
அத்தியாயம் 18
அழைத்துப் போக நான் வருவேன் என்று சொல்லியும், அம்ருதா அப்பாவுடன் புறப்பட்டு வந்துவிட்டதில் ஏற்கனவே எரிச்சலுடன்தான் வந்தான் ஹரிஷ். மருத்துவமனை வாயிலிலேயே அம்ருதாவைக் கண்டு மகிழுந்தை நிறுத்தியவன், தங்கையின் கண்களிலும் சிரிப்பிலும் புதிதாய் ஊடாடும் உணர்வினை அவதானித்தபடி அந்த சிரிப்பின் மூலத்தை நோக்கி விழியை நகர்த்தினான்.
அங்கே முதலில் அவன் கவனத்தைக் கவர்ந்தது பச்சை நிற மஹிந்திரா ஸ்கார்பியோ! மெலிதாய் உண்டான அதிர்வுடன் அவசரமாக ஸ்கார்பியோவின் எண்ணைப் பார்த்தான். பார்த்தவுடன் அது மூளைக்கு சென்று, உண்மை(?) உணரப்பட்டதும் மொத்த நரம்புகளிலும் கோப இரத்தம் தாறுமாறாக ஏறி இறங்கியது.
என்ன செய்து வைத்திருக்கிறாள் அவன் தங்கை! விருட்டென கீழே இறங்கியவன், அங்கே வந்த ஊழியர் ஒருவரிடம் மகிழுந்தின் திறப்பைத் தந்துவிட்டு அடக்கப்பட்ட சீற்றத்துடன் அம்ருவை நெருங்கினான்.
ஹரிஷின் சீற்றம் மிகுந்த பார்வை தன் ஸ்கார்பியோவையும் தன்னையும் எரிப்பதை ஆழ்ந்து கவனித்த அஸ்வத்திற்கு, ஏற்கனவே அவனுக்கு தன்னைத் தெரிந்திருக்கிறது என்று புரிந்து போனது.
எனில்?
இந்த டாக்டர் பெண் தன்னைப் பற்றி அவளின் அண்ணனிடம் சொல்லியிருக்கிறாள்! அத்தனை முறை என் சொந்த விடயம் வெளியே போகக்கூடாது என்று படித்து படித்து சொல்லியும் தன்னைப் பற்றி அவள் அண்ணனிடம் வெளியிட்டிருக்கிறாள்! எதிலிருந்து எதுவரை?
‘ஃ**!’ இப்போது இவனும் அம்ருதாவைத் தீக்கண்களுடன் நோக்க,
அதைவிட நான்கு மடங்கு ஆவேசத்துடன், அவளின் முழங்கையைப் பற்றிய ஹரிஷ், “என்ன பண்ணி வச்சிருக்க அம்ரு?” என்று பல்லைக் கடித்து, அஸ்வத்தையும் முறைத்து பார்த்துவிட்டு, “உள்ளே வா!” என்று தங்கையை இழுத்துச் சென்றான்.
அஸ்வத்தைக் கலவரமாக திரும்பிப் பார்த்தவளை உலுக்கி முன்னே நடக்கும்படி செய்தவன், திரும்பி அஸ்வத்தையும் கடுமையாகப் பார்த்தான். அதில் அஸ்வத்தின் விழிகளில் வெறியேறியது. அவன் மனநிலைக்கு ஏற்றாற்போல் ஸ்கார்பியோ சீறி நகர்ந்து, சாலையில் பாய்ந்தோடியது.
அம்ருதாவை அங்கேயிருந்த OP ப்ளாக்கில் ஒரு காலியான பரிசோதனை அறைக்குள் இழுத்து தள்ளிய ஹரிஷ், “அவனைப் பார்க்கறதுக்கு அவன் வீடு வரை போயிருக்க என்ன?” எனக் காட்டமாகக் கேட்க,
பயந்து செத்தாள் அம்ருதா. இவள் அவன் வீட்டிற்கு சென்றது உண்மைதானே?
“எப்டி அம்மு? நான் ஊர்ல இல்லன்னதும் அவ்ளோ துளிர் விட்டுப் போச்சா உனக்கு? அவனோட டிரைவிங் ஸ்கில்ல இம்ப்ராஸாகி இருக்கன்னு அன்னிக்கே புரிஞ்சது. ஆனா வெறும் நம்பரை வச்சு அவன் அட்ரஸைக் கண்டுபிடிச்சு அவன் வீடு வரை போவன்னு நினைக்கவே இல்ல. இதெல்லாம் அப்பாவுக்கு தெரிஞ்சா என்னாகும்?”
“ச்ச! நீ நினைக்கற மாதிரி இல்ல ஹரி!”
“என்ன இல்ல? அப்புறம் எப்டி அந்த ஸ்கார்பியோக்காரனை உனக்குத் தெரியும்? ஒரு பத்து நாள் தான் நான் இங்கே இல்ல. அதுக்குள்ள ரெண்டு பேரும் கையாட்டி சிரிக்கறளவுக்கு பழகியிருக்கீங்க!”
