சீதையின் பூக்காடு - 7

சீதையின் பூக்காடு

 



அத்தியாயம் 7


ஜன்னலோரம் நின்று தன்னோடு பேசிக்கொண்டிருந்தவள், திடுமென சோபாவைப் பயப்பார்வை பார்த்ததும் அல்லாமல், 'உனக்கு அது கேட்கவில்லையா?' என்று வேறு கேட்கவும் விபுநந்தன் குழம்பிவிட்டான். 


ஆரவி ஜன்னலை இறுகப் பற்றிக்கொண்டு, இன்னமும் சோபாவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். 


'இவளென்ன மூச்சு விடுகிறாளா இல்லையா? என்னவாயிற்று?' 


பதட்டத்துடன் எழுந்து அவளருகே சென்று, "ஆரவி! ஆ ர வி!!!" என்று கன்னத்தைப் பிடித்து, வலுக்கட்டாயமாக தன் புறம் திருப்பினான்.


"ஹான்ன்??" என்று ஆழ மூச்செடுத்தவள், சட்டென அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்து இறுக்கிக்கொண்டாள். அவள் உடல் நடுங்குவதை நந்தனால் நன்றாகவே உணர முடிந்தது.


"ஹேய் வாட் ஹேப்பண்ட் பேபி? வை ஆர் யூ லைக் திஸ்?" என அவளைத் தன்னிடமிருந்து பிரித்தெடுக்க முயன்றவாறே கேட்டான்.


"விபு! உனக்கு எதுவுமே கேக்கலயா?" மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்.


"இல்லடா, உனக்கு என்ன கேட்டுச்சு?"


"அது…" என்று ஆரம்பித்தவள், மீண்டும் சோபாவைப் பார்த்துவிட்டு, "யாரோ சிரிச்ச மாதிரி…" என்று இழுத்தாள். 'என்னை நம்பேன்…' என்றன விழிகள்!


வந்த சிரிப்பை அவளின் நிலை பொருட்டு வாய்க்குள்ளேயே விழுங்கிவிட்டு, "யாரும் சிரிக்கல பேபி. எல்லாம் உன் பிரமையா இருக்கும்." என்று கூறி, ஆதரவாக அவள் நெற்றியில் இதழ் பதித்தான். 


அவள் விருட்டென்று விலகி நின்று முறைக்கவும் தான், தான் செய்த செயல் புரிந்தது இவனுக்கு. 


"ஸ்ஸ்..." என்று பின்னந்தலையைத் தடவியவாறே குனிந்துகொண்டான். முதன்முதலாய் தன் மனதை மயக்கியப் பெண் திடுமென மார்பில் சாய்ந்து, தன் கைகளுக்குள் அழகாய் பொருந்தி நின்றதும் ஒரு கணம் தன்னிலை மறந்துவிட்டான்.


ஆரவிக்கு இப்போது பயம் முற்றிலும் போய்விட்டது. அவளின் கவனம் விபுநந்தனிடம் திரும்பியிருந்தது. தான் கூறியதற்கு சிரித்ததோடல்லாமல் முத்தம் வேறு கொடுக்கின்றான்! எவ்வளவு தைரியம்!! சந்தில் சிந்து பாடுவதென்பது இது தானா? என்று கோபமாய் முறைத்தாள். இல்லை, முறைக்க முயன்றாள்.


அவள் மனம் தான் அவன் புறமே சாய்கிறதே? 'நீதான் அவனைக் கட்டியணைத்தாய்!' என்று கேலி செய்ததோடல்லாமல், 'அவன் வைத்தது ஆதரவு முத்தமே! அதில் என்ன குத்தமோ?' என்று எதுகை, மோனையாய் பேசி நந்தனுக்காக கொடி பிடித்தது.


முதல் நாள் இங்கு வந்த போது பெண்களைப் பற்றி அவன் கூறியதை நினைவுபடுத்திக்கொண்டு, 'ச்ச! கெட்ட பையன்!! நினைக்காதே அறிவே!! ரசிக்காதே மனமே!' என்று தனக்குள்ளாகவே அறிவுறுத்திக்கொண்டாள்.


