
அத்தியாயம் 19
உணவு இடைவேளையில் பேசலாம் என்ற தங்கை அந்த நேரத்தில் அழைத்து பத்து நிமிடங்களில் வந்துவிடுகிறேனென சொல்ல, கடுப்பாகிப் போனான் ஹரிஷ். செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவனால் உடனே வரவும் முடியவில்லை.
தங்கை தன்னிடம் மர்மமாக நடந்துகொள்வதில் ஏற்கனவே அதிருப்தியில் இருந்தவன், அவளின் தற்போதைய நடவடிக்கையில் மிகுந்த கோபம் கொண்டான். பத்து நிமிடத்தில் பக்கத்தில்தான் எங்கேனும் சென்றிருக்கக்கூடும் என்று கணித்து வேலை முடிந்ததும் அவளுக்கு அழைக்க, அவள் அழைப்பை ஏற்கவில்லை.
வேலையின் நடுவே தொந்தரவாக இருக்கக் கூடாதென அவள் அலைபேசியை நிசப்தத்தில் வைத்துவிடுவது வழமை தான்! இருப்பினும் வெளியே சென்றிருக்கும்போதும் தன் அழைப்பை ஏற்காதது நெருடலைத் தரவே, வெளியில் வந்தவன் வாயில் காப்பாளரிடம் கேட்டான். அவர் அம்ருதா வெளியே வரவேயில்லை என்றார்.
சில நிமிடங்கள் குழம்பியவன் முன்பக்கம் வரவில்லையென்றால் ஒருவேளை பின்பக்கம் வழியே சென்றிருக்கலாமே என்று அங்கே ஓடினான். அம்ருதாவிற்கு அழைத்துக்கொண்டே ஊசி போடும் அறை, நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுகள், மாதிரி சேகரிப்பு அறை, மருத்துவ ஆய்வகப் பிரிவு, பராமரிப்பு அறை, பிணவறையைக் கடந்து பின்சேவை நடைபாதை தாண்டி, அவசர ஊர்தி நிற்கும் பகுதிக்கு வந்திருந்தான். அழைப்பு போய்க் கொண்டேயிருந்ததில் பதற்றம் அதிகரித்தது.
அடுத்த ப்ளாக் செல்லும் வழியிலிருந்து எதிர்ப்பட்ட ஒரு ஊழியரிடம் கேட்க, ‘தெரியவில்லை’ என்ற பதிலே கிடைத்தது. ஹரிஷ் மீண்டும் அலைபேசியைக் காதில் வைத்துக்கொண்டு வெளிவாசலை அடையும்போது ஏதேச்சையாக அவன் பார்வை உயர்ந்து பக்கத்து கட்டிடத்தின் ஜன்னல் பெயர்ந்த சுவற்றில் படிந்து மீள, துணுக்குற்று மீண்டும் உற்றுப் பார்த்தான். அங்கே அம்ருதாவின் மெஜந்தா நிற டிஷ்யூ துப்பட்டாவின் முனை காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.
அவ்வளவுதான்! உயர் வேகத்தில் துடித்த இதயத்தைப் பற்றியும் கவலைக்கொள்ளாமல், அதனை விடவும் வேகமாக ஓடி வந்திருந்தான். இங்கே அவனின் தங்கையிடம் அந்த ஸ்கார்பியோகாரன் சல்லாபம் செய்துகொண்டிருக்க, அவளும் அவனைத் தடுக்காமல் அவனுக்கு வாகாக முகத்தை ஏந்திக் காட்டிக்கொண்டிருக்கிறாள்! இப்படியான புரிதலில் விழைந்த ஆத்திரத்தில்தான் ஹரிஷ் அஸ்வத்தை அடித்து நொறுக்க எண்ணினான்.
ஆனால் அவன் தங்கை வேறு கதை சொன்னாள். “நீ நினைக்கற மாதிரி லவ்வு மண்ணாங்கட்டி ஒண்ணுமில்ல!”
காதல் என்றதும் அஸ்வத்தின் முகமும் விளங்கா பாவனையைக் காண்பிக்க, அதனைக் கண்ட ஹரிஷ் நிதானித்தாலும் அவன் பார்வையின் சூடு குறையவில்லை. “பின்ன இங்கே என்ன பண்ற?”