“அண்ணா! லெட் மீ எக்ஸ்ப்ளெய்ன்!”
தங்கையின் கண்களில் கண்ட அந்த ‘அவனுக்கான’ பிரத்யேக பிரியத்தை இப்போது நினைத்தாலும் எரிந்தது. காலையில் அம்மாவேறு தங்கையைத் தன்னிடமிருந்து பிரிப்பது போல் பேசியதில் மனம் நொந்திருந்தான் ஹரிஷ்.
எல்லாம் சேர்ந்து தற்போது தன்னிலை இழந்தவன் அம்ருவைப் பேசவே விடாமல், அவளைப் போட்டு உலுக்கினான். “அதான் உன் கண்ணே எல்லாத்தையும் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுதே! அவனைப் பார்த்து அப்டி சிரிக்கற? எனக்கு கல்யாணம் ஆனதும் கொஞ்சம் கொஞ்சமா ஒதுங்க ஆரம்பிச்சு, உன் வாழ்க்கையை நீயே டிஸைட் பண்ணிக்கலாம்ன்ற அளவுக்கு அண்ணனை ஒதுக்கிட்டியாடா அம்முக்குட்டி?”
“அடேய் பைத்தியக்கார டாக்டர்! என்னைப் பேச விடுடா!” என்று இவள் அவனுக்கு மேல் இரைந்திட, அறையின் கதவு திறக்கப்பட்டது.
நோயாளியைப் பரிசோதனைக்கு அழைத்து வந்திருந்த ஒரு செவிலியர், “மேடம் இங்கேயா இருக்கீங்க? உங்களை அங்கே பீடியாட்ரிக் வார்ட்ல தேடினேன்.” என்றாள்.
“சொல்லுங்க ரதி!”
“மூணாம் நம்பர் பெட்ல உள்ள குழந்தைக்கு நைட்ல இருந்து ஹை ஃபீவரா இருக்குது. உங்க பேட்ச்மேட் சாம்பவி மேடம் உங்களைத் தேடிட்டிருந்தாங்க. ”
“இதோ வர்றேன்.” என்றவள், நோயாளிக்கு வழிவிட்டு வெளியே வந்தாள்.
அவளைத் தொடர்ந்து ஹரிஷூம் வர, கையிலிருந்த வெள்ளை அங்கியை அணிந்துகொண்டு, அதில் தன் அடையாள அட்டை, பென் டார்ச், குழந்தைகளுக்கான இரத்த அழுத்த சுற்றுப்பட்டை (paediatric BP cuff), சிறிய குறிப்புப் புத்தகம் எல்லாம் எடுத்து வைத்து கடைசியாக ஸ்டெதஸ்கோப்’ஐ அணிந்தாள்.
எல்லாம் எடுத்து வைத்தவாறே தற்போதைக்கு அண்ணனிடம் சொல்ல வேண்டியதையும் சொன்னாள். “நீ நினைக்கற மாதிரி எதுவும் இல்ல ஹரி. நானே அவர் அட்ரஸ் தேடிக்கிட்டு போகல. உன்கிட்ட இதைப்பத்தி பேசணும்னு தான் நீ ரிட்டர்ன் வர்றதுக்கு வெய்ட் பண்ணிட்டிருந்தேன். காலைலயும் அதுக்குதான் உன்னைத் தேடி அம்மாகிட்ட திட்டும் வாங்கினேன். நௌ ஐ’வ் டூ கோ! அப்புறம் பேசலாம்.” என்றவள், தன் முதுகுப் பையை அண்ணன் கையில் திணித்துவிட்டு, “உன் ப்ளாக் போறதுக்கு முன்னாடி எங்க ரூம்ல வச்சிட்டு போ!" என்று சொல்லி நடந்துவிட்டாள்.
ஹரிஷுக்கும் அடுத்த அமர்வு இருந்ததால் கோபம் விடுத்து மனத்தினை ஒருமுகப்படுத்தியவன், தங்கை இட்ட பணியினைச் செய்துவிட்டு மனநல பிரிவை நோக்கி நடந்தான்.
***********
நிறுவனத்தில் தன் கேபினில் அமர்ந்திருந்த அஸ்வத்தின் கவனம் கோகிலா மற்றும் அவளுடைய நண்பனில் இருந்து இடம் மாறி அம்ருதாவின் மேல் குவிந்திருந்தது. அம்ருதாவும் குழந்தை நல மருத்துவத்திற்கு பயில்கிறாள் என்று தெரிந்த கணமே அவளைக் கொன்றுவிட தீர்மானித்திருந்தவன், அவளும் ஒரு மருத்துவ ஆராய்ச்சி குழுவில் இருக்கிறாள் என்று தெரிந்தபோது தன் முடிவினை ஸ்திரப்படுத்தியிருந்தானல்லவா?