அதற்குள் அவனே ஒன்றும் நடவாதது போல், "ஆரவி, இங்க வா! இப்டி வந்து உட்காரு!" என்று அவள் கைப் பிடித்து, தனக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்த்தி விட்டு, "செஸ் ஆடறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல மாமி. இப்ப நான் கொஞ்சம் டிப்ஸ் சொல்றேன். அதை மைண்ட்ல வச்சிக்கிட்டு விளையாடு. இதுக்கு போய்‌ பயந்துக்கிட்டு ஏன் சிரிப்பு சத்தம் கேக்குது, கொலுசு சத்தம் கேக்குதுன்னு என்னை பயமுறுத்தி சாக்கு போக்கு சொல்ல நினைக்கற?" எனவும்,


கடுப்பில் இருந்தவள், "நான் சொல்றது நோக்கு சாக்கு போக்கு சொல்ற மாதிரி தெரியறதோ? சரி அப்டியே வச்சுக்கோ. நான் வரல. பொங்கல் சாப்பிட்டது வேற தூக்கமா வர்றது. உனக்கு நீயே டிப்ஸ் சொல்லி நீயே விளையாடிக்கோ!" என்று எழப் போனவளை மீண்டும் கைப் பிடித்து நிறுத்தினான்.


"ஒரே ஒரு ஆட்டம் ஆரவி... ப்ளீஸ்... போரடிக்குதுல?" எனவும்,


வேறு வழியில்லாமல் கோபமாய் பட்டென்று அமர்ந்தாள். காய்களை அடுக்கி விட்டு ஆட்டம் தொடங்கியதும் சும்மா இருக்கமாட்டாமல், "இங்க பாரு, முதல்ல கிங் இல்லனா க்விய்ன்-க்கு முன்னாடி இருக்க சிப்பாயை நகர்த்தணும். சரியா? அடுத்து பிஷப் அண்ட் குதிரை! அப்ப தான் நிறைய கட்டத்துக்கு மூவ் ஆக முடியும். எல்லாக் காயும் சேஃபா இருக்கா? ஒரு வழியை இன்னொன்னு அடைக்காம இருக்கா? இப்டி எல்லாத்தையும் ஒவ்வொரு மூவ்'லயும் பார்த்து கன்ஃபர்ம் பண்ணிக்கனும். அப்புறம் க்விய்னை அதிகமா வெளில கொண்டு வரக்கூடாதாம். ஏன்னா காய்களை ஃப்ரீயா நகர்த்த, கட்டங்கள் கம்மியா இருக்கற பட்சத்துல எதிரி நம்ம ராணியைத் தூக்கி வெளில போட்டுடுவான். நாம ராணியை நகர்த்தறது எதிராளிய டென்ஷன் பண்ணனும். அப்டி இருக்கணுமாம் நம்ம மூவ்! ஸீ ஆரவி! இதுலாம் நான் சொல்லல. செஸ்ல உள்ள பெரிய பெரிய ஜாம்பவான்கள் சொன்ன டிப்ஸ்!" என்றுவிட்டு நிமிர்ந்து பார்த்தான்.


பொங்கலின் உபயத்தால் ஏற்கனவே அரை சயனநிலைக்கு சென்றிருந்தவள், இவன் பேச ஆரம்பித்ததுமே குறட்டை விடும் அளவிற்கு சென்றிருந்தாள். பாவம் பெண்! இரவு வேறு சரியாக தூங்கவில்லையல்லவா?


ஆரவியின் முதல் நகர்த்தலுக்கு பின் தான் பேச ஆரம்பித்தான். எனவே, "ஆரவி!" என்று தோள் பிடித்து உலுக்கியதும்,


"ஹான்? நீ உன் காய் மூவ் பண்ணிட்டியா விபு?" எனக் கேட்டாள்.