ஊசலாடும் துப்பட்டாவைக் கைப்பற்றி கழுத்திலிடும் சாக்கில் அஸ்வத்தின் புறம் திரும்பிய அம்ருதா, இதழ் இறுக்கி, விழி உருட்டி ஒற்றைப் புருவம் தூக்கி எச்சரிக்கும் செய்கைக் காட்டினாள்.
‘நான் என்ன சொன்னாலும் வாயைத் திறக்கக் கூடாது!’ என்பதே தேவியின் விழிமொழி!
அவளின் கன்னக்குழியும் புருவத் தூக்கலும் அஸ்வத்தின் மனத்தினைத் தடுக்கிவிட, காயம் படாமல் தட்டித் தட்டி புதிதாய் ஒட்டும் உணர்வினை உதறி தள்ளி அதனை எழச் செய்தான்.
“லிஸன் ஹரி! முதல்ல நானே சர் வீட்டுக்குப் போகல. யூ நோ அவரோட பேபி என்னோட பேஷண்ட்!”
நம்பாத த்வனியில், “ஓஹோ!” போட்டான் ஹரிஷ்.
அவனை நம்ப வைத்துவிடும் மும்முரத்தில் அம்ருதா! “அவளுக்கு… ஹ… ஆங்! ஜான்டீஸ்! நா நான்தான்… ட்ரீட் பண்ணேன். அன்ஃபார்ச்சூனேட்லி என்னால… காப்பாத்த முடியாம போச்சு… இப்போ குழந்தையை நினைச்சு சர் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கார். நான்தான் எங்கண்ணா கிட்ட ரெண்டு செஷன்ஸ் வாங்க சர்! மைண்ட் ரிலாக்ஸாகும்னு சொன்னேன். அதான்… நீ ஊர்ல இருந்து வந்தட்டன்னு சொல்லி இ இன்னிக்கு காலைல அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்க வர சொன்னேன். ஆனா நீ அதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டு… லவ் அது இதுன்னு…”
அவளே உடனடி கதை புனைய திணறி திக்கிக் கொண்டிருக்க, அஸ்வத் வேறு அவன் பங்கிற்கு இவள் காதில் கடுப்பேற்றினான். “உங்களுக்கு இவ்ளோ பொய் சொல்ல வருமா டாக்டர்? ஆனா நிறைய ஷேக் ஆகுது உங்க வாய்ஸ்! உங்கண்ணா ஈஸியா கண்டுபிடிச்சிடுவார்.”
பல்லைக் கடித்து அவனை முறைத்துக் கொண்டிருக்கையில் ஹரிஷ் கடுமையுடன் கேட்டான். “அப்புறம் ஏன் சர் உன்னை இந்த மாதிரி ஒரு இடத்துக்கு வர சொல்லியிருக்கார்? நீயும் கொஞ்சமும் தயக்கமில்லாம ஓடோடி வந்து நிற்கற!”
இந்தக் கதையை ஏற்கனவே அம்ருதா அவனிடம் சொல்லியிருந்தாலும் இன்னமும் அவனுக்கு அதில் நம்பிக்கை வரவில்லை. ஏதோவொரு மர்மம் தன் அம்முக்குட்டியிடம் இருப்பதாக அவன் உள்ளுணர்வு சொன்னது.
இப்போது அஸ்வத்திற்கு தெரியாமல், தந்தையாக கண்டிக்கும் பார்வையுடன் நின்றவனிடம் கண்காட்டினாள். அதில் அவன் இமைகள் இடுங்கியது.
“அ… அதான் சொன்னேனே ப்ரோ! சர் கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்கார். எப்பவும் நல்லா இருந்தாலும் சில சமயம் டிப்ரஷன், ஆங்ஸைட்டின்னு கஷ்டப்படறார். இப்போ கூட நான் அவரோட பேபியைக் காப்பாத்தாம விட்டுட்டேன்னு என் மேல கோபம் வந்து…”
அவள் சொன்னதைக் கேட்ட அஸ்வத் நினைவு வந்தவனைப் போல் சட்டென அவளின் கழுத்திலிருந்த துப்பட்டாவை ஹரிஷின் கண்முன்னேயே உருவிட, “ஹேய்ய் ****” என்றொரு மோசமான வார்த்தையுடன் அவன் தாடையில் முஷ்டியை மடக்கி குத்த வந்த ஹரிஷை,
“டாக்டரை ஹர்ட் பண்ணிட்டேன். மருந்து போடணும்.” என்று அவசரகதியில் சொன்ன அஸ்வத்தின் அலைமோதல் தடுத்து நிறுத்தியது.
