சீதையின் பூக்காடு - 8

சீதையின் பூக்காடு

அத்தியாயம் 8


தன் கையில் மயங்கிக் கிடப்பவளை மிரட்சியாய் பார்த்தவாறே, 'இவளென்ன அடிக்கடி மயங்கி விழுகிறாள்?' என்று யோசனையாகவே அமர்ந்திருந்தான் விபுநந்தன். அவன் முகத்தில் அவளைக் குறித்த பயம் அப்பட்டமாக தெரிந்தது. பதட்டத்தில் என்ன செய்வதெனவும் புரியவில்லை.


இப்படி அவள் உணர்வற்று கிடப்பதைப் பார்க்கையில் உள்ளத்தில் ஆற்றொணா வலி உண்டாவதை அவஸ்தையாய் உணர்ந்தான். இத்தனை தூரமா தன்னுள்ளத்தை நிரப்பிக் கிடக்கின்றாள் என்று வியப்பில் விதிர்த்தான். எத்தனை நேரம் அப்படியே இருந்தானோ தெரியவில்லை.


திடீரென அதிவேகத்துடன் அடித்தக் காற்றில் தான் உணர்வு பெற்றான். ஜன்னலின் வழி வீசிய காற்றில் திரைச்சீலைகள் மேலே வரை பறந்துகொண்டிருந்தன.


அதன்பின்னர் தான் ஆரவிக்கு தண்ணீர் எடுக்கவே எழுந்தான். முகத்தில் நீரடித்து அவள் மயக்கத்தைத் தெளிவித்த பின்னரும் ஏதோ சிந்தனைவயப்பட்டவனாக அமர்ந்திருந்தான். அவள் தான் அவன் சிந்தனையைக் கலைத்தாள்.


"விபு!"


"ஹேய்! நீயென்ன சும்மா சும்மா மயங்கி விழற? அவ்ளோ கூடவா இம்யூனிட்டி இல்லாம இருக்க?"


"அப்டிலாம் இல்ல. பயந்துட்டியா?" கேள்வி நந்தனிடம் என்றாலும், பார்வை சோஃபாவை அளந்தது.


"பின்ன? சும்மா மயங்கிட்டே இருக்க? திடீர்னு உடம்புக்கு எதுவும் ஆச்சுனா வெளில கூட போக முடியாது?"


"ச்சச்ச! ‌உடம்புக்கெல்லாம் எதுவும் இல்ல விபு."


"நோ! நான் நம்ப மாட்டேன். நீ என்ன பண்ற… நாளைல இருந்து நான் உனக்கு பீட்ருட் வித் மிண்ட் ஜூஸ் போட்டு தர்றேன். நாளைக்கு என்ன நாளைக்கு? ஈவ்னிங்கே போடறேன். நீ குடிக்கற! டெய்லி மார்னிங் அண்ட் ஈவ்னிங் ஒரு ஒரு க்ளாஸ் குடிச்சா அயர்ன் பவர் அதிகமாகும்…." என்று ஆரம்பிக்க,


"அய்ய்யோ! மீனாட்சி…" என்று மேலே பார்த்தவள் அவனிடம், "நான் நன்னா தான் இருக்கேன் விபு. ஐ… ஐ ஜஸ்ட் காட் ஸ்கேர்ட்… (scared)" என்றாள்.


"ஸ்கேர்ட்? ஃபார் வாட்?"


"அது... ஏதோ பாட்டு சத்தம் கேட்டதா…"


"எது? இப்ப பாட்டா?" என்றவன் கடகடவென சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.


"நோ விபு! சிரிக்காத!! சம்திங் ஹேப்பன்ஸ் டிஃபரண்ட் ஹியர்..."


"ஹாஹா… மாமி! எனக்கு கேட்காத பாட்டு உனக்கு மட்டும் எப்டி கேட்டுச்சாம்? அப்ப சிரிப்புனு சொன்ன... இப்ப பாட்டுங்கற! ஹாஹா… அப்டியே கேட்டாலும் ஒரு பாட்டு கேட்டா மயங்கின நீ? அவ்ளோ கொடூரமான பாட்டா அது? ஹாஹா… பேபி மாமி! என்ன பாட்டுனு சொல்லு. கேட்டுட்டு நானும் ஒருக்க மயங்குறேன்."