"நான் இங்க உனக்காக பாவம் விளையாடத் தெரியாம என்கிட்ட தோத்துடுவியே'ன்னு எனக்கு மட்டும் தெரிஞ்ச, இத்தனை நாளும் ரகசியமா வச்சிருந்த டிப்ஸ் எல்லாம் சொல்லிட்டு இருக்கேன். நீ என்னடான்னா கொஞ்சமும் கவனிக்காம, பொறுப்பில்லாம தூங்கற?"


"நான் உன்கிட்ட தோத்துடுவேனா? ஓவர் கான்ஃபிடென்ட் உடம்புக்காகாது மச்சி. நேக்கும் நீ சொன்ன ஜாம்பவான்கள் எல்லாரையும் தெரியும்." என அவன் பேச்சை அரைகுறையாக கேட்டதை வைத்துச் சொன்னாள்.


"ஓஹோ! எங்க நம்மூர் விஸ்வநாதன் ஆனந்த் பத்தி ஒரு இன்ஃபர்மேஷன் மட்டும் சொல்லு பார்ப்போம்?" என்று அலட்சியமாகக் கேட்டான்.


"ஆனந்தோட அம்மா ஒரு செஸ் கேமோட க்ரூப்ல மெம்பரா இருந்தா. சோ, ஆனந்த்க்கு செஸ் விளையாட அவா அப்பவே கத்துக் குடுத்தாளாம். அதுக்கு அப்புறம், 'டால்'ன்ற செஸ் க்ளப்ல சேர்ந்து டிரெய்னிங் எடுத்துண்டார். அப்பவே நேஷனல் லெவல் செஸ் காம்படீஷன்ல கலந்துண்டு சாம்பியன் பட்டம் வின் பண்ணினார். 2003 -ல எஃப்.ஐ‌.டி.சி உலக அதிவேக சதுரங்க வெற்றி வீரர்'ன்ற பட்டத்தை ஜெயிச்சார். அண்ட் மோர்ஓவர், 2005 -ல அமெரிக்கால சான்லூயிஸ்ல நடந்த வேர்ல்ட் செஸ் டோர்னமென்ட்ல ரெண்டாவது ப்ளேஸ் வந்தார். இன்னும் சொல்லப் போனா…" அவள் சொல்ல சொல்ல ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தவன்,


"போதும் மாமி... போதும்! நீயும் செஸ்ல என்னை மாதிரி புத்திசாலி தான்." என்று போனால் போகிறதென்று ஒத்துக்கொள்ளும் பாவனையில் சொன்னான். 


"இன்னும் கேளு விபு! ஜார்ஜ் பெர்னாட்ஷா கிரிக்கெட்டை, 'பதினோரு முட்டாள்கள் ஆடுகிறார்கள். அதை பதினோராயிரம் முட்டாள்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள்'னு சொன்னாராம். அவரே செஸ் கேமையும், 'நம்ம பொறுமையை சோதிக்கற, பொன்னான நேரத்தை வீணடிக்கற, சோம்பேறித்தனத்தை வளர்க்கற கேம்'னு சொல்லிருக்காராம்."


"ம்ம்! ஒத்துக்க வேண்டிய விஷயம் தான். அந்த காலத்துல அரச பரம்பரையைச் சேர்ந்தவங்களும், பிரபுக்கள் வம்சத்துல உள்ளவங்களும் தான் செஸ் கேம் விளையாடுவாங்களாம். செஸ் விட, கேரம் விளையாடறது விரலுக்கும் கண்களுக்கும் நல்ல பயிற்சினு டாக்டர்ஸ் சொல்றாங்க. பட், செஸ் விளையாட்டு நம்ம மூளையை இன்னும் ஷார்ப் பண்ணுமாம்"


"அதோட கேரம் மாதிரியே இதுலயும் ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு பாயிண்ட்ஸ் இருக்குது தெரியுமோ நோக்கு?"


