Skip to main content
Welcome to ShriVijay Writings🎉 - a world of suspense, love, romance, family bonds, thrilling crime, friendship, mystery, emotions, adventure, revenge and twists & turns. Dive in and enjoy every twist! 📖✨

சீதையின் பூக்காடு - 5.1

சீதையின் பூக்காடு

 



அத்தியாயம் 5


மாலை நான்கு மணி!


விபுநந்தன் செய்து தந்திருந்த கீரைக் கூட்டும் வாழைக்காய் வறுவலையும் ஒரு கை பார்த்து விட்டு, மதியம் ஒரு நீண்ட தூக்கம் போட்டு எழுந்திருந்தாள் ஆரவி.


பின், 'யார் இந்த சதி வேலையை செய்திருப்பார்? இருவருக்கும் எதிரி என்று யாரேனும் இருக்கின்றனரா? விபுநந்தன் இதற்கு முன் யாருக்கேனும் தீங்கிழைத்திருக்கிறானா? அப்படியே யாருக்கும் தங்கள் மேல் பகையிருக்குமாயின், ஏன் தங்களை அடைத்து சித்ரவதை செய்யாமல் இப்படி இலகுவாய் இருக்க அனுமதித்துள்ளனர்? ஒருவேளை முதலில் கொடுத்து, பின் பட்டினி போட்டு வதைக்க எண்ணும் சைக்கோவாக இருப்பரோ?' இப்படியெல்லாம் கேள்வி கேட்டு விபுநந்தனை துளைத்தெடுத்திருந்தாள் ஆரவி. இருவருக்கும் விடை தான் கிடைத்த பாடில்லை!


இப்போதும் இருவரும் பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து எதையோ மென்றுகொண்டிருந்தனர். 


"நேக்கு இந்த சாலட் பிடிக்கல விபு." என்று அழுமூஞ்சியோடு கூறினாள்.


காரட்டை வெட்டி அதனுடன் உப்பு, மிளகுத்தூள், சாட் மசாலா, எலுமிச்சை சாறு, லெட்யூஸ் எல்லாம் சேர்த்து செய்திருந்தான்.


"இது காரட் சாலட். ஹெல்த்க்கு எவ்ளோ நல்லது தெரியுமா? ஒழுங்கா சாப்பிடு!" என்று மிரட்டி, காரட்டின் நன்மைகள் என அது வேறு ஒரு அரைமணி நேரம் பேசினான். அதிலிருந்தே அவன் வேலையின் மேல் எத்தனை காதல் கொண்டிருக்கிறான் எனத் தெரிந்தது. ஆனால், இவன் செஃப்பா? இல்லை நியூட்ரீஷியனா? என்று ஆரவிக்கு கடுப்பானது.


தினமும் காரட் சாப்பிட்டால் ஆரவி இப்போதிருக்கும் கருமை(?) நிறத்திலிருந்து காரட்டின் ஆரஞ்சு நிறத்திற்கு மாறிவிடுவாளாம். சூரியனின் அடிவான ஆரஞ்சிற்கும், இவளுக்கும் வித்தியாசமே தெரியாதாம். இன்னும் எதை எதையோ அளந்துகொண்டிருந்தான். அவன் அறுவை தாங்காமல் எழுந்து ஓடவும் முடியாமல் கஷ்டப்பட்டு தண்ணீரைக் குடித்து அதை மென்று விழுங்கினாள்.


அவள் நிலையைப் பார்த்தவன், "என்ன மாதிரிலாம் எழுதுவ நீ?" என்று பேசிக்கொண்டிருந்த தலைப்பை மாற்றினான். 


எழுத்து அவளின் பெருங்காதல் அல்லவா? எனவே ஆர்வமாக, "எனக்கு பிடிச்ச மாதிரி எழுதுவேன். என் எழுத்து மூலமா நான் மனசுல நினைக்கிறது வாசிக்கறவா கண்ல காட்சியா விரியணும். என் மனசும், அவா கண்ணும் ஒரே கோட்டுல பயணிக்கணும். அவா கண்கள் என் மனசுல சுத்தி வந்துட்டு, போறச்ச, அவா மனசுகிட்ட ஒரு போஸ்ட்மேனா மாறிருக்கும்." என்றவள் நிறுத்தி, "புரியறதா விபு நோக்கு?" என்று அவன் முகம் பார்க்க, 


"ம்ம்... உன் மனசுல உள்ளதை தான் நான் படிப்பேன்." என்றான் அவனும் புரிந்து கொண்ட பாவனையோடு!


