சீதையின் பூக்காடு - 4.1

 

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 4.1


சனிக்கிழமை!


காலையில் ஆரவி நல்ல உறக்கத்தில் இருந்தாள். திடுமென ஏதோ சப்தம்! மிகச் சன்னமான ஒலி இவளுக்கு கேட்கிறது. ஆனால் துயில் கலையவில்லை. 


சிறிது நேரத்தில் சற்று கூடுதல் ஒலி எழும்பியது. 


'டம்! டம்!! டம்!!!'


சத்தத்தில் புரண்டு படுத்து அருகிலிருந்த குஷனை இன்னும் இறுகக் கட்டிக் கொண்டாள். 


'அதற்குள் விடிய வேண்டுமா?

இந்த விழியக் கலவி முடியக் கூடுமா?'

என்கின்றன இமைகள்!


இப்போது உன் துயிலைக் கலைத்தே தீருவேன் என்பது போல் சப்தம் இன்னும் பெரிதாகியது. 

வேறு வழியில்லாமல் தேவி விழியும் மலர்ந்தது.


ஆரவி எழுந்ததும் நேரம் பார்த்தாள். காலை எட்டு மணி ஆகியிருந்தது. எப்போதும் வீட்டில் அதிகாலையிலேயே எழுந்து பழகியிருந்தவள் இன்று இத்தனை நேரம் தூங்கியதை நினைத்து பதட்டமானாள்.


எழுந்தமர்ந்து இரண்டு நிமிடங்களுக்கு பின் தான் சூழ்நிலை உறைத்தது. தன் நிலையை எண்ணி கழிவிரக்கத்தில் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்.


மீண்டும் டம்டம்மென்ற சப்தம்! 'என்ன சத்தமிது? தங்களைப் பிடித்து வைத்திருப்பவன் வந்து விட்டானோ? அய்யோ! அவன்?'


விபுநந்தனிற்கு ஏதேனும் ஆபத்து வந்து விட்டதோ என்னவோ என்றெண்ணி எழுந்து ஓடினாள். வலப்புற படிக்கட்டுகளின் வழி இறங்க இறங்கவே தான் தெரிந்தது, விபுநந்தன் ஒரு பெரிய திருப்புளியையும் சுத்தியலையும் கொண்டு கதவின் பூட்டை உடைக்க முயற்சித்துக் கொண்டிருப்பது! எவ்வளவு நேரம் முயற்சிக்கிறானோ தெரியவில்லை. இப்படி வியர்த்து வழிந்து கொண்டிருக்கிறான்!


முயற்சி தோல்வியில் முடிந்ததைப் போல் இல்லையென தலையாட்டிவிட்டு திரும்ப, ஆரவி படிக்கட்டில் நிற்பது தெரிந்தது. பார்த்ததும் இரு கைகளையும் விரித்து முடியவில்லை என தோள்களை குலுக்கிவிட்டுச் சென்றான்.


இவளும் பெருமூச்சோடு மீண்டும் அறைக்கு வந்து குளித்து முடித்து, வார்ட்ரோப்பில் இருந்த ஒரு பூப்போட்ட பாலசோவும் வெள்ளை நிற ப்ளெய்ன் டாப்பும் அணிந்துகொண்டாள். மேலுடை சற்று இறுக்கமாக தோன்றவும், மேலே சம்பந்தமே இல்லாத நிறத்திலிருந்த ஒரு துப்பட்டாவைப் போட்டுக்கொண்டு கீழிறங்கினாள்.


சமையலறையில் எதையோ உருட்டிக்கொண்டிருந்தான் ஆரவியின் பரோட்டா மாஸ்டர்! இல்லை இல்லை. அப்படி சொன்னால் நம் ஹீரோவிற்கு மிகவும் கோபம் வரும். செஃப் விபுநந்தன் மிகவும் மும்முரமாக ஏதோ சமைத்துக்கொண்டிருக்கிறார். அவனும் அதற்குள் குளித்து வந்துவிட்டான் போலும்!


ஆரவி சற்று நேரம் ஜன்னலருகே நின்று பார்த்தாள். இரவெல்லாம் பெய்திருந்த மழை ஓய்ந்திருந்தது. ஹால் முழுவதும் சூரிய ஒளியை வெள்ளமென இறைத்திருந்த ஜன்னல்கள், இரவில் உன்னை பயமுறுத்தியது சத்தியமாக நாங்களில்லை என்பது போல் அத்தனை அழகாகக் காட்சியளித்தது.


பின் விபுநந்தன் சமையலறைக்குள் இருப்பதை உணர்ந்து அங்கே சென்றாள். அவள் ஜன்னலருகே நின்றிருந்ததை கிச்சன் திறப்பு வழியேப் பார்த்தவனின் பார்வையை அறிந்திருந்தால் அத்தனை நிர்மலமான முகத்துடன் நிதானமாக வந்திருக்க மாட்டாள் என்பது திண்ணம்!


