Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு - 4.2

சீதையின் பூக்காடு

 



அத்தியாயம் 4.2


ரவி வர்மாவின் தூரிகை பிரசவித்த ஓவியத்தை கேமிரா கண்வழி ரசிப்பவன் போல் அவளைப் பார்த்திருந்தவன், "சூப்பர்ல மாமி?" எனக் கேட்டவாறே சென்று ஊஞ்சலில் அமர்ந்து, பலகாரத்தில் ஒன்றை எடுத்து வாயில் திணித்துக்கொண்டான்.


வேடிக்கையில் இருந்து கலைந்த அவளும் அவனருகே அமர்ந்து சாப்பிட்டவாறே பேசினாள். "ம்ம்! நானும் கீழ ஜன்னல் வழியா பார்த்தேன். பச்சைபசேல்னு ரொம்ப அழகா இருக்கறது இந்த இடம்! வெளில போய் தனியா தூரம் தூரமா நடக்கணும்னு ஆசையா இருக்கறது."


அவள் சொன்னதைக் கேட்டதும் இவன் விழிகளில் இன்னுமாய் ரசனையேறியது. "கூடவே மெலடி சாங்ஸ்."


"ம்ம்! கொஞ்சமா மழைத்தூறல்!" 


"ஸ்ஸ்ஸ்!! வாவ்!!"


"அப்டியே பட்டாம்பூச்சி கூட்டத்தோட சின்ன சின்ன பேச்சுவார்த்தை!"


"பேர் தெரியாத காட்டுப் பூவுக்கும், கண்ல படற பட்டுப்பூச்சிக்கும் குட்டிக் குட்டி கிஸ்ஸஸ்!"


"பேர் தெரிஞ்ச, தெரியாத பறவைங்களுக்கு ஒரு ஹாய்!" 


"அதிகாலை பனிய மூச்சு வாங்க சுமந்து நிற்கற இலைகளுக்கு ஒரு ஹலோ!"


"கார்த்திகை மழைலயும், மார்கழி பனிலயும் குளிச்சு ஃப்ரெஷ்ஷா இருக்க மரங்களுக்கு ஒரு ஹக்!" 


"அந்த மரத்தை சுத்தி வளைச்சு, படர்ந்திருக்கற பூங்கொடிகளை மொத்தமா ஒரு க்ளிக்!" 


"என் துப்பட்டாவை திருட வந்து, கிச்சுகிச்சு காட்டுற சுத்தமானக் காற்றுக்கு ஒரு 'லவ் யூ'!"


"பாதம் பதிச்சு வலிக்க வச்சிட்டேன்னு… படர்ந்து கிடக்கற குட்டி செடிகளுக்கு ஒரு ஸாரி!"


"தூரமா, தூரமா இன்னும் தூஊ...ரமான நடைப்பயணம்!" என்றவாறே ஒரு துள்ளலோடு எழுந்து சென்று க்ரில் கம்பியைப் பற்றிக்கொண்டு பரவசமாக பேசினாள்.


"கூடவே நானும்!" தன்னையுமறியாமல் ஒருவித லயிப்புடன் சொன்னான் விபுநந்தன்.


"நீயா?" என்றவள் அலட்சிய பாவனையோடு, "நான் தனியா நடக்கணும்னு சொன்னேன்" என்றாள்.


"பேபி மாமி! காட்டுல இப்ப நாம சொன்ன விஷயங்கள் மட்டும் இருக்காது. இன்னும் விதவிதமான விஷப் பூச்சிங்க, தவளை, பாம்பு, ஓணான்னு…"


"போறும்! போறும்!! நன்னா ரசனையா பேசிண்டு இருக்கச்ச ஏன் என்னென்ன கண்றாவி எழவுகளையோ ஞாபகப்படுத்தற? டிஸ்கஸ்ட்டிங்!" என்றாள், முகத்தைக் கோணலாக்கி!


"கண்றாவி இல்ல மாமி! அதுவும் மத்ததைப் போல ஜீவன்கள் தான். இதெல்லாமும் இருக்கும். அதையெல்லாம் தாண்டி காட்டை ரசிக்கணும்னா உனக்கு என் தயவு வேணும்னு சொல்ல வந்தேன்."