"ம்ம்!"


"நீ அழுதா நான் அழுது…"


"ம்ம்!"


"நீ சிரிச்சா நானும் சிரிச்சு…" 


"ம்ம்!" 


"நீ ரேப் பண்ணா நானும் ரேப் பண்ணி…." என்று விழிகள் குறும்பாய் சிரிக்க,


அதற்கும், "ம்ம்!" என்றவள் சட்டென சுதாரித்து, "கடங்காரா! கடங்காரா!! ச்சை கருமம்! என்ன பேச்சுனு சும்மா இதையே பேசிண்டு இருக்க?" என்று கேட்டு கேட்டு அடி மொத்தி எடுத்தாள். விபுநந்தனின் சிரிப்பிற்கு போட்டியாய் அந்த ஊஞ்சலும் கிணுங்கிச் சிரித்தது.


இவ்வாறாக இந்த இரண்டாம் நாள் இருவருக்குள்ளும் ஒரு நட்பை ஏற்படுத்தியிருந்தது.


ஞாயிற்றுக்கிழமை!

மாலை நேரம்!


ஆரவி அங்கே கீழ்தளத்தில் இருந்த அறைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். கீழே இருந்த மூன்று அறைகளும் பூஜை அறையும் அதிக புழக்கத்தில் இல்லாதது போலவே தெரிந்தது. உபயோகப்படுத்தி வாரங்கள் ஆகியிருக்கும். சமையலறைப் போன்றல்லாது இங்கே மேலோட்டமாகவே சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அதிலும் ஒரு அறையில் மட்டும் சில சேலைகளும், ஆண்களுக்கான துணிகளும் அவர்கள் உபயோகிக்கும் பொருட்களும் இருந்தன. 


ஆரவிக்கு அளித்திருக்கும் அறையில் இருந்த வசதிகள் அனைத்தும் இங்கும் இருந்தன. ஜன்னல்கள் முழுவதும் க்ரில் கம்பிகள் போடப்பட்டிருந்தது. வேறு வெண்டிலேட்டர் வசதிகளும் எதுவும் இல்லை. அந்த காலத்தில் இருந்திருக்க வேண்டும். வீட்டைப் புதுப்பிக்கும் பொழுது அடைத்திருப்பார்கள் என்றெண்ணிக்கொண்டாள்.


மற்றொரு அறையில் அந்த காலத்தைய ரெமிங்டன் டைப்ரைட்டர் இருந்ததைப் பார்த்தாள். முன்பு அலுவலக அறையாக உபயோகித்திருக்க வேண்டும் என ஊகித்துக்கொண்டாள்.


சுற்றிப் பார்த்து சலித்தவள், "ப்ச்! வெளியேற ஏதாவது ஒரு வழி கிடைக்கும்னு நினைச்சேனே..." எனத் தனக்குள்ளாகவேப் பேசிக்கொண்டாள். காலையில் இருந்து அவனுக்கு சமையலறையில் உதவியது போக மிச்ச நேரத்தில் இப்படி தான் வழியைத் தேடிக்கொண்டிருக்கிறாள்.


உள்ளிருந்தே ஹாலை எட்டிப் பார்த்தாள். ஹாலில் இருந்த டிவிடி ப்ளேயரில் லியானர்டோ டீ கேப்ரியோ நடித்த, 'கேட்ச் மீ இஃப் யூ கேன்' எனும் ஹாலிவுட் படம் பார்த்துக் கொண்டிருந்தான் விபுநந்தன். இங்கு தொலைக்காட்சி இருந்தாலும் கேபிள் இணைப்பு கூட கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக படங்களும், பாடல்களும் பதிவு செய்யப்பட்ட குறுந்தகடுகள் தாம் நிறைந்திருந்தன.


அதிலிருந்து தான் இப்போது ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் போலும். கையில் கண்ணாடி குவளையில் முளைக்கட்டிய பயிறில் செய்த சாலட் வைத்து கொறித்துக்கொண்டிருந்தான்.