அஸ்வத் ஒற்றை விரலால் காயம் கண்ட கழுத்தைத் தொட்டுக் காட்டினான். அம்ருதா கூச்ச உணர்வுடன் அவன் விரலைத் தடுக்க, காயத்தைக் கண்ட ஹரிஷின் கருத்தில் வேறெதுவும் படவில்லை.
“அவனொரு சைக்கோன்னு தெரிஞ்சும் அவனை நம்பி ஏன் தனியா வந்த அம்மு?” கண்கள் கலங்கிவிட்டன. அவனின் தந்தையுள்ளம் தவித்தது.
அஸ்வத்தின் விழிகள் ஹரிஷின் மேல் நிலைத்தன.
“வலிக்குதாடா அம்முக்குட்டி? சீக்கிரம் வா!” என்றவன் சிவந்திருந்த அவள் கண்களையும் தன் கைக்குட்டையால் ஒற்றியெடுத்தான்.
நிலைத்த விழிகள் நிலைத்தபடி உடல் இறுகினான் அஸ்வத்.
“பதறாதே ஹரி! பெரிய காயம் ஒண்ணுமில்ல.” என்று அம்ருதா சமாதானம் செய்ததையெல்லாம் பொருட்படுத்தாத ஹரிஷ், மேலும் மேலும் ஒரு குழந்தையைக் கவனிக்கும்விதமாக, அம்ருவின் காயத்தில் காற்றை ஊதிவிட்டும், அவளைக் கை தாங்கலாகவும் அழைத்துப் போக, இப்போது அஸ்வத்தின் விழிகள் வன்மத்துடன் அம்ருதாவிடம் படிந்தன.
வெளிவாசல் வரை வந்துவிட்டவனிடம் கெஞ்சினாள் அம்ருதா. “அண்ணா ப்ளீஸ் சொதப்பாதே! அஸ்வத்தை உன்கிட்ட ட்ரீட்மெண்ட்க்கு வர வைக்க ஏதேதோ செஞ்சுட்டிருக்கேன். ப்ளீஸ் கோ-ஆப்ரேட் வித் மீ’ண்ணா!”
“இவனுக்கு நான் ட்ரீட் பண்ணனுமா? நாலு அறை வேணும்னா விட்டுட்டு வர்றேன்.” என்று சட்டைக் கையை மடித்தவனை, முயன்று இழுத்து நிறுத்தினாள்.
“ப்ளீஸ்ண்ணா! ப்ளீஸ்ண்ணா! அஸ்வத் பாவம்ணா! அவருக்கு இப்போ நம்மள விட்டா யாருமில்லை. தனியா இருந்து குழந்தையை நினைச்சு ரொம்ப கஷ்டப்படறார்.”
“அதுக்கு? உன்னைக் கொல்லப் பார்த்தவனை நான் சும்மா விடறதே பெரிய விஷயம் அம்ரு! நீ என்னடான்னா என்னை அவனுக்கு ட்ரீட் பண்ண சொல்லிட்டிருக்க!”
கெஞ்சலை விடுத்து விஞ்சிக் கொண்டாள் அவன் தங்கை. “சரி, நீ பார்க்கலன்னா போ! நான் டாக்டர் அபீர் திரிவேதி கிட்ட பேசிக்கறேன். என்ன… அவர் ஏன் உங்கண்ணனை ரெஃபர் பண்ணாம என்கிட்ட வர்றன்னு கேட்பார்… நான்… நான்… அஸ்வத்தை… என்… என்னோட…” மிரட்டுவதற்காகத் தான் என்றாலும் அண்ணன் முகம் பார்த்து அவனுக்கு பிடிக்காத விடயத்தைச் சொல்லிவிடும் திராணி அவளிடமில்லை.
மனநல துறையைப் பொறுத்தவரை ஒரு மருத்துவர் தனக்கு நன்கு தெரிந்தவர்கள், நெருங்கியவர்கள், நண்பர்கள், இரத்த சம்பந்தமுடையவர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடாதென்பது முக்கிய விதிமுறைகளுள் ஒன்று (Dual relationship violation). இதை வைத்துதான் அம்ருதா அண்ணனை மிரட்ட நினைக்கிறாள். அஸ்வத்தைத் தன் காதலன் என்று சொல்லிவிட்டால், ஹரிஷ் அவனுக்கு சிகிச்சையளிக்க முடியாது. மாற்று மருத்துவரிடம்தான் சென்றாக வேண்டும்.