சமையலறையில் அவன் சமையலுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தான். நேற்றிரவைப் போலவே இப்போதும், எப்படி இவனால் இந்த சூழ்நிலையில் இத்தனை இலகுவாக பொருந்தி இருக்கமுடிகிறது என வியந்தாள். அதையே கேட்கவும் செய்தாள்.


"எப்டி உன்னால இங்க இப்டி இருக்க முடியறது?"


"இப்டினா எப்டி?"


"நம்மள இந்தாத்துல யாரோ தனியா போட்டு வச்சிருக்காளே? நீ என்னடான்னா விருந்து சமைக்கற மாதிரி கேஷூவலா ரெடியாயிண்டு இருக்க?"


"ஈஸி மாமி! பிடிச்சு வச்சிருக்கவன் அடுத்து வந்ததும் நம்மள வெளில விடப் போறானோ… இல்ல போட்டுத் தள்ளப் போறானோ! யாருக்கு தெரியும்? இருக்கற இந்த நிமிஷத்துல சந்தோஷமா இருந்துட்டு போவோமே?"


"என்ன? கொன்னுடுவாளா?!" அவளின் அச்சம் பரவிய விழிகளைப் பார்த்து தன்னையே தலையில் கொட்டிக் கொண்டான் அவன். 


"ச்சச்ச! நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன் பேபி மாமி. கொல்றவனா இருந்தா இப்டி சாப்பிட தந்து பிடிச்சு வச்சிருக்கமாட்டான். அப்டியே வந்தாலும் என் மேல கை வைக்க எவனுக்கு தைரியம் இருக்குது? என் கூட இருக்க உன் மேல தான் கை வைக்க விட்டுடுவேனா?"


இப்போது பயம் போய் அவனை 'ஆமா நீ பெரிய இவன்!' எனும் பார்வைப் பார்த்துக்கொண்டே, "சரி! என்ன பண்ணிண்டு இருக்க?" எனக் கேட்க,


அவளின் நக்கல் பார்வையில் கடுப்பாகி, "ம்ம்ம்… நீ கொட்டிக்கறதுக்கு மார்னிங் டிஃபன்." என்றான்.


"நீ ஒண்ணும் எனக்காக அவ்ளோ சிரமப்பட்டுக்க வேணாம். நேக்கு நானே சமைச்சுப்பேன்."


"எப்டி? நேத்து செஞ்ச மாதிரி உப்புமாவா?"


"நான் என்னவோ செஞ்சிண்டு போறேன். நோக்கு என்னவாம்?"


"நேக்கு எதுவுமில்ல மாமி. நீதான் ஒரு நல்ல சாப்பாட மிஸ் பண்ணுவ. அண்ட் மோர்ஓவர், நம்மள இங்க அடைச்சு வச்சிருக்கவன் எத்தன நாள் வச்சிருப்பான்னு தெரியல. சோ, இருக்கற பொருள் வச்சு ரெண்டு பேரும் தனிதனியா சமைச்சா சீக்கிரம் காலியாகிடும். டிட் யூ காட் தட்?"


அவன் சொல்வதும் சரியாகவே பட்டது. இருப்பினும், "நீதான் நேக்கும் சேர்த்து சமைக்க அலுத்துக்கறியே? அதோட நீ செய்ற நான்-வெஜ் ஃபுட்ஸ நான் எப்டி சாப்பிடறதாம்?" என்றாள்.


"நீ கவலையேப் பட வேணாம் மாமி. நான், வெஜிடேரியன் சமையலும் நன்னாவே சமைப்பேன்."


"சரி! இப்ப என்ன செய்ற?" என்று அவன் சமைக்கும் பாத்திரத்தை எட்டிப் பார்க்க,


"இது ஒரு இட்டாலியன் டிஷ். ப்ரேக்ஃபாஸ்ட்'க்கு சாப்பிட்டா உடம்புக்கு ரொம்ப நல்லது. ப்ரோகோலி, வெண்ணெய், பால், கொஞ்சம் பெப்பர், அப்புறம் ஓரிகனோ சேர்த்து செய்யணும். இதோ ரெடியாகிடுச்சு. சாப்பிட்டு பாரேன்." என்று சிறு முள் கரண்டி ஒன்றில் எடுத்துக் கொடுக்க, வாங்கி சாப்பிட்டவள் குமட்டுவதைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு வாஷ்பேசினை நோக்கி ஓடினாள்.


நம் செஃப்பிற்கு செவசெவ என முகம் சிவந்து போனது. உர்ர்!!! 


முகத்தைக் கழுவி விட்டு வந்தவள் கடுகடுத்த முகத்துடன் நின்றிருந்தவனிடம், "என்ன கண்றாவி டிஷ் இது? வாய்ல வைக்க முடியல. நீயெல்லாம் என்ன சமையல்காரன்? நேக்கு இந்த வெண்ணெயும், பாலுமா சேர்ந்து குமட்டிடுத்து!" இன்னும் அதன் கேவலமான(?) ருசி தொண்டையிலிருந்து போகாததைப் போலவே நாக்கை சிறிது வெளியே நீட்டிப் பேசினாள்.