நேற்று போலவே இன்றும் காலர் இல்லாத டீ-ஷர்ட் அணிந்திருந்தான். முன்னிருந்த அறைக்குள் நின்றவாறே அவனின் பக்கவாட்டுத் தோற்றத்தை அளந்து கொண்டிருந்தாள் ஆரவி.


தான், தன் கதைகளில் கதாநாயகனை எழுதுவது போல் உயரமாகவும் அதற்கேற்ற கட்டுக்கோப்பான உடல்வாகுடனும், மாநிறத்திற்கும் சற்றே அதிகமான நிறத்துடனும், வசீகரிக்கும் முக அமைப்புடனும் இருந்தான்.


அவனின் சிகை உண்மையிலேயே ஷாம்பூ விளம்பர மாடலைப் போல் அடர்ந்து கருமை நிறத்துடனும், மினுமினுப்பாகவும் இருந்தது. இவன் என்ன ஷாம்பூ உபயோகிக்கிறானென பிறகு கேட்க வேண்டுமென மனதில் குறித்துக்கொண்டவள் சட்டென பின்னந்தலையைத் தட்டிக்கொண்டாள்.


'ச்ச! கெட்ட பெண்ணாகிட்டடி ஆரவி! இப்டி தான் ஒருத்தன வச்ச கண் வாங்காம பார்க்கறதா? அதுவும் என்ன ஷாம்பூனு கேக்க போறாளாம். கருமம்! என்ன கண்றாவி இது? நானும் சைட்டடிக்கறேனா என்ன? நோ! நோ!! ஆரவி இப்டி இருக்கக்கூடாது.' என்று தன்னை நினைத்தே வெட்கம் கொண்டாள்.


இன்று காலையில் இவள் அறையிலிருந்து வெளி வருகையில், அவன் மாடி பால்கனியில் கையில்லா பனியனோடு வொர்க் அவுட் செய்து கொண்டிருந்தான். 'ஒரு வயது பெண் இருக்கும் இடத்தில் இவன் ஓவர் பந்தா காட்டுகிறான்' என்று அலட்சியமாக எண்ணியிருந்தாள். 


ஆனால் ஏற்கனவே அவன் விளையாட்டு பேச்சில் மனம் சிறிது சிறிதாக அவன் புறம் மண்டியிட்டு கொண்டிருந்தது என்பது தான் உண்மை! எல்லாவற்றிற்கும் மேல் தன்னைப் போலவே ரசனைக்காரன். அதிலேயே ஆரவியின் மனம் அவனிடம் சிக்கிக்கொண்டது. இப்போதும் அறைக்குள் இருந்து பார்த்துக்கொண்டிருந்தவள் தன்னையே கடிந்துகொண்டாள்.


'அப்படி எல்லாம் இல்லை. யாருமில்லா தனிமையில் துணைக்கு இருக்கும் ஒருவனை மனம் பற்றுகோலாய் தேடுகின்றது. வேறு ஒன்றுமில்லை. இல்லையெனில் பார்த்த ஒரே நாளிலேயே ஒருவனைப் பிடித்துவிடுமா என்ன? அலைபாயாது அடங்கி இரு மனமே! இனி அவன் பக்கம் திரும்பவேக் கூடாது.' என சுயக்கட்டுப்பாடு விதித்தாள்.


அவள் சொல்வதை அவள் பொல்லாத மனம் கேட்டாலல்லவா? மனதோடு சேர்ந்து விழிகளும் அவனிடமே தஞ்சம் புகுந்து, செல்லம் கொஞ்ச பார்க்கிறதே! மீண்டும் அவனைப் பார்த்தாள்.


சாலட்டை மென்று கொண்டிருந்தவனின் கவனம் முழுதும் கேப்ரியோவிடம்! நேற்று போல் இன்றும் இவளை சாலட்டை சாப்பிட சொன்னான். தப்பிக்க வழியில்லாது சாப்பிட்டவளுக்கு இன்று அந்த பயறின் சுவை மிகவும் பிடித்துவிட்டது. முதலில் அவன் சாப்பிட சொன்னதையும், அதற்கு தான் அலறி, மாட்டேனென அழிச்சாட்டியம் செய்ததையும் நினைத்து சிரித்துக்கொண்டாள். 


ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது. நேற்று மதியம் கீரைக் கூட்டும், வாழைக்காய் வறுவலும் செய்து தந்தானே! அம்மா கீரைக் கூட்டு செய்வாள் தானென்றாலும் இவன் செய்தது சற்றே வித்தியாசமாக இருந்தது.


சிறு பருப்பை வேக வைத்து எடுத்துக்கொண்டு கடாயில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, பசலைக்கீரை போட்டு வதக்கினான். பின், வேக வைத்த பருப்பை சேர்த்து உப்பு போட்டு ஐந்து நிமிடம் மூடி வைத்தான். பின் தாராளமான நெய்யில் தாளிதம் செய்யும் போது சீரகமும் நசுக்கிய பூண்டையும் போட்டு தாளித்து, இதில் சேர்த்து விட்டான். அடடா! வாசனையே சொல்லில் வடிக்க முடியாததாக இருந்தது. ஆரவி இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சமென எப்போதும் விட அதிகமாகவே சாப்பிட்டாள்.


சமையல் மட்டுமல்லாது சமைக்கும் இடத்தையும் அத்தனை சுத்தமாக வைத்துக்கொள்கிறான். ஆரவி தானும் அவனிடம் சுத்தத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.


பின், 'ச்ச!' என்று மீண்டும் பின்னந்தலையைத் தட்டி, இதழை மடித்து தன்னை நொந்துகொண்டாள். இப்போது தானே அவனைப் பற்றி நினைக்கக்கூடாது எனவும் அவனைப் பார்க்கக் கூடாது எனவும் மனதிற்கும், விழிகளுக்கும் கட்டளை பிறப்பித்தாள்? கட்டளை பிறப்பித்த அடுத்த நொடியே அவனின் நினைவையே முத்தமிடும் மனதையும் விழியையும் திட்டி தீர்த்துவிட்டு, அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.


"என்ன? ஏதாவது வழி இருக்குதா?" டிவியில் இருந்து விழி திருப்பாமலே கேட்டான் நந்தன்.


"ம்ஹூம். நான் மேல இருக்க மத்த ரூமையும் பார்த்துண்டு வர்றேன்." என்று நிற்காமல் பதிலளித்து விட்டு ஓடி போய்விட்டாள்.


பூக்கும்🌻 🌺 

Comments

Popular Posts 💫

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)

  யமுனா 💌 ராஜீவன் இரண்டாம் சந்திப்பு! அன்று சரஸ்வதி பூஜை! இங்கே இதெல்லாம் நாங்கள் நன்றாக கொண்டாடுவோம். அனைத்து அலுவலகங்களிலும் விஜயதசமியன்று புதுக் கணக்கு போடுவார்கள்.  வீட்டில் காலையில் இருந்தே வேலைகள் ஆரம்பித்துவிடும். வீட்டில் மட்டுமல்ல அலுவலகத்திலும் வேலைகள் ஜரூராக நடக்கும். அலுவலகத்தை சுத்தம் செய்வது முதல் சாயங்கால பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்கி வைப்பது வரை அனைத்திற்கும் அலுவலக ஆட்களே பொறுப்பெடுத்துக் கொள்வர்.  வீட்டில் அம்மாவோடு சேர்ந்து நாங்களும் ஐந்து வகை சுண்டல், விளாம்பழ இனிப்பு, ஊற வைத்த பச்சரிசியில் சீனியும் எள்ளுமாய் கலந்து நைவேத்தியத்திற்காக செய்து எடுத்துக் கொள்வோம். மாலையில் அப்பாவின் அலுவலகம் போய் பூஜை முடித்து, செய்த பதார்த்தங்களை அலுவலக ஊழியர்களுக்கு பரிமாறி, நாங்களும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு என அந்நாள் அத்தனை நிறைவாய் முடியும். அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கு பழங்கள், அரிசி பொரியோடு ஐந்து நாட்களுக்கான சம்பளமும் சேர்த்து தர, அவர்களின் முகங்களிலும் திருப்தியின் சாயல் கோடிட்டிருக்கும். அத்தோடு மறுநாள் விடுமுறையும் என்றால் கேட்கவும் வேண்டுமா? ஒவ...