ஹரிஷ் இமைக்காது பார்த்தான். “உன்னோட?”
“ப்ளீஸ் ஹரி…” அண்ணனின் பார்வையை எதிர்கொள்ள இயலாத அம்ருவிற்கு அழுகை வரும்போல் இருந்தது.
ஒரு மருத்துவனாக ஒரு நோயாளியைப் பரிசோதித்து சிகிச்சையளித்தால், அதை நூறு விழுக்காடு மனமுவந்து நேர்மையுடன் செய்யவேண்டும் எனும் கொள்கையுடையவன் ஹரிஷ்! ஆனால் முதல் கோணல் முற்றும் கோணலாக அறிமுகமாகியிருக்கும் இந்த அஸ்வத்தை ஹரிஷுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. எனில் அவனுக்கு எப்படி தன்னால் முழு மனத்துடன் சிகிச்சையளிக்க முடியும்?
அத்துடன் மேலே சொன்ன விதிமுறையின் படி
இவனும் தங்கையின் நண்பன் என்று சொல்லி அஸ்வத்தின் சிகிச்சையைத் தட்டிக்கழிக்கலாம். ஆனாலும் அவன் அதைச் செய்யவில்லை. இருவரும் முற்றிலும் அறிமுகமற்றவர்கள் தானே என்று வாதாடுவாள் அவன் தங்கை.
இப்போதும் தன் முன் எவனோ ஒருவனுக்காக காயம் கண்டு, கண்கள் கலங்கி நிற்கும் தங்கையைக் காணச் சகிக்கவில்லை. கோபமூச்சுடன், “ஓகே!” என்றான்.
“தாங்க்யூ! தாங்க்யூ அண்ணா!” என்று எக்கி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆர்பரித்தாள்.
“பட் வன் கண்டிஷன்! உனக்காக நான் இந்த கேஸ் எடுத்துக்கறேன். ஆனா உள்ளே கண்ணைக் கண்ணைக் காட்டி பேசுனியே… அது எல்லாத்துக்கும் எனக்கு தெளிவான விளக்கம் வேணும்! ஐ வான்ட் தி ட்ரூத்! அண்ட் வன்மோர் கண்டிஷன்… அவனை என்கிட்ட விட்ட பிறகு நீ அவனோட பேச வேண்டியதில்ல! ஸ்டே வெல் அவே ஃப்ரம் ஹிம்!”
ஹரிஷின் கண்டிப்புப் பார்வையில் அஸ்வத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டு மெய்யாகவே ஓர் குழந்தைப் போல் விழித்தாள் அம்ருதா.
இங்கே அம்ருவின் நிலை சற்று பரிதாபம்தான்! உள்ளத்தை மறைத்து அண்ணனிடம் பேசி அவனை நம்ப வைக்கவேண்டும். அஸ்வத்திற்கும் தன்னிடமுள்ள நம்பகத்தன்மையைக் குலைக்காமல் ஹரிஷிடம் வரச்செய்து, அவனுக்கு தெரியாமலேயே அவனை உளவியல் ஆலோசனைக்கு உட்படுத்த வேண்டும்.
இப்படியான நிலையில் இருவரையும் சில பல சொதப்பல்களுடன் கையாண்டு இத்தனை தூரம் இழுத்து வந்த பின்னர், அண்ணனின் நிபந்தனைகளை ஏற்க மறுப்பது முட்டாள்தனம்! தவிர அவளுக்கு வேறு வழியுமில்லை. அவளுக்கு காரியம் ஆக வேண்டும். அதற்கு அண்ணனின் உதவி நிச்சயம் தேவை!
இருப்பினும், “ஆனா அஸ்வத்…” என்று அஸ்வத்தைப் பார்த்தபடியே இழுத்தாள்.
“நீ உண்மை எல்லாத்தையும் சொல்லிட்டா, ஐ’ல் ஜென்யூன்லி டேக் கேர் ஆஃப் ஹிம்!”
“சொல்… சொல்றேன்.”
“இப்போ போ! முதல்ல போய் காயத்துக்கு ஆயின்மென்ட் எதுவும் போட்டுட்டு ஒழுங்கா சாப்பிடு!” என்று அவள் தோள் திருப்பி நகர்த்த முற்பட,
“ஒரு நிமிஷம் ஹரி!” என்று சுழன்றவள் அஸ்வத்திடம் ஓடினாள்.