"ப்ச்! நான் ஒண்ணும் உன்னை டிப்பெண்ட் பண்ணி இல்ல." என்று அலட்சியத் தோள் குலுக்கலோடு அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.


'ம்க்கும்! நேத்து அஞ்சு நிமிஷம் காணும்னதும் பஞ்சு மிட்டாய தொலைச்ச பப்பா மாதிரி மூஞ்சிய வச்சிக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தா…' என்று மனதில் மட்டும் நினைத்தான்.


வெளியே, "சரி! புதுசா மீட் பண்ணிருக்கோம். நாம இன்னும் ப்ராப்பரா இன்ட்ரடியூஸ் ஆகவேயில்லயே…" என்று கைகளை, எடுத்து வந்திருந்த டிஷ்யூவில் நன்றாக துடைத்து விட்டு, "ஹாய்! ஐ'ம் செஃப் விபுநந்தன். ப்ளஸண்ட் டூ மீட் யூ!" எனக் கைகுலுக்க வலது கையை அவள் புறம் நீட்டினான்.


மென்னகையோடு, "விபுநந்தன்?" என முகம் இறக்கிக் கேட்டவள், "உன் பேர் நன்னா பாந்தமா இருக்கறது." என்றாள்.


அவனும் இதழில் நெளிந்த புன்னகையுடன் நெற்றி சுருங்க, புருவங்களை ஏற்றி இறக்கி, தான் நீட்டியிருந்த கையைப் பார்த்துவிட்டு அவள் கண்களைப் பார்த்தான். அவள் இன்னும் அறிமுகமாகி கைகுலுக்கவில்லையாம்!


ஆரவி ஒரு விநாடி அவன் விழிகளிலும் நெற்றியிலும் புருவங்களிலும் வந்து போன பாவனையில் வழுக்கிய மனதை இழுத்துப் பிடித்தாள்.


"ஆரவி! அ நாவலிஸ்ட்." என்று அவன் கையைப் பற்றி குலுக்க,


குலுக்கிய வேகத்தில் அவள் கையை உதறியவன் கால்கள் இரண்டையும் ஊஞ்சல் மேல் வைத்துக்கொண்டு, "என்னது ஆவியா? இப்டியொரு பேரா? எங்க உன் காலைக் காட்டு பார்ப்போம். கால் இல்லாதது தெரியக்கூடாதுனு தான் இப்டி 'தொளதொள' பேண்ட் போட்ருக்கியா?" என்று அநியாயத்திற்கு பயந்தவனாய் அவள் பாலசோவைப் பார்த்து விழிகளை விரித்தான்.


"கடங்காரா! அது ஆவி இல்ல! ஆரவி! சூரியனோட முதல் கதிர்னு அர்த்தம்." என்றாள், கோபத்தில் நெஞ்சம் ஏறி இறங்க!


"நெசமாவா?"


"ஏய்!"


"பட், ரியலி இட்'ஸ் அ டெரிஃபிக் நேம்!"


அவள் பத்ரகாளியாகி முறைத்ததும், "ஓகே! ஓகே! ஆரவி தான? இங்க பாரு ஆரவி... எப்பவும் நான் பொய் பேசறதேயில்ல. இன்னிக்கு உனக்காக ஒரே ஒரு பொய் மட்டும் சொல்லிக்கறேன். உன்னை மாதிரியே உன் பேரும் நல்லா அழகா இருக்குது ஆரவி." எனவும்,


அழகில்லையென தன்னை சொல்கிறானா? அல்லது தன் பெயரையா எனக் குழம்பினாள் பெண்.


"சரி! நாவலிஸ்ட்னா எப்டி? மேகஸின்க்கு எழுதுறியா?"


"ஆன்லைன்ல நாவல் எழுதுவேன்."


"வாவ்! இதுவரை எத்தனைக் கதை எழுதிருக்க? புக் எதுவும் போட்டிருக்கியா?" வார்த்தை தான் 'வாவ்!' என்றது.‌ முகம் அசுவாரஸ்யமாய் இருந்தது.