கருவறை கீதம் (தொகுப்பு)

கருவறை கீதம்  வருடம் 2034 இடம்: பெங்களூரு. கடிகாரம் பிற்பகல் மூன்று மணி என்றுரைக்க, அதனை மறுத்த வானம் மாலை ஆறு மணி என ஏமாற்றியது. மேகங்கள் மேவிய வானிலையை விழிகளில் ரசனையேற்றிப் பார்த்திருந்தாள் சந்தனா. பிரபல துணிக்கடையையொட்டி, தமிழிலும் கன்னடத்திலும் ஸ்ருதி நாட்டிய நிருத்தயாலயா என்று எழுதியிருந்த கட்டிடத்தின் வெளிவாசலில் இருந்த மகிழம்பூ மரத்தினடியில் நின்றிருந்தாள்.  அவள் தனக்கு வலப்புறத்தில் சற்று தள்ளி காரை நிறுத்திவிட்டு இறங்காமல் ஓட்டுநர் இருக்கையிலேயே அமர்ந்திருந்தவனைக் கவனிக்கவில்லை. ஆனால் அவன் பார்த்தான். ஏறக்குறைய ஐந்து நிமிடங்களாக அவளையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.  தலைமுடியை இறுக்கமாகப் பின்னியிருந்தாள். அது ‘ஃப்ரென்ச் ப்ளாட்’ என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. காதில் பெரிய ஸ்டட்! கழுத்தில் ஒன்றுமில்லை. மகிழம்பூ மரத்தினடியில் தூய வெண்மையும் இளநீலமுமான உடையில், அடிக்கும் ஈரக்காற்றில் துப்பட்டா பறக்க நின்று, மேகங்களில் லயித்திருந்தவள் அவன் கண்களுக்கு ஓர் அழகிய மேகத்துணுக்காகவே தெரிந்தாள். அந்த அழகிய மேகத்தினுள் புதைந்துக்கொள்ளும் ஆசை வந்தது. ‘அழகா இர...

சீதையின் பூக்காடு🌻🌺 - தொகுப்பு.

  கதையின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன🔗🔗  கதை முன்னோட்டம். பொறுமை இழந்தவன், "ஹலோ! கேன் யூ ப்ளீஸ் டெல் மீ, வாட்'ஸ் யுவர் ப்ராப்ளம்?" எனக் கேட்டான். "யாரோ ப்ளே பண்றா. நேக்கு கொஞ்சம் முன்னாடி கால் வந்தது. ஊருக்கு கிளம்பின எங்க பாட்டிக்கு பாதி வழியிலேயே திடீர்னு ஃபிட்ஸ் வந்துட்டதாகவும், இப்போதைக்கு பக்கத்துல இருக்க அவா ஆத்துல வச்சு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிருக்கறதாகவும், உடனே வந்தா ஹாஸ்பிடல் அழைச்சிண்டு போகலாம்னும் சொல்லி இந்த அட்ரஸ்க்கு வர சொன்னா." "ஓ!" "ஆனா, இப்ப அம்மா பேசறத பார்த்தா எல்லாரும் நல்லபடியா ஊருக்கு போய்ட்டா போலயே... அப்ப நேக்கு கால் பண்ணது யாரா இருக்கும்?" "எனக்கு கால் பண்ணவன் தான் உங்களுக்கும் பண்ணிருக்கணும். ஆமா... வீட்ல உள்ளவங்க ஊருக்கு கிளம்பி எவ்ளோ நேரம் ஆச்சு?" "மூணரை மணி நேரம் இருக்கும். ஏன் கேக்கறேள்?" "நீங்க இங்க வர்றதுக்கு மினிமம் ஆஃப் ஆன் ஆர்-னு வச்சிக்கிட்டா கூட… ரொம்ப தூரம் இல்லனா, கிளம்பி மூணு மணி நேரம் ஆனவங்க ஊருக்கே போய் சேர்ந்திருப்பாங்களே… இங்க பக்கத்துல எப்டி இவ்ளோ நேரம் இருப்பாங்...
🍪 This site uses cookies to improve your reading experience. Learn more.