தன்னுடைய அடுத்த நகர்த்தலுக்காக பார்த்துக் கொண்டிருந்தவன், நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.


"கிங் தான் பாயிண்ட்ஸே இல்லாதது. ஐ மீன் அதிகபட்ச மதிப்பு ராஜாவுக்கு தான். நெக்ஸ்ட் ராணிக்கு ஒன்பது பாயிண்ட்ஸ், குதிரைக்கு த்ரீ பாயிண்ட்ஸ், ஒவ்வொரு யானைக்கும் தலா அஞ்சு பாயிண்ட்ஸ், அடுத்து பிஷப்புக்கும் அதே மாதிரி தலா மூணு பாயிண்ட்ஸ், லாஸ்ட்ல சிப்பாய்க்கு தலா ஒரு பாயிண்ட்... மொத்தம் எட்டு சிப்பாய்க்கு எட்டு பாயிண்ட்ஸ்!" என்று சொல்லி முடித்ததும் விபுநந்தன் அவளை மிரட்சியாய் பார்த்தான்.


'என்ன இவ இந்த போடு போடறா? இவ கூட விளையாடி ஜெயிச்சிடுவியாடா நந்தா?'


"பரவால்லயே மாமி... இவ்ளோ தெரிஞ்சு வச்சிருக்க. உனக்கு எப்டி இதெல்லாம் தெரியுது?"


"ஏன் நீயே தெரிஞ்சு வச்சிருக்கும் போது நான் தெரிஞ்சு வச்சிருக்கக் கூடாதா? எல்லாம் புக்ல, கதைகள்லனு படிச்சு தெரிஞ்சிக்கிட்டது தான். இது கூட ஆர்கே சாரோட செஸ் ப்ளேயர் பத்தின ஒரு க்ரைம் ஸ்டோரில படிச்சது தான்." எனவும்,


"ஓ! பரவால்லயே... ஆனா இப்பலாம் யார் ஃப்ரெண்ட்ஸோட செஸ் விளையாடறாங்க? எல்லாரும் கம்ப்யூட்டர்லயும், மொபைல்லயும் தான் விளையாடறாங்க." என்றவன், "சரி இவ்ளோ பேசற நீ என்னை இந்த கேம்ல ஜெயிச்சுக் காட்டு பார்ப்போம்?" என்று சவாலாகக் கூறினான்.


"ப்ச்! போறும் விபு. நேக்கு இன்ட்ரஸ்ட் இல்லன்னு சொன்னேனோல்லியோ?"


"வேற எதுல தான் நோக்கு இன்ட்ரஸ்ட் இருக்குது?" என்று சலிப்பாக சதுரங்கப் பலகையைத் தள்ளிவிட்டான்.


"இப்போதைக்கு நீ சமைச்சு தந்தா நன்னா சாப்பிடறதுல இன்ட்ரஸ்ட் இருக்கறது. இன்னும் கொஞ்ச நேரத்துல லன்ச் டைம் வந்துடும். வாயேன் விபு! ஏதாவது சமைக்கலாம்."


"சரியான சோத்துமூட்டை!" என்று கொலைவெறியோடு முறைத்துப் பார்த்தவனைக் கண்டுகொள்ளாமல், எழுந்து சமையலறைக்குள் புகுந்துகொண்டாள். போகும் போது சோபாவையே பார்த்தபடி சென்றாள். 'தன்னோடு கண்ணாமூச்சி ஆடுபவரை கண்டுபிடித்தேத் தீர வேண்டும்.' என்று கண்களில் உறுதி தெரிந்தது.


அவள் சென்றதும் வேறு வழியில்லாமல் இவனும் எழுந்து பின்னே சென்றான். இருவருமாய் சேர்ந்து மஷ்ரூம் புலாவ் செய்தனர்.


முதலில் மஷ்ரூமை வதக்கி செய்யாமல் நெய் சாதம் போல செய்து, மசாலாப் பொருட்கள் சேர்த்து ஃப்ரை செய்த மஷ்ரூமை அதில் போட்டு, 'தம்'மில் வைத்து எடுத்து தந்தான்.