"ம்ம்! ஆறு நாவல் எழுதிருக்கேன். அதுல நாலு புக் ஆகிருக்குது. ஷார்ட் ஸ்டோரீஸ் கூட எழுதிருக்கேன்."


"ஓ! சூப்பர் சூப்பர்!!"


"நீ என்ன பண்ற? எந்த ஹோட்டல்லயும் வொர்க் பண்றியா?"


அவன் வேலையைப் பற்றி குறை கூறினால் தன்னிடம் முகம் திருப்பக் கூடுமென மிக கவனமாகக் கேள்வியைக் கேட்டாள். ஏனோ நேற்றைய அவனின் பாராமுகம் ஆரவிக்கு பிடித்தமில்லாததாய் இருந்தது. அது ஏனென்று பெரிதாக ஆராய விழையவில்லை அவள்.


"ஆமா! ஹோட்டல் ஹெவன் இன் கேள்விப்பட்டிருக்கியா?"


அவன் சொன்னதும் பிரமிப்பாக கண்களை விரித்தாள் இவள். சிட்டியிலுள்ள முதன்மை தர ஐந்து நட்சத்திர உணவு விடுதி அது! அவர்களின் கிளைகளே தென்னிந்தியா முழுவதும் விரவிக் கிடப்பதை ஆரவி அறிவாள். அதோடு 'ஹெவன் இன்'ன் உல்லாச விடுதிகளும் இருக்கின்றன. சாமானியப்பட்டவர்கள் நினைத்தும் பார்க்க முடியாத நட்சத்திர ஹோட்டல் அது!


"அங்கேயா நீ செஃப்பா இருக்க?" - விழிகளில் அகலாத பிரமிப்பு!


ஊஞ்சலில் ஒரு காலை மடித்து, வலது கால் தரை தொட அமர்ந்திருந்தவன், "ஆமா. அங்க இந்த மகாராஜா தான் நளராஜன்!" என்று இடையில் கைகளை வைத்து தாடையை அமர்த்தலாக உயர்த்தினான். அதில், உண்மையாகவே ஓர் மகாராஜாவின் தோரணையை உணர்ந்தாள் ஆரவி.


அப்போது தான் கவனித்தாள். அவன் அணிந்திருந்த இளநீல ரௌண்ட் நெக் டீ-ஷர்ட்டும் ஐவரி நிற த்ரீ ஃபோர்த் ஷார்ட்ஸூம் புத்தம் புதிதாய் இருந்தது.


"உனக்கும் உன் ரூம்ல புது துணி இருந்ததா?"


"ஆமா பேபி மாமி! உனக்கும் இருந்தது போலவே?"


"ம்ம்! ஆனா நாம இந்த அறைகளை தான் எடுத்துக்கப் போறோம்னு ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிருக்கவாளுக்கு எப்டி தெரியும்?"


"ப்ச்! நீ சாப்ட்டுட்டு இருக்கும் போது தான் நான் முன்னாடியே வந்து பார்த்தேனே? உன் ரூம்ல உள்ள வார்ட்ரோப் ஓப்பன் பண்ணி பார்த்ததும் தான் உன்னை அந்த ரூம் எடுத்துக்க சொன்னேன்."


"ஓ!" என்று உதடுகளை குவித்தவள், 'ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிருக்கவன் இவனுக்கு மட்டும் கரெக்ட் சைஸ் டிரெஸ் வச்சிருக்கான்!' என்று உள்ளுக்குள் புகைந்தாள்.


'ரொம்ப முக்கியம்!' - நம் மனக்குரல்.


பின், "அது சரி! உங்காத்துல யாரெல்லாம் இருக்கா? நீ இங்க வந்து மாட்டிண்டியே… யாரும் உன்னைத் தேட மாட்டாளா? மொபைல் வேற மிஸ்ஸாயிடுத்துனு சொன்ன?" எனத் தன் மனதில் தோன்றிய கேள்விகளை அடுத்தடுத்து கேட்டாள்.