"ச்சு! நீ இப்டி கேலி பண்ணுவன்னு தான் உன்னான்ட எதையும் சொல்ல வேணாம்னு நினைச்சேன்."


"ஹாஹா… சரி சரி! சாக்கு போக்கு சொன்னது போதும். ஈவ்னிங் நான் தரப் போற ஜூஸ் குடிக்க ரெடியா இரு! யூ நோ ஆரவி? பீட்ரூட்ல அயர்ன், கால்சியம், விட்டமின்…." என்று குனிந்து விரல் விட்டுக்கொண்டிருந்தவனுக்கு சத்தம் காட்டாமல் எழுந்து மாடிக்கு ஓடிவிட்டாள் ஆரவி.


அருகே அவளில்லாததை உணர்ந்து, "போய்ட்டாளா? எப்டியும் கீழ வந்து தானே ஆகணும்? இன்னிக்கு பீட்ருட் ஜூஸைக் குடிக்க வைக்கல… என் பேரு நந்தா இல்ல!" என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு சமையலறைக்குச் சென்றான். 


அங்கு நாளைக் காலை பலகாரத்திற்காக அரிசியையும், உளுந்தையும் ஊற வைத்து விட்டு, மீண்டும் என்னென்ன படங்கள் இருக்கின்றன என ஆராய்ந்து, ஒரு குறுந்தகடை மட்டும் எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, "ம்ம்… காடு! காட்டுக்குள்ள ஒரே ஒரு வீடு! வீட்டுக்குள்ள இதோ… இங்க நான் மட்டும் தனியா இருக்கேன். அவ தான் ரூம்க்கு ஓடிட்டாளே? சோ, இப்ப நான் மட்டும் தான்! மணி நாலு தான் ஆகுது. ஆனா இங்க ஆறு மணி மாதிரி இருக்குது. இந்த சிச்சுவேஷன்ல பார்க்க வேண்டிய படம் தான்!" என்று கூறியவாறே ப்ளேயரை ஆன் செய்து, அது நீட்டிய வட்டத்தில் டிவிடி-யை வைத்தான்.


திரையில் படத்தின் பெயர் தோன்றியது, 'ANNABELLE' என்று!


மேலே வந்த ஆரவி மிரண்டு போய் அமர்ந்திருந்தாள். நேற்று சிரிப்பு சத்தம் கேட்டது மாயை என்று நினைத்து மனதைத் தேற்றியிருக்க, இன்று யாரோ சிரித்ததோடல்லாமல் பாட வேறு‌ செய்கிறார்கள்?! அருகே வீடுகள் கூட இல்லை. அப்படி இருந்தாலாவது அங்கிருந்து டிவியிலோ, ரேடியோவிலோ அல்லது அலைபேசியில் இருந்தோ கேட்டிருக்கக்கூடும் என முடிவு செய்து கொள்ளலாம். இங்கு அவை எதற்கும் வழியில்லாமல் திடுமென பாடல் ஒலிக்கிறது!


அதுவும் விபுநந்தன் ஓர் படத்தைக் குறிப்பிட்டுக் கேட்கவும், அதே படப் பாடல் கேட்கிறது. இது எப்படி சாத்தியம்? ஒரு வேளை நிஜமாகவே தன் கதையில் வருவது போல நடப்பிலும் நடக்கிறதா என்ன?


எதுவும் புரியாமலும், தான் கேட்டவற்றை அலட்சியப்படுத்த முடியாமலும் அரண்டு போய் தலையணையைக் கட்டிக்கொண்டிருந்தவள் அப்படியே அசந்து தூங்கிவிட்டாள்.


ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். இமைகளைப் பிரித்துப் பார்க்க அறை, இருளில் மூழ்கியிருந்தது. அறை ஜன்னல்கள் குளிர்ந்த மழைக் காற்றை உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தன. எழுந்தமர்ந்த ஆரவி விடிவிளக்கைப் போட்டுவிட்டு ஜன்னலருகே சென்றாள்.