ஆனால் தன் குழந்தையின் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்களைக் கண்டுபிடிக்க அம்ருதா முனைப்பு காட்டியபோது, தன் முடிவில் சற்று நிதானித்தான். அத்துடன் இந்த துறையில் இன்னும் எத்தனை பேர் ஆராய்ச்சி என்ற பெயரில் கிளம்பியிருக்கிறார்களோ, அத்தனைப் பேரையும் அம்ரு மூலம் சுலபமாகத் தெரிந்துகொண்டு அவர்களைக் களைந்தெடுக்க எண்ணினான்.
அதன்படி அம்ருதாவைத் தன் பட்டியலில் கடைசியாக வைத்துக்கொண்டவன் அவளின் நட்பினை ஆதரித்தான், ஒரேயொரு நிபந்தனையின் பேரில்! அது - தன்னைப் பற்றி, தன் குழந்தையைப் பற்றிய விவரங்களை யாரிடமும் சொல்லக்கூடாதென்பது!
ஆனால் அம்ருதா தன் நிபந்தனையை மீறியிருக்கிறாள். இப்போதுதானா அல்லது ஆரம்பத்தில் இருந்தா? தெரியவில்லை. ஹரிஷ் தன்னைப் பற்றி கேட்டுவிட்டு, பெண்பிள்ளை என்பதால் தன்னிடம் பேச, பழகக் கூடாது என்று எச்சரித்திருக்கலாம். அவன் எச்சரிக்கையை மீறி அம்ருதா தன்னிடம் நட்பு பாராட்டியிருக்கிறாள். ஏனெனில் அவள் உண்மையாகத் தான் தனக்கு உதவுகிறாள் என்பதில் ஐயமில்லை.
இப்போது பிரச்சினை அதுவல்ல! அம்ருதா தன்னைப் பற்றிய உண்மையை அவள் அண்ணனிடம் வெளியிட்டிருப்பாளாயின், நிச்சயம் ஹரிஷ் தன்னை சட்ட ரீதியாக நெருங்கக் கூடும்! அவன் ரேவதி மற்றும் தாரகேஷ் இருவரின் கொலை வழக்கின் பேரில் தன் மீது புகாரளிக்க முடியும்.
விடக்கூடாது!
அதற்குள் அம்ருதாவின் கதையை முடித்துவிட வேண்டும். தேவைப்பட்டால் அவளின் அண்ணனையும்! இப்படியான தீவிர விசாரத்தில் இருந்த அஸ்வத் அம்ருதாவின் கணக்கை எங்கே, எப்படி முடிக்கலாம் என்று திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.
அதன்படி அவளை அன்று மதியம் அழைத்தவன், “டாக்டர், உங்களைப் பார்க்கணுமே?” என்றான்.
திகைத்துப் போனாள் அம்ருதா. உணவு வேளையில்தான் ஹரிஷிடம் பேச நினைத்திருக்கிறாள். அதற்கு முன் அஸ்வத்தைச் சந்திப்பது உதிசமாக இராதே! “எ எனக்கு பிஸி ஷெட்யூலா இருக்குதே சர்… ஈவ்னிங் பார்ப்போமா?”
“ஏன் உங்கண்ணா என்கிட்ட பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாரா?”
“அச்சோ! அப்டியெல்லாம் இல்ல…”
“பின்ன? மார்னிங் என்னைப் பார்த்ததும் ஏன் உங்களை அப்டி இழுத்துட்டு போகணும்?”
“சர்…”
“பேசணும் டாக்டர். நான் உங்க ஹாஸ்பிடல் பக்கத்துல தான் இருக்கேன்.”
அஸ்வத்தின் அழுத்தக் குரலில் தவிப்புடன் விழித்தாள் அம்ருதா. ஹரிஷிடம் சொன்னால் அனுமதிக்க மாட்டான். செல்லாமல் இருந்தால் அஸ்வத்தின் மன இறுக்கம் அதிகமாகக் கூடும். “வந்து… ஃபோன்ல சொல்ல முடியாதா?”
“.....”
“சரி, எங்கே இருக்கீங்க? பக்கத்து காஃபி ஷாப்’ஆ? ஃபைவ் மினிட்ஸ் ஓகேவா?”
“ஃபைவ் மினிட்ஸ் போதும். ஆனா காஃபி ஷாப் இல்ல!” என்றவன் இடத்தைக் குறிப்பிட, கலவரமாகிப் போனாள் அம்ருதா.
“என்ன?! அங்கே எப்டி? அங்கே ஆள் நடமாட்டமே இருக்காதே?”
“அப்போதான் டிஸ்டபர்ன்ஸ் இல்லாம பேச முடியும் டாக்டர்.” - பிடிவாதக் குரல்.
அவன் சொல்லும் இடம் மருத்துவமனை வளாகத்தையொட்டி பின்புறம் இருக்கிறது. ஆனால் அதுவொரு சிதிலமடைந்த, இரண்டு தளங்களைக் கொண்ட கட்டிடம்! யாரோ ஒரு அண்ணன் - தம்பிக்கு பாத்தியப்பட்ட இடம். அவர்களுக்குள் சொத்து தகராற்றின் காரணமாக, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்தக் கட்டிடத்தைப் பக்கத்திலுள்ள வணிக நிறுவனம் ஒன்று தங்களுக்கு விற்றுவிடுமாறு கேட்டுக் கொண்டிருப்பது வேறு விடயம்!