அணிந்திருந்த கையுறைகளை அகற்றியபடி அவர்கள் பின்னேயே கீழே வந்திருந்த அஸ்வத் உள் வாயிலில் நின்றிருந்தான். இதுவரை கடுத்த முகத்துடன் அண்ணன் - தங்கையைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அம்ருதா தன்னிடம் ஓடி வருவது கண்டு தன்னிச்சையாக இளகினான்.
“காயத்துக்கு மருந்து வைக்காம பேசிட்டே இருக்கீங்களே டாக்டர்.”
“நத்திங் டூ வொர்ரி சர்.”
“ஸாரி டாக்டர்… நீங்க என்னைப் பத்தி அவர்கிட்ட சொல்லிட்டீங்கன்ற மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ல நான்…”
அம்ரு மறுப்பாகத் தலையசைத்து ஏதோ சொல்ல வர, “நிஜமா என் மேல கோவம் வரலயா? பயம் கூட இல்லாம…”
தான் இத்துணை மாபாதகச் செயலை செய்யத் துணிந்த பின்னும் எப்படி இவளால் தன்னிடம் பழைய நட்புடனும் கருணையுடனும் பேச முடிகிறது?! தன்னைக் காட்டிக்கொடுக்காமல் அவன் குழந்தையைக் கொன்றவள் தான்தான் என்று பழியேற்க முடிகிறது?
“கிருஷ்ணகிரி ரோட்ல இருந்தே ஏனோ எனக்கு உங்க மேல பயமே வரல.” என்று சோகையாய் சிரித்தவள், “அதை விடுங்க சர்! இப்போ அண்ணனை நம்ப வைக்க நான் ஏதேதோ சொல்ல வேண்டியதா போச்சு.” என்றாள்.
“ம்ம், எனக்கு பைத்தியம்ன்னு!”
“அஸ்வத்! இப்டிலாம் பேசினா எனக்கு கோபம் வரும்!”
“ஹாஹா… ஐ நோ என் பேர் சொன்னா டாக்டர் கோபமா இருக்காங்கன்னு அர்த்தம்!”
கண்களும் இதழ்களும் லேசாக விரிந்து, ‘அப்படியா?’ எனும் பாவனையில் ஸ்தம்பித்து விட, மை கலைந்த கண்களில் அவனை அதீதமாய் வசீகரித்தாள் அம்ருதா.
மீண்டும் மனம் தடுக்கி விழப் பார்த்து, ஹரிஷ் எனும் பள்ளத்தைக் கருத்தில்கொண்டு, தன் மனத்திற்கு வேகத்தடை போட்டான் அஸ்வத்.
“சொல்லுங்க டாக்டர். இப்போ என்ன? நீங்க சொன்னதை உண்மையாக்க நான் உங்கண்ணா கிட்ட ட்ரீட்மெண்ட் போற மாதிரி போகணும். அதானே?”
“ஆ ஆமா!”
“உங்களுக்காக போறேன். ஆனா ரெண்டு செஷன்ஸ் தான் முடியும்.”
“போதும் சர்… அண்ட்…”
“ம்ம்!” மேலே சொல்லும்படி தலையசைத்தாலும், அம்ருதா தயங்கியே நின்றாள்.
எப்படி ஹரிஷிடம், ‘அஸ்வத் எனக்கானவன்!’ என்று சொல்ல முடியவில்லையோ, அதேபோல் அஸ்வத்திடம், ‘இனி என்னைப் பார்க்காதே!; பேசாதே!’ என்றும் சொல்ல முடியவில்லை.
அவள் உள்ளத்துத் தவிப்பை அவளுடைய கன்னக்குழியும் கண்களும் வெளிப்படுத்தி, அஸ்வத்திற்கு விசுவாசமாக நடந்துகொண்டன. “என்ன டாக்டர்? உங்கண்ணா இனி என்கிட்ட பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாரா?”
அதையும் ஆச்சரியமாக பார்த்தாள் அம்ருதா.
அவள் விழிப்பது கண்டு குறும்பாய்ச் சிரித்தான் அஸ்வத். “ஒரு ஆணோட மனசு இன்னொரு ஆணுக்குத்தான் புரியும் டாக்டர்.”
