அத்தியாயம் 5.2
ஆரவியிடம் ஏதோ வித்தியாசமாகப் பட புருவம் சுருக்கித் திரும்பிப் பார்த்தான். அதற்குள் அவள் சென்றிருந்தாள். பின், தன் நெருடலை அலட்சியப்படுத்தி விட்டு மீண்டும் தொலைக்காட்சியில் கவனமாகிவிட்டான்.
சிறிது நேரம் சென்றபின் ஒலியளவைக் குறைத்து விட்டு கூர்ந்து கேட்க, அரவமே இல்லாமல் நிசப்தமாய் இருந்தது. எனவே, யோசனையோடு அவளைத் தேடி இவனும் மாடிக்கு வந்தான். மாடியில் எல்லா அறைகளும் சாத்தி வைத்தபடியே இருந்தது. சந்தேகம் தோன்றவே, இவனறையை ஒட்டிச் சென்ற ஒடுங்கிய மொட்டைமாடி கல் படிக்கட்டுகளில் ஏறினான்.
ஏறும் போதே, "ஆரவி! ஆர் யூ தேர்?" எனக் கேட்டவன் பதிலில்லாது போக, என்னவாயிற்றோ என்று வேகமாக மேலேறினான். ஆம்! மேலே தான் இருக்கிறாள் போலும். மொட்டை மாடி கதவு திறந்திருந்தது.
"ஆர்…" ஆரவி என அழைக்க வந்தவன் அவள் வாசலிலேயே அசைவற்று நின்றிருந்ததைப் பார்த்ததும் ஓர் விநாடி பதறிவிட்டான். 'இவ ஏன் இப்டி நிக்கறா?'
"ஹேய் ஆரவி! என்னாச்சு?" என்று மேலே வந்து அவள் தோளசைத்தவனும், சுற்றிலும் பார்த்து விட்டு அசைவில்லாது போனான். அவன் பார்வையில் பிரமிப்பின் உச்சம்!
பின், அவன் முகம் மெல்ல மெல்ல உணர்ச்சி பெற்றது. முகத்தோடு விழிகளும் விகசிப்பு, பிரமிப்பு, சந்தோஷம், துள்ளல் என வர்ணஜால உணர்வுகளை வாரி இறைத்தது. அவளின் தோளைப் பற்றியிருந்த கைகளை விடுவித்து விட்டு, முன்னால் இரண்டெட்டு எடுத்து வைத்தான். பின், தலையைத் திருப்பி அங்கிருந்த காட்சியை இரு கண்களுக்குள்ளும் படம் பிடிக்க முயன்று, தோற்று சற்றே பாசி பிடித்திருந்த அந்த மொட்டைமாடியை சுற்றி சுற்றி வந்தான்.
அங்கிருந்த ஸ்டோன் பென்ஞ்சில் ஏறி, இரு கைகளையும் வாயருகே குவித்து வைத்து, "ஊஊ!! வாவ்வ்!!!" என்று அந்த காடே அதிரும் படி உற்சாகமாய்க் கத்தினான்.
அவனின் செய்கையைப் பார்த்து அவன் உற்சாகம் இவளுக்கும் தொற்றிக்கொண்டது. இதுவரை ஆச்சர்ய விழிகளோடு அசைவற்று நின்றிருந்த ஆரவியின் இதழ்களும் மெல்ல மெல்ல ஒரு பூவின் இதழ்களை போல் மலர்ந்தது. இவளும் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டே அவனருகே சென்றாள்.
பெஞ்ச்'ல் நின்று கொண்டே அருகே வந்தவளின் தோளைப் பற்றி, "பேபி மாமி! பேபி மாமி!!" என்று அதற்கு மேல் வார்த்தை வராமல் கத்தி, குதித்து ஆர்பரித்தான்.
மொட்டைமாடி வருடக் கணக்காக பராமரிப்பில்லாமல் இருந்திருக்க வேண்டும். தரை ஒரு சில இடங்களில் பாசி பிடித்து வழுக்கியது. வீட்டின் முன்புறம் வைத்திருந்த சந்தனமுல்லைக் கொடி காட்டு மண்ணிற்கு நன்கு செழித்து வளர்ந்து, மொட்டைமாடி கைப்பிடிச் சுவர் முழுவதும் தன் ஆதிக்கத்தை செலுத்தியிருந்தது.
பால்கனியில் இருந்ததைப் போன்ற ஊஞ்சல் இங்கும் இருந்தது. ஆனால், அதனைப் போல் தொன்மையானதாக இல்லை. அதனருகில் வைக்கப்பட்டிருந்த புஷ்பக் கொடியானது, ஊஞ்சலை இருபுறமும் தாங்கி நின்றிருந்த தூண் போன்ற அமைப்பிலும் மேலேறி, மேற்புறத்தில் இருந்த சின்னக் கூரையில் தவழ்ந்து, ஊஞ்சலை வெயிலிலும் மழையிலும் காப்பதைப் போல் அடர்ந்து படர்ந்திருந்தது.