மருத்துவமனையின் அருகே அந்த பெரிய வணிக வளாகம் இருப்பதால், வெளியே சிறிய வாயில் தவிர, உள்ளடங்கி இருக்கும் அந்தக் கட்டிடம் சாமானியத்தில் வெளிப் பார்வைக்கு புலப்படாது. அங்கே ஏன் வர சொல்கிறான் இவன்?
அம்ருதா பழகிய வரையில் அஸ்வத் எப்போதும் இப்படி பிடிவாதமாகப் பேசியதில்லை. இப்போது ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் என்று தெரிந்தது.
அவன் வீட்டிற்கு இவள் வருகிறேன் என்று சொன்னபோதே அவன் குரல் தயக்கத்தை வெளிப்படுத்தியது. அவன் வீட்டில் தனியே இருந்தபோது மட்டுமல்லாது, ஒவ்வொரு சந்திப்பிலும் கூட இவளுக்கு பாதுகாப்பைத் தான் உணர்த்தியிருந்தான் அஸ்வத். சில நேரங்களில் மிகுந்த கவனத்துடன் தன்னிடமிருந்து விலகி அமர்ந்ததெல்லாம் நியாபகத்தில் வந்து போனது. ஒரு பெண்பிள்ளையாக அம்ருதா இத்தனை தூரம் அவனை நம்புவதும் கூட அதனால்தான்!
அப்படிப்பட்டவன் இன்று இத்துணை அடம் செய்கிறான் என்றால், அது காலையில் ஹரிஷின் செயலைக் கண்டுதான் என்று ஊகிக்க முடிந்தது. சரி, அவனை முதலில் சமாதானம் செய்துவிட்டு பின்னர் ஹரிஷிடம் பேசலாம் என்று முடிவெடுத்தவளால், ஹரிஷிடம் சொல்லாமல் வெளியே செல்ல இயலவில்லை.
சொல்லாமல் போனால் அண்ணன் வருந்துவானென்று அவனுக்கு அழைத்து பத்தே நிமிடங்களில் வந்துவிடுவதாகவும், தனக்காக காத்திராமல் மதிய உணவை உண்ணுமாறும் சொல்லிவிட்டு அஸ்வத்தைத் தேடிப் போனாள்.
புலியின் பசி வேட்கையுடன் காத்திருந்த அஸ்வத், வாயில் பகுதியில் முளைத்திருந்த செடிகளை விலக்கிவிட்டு, சரியும் துப்பட்டாவைச் சரியாக அணிந்துகொண்டு விழிகளைச் சுழற்றி தன்னைத் தேடியவாறு உள்ளே வந்த அம்ருதாவைப் பார்த்ததும் குரூரமாக இதழ் வளைத்தான்.
தூசும் தும்பும் அழுக்குமாகக் கிடந்த அக்கட்டிடத்தின் ஜன்னல் சட்டங்களெல்லாம் கரையானுக்கு இரையாகியிருந்தது. இருந்தும் இரண்டு பக்கங்களிலும் பெரிய பெரிய கட்டிடங்கள் இருப்பதால் இங்கே வெளிச்சமில்லாமல் அரையிருளாகவே இருந்தது. அதுவும் உடைந்திருந்த மேற்கூரையின் வழியாக வரும் வெளிச்சமே!
அறவே வெளியுலக வாசனையற்ற அவ்விடத்தினுள் நுழைந்ததுமே அம்ருவின் அடிவயிற்றை பயம் வந்து தடவிப் பார்த்தது. அதனால் உண்டான எரிச்சல் அவள் முகத்தில்!
“டாக்டர்! இங்க! மேல!” என்றவன் முதல் தளத்திலிருந்து கையசைக்க,
நிழலுருவமாகத் தெரிந்தவனை விழியுயர்த்திப் பார்த்து, “இங்கே எதுக்கு வர சொன்னீங்க அஸ்வத்? வாங்க முதல்ல வெளியே போகலாம். எங்க ஹாஸ்பிடல் கேன்டீன்ல கூட பேசலாம்.” எனப் பயத்தை மறைத்து படபடக்கும் பெண்ணிடம்,
“ஆனா எனக்கு இங்கேதானே வசதியா இருக்கும் டாக்டர்?” என்றான் எகத்தாளமாக!
கீழிருந்து பார்க்க இருளில் அவன் முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் குரலில் இருக்கும் த்வனி, பூரணமாக அஸ்வத்தின் திமிரைக் காட்டியது. அவனிடம் ஏதோ தவறிருப்பதாக உள்மனம் எச்சரித்தது. ஆனால் அஸ்வத்தால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற குருட்டு நம்பிக்கையோ அல்லது தன் தைரியத்தின் மீதுள்ள நம்பிக்கையோ! எதுவோ ஒன்று அவளின் கால்களைப் படிக்கட்டில் உயர வைத்தது.