சாப்பிடும் போது உண்ணும் உணவின் நன்மைகள் மட்டுமல்லாது, சாப்பிடும் முறைகளையும் எடுத்துக் கூறினான். அனைத்தையும் கேட்டும், கேளாமல் உணவின் ருசியிலேயே தன்னைத் தொலைத்திருந்தாள் ஆரவி.


சாப்பிட்டு முடித்ததும், தட்டுக்களை சுத்தம் செய்து வைத்துவிட்டு இருவரும் மீண்டும் ஹாலிற்கு வந்தனர். விபுநந்தன் ஏதேனும் படம் பார்க்கலாம் என்று டிவி ஸ்டாண்டின் இழுப்பறையைத் திறந்து அதிலிருந்த குறுந்தகடுகளை ஆராய்ந்தான். ஆரவி கவனமாக சோபாவை விடுத்து, அங்கிருந்த கூடை நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டாள்.


"என்ன படம் பார்க்கலாம்?" இழுப்பறைக்குள் குனிந்திருந்த வண்ணமே கேட்டான் விபுநந்தன்.


"ஏதாவது காமெடி, இல்ல லவ் ஸ்டோரி உள்ள படம் பார்க்கலாம்."


"ம்ம்… ஹிந்தி படம் பார்ப்பியா பேபி மாமி?"


"ஓ பார்ப்பேனே..."


"தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே


மூவி பார்த்திருக்கியா?" 


"ஷாருக்


ஃபேன் தில்வாலே துல்ஹனியா பார்க்காம இருப்பாளா?" எனவும்,


சட்டென தன் தேடுதலை நிறுத்தியவனின் விழிகள் குறுந்தகடுகளிலேயே நிலைக்க, "ஓ! ஷாருக் ஃபேனா?" என்றான். சுரத்தே இல்லாமல் வந்த இவன் குரலில் ஏன் இத்தனை சோகம்?


ஆரவி அதை யோசிக்கும் முன்…


'துஜே தேக்கா தோயே ஜானா ஸனம்…

ப்யார் ஹோத்தா ஹை தீவானா ஸனம்…

அப் யஹான் ஸே கஹான் ஜாயேன் ஹம்…

தெரி பாஹன் மேன் மர் ஜாயேன் ஹம்…

துஜே தேக்கா தோயே ஜானா ஸனம்…

ப்யார் ஹோத்தா ஹை தீவானா ஸனம்…' என்று இதயத்தை நெகிழ்த்தி, மனதினை அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்ட அழகிய தேன்குரலில் பாடல் ஒலித்தது.


முதல் வரி கேட்டதுமே உடல் தூக்கி போட, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு திகில் பரவிய முகத்தோடு தனக்கு இடதுபுறம் இருந்த சோபாவைத் திரும்பிப் பார்த்தாள் ஆரவி.


யாரும் இல்லை. ஆனால் பாட்டொலி கேட்கிறதே?!


விபுநந்தன் சற்று நேரம் தன்னுள்ளேயே உழன்று விட்டு, 'தன் கேள்விக்கு இவள் பதில் தந்துவிட்டாளா என்ன?' என்ற யோசனையில் திரும்பினான்.


அவள் பேயறைந்த முகத்தோடு சோஃபாவையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.


"ஆரவி?"


"......."


"ஆரவி!!"


"........"


சத்தமில்லாமல் முகம் முழுவதும் வியர்த்து, நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தளைப் பார்த்து, கையிலிருந்த குறுந்தகடுகளை அப்படியே போட்டுவிட்டு, "ஆரவி! வாட் ஹேப்பண்ட்?" எனத் தோள்களைப் பிடித்து உலுக்க,


அவன் மேல் அப்படியே சரிந்த ஆரவியின் மயக்கமே அவனுக்கு எதிர்வினையாய்க் கிடைத்தது.


பூக்கும்🌻🌺 

Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)