இடப்புற மூலையில் பெரிய சிமெண்ட் தொட்டியில் வைத்திருந்த மல்லிகைக் கொடி அடர்ந்து புதர் போல் மண்டிக் கிடந்தது. நந்தன் நின்றிருந்த கல்மேடையின் கால்களும் மொத்தமாய் பசுங்கொடிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது.
கைப்பிடி சுவரை ஒட்டி பாதி வரை பூந்தொட்டிகள் நிறைந்திருந்தன. ஒரு சில தொட்டிகள் உடைந்து சிதிலமாகியிருந்தாலும், மற்றவைகள் நன்றாகவே தன்னுள்ளிருந்த செடிகளைப் பாதுகாத்து வளர்த்திருந்தன. கீழிருந்து படர்ந்திருந்த சந்தன முல்லைக் கொடிகள் பூந்தொட்டிகளை வெயிலிலிருந்து காத்திருக்க வேண்டும்.
மேலும் செம்பருத்தி ஒரு புறமெனில், செவ்வந்தி மறுபுறம்! நந்தியாவட்டை ஒரு புறமெனில் சூர்யகாந்தி மறுபுறம்! தங்க அரளி ஒரு புறமெனில் கனகாம்பரம் மறுபுறம்! டெய்ஸி ஒரு புறமெனில் டேலியா மறுபுறம்! சங்கு பூ ஒரு புறமெனில் சம்பங்கி மறுபுறம்! டூலிப் ஒரு புறமெனில் ஆர்கிட் மறுபுறம்! பாரிஜாதம் ஒரு புறமெனில் வாடாமல்லி மறுபுறம்!
எதைப் பார்க்க? எதை விட?? என்று இருவரும் ஆளுக்கொரு பக்கமாக நின்று பூக்களை ரசித்து, ரசித்து மாய்ந்துகொண்டிருந்தனர்.
இன்னும் பட்டன் ரோஸ், டேபிள் ரோஸ் உட்பட ரோஜாக்களில் இருந்த அத்தனை வகைகளும் அங்கிருந்தன. அத்தனையும் இடையளவு வளர்ந்து நின்று நன்கு செழித்திருந்தது. பூக்களும் விரித்து வைத்த உள்ளங்கையளவு பெரியதாக இருந்தது.
நடக்குமிடம் கூட ஒற்றையடிப் பாதையைப் போல தான் நீண்டிருந்தது. மேலும், அவ்விடத்தை சீராக பிரித்தது போல் வரிசையாக சிறியதும், பெரியதுமாக தொட்டிகள் வைத்திருந்தனர். அதில் இன்னும் பெயர் தெரியாத வண்ணப்பூக்களும் தலையாட்டி, புது ஆட்களை ஆவலாய் வரவேற்றன.
ஒரு மினி பொட்டானிக்கல் கார்டன் போல் காட்சியளித்தது, அந்த மொட்டைமாடி! அனைத்தையும் முறையாய் வெட்டி, ஒழுங்குபடுத்தினால் நிச்சயம் ஓர் அழகான பூந்தோட்டமாய் அமையும். இருவருமே ரசனைக்காரர்களாய் இருந்ததால், இடத்தைப் பார்த்ததும் பிரமிப்பில் வாயடைத்துப் போய் நின்றனர்.
'இங்கே ஒரு செயற்கை நீரூற்று உருவாக்கினால் எப்படி இருக்கும்?' என்ற வகையில் ஆரவியின் சிந்தனை ஓடியது. இருவருக்குமே மொட்டைமாடியில் இருந்து கீழிறங்கி தப்பிக்க முடியுமா? என ஆராயும் எண்ணமே அற்றுப் போயிருந்தது.
என்ன தான் கொடிகள் படர்ந்து பூந்தொட்டிகளைக் காத்திருந்தாலும், புழக்கத்தில் இல்லாமல் ஒருபுறம் வறண்டும் உடைந்தும் மறுபுறம் பாசி பிடித்தும் இருக்கும் இடத்தில், எப்படி செடிகள் தண்ணீர் ஊற்றாமல் வாடாமல் இருக்கின்றன என இருவருமே யோசிக்கவில்லை.
மொட்டைமாடியின் முக்கால்வாசி இடம் மட்டுமே இவ்வாறு காட்சியளித்தது. மீதமிருந்த சிறு இடம் பச்சை நிற மேற்கூரை போட்ட காலியிடமாக இருந்தது. அந்த மேற்கூரையும் பாதி உடைந்திருந்தது.
ஓர் துளசி மாடம் போல் இரு மடங்கு பெரிதாக இருந்த தொட்டியினருகே சென்றாள் ஆரவி. அந்த செடி மொத்தமாய் சிறு சிறு இளஞ்சிவப்பு வண்ண மலர்களால் தன்னை மூடிக் கொண்டிருந்தது. ஆரவியின் உயரம் தான் இருந்தது.