“அண்ணா மேல கோவமா இருக்கீங்க போல?” என்றவாறு அஸ்வத்தை நெருங்க,
எள்ளல் நகை புரிந்தான் அவன். “அவர் மேல ஏன் கோவப்பட போறேன் டாக்டர். என் கோபமெல்லாம் உங்க மேல தான்!”
இப்போது கொஞ்சம் அவன் முகம் தெரிந்தது. “என் மேலேயா?”
“ம்ம்…” யாரும் ரசிக்க விரும்பாத வசீகரப் புன்னகை அவனிடம்!
அந்தப் புன்னகையில் அம்ருதாவின் கால்கள் தன்னைப்போல் பின்னால் நகர்ந்தன. “அஸ்வத்!”
“யாஹ்! இட்’ஸ் மீ!” புன்னகையை மாற்றாமல் முன்னால் நகர்ந்தான்.
“எ… எதுக்கு வர சொன்னீங்…” வார்த்தையில் தடுமாறியவளின் கால்களும் தடுமாறி, அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டில் தட்டி நின்றன.
“ரேவதி போன இடத்துக்கு உங்களையும் அனுப்பறதுக்கு!”
விதிர்த்துப் போன அம்ருதாவை, வீட்டின் குறுக்கே சலசலப்பை ஏற்படுத்தி ஓடிய எலி ஒன்று தன்னிலை அடையச் செய்தது. விழிகளை விரித்து அச்சங்கொண்டு நின்றதெல்லாம் இரு நிமிடங்கள் தான்! அவளால் அஸ்வத்தை ஒரு கொலைகாரனாக நினைக்கவே முடியவில்லை.
இப்போதும் அவனுக்கு மனநல ஆலோசனை தேவை என்ற ரீதியிலேயே சிந்தித்தவள், பயத்தை ஒதுக்கிவிட்டு நிதானத்துடன் கேட்டாள். “என்னைக் கொல்லப் போறீங்களா? எதுக்கு?”
அவளின் நிதானம் இவனுக்குள்ளிருந்த அகங்காரத்தைச் சீண்டிவிட்டது. “எதுக்குன்னு உனக்கு தெரியாது?” என்றபடி அவளை நெருங்கி குனிந்து உறுத்து விழித்தான்.
“தெரியலயே! உயிரை எடுக்கணும்னு நினைக்கறளவுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன்?” அவனிடமிருந்து விலக நினைத்து பின்புறமாக மேலே ஏறினாள்.
அவளை விலக விடாது அவனும் முன்னேறினான். “நீயும் மருந்து கண்டுபிடிக்கறேன்னு ஊரை ஏமாத்திக்கிட்டு திரியற கூட்டம் தானே?”
நின்றுவிட்டாள் அம்ருதா. அவனைப் பேச தூண்ட எண்ணி, “ஸோ?” என்று கேட்டு நிறுத்த,
பல்லைக் கடித்த அஸ்வத், “என்ன ஸோ? கொல்லப் போறேன். முதல்ல உன்னை! அப்புறம் மருந்து கண்டுபிடிக்கறேன்னு எவன் எவன் கிளம்பிருக்கானோ அத்தனைப் பேரையும் கொல்லுவேன்.” என்று விழிகளில் நெருப்பைக் கக்க,
கன்னங்குழி அதிர சத்தமாகச் சிரித்தாள் அம்ருதா. “ஹஹ்ஹஹ… உங்களை நான் என்னவோன்னு நினைச்சேன் சர்… ஆனா இப்டியொரு தத்தியா இருப்பீங்கன்னு…. ஹாஹஹா…”
“ஏய்ய்!” என்று ஆக்ரோஷித்தவன் அவள் கழுத்தைப் பிடித்திருந்தான்; திமிறினாள்.
“நீ ஒரு பீடியாட்ரிஷன்னு சொன்னதும் உன்னைப் பார்த்த அன்னிக்கே போட்டிருப்பேன். சந்தேகம் வந்துடக் கூடாது. என் அம்மு பேர் வெளியே தெரிஞ்சிக்க கூடாதுன்னு பொறுத்திருந்தேன். அதுக்கப்புறம் அன்னிக்கு என் வீட்டுக்கு வந்தியே… அப்போ தான் உனக்கு டைம் ஃபிக்ஸ் பண்ணேன். ஆனா நீ எனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்ன! அதனாலதான் அந்த ஃபீல்ட்ல இருக்க உன்னை யூஸ் பண்ணிக்க நினைச்சு அன்னிக்கு உன்னைச் சும்மா விட்டேன்.”
ஏற்கனவே அஸ்வத்தின்பால் தனக்கு ஒருவித ஈர்ப்பு இருக்கிறதென்று புரிந்துதான் இருந்தாள் இவள். ஆனால் வெறும் ஈர்ப்பென்று இப்போது நினைக்க முடியவில்லை.