இச்சூழ்நிலையை ரம்மியமான பொழுதென்று ரசிக்கவா? அமானுஷ்யம் நிறைந்ததென்று பயம் கொள்ளவா? அமானுஷ்யம் நிறைந்ததென்றால், தன்னால் எப்படி இங்கே இவ்வளவு அழகாகப் பொருந்தி ஆழ்ந்து துயில்கொள்ள முடிகிறது?


யோசிக்க யோசிக்க தலைவலி வரும் போல் இருந்தது. ஒரு காபியைக் குடிக்கலாம் என முகத்தைக் கழுவிவிட்டு கீழிறங்கினாள்.


படிகளில் இறங்கும் போதே பார்த்தாள். சமையலறையில் மட்டும் தான் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கிரைண்டர் ஓடிக்கொண்டிருக்கிறது போலும். கொஞ்சம் கீழிறங்கி பார்க்க, தொலைக்காட்சியில் இரு வெள்ளைக்காரர்கள் பேசிக் கொண்டிருந்தனர். எப்போதும் இவனுக்கு ஆங்கிலப் படங்கள் தான் பிடிக்கும் போலும் என்றெண்ணியவாறே சமையலறை சென்று, கிரைண்டரில் ஓடிக்கொண்டிருக்கும் மாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு பாத்திரத்தில் தண்ணீரை சுட வைத்தாள்.


பால் பவுடரை எடுத்தவள் அங்கிருந்தே, "விபு! நோக்கும் சேர்த்து காஃபி போடவா?" எனக் கேட்க, காதில் வாங்காது படத்திலேயே கவனமாக இருந்தான் விபுநந்தன்.


அடுப்பைக் குறைத்துவிட்டு தொலைக்காட்சி வெளிச்சம் மட்டும் இருந்த, அந்த அரையிருளிலேயே அவனருகே வந்தவள், "விபு!" எனத் தோள் தொட,


"ஆஆவ்வ்வ்!" என்று பெருங்குரலில் அலறி அவளையும் பதறடித்துவிட்டான்.


அவன் கத்திய கத்தலில் துள்ளிக் குதித்து வலதுபுறம் இருந்த ஒற்றை சோஃபாவில் குஷனைக் கட்டிக்கொண்டு சுருண்டு போய் அமர்ந்துவிட்டாள் ஆரவி.


ஓரிரு விநாடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், "ச்ச! நீதானா? ஹிஹி… ஸாரி மாமி!" என்றான். 


"இப்ப என்னத்துக்கு இப்டி கத்தின நீ?" உள்ளுக்குள் ஏற்பட்ட நடுக்கம் குறையாமல் அவனைக் கண்களால் எரித்தாள்.


அவள் முன் நந்தனுக்கு பெருத்த அவமானமாகிப்போனது. தலையை சொறிந்தவன் அசடு வழிந்தபடி டிவியைப் பார்க்க, இவளும் திரும்பிப் பார்த்தாள். அப்போது பார்த்து படத்தில் அந்த பொம்மை வரும் காட்சி போய்க்கொண்டிருந்தது. இப்போது கத்துவது இவள் முறையாயிற்று. 


"ஆவ்வ்!!" என்று குஷனை எடுத்து முகத்தை அழுந்த மூடிக்கொண்டாள்.


"ஹாஹா… ஹாஹா…" சிரித்தபடியே டிவியை அணைத்து விட்டு எழுந்து விளக்கைப் போட்டவன், "என்ன பேபி நீ? ஆஃப்டர் ஆல் ஒரு பொம்மை! அதுக்கு போய் பயப்படலாமா?" என்று கேட்டு, அவள் பார்த்த பார்வையில் கப்பென் வாயை மூடிக்கொண்டான்.


அடுப்பில் சுடுதண்ணியை வைத்தது நினைவு வர, குஷனை அவன் மேல் எறிந்துவிட்டு எழுந்து ஓடினாள் ஆரவி. பின்னேயே இவனும் சென்றான்.