சற்றே கை உயர்த்தி அதனை மென்மையாக வருடி விட்டவாறே, "வாட்'ஸ் யுவர் நேம்? யூ லுக் சோ கார்ஜியஸ்!" என்றாள்.
"ஹேய் இது செர்ரி ஃப்ளவர்!" - விபுநந்தனின் குரலில் ஓர் ஆழ்ந்த அமைதி! கண்கள் கூட பனிக்கின்றனவோ?
"ஆமால்ல? செர்ரி ஃப்ளவர் தான்." என்று தானும் அடையாளம் கண்டுகொண்டவளாய் சிரித்தாள்.
"ம்ம்! தொட்டில வச்சிருக்கறதுனால உயரம் குறைவா இருக்குது." என்றான் எதையோ யோசித்த படியே அதன் மீதிருந்த விழிகளையும் திருப்பாமல்! இவன் விழிகள் அதனிடம் என்ன பரிபாஷை நடத்துகின்றனவாம்? புரியவில்லை ஆரவிக்கு!
அவனின் சிந்தனை படிந்த முகத்தைப் பார்த்து, "விபு! ஆர் யூ ஓகே?" எனக் கேட்டாள்.
ஒரு நொடியில் முக பாவனையை மாற்றி, "யாஹ்!" என்று அவளின் வலக்கைப் பிடித்து சுற்றிவிட்டவன் சிரித்துக்கொண்டே, "மாமி! ஒரு பூக்காட்டுக்குள்ள வந்து நிக்கிற மாதிரி இருக்குல்ல?" என உற்சாகமாகக் கேட்கவும் சுழன்று நின்ற ஆரவி, அதிர்ச்சியில் உறைந்துபோனாள்.
அதை கவனிக்காமல், நந்தன் புதர் போலிருந்த மல்லிகைக் கொடியின் அருகே போய் பார்த்துக்கொண்டிருந்தான். இவளும் மெதுவாக அவனருகே சென்றாள்.
"விபு!"
"ஆரவி! இந்த கொடிய கொஞ்சம் கட் பண்ணி விட்டு, சுத்தம் செஞ்சா மல்லிகை பந்தல் அட்டகாசமா இருக்கும் இல்ல?"
"விபு!"
"ம்ம்ஹாஆ! செம வாசனை!!"
"விபு, ப்ளீஸ் லிஸன் டூ மீ! கொஞ்சம் முன்னாடி நீ என்ன சொன்ன?"
"புதர் மாதிரி இருக்கறத க்ளீன் பண்ணனும் சொன்னேன். ஏன் கேக்கற?"
"ப்ச் அதில்ல! அங்க நின்னுட்டு இருக்கச்ச நீ என்ன சொன்ன? பூக்காடு…." என்று எடுத்துக் கொடுக்க,
"ம்ம், யாஹ்! ஒரு பூக்காட்டுக்குள்ள வந்துட்ட மாதிரி இருக்குது. இட்'ஸ் ரியலி சச் ஆன் அமேஸிங் ப்ளேஸ்!" என்றான்.
ஆரவி அசையாது நின்றிருக்க, அவளை கவனியாமல் மல்லிகை கொடியை இப்படியும் அப்படியுமாக அசைத்தான். நேற்றிரவு பெய்த மழையின் மிச்சத்துளிகளை தன்னிடம் ஒளித்து வைத்திருந்த இலைகள், அவன் அசைத்ததில் பதறிப்போய் அனைத்து நீர் முத்துக்களையும் பட்டென்று கீழே சிதறவிட்டன. சில பல துளிகள் ஆரவியின் முகத்திலும் தெறித்தது.
அதில் சிலிர்த்தவள் உறைநிலையில் இருந்து விடுபட்டாள். அவன் ஒரு கை நிறைய குண்டு மல்லிகளை பறித்து அவள்முன் நீட்டினான்.
சின்ன புன்னகையுடன் குனிந்து, அதனை நுகர்ந்தவள், "நேக்கு மல்லிப்பூ'ன்னா ரொம்பப் பிடிக்கும் தெரியுமா?" என்றாள், ரசனையாக!
"பேய்க்கு கூட மல்லிப்பூ'ன்னா ரொம்பப் பிடிக்குமாம் தெரியுமா?"
'ஹஹ்ஹஹ்ஹா…' - சிரிப்பொலி!
சட்டென்று பயத்தில் நந்தனின் இடப்புற நெஞ்சோரம், தன் வலது தோள் முழுவதும் அழுந்த இடித்து நின்று சிரிப்பொலி வந்த திசையைத் திரும்பிப் பார்த்தாள்.
யாருமே இல்லை. பின்னே? சிரிப்பு சத்தம் எங்கிருந்து வந்தது? நெஞ்சையடைத்த அச்சத்தில் சிந்திக்க திராணியில்லாது அப்படியே அவன் மேலேயே மயங்கிச் சரிந்தாள் ஆரவி.
பூக்கும்🌻 🌺
Comments
Post a Comment