‘உன்னை உபயோகித்துக் கொள்ள நினைத்தேன்.’ என்றவனின் கூற்றில் ஏனோ அழுகை வந்தது. அவன் இவள் கழுத்தைப் பிடித்திருந்த பிடியை விட உள்ளுக்குள் பெரிதாய் வலித்தது. இத்தனை நேரம் திமிறிக் கொண்டிருந்தவள் அவனுக்கு கழுத்தைக் கொடுத்துவிட்டு அமைதியாக நின்றாள்.
அவளின் வெதுவெதுப்பான கண்ணீர் அஸ்வத்தின் புறங்கையை நனைக்க, “வலிக்குதா டாக்டர்?” என்றவன் போலி இரக்கத்துடன் பிடியைத் தளர்த்திட, அவன் கையைத் தட்டிவிட்டு மேலேறி ஓடிப் போனாள் அம்ருதா.
கீழே இருந்ததை விட இந்த தளத்தில் வெளிச்சம் மிகுதியாக இருக்க, அவனுக்கு அழுகை முகத்தைக் காட்டிடாமல் திரும்பி நின்றுகொண்டாள்.
“இங்கிருந்து எங்கேயும் தப்பிக்க முடியாது டாக்டர். லாஸ்ட் வீக்லயே வந்து பார்த்துட்டேன். அந்த ஒரு வாசல் தவிர வெளியேற வேற வழியே இல்லை. என் காரைக் கூட நான் எடுத்துட்டு வரல. ஸோ வேலை முடிஞ்சதும் வந்த தடம் தெரியாம வெளியேறிடுவேன். இப்போ நீங்க என்ன செய்றீங்க… உங்க மொபைல்ல இருக்க என்னோட கான்டாக்ட்ஸை மொத்தமா அழிக்கறீங்க!” என்று சிரித்தவன் இரு கைகளிலும் க்ளவ்ஸ் அணிந்திருந்ததை அப்போதுதான் பார்த்தாள் அம்ருதா.
அவள் பார்வைக் கண்டு கண்கள் சிமிட்டினான் அவன். “பக்கா ப்ளானிங்!”
அவன் தன்னை நெருங்க வழி கொடுக்காமல் நகர்ந்து கொண்டேயிருந்தாள். அது புரிந்தவன் சடுதியில் நீள எட்டு வைத்து அவளைப் பிடித்திழுக்க, உலுக்கிய வேகத்தில் துப்பட்டா சரிந்து அவன் கையில் விழுந்து புரண்டு படுத்தது. அதனை இடக்கையால் இழுத்து தூர எறிந்துவிட்டு, அவள் தாடையை இறுகப் பற்றியவன் பாக்கெட்டிலிருந்து சிறிய கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து அழுத்தினான். “தப்பிக்க முடியும்னு நினைக்கறியா?”
“விடுங்க அஸ்வத்!” கண்களை மூடிக்கொண்டு முகத்தை இப்படியும் அப்படியுமாகத் திருப்பி விடுவித்துக் கொள்ள முயன்றாள்.
அசைந்ததில் அஸ்வத்தின் கூர்மிகு கத்தி அவள் கழுத்தில் லேசாகக் கோடிழுக்க, அவன் கரம் நடுங்கியது. “அசையாதேடீ! கழுத்தைக் கிழிச்சிடும்!” என்று சீறினான்.
“கொல்லத் தானே போறீங்க? அழுத்தமா போடணும் சர்! நீங்க கிழிச்சிருக்கறது மேல் தோல்தான்! அதுக்கு கீழே சப்க்யூடேனஸ்ன்னு இரத்த நாளம் இருக்கற பகுதி! அதுக்கும் கீழே ஃபேஷியா - தசையை உறை மாதிரி பாதுகாக்கற பகுதி! அதுக்கப்புறம் மஸல்ஸ் இருக்கும். அதுக்கும் கீழே வெய்ன்ஸ், நர்வ்ஸ், ஆர்டீரியஸ்! கடைசியா தான் டிராச்சியா அதாவது வின்ட் பைப்! நீங்க வெய்ன்ஸ் கட் பண்ணாலே ஒரு செகண்ட்ல உயிர் போயிடும்! கொல்லணும்னு நினைக்கறவங்க இப்டி மேல் தோல் கிழிச்சிட்டு பார்த்துட்டு இருக்க மாட்டாங்க.”
கத்தி கழுத்தில் இருந்தபோதும் மிக இயல்பாகப் பேசினாள். ஏனெனில் அஸ்வத்தின் பெருவிரல், அங்கே தலைநீட்டிய சிவப்பு நிற திரவத்தை வருடி துடைத்தது. அவளுக்கு எரிச்சல் ஏற்படா வண்ணம் அவன் மூச்சுக்காற்றை மருந்தாக்கினான்.