"தயிர்சாதத்துக்கு தெரியுமா பிரியாணி வாசனை? தயிர் சாதம், தயிர் சாதம்! சரியான தயிர் சாதம்! தினமும் புளிச்சோத்தை கட்டி அடிக்கற உனக்கு போய் நல்லதா செஞ்சு குடுத்தேன் பாரு… என்னை சொல்லணும்." என்று ஒரு மூச்சு கத்தித் தீர்த்தான், செஃப் விபுநந்தன்.


"நேக்கு ஒண்ணும் நீ சமைக்க வேணாம். ரசம் சாதம்னாலும் நானே செஞ்சுக்கறேன்." என்று சிலுப்பிக்கொண்டாள் இவள்.


"முன்னாடியாவது பரவால்ல. ஆனா நான் செஞ்சத சாப்பிட்டு வாமிட் பண்ணி, என்னை அசிங்கப்படுத்துனதுக்கு இனி இங்க இருக்கற வரை நான் சமைக்கறதை தான் நீ சாப்பிடணும். இதுவே என் கட்டளை! இதுவே என் சாசனம்!!" என்று விட்டு மீண்டும் சமையலறை சென்று வேறு ஏதோ செய்ய ஆரம்பித்தான்.


பின்னாலேயே சென்றவள், "ஹய்யய்யோ மீனாட்சி! போன வாரம் கோதை மாமி செஞ்ச நைவேத்தியத்தை பூஜை முடியற முன்ன எடுத்து சாப்பிட்டதுக்கு தான் இப்ப என்னை இப்டி பழிவாங்கறியா?" என்று சுந்தரேஸ்வரனின் பாதியிடம் புலம்பினாள்.


அவன், "சரியான சோத்து சட்டி போல! அம்மனுக்கு வச்சதை ஆட்டையப் போட்டு தின்னுருக்குது." என்று அவள் காதில் விழாதவாறு முணுமுணுத்தான்.


இப்போது அவன் செய்யும் பதார்த்தத்தைப் பார்த்து விட்டு, "வாவ்! நெய்யப்பமா (இனிப்பு குழிப்பணியாரம்) செய்ற? இதையாவது நம்பி சாப்பிடலாமோன்னோ?" என்று கேட்டவள் அவன் முறைக்கவும், "ஹிஹி… நேக்கு ரொம்ப இஷ்டம். ஆமா... மாவு எப்ப ரெடி பண்ணின?" என்று பேச்சை மாற்றினாள்.


"எர்லி மார்னிங்! அரிசி, பருப்பை அரைமணி நேரம் ஊற வச்சு, மிக்ஸில அரைச்சு எடுத்தாச்சு. வெல்லப்பாகு, ஏலக்காய் தட்டிப் போட்டா பேட்டர் (batter) ரெடி!"


"சரி! செஞ்சதைக் குடு. நான் எடுத்துட்டுப் போறேன்."


"மாமி! டைனிங் டேபிள் வேணாம். மாடி பால்கனிக்கு கொண்டு போ! காலைல எழுந்ததும் கொஞ்ச நேரம் அங்க நின்னுட்டு இருந்தேன். இட்'ஸ் அ ஃபென்ட்டாஸ்டிக் சீனாரியோ! அப்பவே இன்னிக்கு அங்கே தான் ப்ரேக் ஃபாஸ்ட்னு முடிவு பண்ணிட்டேன்."


"சரி." என்று மேலே பால்கனியில் சென்று அங்கிருந்த ஊஞ்சலில் கையிலிருந்த தட்டையும், தண்ணீர் ஜாடியையும் வைத்துவிட்டு க்ரில் கம்பிகளைப் பற்றியபடி வெளியே வேடிக்கை பார்த்தாள்.


பின்னேயே மற்றொரு தட்டுடன் வந்தவன் மாடியின் கடைசிப் படியில் நின்று கொண்டு, அந்த புறம் வேடிக்கைப் பார்ப்பவளை பார்த்தான். அந்த வெள்ளை நிற டாப்பில் டிடர்ஜெண்ட் விளம்பர மாடலைப் போல் பளிச்சென தெரிந்தாள். இடை வரை இருந்த கூந்தலை அள்ளிக் கொண்டையாக்கி க்ளட்ச் க்ளிப்பிற்குள் அடக்கியிருந்தாள்.


நெற்றியில் இருந்து இரு பக்கங்களிலும் வழிந்த கற்றை முடிகளை அலட்சியம் செய்திருந்தாள். காதில் அணிந்திருந்த சற்றே பெரிய ஸ்டட் காலை கதிரொளி பட்டு மின்னுவது பக்கவாட்டில் தெரிந்தது. இன்னும் அருகே செல்ல அவள் நாசியில் அமரிக்கையாய் அமர்ந்திருந்த ஒற்றை வைரக்கல் மூக்குத்தி, 'எனக்கு வந்த வாழ்வை வயிறெரியாமல் பாரப்பா!' என அவனை அற்பமாய் பார்த்தது.


To be continued in next post...

Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)