அவளின் போலி முறைப்பில் அவனது சிரிப்பு விரிந்தது. “பரவாயில்ல மேடம். நீங்க இதுக்காக எம்ப்ராஸ் ஆக வேணாம். அந்த கோகிலா நம்பர் மட்டும் ஷேர் பண்ணிட்டு நீங்க விலகிக்கோங்க. எனக்கும் உங்களை இதுல சிக்க வைக்க விருப்பமில்ல. நாம இனி பார்த்துக்காம இருக்கறதுதான் நல்லது.”
‘யாருக்கு நல்லது?’ என்று தொண்டை வரை வந்த கேள்வியை இதழ் இறுக்கி அடக்கினாள் அம்ரு.
“என்ன ஒரு பத்து நாள் பழகிருப்போமா? இதுக்காக போய் நீங்க இவ்ளோ ரிஸ்க் எடுக்கறது தேவையில்லாத ஆணி டாக்டர்! நானா இருந்தா கோக் யாருன்னு கண்டுபிடிச்ச நிமிஷமே விலகிருப்பேன். இப்பவும் நீங்க அவ நம்பர் ஷேர் பண்ண அடுத்த நிமிஷம் உங்களை மறந்துட்டு என் வேலையைப் பார்க்கப் போயிடுவேன்.” என் காரியம்தான் எனக்கு பெரிது எனும் விதமாக பேசியவனைக் கண்களில் வலியுடன் பார்த்தாள்.
தன் மனத்திற்கு கடிவாளமிட தான் வார்த்தைகளைச் சற்று கரடுமுரடாக உபயோகித்தான் அஸ்வத். ஆனால் அதில் பலமாய் அடிவாங்கினாள் அவள்.
ஹரிஷைப் பார்த்துவிட்டு மேலும் சொன்னான். “உங்கண்ணாவோடது தப்பான புரிதலா இருக்கலாம். ஆனா அவர் சொல்றது தப்பில்ல டாக்டர். எனக்கும் உங்ககிட்ட இப்போ இப்டி நடந்துக்கிட்டதுக்கு அப்புறம் கில்டியா ஃபீலாகுது.”
முயன்று கண்ணீரை அடக்கியவளால் குரலின் பிசுபிசுப்பை மறைக்க முடியவில்லை. “உங்களால என்னை ஹர்ட் பண்ண முடியாது… எப்பவும்!”
அந்தக் காற்றுக்குரல் கூறிய உறுதிகூறலில் மீண்டும் தடுக்கிய மனத்தினை விழாமல் பிடிக்கப் பிரயத்தனப்பட்டான் அஸ்வத். துளித்துளியாய் நிறம் மாறும் அவனின் மனமாற்றம் அவனுக்கு அச்சத்தையே தந்தது. அவளைக் கொல்ல வேண்டும் என்று நினைக்கும்போது கூட அவன் இத்தனைக்கு தடுமாறவில்லை.
“ஹாஹா… அப்டிலாம் யாரையும் ஈஸியா நம்பாதீங்க டாக்டர்.” என்றவன் தலைதாழ்த்தி அவள் முகம் பார்த்து, “இப்போ ரொம்ப ஃபீல் பண்ற மாதிரி இருக்குது. அடுத்த மாசம் அஸ்வத்’ன்னா யாருன்னு கூட உங்களுக்கு ஞாபகம் இருக்காது.” என்று நெற்றியோரம் இரு விரல்களால் பட்டும்படாமல் தொட்டு, வணக்கம் வைத்து அவளுக்கு விடைகொடுத்தான்.
வேண்டுமென்றே வலிக்கப் பேசுகிறான் என்று புரிந்தவள் நன்றியுரைக்கையில் அண்ணனைக் கட்டிக்கொண்டதைப் போல், பிரிவுதுயரில் அஸ்வத்தையும் ஒருமுறை கட்டிக்கொண்டால் ஆறுதலாக இருக்கும் என்று தோன்றிய கணம், அதற்கு வழியற்று இருக்கும் நிலையை வெறுத்தவளாய் சிறு தலையசைப்பை மட்டும் தந்துவிட்டு நகர்ந்தாள்.
அவளுடன் நடந்து வந்த அஸ்வத் ஹரிஷூக்கு இணையாக அவனருகே வந்து நிற்க, இருவரையும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்று மருத்துவமனையின் பின்பக்க வாயிலினுள் நுழைந்து மறைந்தாள் அம்ருதா.
Headlights ON. The story sparks💥...
Comments
Post a Comment