அவனால் தனக்கு தீங்கிழைக்க முடியாதென்று புரிந்த கணம், அவளுக்குள்ளிருந்த இனம் புரியா உணர்வொன்று கர்வம் கொண்டு சிலிர்த்தது. அச்சம் போய் பழைய இயல்புடன் பேசினாள்.
அவன்தான் அதைக் கவனிக்கவில்லை. அவள் முகம் நிமிர்ந்து தன்னை நோக்கியிருக்க அஸ்வத் அவள் கழுத்தைத் தான் பார்த்திருந்தான்.
சிதிலமடைந்த மேற்கூரையின் வழியே வந்த வெளிச்சக்கீற்று அம்ருவின் மேல் விழ, அவளின் வெளிர் நிற கழுத்துப் பகுதியில் சற்றுமுன் இவன் இறுக்கியதில் க்ளவ்ஸ் அணிந்திருந்தாலும் கைத்தடம் இள ரோஜா நிறத்தில் அழுத்தமாகப் பதிந்திருந்தது. அதையும் சேர்த்தே வருடினான். அவன் கண்கள் மேலும் கீழிறங்கிட, சத்தியமாக அவளிடம் சலனப்பட்டான் அஸ்வத்.
இவன் திருமண நாளின் இரவில் ரேவதியின் செயலுக்கு பிறகு, இவனால் எந்தப் பெண்ணையும் நெருங்க முடிந்ததில்லை. இவன் நிறுவனத்திலேயே சில பெண்கள் இவனை நெருங்கியிருக்கிறார்கள். எந்தப் பெண்ணிடமும் சலனமே தோன்றவில்லை என்பதுதான் நிஜம்! அத்தனைக்கு ரேவதியின் செயலில் அருவருத்துவிட்டோம் போலும் என்று அந்த எண்ணத்தையே ஒதுக்கித் தள்ளிவிட்டான்.
ஆனால் இன்னும் உன் உணர்வுகள் விழிப்போடுதான் இருக்கின்றன என்று அவனுக்கே அவனை உணர்த்தியது நெருக்கத்தில் தெரிந்த அம்ருவின் சிவந்த கழுத்தும் அங்கங்களும்!
‘ச்ச! சாவடிக்கணும்னு நினைச்சிட்டு நீ செத்திட்டு இருக்கடா!’ என்ற மனக்குரலில் கண்மூடித் திறந்தவன், கத்தியை மடக்கிவிட்டு அவள் தாடையை அழுத்திக்கொண்டு கண்ணோடு கண் பார்த்துக் கேட்டான். “என் பர்சனல் வெளியே போகக்கூடாதுன்னு சொல்லியும் உன் அண்ணன்காரன் கிட்ட எல்லாத்தையும் சொல்லியிருக்க! அவனோட சேர்ந்துக்கிட்டு என்னை ஜெயில்ல தள்ற ப்ளானா?”
“அய்யோஓ..! அவன்கிட்ட இதுவரைக்கும் நான் எதையுமே சொல்லல! எல்லாத்தையும் நீங்களா இமாஜின் பண்ணிக்கிட்டா எப்டி?”
கன்னத்தை அழுத்தி உலுக்கினான். “அப்புறம் எப்டி அவனுக்கு என்னைத் தெரியும்? காலைல ஏன் அவன் என்னைத் தெரிஞ்ச மாதிரி பார்த்து முறைச்சான்?”
“வலிக்குது அஸ்வத்!” என்று முகம் சுருக்கியதில், தானாகவே அவன் பிடியின் அழுத்தம் குறைந்தது. ஆனால் அவளை விடவில்லை.
நிமிர்ந்தவாக்கிலேயே இருந்த அம்ருதா அவன் முகம் பார்க்க மறுத்து விழிகளை அலைகழித்தாள். பதில் சொல்ல வந்து பின் தயங்கி, திறந்து மூடும் அவளின் இதழ்கள் அஸ்வத்தை மீண்டும் கவனம் சிதற செய்தது.
இத்தனை வருடங்கள் இல்லாமல் இதென்ன புதிதாய் உயிரைக் கேட்கும் உணர்வு?
‘ச்ச! இந்த டாக்டர் உயிருடன் இருப்பது தனக்கு ஆபத்து!’ என்று உள்ளம் எச்சரிக்க மீண்டும் கழுத்தை அழுத்திப் பிடித்தான். “சொல்லு! என்னை எப்டி உங்கண்ணனுக்கு தெரியும்?”
வலியில் விழிகள் சுருக்கி அவன் கரத்திலிருந்து விடுவித்துக்கொள்ள போராடியவள், “உங்… உங்களை…” என்று பேசத் திணறிட,
அவள் விழிகள் சிவந்து நீரைச் சிதறவிட்டதில், ஏனோ இவனுக்குள்ளும் பதற்றம்! அவளை நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும் அவதி! விரல்கள் தன்னைப் போல் இளக்கம் காட்டின.