"எங்காத்துல அப்பா, அம்மா, அண்ணா, அண்ணி, அண்ணா பையன் குட்டி யதுநந்தன் இருக்கா. அக்கா கல்யாணம் பண்ணிண்டு அம்… அமிஞ்சிக்கரைல இருக்கா. நான் அடிக்கடி மூணு, நாலு நாள் சேர்ந்தாப்புல ஹோட்டல் ரூம்லயே தங்கிடுவேன். சோ, யாரும் என்னைத் தேட மாட்டா. அப்டி தேடறதுக்கு நான் மூணாங்கிளாஸ் பையனா என்ன?"


"உன்னைப் போய் மூணாங்கிளாஸ் பையன்னு யாரும் சொல்லுவாளா என்ன?"


"ஹாஹா... ஆமா உங்காத்துல உன்னைத் தேட மாட்டாளா?"


அப்போது தான் கவனித்தாள், அவனும் தன்னைப் போலவே ஐயர் பாஷையில் உரையாடுவதை! உள்ளுக்குள் சற்று கோபம் எட்டிப் பார்த்தது. பொதுவாக ஆரவி வீட்டில் தவிர்த்து வெளியாட்களிடம் சாதாரணமாகவே தான் பேசுவாள். இவனிடம் என்னவோ வீட்டில் உரையாடுவதைப் போலவே பேசியிருக்கோம் என்பதை இப்போது தான் உணர்கிறாள். ஆனால், இவன் தன் பேச்சை பரிகசிப்பது போலல்லவா இருக்கிறது?!


"ஆர் யூ கிட்டிங் மீ, ரைட்?" என்றாள், ஒற்றைப் புருவத்தை உயர்த்தி!


"மீ? ஃபார் வாட்?"


"என்னை மாதிரியே பேசி கிண்டல் பண்ற?"


"ச்சச்ச! நிஜமா எனக்கு நீ இப்டி பேசறது ரொம்பப் பிடிச்சிருக்கு ஆரவி. என்கிட்ட எப்பவும் இப்டியே பேசேன்." என நாடிக்கு கீழ் அணைவாக கையை மடக்கி வைத்து, நெற்றி நிமிர்த்தி கேட்கவும், 


'உண்மையாக தான் சொல்கிறானா?' என யோசிக்கும் போதே, 'நெஞ்சின் இடதுப்புறம் ஏதோ ஓர் பரவசம் பரவுகிறதே?! அதைக் கொஞ்சம் கவனி ஆரவி!' என அவள் மூளை அறிவுறுத்தியது. ஆனால் எதையும் யோசிக்கவிடாது புறம் தள்ளியது அவளின் மனது!


"ஹேய் ஆரவி! உங்க வீட்ல யாரும் உன்னை தேட மாட்டாங்களானு கேட்டேன்?" 


"ம்ஹூம்! ஆத்துல இருக்க எல்லாரும் மன்னி விவாஹத்துக்கு வெளியூர் போயிருக்கா. ரொம்ப நெருங்கின சொந்தம். எல்லாரும் திரும்பி வர வாரம், பத்து நாள் ஆகும். கல்யாண வேலைல எல்லாரும் பிஸியா இருப்பாளோல்லியோ? சோ, என்னையும் யாரும் தேட மாட்டா."


"நீ போகலயா கல்யாணத்துக்கு?"


"ம்ஹூம்! இன்னும் ரெண்டு நாளைல ஒரு இன்டர்வ்யூ அட்டெண்ட் பண்ணனும். அதான் போகலை."


"சரி தான்!" என்றவாறே தண்ணீரை எடுத்து பருகினான்.


ஆரவி தயங்கியவாறே, "வந்து… விபு…." என்றழைக்க…


தண்ணீரைப் பருகிக் கொண்டிருந்தவன் புரையேறிப் போய் 'லொக் லொக்' என்று இருமினான்.


"ஹேய்! பார்த்து…"


"ம்ம்க்கும்..‌ம்ம்க்கும்.. ம்ம்! ஐ'ம் ஓகே! சொல்லு!" என்றான், அவள் விழிகளை சந்திக்காமல்!


"அது வந்து..‌. இங்கிருந்து வெளில போக வேற வழி எதுவும் இருக்கா'ன்னு தேடுவோமா?"


