளித்து விட்டு இவளும் சாப்பிட்டு முடித்து எழுந்தாள். சமையலறை சிங்க்கில் தட்டை வைக்கப் போனவள் மெச்சுதலாய் பார்த்தாள். சமைத்த சுவடு தெரியாமல் அடுப்பு மேடையை பளிச்சென துடைத்து வைத்திருந்தான். 


அதைப் பார்த்து இவளும் இவள் சமைத்த பாத்திரம், சாப்பிட்ட தட்டு என அனைத்தையும் கழுவி வைத்துவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தாள். வந்தவள் விதிர்த்து போய் சுற்றி சுற்றி பார்த்தாள்.


'எங்கே போய்விட்டான் இவன்?'


மின்சாரம் இன்னும் வராத காரணத்தாலும், நான்கு விளக்குகளிலிருந்து மட்டும் கசிந்த ஒளியாலும் அவ்வளவு பெரிய ஹாலில் இருந்த நான்கு  தூண்களின் நிழல்களும் ஆரவியை மிரட்டியது. அதை ஏதோ நான்கு ராட்சத மனிதர்கள் நிற்பதைப் போல் உருவகித்து கொண்டு கலங்கினாள் பெண். திறந்திருந்த பெரிய பெரிய ஜன்னல்களின் ஊடாக வந்த மழைக்காற்றின் தாள லயத்திற்கேற்ப, திரைச்சீலைகள் தங்களின் இடையை வளைத்துக் கொண்டிருந்தன. 


காற்றின் சப்தம் நிற்கும் பொழுது இவளின் மூச்சுக்காற்றே கடலலையின் பேரிரைச்சலாய் தோன்றியது. இவள் சிறுபிள்ளைத்தனமாக இடி சத்தத்திற்கெல்லாம் பயம் கொள்வதில்லை தான். எனினும், இப்போது இந்த தனிமையில் இடி சப்தம் கூட நெஞ்சில் திடுமென ஓர் அதிர்வை ஏற்படுத்திவிட்டு சென்றது. 


பயத்தில் எச்சிலை விழுங்கிய தொண்டைக் குழி ஏறி இறங்கியது. யாருமற்ற அந்த இடத்தில் தலையைக் கூட திருப்பிப் பார்க்க பயந்து விழிகளை மட்டும் சுழற்றினாள்.   அவனைக் காணாமல் மீண்டும் கண்ணீர் 'எட்டிப் பார்க்கட்டுமா?' எனக் கேட்டது.


'ச்ச! அழக்கூடாது. அவனுக்கு தெரிந்தால் பேபி என்றழைத்து தொலைவான்!' என நினைத்தாலும் கண்ணீர் கட்டுப்பட மறுத்தது.


திடுமென அந்த நிசப்தத்தை கூறு போடும் விதமாய், "பேபி மாமி!" என்ற குரல் கேட்டு தூக்கி வாரி போட திரும்பினாள்.


அவன் தான் மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான். "என்னாச்சு மாமி? பயந்துட்டியா?"


"எங்க போயிருந்த நீ?" அவனைப் பார்த்த நிம்மதியில் இதுவரை அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் 'போய் வருகிறேன்' என விடைபெற்று, அவளின் குலாப் ஜாமூன் கன்னத்தை முத்தமிட்டு காய்ந்து ஓய்ந்தது.


"மாடிக்கு போயிருந்தேன். சாப்ட்டாச்சு. தூங்க வேணாம்? அதான் மாடில இருக்க ரூம் எல்லாம் பார்த்துட்டு வர்றேன். மேல நாலு ரூம் இருக்குது. நான் ஒரு ரூம் எடுத்துக்கறேன். நீ ஒரு ரூம் எடுத்துக்கோ. வா!" என அவளைக் கண்டுகொள்ளாமல் அவன் பாட்டுக்கும் குழல் விளக்குகளை நிறுத்தி, விடிவிளக்குகளை எரியவிட்டான். 


பின் என்ன நினைத்தானோ! மீண்டும் ஒரு முறை சென்று வீட்டின் கதவைத் தட்டிப் பார்த்தான். யாரும் வரக் காணோம். முதலில் இந்த இடி சத்தத்தில் இவன் தட்டுவது வெளியே யாருக்கும் கேட்காது. 


ஏமாற்றமாய் திரும்பியவன், "வா தூங்க போகலாம்." என்று விட்டு மேலேற, இவனால் எப்படி இவ்வளவு இலகுவாக இருக்க முடிகிறது என இமைக்காமல் பார்த்திருந்தாள் ஆரவி. 


"கண்ணாலயே என்னைக் கற்பழிச்சது போதும். சீக்கிரம் வா!"


"கருமம்! எப்பவும் இதே பேச்சு தான் பேசுவியா?"


"ஹாஹா.. மேட் அப் அப்டி!"


பேசியவாறே இருவரும் மாடிக்கு வந்தனர். அப்போது வழி தேடும் போது பார்த்தது தான்! பதட்டத்தில் அத்தனை உன்னிப்பாக கவனிக்கவில்லை. இப்போது நன்றாக சுற்றிப் பார்த்தாள். 


'ப' வடிவில் இருந்த முதல் தளத்தில் இடது - வலது என வீட்டின் முகப்பில் இரண்டு அறைகளும், பின்புறம் இரண்டு அறைகளும் இருந்தன. 


பின்புற அறைகளுக்கு இடையே ஊஞ்சலோடு கூடிய பால்கனி அழகாய் அமைந்திருந்தது. பால்கனியில் கைப்பிடிச் சுவரில்லாமல் முழுவதுமாய் க்ரில் கம்பிகளால் மூடியிருந்தனர். இல்லையெனில் அங்கிருந்தாவது தப்பிச் செல்ல வழி தேடலாம்.