“உங்களை இல்ல; உங்க ஸ்கார்பியோவைத் தெரியும்." என்றவள் இருமிவிட்டு மேலும் சொன்னாள். "அன்னிக்கு அந்தக் காட்டுப்பக்கம் உங்களைப் பார்க்கறதுக்கு முன்னாடியே உங்க டிரைவிங் ஸ்கில்ல இம்ப்ரஸாகி நான் உங்க முகம் பார்க்கணும்னு சொன்னதால அண்ணா உங்க காரை ஃபாலோ பண்ணினான்.”
ஸ்வேதாவிற்கு ஏற்பட்ட தொந்தரவையும் அதனால் மகிழுந்தை நிறுத்தி இறங்கியதையும் சொன்னவள், "எங்கண்ணா எவ்ளோ டிரைப் பண்ணியும் உங்களைப் பிடிக்கவே முடியல. அதனாலதான் அங்கே என்னை இம்ப்ரஸ் பண்ண ஸ்கார்பியோ நிற்கறதைப் பார்த்துட்டு நான் உள்ளே வந்தேன்." என்றாள்.
ஆரம்பத்தில் அம்ருதா தன்னைச் சுலபமாக நெருங்கி வந்ததன் மர்மமும், ஒவ்வொரு முறையும் அவள் தன் மகிழுந்தை ஒருவித லயிப்புடன் வருடியதன் காரணமும் தெரிந்தவனுக்கு எதிலிருந்தோ விடுபட்ட உணர்வு! அது அம்ரு தன் நம்பிக்கையில் பொய்த்துப் போகவில்லை என்று புரிந்ததால் உண்டான நிம்மதியுணர்வு என அவனின் ஆழ்மனத்திற்கு தெரிந்தது.
நீண்ட நேரம் நிமிர்ந்தே இருந்ததில் அம்ருவிற்கு கழுத்து வலியெடுத்தது.
இவனின் அழுத்தம் குறைந்ததும் அண்ணாந்திருந்த கழுத்தை மெதுவே தாழ்த்தினாள்.
அவள் அழுததால் விழிகளைத் தாண்டி கலைந்திருந்த மையில் கரைந்துவிடத் தோன்றியது அவனுக்கு. விழி மூடியிருந்த அம்ருவிற்கு அவன் சலனங்கள் எதுவும் தெரியவில்லை.
அஸ்வத் தன்னிலை மறந்து கொண்டிருந்தான். இன்று இரண்டாம் முறையாக அவளின் கன்னக்குழியைக் கவனித்துப் பார்த்தவனின் பெருவிரல் கத்தியைத் தவறவிட்டு விட்டு, மெல்ல திரும்பி அங்கே புதைந்துவிட எத்தனிக்க,
மிகச் சரியாக அப்போது அங்கே வந்த ஹரிஷ், கண்ட காட்சியில் ஆவேசமடைந்து, “அம்மூ!" என்று இரைந்தபடி அஸ்வத்தைத் தாக்க வந்தான்.
இவன் அம்ருவையும் அணைத்துக்கொண்டு லாவகமாக நகர்ந்து தள்ளி நின்றிட, இருவரும் இன்னும் நெருங்கியிருந்தனர். அதில் அஸ்வத் மூச்சை இழுத்துப் பிடித்தானெனில், ஹரிஷால் நிலைமையை சீரணிக்க முடியவில்லை.
அஸ்வத்தின் வலது உள்ளங்கையில் இலையைத் தொட்ட மென்மை! காரணம் அவன் உள்ளங்கை அம்ருவின் வெற்று புஜத்தை அணைத்துப் பிடித்திருந்தது. மெஜந்தா நிற பருத்தி துணியில் பட்டு நூல் கொண்டு நெய்யப்பட்ட, கையில்லாத குர்தி அணிந்திருந்தாள். அதையே இப்போதுதான் பார்க்கிறான். சட்டென்று அவளை விட்டு விலகி நிற்க,
ஹரிஷ் அங்கேயிருந்த உடைந்த நாற்காலியின் காலை எடுத்து ஆத்திரத்துடன் அஸ்வத்தை அடிக்க வந்தான்.
நடுவே வந்து நின்றாள் அம்ருதா. “ஹரி, நான் சொல்றதைக் கேளு!”
“உன்னை சொல்லணும் அம்மு! அவன் கூப்பிட்டான்னு எதை நம்பி இந்த இடத்துக்கு தனியா வந்த? அப்டியா காதல் அறிவை மறைக்குது? அவனோட டிரைவிங் ஸ்கில் தவிர வேற என்ன தெரியும்னு அவனை லவ் பண்ற நீ? பாரு! அவன் புத்தியைக் காமிச்சுட்டான்!”
“லவ்’ஆ?!” என்று அஸ்வத் விழிக்க,
‘அய்யோ! பைத்தியக்கார டாக்டர் சொதப்பிட்டான்!’ என்று நொந்துபோனாள் அம்ருதா!
Still roads, storming hearts💞...
(கதை போலவே இதுல வர்ற இடங்களும் கற்பனைங்க!)
Comments
Post a Comment