"நோக்கும் சேர்த்து காஃபி போடவா? அதைக் கேட்க தான் வந்தேன். அதுக்குள்ளாற பேய் மாதிரி கத்தி பயமுறுத்தி விட்டுட்ட!" 


"நானே போடுறேன். நீ அந்த மாவு ரெடியாகிடுச்சானு பாரு!"


"எப்பவும் என்னை எடுபிடியாக்கறதே இவனுக்கு வேலையாயிடுத்து." என முணுமுணுத்தாள்.


"என்னது?"


"ம்ம்… ஒண்ணுமில்ல. பவுடர் பால்ல காஃபி குடிக்க நன்னாவே இல்லனு சொன்னேன்."


"என்ன பண்றது? இந்த காட்டுக்குள்ள இருக்க வீட்ல இருந்து வெளில போனாலும் நமக்கு பால் கிடைக்காது."


"வெளில போக முடிஞ்சா நான் ஏன் இங்க காஃபி குடிக்கப் போறேனாம்? எங்காத்துல போய் பசும்பால்ல ஸ்ட்ராங்கா கும்போணம் (கும்பகோணம்) டிகிரி காஃபி போட்டு குடிப்பேனாக்கும்!"


"ம்ம்க்கும்! நான்-வெஜ் சாப்ட மாட்டாங்களாம். பசும்பால் மட்டும் குடிப்பாங்களாமாம். மாமி! நீங்க குடிக்கறது பசுவோட சுத்தமான ரத்தம். அது தெரியுமோன்னோ? கல்யாண வீட்டுக்கெல்லாம் கட்டிட்டு போறீங்களே… பட்டுப்புடவை? அது எப்டி வருதுன்னு தெரியுமா? ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சியைக் கொன்னு தான் அதைக் கட்டிக்கறீங்க! மோர்ஓவர்.."


"போறும்!" எந்தத் தலைப்பை எடுத்தாலும் அக்குவேறு, ஆணிவேராக பேசியே அறுவையைப் போடுவான் என்று இந்த மூன்று நாட்களில் அவனைப் பற்றி அறிந்து வைத்திருந்தாள் ஆரவி. அதுவும் இது தன்னைப் பற்றி மட்டுமல்லாது, ஓர் ஜாதியைப் பற்றிய வாதம்! இப்போது இவனைப் பேச விட்டால் தானும் எதிர்வாதம் புரிந்து, இங்கு ஒரு 'நீயா? நானா?' நடைபெறும் சாத்தியமும் இருக்கிறது.


எனவே அவன் பேச்சை நிறுத்திவிட்டு, கிரைண்டரில் இருந்த மாவை பாத்திரத்திற்கு மாற்றுவதில் கவனமானாள்.


நக்கலோடு அலட்சியமாக உதட்டை வளைத்துவிட்டு காபி தயாரித்தான் அவன்.


ஆரவி பாத்திரத்தைத் தரையில் வைத்து ஒரு கையில் பிடித்து மறு கையால் மாவை எடுத்துக் கொண்டிருந்தாலும், இடக்கையிலும் மாவை ஒட்டிக்கொண்டாள். முன்னே பின்னே இந்த வேலையை செய்திருந்தால் தெரியும்! வீட்டில் சமையல், இன்ன பிற வேலைகள் அனைத்தும் ஆரவியின் அன்னையே தான் செய்வார். இவள் பெருக்கி, துடைப்பது, பாத்திரம் அலம்புவது போன்ற வேலைகள் மட்டுமே இதுவரை செய்திருக்கிறாள்.


இப்போது இரு கைகள் மட்டுமல்லாமல் முகத்திலும், நெற்றி ஓர முடிகளிலும் கூட மாவு ஒட்டியிருந்தது. ஆனால் அதைப் பற்றி கவலைக்கொள்ளாமல் வேலையில் கவனமாக இருந்தவளின் துப்பட்டா நழுவி விழுந்து தரையிலிருந்த மாவுப் பாத்திரத்தை மூடியது.


இதை எதிர்பாராதவள் ஸ்தம்பித்து அப்படியே நின்றுவிட்டாள். ஆனாலும் அனிச்சையாய் துப்பட்டாவை எடுக்க குனிய நினைத்து, அதுவும் தவறாகிவிடுமென திருதிருத்தாள்.