"இந்த ரூம்ல இருந்துக்கறியா?" அவன் கை காண்பித்த, பால்கனியை ஒட்டிய இடப்புற அறையைப் பார்த்துவிட்டு சரியென தலையாட்டினாள்.


"ஓகே மாமி! நான் அந்த ரூம் எடுத்துக்கறேன். குட் நைட். ஸ்லீப் டைட்." என்று விட்டு அவன் வலதுபுறம் இருந்த அறைக்குள் நுழைந்துகொண்டான்.


அவன் இரவு வணக்கம் கூறி சென்றதும், அறைக்குள் நுழைந்தவள் பிரமித்து நின்றுவிட்டாள். இவ்வீட்டைப் பார்த்தாலே தெரிந்தது, அந்த கால ராஜாக்களின் மாளிகை போன்றது என்பது! அதில் பழமை மாறாமல் சிற்சில புதுமைகளை செய்திருந்தனர்.


இருந்தாலும் அறையில் இத்தனை பிரம்மாண்டத்தை ஆரவி எதிர்பார்க்கவில்லை. வட்ட வடிவ பெரிய கட்டில், அதில் உள்ள உயர்ரக மெத்தை, ஒருபுறம் முழுவதும் சுவற்றை அடைத்துக் கொண்டு நின்ற வார்ட்ரோப், அந்த கால மரத்தாலான அலங்கார பொருட்கள், அதிலுள்ள வேலைப்பாடுகள், ஓர்‌ மூலையில் ஜிக் ஜாக் வடிவிலிருந்த புத்தக அடுக்கு மற்றும் கண்ணாடியிலான டீபாய், அதன் மேல் விரித்திருந்த வெல்வெட் துணி என பழமையும், புதுமையுமாய் பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது அவ்வறை!


இத்தனை இருந்தும் ஒரு அலைபேசிக்கு உணவூட்டும் சார்ஜர் இல்லை என்பது தான் பரிதாபம்! அது சரி, வெளியுலகத் தொடர்பில்லாமல் இருக்க வேண்டும் என்று தானே அடைத்து வைத்திருக்கிறார்கள்?!


மெதுவாக சென்று வார்ட்ரோப்பை திறந்தாள். உள்ளே ஓர் பேரங்காடி பையைத் தவிர மற்ற இடங்கள் வெறுமையாக இருந்தன. அடுக்குகளின் ஓரங்களில் பூச்சிகள் வராமல் இருப்பதற்கான நாப்தலீன் உருண்டைகள். பையை எடுத்தாள். ஐந்து செட் உடைகளும், அதற்கேற்ற அணிகலன்களும் இருந்தன. அணிகலன்கள் சற்றே நிறம் மங்கித் தெரிந்தது.


ஒரு உடுப்பை மட்டும் எடுத்து பார்த்தாள். விரித்ததும் உள்ளேயிருந்த ஏதோ ஓர் வாசனை திரவிய பாக்கெட் கீழே விழுந்தது. அந்த உடை ஆரவியின் உடல்வாகிற்கு சிறிது பொருத்தமில்லாமல் தெரிந்தது.  


புத்தக அடுக்கைப் பார்வையிட, அங்கிருந்த அத்தனையும் தமிழ் மாத நாவல்கள்! 'நமக்கு நாவல் பிடிக்கும்னு தான் இப்டி வாங்கி வச்சிருக்காளோ?' என யோசித்தாள்.


ஆரவி தனித்து செயல்படும் தைரியமான பெண் தான் என்றாலும், இன்று ஏனோ மனம் பயத்தில் தடுமாறிக்கொண்டே இருக்கின்றது. இங்கு அனைத்தும் ஆச்சரியமூட்டும் வகையில் இருந்தாலும் பெண்ணவளின் மனதில் அச்சமே மேலோங்கியிருந்தது. யோசித்தபடி கட்டிலில் வந்து அமர்ந்தாள்.


யார் இங்கே தன்னை அழைத்திருக்கக் கூடும்? அப்படி அழைத்ததன் நோக்கம் தான் என்ன? தன்னிடம் எடுத்துக்கொள்வதற்கு அப்படி ஒன்றும் விலையுயர்ந்த நகைகளும் அணிந்திருக்கவில்லை. தவறான எண்ணத்திற்கு பயன்படுத்த நினைத்திருந்தால் இவனையும் எதற்கு பிடித்து வைத்திருக்கிறார்கள்?


இவனும் விளையாட்டாக பேசினாலும் கண்களை விட்டு அகலாத இவன் பார்வையில் கண்ணியமே தெரிகிறது. எனவே, இவனை சந்தேகிக்கவும் வழியில்லை. 


பிடித்து வைத்திருக்கிறவன் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வைத்திருப்பதன் காரணம் தான் என்ன? தன்னைப் பிடித்து வைத்து தன் பெற்றோர்களிடம் பணம் கறக்கும் எண்ணமென்றாலும், அது இவள் அன்னை, தந்தையிடம் பேசும் போதே தெரிந்திருக்கும். அது மட்டுமல்லாமல் இத்தனை பெரிய பங்களாவின் சொந்தக்காரன் மிடில் க்ளாஸ் வரிசையில் இருக்கும் தன் பெற்றோரிடம் என்னத்தை எதிர்பார்த்து விட முடியும்?


விடையறியா கேள்விகளுடன், ஆளை அமிழ்த்தும் அந்த உயர்ரக மெத்தையில் சுத்தமாய்த் தூக்கம் வராமல் யோசித்துக் கொண்டிருந்த ஆரவி அதிகாலை மூன்று மணி அளவில் கண்ணயர்ந்தாள்.

பூக்கும்🌻🌺 

Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)