"அதான் பார்த்தோமே? வழி எங்க இருக்குது?"


"ஜன்னல் வழியா போக முடியுமான்னு…"


"எப்டி? தெலுங்கு பட ஹீரோ மாதிரி ஜன்னல் கம்பிய தம் கட்டி கையாலேயே வளைக்க சொல்றியா? என் வீக் பாடி தாங்காதுமா." என்றவாறே சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துக் கொண்டு கீழே சென்றான்.


'அப்பா, அம்மாவிற்கு தெரிந்தால் எந்தளவு தன்னை எண்ணி தவித்துப் போவார்கள்?' என்றெண்ணி கவலையானாள் ஆரவி. முகத்தில் இத்தனை நேரமிருந்த சிரிப்பு காணாமல் போனது.

பூக்கும்🌻🌺 

Comments

Popular Posts 💫

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...

ஸ்கார்பியோ காதல் 🚗 💌

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🎉 கதை முன்னோட்டம்   ஹிக்கின் பாதம்ஸை அலசி விட்டு, ஐபாகோவில் ஐக்கியமாகி, பின்னர் ஊருக்கு செல்லப் பெட்டியைக் கட்டினார்கள். மகிழுந்தில் ஸ்வேதாவை முன்னே ஹரிஷின் அருகே ஏறிக்கொள்ள சொன்ன அம்ருவை மறுத்தவள் ஹரிஷைப் பார்த்தாள். ‘உங்கள் பாடு! எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.’ என்பதாக ஓர் சிரிப்புடன் அமைதியாக இருந்துக்கொண்டான் அவன். அம்ருவை பின்னால் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் அவனருகே அமர்வது அதிகப்படியாக தெரிந்ததால், “நானும் பின்னாடி உன் கூடவே உட்காருறேன் அம்ரு.” என்று பின்னால் அமர்ந்துவிட்டு ஹரிஷைப் பார்க்க, அவள் பார்வைக்காகவே காத்திருந்தாற் போல் ஒற்றைக் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்துவிட்டு மகிழுந்தை எடுத்தான். ஸ்வேதா ஓசூர் அருகே இருக்கும் கிருஷ்ணகிரியில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், விரைவாகக் கோவில் சென்று அனுமனைத் தரிசித்தனர். அம்ரு ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் அந்த அஞ்சுதனைப் பார்த்திருந்தாள். “அம்ரு, கிளம்பலாம் டைமாச்சு!” என்ற ஹரிஷ் ஸ்வேதாவின் காதில் கிசுகிசுத்தான். “நான் அனுமன் பக்தனில்ல பேபி? இ...

சீதையின் பூக்காடு - 1

  அத்தியாயம் 1 வெள்ளிக்கிழமை! மாலை நான்கு மணி அளவில் மழை வரும் போல் வானம் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அந்த பதிப்பகத்தில் தனது புத்தகத்தை வெளியிடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தாள் ஆரவி. ஆரவி! இருபத்துமூன்று வயது. பிபிஎம் படித்தவள். படித்ததற்கேற்ப ஓர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தவள். ஆம்! செய்தவள். மேற்கொண்டு படிக்க விரும்பாமலும், வேலை செய்த நிறுவனம் வேறு கைக்கு மாறியதாலும் தற்போது வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தனக்கு விருப்பமான எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவள் ஆறு நாவல்களும், இருபது சிறுகதைகளும் எழுதியுள்ளாள். அவள் எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரமானதில் ஒன்பது சிறுகதைகள் பரிசுகள் பெற்றவை! தரமான கதைகளை எழுதி அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற எழுத்தாளர்களைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்பதே ஆரவியின் குறிக்கோள்! இந்த பதிப்பகமே இவள் எழுதிய நான்கு நாவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மறுபதிப்பிற்கு சென்றுள்ளன. தற்போதும் இவளெழுதிய 'சீதையின் பூக்காடு' என்ற புத்தகம் மறுபதிப்பிற்கு செல்லவிருக்கிறது. அதற்கு பதிப்பகத்தாரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டும், மற்றுமொரு கதைய...