ஆரவிக்கு அவளறையில் வைத்திருந்த உடைகள் இவளின் பூசிய உடல்வாகிற்கு சற்று பொருந்தாமல் இருந்த காரணத்தால், அவளறையில் இருந்து வெளி வரும் போது எப்போதும் மேலே ஒரு துப்பட்டாவைப் போட்டுக் கொண்டே தான் இருப்பது!


காபியை கப்'களில் ஊற்றிவிட்டு திரும்பி, திகிலடித்தாற் போன்றிருந்த அவள் முகத்தைப் பார்த்தவனுக்கு அடுத்த கணம் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. அவன் திரும்பியதும் ஓர் ஆண்மகனின் முன் இப்படி நிற்க நேர்ந்ததை அவமானமாகக் கருதி தன்னிச்சையாக அவனுக்கு எதிர்புறமாக திரும்பி நின்று கொண்டாள் ஆரவி.  


ஆனால் அவன், கலங்கிப் போய் இருந்தவளை மேலும் கலங்கடிக்க எண்ணி மெதுவான எட்டுக்களோடு அவளருகே சென்றான். திரும்பி நின்றிருந்தவளின் தோள் பிடித்து தன்புறம் திருப்பி கண்களில் கிறக்கத்தோடு, அவள் உதடுகளையேப் பார்த்தவண்ணம் மெதுவாக… மிக மெதுவாக அவளின் முகமருகே குனிந்தவன், லேசாக தலையை இடப்புறம் சாய்த்து இதழ் பிரித்தான்.


ஆரவி விழிகளை விரித்து மருண்ட பார்வைப் பார்த்தாள். நெற்றியின் புருவ மத்தியில் பூத்திருந்த வியர்வைத் துளி, இதோ! இதோ!! என அவனின் பிரிந்து நின்ற இதழில் விழுந்து மடியக் காத்திருக்கின்றது.


அதனை உணர்ந்தானோ என்னவோ! இவ்வளவு நேரம் அவள் வெளிர் ஆரஞ்சு நிற உதடுகளையே பார்த்திருந்தவன், இமை மலர்த்தி விழிகளைப் பார்க்க, ஆரவி சட்டென இமைகளைத் தாழ்த்திக்கொண்டாள்.


குறும்பு சிரிப்போடு துப்பட்டாவை எடுத்து அவள் தோளில் வழியவிட்டு விட்டு, "காஃபி ரெடி..." என ராகம் போட்டபடி ட்ரே-யை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டான். 


நம் ஆரவியை எப்போதும் திணறடிப்பதே இந்த கிறுக்கனுக்கு பிழைப்பாய்ப் போயிற்று!


இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியேற்றி, அப்படியே சுவற்றில் சாய்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள் ஆரவி.


'ச்ச! விபு அப்படிப்பட்டவன் இல்ல. ஹி இஸ் அ ஜெம் ஆஃப் பர்சன்.' என்று தனக்குள்ளாகவேக் கூறிக்கொண்டாள். அத்தோடு, 'அவனிடம் இருந்து நகராமல் அல்லது அவனைத் தள்ளியோ விடாமல்... நீ ஏன் அசையாமல் இருந்தாய்?' என்று அறிவு கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாமல் அலைப்புற்றாள் பேதையவள்.


மிச்ச வேலைகளை முடித்து விட்டு ஹாலிற்கு சென்றாள். "சீக்கிரம் வா பேபி மாமி! காஃபி ஆறிட்டு இருக்குது பாரு!" என்றவனின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க முடியவில்லை, பெண்ணவளால்!


ஆனால் அவன் அவளையும் கனிந்திருந்த அவள் கன்னங்களையும் இமைக்காமல் பார்த்துக்கொண்டே காபியை உறிஞ்சினான்.


பிழையாகிப் போகிறது 

அவன் பார்வை!

இனி, இவள்

பிழைத்துக் கிடப்பது எங்ஙனம்?


பூக்கும்🌻🌺 

Comments

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)